DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 256
விழியிலே மலர்ந்தது! உயிரிலே கலந்தது!
அத்தியாயம் 23ஒவ்வொரு தெருவிலும் இருந்தவர்கள் அன்றைக்கு பிடித்த முளைப்பாரிகளையும் பூஜைப் பொருட்களையும் காளியம்மன் கோவிலுக்கு சுமந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
வீரவிளையாட்டுகளும் உடற்பயிற்சியும் பயிற்றுவிக்கப்படும் இடங்களில் இருந்தவர்கள் குளியல் இடங்களில் நீராடி புலியாட்டத்தில் பங்கேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
சிலம்பாட்டம், கத்திச்சண்டை, சுருள்வீச்சு, தீப்பந்த விளையாட்டு என எல்லாவற்றிலும் கற்று தேர்ந்து, ஊரிலேயே சிறந்த வீரனாக இருப்பவர்தான் புலியாட்டத்தில் கலந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் இந்த வருடம் நம்ம வெயில் ‘சகலகலா வல்லவன்’ என்ற அடையாளத்தோடு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
புலிவேசம் கட்ட பரம்பரையாக ஆடை தைத்து தரும் தையல் கலைஞர்கள் தைத்துத் தந்த உடுப்பை அணிந்து, மஞ்சள்நிற வர்ணத்தை கால்சட்டை மறைக்காத முகம், உடம்பு, கை, கால் போன்ற இடங்களில் பூசுவர்.
அந்த பூச்சு காய்வதற்கு இரண்டு–மூன்று மணி நேரம் எடுக்கும். காற்றாடி முன்பு வேஷமிட ஆரம்பித்ததும் நிற்க ஆரம்பிப்பதும் — இரவு ஆட்டம் தொடங்கி முடியும்வரை அவர்களால் உட்கார முடியாது; நின்றுகொண்டே இருக்க வேண்டும்.
வெயில் தன்னுக்காக இரட்டைவால் கட்ட எடுத்துவைத்திருப்பதைப் பார்த்து சிரித்தான்.
இரட்டைவால் வைத்து புலிவேசம் கட்டுபவர்கள் — யார் வேண்டுமானாலும் என்னுடன் போட்டிக்கு வா, என்னை வெல்லத் தைரியம் யாருக்கு இருக்கு — என்று முன்பெல்லாம் சவால் விடுவர்.
அதுபோல சவால் விடும் இரட்டைவால் புலியாட்டம் இனக்குழுக்களுக்கிடையே கலவரங்களை உண்டாக்கியதால், காவல்துறை அதை தடுக்க நடவடிக்கை எடுத்து, மோதும் சந்தர்ப்பத்தை இல்லாமல் ஆக்கியது.
ஒரு இனக்குழு செல்லும் பாதையில் மற்ற குழு குறுக்கிடாதபடி நேரம் திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்திலேயே ஊர்வலத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனால் மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போனது.
எனவே இதுபோன்ற சவால்கள் வெட்டு சவுடாகி விட்டன; யாரும் களத்தில் குதிக்கத் தயாரில்லை.
ஆனால் இந்த வருடம் ‘மணி’ போலீஸ் கண்ணில் மண்ணைத்தூவி, பக்கத்து தெரு குஷ்தி வாத்தியாருடன் கூட்டு சதி செய்து வெயிலுடன் மோத முயற்சித்திருப்பதை வெயில் அறிந்திருந்தான்.
அதனால் இரட்டைவால் கட்டி ஆடுவதில் அவனுக்குச் சிறு தயக்கம் ஏற்பட்டது.
ஆனால் புலியாட்டத்தில் புலிவேசமிடும் நபருக்கு பாதுகாப்பாக அவர்களின் குழுவில் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து ‘எதிர்ப் புலி’ ஆக களத்தில் பங்கேற்க வைப்பார்கள்.
இந்த தடவை வாத்தியாரே வேடமிட்டு தன்னைப் பாதுகாக்கப் போகிறதால், இரட்டைவால் கட்டி ஆடவேண்டும் என்ற குழுவின் விருப்பத்திற்கு மறுப்புச் சொல்ல வெயிலால் முடியவில்லை.
மேலும் சிலம்பத்தில் தேர்ந்த ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து புலியாட்டக்காரரின் முன்னால் நடக்கவும், சுருள் சுத்துபவர்களை பின்னால் நடக்கவும் வைத்து, அவனுக்குச் சுற்று அரணாக ஒருவர் வரும் அளவுக்கு அணுக முடியாத வட்டத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.
அதே நேரம் ராம்ஜி — “தன்னை மீறி கூட்டிக்கொண்டு போக முடியாது” என்று சொன்ன வெயிலைப் பற்றி விசாரித்து அவனை ஒழிக்கத் திட்டமிட, அந்த ஊரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தான்.
அவன் கேட்ட விஷயங்களைத் திரட்டிக் கொண்டு வந்த அவனது மூன்று கையாள்கள் ராம்ஜியிடம் கூறினார்கள்:
“அந்த வெயில் பொதுவா பார்த்தா ரொம்ப சாதாரணமாதான் தெரியுறான். ஆனா உண்மை அது இல்ல சார்…
காசுபணம் அவன்கிட்ட இல்ல. ஆனா அந்த ஏரியாலேயே நிறைய பெரியவங்க அவன் பின்னாடி நிக்கிறாங்க.
இன்னைக்கு இந்த ஊர் திருவிழாவுல புலியாட்டம் நடக்குது. அதுல அவன்தான் மெயின் கேரக்டர்.”
ராம்ஜி கேட்டான்:
“என்னடி இது? ரோட்டுல வேஷம் போட்டுக்கிட்டு கூத்தாடுற மாதிரி ஆடுவாங்கலே… அதுபோலவா? அப்போ கூட்டத்துல நம்ம ஆட்கள அனுப்பி புலிக்கிட்ட வம்பிழுத்து அடிச்சு தூக்கிடலாம் இல்ல?”
அவர்கள் சொன்னார்கள்:
“சார்… நீங்க நினைக்கிற மாதிரி சுலபமில்லை.
சிலம்பம் பரம்பரையாக கத்துத்தருற வாத்தியார்கிட்ட, சின்ன வயசிலிருந்தே வித்தை தெரிஞ்சு, சண்டையில் சிறந்தவங்களைத்தான் புலியாட்டத்தில சேர்ப்பாங்க.
புலியோட முன்னாடியும் பின்னாடியும் அவர்களே பாதுகாப்பா சிலம்பம், தீப்பந்தம் எல்லாம் காட்டுறாங்க.
புலிக்கிட்ட யாராலுமே நெருங்க முடியாது.
அப்படின்னா அந்த பாதுகாப்பை மீறித்தான் வெயிலுக்கிட்ட போகணும்.
இந்த வெயில் ஊர்ல ரவுடிசம் பண்ணுறவங்க எல்லாத்தையும் ஒடுக்குறான்னு நிறைய பேருக்குப் பகை வைத்திருக்கிறான்.
‘மணி’ன்னு ஒருத்தன், அவனால் ரொம்ப பாதிக்கப்பட்டவன்.
அவனோட குரூப்புல இரண்டு சிலம்ப வாத்தியார்களும் இருக்காங்க…”
----