My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மகாதேவ ரகசியம் (5)

Yaazhko Lenin

New member
Joined
Mar 10, 2025
Messages
16
மகாதேவ ரகசியம் (5)

சிவநேத்ர மலையடிவாரம்,
சிவநேசன் பழைய நினைவுகளுடன் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார்.

"இரவு காலருகில் பாம்பு, பின் ஜன்னலில் வேறு தெரிந்தது. இப்ப இவளுக்கு இப்படி. நான் என்னப்பா பண்ணுவேன் என் ஐவண்ண நாதா?" எனக் குழம்பினார் மனதிற்குள்.

அப்போது, அவர் மனத்தில் அதே கரகரத்த ஒலி கேட்டது.

"சிவநேசா! அத்தனையும் அவன் செயல். ஒரு மரகதலிங்கத்தை நித்தமும் பாலபிசேகம் செய்து வழிபட்டால் இந்தப் பிரச்சினை தீரும்! இன்றிலிருந்து பதினெட்டு பிரதோசத்திற்கு உன் குடும்பத்துடன் சிவநேத்ர மலை ஐவண்ண நாதரை தரிசித்து மகாநந்திக்கு சந்தனாபிசேகம் செய்து வில்வார்ச்சனை செய்திட மகள் நலமாவாள்!" என்றிட துள்ளி எழுந்தார் சிவநேசன்.

சிவநேசன்,"மங்கலம்... மங்கலம்... வா, நாம ஐவண்ண நாதர் கோவிலுக்கு உடனே போவோம். அங்குள்ள வில்வ தீர்த்தத்தில் குளிச்சிட்டு சுவாமியையும் பிறையணி அம்பாளையும் மகாநந்தியையும் தரிசிச்சிட்டு அபிசேகம் செய்திட்டு வருவோம்! எல்லாம் நன்மைக்கே!" என்றவர் உற்சாகமானார்.

அவரின் உற்சாகமானப் பேச்சை வினோதமாகப் பார்த்தாள் மங்கலம்.

"எல்லாம் சரி மாமா, இப்ப எப்படி இவள இந்த நிலையில் மலைக்குக் கூட்டிட்டுப் போக முடியும்?" எனக் கேட்டாள் மங்கலம், வருத்தம் தோய்ந்த முகத்துடன்.

"கவலையே படாதடி, அவ தலையில் இந்தத் தீர்த்தத்தோட வில்வ இலையப் போட்டு தண்ணீர எடுத்து ஊத்து, எல்லாம் சரியாகிடும்!" என்றார் சிவநேசன்.

" எனக்கென்னுமோ இப்ப உங்களப் பார்த்தா தான் பயமா இருக்கு! என்னென்னுமோ சொல்றீங்க! உங்க நடவடிக்கையே இன்னிக்கு சரியில்ல, அதுவும் அரசமரத்தடி நாகர பார்த்திட்டு வந்ததிலேருந்து." என்று புலம்பினாள் மங்கலம்.

"அது அப்படித் தான்! சீக்கிரமா கிளம்பு பவானியக் கூட்டிட்டு மலைக் கோவிலுக்கு வேறப் போகணும் பிரதோச நேரத்துக்குள்ள." என்றவர் சந்தன அபிசேகத்துக்கு வேண்டியவைகளைத் தயார் செய்தார்.

அரை மணிக்கூறில் மூவரும் தயாராயினர். கூண்டு வண்டியைத் தயார் நிலையில் வைத்திருந்தான் பணியாள் மாடசாமி.

"மாடா.... வெரசா ஓட்டு , இன்னும் கொஞ்ச நேரத்தில் அடிவார அன்னக் கருப்பர தரிசிச்சிட்டு மலை ஏறணும்!" என கிட்டத்தட்ட கட்டளை இட்டார் சிவநேசன்.

" சரிங்கய்யா..." என்றவன் வேகமாக ஓட்டினான் வண்டியை.
எதுவும் பேசாமல் அமைதியாகவே வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் பவானி.

மங்கலத்திற்கு இங்கு நடப்பது எதுவுமே புரியவில்லை.

"ஒரு பக்கம் இவர் பேசுறது பயமா இன்னொரு பக்கம் இவ நடந்துக்கறது பதட்டமா இருக்கு. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மத்தளமா மாட்டிக்கிட்டு அடி வாங்குறேன். ஆண்டவா நீ.தான்ப்பா என்னைக் காப்பாத்தணும்!" மனதிற்குள் பரமனை வேண்டிக் கொண்டு இருந்தாள் மங்கலம்.

"அடியே! மங்கலம் என்ன பலத்த யோசனையில் இருக்க? அடிவாரம் வந்திருச்சு பாரு. இறங்கு!" என்றார் சிவநேசன்.

அடிவாரத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தனர் மூவரும். மாடசாமி அந்த வண்டி மாட்டை விடுவித்தான்.

அது அருகிருந்த புல்வெளியில் மேயத் தொடங்கியது.
நடந்து கொண்டே கேட்டார் சிவநேசன், "பவானி ! உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?".
"ம்ம்... பிடிச்சிருக்குப்பா!" என்றவள் அந்த மலையின் பசுமை அழகை ரசித்தாள்.

நீரோடை ஒன்று அவர்களின் பாதையை வழிமறிக்க, மெல்ல தன் பட்டுப்பாவாடையைத் தூக்கிக் கொண்டு ஓடைக்குள் காலடி எடுத்து வைத்தாள் பவானி. அப்போது அவள் செந்தூரக் கொண்டைக் காலை, ஒரு சின்னஞ்சிறு கொண்டை மீன்குஞ்சு ரசித்தபடி கிச்சுக்கிச்சு மூட்டி விட்டு நீந்தி ஓடியது.

அவள், தன் காலை சட்டென நகர்த்தி வேகமாக நடந்துக் கடந்தாள்.

பின்னாலேயே நடந்து வந்த அப்பாவும் அம்மாவும் அந்த ஓடையைக் கடப்பதற்குள் ஓடையில் நீரின் அளவு கூடத் தொடங்கிட, கடக்க முடியாமல் தவித்தபடி இருவரும் அக்கரையிலேயே நின்று விட்டனர்.

திரும்பிப் பார்த்தவள் தவித்தாள்.

"அம்மா.... அப்பா ...." என்றலறினாள்.
"பவானி! கவலைப்படாதேம்மா.... நாங்க இந்த தண்ணீர் அளவு குறைஞ்சதுமே வந்திடுவோம். நீ பயப்படாம அந்த அன்னக் கருப்பர் கோயிலிலே இருடா!" என்றாள் மங்கலம்.

இருந்தும் பயத்துடனே இங்குமங்குமாக ஓடினாள் பவானி.
அரை மணிக் கூறு ஒன்று, இரண்டு எனக் கூடிட, நீரின் அளவு ஓடையில் குறைந்தப் பாடில்லை.

அத்தனை நேரம் இக்கரையில் வெயிலில் அமர்ந்திருந்து அழுதழுது சோர்வுற்றவளைக் காணப் பரிதாபமாகத் தானிருந்தது.

அப்போது, அங்கு சாம்பிராணிப் புகையின் சுகந்தம் கூடிட, மெல்ல நடை போட்டாள் நறுமணம் வீசிய திசையில்.

நெருங்க நெருங்க மணம் கூடியது. அருகிலே சென்று பார்த்தாள்.
எங்கும் புகை மூட்டம், மெல்ல விழிகளைச் சுருக்கியபடி உள்ளே நுழைந்தவளுக்கு ஆச்சர்யம் கூடியது. அங்கு அணிலொன்று நாவல் பழங்களைக் கொண்டு வந்து வில்வ மரத்தடி அன்னக் கருப்பரின் முன் வைத்து வணங்கிக் கொண்டிருந்தது.

"என்ன ... இப்படி ஒரு அதிசயத்தை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லையே?" என வியந்தவள் உள்ளே நடை போட்டாள்.
அன்னக் கருப்பர் அமைதியாக புன்முறுவலுடன் அமர்ந்திருந்தார்.

கையில் வீச்சரிவாளுக்கு பதிலாக ஒரு தட்டில் சோற்றுக் கவளம் இருந்தது. மற்றொரு கையில் கரண்டி இருந்தது.

வலப்பக்கத்தில் வெண்ணிறக் குதிரையும் இடப்பக்கத்தில் செந்நிற நாயும் இருந்தது. கருப்பரின் விழிகளில் அப்படி ஒரு தீட்சண்யம்.
பசியால் துவண்டுக் கொண்டிருந்தாள் பவானி. பசி மயக்கம் வாட்டிட அப்படியே படுத்து விட்டாள்.

"மகளே! எழுந்திரு... உனக்கான உணவு எதிரில் உள்ளது பார். என்னிடத்தில் வந்திருக்கும் எவரும் பட்டினியுடன் கிடப்பது கூடாது!" என்ற ஒலி கேட்டு சட்டென எழுந்து அமர்ந்தாள்.

எதிரில் ஒரு செந்நிற நாய் வாயில் தூக்கு வாளியுடன் நின்றிருந்தது.
அது வாளியை இவளருகில் கொண்டு வந்து வைத்து விட்டு, குரைத்து வாலை இருமுறை சிநேகமாக அசைத்து விட்டு ஓடி மறைந்தது.

வாளியைத் திறந்தவளின் பசு இப்போது கூடியது. வயிராற சாப்பிட்டாள்.

சோடை குறைந்தது. மகிழ்ச்சியுடன் அன்னக் கருப்பரைச் சுற்றி வந்தாள் மூன்று முறை.
அப்போது தான் நீரோடையின் நீரளவு குறைந்திட, சிவநேசன் மங்கலம் இருவரும் வேக வேகமாகக் கடந்து ஓட்டமும் நடையுமாக.

எங்கும் பவானியைத் தேடி அலைந்தவர்களின் முன் அந்த நாய் வந்து குலைத்தது.

********
கொல்லி மலையில்,

வல்வில் ஒரி ரிசார்டில் தங்கி இருந்தனர் சிவமலை குடும்பத்தினர்.
அன்றைய இரவு மெதுவாகவே நகர்ந்தது ஆமை வேகத்தில்.

எழிலன் நங்கை இருவரும் நெடுநாட்கள் கழித்து இன்று தான் இன்ப இரவைக் கழித்தனர். அவள் அசதியாக உறங்கிக் கொண்டிருந்த தருணத்தில் தான் அந்த அலறல் ஒலி கேட்டது பக்கத்து காட்டேஜில்.

அரக்க பறக்க எழுந்த எழிலன் சட்டையைக் கூட ஒழுங்காக அணியாமல் ஓடினான் என்னவென்று அறியும் ஆர்வத்தில்.

ஓடியவன் கதவைத் தட்டினான் இரு முறை பலமாக, மனத்தில் பிள்ளைகளுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்ற பதற்றத்தில்.

" அப்பா.... அம்மா... என்னாச்சு?" கேட்டான் கதவு திறந்தவுடன்.

"டேய் எழிலா! வேண்டாம்டா அந்த மாளிகை.... வாடா, இப்பவே நாம சென்னைக்கு கிளம்பிடலாம்! என்னால் ஒரு நிமிசம் கூட இங்க இருக்க முடியல!" என்று அரற்றினார் ரஞ்சிதம்.

"என்னம்மா சொல்றீங்க? நீங்க தான அந்த அருவிக்காடு மாளிகைய ரிசார்டா மாத்திடலாம்னு வலுக்கட்டாயமா கூப்பிட்டு வந்தீங்க ! இப்ப என்னாச்சு?" கேட்டான் விடை தெரிய வேண்டி.

தன் மனைவியின் திடீர் மாற்றத்தை ஐயத்துடனேயே பார்த்துக் கொண்டு இருந்தார் சிவமலை.

"ஆமாம் ரஞ்சிதம்! இதில் ஏதும் வில்லங்கம் இல்லையே!?" என்றார் விழிகளில் வினாக்குறியுடன்.

"அப்பா! நீங்க கொஞ்சம் சும்மா இருங்க, அம்மா எதையோ பார்த்து பயந்து போய் இருக்காங்க போலருக்கு!" என்றான் எழிலன்.

"ஆமாம்டா! ஒரு பயங்கர கனவுடா விடியற்காலைல. அடர்ந்தக் காட்டுக்குள்ள ஒரு ஏகாந்த மாளிகை, நான் மெல்ல நடந்து போயிட்டு இருக்கேன் அதை நோக்கி. அப்ப தான் அங்க ஒரு சின்னப் பொண்ணு குதிரையில் வர்றா. என்னப் பார்த்து சிரிச்சிட்டே, "வா ரஞ்சிதம்!இவ்ளோ நாளா எங்க போயிருந்த? என்னைப் பார்க்காம எப்படி உன்னால இருக்க முடிஞ்சது?" ன்னு கேட்டவ சிரிச்சா. அவ சிரிப்பில அந்தக் காடே அதிர்ந்து போச்சு. கீழ இறங்கி என் கைய கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு வேகமா ஓட ஆரம்பிச்சா. என்ன அதிசயமோ தெரியல அவ வேகத்துக்கு ஈடா நானும் ஓட ஆரம்பிச்சேன். முடிவா, ஒரு பாழடைந்த கிணற்றில் ரெண்டு பேரும் தாவி குதிச்சிட்டோம்!" என்ற ரஞ்சிதத்தின் குரல் நடுங்கியது.

எழிலன் அதிர்ச்சியில் உரைந்திருக்க, சிவமலை விக்கித்துப் போனார்.

"ரஞ்சிதம்! நீ சொல்றதெல்லாம் உண்மையா? இல்ல எதுனா தகிடுதித்தம் பண்ணி எங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறியா?" கேட்டார் சிவமலை.

"அட என்ன கேள்வி இது? நானே விடியற்காலை இப்படி ஒரு கனவு கண்டிருக்கோமேன்னு பதறி போய் உட்காந்திருக்கேன், நீங்க வேற!" என கனலாய் தகித்தார் ரஞ்சிதம்.

இருந்தும் எழிலன் அசைவற்று நின்றிருக்க, "என்னடி ஆச்சு இவனுக்கு? ஏதோ பேயறைந்த மாதிரி நிக்கிறான்." எனக் கேட்டார் சிவமலை, தன் மனைவியை உசுப்பியபடி.

அவனருகில் சென்ற அம்மா ரஞ்சிதம், அவன் தோளை இதமாகத் தொட்டார்.

"ஐயோ அம்மா! நானில்லை..." எனத் துள்ளி குதித்தான்.
"டேய் என்னடா ஆச்சு உங்க ரெண்டாளுக்கும்? ஏன் இப்படி கிறுக்கு பிடிச்சி கூட இருக்குறவங்களையும் கிறுக்கு பிடிக்க வைக்கிறீங்க?" சத்தமிட்டார் சிவமலை.

"இல்லப்பா.... ஆமாம்ப்பா!" தடுமாறினான் எழிலன்.
"என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா இப்படி உளர்ற?" ரஞ்சிதம் பதறினார்.

"இல்லம்மா, எனக்கும் இதே மாதிரி ஒரு கனவு வந்துச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்ன!" என்றிட காய்ந்த சருகானது ரஞ்சிதத்தின் முகம்.

"என்னடா சொல்ற?" பதறினார் அப்பா சிவமலை.
அவன் சொல்லத் தொடங்கினான். மெல்ல மெல்ல முகம் மாறினாள் அப்போது அங்கே வந்த அவன் மனைவி நங்கை.

அதே வேளையில்,
கார்முகில்கள் கொட்டாரமிட்டிருந்தன கொல்லியின் மேற்கு பரப்பில் ஏகாந்த நாயகியாகக் குடிக் கொண்டிருந்த சிவமலையின் பூர்வீகச் சொத்தான "இலஞ்சி மாளிகை"யைச் சுற்றிலும்.

திடீரென சூழ்ந்த மேகங்கள் ஏற்படுத்திய அச்சத்தின் உச்சத்தில் அவ்விடத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த புள்ளிமான்கள் ஓடி மறைந்தன அடர்வனத்திற்குள்.

அப்போது, அங்கே வந்த வயதான செஞ்சடை மனிதன் ஒருவன் அண்ணாந்து பார்த்தான் ஆகாயத்தை. அங்கு எங்கும் காரிருள் மண்டி இருக்க, இடையில் மின்னல் ஒன்று வெட்டி மறைய அவள் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

"தாயி வந்திட்டியா? வா... வா... வா.... உன் மாளிகையோட நிலைய பார்த்தியா?" என்றவர் விழிகளில் வெந்நீர் கரைபிரண்டது.

(ரகசியம் தொடரும்)

யாழ்க்கோ லெனின்
141225
 
Back
Top