Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,505
46.தேன் சிட்டுகள்
பாண்டிக் குடும்பமே வீட்டின் பெண்மகளை, மருமகனோடு சேர்த்து வரவேற்றது. தங்கம், தான்வி குடும்பமும், செல்லபாண்டிஅவரகள் பின்னோடு வந்து சேர, மலர், ஹித்தேஷை திட்டிக் கொண்டே, இரவு உணவைப் பங்கு பிரித்து , பிறந்த வீட்டினருக்கு வைத்து விட்டு, புகுந்த வீட்டுக்கு மீதியை பேக்கிங்க் செய்து, ஹரீஷ், பூபேஷ், சர்வேஷ், மதி, மகி என இளவட்டங்களிடம் கொடுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.
உதயன், மனைவியைச் சற்று முன் ஆதி, சித்ரா ஜோடி அமர்ந்திருந்த ஷோபாவில் அமரவைத்து விட்டு தானும் அமர, சந்திராவும், பூமாவுமாக பாலும், பழமும் கொடுத்தனர்.
“ இப்ப தான், அப்பத்தா அங்க குடிச்சோம்” என ஹரிணி சொல்ல, “ சாஸ்திரத்துக்கு குடி” எனச் சடங்கை முடித்தனர்.
சிவபாண்டியும், செல்ல பாண்டியும் அடுத்தடுத்த ஷோபாக்களில் அமர்ந்து உதயனுடன் பேசிக் கொண்டிருக்க, விருத்தன், செல்வமணி, துரை பாண்டியும் கூடத்திலிருந்த சேர்களில் அமர்ந்திருந்தனர். உதயன் எல்லோருக்கும் வணக்கம் வைத்தான். தினேஷ் பாண்டி குடும்பம், திண்ணையின் ஒருபக்கத்தைப் பிடித்திருக்க, முத்துவின் மக்களும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஹரிணியின் கண்கள் ஆதியைத் தேடின. கூடத்தின் நடுவில் அமர சங்கடமாக இருக்க, “அப்பத்தா பாட்டிகிட்ட உட்கார்ந்துக்குறேன்” என எழு முயல,
உதயன்,” எங்கனு சொல்லு, நான் கூட்டிட்டு போறேன்” என தானும் எழுந்தான்.
“ஆத்தாடி, விட்டா மாப்பிள்ளை தூக்கிக்கே திரியிவார் போலிருக்கே” பேச்சி உடைசல் விட,
“குமரியா போனவ, புருஷன் கையில குழந்தையா இல்ல வந்திருக்கா” என செல்லம்மாள் அதிசயிக்க,
“ கொசந்தை புள்ளையை தானே, படிப்பைக் கூட முடிக்க விடாம, உங்க மருமகரு, பெரிய இடமுண்டு கல்யாணம் பண்ணி வச்சாரு.” என்றார் அசோதை.
“ பேத்தியை தாங்குற மாப்பிள்ளைக்கு தானே கொடுத்திருக்கு, பேசாத இரு” என்ற வீரன், “ நீ வாத்தா, நான் கூட்டி போறேன்” என தூக்க வர,
“ தாத்தா கையை பிடிச்சுக்குங்க . நான் நடந்து வந்துடுவேன்” எனச் செல்லம் கொஞ்சியபடி, பெண்கள் இருந்த சாப்பாடு கூட திண்ணைக்குச் செல்ல, உதயன் அவளைப் பார்த்த வண்ணம் இருந்தான்.
“ரவைக்கு உங்க பொண்சாதியை, உங்ககிட்ட ஒப்படைச்சுடுவாங்க” என செல்வ மணி உடைசல் விட,
அசட்டுச் சிரிப்போடு, “நடந்துட்டாளான்னு பார்த்தேன்” என்றான் உதயன்.
“உங்கள் சம்சாரம், பிறந்தது, தவந்தது, நடை பழகுனதுன்னு எல்லாமே இந்த வீட்டுல தான், அந்த தாத்தா கிட்டத் தான்” எனத் துரை பாண்டியன் வீரனைக் காட்ட,
“நாங்க எல்லாம் ஓடிட்டே இருந்த ஆளுங்க. பிள்ளைகளுக்கு தத்தாண்டா வீரன் தான்” என சிவபாண்டி தம்பியைப் பெருமையாகப் பேசினார்.
“ ஹரிணி, ஞானம் பெரியப்பாவை, தாத்தான்னு கூப்பிட்டு உரிமையா பழகுனத்துக்கான காரணம், இப்போ புரிஞ்சது.” என்ற உதயனின் பார்வை, நந்தியாய் நின்ற தூண்களைத் தாண்டி, நொடிக்கொரு முறை ஹரிணியைத் தொட்டு மீள,
“இங்குட்டு வந்து உட்காருங்க, ஹரிணி நேரா தெரியிது.” செல்வமணி கேலி பேச,“ இல்லை, இருக்கட்டும்” எனச் சிரித்து வைத்தான் புது மாப்பிள்ளை.
“மாமு, அவர் உனக்கு மகன் முறை. அவருக்கு லந்தை குடுக்குறியே” என ஜெயா பாண்டி சொல்ல,
“ நீங்க தான் மருமகண்டு, மருவாதையா இருக்கனும், எனக்கென்ன” எனச் செல்வம் கேட்க,
“ உன் கொட்டத்தை அடக்க, என் பேரன் வருவான் பாரு” என்றார் சிவபாண்டி.
“ நடக்கிறது, நடந்த பின்னாடி பார்த்துக்கலாம் மாமா. இனிமே எந்த பொண்ணு, மாப்பிள்ளை மனசிலையும் இப்படி எண்ணத்தை விதைக்க வேண்டாம். பெரிசுங்க ஆயிரம் காரணத்துக்காக மனசை மாத்திக்கிறோம், சின்னதுங்க தான் அவதிப் பட்டு நிற்குது” செல்வமணி பட்டெனச் சொல்ல,
“ அதுவும் சரிதான். அவரவர் வசதிக்கு தக்கண தானே சம்பந்தம் பண்ண முடியும்” செல்லபாண்டி வாயை விட, வீட்டினருக்கு பிடித்தம் இல்லை.
“உன் வசதிக்கு நாங்க இல்லைங்கிற. உன் மச்சினனா இருக்கிறதை விட, என் மாமன்மாருக்கு மருமகனான இருந்துட்டு போறோம்” செல்வ மணி சொல்ல,
“மாம்ஸ், எங்களை விட, மூத்த பேரனா இந்த வீட்டுல உனக்குத் தான் முதல் உரிமை. அதே மாதிரி மூத்த மருமகனா, விருமன் மாமாக்கு தான், இது என்னைக்குமே மாறாது” என்றான் தங்கம்.
“அதிலையெல்லாம் நான் குறையே சொல்ல மாட்டேன்பா. இன்ன வரைக்கும், நாலு மாமனாரும் என்னை மதிப்பா தான் வச்சிருக்காங்க. அதோட சந்தோச பட்டுக்க வேண்டியது தான்” என விருமன் சொல்ல,
“அடுத்த தலைமுறைக்கிட்ட எதிர்பார்க்க கூடாதுண்டு சொல்றிங்க, சரி தான் சகலை, அவைங்க வசதிக்கு நம்ம ஈடாவோமா ” செல்வமணி இடை செருக,
“ புரிஞ்சா சரி” என்றான் செல்லப்பாண்டி.
“ வசதியை விட, குடும்பம், பாரம்பரியம், வளர்ப்பு முக்கியம் மாமா. உங்க பொண்ணு, கூட்டுக் குடும்ப வாழ்க்கையை புரிஞ்சுக்கும்னு தான் , அப்பா, பெரியப்பா எல்லாரும் வலியக்க உங்க வீட்டு பொண்ணை கட்ட சம்மதிச்சாங்க” என உதயன் இடை புக, “ சபாஷ் மாப்பிள்ளை, அப்படி சொல்லுங்க” என்றார் துரை பாண்டி.
“ அது இருக்குதுங்க மாப்பிள்ளை. ஹரிணியை அப்படி தான் வளர்த்து இருக்கோம்” என செல்லபாண்டி மருமகனுக்கு, ஜால்ரா போட, விருமன் கடிகாரத்தைத் திருப்பி மணியைப் பார்த்தார்.
உதயன், விருமனிடம்,” ஆதி வந்தாப்லையே எங்க சித்தப்பா” என இயல்பாகக் கேட்க,
“ மாடியில இருந்தான்” என விருமன் இழுக்க…
“ இல்லை மாமா, ஏதோ பர்சேஸ் பண்ணனும்னு சித்ராவோட கிளம்பிட்டாப்ல” தங்கம் தகவல் தர,
“ அவன் ஜெட் ஸ்பீடு தான். கல்யாணம் முடிஞ்ச கையோட ஹனிமூன் போறான். என்னைய எல்லாம் எலி அடிக்க விட்டா என் பொண்டாட்டி ?” என செல்வமணி அங்கலாய்க்க,
“ தங்கம் டிக்கெட் போட்டுக் கொடுத்து, டெல்லி , முசௌரிண்டு போயிட்டு வந்தேயில்லை” எனத் துரை கேட்க,
“உங்க காரியம் ஆகுறதுக்காக, கொடுத்த லஞ்சம் அது” செல்வ மணி விடாமல் வார்த்தையாட, “என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்ட, அப்படியே இருக்கட்டும் மாமு’ எனத் தங்கம் சிரிக்க,
“அந்த சோக கதையை கேளுங்க தம்பி” என உதயனைப் பிடித்து வைத்து, செல்வமணி கதையெல்லாம் சொல்ல, அந்த மாமன் மச்சினன் உறவை ஆசையாகவே பார்த்தான். அவர்கள் வீட்டிலும் அக்காள் கணவன்கள், அண்ணன்கள் இருக்கிறார்கள், கேலி கிண்டலும் வரைமுறைக்குள் மட்டுமே இருக்கும். இங்கு இவர்கள் பாண்டிங் ஆச்சரியத்தைத் தந்து. செல்ல பாண்டியே கூட, தன்னை மறந்து சில கமெண்டுகளை அடித்தான்.
ஹரீஷ் பாண்டி உதயனிடம் மொத்தமாய் அடிபணிய, ஹித்தேஷ் முறைத்துக் கொண்டே திரிகிறான், மற்றவர்கள் பதின்ம வயதினர். தினேஷ் முறையில் மாமனாராக இருந்தாலும், சிறு வயது, ஆனால் உதயனிடம் அதிகம் பேசவும் முயல வில்லை. அண்ணன் மேலிருந்த கோபத்தில், மருமகனைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். முத்து சம்பிரதாயமாக மட்டுமே பேச, மூத்த தலைமுறையை போல் உதயனுக்கு பழக ஆசை.
“நீங்க, ஹனிமூன் எங்க ப்ளான் பண்ணி இருக்கீங்க. பத்து நாளில் ஆடி வருது , அதுக்குள்ள போயிட்டு வந்துடுங்க” எனத் துரை பாண்டி சொல்ல
“மாப்பிள்ளைக்கு இருக்க வசதிக்கு , ஃபாரின்ல போயி தேன் நிலவு கொண்டாடலாம் “ செல்ல பாண்டி பெருமை பேசினான்.
“ மாமனார், வாய்ப் பேச்சோடு நிற்காம டிக்கெட் போட்டு கொடுய்யா. ஆதிக்குச் செலவு பூரா தன்னோடதுன்னு, இரண்டு துரைகளும் போட்டிப் போட்டு செய்றாங்க” என செல்வமணி ஏத்திவிட,
“ நாங்க என்ன மாட்டேண்டா சொல்றோம், மாப்பிள்ளை, ஹரிணியை கூட்டிட்டு ஸ்விசர்லாந்து போயிட்டு வாங்க” என்றான் செல்லபாண்டி .
“ ஊர் உலகம் சுத்துறது பெரிய விசயம் இல்லை மாமா. ஹரிணிக்குக் கால் சரியாகனும், பத்து நாள் போயிட்டு வர்றதுக்கு, இங்க பிஸ்னஸை பார்த்துக்க ஏற்பாடு செஞ்சு வைக்கனும். அது நான் பார்த்துக்குறேன்” என வீண் ஜம்பமாக இல்லாமல், எதார்த்தமாக உதயன் சொல்ல, அவன் மீது அங்கிருந்தோருக்கு மதிப்பு வந்தது.
தான்வி பேச்சியிடம் சென்று வணங்கியவள், ஹித்து பேசியதை பற்றிச் சொல்ல, “ சரியா தானே பேசி இருக்கான். உங்க யாருக்காவது, குடும்ப ஒத்துமையை காப்பாத்தனுமுண்டு தோனுச்சா” எனவும்,
“ உடையும் போது வாயை மூடி இருந்துட்டு, இப்ப பேசாத அப்பத்தா.” என்ற பூவு, தான்வியிடமும் முகத்தைத் திருப்பி உள்ளே செல்ல, தான்வி நாத்தனாரை பின் தொடர்ந்தாள்.
“ பூவு, என் மேல என்ன கோபம்” தான்வி கேட்க,
“ இனி பேசி என்ன மதினி ஆகப் போகுது.” எனவும்,
“ நான் சொன்னா, உங்களுக்குக் கோபம் வரும். சின்ன வயசுலையே அவா மனசுல, ஆசையை விதைக்காதீங்கோ. அது தான் பிரச்சினை ஆகுது” என்றாள்.
“ இது, ஏற்கனவே நடந்ததுக்கு சொல்றீங்களா, இல்லை இனிமே நடக்க போறதுக்கா” எனக் கொக்கி போட,
“ நான் பொதுவா தான் சொல்றேன். எந்த இன்டென்சனோடவும் சொல்லலை”எனவும்,
“யார், யார் எப்படிண்டு தெரிஞ்சுக்கிட்டோம். இனிமே சூதானமா பிள்ளைகளை வளர்த்துக்குறோம்” என்றாள் பூவு.
“ அடியே விடுடி. அதது தலையில என்ன எழுதி இருக்கிறது தான் நடக்கும்.” எனக் கோதை, பூங்குயிலைச் சமாதானம் செய்ய, தான்வி ஒரு பெருமூச்சோடு பெரிய மாமியாருக்கு உதவச் சென்றாள்.
ஹரிணி, வீரனோடு வந்து பேச்சியம்மாள் அருகில் அமர, வாஞ்சையாகத் தலையைத் தடவியவர், “ கால்ல என்னத்தா” என விசாரிக்க, அவள் விளக்கினாள்.
“பார்த்து சூதானமா நடக்க வேணாமா? மனசுல எம்புட்டு விசனம் இருந்தாலும், இருக்கிற இடம், சூழ்நிலையில் கவனம் வேணும்” என பேச்சி சொல்ல,
“சரி பாட்டி. கால் வலிச்சாலும், வைராக்கியமா பொங்கல் வச்சுட்டேன்” என்றாள் தற்பெருமையாக.
“ யாரு வம்சம். அதெல்லாம் தன்னால வந்துடும். உன் அப்பத்தாளுக்கு மேல பெரிய குடும்பியா வருவ” எனப் பேச்சி சொல்ல,
“ உங்களை விடவா, என்னை எதுக்கு உதாரணம் சொல்றீங்க” எனச் சந்திரா கேட்க,
“ என்னைய விட, நீ தான் பெரிய குடும்பி. இன்னவரைக்கும், அம்புட்டு பேரையும் அனுசரணையா கொண்டு போறியே” எனப் பேச்சி மெச்ச,
“ நீங்களும், அசோதையும் இல்லையிண்டா , இதெல்லாம் சாத்தியமே இல்லை அத்தை.” எனச் சந்திரா உருக, பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியிடம்,
“வசதி வரும், போகும். சொந்தம் தான் என்னைக்கும் துணை நிற்கும். இரண்டு பக்க ஆளுங்களையும் அனுசரிக்க, அப்பத்தாக்களை பார்த்து படிச்சுக்க.” என்றார் பேச்சி.
மலரின் வீட்டிலிருந்து டிபன் வர, பூமா, சிவப்பியோடு சேர்ந்து, செல்வி விருந்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அசோதை பராமுகமாகவே திரிய, “என்கிட்ட பேசமாட்டிங்களா சின்னப்பத்தா” ஹரிணி வலியக்க பேச,
“ஆராத்தி எடுத்து, நான் தானே உள்ளே அழைச்சேன், அப்புறம் என்ன?” என்றார்.
அழகி, ஆதி, சித்ராவை அனுப்பி விட்டு,தலைவாசல் வழியே உள்ளே வந்து,” மதினி” என ஹரிணியைக் கட்டிக் கொள்ள,
“நீ எங்கடி, இங்கிட்டு இருந்து வர்றவ, சித்ராவை எங்கே” என அசோதை கேட்க,
“ அண்ணேன், மதினியை கூட்டிட்டு கிளம்பிடுச்சு.” அழகி சொல்ல, ஹரிணியின் முகம் ஆற்றாமையில் விழுந்து போனது.
தொண்டை அடைத்துக் கொண்டு அழுகை வர, தண்ணீரைக் குடித்துச் சமாளித்தாள்.
கோதை, “ போயிட்டானா, இவனை பெத்ததுக்கு, நான் தான் எல்லா வீட்டுலையும் விருந்தாடனும். இவனோட ரோதனையா இருக்குடி” எனத் தங்கையிடம் புலம்ப,
“ பிறந்த வீட்டுக்கு தானே வந்திருக்க, எதுக்கு இம்புட்டு சலிச்சுகிறவ” என்றார் அசோதை.
“ எல்லாம், நீ பண்றது தான் அம்மா. இன்னைக்கு விருந்து வையிண்டு நாங்க கேட்டமா. நீயா மனசுல ஒன்னை நினைச்சுகிட்டு, ஒரண்டை இழுத்து வைப்ப” என திட்டியவள்,
“அடியே சிவா, இலையைப் போடு. சாப்பிட்டு கிளம்புறோம். எது எதுக்கு தான் பயப்படுறதுங்கிற வகை, தொகை இல்லாமல் போச்சு” எனச் சாப்பாடு கூடத்துக்குச் செல்ல
“ சங்கடப்படாத அக்கா” என பூவு உடன்பிறந்தவளைச் சமாதானம் செய்யப் போனாள்.
“ என்னால தான், மாமா கிளம்பி போச்சு. சாரி அப்பத்தா” ஹரிணி, அசோதையிடம் கண்ணீர் விட,
“ நீ ஒன்னும் இல்லை. எல்லாம் இந்த ஹித்து குரங்கு பண்ண வேலை” என அழகி பல்லைக் கடிக்க,
“ அடியே, என் பேரன் பெத்த பேரழகே, யாரை குரங்குங்கிற. என் பேரன் குடும்பத்தைச் சேர்த்துத் தானே வைக்கனுமுண்டு நினைச்சான்” என பேச்சியம்மாள் அழகியைக் கேட்க,
“ ஆமாம், அதுக்குண்டு நேரம் காலம் இல்லையா. அண்ணனைக் கிளப்பி விட்டு, அவனும் பின்னாடியே காரை எடுத்துட்டு போயிட்டான்” என்றாள்.
“போனேன் தான், எங்க போனேன்னு தெரியுமா” என்ற ஹித்துவின் குரலில் அழகி அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்க்க, இரண்டு கைகளில் ஐஸ்கிரீம் டப்பாக்களோடு நின்றான்.
“ அது தானே பார்த்தேன்.” எனப் பேச்சி சிரிக்க ,
“ ரொம்பத்தான்” என அழகி தோளை குலுக்கிவிட்டு ஹரிணியோடு பேச ஆரம்பித்தாள்.
ஹித்தேஷ், பாண்டிக் குடும்ப வாரிசாக, இரண்டு மாமன்கள் மற்றும் வீட்டு மாப்பிள்ளை உதயனுடனும், பேசி சிரித்து கம்பெனி கொடுக்க, பாண்டிகளே ஆச்சரியமாகத் தான் பார்த்தனர்.
“ பொதுவா கண்டுக்காம போவான். இன்னைக்கு என்ன மாப்பிள்ளை விழுந்து, விழுந்து கவனிக்கிறாப்ல செல்வமணி, ஜெயாவிடம் கேட்க,
“ முத்து தூண்டி விட, இவன் தான் அண்ணனையும், மதினியையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி, இரட்டை விருந்தை ஒன்னா ஆக்கினான். ஜமீன் மாப்பிள்ளையும், கலெக்டர் சித்தி யாரையும் விட்டுக் கொடுக்கலை. உனக்கு சப்போர்டா பேசினான் மாமு” என நடந்ததைச் சொன்னான்.
“ இனி கொஞ்சம் சூதானமா தான் இருக்கனும். என் மக எங்கண்டு பார்க்கிறேன் “ செல்வம் மகளைத் தேட,
“ப்ரியா விடு மாமு, பார்த்துக்கலாம்” என்றான் தங்கம்.
ஹித்து விருமனிடம்,” ஆதி மாமா, உசிலம்பட்டியவே பர்சேஸ் பண்ணிட்டு இருக்கு. நீங்க டென்ஷன் இல்லாமல் இருங்க” என்றான்.
ஆதி கிளம்பி விட்டான் என்றதிலேயே ,ஹரிணியின் ஆர்வமெல்லாம் வடிந்து விட, கால்வலி அதிகமானது.
யார் யாரோ, ஏதேதோ பேச, பழக, சாப்பிட அழைத்தனர், பெயருக்குக் கொறித்து விட்டு , பேசாமடந்தையாகவே எழுந்து கொண்டாள். கால் இன்னும் வீங்கியிருக்க, ஹரீஷ் பாண்டியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு செல்லமுத்து மருத்துவமனைக்குச் சென்றான்.
“ பயப்பட ஒன்னுமில்லை. மாத்திரை தர்றேன், இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தாலே சரியா போயிடும். “ என்ற மீனா,
“ புதுப் பொண்ணே, அதுக்குள்ள என்னடி மாப்பிள்ளையைப் பயமுறுத்தி விட்ட” எனக் கேட்க,
“ என்னால தான்” என உதயன் விளக்கம் தர முன்வர,
“ இப்படியெல்லாம் சலுகை கொடுத்திங்கண்டா, உங்க தலையில ஏறி மொளகாய் அரைச்சுடுவா” என மீனா எச்சரிக்க,
“ அரைச்சிட்டு தான் இருக்கா” என்றான் ஹரீஷ்.
“ என் வலி எனக்கு தான் தெரியும்” என சொல்லும் போதே, ஹரிணிக்கு கண்ணீர் கொட்டி விட,
“ ஹனி, ஜஸ்ட் ரிலாக்ஸ். வலி ரொம்ப இருந்தா, வேற எதாவது கொடுங்களேன். டோன்ட் மிஸ்டேக் மீ, மதுரைக்கு கூட்டிட்டு போயிடவா” என உதயன் பதறிப் போனான்.
அவனுக்கும் சேர்த்து ஹரிணியை முறைத்தவள், “ நீங்க டென்ஷனானா ரொம்ப பண்ணுவா. நீங்க வெளியே இருங்க. நான் மந்திரிச்சு அனுப்பி விடுறேன்” எனவும், அவன் விழிக்க,
“ உங்க பொண்டாட்டியைப் பத்திரமா அனுப்பிடுவேன்” எனப் பேசிக் கொண்டு இருக்கும் போதே, சக்தி பிரியன் வர,
“ என் புருஷன். பொண்டாட்டியை எப்படி சமாளிக்கிறதுன்னு டிப்ஸ் தருவான். கேட்டுக்குங்க” மீனா சொல்ல, அவளை முறைத்தவன்,
“ வாங்க ப்ரோ” என ஹரீஷையும் சேர்த்து, சக்தி பிரியன் அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றான்.
“ இப்ப என்னடி உனக்கு” மீனா அதட்ட, “ மாமா என்னை வெறுப்பா பார்த்துட்டு போச்சு” என ஒப்பாரி வைக்க,
“ அப்புறம் ஏமாந்தவன்,உன்னைக் கொஞ்சுவானா” எனத் திட்ட,
“ என்னக்கா நீயே இப்படி பேசுற” என அழுதாள்.
“ அவன் கிறுக்கு புடிச்ச மாதிரி அலையிறான். அரை மயக்கத்தில் நீயிண்டு நினைச்சு, சித்ரா சங்கை நெரிச்சிருக்கான்.” என்று சொல்ல,
“ அய்யோ” என வாயைப் பொத்தியவள், “ என்னால யாருக்குமே நிம்மதி இல்லை” என சுயபச்சாதாபத்தில் புலம்ப,
“ நான் சொல்றதை காது கொடுத்து கேளு. இனி எதுவும் மாறப் போறது இல்லை. ஆதி வாழ்க்கையில சித்ரா வந்துட்டா. நீ உன் புருஷனோட சந்தோஷமா வாழ ஆரம்பி. உன்னைச் சொல்லியே அவனையும் வழிக்குக் கொண்டு வந்துடுவோம். “ என மீனா நிறைய எடுத்துச் சொல்ல,
“ யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க” எனச் சோகமாகக் கிளம்ப முனைய,
“ அக்கா” எனக் கதவைத் தட்டி விட்டு அவசரமாக நுழைந்தாள் சித்ரா.