Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,451
48. பத்மாசினி
வீர விளையாட்டுகள், சல்லிக்கட்டு எல்லாம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அதை நடத்தியதில் எழுமலை பாளையம் மற்றும் கழுவன் குடி பெருமை அதிகரித்திருந்தது. பாசறையில் சேரவும் போர் பயிற்சிப் பெறவும் நிறைய இளந்தாரிகள் முன் வந்தனர்.
பத்மாசினி, திருமலை வாசன் இருவருக்கும் சண்டனை அழித்து விட்ட நிம்மதி இருந்தது. இனி பதட்டம் இல்லாமல் தங்கள் திருபணிகளையும் பக்தியோடு செய்யலாம். ஜென்மங்களாகத் தொடர் தொல்லைகள் கொடுத்து வந்த அரக்கன் அழிந்தான் என நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பூங்குயிலுக்கு ஆண் பிள்ளை பிறக்க, மருதன் மாயாண்டி என்றே பெயர் சூட்டினர். அதில் செம்பதுமத்துக்கு ஒரு ஆறுதல்.
சல்லிக்கட்டில் படுகாயமடைந்த முத்துக் கருப்பனை ராக்கம்மாளின் மருந்தும், மந்திரமும் காப்பாற்ற, மாயாண்டி குடும்பம் நன்றி தெரிவித்து, தொட்டப்பனூருக்கு கிளம்பிச் சென்றிருந்தனர்.
சல்லிக்கட்டில் வேங்கடவன் படுகாயம் அடைந்திருக்க, பெரிய கழுவன் குடியில் தனி குடிலில் வைத்தே வைத்தியம் பார்த்தனர்.
செம்பதுமமும், தாமினி தேவியும் வைத்தியர் வழிகாட்டுதலோடு வேங்கடவனைச் சிரத்தையோடு கவனித்துக் கொண்டனர்.
சல்லிக்கட்டுக் காளையை அடக்கியதால் வேங்கடவனுக்கு செம்மதுமம் எனத் திருமணம் உறுதியாக, அவர்கள் சந்திப்பதையோ, சேவை செய்வதையோ யாரும் தடுக்கவில்லை. மாறாக மாப்பிள்ளையைக் கவனிக்கிறோம் என்ற பாவனையில் பெரியோர் முதல் சந்தன கருப்பன் வரை வந்து விசாரித்து, எதையோ ஒன்றைக் கொடுத்துச் சென்றனர்.
சிவப்பியும், தாமினியுமாக மஞ்சள் பத்தை அரைத்துக் கொண்டு வந்து தர, செம்பதுமம் வேங்கடவன் உடலை வெந்நீர் கொண்டு துடைத்து, மருந்து பத்தை போட்டு, மயிலிறகால் மெல்ல வருடிக் கொடுக்க, வேங்கடவனுக்கு உடல் வலியையும் தாண்டி மனம் நிறைந்தது.
இனி இந்த ஜென்மத்தில் என்றில்லை, எந்த ஜென்மத்திலும் தங்களைப் பிரிக்க யாரும் இல்லை என்ற மனநிறைவு. அரை மயக்கத்திலும் அவள் கையைப் பற்றி, “பத்மை” என முத்தமிட, “வாசவரே ஓய்வெடுங்கள்” என சிவக்க, வேங்கடவனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது. ஜென்ம ஜென்மமாகப் பிறப்பு தொடர்ந்தாலும், அப்பிறப்பில் வஞ்சியவள் நேசத்தை உணரும் தருணம் ஆடவனுக்கு உன்னதம் தானே!
“நீ என்னோடே இரு. பேசிக் கொண்டே இரு பத்மை. கீதம் பாடு” என நச்சரிக்க, அவள் புன்சிரிப்போடு “பச்சை மாமாலைப் போல் மேனி” எனப் பெருமாளைப் பாட,
“அந்த வேங்கடவனை அல்ல. இந்த வேங்கடவனை. யாழிசைத்து அருமையாகப் பாடுவாய்” முன் ஜென்ம நினைவுகளை சொல்ல,
“எனக்கு நினைவில் இல்லை” என்றாள்.
“பொய். பொய்ச் சொல்லும் அதரத்துக்குத் தண்டனை உண்டு” என அவளை வளர்த்து முத்தமிட, பதுமத்துக்குள் மொட்டவிழ்ந்து, செந்தாமரை மலர்ந்தது.
“வாசவரே” அவள் சிவக்க,
“நினைவில்லை என்றாய்” என்றவர் பரிகசிப்போடு பத்மை, வாசவருக்கு என்னவெல்லாம் செய்வாள் என நினைவு கூற, பதுமம் மேலும் சிவந்தாள்.
இவர்கள் சரசமாகப் பேச ஆரம்பித்தாலே செம்பவளத்துக்கு எங்கிருந்து தான் தெரியுமோ, பெரியவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, பதுமம், வேங்கடவனுக்கு நடுவில் சமய சந்தர்ப்பம் இன்றி வந்து விடுவாள்.
அன்றும், தினை பாயாசம் செய்து கொண்டு வந்தவள், வெங்கல கடை புகுந்து யானைப் போல் “சித்தினி நாயக்கரே” எனக் கூவிய படியே வர, இருவரும் அவசரமாக விலகினர்.
“பதுவு, சித்தினி நாயக்கருக்குப் பசிக்காதா? பாட்டு பாடினா, பசி பறந்து விடுமா என்ன? ஏற்கனவே உன் பெருமைக்கு அவரை சல்லிக்கட்டில் இழுத்து விட்டு, காயம் பட வச்சிருக்க” எனப் பதுமம் மீது கோபத்தைக் காட்டி, “ நீங்கள் இதை குடிங்க.. பதுவுக்கு சமையல் எல்லாம் தெரியாது. உங்களுக்காக நானே சமைத்து கொண்டு வந்தேன்” எனத் தட்டில் வைத்து ஊட்டாதக் குறையாக, வேங்கடவன் மீது உரிமை பாராட்டினாள்.
வேங்கடவனுக்கே எரிச்சல் வந்து முகத்தைச் சுளிக்க, “பளவம், இப்போ தான் கசாயம் குடிச்சாங்க. நீ வச்சிட்டு போ. நான் கொடுத்துக்குறேன” தங்கையைக் கிளப்ப, பார்வையால் பதுமம்தை எரித்து விட்டுப் போனாள்.
“அவளை வர வேண்டாம் எனக் கண்டித்துச் சொல்லி வை பத்மை” எரிச்சலாக மொழிய,
“அப்பாரு வரட்டும் வாசவரே. பேசி புரிய வைப்போம்“ என்றாள்.
மருதனைக் காவு கொடுத்த அன்றே, அரையன் மூன்று பாளையங்களிலும் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட, காயம் பட்டவர்களையும் மற்ற ஏற்பாடுகளையும் கவனிக்கச் சொல்லி தங்கராசுவைப் பணித்து விட்டு, சிங்கம் கிழக்கு நோக்கிச் சென்றான். ஏற்கனவே ரங்கராசு தேவனும், துரை ராசு தேவனும் அந்த பணியிலிருந்ததால், சிம்மராசு தேவனோடு சேர்ந்து கொள்வார்கள் என நினைத்து, சமையன், பூச்சி, மாயன் என்ற வெகு சிலரையே உடன் அனுப்பி வைத்திருந்தனர்.
வழியில் சிங்கத்தைச் சந்தித்த தலைபிரட்டு ரதி தேவி, பாகீரதி கூட்டத்தையும் அரையன் கடத்திச் செல்வதாகச் சொல்ல, அவர்களை பின் தொடர்ந்து சென்றிருந்தான்.
புத்தூர் மலையையும் தாண்டி, கிழக்கே நாகமலை கணவாயை நோக்கிச் செல்வதாகத் தெரிய வர, அங்கே விரைந்தான்.
வானவர் சம்சுதீனை முடித்தப் பிறகே, கோபம் தணிந்து அமைதியானார். தலைவனை இழந்த சுல்தான் வீரர்கள், வானவனிடமே சரணாகதியாக, சம்சுதீனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, கபிலனைச் சந்திக்குமாறுப் பணித்து விட்டு, சின்ன கழுவன் குடி சென்றார்.
வேங்கடவன் உடல் நலம் சீரானப் பிறகே, புத்தூர் மலையடிவாரம் சென்று மூன்றாவது பெருமாள் சிலையைக் கண்டுபிடித்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். மருதனோடு சண்டனும் அழிந்து விட்டதாக எண்ணியதால் இலகுவாகவே இருந்தனர்.
தங்கராசு, தாமினியோடு வந்து கழுவன் மாப்பிள்ளையை உபச்சாரம் செய்ய, “அதே முறை எனக்கும் உண்டே” என்றார்.
“கழுவன் குடியில் இருக்கும் போது எங்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். சந்திரகிரி வரும் போது ராயர் மருமகனைக் கவனித்துக் கொள்ளுங்கள்” தாமினி சொல்ல,
“பத்மை கேட்டுக் கொண்டாயா. என் தங்கை கழுவன் குடி மருமகளாகி விட்டாள். நீ எப்போது ராயர் மருமகளாவது?” எனக் கேட்க, செம்பதுமத்துக்குப் பிறந்த வீட்டைப் பிரிய வேண்டுமே என்றக் கவலை வந்தது.
தங்கை முகத்திலிருந்தே அதை அறிந்த தங்கராசு தேவன், ராயர்களின் அடுத்த திட்டத்தைப் பற்றிக் கேட்டான்.
“மன்னருக்கு உறவினர் தானே, இங்கே ஒரு பாளையத்தை அமைத்துக் கொண்டு ஆட்சி செய்யலாமே” என யோசனை தெரிவிக்க,
“அது சரியாக வராது கழுவரே. எங்கள் வேர் அங்கே ஏழுமலையான் அடிவாரத்தில் தான். எங்கள் ராஜ்ஜியத்தை மீட்கத் தொடர்ந்து முயற்சி செய்வோம்” என வானவர் படை திரட்டும் வேலைகளைப் பற்றியும் கலந்துரையாடினர்.
“அப்பு வரட்டும். அவருகிட்ட காவல் பொறுப்பை ஒப்படைச்சுட்டு நானும், தாமினியும் கூட உங்களோடு வருகிறோம்” எனத் தங்கராசு சொல்ல, செம்பதுமம் முகமும் சற்றே தெளிவானது.
சல்லிக்கட்டில் வேங்கடவன் காயம் பட்டதை அறிந்த வானவர், பெருமாள் சோலையிலிருந்து வள்ளியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பெரிய கழுவன் குடி சென்று தம்பியையும், தங்கையையும் பார்த்தார்.
“பத்மாசினி தங்கள் வீட்டு மருமகளாக வர தாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்* என தாடகையிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அவர்கள் திருமணத்துக்காகப் பேச,
“எங்கள் மகள், மனசுக்குப் பிடித்தவரை மணப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி” என்றார் தாடகை.
கழுவன் குடும்ப, மூத்தவர்களோடு, வேங்கடவன், செம்பதுமம் திருமணத்தைப் பற்றிப் பேசினார்.
“வளர்பிறையில் வச்சுடுவோம்” எனச் சீயான் கருத்தையா சொல்ல,
“அப்பாரு திரும்பி வந்தப் பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்* பதுமமே சொல்லி விட, சிங்கத்தின் வரவுக்காகக் காத்திருந்தனர்.
கணவன் வரும் வழியைப் பார்த்தபடி மனைவியர் காத்திருந்தனர். ஆம் இந்த முறை சிங்கத்தின் வரவை தாடகை நாச்சி மட்டுமின்றி, படுக்கையில் நலிவுற்றுக் கிடந்த ராக்கம்மாளும் அக்காளுக்குச் சேவை செய்தக் கோதையும் சிங்கத்தின் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.
ராக்கம்மாள், முத்துகருப்பனைக் காப்பாற்றி விட்டுத் தள்ளாடி விழுந்தவர், அதன் பின் எழவே இல்லை.
பதுமம், “ஆத்தா, ஆத்தா” என அரற்றி அவளுக்கானச் சேவகத்தைச் செய்ய வர, கோதை அவளை வேங்கடவனைப் பார்க்க அனுப்பி விட்டு, தான் ராக்கமாளுக்கு பார்த்தார்.
கழுவன் குடியையே காத்த காவல் தெய்வம், ராக்காயி என செம்பதுமம் விவரம் சொல்லவும் குடும்பத்தினருக்கும் அவள் அருமை புரிந்தது. அன்று முதல் தாடகை நாச்சியும் மூத்தக் குடியைப் பார்த்துக் கொண்டாள்.
ராக்கம்மாள் பதுமத்தின் அழைப்பின் பேரில் கண்ணைத் திறந்தாலும், பேச முடியவில்லை. வாய்க்கட்டு இருந்தது.
வெள்ளையம்மாள், பேச்சியம்மாள் வேலாயி என மூத்தவர்களுக்கும் ராக்காயி நோய் பற்றி அனுமானிக்க முடியவில்லை. வைத்தியர் வந்து பார்த்து விட்டு, “என் சக்திக்கு மீறினதா இருக்குது” என்று விட, குலதெய்வத்தையும், ராக்காயியால் வெளிவந்த பெருமாளையும் வேண்டி துளசி தீர்த்தம் மட்டுமே கொடுத்தனர்.
சண்டன் இறந்து விட்டதாகவே எல்லோரும் நினைத்திருக்க ராக்கம்மாள், அதை மறுத்து சிங்கத்துக்காகத் தனது இன்னுயிரையும் தருவதாக மனதோடு வேண்டிக் கொண்டிருந்தாள்.
மூன்று நாள்களுக்குப் பின் ரங்கராசு மட்டும் கழுவன் குடி திரும்ப, சிங்கத்தைப் பற்றி விசாரித்தனர்.
“அண்ணனை நான் பார்க்கவே இல்லையே” ரங்கராசு குண்டைத் தூக்கிப் போட, தங்கராசு கிழக்கு நோக்கிக் கிளம்ப ஆயத்தம் ஆனான்.
இரண்டு நாளில் அரையன் செய்தக் கலவரமும் அடங்கியிருக்க, சிங்கத்தின் சாதனை தான் என மகிழ்ந்தவர்கள் இப்போது தேட ஆரம்பித்தனர்.
அடுத்த நாளில், சிங்கத்தோடே இருக்கும் தலைபிரட்டு, சிங்கத்தைப் பற்றியச் செய்தியோடு வர வழியிலேயே ரங்கதுரை அவனைத் தடுத்து, “மதினிக்கு தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. சொல்லாதே” எனத் தடுத்தான்.
“அதுக்காக, சிங்கத்தை உசுரோட அவளுக்கு ஒப்புக் கொடுக்க முடியுமா. நான் சொல்லுவேன்” என வாக்குவாதம் நடக்க, தங்கராசு, முத்துராசு என ஒவ்வொருவருக்காகத் தெரிந்து, கடைசியில், சிம்மராசு தேவன், ரதி தேவியோடு குடி கூத்து எனச் சுகித்துத் திரிவதாகத் தாடகைக்கும் தெரிந்து விட்டது.
தாடகை, பேச்சி கிழவியிடம்,” உன் மகன் என்ன செஞ்சாலும் சரிண்டு சொல்லுவியே. இப்ப இதுக்கு என்ன சொல்ற, கால் நொண்டியா இருக்கவரை இருந்துட்டு, சரியாகவும் அவளை முன்ன அனுப்பி விட்டு, இவருப் பின்னாடியே போய் குடும்பம் நடத்துறார் பாரு.“ எனச் சகட்டு மேனிக்கு ஆங்காரமாகப் பேச, கழுவன் குடியே ரணகளமானது.
எல்லோரும் தாடகையைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
“அம்மா, வாய்க்கு வந்ததைப் பேசாதே. இதில எதாவது சூழ்ச்சி இருந்தா. சத்தியவானைச் சாவித்திரி மீட்ட மாதிரி, நீ தான் மீட்கணும்” செம்பதுமம் சொல்ல, சாமியும், தங்கமும் அதை வலியுறுத்தினர்.
பேச்சியம்மாள், “உனக்கு என் மவன் மேலப் பாசம், பிரியம் அதிகம். அவனோட ஒரு சொல்லைத் தாங்க மாட்ட. இப்படி ஒரு விசயத்தைக் கேள்விப்பட்டு போறவ, கொஞ்சம் நிதானமா இரு ஆத்தா” எனக் காலில் விழாதக் குறையாகக் கெஞ்சினார்.
“என் புருஷன் எனக்கு வேணும். அந்த நம்பிக்கையில் தான் போறேன்.” என்றாள்.
“போயிட்டு வர்றேன்னு சொல்லு அக்கா. மாமா எப்படி வேணாலும் இருந்துட்டுப் போறாரு. நீ அவரோடப் பேசாமால் கூட இரு. எனக்காகவும், பிள்ளைகளுக்காகவும் திரும்பி, இல்லை போகவே போகாதே” என முத்துநாச்சி அக்காவின் குணம் அறிந்தவளாகத் தாடகை பயணத்தைத் தடுக்க பார்த்தாள்.
ஆனால் கோதை உறுதியாக, “நாச்சியா. மாமன் உன் மேல உசிரையே வச்சிருக்கு. தப்பு பண்ணாது. தகிரியமா போ” என அனுப்பி வைக்க, ராக்காயி எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் உகுத்தார்.
அன்றே கழுவன் குடும்ப இளந்தாரிகள், தங்கராசு, முத்துராசு, சாமி கருப்பன், தாடகை, பதுமம், வேங்கடவனும், ரங்கராசு தேவன் பொறுப்பில் பெரிய கழுவன் குடியை விட்டுக் கிளம்ப, அக்காவைத் தனியாக விட முடியாது எனக் கோதை நாச்சியும் கிளம்ப, பவளமும் பிடிவாதம் பிடித்து அவர்களோடு சென்றாள்.
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். ஆனாலும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மனம் பேதலித்து இருக்கும் போது எங்கிருந்து ஆராய்ச்சி செய்வது. தாடகையின் ஒரு அவசர முடிவு மீண்டும் ஓர் இருளுக்குள் பூர்வ ஜென்ம ஜோடிகளைத் தள்ளியது.