அத்தியாயம் 31
வேகமாக வீட்டிற்குள் வந்த மாறனை "என்ன மாறா, இந்த நேரத்தில்?" என்று குழப்பமாக கேட்டார் கதிர்வேல்.
"இல்லை மாமா உங்கள் வீட்டிற்கு யாரோ வந்திருப்பதாக செய்தி வந்தது" என்று அங்கு அமர்ந்திருந்த சீனுமின் குடும்பத்தை பார்த்தான்.
"நீங்கள் தானா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்கும்போதே அவர்கள் முகத்தில் இருந்த கவலையை கண்டு கொண்டான்.
"என்ன ஆயிற்று?" என்று மாமாவை பார்வையாலேயே கேட்க,
அவர் தன் கையில் இருந்த செய்தித்தாளை கொடுத்து விட்டு, "எங்கள் வீட்டிற்கு ஆள் வந்தது உனக்கு எப்படி தெரியும்?" என்றார்.
"நம் ஊரில் காவல் நண்பர்கள் என்று ஒரு குழு வைத்திருக்கிறேன் மாமா. அதில் நம் ஊரில் உள்ள இளைஞர்கள் இரவு நேரத்தில் காவல் காக்கிறார்கள். அதுவும் கல்லாடன் விஷயத்தில் உங்களுக்கு ஆபத்து வருமோ என்று, இங்கு 24 மணி நேரமும் காவல் காக்க சொல்லி இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு செய்தியை படித்தான்.
படித்ததும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. "ச்சை, என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள். தங்கள் பத்திரிகை வியாபாரத்திற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்களா?" என்றான் கோபமாக.
"இதை சும்மா விடக்கூடாது மாமா. உடனே ஏதாவது செய்ய வேண்டும்" என்றதும்,
கல்யாணியோ "நீங்கள் என்ன செய்தாலும், என் மேல் விழுந்த பழி போகாது. இதற்கு மேல் நான் உயிரோடு இருக்க வேண்டுமா?" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
"இப்படித்தான் தம்பி, செய்தியை பார்த்ததிலிருந்து ஊரில் உள்ளவர்கள் எல்லாம் அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அதில் அவள் தன்னையே மாய்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாள். அன்று அவளை காப்பாற்றி விட்டேன். அவளை எப்பொழுதும் கண்காணிக்க முடியாது என்று தான், நான் இங்கு அழைத்து வந்து விட்டேன்" என்றான் சோகமாக.
"ஊரில் உள்ளவர்கள் ஆயிரம் சொல்வார்கள் மா, அதை எல்லாம் நாம் காதில் வாங்கிக் கொள்ள கூடாது. நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் தானே? அதை நினைத்து நீ உன்னை மாய்த்துக் கொண்டால், உன் இரு பிள்ளைகளின் நிலைமை என்னாகும் என்று யோசித்தாயா?" என்று அவளுக்கு புத்திமதி கூறினார் சாமிக்கண்ணு
"பின்ன நான் என்ன ப்பா செய்யறது? என் வயிற்றில் பிறந்ததால் என் மகளின் வாழ்க்கையும் இப்படி கேள்விக்குறியதாக வேண்டுமா?" என்று அழுதாள்.
"நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் ஆன்ட்டி, இதை நிச்சயம் நான் சரி செய்வேன்" என்றான் உறுதியாக மாறன்.
"மாமா இவர்கள் எங்கேயும் செல்ல வேண்டாம். நம்முடனே நம்ம ஊரிலேயே இருக்கட்டும்" என்றான்.
அவரும் சரி என்று தலையாட்ட, "நம் வீட்டுக்கு அழைத்துச் செல்லட்டுமா மாமா?" என்றான், இங்கு இன்னொரு குடும்பம் இருக்க முடியாதே என்று.
மருமகனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். "நாங்கள் இதைவிட சின்ன இடத்தில் இருந்தோம். அதனால் இங்கேயே இருக்கட்டும். நாளை பகலில் இவர்களுக்கு என்ன செய்வது என்று யோசிப்போம்" என்றார்.
அவனும் சரி என்று தலையாட்டிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றான்.
மறுநாள் காலையிலேயே வந்துவிட்டார் மணிவண்ணன்.
சீனுவை பார்த்து, "எதைப் பற்றியும் யோசிக்காத தம்பி, இங்கேயே இருந்து விடு. இங்கு வேலைக்கா பஞ்சம். எங்கள் இருவரிடத்திலும் நிலங்கள் இருக்கிறது. அதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்" என்று கூறி தனது ஆட்களை வர வைத்து, சீனுவை வயலுக்கு அழைத்து சென்று, என்னென்ன வேலை இருக்கிறது என்று காண்பிக்க கூறினான் மணிவண்ணன்.
"எங்களுக்கு இருப்பதற்கு தனியாக ஒரு வீடு வேண்டும்" என்று தயங்கி கேட்டான்.
"இதற்கு ஏன் தயங்குறீங்க தம்பி? வீட்டு பக்கத்திலேயே ஒரு வீடு இருக்கிறது. அருகிலேயே வயலும் இருப்பதால் உங்களுக்கு அங்கிருந்து வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும், கவலைப்படாதீர்கள்" என்று அவனை வயலுக்கு அனுப்பினார்.
பின்னர் சாமிக்கண்ணுவுடன் பேசிவிட்டு கிளம்பும் பொழுது, மாறன் கூறியது ஞாபகம் வர, தன் நண்பனிடம் "உன் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து தருகிறாயா? மச்சான்" என்றான்.
அவன் கேட்ட தோரணை கதிர்வேலுக்கு முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது. "உன் மருமகளை உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறாய்! இதற்கு என் சம்மதம் எதற்கு?" என்று கூறிவிட்டு, "ஆனால் மல்லிகாவிற்கு" என்று தயங்கினான்.
"அதை எல்லாம் உன் தங்கச்சி பார்த்துக் கொள்வாள், அதைப் பற்றி நீ கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு மாமாவிடமும் தங்கையிடமும் சம்மதம் கேட்டான். அனைவருக்கும் மல்லிகா மாறன் திருமணம் சந்தோஷத்தையே கொடுத்தது.
அதுபோல எல்லோருக்குமே மல்லிகா இந்த திருமணத்திற்கு சம்மதிப்பாளா என்ற கேள்விக்குறி தான் இருந்தது.
"அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீங்க அண்ணா, நான் மல்லிகாவிடம் பேசுகிறேன்" என்று வேகமாக மல்லிகாவின் அறைக்கு சென்றார் கல்யாணி.
ஒருபுறம் மகிழனும் கல்யாணியின் மகன் சூரியாவும் விளையாடி கொண்டு இருக்க, கட்டிலில் கல்யாணியின் மகள் வசந்தியுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள் மல்லிகா.
மல்லிகாவின் அருகில் வந்து அமர்ந்த கல்யாணி மல்லிகாவின் கையைப்பற்றி தன் கைக்குள் வைத்துக்கொண்டு, "உனக்கு உன் அத்தை மகன் மாறனை பிடிக்குமா?" என்று கேட்டார்.
பிடிக்கும் என்று தலையை ஆட்டினாள் மல்லிகா.
"நீ அவரை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
மல்லிகாவின் முகத்தில் லேசான புன்னகை தோன்றியது. பின்னர் ஒருவித பயமும் தோன்றியது "எனக்கு கல்யாணமே வேண்டாம் சித்தி" என்றாள் பயந்தபடி.
"ஏன்? மாறன் தம்பியை உனக்கு பிடிக்கவில்லையா?"
"அதெல்லாம் இல்லை சித்தி. எனக்கு கல்யாணமே வேண்டாம், பயமாக இருக்கிறது" என்று நடுங்கினாள்.
மல்லிகாவின் பதிலில் கல்யாணியால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவனை பிடிக்கும் என்கின்றாள். ஆனால் திருமணம் வேண்டாம் என்கின்றாளே ஏன்? என்று புரியாமல் குழப்பமாக அவளை பார்த்தாள்.
பின்னர் "மனதில் எதையும் நினைத்து குழப்பிக் கொள்ளாதே. உனக்கு மிகவும் பொருத்தமாக தான் மாறன் தம்பி இருப்பார். முன் பின் தெரியாத எங்களுக்காகவே அவர் எவ்வளவோ யோசித்து யோசித்து செய்கிறார். அப்படி இருக்க அவரது அத்தையின் மகளான உன்னைப்பற்றி யோசிக்காமல் இருப்பாரா? அவர் உன் கூட இருந்தால் என்றைக்கும் உனக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கும் மல்லிகா" என்று தன்னால் முடிந்த அறிவுரைகளை மல்லிகாவிற்கு கூறினாள் கல்யாணி.
சொன்னது போலவே சீனுவிற்கு வயல்களை சுற்றி காண்பித்த பிறகு, அவனால் இங்கு வேலை செய்ய முடியுமா? என்று கேட்டார் மணிவண்ணன்.
"வாழ வழி இல்லாமல் இருக்கிறேன். எந்த வேலை என்றாலும் செய்வேன், அப்படி இருக்க மக்களுக்கு உணவு போடும் விவசாய வேலையை செய்யாமல் இருப்பேனா? எனக்கு தெரியாத வேலைதான், ஆனால் கற்றுக் கொடுத்தால் கண்டிப்பாக சிறப்பாக செய்வேன் சார்" என்றான் சீனுவும்.
அதன் பிறகு சீனு மாறனுடன் வயல் வேலையை செய்ய ஆரம்பித்தான். மாறனின் வீட்டின் அருகிலேயே உள்ள ஒரு வீட்டில் அவன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அவர்களது பெரிய மகனை கதிர்வேலின் பள்ளியிலேயே சேர்த்து விட்டார்கள்.
மாறன் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு நேரில் சென்று, தன் கண்டனத்தை தெரிவித்து, "இதுபோல் அபத்தமான செய்திகளை போடாதீர்கள். இதனால் எத்தனை பேர் பாதிப்படைவார்கள் என்று உங்களுக்கு புரியவில்லையா? உங்கள் வீட்டு பெண்கள் அந்த இடத்தில் இருந்தாலும், இப்படித்தான் எழுதி இருப்பீர்களா?" என்று அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டான்.
அவர்களும் மன்னிப்பு கேட்க , "இனிமேல் குவாரியில் உள்ள பெண்கள் பற்றி விஷயம் செய்திகளில் வெளி வந்தால், உங்கள் பத்திரிக்கையையே முடக்கி விடுவேன். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று மிரட்டி விட்டு வந்தான்.
மாறன் திருமணம் பற்றி கேட்ட பிறகு தாமதிக்க வேண்டாம் என்று அடுத்து வந்த நல்ல நாளில் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தார் சாமிக்கண்ணு.
- தொடரும்..