My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

49.பத்மாசினி

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,585

49.பத்மாசினி


முத்துராசு, சாமி கருப்பன் பாதுகாப்பில் தாடகை நாச்சி, முத்து நாச்சி பவளம் மூவரையும் மாட்டுவண்டியில் வரச் சொல்லி விட்டு, வேங்கடவன், செம்பதுமம், தங்கராசு மூவரும் குதிரையில் பறந்தனர்.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது எனப் பதுமத்துக்கு தோன்ற, பத்மாசினி ப்ரத்யட்சம் ஆகிவிட்டாள். அதன் பின் அவளை யார் தடுத்து நிறுத்த முடியும். வழியில் துரைராசுவுக்கும், வானவருக்கும் தகவலைத் தெரிவித்தனர். துரைராசு மதினியைத் தான் பார்த்து அழைத்து வருவதாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்காக மேலும் சில ஆட்களை தங்கராசுவோடு அனுப்பி விட்டார்.

ஆனால் தாடகை நாச்சியை பிடித்து வைப்பது மிகவும் சிரமமான வேலையாக இருந்தது. துரைராசு, செல்வி, வானவர், வள்ளி என அனைவருமாக அவளைச் சமாதானப்படுத்தி, பெருமாள் சோலைக்கு அழைத்துச் செல்ல, அன்று பெருமாளுக்குக் கண்ணீரோடு மெய்யுருகி பாமாலை சூட்டினாள்.

ஒரு நாள் முழுதும் தேடியலைந்து மறு நாளில் சிங்கராசு தேவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர்.

கள்ளு கலயத்தோடு, கண்களில் செவ்வரியோடி ரதி தேவியைக் கை வளைவில் வைத்தபடி அலங்கோலமாய் நிற்க, செம்பதுமத்துக்கு கண்ணீர் ததும்பியது. நல்ல வேளை தாடகை நாச்சி வரவில்லை என நினைத்துக் கொண்டவள்,

“அப்பாரு” என நெருங்கப் போக, பின்னே நாலடி தள்ளிப் போனவன்,

“ஏய், அங்கேயே நில்லு. எவண்டி உன் அப்பன்.” எடுத்தெறிந்து பேச, பதுமம் அதிர்ந்து நின்றாள்.

தங்கராசு, ”அப்பு” எனப் பிடிக்கப் போன போதும் தள்ளிச் செல்ல, வேங்கடவனுக்குத் தான் சந்தேகம் வந்தது.

“எவரடா நிவ்வு. செப்பு” என விண்ணதிர உறும, அதற்கும் மேல், ஹாஹாவெனச் சிரித்தவன்,

“உன் மாமனார். முடிஞ்சா தொட்டுப் பார்” என்றான்.

அருகிலிருந்த ரதி தேவி ஏதோ சொல்ல வர அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.

“ஏய்” என வேங்கடவன் அப்போதும் முன்னே போக, பதுமமும், தங்கராசும், தங்கள் ‘அப்பு’ வா என அதிர்ந்து நின்றனர்.

“வா, மல்யுத்தம் மோதி பார்ப்போமா” என அறைகூவல் விடுக்க, வேங்கடவன் தார் பாச்சா மடித்துக் கட்டி, மல்யுத்தத்துக்குத் தயாராக, “வாசவரே” பதுமம் தடுக்க,

“பத்மை, உனக்கு இன்னுமா விளங்கவில்லை. உன் தந்தை கழுவர் வடிவில் இருக்கும் சண்டன்” எனச் சொன்ன கணம், சிங்கம் மீது பாய்ந்து தாக்கத் தொடங்க, வேங்கடவன் கையிலிருந்த மந்திர கயிறு சண்டனை செயலாற்ற விடவில்லை. ஆனாலும் மல்யுத்தம் நடந்தது.

ஆனால் இப்போது சண்டையிட்டது சிம்மராசு தேவன், சன்ன சிரிப்போடு, ”வா மாப்பிள்ளை. என் மகளுக்கு தோதான ஜோடியாண்டு நான் சோதிக்க வேணாமா” என்ற படி வரைமுறைக்கு உட்பட்டு, தற்காப்போடு வேங்கடவனை மூர்க்கமாகத் தாக்காமல் களமாட, பார்த்திருந்த தங்கராசுவின் கண்களில் கண்ணீர்.

“பதுவு, இது அப்பு” எனவும்

“ஆமாம் அண்ணேன். தன் தேகத்தை சண்டனுக்கு கொடுத்துட்டு, அவனைத் தான் கட்டுக்குள்ள வைக்கப் போராடுறாரு. ரொம்ப வேதனையா இருக்கும்” அவள் உணர்ந்து சொன்னாள்.

பூர்வ ஜென்ம நினைவு வந்து செல்வதே அவள் உடலை அசத்தும் போது, தன் இயல்புக்கு முற்றும் மாறியவன் உட் புகுந்தால் என்ன ஆகும்.

வேங்கடவனுக்கும், சிங்கத்துக்கும் மல்யுத்தம் தொடர்ந்தது. ரதி தேவி பத்மையிடம் ஓடி வந்து, “தேவரை எப்படியாவது காப்பாத்துங்க. இந்த சண்டன் ரொம்ப மோசமானவனா இருக்கான்” எனக் கண்ணீர் விட்டாள்.

“நீ எப்படி இங்கே வந்தாய்?” எனவும்

“எல்லாமே அரையனோட சூழ்ச்சி” என விவரம் சொன்னாள்.

சாந்தன் முத்தரையன் சண்டனுக்கு வகுத்துக் கொடுத்த திட்டம் இது. முத்துக்கருப்பன் உடலிலிருந்த சண்டன், காளையை அடக்கி பத்மாசினியை மணக்கும் திட்டத்தைச் சொல்ல,

“சரியான யோசனை தான். ஆனால் மந்திர கட்டு இருக்கு. அது நிறைவேறாதப் பட்சத்தில், சிங்கராசு தேவன் உடம்பில் புகுந்திரு. அவன் உடம்பிலிருந்தா, உன்னைக் கொல்லவும் துணியமாட்டாங்க” அரையன் தாடகை நாச்சியையும் சேர்த்துப் பழிவாங்கும் திட்டத்தை வகுத்துத் தந்தான்.

சண்டன் போன ஜென்மத்திலேயே பத்மாசினியின் தந்தை வீரசிம்மரை வசப்படுத்திக் காரியத்தைச் சாதித்தவன். ஆகவே அதுவும் சரியே என்ற முடிவுக்கு வந்தான்.

சற்று முன்பே வந்தால் கூட தன்னை மடக்கக் கூடும் எனச் சரியாகச் சல்லிக்கட்டில் மருதன் இறங்கும் நேரத்துக்கு வந்தான்.

திருமலை வாசனை தாமதப்படுத்தி அரங்குக்கு வரவிடாமல் செய்வதும் அரையன் யோசனை தான். ரங்கராசு, துரைராசு உதவியால் வேங்கடவன் சல்லிக்கட்டு அரங்குக்கு வந்ததோடு மட்டுமின்றி, மருதன் உடலில் தாவி, முத்துக் கருப்பனைக் கொல்ல முயன்றதையும் முறியடித்தான்.

பின்னர் மருதன் உடலிலிருந்த சண்டனுக்கும், வேங்கடவன் உள்ளிருந்த திருமலை வாசனுக்கும் சண்டை கடுமையாக இருந்தது. முடிவில் சண்டனை சாய்த்து, திருமலைவாசன் வெற்றி பெற, செம்பதுமம் வெற்றி மாலையை மணமாலையாகவும் அவனுக்குச் சூட்டினாள்.

அந்த நேரத்தில் மருதன் வடிவிலிருந்த சண்டன் துள்ளி எழுந்து அந்த ஜோடியை முட்ட வர, சிங்கராசு தேவன் களமிறங்கியது அந்த நேரத்தில் தான்.

முதலில் வளரியை விட்டெறிந்து வாளோடு குதித்து, வழியில் வளரியை மீண்டும் பிடிக்க முனைந்த போது, வாகு தப்பியதில், ராக்கம்மா கட்டியிருந்த மந்திர கயிறு அறுந்து விழுந்தது.

சிங்கம் மருதனை ஒரே போடாகப் போட, மருதனை விடுத்து சிங்கராசு தேவனின் உடலில் பாய்ந்தான். ஆனாலும் உடனடியாகச் சிங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், உள்ளுக்குள் இரு ஆத்மாக்களுக்கும் சண்டை நடந்தது.

முத்துகருப்பனைக் காக்கும் முயற்சியில் ராக்கம்மாள் தன் சக்தியைப் பயன்படுத்த, அரங்கைச் சுற்றி இருந்த மந்திர கட்டுத் தளர்ந்தது.

அரையன் ஆட்கள் அட்டகாசம் செய்வதாகத் தகவல் வர அதைச் சாக்காக வைத்து சண்டன் கழுவன் குடிக்குள் செல்லாமலே வெளியேறினான்.

பாகீரதி, ரதி தேவி ஆகியோரைக் கடத்தியதாக நாடகமாடி சிங்கத்தின் ஆட்களை நம்பவைத்து இந்த இடம்வரை அழைத்து வந்து விட்டனர்.

சிங்கராசு தேவன், தன் உடலுக்குள் சண்டனோடு பெரிய யுத்தம் செய்தான் என்றே சொல்ல வேண்டும்.

புத்தூர் பகுதியில் சந்தித்த அரையனுக்கே, சண்டன் சிங்கத்துக்குள் இறங்கினானா என்ற சந்தேகம் வருவது போல்,அவன் நடவடிக்கைகள் இருந்தது.

அரையனை, எழுத்தில் எழுத முடியாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டி, “அடையாளம் தெரியாமல் சாகப் போற பாரு” என அறை விட்டவன், இது நாள் வரைக் காட்டமுடியாதக் கோபத்தை எல்லாம் ஒன்று சேர்த்துக் காட்டிவிட்டான்.

“அடேய் சண்டா, இவன் உடம்புக்குள்ள இருக்கியா இல்லையா” கதற, வல்லபர் செய்த பூஜையே தன்னை முழு பலத்தில் வரவிடாமல் செய்கிறது என அதனைத் தடுக்க ஆட்களை அனுப்பச் சொன்னான் சண்டன். வல்லபர், ராக்காயி செய்தது போல் ஒரு மந்திரக் கட்டை போட்டு வைக்க, அவரை நெருங்க முடியவில்லை. அதனாலேயே அடுத்த மலைத் தொடர் வரை சென்றான்.

ரதி தேவி, சிஙகராசு தேவனின் மேல் உள்ள ஆசையால் உள்ளிருக்கும் சண்டனை அறியாமல் அவனோடுப் பயணித்தாள். அரையன் சிங்கராசு தேவனை மடக்க மதுவை ஊற்றிக் கொடுக்க வைக்க, சிங்கராசு சிந்தை மயங்கி, சண்டன் அவன் உடலை ஆக்கிரமித்தான்.

சண்டனுக்கு ஜென்மங்கள் கடந்து பெண்வாசனை அடிக்க, ரதி தேவியை பெண்ணாண்டு விட்டான். முதலில் மதிமயங்கி கிடந்தவளுக்கு, இரண்டு நாள்களுக்குப் பின்பே உண்மைப் புரிந்தது.

வேடிக்கைப் பார்த்த சிங்கத்தின் ஆட்களுக்கு இது எதுவுமே புரியவில்லை. அரையனோடு சேர்ந்து ரதி தேவி சிங்கத்துக்கு மை வைத்து விட்டாள் என்றே எண்ணினர்.

ரங்கராசு தேவனுக்கு, சிங்கம் ரதிதேவியை காப்பாற்றச் சென்றிருப்பதாகச் செவி வழி செய்தி மட்டுமே வர, மதனிக்கு தெரியவேண்டாம் என்று மட்டுமே எண்ணினான்.

வேங்கடவனுக்கும், சிங்கராசு தேவனுக்கும் துவந்த யுத்தம் நடக்க, “ராயரே, சண்டனை எனக்குள்ளப் பிடிச்சு வச்சுக்குறேன். என்னோட சேர்த்து அவனையும் பலி கொடு. அப்பத் தான் நீங்க நிம்மதியா வாழலாம்” என்று சொல்ல வருவதற்குள், சிங்கம் பேசச் சிரமப்படுவதும் புரிந்தது.

செம்பதுமம், தங்கராசுவுக்கு ரதி தேவி விவரம் சொன்ன நேரத்தில் வேங்கடவனுக்கும் புரிந்து விட்டது.

“வாசவரே, அப்பாரை ஒன்னும் செய்யாதீங்க. வேறு உபாயம் தேடலாம்” எனப் பதுவு குரல் கொடுக்க,

“என்னைப் பலி கொடுக்கிறது தான் ஒரே வழி. அதை செய்ங்க” எனச் சிங்கம் சிரமப்பட்டுச் சொல்ல, தங்கராசு, செம்பதுமம் இருவரின் உள்ளமும் துடித்தது. வேங்கடவன் சற்றுத் தயங்கிய நேரம் சண்டன் மீண்டும் உக்கிரமாகத் தாக்க, வேங்கடவனும் முழுவீச்சில் திருப்பி அடித்தான்.

“சித்தினி நாயக்கரே வேண்டாம். உடல் நோவைத் தேவர் தான் அனுபவிக்க வேண்டியது வரும்” இருவருக்கும் நடுவில் சென்று மன்றாட, தங்கராசுவும், செம்பதுமமுமாக வேங்கடவனைப் பிடித்து இழுத்தார்கள்.

ஒரு கணம் சண்டன், மறு கணம் சிங்கம் என உணர்வுகளை மாற்றி மாற்றி வெளிப்படுத்த,

“அப்பாரு, உங்களை மீட்டு அம்மாகிட்ட முழுசா ஒப்படைப்பேன். என் பிறப்பின் மேல் ஆணை” அவள் உணர்ச்சி வயப் பட,

“பத்மை” என வாசவன் அவளை அணைத்துக் கொண்டான். தங்கராசு தேவன், சித்தப்பனை விட்டுச் செல்ல மனமில்லாமல் ஏங்கித் தவிக்க,

“நான் இவரைப் பார்த்துக்குறேன். அந்த அரையனைக் கவனிங்க. கழுவன் வம்சத்துக்கும் நாச்சிக்கும், அவன் தான் முதல் எதிரி” என்றாள் ரதி தேவி.

பகீரதியும் அவளது குழுவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடுநடுங்கி ஓரத்தில் ஒண்டிக் கிடந்தனர்.

பத்மாசினியும், திருமலை வாசனும் வல்லபரை யோசனை கேட்க, புத்தூர் மலை நோக்கிச் சென்றனர்.

முன்பு நாம் பார்த்த பளிங்கரினத்தவர் கோவில் அருகில், பத்மாசினி பூஜித்தப் பெருமாள் சிலையை வைத்து, மந்திர கோலங்கள் வரைந்து, தூபம் போட்டு, மந்திர உச்சாடனத்தால் உருவேற்றி, தெய்வீக மணம் கமழ வைத்திருந்தார் வல்லபர்.

திருமலைவாசனும், பத்மாசினியும் அங்குச் செல்லவுமே உத்தேசியம் பூரணம் அடையும் கணம் நெருங்குவதாக உணர்ந்தனர். வல்லபரிடம் சண்டன், சிங்கத்தின் உருவில் இருப்பதைச் சொல்ல, “பெருமாளே, இது என்ன சோதனை. உன் திருமேனியைத் தூக்கிச் சுமந்தவருக்கே இந்த சோதனையா” எனக் கலங்கினார்.

“வாங்கி வந்த வரம். என்ன செய்வது” என வேலன் வெறியாட்டு ஆடிய கபிலன் சொல்ல, அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

“அவகாசம் அதிகமில்லை. அமாவாசை நெருங்குது. அதுக்குள்ள மாயவனைத் தேடி பிரதிஷ்டை செய். தவறினால் இன்னும் பல ஜென்மம் காத்திருக்க நேரும்” என வாக்கு தந்தவன், வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டமாய் ஆடி, “ஆயி கொற்றவை உன் மக்களைக் காப்பாற்று. தீய சக்தியை அழிக்க நீ தான் வழி காட்டணும்” ஆக்ரோஷமான வேண்டுதலை அவன் வைத்தான்.

அதைக் கண்ட பத்மாசினி, “ஏழுமலையானே, வேங்கடவா! பிரத்தட்ஷயம் ஆவாய். தாயே கொற்றவையே, ஜெய் ஜக்கம்மா, சண்டனை அழிக்கும் சக்தியை வழங்கு” என ஒற்றைக் காலில், தவ கோலத்தில் முள் பாதம் மீது நின்று பீஜ மந்திரங்களை உகுத்தாள்.

திருமலை வாசனும், பின்னோடு வந்த வானவரும் பெருமாள் சிலைகளைத் தேடினர். முன்பை விட, தற்போது சிலை இருப்புக்கானக் குறிப்புகள் இருக்க, வல்லபர் வழிகாட்டலில் ஆடி அடங்கியிருந்த பளிங்கரினத் தலைவர் மற்றும் அவன் ஆட்கள் உதவியுடன் தோண்ட ஆரம்பித்தனர். இந்த முறை மருதமரத்துக்குப் பதில் நாவல் மரத்தின் அடியில் தோண்டினர்.

பெருமாள் சோலையில் தாடகை நாச்சியோடு, முத்துநாச்சி, பவளத்தையும் பெருமாளைத் தரிசிக்க அழைத்துச் சென்றிருந்தனர். நீல வள்ளியே இப்படி வாழும் போது, பதுமத்தோடு சேர்ந்து தன் மகள் பவளமும் வேங்கடவனோடு வாழட்டுமே. இருதார மணம் வழக்கத்தில் இல்லாத ஒன்றா என்ன. இந்த முரட்டுக் கழுவர்களை விட ராயர்கள் உசந்தவர்கள், என்ற எண்ணம் முத்து நாச்சிக்கு தோன்றியிருந்தது.

தாடகைக்குப் பெருமாள் நாமாவளிகளைப் பாடிய போதும், அவள் மனம் அமைதியடையவில்லை. மீண்டும் மீண்டும் சிங்கத்திடமே சிந்தை செல்ல, ஓரிரவு தாக்குப் பிடிப்பதும் மூச்சடைப்பது போல் இருக்க, சத்தமில்லாமல் சின்ன கழுவன் குடியிலிருந்து கிளம்பி விட்டாள்.

அதிகாலையில் தாடகை இல்லாததைக் கவனித்துத் துரை ராசு தேடினார்.

ஏற்கனவே தகவல் வந்து முத்துராசுவும், சாமி கருப்பனும் நாகமலை கணவாயை நோக்கி தங்கராசுவை சந்திக்கச் சென்றிருந்தனர். தங்கராசு, காவலுக்கு தன் ஆட்கள் சிலரை சிங்கராசு தேவன் இருக்குமிடம் நிறுத்தி விட்டு அரையனைத் தேடிக் கொண்டு இருந்தான்.

கழுவன்களுக்குள் சங்கேத ஒலி இருக்க, அதை வைத்தே ஓரிடத்தில் சந்தித்தனர்.

“அப்பாரு எங்க அண்ணேன்?” சாமி கருப்பன் கவலையாகக் கேட்க,

“சின்னம்மா எங்கடா. அவுக இப்போதைக்கு அப்புவைப் பார்க்காமல் இருக்கிறது தான் நல்லது” என விவரம் சொன்னான்.

“ஆத்தி, அப்பாரு அம்மாளை வம்பிழுக்க விளையாட்டா சொன்னது வினையாப் போயிடுச்சே. எனக்கு அம்மாளை நினைச்சா தான் பயந்து வருது” சாமி கண்ணீர் விட,

“நீ என்னமாவது சொல்லி, சின்னம்மாளை ஒரு நாள் தாமதப்படுத்து. அதுக்குள்ள ராயரும், பதுவும் எதாவது உபாயம் தேடிடுவாக” என சாமியைத் திருப்பி, சின்ன கழுவன் குடிக்கு அனுப்பி விட்டு, மற்ற இருவரும் அரையனைத் தேடினர்.

தாடகை நாச்சி, சித்தன் போக்கு சிவன் போக்கு எனக் குதிரை சென்ற வழியில் செல்ல, தங்கராசு தேவன் கண்ணில் மண்ணைத் தூவி சுற்றித் திரிந்த சாந்தன் முத்தரையனிடம் சிக்கினாள்.

“தாடகை நாச்சியா. வாங்க வாங்க. அடியேய் எனக்கு வாக்கப்பட மாட்டோம்னு, அந்த கள்ளப்பயலை கட்டினியே. அவன் வவுசி என்னன்னு காட்டுறேன் வா” எனத் தாடகையின் ஊழ்வினை உந்த, அரையன் சண்டன் தங்கியிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றான்.

தாடகை, அரையன் கண் முன்னும் வரக்கூடாது என நினைப்பவள், கணவன் பித்துப் பிடித்து, என் புருஷன் எனக்கு மட்டும் தான் என்ற சுய உடைமை உந்த, அவன் பின்னோடு சென்றாள்.

அதிகாலை பொழுது புலரும் நேரம், சிங்கராசுதேவன், தாடகை நாச்சி காதலுக்கும், தாம்பத்திய வாழ்வுக்கும் அஸ்தமன அத்தியாயம் எழுதியது போலும்.

சண்டன் அடங்கி இருக்கும் போது, விழித்தெழும் சிங்கம் ரதி தேவியை ஒதுக்கி தாடகையை எண்ணித் தவித்துத் தான் போவான். அவனின் தவிப்பை ரசிக்கும் சண்டன், மது அருந்தி மயக்கி விட்டு, ரதி தேவியோடு கூடி அவளைப் பாடாய்ப் படுத்துவான்.

முதலில் சிங்கம் என்றே தன்னை தந்தவள், பின் சிங்கத்தைக் காயப்படுத்துவேன் என மிரட்டிய சண்டனிடம் தன்னை ஒப்புக் கொடுத்தாள்.

கன்னிகைக்குக் காதல் வராது என யார் சொன்னார்கள். ஒருதலையாய் தேவரே என வயதில் மூத்தோனைக் காதலித்த ரதி தேவி, அரையன் சொல்லுக்காகக் கழுவன் குடி வந்தாலும், சென்றாலும் கடைசியில் அவனுக்காகவேத் தன்னையும் கொடுத்தாள்.

அதிகாலை நேரத்தில் சண்டன் அவளோடு கூடுவதில் அதிக ஆர்வம் காட்டுவான். அரக்கனுக்கு வெட்கம், மானம் ஏது திறந்த வெளியில் அவளோடு கூடினாலும் மற்றவர் தான் மறைந்து கொள்வார்கள்.

இருள் பிரிந்து, அருணன் வரும் நேரத்தில் தன் வாழ்நாளில் காணக் கூடாத காட்சியைக் கண்டாள் தாடகை நாச்சி.

தனக்காக வாசி மலையிலிருந்தும் குதித்து தன் காதலை நிரூபித்தவன் பதினெட்டு வருடத் தாம்பத்தியத்தில் மூத்த மனைவிகளிடமும் செல்லாதவன், இந்த ஆட்டக்காரிக்காகப் பொய் சொல்லி வந்தானா என்ற ஆங்காரம் வந்தது.

கண்கள் அவனில் நிலை குத்தி நிற்க, “கழுவனே” எனக் கர்ஜித்தாள்.

சண்டனே அவள் சத்ததில் திரும்பிப் பார்க்க, முன்னொரு காலத்தில் மதுரையை எரித்த கண்ணகி போல் நின்றவள்,

“காதலாகிக் கசிந்துருகி என்னோடு தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு, மணி மணியாய் ஆறு பிள்ளைகளைப் பெற்றவனுக்குக் கடைசியில் புத்தி இப்படியாப் போக வேண்டும். சீ” என இடி முழக்கமாய் சத்தமிட, அதன் எதிரொலி தங்கராசு முத்துராசு காதிலும் கேட்டு ஓடி வந்தனர்.

அரையன் அவளின் அலறலை அவஸ்தையை ரசித்தபடி நிற்க, சண்டன் கோணல் சிரிப்போடு அவளை நோக்கி வந்தான்.

உள்ளே இருந்த சிங்கம், ”நாச்சி, இல்லைடி. இது நான் இல்லைடி. நான் உனக்குத் துரோகம் பண்ணலடி” உள்ளே கதற, சண்டனைத் தாண்டி அது வெளியே வரவில்லை.

“தப்பு செஞ்சுட்டு, வெட்கம், மானம் இல்லாமல் என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே வர்றியே” அவள் பேசப் பேச உற்சாகமாக அவளை நெருங்கினான்.

“நாச்சியா, இங்கிருந்து போயிடு. இது உன் புருஷன் இல்லை” ரதி தேவி கத்தினாள்.

“அடச் சீ நீயெல்லாம் எனக்குப் புத்தி சொல்றியா. ஆமாண்டி. இவன் என் புருஷன் இல்லை. உன்னைத் தொட்ட பிறகு, நான் என் புருஷன்னு சொல்லுவேனா. இவனுக்குப் புள்ளை பெத்ததுக்கு அக்காளுங்களை மாதிரி நானும் மலடியாவே இருந்திருக்கலாம்.” ஆக்ரோஷமாகப் பேச,

“நாச்சியா” எனச் சிங்கம் உள்ளே ரத்தக் கண்ணீர் வடிக்க,

“என்னடி பெரிய பத்தினி வேஷம் போடுற. நான் ஆம்பளை அப்படி தான் இருப்பேன்” சண்டன் வேண்டுமென்றேப் பேசி தாடகையைத் தொட வந்தான்.

உள்ளிருந்த சிங்கத்துக்கு பதறியது. நாச்சி இங்கிருந்துப் போயிடு என கதறினான்.

“என்னைத் தொடாதே. நான் நெருப்பு” என உருமியவள் அருகில் நின்ற அரையனின் உடைவாளை உருவி,

“உன் பிள்ளைகளைத் தாங்கிய இந்தக் கருப்பை இல்லாமலே போகட்டும்” என தன் வயிற்றில் பாய்ச்சிக் கொள்ள,

“நாச்சியா” எனத் துடித்த சிங்கம், சண்டனை மீறிக் கதறிய போதும், மனைவியைத் தொட முயலவில்லை.

பாதி வழி சென்றிருந்த சாமி கருப்பன், எதிரே துரைராசுவை சந்தித்து, தாடகை கிளம்பியது தெரியவும், தந்தையை தாய் இப்படி பார்த்து விடக் கூடாதே என நாகமலைக் கணவாயை நோக்கிப் பறந்து வந்தான்.

சில கணம் தாமதத்தில் தாடகை முந்திக்கொள்ள, “அம்மா” எனப் பாய்ந்து வந்து தாடகையை தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.

தங்கராசு, முத்துராசு, ”அவசரப் பட்டுட்டியே சின்னம்மா” என்ற வார்த்தைகள் அவள் காதில் விழவே இல்லை.

மகனின் மடியில் அவள் உயிர் மெல்லப் பிரிந்து கொண்டிருக்க, சண்டனை மீறி சிங்கம் மடிந்து அவள் முன்னே மண்டியிட்டு கரம் கூப்பி “விளையாட்டுப் பேச்சு வினையா போயிடிச்சேடி. நீ இல்லாத இந்த உலகத்தில் எனக்கு மட்டும் என்ன வேலை” கதறினான்‌

புத்தூர் மலையில் ஒரு காலில் தவமிருந்தப் பத்மாசினிக்கு, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்ற, சிலை பிரதிஷ்டையை விடுத்து, வல்லவர், வேங்கடவன் தடுத்ததையும் மீறி, புரவியில் ஏறிப் பறந்து வந்திருந்தாள்.

அவள் வந்த வேளை, தாடகையின் கடைசி கணமாக இருக்க, “அம்மா. எனக்கு குருவாகவும் இருந்து சகலத்தையும் கற்றுக் கொடுத்தவளே. போன ஜென்மத்தில் அறியாத தாயன்பை உன் மூலமாத் தானே உணர்ந்தேன். உங்களை நல்லபடியா வாழ வச்சு தான், என் வாழ்க்கையை அமைச்சுக்குவேன்னு வாக்குக் கொடுத்திருந்தேனே. நீ என்னையும் நம்பலையா” எனத் தாடகையின் மடியில் விழுந்துக் கதற, தங்கராசுவின் கைகளைப் பற்றி, “என் பிள்ளைகளைப் பார்த்துக்கோ” என்ற படி உயிர் துறந்தாள்.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top