My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மனதில் மலர்ந்த மல்லிகை - 28

IVNP20

Member
Joined
Mar 22, 2025
Messages
32

அத்தியாயம் 28


மரகதம் மல்லிகாவிற்கு சாப்பாட எடுத்துக்கொண்டு சென்று கொடுக்க, அவளும் அமைதியாக வாங்கி சாப்பிட்டாள். அது மட்டும் அல்ல மரகதம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் மென்மையாகவே பதில் கூறி, அவருடன் சகஜமாகவே இருந்தாள்.

அனைவரும் சாப்பிட்டு முடிய, தனக்குள் இருந்த கேள்வியை மாறனிடம் கேட்டான் மணிவண்ணன், "இவர்கள் அங்கு இருப்பது உனக்கு எப்படி தெரியும் மாறா?" என்று.

அதே கேள்விதான் கதிர்வேலின் மனதிலும் குடைந்து கொண்டே இருக்க, அவரும் அவனை ஆர்வமாக பார்த்தார்.

அனைவரையும் பார்த்து ஆழ்ந்து பெருமூச்சு எடுத்து விட்ட மாறன், "நாம் மாமாவை தேடுவதில் ஏதோ தவறு செய்வது போல் எனக்கு தோன்றியது அப்பா" என்று தந்தையைப் பார்த்தான்.

அவரும் குழப்பமாக என்ன என்பது போல் அவனை பார்க்க, "அன்று நமக்குத் தெரிந்தவரையில் பெருமாள் என்ற ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார், சாட்சி கையெழுத்து போட்ட மாமாவை குடும்பத்துடன் தூக்கிச் சென்று விட்டார்கள், இது தானே?" என்றான்.

அவரும் ஆமாம் என்று தலையாட்ட,
"இது எல்லாமே திட்டமிட்ட செயல் அப்பா" என்று ஆழ்ந்து தன் தந்தையையும் மாமனையும் பார்த்தான் மாறன்.

இருவருமே குழப்பமாக அவனைப் பார்க்க,
"நம் பக்கத்து ஊரு நீலகண்டன் இருக்கிறார் அல்லவா?" என்றதும் இருவரும் ஆமாம் என்று தலையை ஆட்ட,
"அவருக்கு நம் ஊர் தலைவர் பதவியும் தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக திட்டமிட்டு மாமாவையும் சாமிக்கண்ணு தாத்தாவையும் இங்கிருந்து அனுப்பி இருக்கிறார். அதற்கு பெருமாள் என்பவரை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர் உண்மையில் வாத்தியார் இல்லை" என்றதும் இருவருமே அதிர்ச்சியாக பார்த்தனர்.

"ஆமாம், அவர் உங்களுக்கு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் என்று அறிமுகமாகி இருந்தாலும், உண்மையில் அவர் அங்கு வேலை பார்க்கவே இல்லை. அது மட்டும் அல்ல, அவர் ஆசிரியரே இல்லை. உங்களுடன் பழகி இந்த கந்து வட்டிக்காரனிடம் உங்களை சிக்க வைக்க வேண்டும் என்று தான் திட்டம் தீட்டி இருந்திருக்கிறார் நீலகண்டன்.

கல்லாடன் அதில் தலை சிறந்தவன். கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமெல்லாம் தொடர்பு வைத்து இருப்பவன். யாராவது பணம் கொடுக்க முடியாமல் இருந்தால் அவர்களை குடும்பத்துடன் தூக்கிக் கொண்டு போய் விடுவான். குவாரியில் வேலை செய்வதற்கும் அவனுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்கும்.

ஆனால் அவன் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாதவர்களும், பின்புலம் இல்லாதவர்களுமே! அவர்களிடம் நீலகண்டன் கதிர்வேலை பற்றி கூற அவன் முழுவதும் மறுத்து விட்டான். படித்தவர்கள் தனக்கு வேண்டாம். அவர்களால் அவனுக்கு என்றுமே ஆபத்து தான் என்று கூறியிருக்கிறான். அதற்கு நீலகண்டன்.." என்று பேச்சை நிறுத்திவிட்டு தன்னைச்சுற்றி இருந்தவர்களை பார்த்தான்.

மரகதமும் மணிமேகலையுமே அவனையே கவனித்துக் கொண்டிருக்க, எப்படி சொல்லுவது என்று தயக்கமாக "நீலகண்டன், கல்லாடனிடம் அத்தை.." என்று தயங்கி நிறுத்தினான். அதிலேயே கதிர்வேலுக்கும் சாமிக்கண்ணுக்கும் புரிந்து விட்டது.

இருவரும் வேதனையாக தலையாட்டி அவனையே பார்க்க, "பத்து லட்சம் ரூபாய் கல்லாடனுக்கு நீலகண்டன் கொடுத்திருக்கிறான். உண்மையில் கடன் என்று ஒன்று அங்கு வாங்கப்படவே இல்லை என்று கல்லாடனுக்கு அப்பொழுது தெரியவே இல்லை. இரண்டு பெண்களும் பணமும் கிடைக்கிறது என்று மகிழ்ச்சியாக இதற்கு ஒத்துக்கொண்டு, உங்களை இங்கிருந்து கடத்தி விட்டான்" என்று தன் மாமனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அங்கு ஒரு அழுத்தமான அமைதி நிலவ, "இதில் நடிப்பதற்கு பெருமாளுக்கு ஐந்து லட்சம் ரூபாய், கல்லாடனிடம் சொன்ன கந்துவட்டிகாரனுக்கு பணம், என்று உங்கள் இருவரையும் இந்த ஊரில் இருந்து அனுப்புவதற்கு நீலகண்டன் பணத்தை தண்ணீராக செலவு செய்திருக்கிறான்" என்றான் வேதனையாக.

அவன் திட்டப்படி கல்லாடனிடம் உங்களை சிக்கவைத்து இருக்கிறான். அப்பா எல்லா வழிகளிலும் உங்களை தேடிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர் என்ன செய்கிறார் என்று நீலகண்டனின் ஆட்கள் கண்காணித்து கொண்டே இருந்தார்கள்.

எனக்கு, இவ்வளவு தேடியும் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லையே! ஏதோ தவறு செய்கிறோமோ என்று தோன்றியது. பெருமாள் என்பவரை முதலில் தேடுவோம் என்று தேடினேன். அது மட்டுமல்லாது படிப்பதற்கு கோயம்புத்தூர் சென்றதால் என்னை கண்காணிக்க தவறி விட்டான்.

நான் பெருமாளை கண்டுபிடித்து விட்டேன். தருமபுரியில் கடை வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரிடம் கேட்டதில் முதலில் சொல்ல மறுத்தவர் பின்பு நடந்த அனைத்தையுமே சொல்லிவிட்டு, "எனக்கு அது மனது உறுத்தியதால் அவரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று போன் செய்தேன், இருந்தும் அவர் மாட்டிக் கொண்டு விட்டார்" என்று வருந்தினேன்" என்றார்.

அதே சமயம் என் நண்பன் மோகன் போனிலும் உங்க படத்தை பார்த்தேன். அதன் பிறகு தான் கல்லாடன் அவனது மாமா என்பதை தெரிந்து கொண்டேன்" என்று கதிர்வேலின் கைகளை பிடித்து கொண்டு இருந்தான்.

அவருக்குள்ளும் அன்றைய நாளின் எண்ணம் ஓடுவது அவரது முகத்திலேயே தெரிந்துகொள்ள முடிந்தது. அவரது கையில் மென்மையாக அழுத்தினான்.

'நம் திருநாவுக்கரசு போலீஸ் ட்ரைனிங் இருக்கிறான் அல்லவா?" என்று மணிவண்ணனை பார்த்தான் மாறன். அவரும் ஆமாம் என்று தலையாட்ட,
அவன் மூலம் கந்து வட்டிக்காரர்களை தைரியமாக யார் கைது செய்வார்கள் என்று தெரிந்து கொண்டு ஐஜியிடம் சென்று முறையிட்டேன்.

அதன்பிறகு முழுவதும் அவரது ஆலோசனைப்படி தான் நடந்தது. நேற்று நாங்கள் மோகன் ஊருக்கு வந்தது, திட்டப்படியே ஒரே நேரத்தில் கல்லாடனை கைது செய்து, குவாரிக்கும் சீல் வைத்தது எல்லாம் " என்று கூறி முடித்தான்.

அனைத்தையும் கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர் ஆண்கள் மூவரும்.
சாமிக்கண்ணால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒருத்தனின் பதவி ஆசைக்கு அடுத்த குடும்பத்தை இப்படியா அழிப்பார்கள் என்று நினைத்து வருந்தினார்.

கதிர்வேல் "நீலகண்டனை சும்மா விடக்கூடாது மச்சான்" என்று கோவமாக எழுந்தான்.
அவனைத்தடுத்த மணிவண்ணன், 'அவன் இப்பொழுது பல் புடுங்கிய பாம்பு மச்சான்" என்று அவர்கள் இங்கிருந்து சென்றபிறகு நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

"நீங்கள் இங்கிருந்து சென்ற பிறகு, நம் ஊரில் உள்ள பெரியவர்கள் என்னைத்தலைவராக பொறுப்பெடுக்க சொல்லிவிட்டார்கள். நான் என் பள்ளிக்கூட வாத்தியார் வேலையை ரிசைன் செய்து விட்டு ஊரின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். அன்றிலிருந்து இன்று வரை நம்மூருக்கு நான் செய்யும் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் குறுக்காக வந்து நிற்பான் நீலகண்டன். ஒவ்வொரு முறையும் அவனை சமாளித்து நான் அனைத்தையும் செய்தேன். நம் ஊரை மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் உள்ள 18 பட்டிகும் நான் அனைத்து நன்மைகளையுமே செய்தேன். அதில் எல்லா ஊரில் உள்ள தலைவர்களுமே நீலகண்டனை வெறுத்து விட்டார்கள். அவன் பேச்சு இப்பொழுது செல்லா காசாகி விட்டது" என்றார்.

இருந்தாலும் யாருக்குமே நீலகண்டனை அப்படியே விடுவதற்கு மனசு இல்லை அவனது பேராசையால் இழந்தது கதிர்வேலின் வாழ்க்கைத்தானே! அதை ஒவ்வொருவருமே நினைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

சிறிது நேரம் அமைதிக்கு பிறகு, 'நாம் இப்பொழுது மீண்டும் அங்கு செல்ல வேண்டும் மாறா" என்று கதிர்வேல் பேச்சை ஆரம்பித்தார்.

"திரும்பவும் எதற்கு அங்கே போகணும்? நீ எங்கும் போக வேண்டாம் மச்சான்!" என்று பதட்டமானார் மணிவண்ணன்.

"இல்ல மச்சான், ஆரம்பித்த வேலையை முழுவதுமாக முடிக்க வேண்டும், இல்லையா?" என்று கூறி அங்கு நடந்தவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கூறினார் கதிர்வேல். அனைத்தையும் கேட்டு மணிவண்ணன் மரகதம் இருவரும் வேதனையாக கண்ணீர் வடித்தனர்.

"நீங்கள் நன்றாக ஓய்வு எடுங்கள் மாமா, பிறகு பார்க்கலாம்" என்றான் மாறன்.

"இல்லை மாப்பிள்ளை, சூட்டோட சூடா எல்லாத்தையுமே முடிச்சிடலாம். எனக்கு ஒன்றும் களைப்பாக இல்லை. இப்பொழுது கிளம்ப வேண்டும் என்றாலும் கிளம்பலாம்" என்றார்.

மணிவண்ணனும் "நானும் உங்கள் கூடவே வருகிறேன், எல்லா வேலையும் முடித்துவிட்டு ஒன்றாகவே வரலாம்" என்றார்.

"வேண்டாம் மச்சான், நீ எதற்கு அங்கே? நானும் மாப்பிள்ளையும் சென்று எல்லோ வேலையையும் முடித்துவிட்டு வருகிறோம்" என்றான் கதிர்வேல்

மாறனும் "ஆமாம் அப்பா, அங்கு மாமாவிற்கு தான் வேலை. நீங்கள் இங்கு அத்தையையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு "சரி மாமா, மதியம் சாப்பிட்ட பிறகு கிளம்பலாம். அதுவரைக்குமாவது கொஞ்சம் ஓய்வெடுங்களேன்" என்றான்.

கதிர்வேலுக்கும் சற்று நேரம் படுக்க வேண்டும் என்பது போல் இருக்க, சரி என்று மல்லிகா இருந்த அறையை நோக்கி நடந்தவர், "ஆமாம், மகதியை எங்கே ஆளையே காணும் என்று நண்பனை பார்த்தார்.

"அவள் சென்னையில் மருத்துவ படிப்பு படிக்கிறாள் மச்சான்" என்றார் மணிவண்ணன்.

"உண்மையாகவா" என்று வேகமாக வந்து, அவரை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கதிர்வேல்.

- தொடரும்..
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top