My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 32.....

IVNP18

Member
Joined
Mar 21, 2025
Messages
58
பாடலிபுத்திரத்தில் மிகவும் ரகசியமான இடத்தில் மநு, துணைத் தளபதி வீரசிம்மன், மற்றும் வசுதேவ கண்வா மூவரும் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் யாரும் வரக் கூடாது என்று உத்தரவு கொடுத்து விட்டார் மநு என்பதால் ஏதோ மிகவும் ரகசியமான ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறார் என்று ஊகித்துக் கொண்டார்கள் மற்ற இருவரும். வழக்கம் போல மிகவும் குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்திருந்தனர். மெல்லிய குரலில் பேசினாலும் வெளியில் யாரேனும் வேலைக்காரர்கள் இருந்தால் கூடக் கேட்கக் கூடாது என்று கதவுக்குக் கீழே, ஜன்னல்கள் இவற்றில் பஞ்சுத் திண்டுகளை வைத்து அடைக்கச் சொல்லி விட்டார் மநு. பெரிதாகக் கத்தினால் கூட வெளியில் கேட்காத அளவுக்கு அந்த ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. மநு வந்ததும் மரியாதையாக எழுந்து நின்றார்கள் இருவரும்.

"வீரா! கண்வா! நமது திட்டம் வெளியில் கசிந்து விட்டது. வரும் சித்திரா பௌர்ணமி என்று நாம் மன்னரையும், அவரைச் சேர்ந்தவர்களையும் கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளோம் என்ற விஷயம் இப்போது வைஷாலி நகரம் வரை எட்டி விட்டது." என்றார் மநு. அவரது முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ எதுவுமே இல்லை. கொஞ்சமும் உணர்ச்சிகளை வெளியில் காட்டாத முகம். அவரது வார்த்தைகளில் இருந்த அமைதியே நடுக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

"எப்படி? எப்படித் தெரிந்தது குருவே? நாம் ரகசியமாகத்தானே பேசினோம்? நம்மில் யார் துரோகி? என் மகனா? சொல்லுங்கள். அவன் தான் என்றால் அவனை என் கையாலேயே வெட்டிப் போட்டு விடுகிறேன்" என்று பதறினார் வீரசிம்மன்.

"இல்லை வீரசிம்மா! நம்மில் யாருமே துரோகி இல்லை. ஆனால் நமக்கே தெரியாமல் பெண்கள் படை ஒன்று உருவாகி இருக்கிறது. அதில் சில ஆண்களும் உண்டு. அதில் தான் உன் மகன் மயூரன் முதலில் இருந்தான். ஆனால் நமது கொள்கைகளையும், அதனால் விளையும் நன்மைகளையும் புரிந்து கொண்டு நம் பக்கம் வந்து விட்டான். ஆனால்...அவனது போராட்டப் படையினர் அவன் சென்ற முகாம்களைத் தொடர்ந்து கண்காணித்திருக்கின்றனர். ஹரனைக் காணவில்லை என்றதும் மயூரன் மேல் அவர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது."

இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர். இனி என்ன செய்வது? நமது திட்டம் மன்னர் தேவபூதியின் காது வரை எட்டி விட்டால் நம் திட்டம் கொள்கை எல்லாம் தோற்பது இருக்கட்டும், நாமே உலகில் உயிரோடு இருக்க முடியாதே? என்று எண்ணியபடி இருந்தனர். அவர்கள் மனதில் உள்ளதைப் படித்தவர் போலப் பேசினார் மநு.

"உங்களுக்கு ஒன்றும் ஆகாது! அதற்கு நான் உத்திரவாதம். வீரசிம்மா! உன் மாளிகையில் தான் யாரோ ஒருத்தி வேலைக்காரி போலச் சேர்ந்து எல்லாவற்றையும் ஒட்டுக் கேட்டிருக்கிறாள். இந்த விஷயத்தை ஆம்ரபாலியின் மாளிகையில் வேலை பார்க்கும் என் உளவாளி ஒருவன் தெரிவித்தான். இனியும் நீ தெரியாதவர்களை வேலைக்குச் சேர்ப்பதை நிறுத்தி விடு. இல்லையென்றால் விளைவுகள் நல்லதாக இருக்காது."

மிகவும் அச்சுறுத்தும் வார்த்தைகளோ, குரலில் பெரிய கோபமோ இல்லை. ஆனாலும் பயமே அறியாத வீரசிம்மரின் மனம் நடுங்கியது. பணிவாக தலையசைத்தார் அவர்.

"இனி நாம் என்ன செய்வது குருவே?" என்றார் கண்வா.

"நமது திட்டத்தில் மாற்றமே இல்லை. ஆனால் நாளை மட்டும் மாற்றி விடுவோம். வைஷாலி நகரத்திலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் கிளம்பி பாடலிபுத்திரம் வருவதாகவும் அவர்கள் மன்னரை சந்தித்து விஷயத்தைச் சொல்ல இருப்பதாகவும் ஆம்ரபாலியின் மாளிகையில் இருக்கும் என் உளவாளி செய்தி அனுப்பி இருக்கிறான்." என்றார் மநு.

கண்வாவும், வீரசிம்மரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அப்படியானால் நம் வேலை எளிது குருவே! பாடலிபுத்திரத்துக்குள் நுழையும் அனைவரும் முறையாக அனுமதிச் சீட்டு பெற வேண்டும். சுங்கக் கட்டணம் கட்டும் இடத்திலேயே அவர்களை பிடித்து நமது இடத்துக்குக் கொண்டு வந்து விடலாம். " என்றார் கண்வா.

பதிலே பேசாமல் கண்வாவை ஆழமாகப் பார்த்தார் மநு. அவரது பார்வையிம் நெருப்பு தாங்காமல் தலையைக் குனிந்து கொண்டார் கண்வா.

"சுங்கக் கட்டணம் செலுத்தும் இடத்தில் கூட்டம் இருக்கும். அங்கே இரு நபர்களை நீ கைது செய்து அழைத்து வந்தால் அனைவரின் கவனத்தையும் கவரும்! மகத நாட்டின் மன்னாக ஆகப் போகும் நீ, இப்படிப் பேசுவது...எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை." என்றார் மநு.

கொலை செய்யவும் அஞ்சாத கண்வாவின் மனதில் பயம் பெருகிப் பாய்ந்தது. வீரசிம்மருக்கு சற்றே சமாதானம் ஆனது. இப்போது என் மேல் மட்டும் குரு கோபமாக இல்லை, கண்வாவும் உள்ளார் என்று சிறு பிள்ளைத்தனமாக எண்ணியது துணைத் தளபதியின் மனம்.

"மக்களின் கண்களுக்கு சந்தேகம் வரும் விதமாக எதுவுமே நடக்கக் கூடாது. அதில் தான் நமது திட்டத்தின் வெற்றியே உள்ளது. புரிகிறதா? இன்னும் ஐந்தே நாட்களில் சித்திரா பவுர்ணமி. ஐந்து நாட்கள் கழித்து செய்ய வேண்டியதை இன்னும் இரு தினங்களில் நாம் நிறைவேற்றப் போகிறோம். நான் சொல்வது புரிகிறதா?" என்றார் மநு.

பிரமித்துப் போனார்கள் வீரசிம்மனும், வசுதேவ கண்வாவும். திட்டத்தை விவரிக்கத் தொடங்கினார் மநு.

அதே நேரம் கபிஸ்தலத்தில் சுவர்ணாவும் கலாவும் இருப்பிடம் தேடி அலைந்து திரிந்து ஒரு முதிய விதவையின் வீட்டில் தங்கிக் கொண்டார்கள் அந்த ஊரில் முகாமிட்டிருந்த மயூரனைப் பார்க்க சென்றான் உத்திரன். அவனைப் பார்த்ததுமே மயூரனின் முகம் மாறி விட்டது. ஆனால் உத்திரன் சிரித்துக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டான்.

"நானும் உன்னைப் போல ஆக வேண்டும் மயூரா! அரிஹந்தும் ஆனந்தனும் பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால் நான் அப்படி அல்ல. எனக்கு நிறையப் பணம் வேண்டும். செல்வாக்கு வேண்டும். அதனால் தான் உன்னைத் தேடி வந்தேன்." என்றான் உத்திரன்.

அவன் அப்படிச் சொன்னாலும் உடனே அதை அப்படியே நம்பி விடவில்லை மயூரன். அவனே உளவு பார்ப்பதற்காகத்தானே இந்த முகாமுக்குள் வந்தான். பிறகு உலக நடப்பு, அவனது நன்மை, கிடைக்கப் போகும் செல்வம் எல்லாம் அவனை மாற்றின. உத்திரனை எவ்வளவு தூரம் நம்பலாம்? ஒருவேளை இவன் சுவர்ணா, கலா, முத்துக்குமாரி மாரிச்சாமி என்று பெரிய கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறானோ? இவன் மட்டும் ஏன் வந்தான்? அரிஹந்த் ஏன் வரவில்லை? ஹரனைப் பற்றி அவர்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ? என்று எண்ணினாலும் உத்திரனை மனதார வரவேற்பது போலக் காண்பித்துக் கொண்டான்.

"வா உத்திரா! நமது அமைப்பில், உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அரிஹந்த் எங்கே?" என்றான் எதுவுமே தெரியாதது போல.

"ஹூம்! அரிஹந்த் மனம் மாறவே இல்லை மயூரா! வாழ்க்கையின் நிலையாமை, ஆசையைத் துறத்தல் என்று பெரிய ஞானி போலப் பேசுகிறான். அவனாவது மனம் மாறுவதாவது." என்றான் உத்திரன்.

சுவர்ணா எங்கே? கலாவும் அரிஹந்தும் எங்கே இருக்கிறார்கள்? ஹரன் உயிரோடு இல்லை என்ற விஷயம் அவர்களுக்கு தெரியுமா? என்றெல்லாம் கேட்க மனம் விரும்பினாலும் இன்னமும் உத்திரன் உண்மையாகவே மனம் மாறி விட்டானா? இல்லையா? என்பது தெரியாமல் கேட்க வேண்டாம் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். உள்ளே அழைத்துச் சென்று தான் தங்கி இருக்கும் வீட்டைக் காண்பித்தான் மயூரன். வெளியில் இருந்து பார்த்தால் சர்வ சாதாரணமாகத் தெரிந்த அந்த வீடு உள்ளே செல்லச் செல்ல பெரிதாகவும் பல அறைகளும், வசதிகளும் கொண்டதாகவும் இருந்ததை கவனித்தான் உத்திரன். கபிஸ்தலத்தில் இது போன்ற ஒரு வீட்டை தயார் செய்ய வேண்டும் என்றால் எத்தனை பணம் செலவாகி இருக்கும்? எல்லாம் நாட்டும் மக்களின் வரிப்பணம். என்று எண்ணிக் கொண்டே வந்தான். ஒவ்வொரு அறையையும் கடக்கும் போது ஆஹா ஆஹா என்று சொல்லிக் கொண்டே வந்தான் உத்திரன்.

வீட்டின் மையப்பகுதியில் கூடம் போல ஒரு அறை. அதன் மூன்று முனைகளிலும் இன்னொரு அறை இருந்தது என்பது அங்கே தொங்கிக்கொண்டிருந்த திரைச் சீலைகள் மூலம் அறிய முடிந்தது. நான்காவது மூலையில் இருந்த அறையின் மேல் கருமை நிறமான திரைச் சீலை தொங்கிக் கொண்டிருந்ததால் அங்கே தான் பணம், நகை போன்றவற்றை வைத்திருப்பார்கள் என்று ஊகித்தான் உத்திரன். ஒரு அறையிலிருந்து பெண்ணின் கால் கொலுசோலி கேட்டது. கேள்வியாக மயூரனைப் பார்த்தான் உத்திரன்.

"அது...அது வீட்டில் பாத்திரம் தேய்க்கும் சமையல் செய்யும் வேலைக்காரப் பெண்" என்று சொல்லி சமாளித்தான் மயூரன். மனம் கசந்தது உத்திரனுக்கு. இவனுக்காகவா சுவர்ணா இத்தனை உருகுகிறாள்? முதலில் பெண்களை அடிமைப்படுத்துவது தவறு என்று பொங்கி எழுந்து கொள்கைகாக அந்த அமைப்பினரின் முகாமுக்குள் நுழைந்து அவர்களது செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் அடிமையாகி தம்பியையே கொன்றவன், போதாதற்கு இப்போது பெண் வேறா? என்று எண்ணிக் கொண்டான். மனம் என்ன நினைத்தாலும் அதனை முகத்தில் பிரதிபலிக்கவில்லை உத்திரன்.

"உம்...வேலைக்காரியா மயூரா? என்னை என்ன அரிஹந்த் அல்லது ஆனந்தன் என்று நினைத்தாயா? எனக்குத் தெரியும் இதெல்லாம். இப்படி வாழ்வது தான் வாழ்க்கை மயூரா! ஏதோ நானும் உன் உதவியால் இப்படி வாழ்ந்தால் போதும்" என்றான் உத்திரன்.

அசடு வழிய சிரித்தான் மயூரன். பணியாளர்கள் மாம்பழச்சாறு கொண்டு வந்து வைத்தார்கள். குடிப்பதா? வேண்டாமா? என்று சற்றே தயங்கினான் உத்திரன். தான் தயங்கினால் ஹரனை உணவில் விஷம் வைத்துக் கொன்ற விஷயம் தெரிந்து விடும் என்று கண்டு பிடித்து விடுவான், பிறகு வந்த வேலை நட்சக்காது என்று எண்ணிக் கொண்டு தயக்கமே காட்டாமல் எடுத்துப் பருகினான். அப்படி ஒரு சுவை.

"நீ எப்படி இங்கே வந்தாய்? நான் இங்கே இருக்கிறேன் என்று எப்படித் தெரியும் உனக்கு?" என்று கேட்டான் மயூரன். இந்தக் கேள்விக்கு மயூரன் சொல்லும் பதிலை வைத்து விஷயத்தை ஊகிக்கலாம் என்பது அவன் எண்ணம்.

ஏற்கனவே யோசித்து பேசி வைத்திருந்ததால் சரளமாகப் பேசினான் உத்திரன்.

"ஜேத்தாவிலிருந்து நீயும் உன் நண்பர்களும் கிளம்பி வந்த பிறகு ஏதோ ஒரு இடத்தில் வைத்து நீயும் உன் தம்பியும் காணாமல் போய் விட்டீர்கள் என்று அரிஹந்தும் கலாவும் எனக்கும் ஆனந்தனுக்கும் செய்தி அனுப்பினார்கள். எங்கெங்கோ தேடினோம், நீ கிடைக்கவே இல்லை. கலா மனம் தளர்ந்து போய் விட்டாள். என் சகோதர்கள் இருவருமே களப்பலி ஆகி விட்டார்கள் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு பித்துப் பிடித்தவள் போல ஆகி விட்டாள். அதனால் அரிஹந்த் கலாவையும் சுவர்ணாவையும் திரும்ப ஜேத்தாவுக்கே அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தான். ஆனால் சுவர்ணா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மயூரனை நான் நன்கறிவேன். என் மேல் உள்ள அன்பை அவனால் மறக்கவே முடியாது. என்றாவது ஒரு நாள் என்னைத் தேடி வருவான் என்று சொல்லி வர மறுத்து விட்டாள். அவளையும் கலாவையும் அழைத்துக் கொண்டு நாங்கள் இங்கே வந்த போது உன்னைப் பார்த்தேன். அது தான் இங்கே வந்தான்." என்றார் உத்திரன்.

சுவர்ணா, கலா, அரிஹந்த் என்ற பெயர்களைக் கேட்கும் போதே மயூரனின் மனதில் குற்ற உணர்வும், கலவரமும் வெடித்தது. அதுவும் கலா பித்துப் பிடித்தவள் போலாகி விட்டாள் என்ற செய்தியும், சுவர்ணாவும் இங்கே வந்திருக்கிறாள் என்ற செய்தியும் அவன் இதயத்தில் பயம் நெருப்பை பற்ற வைத்தது.

"நா....நான்.....முகாமில் சேர்ந்தது உளவு பார்க்கத்தான் என்று சுவர்ணாவுக்கு தெரியும் அல்லவா? கலா என்ன சொன்னாள்?" என்றான் மயூரன் மெல்ல.

சிரித்தான் உத்திரன். புரியாமல் பார்த்தான் மயூரன். அப்போது தான் தங்களோடு மாரிச்சாமி, முத்துக்குமாரி என்ற இரு நபர்களும் வந்ததே அவன் நினைவுக்கு வந்தது. முதல் கேள்வியிலிருந்து தப்பிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான் மயூரன்.

"எங்களுடன் வந்தார்களே முத்துக்குமாரி, மாரிச்சாமி என்று இருவர்! தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எங்கே? என்றான் மயூரன்.

முத்துக்குமாரியின் குழந்தை கயாவில் உள்ள மடத்தில் வைத்து உடல் நலமில்லாமல் இறந்து விட்டது. மறு மணம் செய்ய நினைத்த பாவம் தான் தன் குழந்தை பலியாகி விட்டது என்று மனம் வருந்தி முத்துக்குமாரி தங்கள் ஊருக்கே சென்று விட்டாள். மாரிச்சாமியும் மனம் நொந்து கயாவிலேயே தங்கி விட்டார் என்று தெரிவித்தான் மயூரன். முத்துக்குமாரி போன்ற பெண்களின் ஆளுமையை நிலை நிறுத்தத் துடிக்கும் ஒருத்தியே குழந்தை இறந்து விட்டால் அது தான் செய்த தவறு என்று எண்ணுகிறாள் என்றால் இதனை நமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளலாமே? என்று மனதில் ஒரு ஓரத்தில் அந்த செய்தியை சேமித்தான் மயூரன்.

"சுவர்ணா எப்போதும் உன் நினைவாகவே இருக்கிறாள் மயூரா! ஆனால் நீயோ? சுத்தமாக மறந்து விட்டாய் போல இருக்கிறதே?" என்றான் உத்திரன்.

பதில் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தான் மயூரன். தன்னைப் பற்றி சுவர்ணாவோ, கலாவோ என்ன நினைப்பார்கள்? நிச்சயம் நான் உளவு பார்ப்பதற்காகத்தான் இந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறேன் என்று நம்ப அவர்கள் முட்டாள்கள் இல்லை. நான் மாறி விட்டேன் என்று தெரிந்த பிறகும் எதற்காக என்னைத் தேட வேண்டும்? இதில் ஏதேனும் மர்மம் இருக்கிறதோ? என்று எண்ணினான்.

"நீ என்னோடு தங்கப் போகிறாயா? அல்லது கலாவிடமும், சுவர்ணாவிடமும் என்னைப் பார்த்து விட்ட செய்தியைச் சொல்லப் போகிறாயா?" என்று கொக்கி போட்டான்.

சிரித்தான் உத்திரன். அவன் மனதுக்குள் நீ எட்டடி பாய்ந்தால் என்னால் பதினாறடி பாய முடியுமடா என்று எண்ணிக் கொண்டு "சுவர்ணா தான் உன்னை இங்கே முதலில் பார்த்தாள். உன்னைப் பார்த்து பேசி வரச் சொல்லி அவள் தான் என்னை அனுப்பினாள். அடுத்து, நீ எப்படி இருக்கிறாய்? யாருடன் சேர்ந்து இருக்கிறாய் என்று சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் கலா இல்லை. இப்போது அவள் வெறும் பதுமை. கற்சிலை போல அப்படியே உட்கார்ந்திருப்பாள். சுவர்ணா உணவு ஊட்டினால் உண்பாள், இல்லையென்றால் நாட்கணக்காக அப்படியே அமர்ந்திருப்பாள். அதனால் அவள் என்ன நினைக்கிறாள் என்று நமக்குக் கவலை இல்லை." என்றான் உத்திரன்.

சில விநாடிகள் தலை சுழல்வது போல இருந்தது மயூரனுக்கு. கலாவா? என் தங்கை கலாவுக்கா இந்த நிலை? ஏன்? ஹரனைப் பற்றி தெரிந்து விட்டதா? இல்லை நான் கொலை செய்தேன் என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லையா? ஒரு கணம் அவர்கள் கிராமத்து வீட்டில் அம்மாவோடு வயலில் வேலை செய்ததும், கலாவும் ஹரனும் இவனோடு சண்டை போட்டதும் நினைவுக்கு வர கண்களில் நீர் துளிர்த்தது.

"ஐயா! உணவு தயாராகி விட்டது!" என்று மிகுந்த பணிவோடு ஒரு வேலைக்காரன் வந்து சொல்ல பேசிய அவனை ஏற இறங்கப் பார்த்தான். வயது எப்படியும் 40 இருக்கும். முழுக்க நரைத்த தலை. கண்களிலும், முகத்திலும் சோர்வு விரக்தி, பணிந்து பணிந்து வணங்கி நிரந்தரமாக கூன் போட்ட முதுகு. தலையை உதறிக் கொண்டான் மயூரன். கலாவும் சுவர்ணாவும் சொல்வது போல நானும் போராட்டத்தில் சேர்ந்திருந்தால் இப்படித்தான் ஏதாவது ஒரு வீட்டில் வேலை செய்து பிழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். நல்லவேளை நான் சரியான முடிவு எடுத்தேன். மனம் தடுமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

மயூரனின் கண நேர தடுமாற்றத்தை புரிந்து கொண்டதோடு அவன் மனம் எதை நாடுகிறது என்பதையும் புரிந்து கொள்ள உத்திரனால் முடிந்தது.

"கலா அப்படி ஆனது அவள் விதி! நாம் என்ன செய்ய முடியும்? விடு! இதில் உன் தவறு எதுவுமே இல்லை. உணவு தயாராம். நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆகி விட்டன. நானும் வரட்டுமா உத்திரா?" என்றான் வேண்டுமென்றே பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு.

அவனையும் அழைத்துக் கொண்டு சமையல் கூடத்துக்குச் சென்றான். தரையில் பட்டுத்துணி விரித்து எதிரில் தேக்கு மரப்பலகையை வைத்து அதில் பெரிய வெள்ளித் தட்டில் பல விதமான பலகாரங்கள் பரிமாறப்பட்டிருந்தன. உத்திரனை நோக்கி சைகை செய்யவும் அவனை சமையற்பணியாளர்கள் இன்னொரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அது மயூரனுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் உண்ணும் பந்தி. அங்கே இருந்தவர்களோடு அமர்ந்து வாழையிலையில் நல்ல விருந்து உண்டான் உத்திரன். தனக்கு சமமாக சாப்பிடக் கூட மயூரனின் மனம் இடம் கொடுக்கவில்லை என்றால் பெருத்த மாற்றம் அவன் மனதில் வந்திருக்க வேண்டும். அதுவும் பணம், அதிகாரம் என்ற மோகம் அவனது நெஞ்சை நிறைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் ஒரு வேலைக்காரன் மயூரனிடத்தில் உத்திரனை அழைத்துச் சென்றான். தன்னை தனியாக அமர வைத்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவன் போலப் பேசினான் உத்திரன்.

"ஆகா! என்ன அருமையான உணவு? இத்தனை ருசியான கூட்டு பொரியல் வகைகளை நான் சாப்பிட்டதே இல்லை. என்ன? ஒரே ஒரு குறை! ஏன் இறைச்சி இல்லை மயூரா?" என்றான் உத்திரன்.

"எங்கள் அமைப்பில் உயர் நிலையில் உள்ளவர்கள் புலால் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது என்பது கட்டுப்பாடு. அதனால் தான் எல்லாமே தாவர உணவுகளாக இருந்தன. நீ திருப்தியாக சாப்பிட்டாய் அல்லவா? அது போதும்." என்று நிறுத்தினான் மயூரன். அவன் குரலில் நீ புறப்படு என்ற தொனி இருந்தது. புரிந்தாலும் புரியாதது போல அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டான் உத்திரன்.

"உன்னைப் பார்த்து பேசி விட்டேன். ஹரன் எங்கே? அவனையும் கூப்பிடேன்! நீங்கள் இருவரும் ஒன்றாகச் சென்றால் கலாவுக்கு குணமாகி விடும் என்று சிலர் கூறுகிறார்கள். அதையும் செய்து பார்த்து விடலாமே?" என்றான் உத்திரன். இந்தக் கேள்விக்கு மயூரன் தயாராக இல்லை என்பதால் தயங்கினான். சுற்றிலும் இருந்த வேலைக்காரர்களைப் பார்த்தான். அவர்கள் போய் விட்டார்கள்.

"ஏயப்பா! நீ எத்தனை பெரிய ஆளாகி விட்டாய்? எப்படியடா? மன்னித்து விடு மயூரா? எப்படி இது சாத்தியமானது? என்னையும் இங்கே வேலைக்கு சேர்த்துக்கொள்ளேன். தினமும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு கடைசி வரை உன்னுடனே காலம் கழித்து விடுகிறேன்." என்றான் உத்திரன்.

மயூரன் யோசித்தான். இப்போதைக்கு இவனை வேலைக்கு வைத்துக் கொள்வது சரிப்படாது. இவன் மேல் எனக்கு சந்தேகம் இன்னமும் முழுவதுமாக விலகவில்லை. இப்போதைக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் இவன் தங்கி இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்போம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு உத்திரனை ஏறிட்டான்.

"இப்போதைக்கு இங்கே வேலை எதுவும் இல்லை உத்திரா! ஹரனை வேறு ஊரில் உள்ள முகாமுக்கு மாற்றி விட்டார்கள். அதனால் என்ன? என்னால் உனக்கு கொஞ்சம் பண உதவி செய்ய முடியும். ஆனால் இதை நான் தான் கொடுத்தேன் என்று சுவர்ணாவிடம் சொல்லி விடாதே! வாங்க மாட்டாள்." என்றான். சரியெனத் தலையசைத்தான் உத்திரன். சில பொற்காசுகளை எடுத்து வந்து கொடுத்து வாசல் வரை வழியனுப்பினான் மயூரன். பின்னர் அங்கிருந்த அவனது அந்தரங்க அறைக்குச் சென்று அங்கே இருந்த பெண்ணிடம் ஜன்னல் வழியாக உத்திரனை சுட்டிக் காட்டி அவனைப் பின் தொடருமாறு சொன்னான் மயூரன். சத்தம் கேட்காமல் இருக்க அந்தப் பெண்ணின் கொலுசுகளையும் கழற்றினான்.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top