My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மகாதேவ ரகசியம் (4)

Yaazhko Lenin

New member
Joined
Mar 10, 2025
Messages
14
மகாதேவ ரகசியம் (4)

சிவநேத்ர மலையடிவாரம்,

"மாமா... மாமா.... கண்ணைத் திறந்து காலடியில் உத்துப் பாருங்க!" என்று அவர் காதில் கிசுகிசுத்தாள்.
விழிகளை மலர்த்தியவருக்கு அந்த விபரீதம் புரிந்தது.

"மங்கலம், கொஞ்சம் அமைதியா இரு. பதற்றத்தக் குறை. அது பாட்டுக்கும் செவனேன்னு போயிடும். " என்ற சிவநேசன் அசையாது இருந்தார்.

ஆனால், அவர் இதயம் சுதி மறந்துத் தப்புத் தாளமிட்டுத் தவித்தது, அந்த பெருத்தக் கருநாகத்தைக் காலடியில் கண்டதும்.

மெல்ல அந்தக் கருநாகம் விலகியதும் தான் இருவருக்கும் மூச்சே வந்தது.

"இதென்ன மாமா, என்னைக்கும் இல்லாத ஒண்ணா இன்னைக்கு நம்ம வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிடுச்சி இது. எனக்கு என்னமோ சங்கடம் கூடப் போகுதோன்னு பயமா இருக்கு." எனப் புலம்பினாள் மங்கலம்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ கொஞ்ச நேரம் தொண தொணக்காம சும்மா இரு. என்னை யோசிக்க விடு." என்ற சிவநேசன் கட்டிலை விட்டுக் கீழிறங்கினார்.

மனம் பதைபதைக்க பக்கத்து அறைக்குள் மெல்ல ஓசையின்றி எட்டிப் பார்த்தார்.


அவரின் பத்து வயது மகள் பவானி அப்பழுக்கில்லா நிலவு போலப் படுத்திருந்தாள் கரிய கம்பளிப் போர்வைக்குள்.

"பவி... பவி... " என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்தாள் மங்கலம். அந்த அலறல் ஒலியில் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தாள் பவானி.

"என்னம்மா... ஏன் இப்படிக் கத்தறீங்க?" எனக் கேட்டாள் தூக்கம் கலையாமல்.

அம்மா மங்கலத்தின் விழியசைவில் ஏதோ புரிந்தவளாக ஜன்னல் பக்கம் திரும்ப, பெரிய கரிய சாட்டை போல் தெரிந்தது அந்தக் கருநாகத்தின் வால்.

"....ம்மா...ஆ..." என்றவளின் வார்த்தைகள் வாய்க்குள்ளேயே முட்டிக் கொண்டு நின்றது.

"மங்கலம், விடிஞ்சதும் நம்ம கொட்டாரத்து பின்பக்கம் இருக்கற அரசமரத்தப் போய் பார்க்கணும். ஞாபகப் படுத்து !" என்றார் சிவநேசன்.

காலை விடிந்தது, சூரியன் சிவந்து ரத்தக் களறியாகத் தோன்றினான். தினமும் செந்தூரம் கொஞ்சி சிரிக்கும் சூரியனின் இன்றையச் செம்மை கொஞ்சம் அச்சுறுத்தியது சிவநேசனை.
அந்தப் புழையில் நீராடி விட்டு வீட்டுக்குள் வந்தார் சிவநேசன்.

பூஜையை முடித்து விட்டு, மஞ்சள் துணி, கூடவே வலம்புரிச் சங்கையும் காராம் பசும்பாலையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார் புழையின் தென்கரையில் செழித்து வளர்ந்திருக்கும் அரச மரத்தடிக்கு.
நெடு நாட்களாக யாரும் வரவே யோசித்தச் சூழ்நிலையில், அங்கு அரசமரத்துடன் வேப்பமரமும் பின்னிப் பிணைந்திருந்தது.

அரசு வேம்படியில் ஒரு நாகர் சிலை சிதிலமடைந்து சாய்ந்துக் கிடந்தது. அதனை எடுத்து சரி செய்து நிமிர்த்தி வைத்தார்.

சற்று அருகிலே தாழம்பூ பூத்திருக்க, அதன் மடலை மெல்ல எடுத்தார் கையைக் கிழித்திராமல்.

புழை நீரால் நன்றாகத் தேய்த்துக் கழுவியவர், மஞ்சள் வண்ணத் துணியை அதற்குச் சூட்டினார்.


காராம்பசுவின் பாலை தான் கொண்டு வந்த வலம்புரிச் சங்கில் ஊற்றினார். பின் அதனை எடுத்து "நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று உளம் உருகிப் பாடியபடி அந்த நாகருக்கு பாலாபிசேகம் செய்தார்.

இவரின் ஒலியில் ஏதோ ஒரு வித ஈர்ப்பு இருந்திட, அந்த தில்லை விருட்சத்தில் அமர்ந்திருந்த கரிய ஆந்தை இவரையே பார்த்துக் கொண்டிருந்தது.
மெல்ல நடக்கத் தொடங்கினார், தம் இல்லம் நோக்கி.


அப்போது அவர் இடதுக் காலில் நெருஞ்சி முள் தைத்திட, "ஸ்..... ஆ...." என்றபடி கீழே குனிந்து முள்ளை அப்புறப் படுத்திட சூரிய ஒளி பட்டு பளபளத்தது அந்த எட்டடி பாம்புச் சட்டை.

அருகே சென்று அதைத் தொட்டுப் பார்க்க எண்ணிக் குனிந்தவரை ஒரு கரகரத்தக் குரல் தடுத்தது.

"நில் சிவநேசா, அதைத் தொடாதே! ஏற்கனவே உனக்குள்ள ராகு தோசம் நீங்கும் சமயம் இது. இவ்வேளையில் மீண்டும் சர்ப்ப தோசத்தில் நீ சிக்கிடாதே! பின் தலைமுறை தலைமுறையாக இதுத் தொடரும். ஜாக்கிரதை!" என்றார் அப்போது அங்கு வந்த அந்தச் சிவப்பண்டாரம்.

"என்ன சாமி சொல்றீங்க? ஆமாம் யார் நீங்க? உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?" எனக் கேட்டார் சிவநேசன்.

"ஹாஹ்ஹா.... சிவநேசா உன்னையும் தெரியும் உன் அப்பன் சிவக்கொழுந்தையும் எனக்கு நன்றாகவே தெரியும்! ஏன், உனக்கு சிவநேசன் எனப் பெயரிட்டதே அடியேன் தான்!" எனச் சிரித்தார் அவர்.

புரியாமல் அவரைப் பார்த்தார் சிவநேசன்.

"அப்பனே சிவநேசா, இந்த நாகர் சிலையை நன்றாக உற்றுப் பார். அதில் என்ன தெரிகின்றது உனக்கு?" கேட்டார் அந்த அடியவர்.
உற்றுப் பார்த்த சிவநேசன் முகத்தில் வியப்பு கூடி இருந்தது.

"சாமி! மற்ற நாகர் சிலை மாதிரி பின்னிப் பிணைஞ்சபடி இல்லாம தலை தனியா இருக்கு உடல் தனியா இருக்கு நடுவில் சிவலிங்கம் இருக்கு." என்றிட சிரித்தார் அடியவர்.

"இப்போது புரிகின்றதா, இது தான் அந்த நாகர் தலைவன் ஆதிசேஷன் வணங்கிய அற்புத நாகநாதர். ராகு கேது தோசங்களுக்கான பரிகாரச் சிலை இது. உனக்கு ராகு தோசம் நீங்கும் தருணம் இது என்பதால் தான் இங்கு வந்திருக்கின்றாய். ஆகையால் நீ மூன்று முறை நாகரை வலம் வந்து வலம்புரிச் சங்கில் மீதம் இருக்கும் காராம்பசும் பால் கொண்டு அபிசேகம் முடித்துத் திரும்பிப் பார்க்காமல் முன்னே செல்." என்று அடியவர் ஆணையிட அனிச்சையாகத் தலையாட்டினார் சிவநேசன்.

அப்படிச் செய்துவிட்டு நகர்ந்தார் சிவநேசன் தன் கொட்டாரத்திற்கு.
அடியவர் சில அடிகள் நடந்திட, மெல்ல மெல்ல உருமாறினார் இருதலை நாகமாக.


தவழத் தொடங்கியவர், மெல்ல தாழம்பூ கூட்டத்தின் மத்தியிலிருந்த புற்றுக்குள் புகுந்தார்.
இதை ஏதும் அறியாத சிவநேசன் தன் கொட்டாரத்திற்கு வந்தார்.

அங்கே அவர் மகள் பவானி பிரமைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் தலைவிரிக் கோலத்துடன்.

மனைவி மங்கலம், "மாமா, இவளுக்கு என்னாச்சுன்னே தெரியல, நீங்க நாகருக்குப் பூஜை பண்ணப் போனப்ப எழுந்தவ, வித்தியாசமா சிரிக்கிறா, அழுவுறா . என்னன்னு கேட்கப் போனா மிரட்டுறா. அதுவும் கரகரப்பானக் குரல்ல." என்றிட அவர் மனதில் கிலி படர்ந்தது.

"இரவு என் காலருகில் பாம்பு, பின் ஜன்னலில் வேறு தெரிந்தது அதன் வால். இப்ப இவளுக்கு இப்படி. நான் என்னப்பா பண்ணுவேன் என் ஐவண்ண நாதா?" எனக் குழம்பினார் மனதிற்குள்.

******************
கொல்லி மலையில்,

தன் தங்கை பார்வதியின் எச்சரிக்கை, சிவமலையின் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சிறிது நேர யோசனைக்குப் பின், "எழிலா! பேசாம நாம இப்ப நீ புக் பண்ணி இருக்கற ரிசார்ட்டுக்குப் போகலாம். அந்த மாளிகையை நாளைக்குப் போய்ப் பார்த்துக்கலாமா?" எனக் கேட்டார் சிவமலை.

உத்தரவிட்டே பழகியவர் முதன்முறையாக தன்னிடம் ஆலோசனை கேட்பது ஆச்சர்யமாகத் தானிருந்தது எழிலனுக்கு.

"சரிப்பா!" என்றான் ஒற்றை வார்த்தையில்.
ரஞ்சிதம் குழம்பினார்.
"என்ன இது? சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேரும் ஒரே மாதிரிப் பேசிக்கிறாங்க. எதுனா உள்குத்து இருக்குமோ?" என சிந்தையை உருட்டினார்.

"வெண்பா, இங்க வாடா பாட்டிக்கிட்ட !" என்று அருகில் அழைத்து மடியில் படுக்க வைத்துக் கொண்டு,


"வெண்பா! நம்ம ஜமீன் மாளிகைய நீ பாத்திருக்கியா செல்லம்? ரொம்ப அருமையா இருக்கும். நீயும் தம்பியும் ஓடிப்பிடிச்சு விளையாட நிரம்ப இடம் இருக்கு. பின்பக்கமா பெரிய நீர்வீழ்ச்சி வேற அங்க இருக்கு . அதில் எப்ப வேணும்னாலும் போய் குளிக்கலாம். ஜாலியா இருக்கும். தெரியுமா?" என அவளை உசுப்பிவிட்டார் காரணத்துடன்.

"அப்படியா?" எனத் துள்ளி எழுந்து உட்கார்ந்தாள் வெண்பா.

"அப்பா.... அப்பா.... ப்ளீஸ்ப்பா, நாம இப்பவே அங்கப் போகலாம்ப்பா. எனக்கு ஆசையா இருக்குப்பா!" என அவள் பிடிவாதம் பிடிக்கத் தொடங்க, ரஞ்சிதத்தின் மனது குத்தாட்டம் போட்டது.

"வெண்பா ! வாய மூடுடி! அதான் தாத்தா சொன்னார்ல நாளைக் காலைல போகலாம்னு. அப்புறம் ஏன்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ற?" எனத் தற்காலிகமாக அவள் வாய்க்குப் பூட்டுப் போட்டாள் அம்மா நங்கை.

"சரி... சரி... விடு.... சின்னக் குழந்தை தானே! சொன்னா புரிஞ்சிக்குவா !" என்றான் எழிலன்.

"முதல்ல பெரியவங்களச் சொல்லனும்,தேவை இல்லாம கண்டதை எல்லாம் சொல்லி இவள வீணா உசுப்பேத்தி விட்டதுக்கு !" என முணுமுணுத்தாள் நங்கை.

"இதெல்லாம் ஒரு வேலை !" என தன் மனைவியை முறைத்த சிவமலை தலையில் அடித்துக் கொண்டார்.

ரஞ்சிதமோ, தன் கழுத்தைச் சொடுக்கியபடி திரும்பிக் கொண்டு ஜன்னல் வழி வெளியே பார்த்தார்.

தூரத்தில் ஒரு வெள்ளி நிறக் குதிரை இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.

"ஏங்க.... ஏங்க..." என சிவமலையை ரஞ்சிதம் அழைப்பதற்குள் மரக்கூட்டத்தில் ஒளிந்துக் கொண்டது அந்தக் குதிரை.

"என்ன ரஞ்சிதம் ?" கேட்டார் சலிப்புடன்.
"ம்ம்.... ஒண்ணுமில்ல .... நீங்க உங்க வேலையப் பாருங்க!" என முறுக்கியவரை மீண்டும் முறைத்தார் சிவமலை.

மெதுவாக மகிழுந்தை ஓட்டி வந்தவன் ஒரு வழியாக வல்வில் ஓரி ரிசார்ட்டுக்குள் வந்து சேர்ந்தான் தாமதமாக.

"வாங்க.... வாங்க சார்... வழியில் மழையா, சொன்ன நேரத்தை விட தாமதமா வர்றீங்களே !" என்றான், வரவேற்ற மேனேஜர் முகுந்தன்.

"ஆமாம் சார்..." என்று ஒரு புன்முறுவலால் சமாளித்தான் எழிலன்.

வழக்கமான சடங்குளுக்குப் பின், அவன் புக்கிங் செய்திருந்த காட்டேஜ்களுக்கு அழைத்துப் போனான் முகுந்தன். கூடவே லக்கேஜ்களைச் சுமந்தபடி ரூம்பாய்.

"சார்.... சாப்பிட்டீங்களா? இல்ல சப்பாத்தி, நான், சிக்கன் கறி கொடுத்தனுப்பட்டுமா பையன் கிட்ட!" எனக் கேட்டான் முகுந்தன்.

"புண்ணியமா போகட்டும் உனக்கு, எல்லாத்திலயும் ரெண்டு செட் கொடுத்தனுப்புப்பா. மலை ஏறினதுல எத்தனைப் பசி. முடியல என்னால !" என்றுப் பொருமினார் ரஞ்சிதம்.
எழிலன், "ஏன்ம்மா ?" என விழியசைவால் கேட்டான்.

"இதோ அரை மணியில் நீங்க ஆர்டர் பண்ண தெல்லாம் உங்க அறைக்கே வந்துடும்மா. நீங்க போய் ரெப்ரஷாகுங்கம்மா." எனப் பரபரத்தான் முகுந்தன்.

"டேய் தம்பி! சூப்பரா இருக்குடா காட்டேஜ். சுத்தி பெரிய பெரிய கல்லாலானச் சுவர்கள். மேல நல்லா டெக்கரேட் பண்ணி இருக்காங்க. பாத்ரூம் கூட சொர சொரப்பு டைல்ஸ் போட்ருக்காங்க. நல்லா இருக்குடா. பேசாம நாம வந்த வேலை முடியற வரைக்கும் இங்கயே தங்கிடலாம்டா, என்ன சொல்ற?" கேட்டார் ரஞ்சிதம் தன் ஏகப்புத்திரன் எழிலனிடம்.

"ம்ம்.... ம்ம்.... தங்கலாம் .... தங்கலாம் .... நல்லா தங்கலாம் .... காசு என்ன மரத்திலயா காய்க்குது?" என முறைத்தார் சிவமலை.

"அப்படி நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிறீங்க? நல்லா இருக்கு இந்தக் காட்டேஜ், ரெண்டு நாள் சேர்த்துத் தங்கலாம்னு சொன்னது ஒரு குத்தமா?" என அலுத்துக் கொண்டார் ரஞ்சிதம் தன் கணவரிடம்.

"ம்ம்... ஒரு நாளைக்கு ரெண்டுக்கும் சேர்த்து பத்தாயிரம் தெரியுமா உனக்கு. அதுக்கப்புறம் சாப்பாட்டுக்குத் தனி. புரிஞ்சிதா? வந்தோமா.... வந்த வேலைய சீக்கிரமா முடிச்சோமா, உடனடியா கிளம்பிடறது நல்லது!" என்றார் சிவமலை சற்று உக்கிரமாகவே.

"அப்பா..... விடுங்கப்பா.... அம்மா ஏதோ ஆசையில சொல்லிட்டாங்க." என சமாளித்தான் எழிலன்.

" ஒரு நாளைக்குப் பத்தாயிரமா ?" என்று அதிர்ந்த ரஞ்சிதம் உணவு வந்ததைக் கூட கவனிக்க மறந்து உட்கார்ந்திருந்தார்.

ஒரு வழியாக எல்லோரும் உணவருந்தி விட்டு படுக்கையில் சாய்ந்தனர்.

பயணக் களைப்பில் படுத்த உடனே உறங்கத் தொடங்கினார் சிவமலை. அருகே வெண்பாவும் தீரனும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ரஞ்சிதத்திற்குத் தான் உறக்கம் பிடிக்காமல் அறைக்குள்ளேயே நடை பயின்றுக் கொண்டிருந்தார்.

அடுத்த அறையில், எழிலன் வெந்நீரில் குளித்து முடித்து வந்து வெண்ணிறத் தூவாலையில் துவட்டிக் கொண்டிருந்தான்.
அருகில் நங்கை உடைமாற்றிக் கொண்டிருந்தாள்.


அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் எழிலன் ஈரத்துடன்.

"ரெண்டு பிள்ளையும் பெத்தாச்சு, ஆனா இன்னமும் இந்தக் குறும்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஐயோ... ஐயோ ...." எனச் செல்லமாக அவன் தலையில் குட்டினாள் நங்கை.

"ஹலோ மேடம், எனக்கு என்னைக்குமே என் பொண்டாட்டி புதுப் பொண்டாட்டி தான். அவள நான் எப்பவும் ஒரே மாதிரி தான் ரசிப்பேன். இதை எவன் கேள்வி கேட்பான்?" எனக் கண் சிமிட்டினான் எழிலன்.

" ஐயா சாமி, அப்படியே ரசிச்சிக்குங்கப்பா... நான் எதுவும் சொல்ல. இப்ப என்னை விட்டா நான் குளிச்சிட்டு வருவேன்!" என பதிலுக்கு உதட்டைச் சுழித்தாள்.

"ம்ம்.... அதானப் பார்த்தேன். சும்மாவா பிள்ளைங்கள தாத்தா பாட்டி கூடப் படுத்துக்குங்கன்னு அனுப்பின !" என்றவன் அவளைத் தாவிப் பிடிக்க முயல, அவள் இவன் கரங்களுக்குள் சிக்காமல் குளியலறைக்குள் புகுந்தாள் வெட்கத்துடன்.

அவள் குளித்து முடித்து வர பத்தே மணித்துளிகள் தான் ஆகி இருக்கின்றது. அதற்குள் இவனுக்கு பத்து யுகமாகத் தோன்றிட, இம்முறை அவளை ஆரத் தழுவினான் ஆசை தீர.

இதழ்களில் இதமாக ஒத்தடம் தந்திட, மூச்சு முட்டியது அவளுக்கு காதலின் பெருக்கினால்.

"ஸ்...ப்பா...., இதென்ன காணாத மாடு கம்மங் கொல்லைல புகுந்த மாதிரி...!" என அலுத்துக் கொண்ட நங்கை, தன் இதழை நாவால் வருடியபடி அவனை கட்டிலில் தள்ளினாள்.

"என்ன நீ , இதுக்கே இப்படி அலுத்துக்கற? இன்னும் எத்தனை இருக்கு தெரியுமா ஐயா கிட்ட!?" என ஒரு ஏக்கப் பார்வை பார்த்தான்.

" ஏதோ, காணாததக் கண்ட மாதிரி தான்!" எனச் சிரித்தவள் அவன் அணைப்புக்குள் இருந்தாள் அடுத்தக் கணமே.

இரவு வானம் இருள் சூழ்ந்திருக்க, விண்மீன்கள் இருவரின் காதல் லீலைகளை ரசித்துக் கண்சிமிட்டிட, பொறுக்க மாட்டாமல் முகிலினங்கள் அவற்றின் விழிகளை மூடின செல்லமாக.
இந்த இரவு இனிய இரவாகக் கழிந்தது அவர்களுக்கு.

விடியல் பொழுதில் ஒரு அலறல் சத்தம் கேட்டது பக்கத்துக் குடிலில்.

பதறி எழுந்த எழிலன் தன் சட்டையைத் தேடி அணிந்தபடி வெளியே ஓடினான் அரக்கப் பறக்க.

(ரகசியம் தொடரும்)

யாழ்க்கோ லெனின்
நெய்வேலி
201025
 
Last edited:
Back
Top