எபிலாக்
ஆறு வருடங்களுக்குப் பிறகு,
தலங்கஹ சரஸ்வதி வித்தியாலயம் வழமைக்கு மாறான அலங்காரங்களுடன் அழகாய்த் தோற்றமளித்தது. அகில இலங்கை ரீதியான தமிழ் தின விழாவின் மாகாண மட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா இன்று இங்கு நடைபெறவிருப்பதே இதற்குக் காரணமாகும்.
"டீச்சர்! நா தான் பாவோதல் போட்டில ஃபர்ஸ்ட்" என்ற மாணவனின் அழைப்பில் கையிலிருந்த கோப்புகளை வைத்து விட்டுத் திரும்பினாள், அபூர்வா.
ஆம். அவள் தன் கனவை நனவாக்கி விட்டாள். தான் கற்ற பாடசாலையிலேயே தற்போது தமிழ்ப்பாட ஆசிரியையாக பணியாற்றுகின்றாள். மேகனின் வழிகாட்டலில், தன் அயராத முயற்சியோடு கற்றவள் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் உயர் சித்தி பெற்றாள்.
அடுத்து வெளிவாரியாக விண்ணப்பித்து கல்வியில் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அதே ஊரிலுள்ள பாடசாலையில் தொழில் கிடைத்தது. அன்று அவளடைந்த சந்தோஷம் வார்த்தைகளில் வடிக்க முடியாது.
ஆசிரியையாக வர வேண்டும் என்பது அவளது வாழ்நாள் கனவு. அது நனவானது. அதுவும் தன்னுள்ளம் கவர்ந்தவனின் மூலம் நிறைவேறியது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
மேகனும் அவளை நெஞ்சார வாழ்த்தினான். படிப்பின் மூலம் அவன் அடையாத இடத்தை அவள் அடைந்தது அவனை மகிழ்வித்தது. அதிலும் அவளின் வளமான எதிர்காலம் பற்றி அவன் ஆரம்பத்தில் இருந்தே கொண்ட விருப்பம் ஈடேறியது அத்தனை திருப்தியாக இருந்தது.
வாசுகியும் மனம் நிறைந்து போனார். மகளின் வாழ்வு தான் நினைத்ததை விட நன்றாக இருப்பது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அபூர்வா மேகனோடு இணைந்து தீப்தியையும் படிக்க வைத்தாள். அவள் இப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கற்கின்றாள்.
"வாழ்த்துக்கள் மதுக்ஷன். இன்னும் நெறய வெற்றிகள் பெறனும்" என்று அபூர்வா அந்த மாணவனை வாழ்த்த, "மேகன் அண்ணா நல்லா சொல்லிக் குடுத்ததால தான் இதெல்லாம். நல்லா ப்ராக்டிஸ் பண்ண சொன்னார். அவர் கிட்ட இத சொல்லிட்டு வர்றேன்" என்று விட்டுச் சென்றான், அம்மாணவன்.
சான்றிதழ் எழுதி முடித்து விட்டு சடாரெனத் திரும்பியவள் யார் மேலோ மோதி நிற்க, "பாத்து பாத்து" என அவளைப் பிடித்தான், மேகன்.
"டீச்சர் மேடம் பாத்து வர மாட்டீங்களா? நா பிடிக்கலனா கீழ விழுந்திருப்பீங்க" என்றவன் அவளை விடுவிக்க, "அவளோட மேகன் சார் இருக்கும் போது இந்த டீச்சருக்கு என்ன கவல? விழாம தாங்கி புடிப்பீங்க தானே?" புருவம் உயர்த்தினாள், அவள்.
"பேசாம இரு டா. இது ஸ்கூல். உன்னோட ரொமான்ஸ வீட்ல வெச்சுக்க"
"அய்யே. சும்மா சொன்னேன். அதுக்கு போய் ரொமான்ஸ் அது இதுன்னு. ஆச தான் சாருக்கு" முறைத்துப் பார்த்தாள், அவள்.
"அப்பாஆஆ" எனக் கேட்ட குரலில் மேகன் திரும்ப, கிருஷ்ணா தான் ஓடி வந்தான்.
"என்னடா?" தரம் மூன்றில் கல்வி பயிலும் சிறுவன் மீது பார்வையைப் பதித்தான்.
கிருஷ்ணா மேகனை அப்பா என்று தான் அழைப்பான். யாரும் சொல்லிக் கொடுக்காமலே அவன் பழகிக் கொண்ட விடயம் அது. உண்மையில் மேகன் அவனை அப்படித் தான் பார்த்துக் கொண்டான்.
"நீங்க ஏன்ப்பா வந்தீங்க?" எனும் கேள்விக்கு, "என் ஸ்கூலுக்கு நா வந்தேன். நீ கேள்வி கேட்கக் கூடாது மகனே" மகனின் கன்னத்தைக் கிள்ளி விட்டான், மேகன்.
"இன்னிக்கு ஃபங்ஷன்ல உங்கப்பா தான் அன்னவுன்ஸ் பண்ண போறார். மைக்க வெச்சிட்டு அழகா பேசுவார் பாரேன்" என்று அபூர்வா சொல்ல, மேகனின் விழிகளில் பளிச்சென்ற மின்னல்.
இன்றைய நிகழ்வில் தொகுப்பாளர் மற்றும் அறிவிப்பாளராக இருப்பதற்கு மேகன் அழைக்கப்பட்டிருந்தான். கற்ற பாடசாலையில் இப்படியான நிகழ்வுக்கு அழைக்கப்பட்டது அவனுக்கு மகிழ்ச்சி தான்.
மேகன் இந்த ஆறு வருடங்களில் மிகவும் வளர்ந்து விட்டான். மனதோடு உறவாடு நிகழ்ச்சி மட்டுமன்றி வானொலியில் ஏகப்பட்ட விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அவனைத் தேடி வந்தன. அவனும் தன்னால் இயன்றளவு அவற்றை நடாத்தினான்.
தமிழ் தினப் போட்டியில் பங்கேற்கும் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிகளும் அளித்தான். அபூர்வாவுக்கு படித்துக் கொடுப்பதையும் அவன் நிறுத்தவில்லை. ரயிலில் வரும் போது ஏதாவது புத்தகமொன்றை எடுத்துப் படித்து விட்டு அதை அவளிடமும் பகிர்ந்து கொள்வான். அவளுக்கு நாவல்களும் வாங்கி வருவான்.
பரிசளிப்பு விழா முடிய தாமதமாகும் என்பதால் கிருஷ்ணாவை கவின் வந்து அழைத்துச் சென்றான். நிகழ்வு முடிந்து இருவரும் நடந்தே வீடு சென்றார்கள்.
செல்லும் வழியில் "உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்று அபூர்வா சொல்ல, "சொல்லு" என ஆர்வமானான், ஆடவன்.
"நம்ம ஸ்கூல்ல இலக்கிய நயம் படிச்சு குடுத்த சுதா டீச்சர் டெலிவரிக்காக லீவ் எடுத்துட்டாங்க. அவங்க வரும் வர நா தான் இலக்கிய நயமும் படிச்சு குடுக்க போறேன்" அவள் முகம் மகிழ்வால் மெருகேற்றப்பட்டது.
"ஹேய் சூப்பர் டா. அவ்ளோ ஹேப்பியா என்ன?" என்று அவன் கேட்க, "எனக்கு புடிச்ச பாடம் அது. அத படிச்சு குடுக்குறத நெனச்சா அவ்ளோ சந்தோஷமா இருக்கு" என்றாள், ஏந்திழை.
"பாடம் புடிக்குமா? இல்ல உனக்கு அத படிச்சு தந்த மேகன புடிக்குமா?"
"என் காதல் மேகத்த புடிக்கும்"அவள் கண்சிமிட்ட, "அபூர்வ கீதம் மேகத்தோட சங்கமித்தால் இனிமைக்குக் குறைவிருக்குமா? இனி எப்பவும் காதலுக்கு அடை மழை தான்" தன்னவளைக் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
வீட்டை அடையும் போது "ப்பாஆஆ" என்று ஓடி வந்து நின்றாள், அபூர்வா - மேகனின் ஆறு வயது மகள் இலக்கியா.
"அப்பா புள்ள வந்தாச்சு" என அபூர்வா முறைக்க, "உங்க பையனும் வந்துட்டான் சித்தி" மூன்று வயதுச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு வந்தான், மான்யாவின் தம்பி ராகுல்.
தன்னை நோக்கி கையை விரித்த தாயிடம் "அம்மா" என தாவிக் கொண்டான். அவன் தமிழன்பன். அபூர்வாவின் இளைய மகன்.
"இவன் தூங்கி இருப்பான் எண்டு நெனச்சேன். அது சரி. அம்மா வராம தூங்க மாட்டானே" மகனின் கன்னத்தில் தாடியால் குறுகுறுப்பூட்ட, கலகலத்துச் சிரித்தான், தமிழ்.
அவனுக்குப் பெயர் வைத்தது மேகன் தான். இலக்கியாவுக்கு அபூர்வா தெரிவு செய்தாள்.
"எல்லாரயும் சாப்பிட வெச்சேன் தம்பி. நீங்களும் சாப்பிடுங்க" என்று ராதா கூற, "அங்க சாப்பிட்டு தான் வந்தோம் அண்ணி. அண்ணன் எங்க?" என்று வினவினான், வேங்கை.
"இதோ வந்துட்டேன். நீ ஃபங்ஷன்ல பேசுறத நா கேட்டேன் மேகா. ரொம்ப நல்லா பேசுன. இன்னும் நெறய விஷயங்கள் பண்ணி மேல மேல போகனும் டா" என்று கவின் வாழ்த்த,
"நீங்க எல்லாரும் என் கூட இருக்கும் போது, இப்பிடி வாழ்த்தி என்ன உற்சாகப்படுத்தும் போது நா நிச்சயமா இன்னும் சக்ஸஸ் ஆவேன்ணா" அண்ணனை அணைத்துக் கொண்டான், சகோதரன்.
"சித்தப்பு! நா வாங்குன சர்டிபிகேட் பாருங்க. பேச்சுப் போட்டில நா ஃபர்ஸ்ட்" மான்யா தனது சான்றிதழைக் கொண்டு வந்து காட்ட, "சூப்பர் மான் குட்டி. அடுத்து இன்னும் ப்ராக்டிஸ் பண்ணனும் சரியா?" அவளது தலை வருடி வாழ்த்தினான்.
"நானும் பெருசானா இப்பிடி வாங்குவேன்" என்று கிருஷ்ணா சொல்ல, "நிச்சயமா வாங்கனும் தங்கம்" என்று விட்டுச் சென்றாள், ராதா.
அபூர்வா முதலில் சென்று கழுவி விட்டு வர, மேகனும் குளித்து விட்டு வந்து கட்டிலில் சாய்ந்தான்.
புத்தகமொன்றை ஏந்திக் கொண்டு வந்த இலக்கியா, "அப்பா! தேசம் எண்டா என்ன?" என்று கேட்க, "தேசம் எண்டா நாடு. நம்ம நாடு எது? சொல்லு" மகளை நோக்கினான், தகப்பன்.
"நம் நாடு இலங்கை. அப்ப இலங்கை தேசம் எண்டும் சொல்லலாமேப்பா" தலை சாய்த்துக் கேட்டாள், இலக்கியா.
"ஆமா செல்லம். என்னோட இலக்கியா கெட்டிக்காரி" அவளது தலையை வருடிக் கொடுத்தான்.
"தமிழ் எங்க?" என்று அபூர்வா வினவ, "இதோ தூங்கிட்டான்" தம்பியைத் தோளில் போட்டுக் கொண்டு வந்தான், கிருஷ்ணா.
அபூர்வா அவனைத் தொட்டிலில் உறங்க வைத்தாள். அவளுக்கும் மேகனுக்கும் நடுவில் அமர்ந்த கிருஷ்ணா, "இந்த புக்க பாருங்கப்பா. தமிழ் இலக்கிய நயம் எண்டு இருக்கே" இலக்கிய நயப்பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டையைக் காண்பித்தான்.
"ஆமா. இது நானும் அம்மாவும் படிச்ச புக். வளர்ந்ததும் நீயும் படிக்கலாம். உனக்கு நாங்க ரெண்டு பேரும் படிச்சு தருவோம்" என்றான், மேகன்.
"தமிழ் தம்பி. இலக்கியா நான். அப்ப நயம் யாரு?" இலக்கியா நாடியில் விரல் வைத்து தீவிரமாக யோசிக்க, "யாரும் இல்லயே டா. வேணுமெண்டா உங்கம்மா கிட்ட தம்பி பாப்பா கேளு. அப்ப நயன் எண்டு பெயர் வெச்சுடலாம்" என்று அவன் சொல்ல,
"என்னப்பா இது? சும்மா இருங்க" அவனை முறைத்துப் பார்த்த அபூர்வா, "நாளக்கி ஸ்கூல். வந்து தூங்கு இப்ப. அப்றோ இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ணலாம்" என்றவாறு மகளைத் தட்டி உறங்க வைக்க, கிருஷ்ணாவும் அப்படியே சாய்ந்து தூங்கிப் போனான்.
மேகன் சமயலறை சென்று தண்ணீர் குடித்து விட்டு வரும் போது அபூர்வா அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். அவன் வரும் அரவம் கேட்டு மேகனை விழியசைத்து அழைத்தாள்.
"என்னம்மா?" என்றவாறு அவளருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொள்ள, "ஃபேஸ்புக்ல கவித போட்டிருந்தீங்க. அத வாசிச்சேன். நல்லா ரைமிங்கா எழுதுறீங்க" என்றாள், அவள்.
"இப்ப ஒன்னு சொல்லுறேன் கேளு" என்றவனின் பார்வை அவளைத் தீண்டியது.
கயல் மீன் அன்ன கருமணிகள் பாற்கடலில் நீந்தும் அழகில் கொள்ளை போனான், காளையவன். மயில் தோகையொத்த இமைகள் மூடித் திறந்து தாளம் இசைக்க, வளைந்து நின்ற புருவங்கள் அவனுள் பருவ மாற்றங்களை நிகழ்த்தப் போதுமாய் இருந்தன.
வெண்முத்துப் பற்களுக்கு சில நொடிகள் இரையாகியதோ என எண்ணும் படியாக செக்கச் சிவந்து போயிருந்த செம்பவள உதடுகள் தம் வறட்சியை நீக்கி ஈரமூட்ட அவனின் அதரங்களை வா வாவென்றழைத்தன.
அவ்வளவு தானா? இல்லவே இல்லை. மாம்பழக் கதுப்புக் கன்னங்கள் இதழ்கள் மட்டுமல்ல நானும் ருசி தான். என்னையும் கொஞ்சம் கடித்துச் சுவையேன் என்று ஏக்கமாய்ப் பார்த்தன.
"தீ மூட்டுதே என்னில் மோகம்
உன்னருகினில் தீருமே தாகம்
நீ தானே என்னிதய ராகம்
காதல் பொழியுதடி அபூர்வ மேகம்" என்று அவன் சொல்ல, "வாவ்! மேகன்னா மேகன் தான். அப்பவும் இப்பவும் எப்பவும் இந்த பேச்சுக்கு கொறவிருக்காது. மாயம் பண்ணிடுவான் படவா" அவன் தோளில் செல்லமாக அடித்தாள்.
"என்ன மாயம் பண்ணேனாம்?" என்று அவன் வினவ, "என் வாழ்க்கைல சந்தோஷத்த தந்தீங்க. காயங்களை இல்லாம பண்ணீங்க. வெறுமை, தனிமை எல்லாத்தையும் தொரத்திட்டீங்க. கொறயாத அன்ப எனக்கு தர்றீங்க. இத விட மாயம் வேணுமா என்ன?" அவனை அன்போடு பார்த்தாள்.
"ஸ்கூல்ல லவ் பண்ணும் போது என்ன பூ எண்டு தானே சொல்லுவீங்க. இப்ப ஏன் அப்பிடி சொல்லுறதில்ல?" பல நாள் சந்தேகத்தை முன்வைத்தாள், மனைவி.
"ஸ்கூல்ல பண்ண லவ் வேற டா. ஆனா உன்ன ரெண்டாவது தடவையா லவ் பண்ண ஆரம்பிச்சது வேற. எனக்கு அந்த காதல விட, கஷ்டங்கள தாங்கி, உன்ன இழந்து திரும்ப அடைஞ்ச காதல் தான் புடிச்சிருக்கு. அதனால உன்னை அபூ எண்டு கூப்பிடறேன்" என்றான்.
"எனக்கும் அது தான் புடிக்கும். அத கேக்கும் போதே அப்பிடி ஒரு ஃபீல். எங்க கூப்பிடுங்க பாப்போம்"
"அபூ" உயிரை உருக்கும் குரலில் அவன் அழைக்க, "ஐ லவ் யூ மேகன்" அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள், காரிகை.
"நானும் உன்ன காதலிக்கிறேன் அபூ. இனியும் காதலிப்பேன்" அவளது பிறை நுதலில் மென்மையாக தன்னிதழ் பதித்தான் அபூர்வாவின் மேகன். ஆழ்கடல் நேசித்தால் அவளை அணுதினமும் ஆராதிக்கும் அபூர்வ மேகமானவன்.
முற்றும்.
கதை முடிவுற்றது. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இதுவரை தந்த ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
IVNP11
2025-05-21