அத்தியாயம் 32
சந்தன நிற பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் இறங்கி வந்த மகனை கண்குளிர கண்டு மகிழ்ந்தார் மரகதம். அருகில் வந்ததும் அவனின் கன்னம் பற்றி திருஷ்டி உடைத்து, "ரொம்ப அழகா இருக்குற மாறா" என்றார்.
"போதும் போதும் உங்க மகனை ரசிச்சது போதும். கொஞ்சம் திரும்பி இந்த பாவப்பட்ட மகளையும் பாருங்கள்" என்று இடுப்பில் கையை வைத்து தன் தாயை முறைத்துக் கொண்டிருந்தாள் மகதி.
"உனக்கு என்ன ராசாத்தி, நீ இந்த வீட்டு இளவரசி" என்றபடியே வெள்ளை வேட்டி சட்டையில் வந்தார் மணிவண்ணன். "எல்லோரும் தயாராகி விட்டீர்களா? போகலாமா?" என்று மனைவியை ரசித்தபடியே கேட்டார்.
பிள்ளைகள் இருவரும் தொண்டையை செருமி "அப்பா, நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்" என்றனர்.
"என் காலை வாருவதற்கு மட்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்துக்கோங்க" என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, "என் பொண்டாட்டியை, நான் ரசிக்கிறேன்" என்று மரகதத்தின் தோளில் கையை போட்டார் மணிவண்ணன்.
ஏற்கனவே பிள்ளைகள் செய்த கிண்டலில் வெட்கப்பட்டுக் கொண்டிருந்த மரகதம், கணவன் தோளில் கையை போட்டதும் "என்னங்க இது?" என்று வெட்கமாக அவரது கையை தட்டிவிட பார்த்தார்.
அதை தடுத்து அவரை தன் பக்கம் இழுத்துக் கொண்ட மணிவண்ணன், "அமைதியா நில்லுடி" என்றார் மனைவியை ரசித்துக் கொண்டே.
மாறன் தந்தையின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை கண்டு மிகவும் மகிழ்ந்தான். அவனது அத்தையும் அம்மாவும் காணாமல் போன நாளிலிருந்து, அவரது முகத்தில் சந்தோஷமும் தொலைந்து போயிருந்தது.
வீட்டில் எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும் வாய் வார்த்தையாக ரொம்ப சந்தோஷம் என்று சொல்வாரே தவிர, அவரது முகத்தில் அதற்கான சிறு சாயல் கூட இருக்காது. ஆனால் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு மாறனுக்கு உள்ளுக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தது.
"அப்பா, எனக்குத்தான் இன்று நிச்சயதார்த்தம். ஆனால் நீங்கள் இருவரும் புதுப்பெண் மாப்பிள்ளை போல் வெட்கப்பட்டு கொண்டு இருக்கிறீர்களே!" என்றான்.
தன் தங்கை குடும்பம் கிடைக்கும் வரை, கதிர்வேல் மணிமேகலை போல தாங்களும் தவ வாழ்க்கை வாழ்ந்தது, அவர்கள் இருவருக்கு மட்டும் தானே தெரியும்! அதை நினைத்து லேசாக புன்னகைத்து, "நேரம் ஆகிறது, வாருங்கள் சீக்கிரமாக போகலாம்" என்று முன்னால் நடந்தார்.
மாறன் தனது ஜீப்பில் அனைவரையும் அழைத்துக் கொண்டு கதிர்வேல் வீட்டிற்கு வந்தான். தெருவையே மறைத்து பந்தலிட்டு கல்யாண கலை கட்டியிருந்தது கதிர்வேலின் வீடு.
இவர்கள் வண்டி வந்து நின்றதும் மணிமேகலை வேகமாக வந்து, அனைவரையும் வரவேற்றார். அவரது கண்கள் மாறனை கண்டு வியந்து "ரொம்ப அழகாக இருக்கிறாய் மாறா!" என்று அவனது தாயைப்போலவே கன்னம் பிடித்து திருஷ்டி உடைத்தார்.
"அம்மாவிற்கும் அத்தைக்கும் நான் கண்ணிலேயே தெரிய மாட்டேங்குறேன்!" என்று தரையை செல்லமாக உதைத்து சிணுங்கினாள் மகதி.
"என் ராஜாத்தி, நீயும் அழகுதான்டி செல்லம். எங்க வீட்டு இளவரசிக்கு தனியா வேற சொல்லனுமா?" என்று அவளது கன்னம் பிடித்து திருஷ்டி உடைத்தார்.
அவர் கூறியதைக் கேட்டு கண்கள் விரித்த மகதி, "அது எப்படி அத்தை? எல்லோரும் ஒன்று போலவே இருக்கிறீர்கள்!" என்று வியந்தாள்.
அனைவரும் உள்ளே வந்ததும், சாமிக்கண்ணுவின் காலில் விழுந்து வணங்கி, அவரது அருகில் அமர்ந்து கொண்டான் மாறன்.
வீடு முழுவதும் சொந்தமும் பந்தமும் நிறைந்த இருந்தது. வந்தவர்களை ஆடி ஓடி கவனித்தனர் சீனுவும் அவரது மனைவி கல்யாணியும்.
"அதான் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்களே? நிச்சயதார்த்தத்தை ஆரம்பிக்கலாம். கல்யாண பொண்ணை அழைத்து வாருங்கள்" என்றார் அங்கிருந்த பெரியவர் ஒருவர்.
"நான் போய் கூட்டிட்டு வருகிறேன்" என்று உள்ளே ஓடினாள் மகதி.
மல்லிகா பச்சை வண்ண புடவை கட்டி, தங்க நகை சூட்டி, தேவதை போல் அலங்கரித்து இருந்தனர் கல்யாணியும் மணிமேகலையும்.
மல்லிகாவை பார்த்ததும் "அண்ணி" என்று வந்து, அவளை லேசாக அணைத்து "ரொம்ப அழகாக இருக்கிறீங்க, வாங்க போகலாம், அங்கே கூப்பிடுகிறார்கள்" என்றாள்.
அவளும் மௌனமாக எழுந்து கொள்ள, அவளது ஒரு கையை மகதி பிடித்துக் கொள்ள, மற்றொரு கையால் அவள் தன் தம்பி மகிழனை பிடித்தபடி, தனது அறையை விட்டு சபைக்கு வந்தாள் மல்லிகா.
வரவேற்பு கூடத்தில் பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சாமிக்கண்ணுக்கு மறுபுறம் இருந்த நாற்காலியில் அவளை அமர வைத்தாள் மகதி.
சபையினர் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தலை குனிந்து அமர்ந்திருந்தாள் மல்லிகா.
அறையில் இருந்து அன்னநடை போட்டு தன் தாத்தாவின் அருகில் வந்து அமரும் வரை அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.
அவன் அருகில் வந்து நின்ற திருநாவுக்கரசு, நண்பனின் தோளில் கை வைத்து சிறிது அழுத்தம் கொடுத்து, "மச்சான் எல்லோரும் உன்னை பார்க்கிறாங்கடா!" என்றான்.
அதன் பிறகு தான் சுய உணர்வுக்கு வந்த மாறன், வெட்கப்பட்டு தலையைக் கோதிக் கொண்டு, தன் பார்வையை மல்லிகாவிடமிருந்து அகற்றினான்.
அதன் பிறகு நிச்சயதார்த்த புடவையை மரகதம் மல்லிகாவிற்கு கொடுக்க, மகதி அதை அவளுக்கு அணிவித்து வர அழைத்துச் சென்றாள். சிறிது நேரத்திலேயே மஞ்சள் வண்ண பட்டுப்புடவையில் மங்களகரமாக வந்தாள் மல்லிகா.
மல்லிகா வந்ததும் சாமிகண்ணு தாத்தா எழுந்து தன் பேத்தியை அழைத்து வந்து மாறனின் அருகில் அமர வைத்து இருவருக்கும் மாலை அணிவித்தார். பின்னர் செய்ய வேண்டிய முறைகள் அனைத்தும் சீரும் சிறப்புமாக செய்யப்பட்டது.
பெரியவர்கள் அனைவரும் பேசி, அடுத்த மாதம் வரும் முகூர்த்தத்தில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
வந்திருந்த அனைவரையும் மாறன் மல்லிகா இருவரையும் ஆசீர்வதித்து செல்ல, அனைவருக்கும் உணவு பரிமாறும்படி சீனுவிடம் கூறினார் கதிர்வேல்.
அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, மாறன் மல்லிகாவின் கையை மென்மையாக பிடித்தான். சில்லிட்டு இருந்த அவள் கை, அவன் கைக்குள் வந்ததும் சிறு நடுக்கம் தோன்றியது.
மென்மையாக அழுத்தி நான் இருக்கிறேன் என்று தைரியம் கொடுத்த மாறன், தன் கையில் இருந்த இரண்டு மோதிரங்களை எடுத்து தாத்தாவிடம் கொடுத்து "தாத்தா, நாங்கள் மோதிரம் மாற்றிக் கொள்ளட்டுமா?" என்று கேட்டான்.
"எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு, நல்ல பிள்ளை மாதிரி கேட்கிறதை பாருங்க தாத்தா" என்றாள் மகதி.
தாத்தாவும் புன்னகைத்து, "உனக்கு என்னென்ன ஆசையோ அதையெல்லாம் அதை செய்து கொள் மாறா! இதற்கெல்லாம் எங்களிடம் உத்தரவு கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை" என்று சொல்லி இருவருவது கையிலும் மோதிரங்களை கொடுத்து, மாற்றிக் கொள்ள கூறினார்.
மென்மையாக மல்லிகாவின் வலது கையை பற்றி, மோதிர விரலில் சூட்டிவிட்ட பிறகு, தன் விரலை அவள் முன் நீட்டியபடி நின்றான். அவளோ நடுங்கும் கையால் மோதிரத்தை தாத்தாவிடம் இருந்து வாங்கி, மாறனுக்கு அணிவித்தாள்.
நண்பனின் சொல்படி நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக மாறனின் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டான் அரசு.
"அத்தை, மாமா நான் மல்லிகாவுடன் தனியாக பேசலாமா?" என்று கேட்டான்.
"அவர்கள் வேண்டாம் என்றால் பேச மாட்டியா?" என்று அவனின் காதில் மெதுவாக கேட்டாள் மகதி.
அவளை அவன் முறைக்க, பெரியவர் இருவரும் புன்னகையுடன் சம்மதம் என்று தலையாட்ட, மல்லிகாவின் முன் தன் கையை நீட்டினான்.
அவளோ தலை குனிந்து அமைதியாக, அவன் கையை பார்த்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த மகிழன், அவள் கையை தூக்கி தன் அத்தான் மாறனின் கை மேல் வைத்தான்.
அதில் புன்னகைத்த மாறன், "ரொம்ப நன்றி குட்டி மச்சான்" என்று சொல்லிவிட்டு அவன் தலையை கலைத்தான். அவனும் சிரித்துக்கொண்டே தன் நண்பர்களுடன் விளையாட ஓடிவிட, எல்லோரிடமும் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு மல்லிகாவை அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு வந்தான்.
எல்லோரின் முன் இப்படி அவன் தன் கையைப் பிடித்து அழைத்து வருவது அவளுக்கு மிகவும் சங்கடமாக இருக்க, அவனிடமிருந்து கையை உருவப் போராடிக் கொண்டு இருந்தாள். அறைக்குள் வந்ததும் அவள் கையை விடுத்த மாறன், "மல்லிகா" என்று ஆழ்ந்து கூப்பிட்டான்.
அவன் குரலில் அமைதியாக அவன் முகம் பார்க்க,
"எல்லோரும் வற்புறுத்தியதால் தான் என்னை திருமணம் செய்ய சம்மதித்தாயா?" என்று கேட்டான்.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக அவனையே பார்க்க, அவன் அவள் கண்களைப் பார்த்து "சொல் மல்லிகா" என்றான் மீண்டும் மெதுவாக.
அவள் தலையோ மெதுவாக மறுப்பாக ஆடியது. அதில் அவன் உதட்டினுள் சிறு புன்னகை தோன்றியது.
அவளின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்து, தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு, அவள் கைகளை தன் உள்ளங்கையில் வைத்து பொத்திக் கொண்டான்.
"உனக்கு எப்படி என்று தெரியவில்லை மல்லிகா! ஆனால் நீ எனக்கானவள். என் மனதில் மலர்ந்த மல்லிகை நீ. பிறந்ததில் இருந்தே உன்னை நான் எனக்கானவளாக தான் பார்த்திருக்கிறேன். நீங்கள் காணாமல் போன பொழுது நான் எவ்வளவு தவித்தேன் தெரியுமா? என் மனத் தோட்டத்தில் உள்ள மல்லிகை திடீரென்று காணாமல் போனது போல் தவித்தேன்.
அந்த வயதில் என் தவிப்பை எப்படி கடந்தேன் என்று தெரியவில்லை. என் கவலையின் வடிகால் காளையன் தான். என் கோவம், ஏமாற்றம், கவலை, எல்லாவற்றையும் வீரமா மாற்ற எனக்கு உதவினான் காளையன். அந்த வருடமே நான் ஜல்லிக்கட்டு விளையாடி பரிசுகள் வாங்கினேன்.
எப்படியாவது உங்களைத்தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என்று முழு வீச்சுடன் செயல்பட்டு, இதோ இன்று நீ என் கைக்குள் இருக்கிறாய் மல்லிகா" என்று அவள் கையை மென்மையாக சிறு அழுத்தம் கொடுத்தான்.
உனக்கு விருப்பப்படாத அந்த வருடங்களை கருப்பு நாட்களாக நினைத்து உன் எண்ணத்தில் இருந்து அகற்றி விடு. அதை மீண்டும் நீ நினைத்துக் கூட பார்க்காதே! உன் மாறன் அத்தான் உன் அருகிலேயே இருக்கிறேன். உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். அந்த நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?" என்று அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடியே கேட்டான் மாறன்.
அவளது கண்களும் அவன் கண்ணை விட்டு அகலாமல், ஆம் என்று தலை அசைத்து, அவனது கூற்றை ஏற்றுக் கொண்டாள் மல்லிகா.
அதில் மகிழ்ந்த மாறன் மென்மையாக அவளை தோளுடன் அணைத்து கொண்டான். "ரொம்ப நன்றி மல்லிகா. இந்த நம்பிக்கை உனக்கு என்றைக்கும் குறையாதபடிக்கு நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன்" என்று கூறி மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான் மாறன்.
- சுபம்.
மல்லிகாவும், மாறனும் நலமாக, மகிழ்வாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நாமும் விடைபெறுவோம்.
நன்றி.