Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,641
வானம்பாடி-48
அடுத்த நாள் காலையில் மணிக்குயில் இல்லம் பரபரப்பாகச் சுழன்று மூன்றும், மூன்றும் ஆறு பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பியது. “அத்தை, வவுத்தை வலிக்கிது.” “அம்மா மேலு சுடுது.” “நான் போ மாட்டேன் போ!” ‘இன்னைக்கு ஒரு நாள்மட்டும் லீவ் போட்டுக்குறோம் அத்தை.” என ஆளுக்கு ஒரு காரணமாகச் சொன்ன, செல்வம், ஜெயா மகன்களைச் சரிக்கட்டி “இன்னைக்கு சாயந்திரம், ஸ்டார் ஹோட்டல் போகலாம்.” எனச் சொல்லி ஒரு வழியாய் மீனாவும், சன்னுவுமாக அனுப்பி வைத்தனர்.“அலமேலு, நீ ஒரு வாய் பிச்சு போட்டுட்டு போயி குளிச்சு கிளம்பி வா, அடுத்த டூட்டி பார்க்கணும், கொக்குளத்துக்காரி பிள்ளைகளை அனுப்பி விடுவா!” எனப் பேச்சி சொல்லவும், “அதெல்லாம் இல்லை, இன்னைக்கு, அவுங்க ஆத்தா வீட்டுக்கு அனுப்பி விட்டுடுவா.“ என பூவும், மீனாவுமாக ஆருடம் சொன்னார்கள்.
“என்னங்கடி இப்படி சொல்றீங்க, நான் இருக்கேன், அலமேலு இருக்கா, இந்த தடவை அனுப்புவா பாரு.” எனப் பேச்சி அடுக்கவும், “அதெல்லாம் இங்க ஒரு நாளுண்டா, அங்க ஒரு நாளுண்டு, மதினி கணக்கா இருக்கும், அனுப்பாதுங்குறேன் என்னா பந்தயம்?” என மீனா சவால் விடவும்,
“அவளுக்கு ஏத்துக்கிட்டு நான் என்னத்துக்கு பந்தயம் கட்டுறேன், எங்குட்டோ போகட்டும், எங்குட்டோ வரட்டும், எனக்கென்ன வந்துச்சு.” என பேச்சியம்மாள் நொடிக்க, “ஏலேய், அம்மாச்சி உங்க ஊட்டுக்கு வந்ததுக்கு, அத்தையும் மருமவளுமா சேர்ந்து என் மகளைக் கோர்த்து விட்டுட்டிங்க. நடத்துங்க, நடத்துங்க. என் மகள் ஒத்த ஆளா நிண்டு அம்புட்டு பேரையும் சமாளிக்கும்.” எனச் செல்வம் பெருமை பேச, “நாங்க உள்ளதைத் தானே சொன்னோம். நீ வேனுமுண்டா உன் மகளுக்கு சப்போர்ட்டா பந்தயம் கட்டு.” என பூவு கணவனை வம்பிழுத்தாள்.
“நாத்தனாலையே வேலை வாங்காமல், அம்மாவுக்கும் வேலையை பிரிச்சு குடும்பமுண்டு நினைக்கிது, அது ஓர் தப்பா?” என வாக்குவாதம் ஓடிக் கொண்டிருக்க, முத்துப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தவன், “அப்பா கொடுத்து விட்டார்.“ என அப்பத்தாவிடம் நாட்டு வாழைப்பழங்களை கொடுக்க, "ஏன், நாங்க வாங்கி குடுக்க மாட்டமோ?" என பூவு கோப பட,
"அடியே, நீ வாங்கி தான் குடுப்ப, என் தம்பி அது கையாள நட்ட வாழையிலிருந்து, பக்குவமா பழுக்க வச்சு அனுப்பி விட்டுருக்கு. அதெல்லாம் உனக்கு புரியாது." என செல்லம்மாளே, பிறந்த வீட்டுக்கு ஆதரவாக பேசினார்.
“கிளம்பலாமாடா, உங்க மாமன் வழியவே பார்த்துகிட்டு இருப்பான், நான் கொண்டு போயி விட்டுட்டு திரும்பனும்.” எனப் பிள்ளைகளிடம் பேசுவது போல் தகவலைச் சொல்ல, ”எப்படி?” என மீனா பேச்சியிடம் வம்பிழுக்க, பேச்சி, “ம்க்கும்!” என நொடித்தார்.
‘ஏய்யா, நாங்க பார்த்துக்க மாட்டோம்.” என செல்லம்மாளும், “நான் பார்த்துக்குறேன் எம்பி.“ என சன்னுவும் கேட்கவும், “நானும் அப்படித்தான் பிரென்ட் நினைச்சேன்.” எனவும், வெற்றி சிரிப்போடு, “அப்புறம் என்ன?” என்றார் பேச்சி .
“அப்பத்தா, நம்ம வந்ததிலிருந்து சன்னுவை வேலை வாங்கிட்டே இருக்கோமாம். ஏவுன வேலை செய்ய ஒரு ஆளு சிக்கிச்சுண்டு, ஆளாளுக்கு வேலை சொல்லறமாம், அது வளர்ச்சியைக் கூட நம்ம பார்க்கிறது இல்லையிண்டு ஒரு ஆள் கம்பளையின்ட், அதுல என் பொண்டாட்டி காண்டாயிட்டா.“ என முத்து சோகமாகச் சொல்ல,
“அது யாருடா நம்ம குடும்பத்து மேலையே பழி போடுறவன்?” எனப் பேச்சி கேட்கவும், சன்னு அருகில் நின்ற மீனா, அவள் தோளில் இடித்து விட்டு, “அது யாருண்டு ’எனக்குத் தெரியும், அது ஒரு கம்பியூட்டர் என்ஜினியர் தானே?” என மீனா புதிர் போட்டாள்.
“இந்த ஊர்ல சன்னுவை யாருக்குத் தெரியும்?” எனப் பூவு கேட்கவும், “எல்லாம் நம்ம ஆள் தான். பாரின் ரிட்டர்ன் உன் தம்பி தினேஷ் பாண்டி. அவன் வந்து, என் பிரெண்டை டைடெல் பார்க் கூட்டிட்டு போறேண்டு சொல்லி இருக்கான்.“ என முத்து சொல்லவும்,
“கல்யாணம் ஆகாத புள்ளையை, பார்க்குக்கு கூட்டிட்டு போறேண்டா சொன்னான்.” எனப் பேச்சி கோபப்பட, “தினேஷ் வந்து பேசிக்கிறேண்டு சொன்னான், நீயே விவரம் கேட்டுக்கோ.” என முத்து கிளம்ப, விவரம் தெரிந்தவர்கள் சிரித்தனர், செல்வம் அம்மாச்சிக்கு டைடெல் பார்க் என்றால் என்னவென்று விளக்கினான்.
முத்துவோடு வாசல் வரை சென்ற சன்னு, “என்ன எம்பி இப்படி என்னை மாட்டி விட்டுட்டு போறீங்க. நான் ஒன்னும் அவரோட போக மாட்டேன்.” என்று பிள்ளைகளை காரில் ஏற்றி விட்டுக் கொண்டே சொல்ல, “போய் பார்க்காமலே முடிவு பண்ணாதே சன்னு, மதுரையில் சாப்ட்வேர் கம்பெனி கம்மி. அவன் எதாவது ஆரம்பிக்கிற பிளான் வச்சிருப்பான். புது ப்ராஜெக்ட் சொன்னாலும் ஒத்துக்கோ. இப்போதைக்கு ஷார்ட் டைம் ப்ராஜெக்ட் தான் எடுத்திருப்பான். அதில வேலை செஞ்சா உனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.” என முத்து எடுத்துச் சொல்ல, “என் நானகாரு கிட்ட கேட்கணும். அவர் பெர்மிஷன் இல்லாமல் நான் முடிவெடுக்க முடியாது.” என்றாள்.
“தினுகிட்ட சொல்லு. இவனையே ஹேண்டில் பண்ண முடியலைன்னா, யூ எஸ் போயி என்ன செய்வ?” என முத்து கேட்கவும், “அங்கே எல்லாம் பேசிடுவேன், இந்த பெப்பர் பாண்டி தான் எனக்குப் பிரச்சனையே!” என அவள் முணுமுணுக்க, “என்னது?” என்றான் முத்து. “ஒன்னும் இல்லை, நீங்க கிளம்புங்க.” எனப் பிள்ளைகளைக் கொஞ்சி அனுப்பி விட்டவள், மீனாவைத் தேடி மாடிக்கு வந்தாள்.
“எங்கண்ணன் புயல் வீச தொடங்கிடுச்சு. நீங்க யூ எஸ் போறேன்னு சொன்னா, நாங்க விட்ருவோமா?” எனக் கிண்டல் செய்ய, “போ, பேசாமல்.” என சன்னு பொய் கோபத்துடன் தன் பெட்டியைத் திறக்க, “நல்லா, அழகா, சூப்பரா ஒரு ட்ரெஸ்ஸை செலக்ட் பண்ணுங்க பாப்போம்.” என மீனா வம்பிழுத்தாள்.
“இந்த பெட்டி மாறின அன்னைக்கு என்ன பேச்சு பேசினார் தெரியுமா, சீப் பிஹவியர்.“ எனச் சொல்லிக் காட்ட, “அதுக்கும் சேர்த்த வச்சு செய்யுங்க யார் வேண்டாம்னா.” எனப் பேசிக்கொண்டே மீனா, தன் சேலையைச் சரி செய்து கொண்டே கிளம்ப ஆயத்தமாக, சன்னு ,தான் உடுத்துவதற்காக ஓர் சுடிதார் செட்டை எடுத்தவள் கண்ணில், அதன் அடியிலிருந்து மீனா அன்று கொடுத்து வைத்திருக்கச் சொன்ன ராஜதுரைக் கொடுத்த நகைப் பெட்டி கண்ணில் பட்டது.
“மீனா, இந்தா இதைப் பிடி இல்லைனா, நான் மறந்திடுவேன்.” என அந்த பெட்டியை நீட்ட, “அந்த டெரெர் பீஸ் குடுத்ததாக்கும் எனக் கையில் வாங்கியவள், அதைப் பிரித்துப் பார்க்க, சன்னு குளியலறை நோக்கிச் சென்றாள்.
“அந்த காலத்து மாடல், லாக்கெட் டாலர், ரங்கம் கொடுத்து விட்டுச்சாம், அவுங்க அப்பா காலத்தில செஞ்சிருக்கனும், இல்லையிண்டா ரங்கம் பழைய பஞ்சாங்கமா இருக்கனும்.“ எனப் பேசியபடியே திறந்தவள், “பயங்கர பாசக்காரன் தான். ஒரு பக்கம் தங்கச்சி, மறுபக்கம் லவ்வர், இந்தாள் ஒழுங்கா குடும்பம் நடத்தியிருந்தா, இதுங்க ரெண்டுமே ஐஸ் வச்சே காரியம் சாதிச்சிருக்கலாம்.” எனப் பேசியபடி தன் கபோர்ட் சாவியைத் தேட, அது கிடைக்கவில்லை.
“சமயத்துக்கு, தேடுற சாமான் கையில கிடைக்காது.” எனக் குறைபட்டவள். “மதினி, என் பீரோ சாவியை காணோம். இப்போ தேட நேரமில்லை. உங்க பெட்டி மேலையே வச்சிட்டு போறேன், மதியம் வந்து உள்ள எடுத்த வச்சுக்குறேன்.” எனக் குளியலறையைத் தட்டி செய்தி சொன்னாள்.
“ஓகே, ரூம் கதவை சாத்திட்டு போயிடு.“ எனக் குரல் கொடுத்தவள், “இந்த பெப்பர் எதுக்கு இந்த வேலை பார்க்குது. நான் எங்க போனா தான் என்னவாம். பண்ணை வீட்டில எப்படியோ போன்னு விட்டுட்டு வந்துட்டு, இப்ப மட்டும் என்ன வந்துச்சாம். அவர் மனசுல என்ன வேணா நினைச்சுக்கட்டும், நானாவை சமாளிச்சிட்டு, இங்கிருந்து கிளம்பிட வேண்டியது தான்.” என தனக்குள் பேசிக்கொண்டவளுக்கு, சமய சந்தர்ப்பம் இல்லாமல் தினேஷின் புது வீட்டு அறை அலங்காரங்கள் நினைவுக்கு வர, அதில் லக்ஸரி குளியல் அறையும், அடுத்து ஹைதராபாத் குளியல் அறையும் நினைவில் வர சன்னு முகம் சிவந்தாள் .
பின் தன்னைத்தானே தலையில் குட்டிக் கொண்டவள், “சன்னு, வெக்கம் கெட்டவளே, கண்டபடி கற்பனையை ஓட விடாதடி. வேண்டாம் வேண்டாம்னு உன் வாய் மட்டும் தான் சொல்லுது.” எனத் திட்டிக்கொண்டு பூங்குயில் மகள்களுக்காக அரைத்து வைத்துள்ள, வாசனைப் பொடிகளையும் பூசிக் குளித்து புது மலராகவே வெளியே வந்தாள்.
கண்ணாடியில் பார்த்த அவள் முகம் அவளுக்கே யாரோ போலிருந்தது. "அச்சோ, இவனை நினைச்சாலே என் முகம் இப்படி தான் ஆகுது போல, அம்மா பார்த்தவுடனே கண்டு பிடிச்சிடும். கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் சன்னு." என முகத்தை கண்ணாடியில் பார்த்தவள், "அச்சோ, இது பெப்பர் பாண்டி முகமூடி. எனக்கு வேண்டாம்பா, அதுக்கு அசடு வழியிற சன்னுவே பரவாயில்லை என சிரித்துக் கொள்ள,
“ஆத்தா, அலமேலு.” எனக் கீழிருந்து குரல்கள் அழைக்க, “அவ்வா, நீங்க சாப்பிடுங்க, எனக்கு பசிக்கலை, நான் வந்து சாப்பிட்டுக்குறேன்.” எனக் குரல் கொடுத்த விட்டு, தான் தலை சீவி, ஒப்பனை செய்து தயாரானாள்.
சிவபாண்டியன் அழைப்பின் பேரில் ராஜபாண்டி, கௌசி துரை பாண்டி, மருது, தினேஷ் ஆகியோர் வழியில் இறங்கி பேச்சியை நலம் விசாரித்து காபியை அருந்திவிட்டு மானூத்து கிளம்பி விட, தினேஷ், “ஆதி வரேன்னு சொல்லியிருக்கான்.” என மணிக்குயில் இல்லத்தில் தாமதித்தான்.
மானூத்து பாண்டியன் இல்லம், எப்போதும் ஆட்கள் நிறைந்திருக்கும் கூடம் இன்று சாமான்களால் நிறைந்து கிடைக்க, வீட்டு ஆட்களோடு, வெளி ஆட்களும் சேர்ந்து ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.
“ஆத்தாடி, இம்புட்டு சாமானும் இந்த வீட்டுகுள்ளே இருந்துச்சா?” என கௌசி ஆச்சரியப்பட்டுக் கொண்டே கூடத்துக்குள் வர, “எத்தனை மருமகளுங்க சீர் கொண்டு வந்திருக்கோம், அப்புறம் நிறையாமலா போயிடும்.” என அசோதை சொல்லவும்,
“அதுக்கு முன்னாடி நாங்க என்ன வெறும்பயலாவா இருந்தோம், சட்டி பானையும், ட்ரெங்கு பெட்டியும் சீரா கொண்டு வந்துட்டே இந்தப் பேச்சு.” என வீரனே கடுப்படிக்க,
“எங்கப்பாரு தேக்குல பீரோல் குடுக்குறோமுண்டும் தான் சொன்னாரு, உங்க வீட்டுல வைக்க இடமிருந்துச்சா, இப்போ தானே இம்புட்டு பெரிய வீடு கட்டியிருக்கு.” என அசோதை விடாமல் சொல்ல,
“யாரு எங்க மாமன், உங்க அப்பாரு, தேக்கு பீரோ! ஏத்தா சொன்னாலும் பொருந்த சொல்லு, எங்க ஆத்தா மக வீட்டுக்குத்தான் போயிருக்கு. திரும்ப வந்த பிறகு இந்த கதையெல்லாம் சொல்லு.” என சிவபாண்டி திருப்பி கொடுத்தார்.
“அத்தைக்கு அங்கிருந்தே காது கேட்கும். அரைமணிக்கு ஒருக்கா, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் போறிங்களே சொல்லாமலே இருப்பிங்க?” என் சந்திரா சொல்லவும், “நாங்க எட்டி பார்க்கலேண்டா, அதுக்கும் நீங்க தான் வாங்குவிங்க.” என்றார் ராஜபாண்டி.
"அதென்னமோ வாஸத்வம் தான். தெரிஞ்சா சரி." என மூவரும் கோரஸ் பாட, இளைய மருமகள்கள் மூவரும் அடுப்படியை உருட்டிக் கொண்டிருந்தனர்.
வீரன், “அண்ணேன், பைலை பார்த்துடுவோம் வாங்க.” என புது வீட்டுக்குச் செல்ல, அங்கு ஏற்கனவே, செல்லப்பாண்டி, மருது பாண்டி கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். "என்னப்பா ஆரம்பிச்சா? சொத்து மதிப்பு எம்புட்டு தேறும்???" என ராஜன் கேட்க, "உங்களுக்கு தெரியாததா சித்தப்பா?" என ஜெயா சிரித்தான்.
“இதெல்லாம் மூல பத்திரம்.” எனப் பழுப்பேறிய காகிதங்களை செல்லபாண்டி காட்ட, “எங்க அப்பாரோட சீயான் பேர்ல இருந்தது.” எனப் பெரிய பாண்டிகள், எது எப்போது வாங்கியது என வரிசைப் படுத்திக் கொண்டிருந்தனர்.
“வெளி ஆட்களை விடாமல், தினேஷுகிட்ட சொல்லி எல்லாத்தையும் டிஜிட்டல் ஆக்கிடுவோம்.” என ராஜன் யோசனை சொல்ல, “நானும் அதைத் தான் சித்தப்பா நினைச்சேன்.” என ஜெயாவும், பத்திரப் பதிவு அலுவலகங்களில் நடக்கும் மாற்றங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இதெல்லாம் துரை குடும்ப சொத்து, சித்தப்பா வெளி ஆட்களுக்கு விக்க வேண்டாமுண்டு நம்மகிட்ட குடுத்துட்டு போனார்.” என ஒரு பத்திரத்தைக் காட்ட, “ஆமாம்ண்ணேன், நம்ம தோட்டத்தோடே சேர்ந்த இடமுண்டு நம்மகிட்டையே குடுத்தார். இப்ப பெரிய பம்ப்செட் இருக்கிறது அவுக இடம்தான். ரங்கம், தங்கச்சி ஓடிப்போன துக்கத்தை மறக்கிறேண்டு குடிச்சுப்புட்டு அங்குட்டு வந்து தான் விழுந்து கிடப்பான். இவன் ஜெயிலுக்கு போன பிறகு நடு உள்ளவன் ராமதூரை சொத்து பிரிச்சு பணமா கேட்டாண்டு நம்மகிட்ட குடுத்தார்.” என வீரன் விவரம் சொன்னார்.
“சீயான் காலத்தில் தோட்டம் ஒண்ணா தான் இருந்தது, பாகம் பிரிச்சதில சித்தப்பாருக்கு போச்சு, மகனுங்க வேற யாருக்கும் வித்துப்புடுவானுங்கண்டு தான் நமக்கு கொடுத்தார்.” என சிவபாண்டி விவரம் சொன்னார்.
“ராசா, நம்ம சொத்து இப்ப வரைக்கும் பொதுவுல தான் இருக்கு. ஒண்ணா பாடுபடுறோம், செலவழிக்கிறோம், நமக்குள்ள சரியாய் போச்சு. அடுத்து இவனுங்க காலத்துக்கு எப்படி, ஓர் யோசனை சொல்லு.” என சிவபாண்டி கேட்கவும், மற்ற மூவருமே சிறியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தான் நோட்டம் விட்டார்கள், சரியாக அந்த நேரம் பிள்ளைகளை இறக்கிவிட்டு முத்துவும் வந்திருந்தான்.
முத்து, செல்லப்பாண்டி, ஜெயபாண்டி மூவரும் மானூத்தில் இருப்பவர்கள், சொல்லப்போனால் அனுபவ பாத்யதையம் உண்டு, அவர்களும் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க, “பெரியப்பா, உங்க காலத்தில எப்படி இருக்கோ அதே மாதிரி எங்க காலத்திலையும் இருக்கட்டும்.“ என மருது பாண்டி பதிலளிக்க, “நீங்க என்னப்பா சொல்றிங்க?” என சிவபாண்டி மற்றவர்களைக் கேட்டார்.
“இந்த வீடு பரம்பரையா வரது பெரியப்பா. எங்க பசங்க வளர்ந்த பிறகு இடம் பத்தலையிங்கிற நிலைமை வந்தா, ராஜா பெரியப்பா, துரை சித்தப்பா மாதிரி நானும் பக்கத்திலையே ஓர் வீட்டை கட்டிக்கிறேன். மத்தபடி வீடு பொதுவுலையே இருக்கட்டும்.” என்றான் முத்து .
“அப்புறம் செல்லத்துக்கும், ஜெயாவுக்கும் தம்பிங்களை மாதிரி வசதியான வீடு கட்டி குடியேறனுமுண்டு நினைப்பு இருக்கும்ல.” என சிவபாண்டி மகன்கள் என்ன நினைக்கிறார்கள் எனத் தூண்டில் போட்டார்.
“எத்தனை புது வீடு வந்தாலும் நம்ப வீடு கம்பீரம் வருமா, இது கட்டடம் இல்லை, நம்ம பாண்டிக்கு குடும்பத்தோட அடையாளம். அதை எப்பவுமே, யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.“ என ஜெயாவும்,
“இந்த வீடு எப்பவுமே அண்ணன் தம்பிங்க எங்களுக்கு பொது தான். மத்த வீடு மாதிரி, இந்த வீட்டை நாங்க எடுத்துக்குறோம், மத்தவுகளுக்கு வீடு ஈட்டுக்குப் பணத்தை குடுக்குறோமுண்டு நாங்க சொல்ல மாட்டோம். இது நம்ம வீடு, பசங்க வளர்ந்தா என்னா, இன்னொரு மாடி அவைங்க விருப்பத்துக்கு கட்டுவோம். இப்ப இருக்க மாதிரியே, பாண்டி குடும்பத்துக்கு எத்தனை வாரிசு வந்தாலும் அத்தனை ரூம்ப கட்டி வசதி பண்ணிக்குவோம். சமையல், சாப்பாடு ஒரு அடுப்படியில் தான். இதை மாத்த வேண்டாம் பா.“ எனச் செல்ல பாண்டி சொல்லவும், மூத்த தலைமுறை நால்வருக்கும் மன நிறைவாக இருந்தது.
“இந்த வார்த்தைக்காகத் தான், அண்ணேன் இந்த கேள்வியே கேட்டார்.” எனத் துரையும் “அண்ணன், நீங்க இரண்டு பேரும் பெரியவுக பார்த்து முடிவு பண்ணுங்க. எல்லாம் சரியா தான் இருக்கும்.“ என வீரனும் சொன்னார்கள்.
“உலகம் மறுபடியும் இந்த கூட்டுக் குடும்ப கலாச்சாரத்துக்குள்ள, கம்யூனிட்டி லிவிங்கிற பேர்ல போகுது. நீங்களும் காலத்துக்கு ஏத்த மாதிரி, உங்க பொண்டாட்டி பிள்ளைகள் ஆசைக்கு ஏத்த மாதிரி, வேலைக்கு ஆட்களைச் சேர்த்துக்கிட்டு, வீட்டைப் பெரிசா கட்டிகிட்டோ வசதி செஞ்சுக்குங்க. எதா இருந்தாலும் மனசு விட்டு பேசிக்குங்க. நாங்க அண்ணன் தம்பி நாலு பெரும் அப்படி தான் இருந்தோம், இருக்கோம், இருப்போம். பாட்டன், பூட்டன் சேர்த்து வச்சிருக்க சொத்தே, பிரச்சனை ஆகாமல் பார்த்துக்குங்க.” என ராஜன் அறிவுரை சொல்ல, இளைய பாண்டிகளும் ஒத்துக் கொண்டனர்.
மேலும் சில பத்திரங்களை வகை பிரிக்க, அதனோடு, குலதெய்வம் கோவில், ஊர் கோவில், பண்ணை ஆள் விபத்தில் இறந்தவனுக்கு, விதவை பெண்ணுக்கு எனக் கத்தையாக தான செட்டில்மென்ட் பத்திரங்கள் இருந்தது.
பஞ்சாயத்து செய்து, சிலருக்கு நியாயம் கிடைக்கப் பாதிக்கப்பட்டவருக்கு, எதிர்த் தரப்பிலிருந்து வாங்கி கொடுத்த பாத்திரமும் இருந்தது. அது போன்ற பத்திரங்களில், தனி குறிப்பாக, எதற்காக யாரிடமிருந்து யாருக்குக் கொடுக்கப் பட்டது எனப் பெரியவர், தன் கைப்பட எழுதி வைத்திருந்தார்.
“அப்பத்தா சொன்னது நிஜம் தான், தாத்தன் வள்ளலா தான் இருந்திருக்காரு.” எனச் சொல்லிக்கொண்டே அந்த வரிசையில், மற்றொரு பத்திரத்தைப் பிரித்து பார்க்க, தும்மலன்பட்டி அம்மாசி, அங்கம்மாள் தம்பதிக்கு - ஜீவன உபகாரமாக 2 ஏக்கர் நிலம் வழங்கப் பட்டிருந்தது.
“இங்க பாருங்க, தாத்தா யாருக்கு தானம் குடுத்திருக்காருண்டு!” என ஜெயா ஆச்சரியமாக ஒரு பத்திரத்தைக் காட்ட, அதனோடான குறிப்பில்,
எனது மகள் செல்லம்மாள் மகள் வயிற்றுப் பேத்தியான அல்லி குண்டம் காத்தமுத்துவின் மகள் செல்லமுத்து, விதியின் பிடியில் சிக்கி, அவள் மேல் காலன் கொண்ட காதலால், அவன் கைப்பாவையாகி தன் இன்னுயிரை ஈந்தாள். அவளைக் காக்கும் கடமையில் மலைப்பகுதி கள்ளிக்காட்டில் துரதிஷ்ட வசமாகக் கொலையுண்ட, கபிலனின் தகப்பனுக்கு இழப்பீடாகவும், ஆயுள் கால ஜீவன உபகாரமாகத்வம், கருணை அடிப்படையில், இரண்டு ஏக்கர் நிலத்தை கருத்த பாண்டியாகிய நான் தான செட்டில்மெண்டாக வழங்குகிறேன்.” என இருந்தது.
“இவைய்களுக்கு எதுக்கு எழுத்து வச்சிருக்கார். அவன் கூடத் தானே மதினி போச்சுண்டு சொன்னாய்ங்க.” எனச் செல்லப்பாண்டி கேள்வி எழுப்பவும், அதை வாங்கி பார்த்த பெரிய பாண்டிகள், யோசித்தனர்.
“நேத்து தங்கம் சொன்னதுக்குத் தோதா இந்த பாத்திரம் சிக்கி இருக்கு பாரு.” என சிவபாண்டி சொல்லவும், “ஆமாம் அண்ணேன், அந்த கபிலன் தப்பானவனா இருந்திருந்தா அப்பாரு அவங்களுக்கு தானம் கொடுத்திருக்க மாட்டார், மீனாவுக்கும் அவன் பேரை இன்ஷியலா போடச் சொல்லலை.“ என ராஜன் தன யுகத்தை சொல்லவும்,
“மீனாவை ஸ்கூல்ல சேர்கிற நேரம், கேஸோட தீர்ப்பை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோம், செல்லம்மா அக்கா, பேத்தியை வளர்கனுமுண்டாவது ஓடியாடி திரியட்டும், வேற யாரும் உரிமை கேட்டு வந்திற கூடாதுண்டு அப்பார் அந்த முடிவெடுத்தார். தானம் எழுதி வச்சது எனக்கும் தெரியாதே!” என்றார் துரை
“இந்த பத்திரம், தாத்தா இறந்து போறத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பதிவாகி ஆகியிருக்கு.” என மருது தேதியை காட்டினான்.
“அந்த நேரம் ரங்கத்தையம் போய், ஜெயில்ல பார்த்திட்டு வந்தார், என்ன சந்தேகமுண்டு தெரியலை, ஆத்தாளை கேட்கணும்.” என துரை யோசிக்க,
“அதையும் தங்கத்துக்கு போன் போட்டு சொல்லு, இது என்னெண்டு அவனே கண்டுபிடிக்கட்டும்.” என்ற ராஜன் மற்றதைப் பார்வையிட்டார்.
மணிக்குயில் இல்லத்தில் பேச்சி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என அறைக்குச் சென்று விட, செல்லம்மாள் சுற்றுக்கட்டில் வேலையை பார்க்க போனார். பூங்குயில், செல்வதோடு கிளம்பியவள், தினேஷிடம், “ஹாட் பேக்ல டிபன் எடுத்து வச்சிருக்கேன். சன்னு வந்தா சாப்பிட சொல்லு.” என்று விட்டு கிளம்ப, அவன் தன் லேப் டாப்பில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தவன், “சரிக்கா!” என அடிக்கடி அவள் வரும் வழியைப் பார்த்திருந்தான். அரை மணி சென்றும், அவள் வரவில்லை எனவும், தினேஷ் மாடிக்குச் சென்று பார்க்க, அவள் இருந்த கோலம் அவனக்கு அதிர்ச்சியைத் தந்தது.