My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

வானம்பாடி-3 -part-1

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,541

வானம்பாடி-3


ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், கிருஷ்ணா நதிக் கரையில், வல்லபா புரம் கிராமத்தில் அமைந்திருந்த ராடகொண்டா குடும்பத்தின் பண்ணை வீடு.

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில், தென்னந்தோப்பு, மாந்தோட்டம், சப்போட்டா, கொய்யா கனி வகைகள் மட்டுமின்றி, நெல், மிளகாய் பணப்பயிராகப் புகையிலையும் பயிரிடுவார்கள். சிமெண்ட் களத்தில், ஒரு பக்கம் செக்க சிவந்த மிளகாய் காய்ந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் நெல்லை அவித்துக் கொட்டி காய வைத்துக் கொண்டிருந்தனர்.

நடுநாயகமாகப் பெரிய வீடு, இருக்க, அங்கங்கே காட்டேஜ் போன்ற இரண்டடுக்கு வீடுகள் இருந்தது. பண்ணையம் பார்க்க, பாதுகாப்புக்கு என்று ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். ஆனால் ராடகொண்டா குடும்ப உறுப்பினர்களில், மூத்த தலைமுறை மட்டுமே இங்கே இருக்க, மற்றவர்கள், தங்களுக்கென வெவ்வேறு தொழில்களை அமைத்துக் கொண்டு வெளியூரிலிருந்தனர்.

சாலையில் வரும் அந்த எக்ஸ் யூ வி வாகனத்தின் சத்தம் கேட்கவும், பண்ணையாட்கள் கேட்டை திறக்க விரைந்து ஓடினர். “நமஸ்கார மண்டி!“ என மட்டையாய் மடிந்து தலை வணங்க, வாகனத்தின் முன் சீட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்த, ஐம்பது வயதைக் கடந்த ராடகொண்ட ஜெகன் நாதன் ரெட்டி, ஓர் தலையசைப்புடன் அதை ஏற்க, வாகனம் சீறிக்கொண்டு வந்து அரை வட்டமடித்து, வீட்டின் முன்னே நின்றது.

வண்டிச் சத்தம் கேட்கவும், நாற்பதின் பின் வயதிலிருந்து, நிர்மலா வேக நடையோடு, முன் கட்டுக்கு வந்தார். “நமஸ்காரமண்டி வாங்க, அத்தையா மீ கோசம் வெச்சி உண்டி (அத்தை உங்களுக்காகத் தான் காத்திருக்காங்க).” என முகமலர்ச்சியோடு வரவேற்க,

ஒரு செருமலோடு, “அதி நேக்கு தெலுசு, வேகமா வந்ததைப் பார்த்து, நா பார்யா தேடினதா நினைக்கலை.” என அவரும் ஓர் குறையோடு சொல்ல, அதை கண்டு கொள்ளாதவராக, அவர் இருக்கையில் அமர்ந்து ஷூவை கழட்டவும், தண்ணீர் சொம்பை நீட்டி விட்டு, அவர் குடிக்கும் போதே, தானே அவரின் ஷாக்கஸை கழட்டி அதன் இடத்தில் வைத்து விட்டு, வீட்டுக்குள் போடும் செருப்பை எடுத்து மாட்டிவிட,

அவசரமாக, இடது கையால் அவர் கையை பற்றியவர், “நீருமா, ஏ ஏமிரா, எத்தனை தரம் சொன்னாலும் கேட்கிறதில்லை, இதை நானே செஞ்சுக்க மாட்டேனா?“ என ஆட்சேபிக்க,

“உங்களுக்காக நான் செய்யறது, இந்த பணிவிடை மட்டும் தான். வேற என்ன கைமாறு செஞ்சிட்டேன். நடு ரோட்டில் நின்னவளை, கௌரவமா. ஒரு அந்தஸ்து கொடுத்து மாளிகையில் வச்சிருக்கீங்களே!“ என நிர்மலா கண்கலங்க, அதற்கும் ஆட்சேபித்தவர்,

“நீ நன்றி சொல்ல, திரும்ப நான் நன்றி சொல்ல, இதெல்லாம் விட்டுட்டு இயல்பா இருமா.“ என்றபடி கூடத்துக்கு வந்திருக்க, ஜெகன்நாதனின் பெற்றோர் மகனை ஆவலாகப் பார்த்திருந்தனர்.

“நமஸ்கார மண்டி, சின்ன மருமகள் கவனிப்பில் நல்லா இருக்கிங்களா?" என வினவ, மகனை முறைத்த, சீதம்மா, “கண்ணு வைக்காதே, இந்த குத்ரு இல்லையினா, இந்த கிராமத்துக்கு யார் வரீங்க. அவள் பொறுப்பா இருந்ததாலே, எல்லா வேலையும் நடக்குது.” எனப் பெருமையாய் சொல்ல, அவர், நீருமாவை பெருமையாக ஒரு பார்வை பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

“புஷ்காராலுவுக்காவது, எல்லாரும் வருவாங்கள்ல?“ என அவரின் அப்பா தாமோதரன் ரெட்டி கேட்கவும்,

“இரண்டு நாள் முன்னாடியே வராங்க நானையா, அது ஏற்பாடு செய்யத் தான் வந்தேன்.”என இவர்கள் பேசிக் கொண்டிருக்க, நிர்மலா, சுவையான சாப்பாட்டை எடுத்து வைத்து, சாப்பிட அழைத்தார்.

“என்ன சொல்லு, தமிழ் நாட்டு கைப்பக்குவம் தனி தான், இன்னைக்கு சமையல்காரமாவுக்கு லீவா, நீ வரேன்னு தான் இந்த ஸ்பெஷல் சமையல்.” என பெரியவர் கோர்த்து விட,

“மாமையா, ஏதோ ஒரு நாள்னா இந்த சாப்பாட்டை சாப்பிடுவிங்க, தினம் இது தான்னா, நாக்கு செத்து போச்சுண்ணுல சொல்லுவீங்க!” என நிர்மலாவும் காரணம் சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டு, “பாவன்னாரு.” எனப் பாராட்டி விட்டுச் சென்றனர்.

தான் சாப்பிட்டு முடித்து, நிர்மலாவை அமர்த்தி, ஜெகன்நாதன் தானே பரிமாறினார். “நான் வச்சுக்குறேன். நீங்கக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.” என வலியுறுத்த, “நீ சாப்பிடு!” எனப் பேசிக் கொண்டிருந்தார். இவர்களுக்குள் தாமரை இலைத் தண்ணீர் போல், கணவன், மனைவி சம்பிரதாய அங்கீகாரமாக, அவருடைய பெயர் பதித்த, குடும்ப அடையாள சங்கிலி, நிர்மலாவின் கழுத்தில் இருக்கும். உண்மையில் தாலி அளவு, இந்த பண்ணைக்குள், அந்த சங்கிலிக்கு சிறப்பு உண்டு. அதன் காரணமாகவே, சின்னம்மா என மரியாதையாக பணிந்து போகின்றனர்.

ஜெகன் நாதனுக்கு, முதல் மனைவி, மகன் உண்டு, அவருடைய தொழிற்சாலை, ஹைதராபாத்தில் இருப்பதால், குடும்பத்தோடு அங்கே தங்கி உள்ளார். இங்கு வாரம் ஒருமுறை வந்து செல்வார்.

“அக்கையா, எப்போ வராங்க? உங்க அறையை ரெடி பண்ணி வச்சிட்டேன், சிண்டுகாரு வரார்தானே, இந்த முறையும், அவர் அக்கையாவை மாதிரி லீவ் இல்லைனு சொல்லிடப் போறார்.“ எனக் கேட்டுக் கொண்டே சாப்பிட,

“சன்னு வரலையினா சொன்னா, நான் கேட்டதுக்கு வரேன்னு சொன்னாலே!” என அவர் அதிர்ச்சியாக வினவ, “அவளைக் கட்டாய படுத்த வேண்டாம். விட்டுடுவோமே ப்ளீஸ்.” என நிர்மலா இழுக்க,

“என்னமா பேசுற, அவள் நா குத்ரு, சிண்டு எப்படி கட்டாயம் வருவானோ, அதே போல, சன்னுவும் வரணும். நான் பேசிக்கிறேன்.” என அவர் முடித்து விட்டு, இன்னும் ஒருவாரத்தில் ஆரம்பிக்கும் நதிபூஜைக்கு, எத்தனை பேர் வருவார்கள் என கணக்கு எடுத்து, அவர்களை எங்குத் தங்க வைப்பது எனக் கலந்தாலோசித்தனர்.

அன்று இரவு ஜெகன்நாதன் அங்கு தான் தங்கினார். நிர்மலா, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து விட்டு, தன் அறைக்குச் செல்லப் போனவரை, “நீ எதிர் பார்த்த நாள் வந்திருச்சு நீருமா, இப்பவும் அதே முடிவு தானா, உறுதியா இருக்கியா?” எனக் கேட்கவும்,

அவர் புறம் திரும்பியவரின் கண்களில் கோபமும், கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு ஒரு சேர வந்தது. அவர் உடல் நடுங்குவது தெரியவும், எழுந்து வந்து தோளோடு அனைத்துக் கொண்டவர்,

“அன்னைக்கு முடிவு பண்ணினதே செய்யணும்னு கட்டாயம் இல்லை, நீ மன்னிக்கிறதா…” என அவர் பேச வருவதற்குள்,

“இல்லை, அவனுக்கு மன்னிப்பே கிடையாது. தண்டனை நிச்சயம் உண்டு, அதுவும் என் கையாள கொடுப்பேன்.” என வேகமாகச் சொன்னவர் உடல் மேலும் நடுங்க, “ஷ்… நீருமா, ஷாந்தி, ஷாந்தி!” என அமைதிப்படுத்தி, தண்ணீரைக் குடிக்க வைத்தவர்,

“இங்க இருக்க வேலையைக் கொஞ்சம் ஒதுக்கிட்டு வரேன் போவோம். கணக்கை முடிச்சிட்டு வருவோம்.“ என்றவர். “நீ கேட்ட ஆட்களுடைய விவரம். போன் நம்பர் எல்லாம் இருக்கு.” என ஒரு பைலை நீட்ட, நடுங்கும் கரங்களோடு வாங்கியவர். வேகமாக தன் அறையை நோக்கி நடந்தார். ஜெகன் பெருமூச்சு விட்டவராக தன் மகளுக்கு போன் போட்டார்.


துவரிமான், ராஜபாண்டியின் இல்லம், வெளிநாடு சென்று வந்த பின்பும் கூட, தம்பி துரைபாண்டியனை, தனி வீட்டுக்குச் செல்ல ராஜபாண்டியன் அனுமதிக்க வில்லை, அதற்கும் மேல், ராஜனின் மனைவி கௌசல்யாவும், ஓர்ப்படியான செல்வியை, தங்கையாகவே பாவித்தவர், ”உனக்கு இன்னும் என்ன வசதி வேணுமுன்னு சொல்லு, மருது செஞ்சு தருவான். தனியா போகனும்னு நினைக்காதே, தினேஷ் இங்க செட்டில் ஆகணுமுன்னு வரும் போது, தனி வீட்டுக்குப் போகலாம்.” என உரிமையாகவே கண்டிக்க, அதே வீட்டில் தான் இருந்தனர். ஏற்கனவே செல்வமணி வீட்டுக்கு அருகில், அதே போல் வீடு கட்டிக் கொண்டிருந்தனர், அது முடியவும் போகச் சொன்னார்கள்.

மானூத்து சென்று வந்ததை பற்றியும், செல்வமணி, ராஜதுரைப் பற்றி பேச்சு வர, வீட்டுப் பெண்களும் பேச்சில் கலந்து கொண்டனர். “இருக்கிற ஒரண்டை பத்தாதுன்னு, அவர் வேற ரிலீஸ் ஆகிறாராக்கும்.“ எனச் செல்வி குறைபட,

“ஏண்டி ஆயுசு பூரா, ஜெயில்ல கழிச்சிட்டு வரான், அது பத்தலையாக்கும். இந்த செல்ல முத்துவை முறையா கல்யாணம் கட்டியிருந்தான்னா, அவன் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும். நிஜமாவே, ரங்கா நிறைய மாறியிருக்கான்.” என துரை பாண்டி சான்றிதழ் தர,

“இதே, அப்படியே, உங்க மருமகன் கிட்டச் சொல்ல வேண்டியது தானே?” என்றார் கௌசி.

“எதுக்கு, இவனையும் சேர்த்து பகைச்சுகிறதுக்கா, மாப்பிள்ளை இப்போ யார் பேச்சையும் கேட்கிற நிலைமையில் இல்லை. தங்கத்தை இழுத்தே பேசிப்புட்டான்.” என ராஜபாண்டி மீண்டும் வருத்தப் பட,

“என்னைக்கினாலும், செல்வம் சொல்லி காட்டும்னு நினைச்சேன். சொல்லிடுச்சு. இனி மதனி என்ன சொல்ல போறாங்களோ?" என கௌசி கவலைப் பட,

“இனிமே அதை பத்தியெல்லாம் யோசிச்சு பிரயோஜனமில்லை, தினேஷுக்கு நம்ம ஆளுங்கள்ல ஒரு பொண்ணை பார்த்து, கல்யாணம் பண்ணி வைப்போம், அப்போ தான் பெரியப்பாவுக்கு அடுத்த தடவை சீட்டாவது கிடைக்கும். அதை சொன்னா, இந்த செல்வம் மாமாவுக்கு புரிய மாட்டேங்குது.” என மருது பாண்டி சலித்துக் கொள்ள,

அடுத்து தினேஷுக்கு எங்கே பெண் பார்க்கலாம் என்று பேச, அவன் மனைவி சுமித்ரா, இரண்டு மூன்று பெண்களை பற்றி சொன்னாள்.

சரியாக அதே நேரம், டியூஷன் விட்டு வந்த ஹிதேஷ், அரும்பு மீசையும், முகத்தில் சில பருக்களோடும், நெடுநெடுவென வளர்ந்தவனாக, குரல் மாற்றம் பெற்று, இருந்தவன், “தினேஷ் சித்தப்பாவுக்கு, பொண்ணு பார்க்கமுன்னே, அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்க, ஏதாவது பாரின் பிகரை கரெக்ட் பண்ணியிருக்க போறாரு!” என பெரிய மனுஷனாக, பெரிய குரலில் சொல்லவும், சுமி அவனைத் திட்ட, செல்வி, “ஹித்து, என்னாடா இப்படி சொல்லிப்புட்ட, ஐஸ் மாப்பிள்ளையையும் இவன் தான் கண்டு பிடிச்சு சொன்னான், மாமா கொஞ்சம் விசாரிங்க.” என மூக்கால் அழுத செல்வி, சட்டென மகனுக்கு போன் அடித்து விட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “அம்மா!” என தினேஷ் பாண்டி குரல் கொடுக்க, “ஏண்டா தினேஷு, ஹித்து என்னமோ சொல்றான், உன் அக்காவாட்டம் எங்களுக்கு தெரியாம, யாரையும் கல்யாணம் கட்டிகிட்டியா என்ன?” எனப் பட்டெனக் கேட்க, “அடியே அறிவு கெட்டவளே!” என துரை பாண்டி திட்டினார். ஹித்தேஷ் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றவன், எப்புடி என ஒரு ஸ்டிக்கரையும் தட்டி விட,

“ஏய் மம்மி, சின்ன பய பேச்சைக் கேட்டு, உன் மகனை சந்தேகப் படுறியே. அவன், உன்கிட்ட கோர்த்து விட்டு, எனக்கு ஸ்டிக்கர் அனுப்புறான். இப்படி எல்லாம் சந்தேகப் படாத மம்மி. உங்களை எல்லாம் பார்த்த பிறகும் நான் கல்யாணம் பண்ணுவேன், நோ சான்ஸ்.” எனச் சொல்ல, “என்னாடா தினேஷ், பொசுக்குண்டு இப்படி சொல்லிப்புட்ட, நாங்க எல்லாம் நல்லா வாழலையா என்ன?” எனச் செல்வி அழமாட்டாமல் கேட்க,

“நல்லா வாழ்ந்திங்க, ஒருத்தருக்கொருத்தர் அடிமை வேலை செய்யறதுக்கு ஆளை செட் பண்றீங்க, எனக்கு வேண்டாம் சாமி.” என அவன் அந்த பக்கம் கதற,

“டேய் , தம்பி உன்னை வச்சு இங்க பயங்கர பிளானிங்ல இருக்கோம்டா, நீ என்னடா பொசுக்குன்னு இப்படிச் சொல்லி புட்ட, இந்தியாவுக்கு வா, புளியம் கொம்பா பார்த்துக் கட்டி வைக்கிறோம், உன்னை நம்பி பெரியப்பா அரசியல் வாழ்க்கையே இருக்குடா.” என மருது பாண்டி உண்மை நிலவரத்தைக் கேலியாகவே சொல்ல,

“அண்ணேன், நம்ம பெரிய பாண்டியன் பரம்பரையில் வந்தவய்ங்க, எதிரி நாட்டு மன்னர் வீட்டில் பொண்ணு கட்டி கூட்டணி சேர்க்க போறீங்க. போ அண்ணேன், நீயும் உன் ராஜ தந்திரமும், அதுக்கு நான் தான் கிடைச்சனாக்கும், இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்க வேற பிலானை போடுங்க.” எனக் கேலி பேச,

“டேய், உன் நியாயத்தை எல்லாம் இங்க வந்து பேசு. நீ பேச, பேச அம்மாவும், பெரியம்மாவும் முழிக்கிறாங்க.“ என ராஜ பாண்டியனே சொல்லவும்,

“வரேன் பெரியப்பா. இந்தியாவுக்கு டிக்கெட் போட்டேன். ஆனால் நீங்க பேசுறதை பார்த்த, வீட்டுக்கு வர தான் யோசனையா இருக்கு.” எனவும், மற்றவர் ஆட்சேபிக்க,

துரைபாண்டியன், “கேலி, கிண்டல் அப்புறம் இருக்கட்டும்டா, எப்போ வர?” என சீரியஸாக கேட்க, வேலை விஷயமாக ஹைதராபாத் வருவதாகவும், நண்பன் ஒருவன் ஊருக்கு, தங்கள் குழுவே நதி பூஜைகாக செல்வதாகவும், அது முடித்து வருவதாகவும் சொல்ல, துரை விவரம் கேட்டுக் கொண்டவர், “சரி போயிட்டு வா, அந்த புண்ணியத்திலையாவது நல்லது நடக்கட்டும்.“ என போனை வைத்தார்.

ஐரோப்பா கண்டத்தில் சுற்றித் திரியும் தினேஷ் பாண்டி, தற்போது, நெடிந்து வளர்ந்து, சுருள் முடி, நேர் நாசி, அகன்ற கண்கள், அடர்ந்த புருவம், மழிக்கப் படாத தாடி, மீசை, கொஞ்சம் கர்வம், தெனாவெட்டு, கோபம் எல்லாம் கலந்த இன்றைய பெண்கள் ஆசை கொள்ளும் கரடு முரடான வாலிபனாகவே இருந்தான். போன் பேசி வைத்தவனை, அவன் நண்பன் ஜெகதீசன், “குரு, இந்த தடவை மாட்னடி, நீ மட்டும் ஜாலியா சுத்துவியோ. பாண்டிக் குடும்பம் ஒரே அமுக்கு, அமுக்கிடுவாங்க.” என கேலி பேச,

“கொன்றுவேன், என்னால எல்லாம் உன்னை மாதிரி, பங்காருன்னு கொஞ்சிகிட்டு, ஷாப்பிங், பார்லர், மளிகை கடை, ஹாஸ்பிடல், பேபி, டயப்பர் மாட்டிவிட்டுட்டு, ஷ்… அப்பா, நோ வே. வீட்டில் ஒரு அட்டனென்ஸ் போட்டுட்டு, அடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ட்ரிப் பறந்துட வேண்டியது தான். ரெண்டு வருஷம், அய்யாவை பிடிக்க முடியாது.” எனக் கதைக்க, “பார்ப்போம்!” எனச் சவால் விட்டான், ராடகொண்டா ஜெகதீசன் ரெட்டி, அவன் வீட்டிலேயே நண்பன் சிக்கப்போவதை அறியாமல்.

 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top