My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

வானம்பாடி- 24

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,585

வானம்பாடி- 24


பேராயிரம் உடைய பெம்மான்!
வேழ முகத்தோனின் அம்மான்!
ஏழுமலையில் அவன் வாசம் !
ஏறிவந்தால் கிட்டும் அவன் நேசம்!
பச்சை மாமாலை போல் மேனியன் !
பவள வாய் கமல செங்கண்ணன் !

பாண்டி குடும்பத்தினர், திருப்பதிக்கு வரவேண்டும் என எண்ணிய சில தினங்களுக்குள்ளாகவே, எம்பெருமாளைச் சேவிக்கும், பெரும் பேறு பெற்றனர். அதுவும், திருப்பள்ளி பூஜைக்கு முன்பதிவே, சில வருடங்களுக்குப் பதியப்பட்டுள்ளது, எனத் தகவல்கள் இருக்க, இவர்களுக்கு அந்த அதிஷ்டம் கை கூடியது. ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் கண்டு, மூலவரைத் தரிசிக்க முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் எம்பெருமான் நமக்குப் பேட்டி கொடுக்க, மனம் இசைந்து விட்டால், விஸ்வரூப தரிசனத்தையே காட்டுவான்.

இதோ, தென் தமிழ்நாட்டில் இருக்கும் பாண்டி குடும்ப வாரிசுகளிலும், கொடுப்பினை உள்ளவர்களை மட்டுமே அழைத்து பேட்டி கொடுத்தது. கடல் தாண்டி ஐரோப்பியக் கண்டத்திலிருந்த தினேசையும் , இந்தியா முழுதும் பணி நிமித்தமாய் சுற்றும் தங்க பாண்டியனையும், வைகை கரையில் வாழும் பாண்டிக் குடும்பத்தையும், கிருஷ்ணா நதிக்கரையில் வாழும் ரெட்டி குடும்பத்தையும், இன்னும் ஆயிரமாயிரம் மக்களையும் ஓரிடத்தில் நிற்க வைத்திருப்பது அவன் அருள் அன்றி வேறு ஏது.

நின்ற திருமேனியாய் அவன் திருக்கோலம்!
பணிந்து முழங்குவோம் அவன் திருநாமம்!
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!
மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா!

கோவிந்தா, கோவிந்தா எனப் பாமரர் முதல், படித்தவர் வரை பரந்தாமன் முன் அனைவரும் ஒன்றே என்பது போல், ஒரே போல் கூக்குரலிட்டு, வரிசையில் முன்னேறுகின்றனர்.

இதோ, பஞ்சக்கச்சம், அங்கவஸ்திரம் சகிதமாய் பணி நிறைவுபெற்ற மூத்த ஆட்சி பணியாளர், தான்வியின் தகப்பனார், படிப்பும், பதவியும் தந்த அடையாளம் விட்டு,தன் பிறப்பு எக்குடியிலோ, அதே வைதீக முறைப்படி, தங்கள் குலதெய்வத்தின் பெயர் சொல்லி நாமம் இட்டு, மேனியெங்கும் திருமண் பூசிச் சேவிக்க வந்து விட்டார். இது தான், இப்பிறவியில் அவருக்கு இறைவன் கொடுத்த வரம், தன் சுயம், அவன் குலத்தில் பிறந்ததே என விஷ்ணு சகஸ்ரநாமத்தை உச்சரித்துக் கொண்டே முன் செல்ல, அவரின் மனைவி சுதாவும், இன்று வைதீக முறைப்படி தம் அடையாளத்தில் வந்து விட்டார். அவர்களுக்கு அடுத்து, தான்வி மகனை கை பிடித்து நிற்க, அகவையில் சிறியவளான தன் மகளை, தங்கம் தூக்கிக் கொண்டான். இவர்கள் நெற்றியிலும் இன்று கோவிந்தன் திருநாமம்.

ஊரோடு ஒத்து வாழ்தல் என்பது போல், கோவிந்தனின் திருப்பள்ளி எழுச்சியைக் காண வந்த, தங்கள் குடும்பத்தினருக்கும், பாண்டிக் குடும்பத்து மருமகள் பட்டை நாமம், ஒத்தை நாமம் என அவரவர் விருப்பப்படி போட்டு விட்டாள்.

முதலில் சிறுவர்கள் நால்வருக்கும் தான் போட முனைந்தாள். “ஆத்தா, இந்த மொட்டைத் தலைக்கு நாமம் இருந்தா, அழகர் மலையானாட்டம் இருப்பேன், போட்டு விடு” என மாயதேவன், திருமண் உரைக்குமிடம் வந்து அமர, “மாமாவுக்கு, நாமம் நான் தான் போடுவேன்.” என தங்கபாண்டி ஆரம்பிக்க, பெண்கள் சிவப்பில் ஒரு கோடும், ஆண்கள் முழு நாமமும் போட, சிவபாண்டி மட்டும், “நமக்கு எப்பவும், பட்டை தான் செட்டாகும்.” என் பெயருக்கேற்றார் போல், குறுக்குப் பட்டையைப் போட்டுக் கொண்டார்.

இதோ சிவபாண்டி, ஆச்சரியமாக, பட்டு வேட்டியும், இடுப்பு பட்டை அங்கவஸ்திரம் என கருப்பண்ணசாமி போல் ஆஹிருதியாய் நிற்க சந்திராவும், சிவப்பு பட்டுடுத்தி பயபக்தியோடு கூப்பிய கரத்தோடு வந்தார். ஆண்கள் பட்டுவேட்டியிலும், பெண்கள் ஒரே போல், சிவப்பு பாட்டிலும் வர, “எங்க போனாலும், ஒரே மாதிரிண்டு சொல்லி, அதுக்கு ஒரு செட்டு சீலை எடுப்பீங்க. இல்லியிண்டா சாமி உங்களை பார்க்காதாக்கும்.” எப்போதும், எதுவும் சொல்லாத வீரனே இப்படிச் சொல்லி மாட்டிக்கொண்டார்.

அடுத்து செல்லப்பாண்டியன் ஜோடியும், அதற்கடுத்து செல்லம்மாள், வீரன், அசோதை, சோலை, மாயன் என ஐவரில் மூவர், மலை ஏறி, திருமுடி காணிக்கையும் செய்திருந்தனர்.

வேதம் கற்றவன், ஸ்லோகம் சொன்னால், பாமரன் தன்னையே ஒப்புக் கொடுப்பான். அது போல், “இதோ பெருமாளைத் தரிசிக்க வந்து விட்டேன், என் வம்சம் சுகம் பெரும்.” என்று, நான், எனது எனச் சிந்தையில் வைத்துக் கொண்டே கருவறை நோக்கி முன்னே செல்கின்றனர். ஆனால் அவனின் முன், சுயம் மறந்து தான் நிற்க இயலும் என்பதே நிஜம்.

வாசுதேவன், சரயு குடும்பம் நிற்க, ராஜன், கௌசி, எனப் பெரியவர்களை நடுவில் விட்டு ,துரை பாண்டியன், செல்வி, மருது, சுமி, தினேஷ்பாண்டி எனப் பெரியவர்களுக்கு அவர்கள் தடுமாறும் நேரம் கை கொடுக்க வசதியாக இளையவர்களுமாக நின்றனர்.

திருமலையில் காணுமிடமெல்லாம் பக்தர் கண்களுக்குப் பெருமாள் தெரிவார் என்பார்கள், ஆனால் தினேஷ் பாண்டிக்கு, அவனின் ராஜி தான் கண்ணில் தெரிந்தாள். அதுவும், வாடிய முகமாக, நேற்று மதியம் பார்த்த நிலையிலின்றி, நேற்று முன்தினம், கிருஷ்ண புஷ்காரத்தில், அவன் முதன் முதலில், மிக அருகில் பார்த்த முகமாக, கண்களில் ஆச்சரியத்துக்குப் பதிலாக அலைப்புறுதல் மட்டும் இருந்தது.

ஆனாலும் அழகாகவே இருந்தாள். தங்கள் வீட்டுப் பெண்கள் உடுத்தியது போல் சேலை உடுத்தி இருக்கிறாள், என்னை பின் தொடர்ந்து, இங்கும் வந்து விட்டாளோ என யோசித்துத் திரும்பிப் பார்க்கும் நேரம், பெருமாளைப் போலவே காணாமல் போயிருந்தாள். இவை என்ன மாயக்கண்ணனின் பெண் அவதாரமா, இல்லை என்னோட பிரமையா. தூக்கக் கலக்கம், அதனால் அப்படி தோணுது என தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டான்.

அவனுக்குத் தெரியாத ஒன்று, அவன் குடும்பம் இன்று திருப்பள்ளி எழுச்சி தரிசனம் செய்வதே, அவள் தகப்பனின் ஏற்பாடு தான் என்று. மகளுக்காக, அவளை முதல், முதலாகத் திருமலையில் வைத்து பாண்டிக் குடும்பம் பார்க்கட்டும். அவள் பெற்றவரின் சாம்பமும், அங்கு நிவர்த்தியாகட்டும். பாண்டி குடும்பத்துக்கு மஹாலக்ஷ்மியாய் அவள் போய்ச் சேரட்டும், என மகளையும் அனுப்பி விட்டு, அங்கே, இங்கே ஆளைப் பிடித்து ஏற்பாடு செய்து விட்டார். வெங்கடேஷ் அவன் மனைவியும் தான், சன்னுவை உளமார வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

காடு மலை, கடந்து , அகம் பணிந்து, சிகை முடியைக் காணிக்கையாகத் தந்து, உடல் நோவு எத்தனை இருந்த போதும், அத்தனையும் மறந்து, அந்த ஸ்ரீனிவாசனை, வெங்கடாஜலபதியை தரிசிக்க, நடு சாமம் முதலே காத்திருந்து, இதோ தரிசனத்துக்காக வந்து விட்டனர்.

“கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
(கோசலையின் தவப்புதல்வா ராமா கிழக்கில் விடியல் வருகின்றதே) என விசுவாமித்திரர் அருளிய வேங்கடேச சுப்ரபாதம் மலை எங்கும் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கும் முன்னமே, பெருமாளைத் துதி பாடி துயில் எழுப்புகின்றனர்.

பாண்டி குடும்பமும், மற்றவரைப் போல் பெருமாளை நோக்கிச் செல்லச் செல்ல, சுற்றம் மறந்து, சுயம் மறந்து, ஆட்டுவிக்கிறான் ஆடுகிறேன், என்பது போல், ஜெயன், விஜயன் என இரண்டு துவார பாலகர்கள் வணங்கி நிற்கும் தங்க வாசல் வழியே, செல்கின்றனர்.

தலைக்கு மேல் கரம் கூப்பி, கோவிந்தா, கோவிந்தா எனக் கலியுக தெய்வத்தின் நாமத்தை இடை விடாது தியானித்து, நெடிய பெருமாளின் திவ்ய தரிசனம், பச்சை மாமாலை போல் மேனியன், பட்டை நாமமும், பவள வாய் சிந்தும் முத்துப் புன்னகையும், அருட்பார்வையும், ஆகிருதியான அவன் தோற்றமும், அதை அலங்கரிக்கும் திருவாட்சியும், அதில் மிளிரும் அவன் காந்தியும் அலங்கார பிரியனை ஆரத் தழுவி இருக்கும், சுகந்த மலர்களும், சங்கும், சக்கரமும், அபயமளிக்கும் கரமும், ஆதி, முடி திருக்கோலம், பெருமாளே, இந்த ஜென்மத்தில் உன்னை நான் கண்டு விட்டேன். இதை விட என்ன பேறு எனக்கு வேண்டும். அகம் தொலைத்து, அத்தனையும் உன்னிடம் அர்ப்பணம். இந்த அற்பனின் சிரம் தாழ்ந்த வணக்கத்தை ஏற்றுக்கொள், என பாண்டி குடும்பம் கண் சிமிட்டாது கோவிந்தனைச் சேவித்து நின்றனர்.

பார்த்த கண்கள் பார்த்த படி இருக்கும், படியளக்கும் பெருமாள் அவனை என் புறக்கண்கள் வழியே அகக்கண்ணில் நிறைத்துக் கொள்கிறேன். அநாத ரட்சகா, ஆபத் பாந்தவா, வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா. ஏழுமலையானே, மலையப்பா நின் தாழ் சரண்.

சிலமணித் துளிகள், அவன் தரிசனத்துக்கு வரும் முன், இதைக் கேட்க வேண்டும், அதைக் கேட்க வேண்டும் என மனதில் குறிப்பெடுத்த விஷயங்கள் அத்தனையும் மோஹன புன்னகையோடு நின்ற மது சூதனை கண்ட நொடி மறந்து போக, கண்ணீர் பெருக்கெடுக்க, தொண்டை அடைத்து, உள்ளிருந்து உருண்டு வரும் பரவசம். அற்ப மனித வாழ்வில், உச்சம் தொடும் ஒரு நொடி, பக்தி எனும் பேரின்பத்தில் திளைத்து, பரந்தாமன் பாதம் பற்றுவது. அவரவர் தெளிவிற்கு, புரிதலுக்கு ஏற்ப, அனைவரையும் ஆட்கொண்டிருந்தான் கோவிந்தன். “ஜருகண்டி, ஜருகண்டி!“ கோவிந்தாவுக்கு பிறகு திருமலையில் தமிழர்களுக்குப் பரிச்சயம் ஆகும் வார்த்தை, பரந்தாமனைச் சேவித்து, பாண்டிக் குடும்பம் தங்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்து சேர்ந்தனர்.

பாண்டி குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கை நீட்டி, கால் நீட்டி அக்கடாவென விழுந்து கிடக்க, சிறியவர்களுக்கும் அலுப்பு தான். ஆனால் பெருமாளைச் சேவித்ததில் மனம் நிறைந்திருந்தனர். ஆண்களுக்கு டார்மென்டிரி போல் ஒரு அறையை அதிலேயே எல்லோரும் அமர்ந்திருக்க, பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தன.

"இந்த ஜென்மத்துக்கு இது போதுமப்பா, இனி நாலு மணிக்குக் கண் முழிச்சு, வீட்டு வாசலை திறந்தாலும், பெருமாள் தான் தெரிவார் போல. அப்படிக் கண்ணும் மனசும் நிறைஞ்சு போச்சு. கட்டை கைலாசம் போயிடும்.” என செல்லம்மாள், மொட்டைத் தலையும், அதில் சந்தனம் தடவி, நெற்றியில் நாமம், (தான்வியின் கைங்கரியம்.) எனத் தரை விரிப்பில் அமர்ந்து பெருமாள் தரிசன அனுபத்தை சொல்லிக் கொண்டிருக்க,

ரகோத்தமன், “அதென்ன, பெருமாளை சேவிச்சுட்டு, கட்டை கைலாசம் போகும்னு சொல்றேள். வைகுண்டம்ல போகணும்.” எனக் கேட்டார்.

“ஐயா கொழுந்தனாரே, எங்க எல்லாருக்கும் உங்க மகள் நாமத்தைப் போட்டு விட்டாலும், வேஷம் தான் மாறுமே ஒழிய, குணம் மாறாதுங்க. அது கைலாசத்தைத் தான் தேடும்.” என்றார் செல்லம்மாள்.

“தான்வி, சந்தடி சாக்கில் நீ எல்லாருக்கும் நாமம் போட்டேனு அத்தை சொல்றாங்க.” என மருது கோர்த்து விட, மற்றவர் சிரித்தனர். “அம்மா, அப்படியா சொன்னேள்?” என தான்வி செல்லம்மாளை பொய்யாய் கோவிக்க,

“அப்படியா சொல்லுவேன். நீ பாண்டி குடும்பத்துக்கு வந்த மகாலெட்சுமில.” என நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க, “பெரியம்மா, அப்ப நாங்க?” என மலரும், சுமித்ராவும் போட்டிக்கு வர, “எல்லாரும் தான். எத்தனை லட்சுமி இருக்கு. ஆளுக்கு ஒரு பேரை சொல்லிட்டு போறேன். என் மகள் இல்லாத குறையை நீங்கத் தானே தீர்த்து வைக்கிறீங்க.” என வாஞ்சையாகவே பேசினார். "அத்தை, அப்போ என்ன என்னை சொல்லுவீங்க?" என சரயு வரவும். "நீ எங்க வூட்டு மகராசி. எம்புட்டு ராங்கியா திரிஞ்சுக்கிட்டு இருந்த, என் கொளுந்தனையே, உன் பாசத்தால் கட்டிப் போட்டுட்டியே." என தங்கை கணவரை சொல்லி சரயுவை புகழவும், "அது உங்க எல்லாரையும் பார்த்து கத்துக்கிட்டது தான்." என வெள்ளந்தியான அந்த மனிதர்களை புகழ்ந்தாள்.

"அப்படியும் சொல்லிட முடியாது. இழந்ததை இழந்தா, இருக்கவுகலையாவது பிடிச்சு வச்சுக்கனுமுண்டு தோணும். நீயும் பெத்தவுகளை இழந்தவ, சோலையையும், கொளுந்தனையும், அப்பா அம்மாவா ஏத்துக்கிட்ட. நான் மகளை இழந்தவ, வயசு பிள்ளைகளை பார்க்கும் போதெல்லாம், அவள் நினைப்பு வந்துரும்." என கண்ணை துடைக்க, "மதினி, இந்த மருமக்க மாறு பூரா, உங்க மகதான். கவலை படாதீங்க." என கௌசி தேற்றினார்.

“அப்ப, பூவு மகளாட்டம் உங்களை பார்த்துகிறதில்லை, அதுக்கு தான் இம்புட்டு அழுகை, அப்படி தானே மதினி.” என மாயத்தேவன், செல்லம்மாள் மூடை மாற்ற வம்பிழுத்து விட, “அவள் என்னைக்கு எனக்கு மகளாட்டமா நடந்துக்கிட்டா. மாமியாளாட்டம் , ஒரே அதிகாரம் தான். வீரனையே கேளுங்க." என செல்லம்மாள் நொடிக்க , “இருந்தாலும், எல்லாரையும் வச்சுகிட்டு சொல்றதுக்கு உனக்கு தகிரியம் தான்கா.” என சோலையம்மா வியந்தார்.

அசோதை அங்கிருந்து குரலை செருமவும், “நீ இங்கிட்டு தான் இருக்கிறேண்டு எனக்கும் தெரியும். நான் என்ன இல்லாததையா சொல்றேன். எனக்கு என் ஆத்தா, ஒரு மாமியாருண்டா, இவ ஒரு மாமியா!” எனவும், வீரன் சிரித்துக் கொள்ள, “என்ன மச்சான் சிரிக்கிறீர். எப்படியாப் பட்ட மகளை கொடுத்திருக்கேன், எப்படிச் சொல்ல போச்சுண்டு சண்டை கட்டும்.“ என மாயன் தூண்டி விட, “ஆரம்பிச்சுட்டியில்ல உன் வேலையை.” என்றார் சிவபாண்டி.

“என்னை சொல்றது இருக்கட்டும், அப்பா மார், நாலு பேர் இருக்கிங்கல்ல, மதினி, பஞ்சாயத்துக்குப் பதிலை சொல்லுங்க.” என்ற போதும், இன்று அம்மாக்கள் வாயைத் திறக்கவில்லை, ஆனால் வீரன், “அக்கா, தன் மருமகளைப் பத்தி பஞ்சாயத்து எங்க வச்ச, பாராட்டு பத்திரமில்ல வாசிச்சிச்சு.” எனவும், “என் மச்சான், பெருமாளுக்கு முடியைத் தானே குடுத்தீரூ. உள்ளே இருக்கிறதையும் சேர்த்தா?” என வக்கணை பேச,

“எங்களுக்கும், அதே சந்தேகம் தான் மாயா.” என் ராஜன் சொல்லவும், “என்னைய சொல்றீங்களா, உம்ம தங்கச்சிய கட்டுனப்பவே, உள்ள இருக்கிறதை தானம் கொடுத்துட்டேன்.” எனவும், இளைய பாண்டிகள் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

சிவபாண்டி, “அறிவிருந்தா தான்யா கொடுத்திருப்ப, அந்த கிருத்துருவம், அங்க தான் இருக்கு. எங்க தங்கச்சிங்கிறதாலே சாமளிக்கிது.” என்ற சிவபாண்டி, “செல்லம்மாள், எங்க அம்மாளையும், பூவையும் ஒரே தட்டில் வச்சு பேச்சுச்சில்ல, அதைத் தான் பாராட்டு பத்திரமுண்டு சொல்றோம். எங்க அம்மா, நல்ல மாமியா மட்டும் இல்லை, நல்ல மாமியார்களை உருவாக்கின ஆளும் கூட.” என ஒரு தூக்குத் தூக்கி வைக்க, பாண்டி குடும்பத்து மருமகள்கள், வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர்.

மானூத்திலிருந்து போன் வந்தது. “அக்கா, இந்தா புடி உன்ன மாமியாருங்க.” என வீரபாண்டி போனை கொடுக்க, பேச்சியும், பூவும் சாமி கும்பிட்டதை பற்றிக் கேட்டு விட்டு. “இந்தா, இனிமே எதுவும் வேண்டமாட்டேண்டு , வேண்டிக்கிட்டு வா. இங்கிருந்து போகும் போதே, இப்படி வேண்டுதல் இருக்குண்டு சொன்னீயா?“ என பூவு சண்டைக்கு வர, “அடியே செல்லம்மா, இனிமே, வேண்டிகிட்டியிண்டாலும், என் மருமகளைக் கழுதை மேல ஏத்துறேன், காவடி எடுக்க வைக்கிறேண்டு வேண்டிக்கடி.“ எனப் பேச்சி சொல்லிக் கொடுக்க, “ஏன் ஆத்தா, உன் மருமகளை சொல்லி நான் ஏன் வேண்டிக்கணும்." என செல்லம்மாள் பதில் கேள்வி தொடுக்க, "அடியே, உனக்கு என்ன சொல்லிக் கொடுத்தேன், பூவு செய்வாண்டு வேண்டிக்க." எனவும், "நீ அப்படித் தான் வேண்டிகிட்டியாக்கும்?” என்றார் . "உங்க அம்மா, அப்படித் தான் வேண்டிகுவாக." என மருமகள்கள் சாட்சி சொன்னார்கள்.

“உன் சம்மந்தி, அவ எங்கடி. சொன்ன மாதிரியே என் மகனுக்கு மொட்டை அடிச்சிட்டாளா?” என் பேச்சி அசோதையை வம்பிழுக்க, “என்னைய கேட்டுகிட்டு தான், இவுக மகன் மொட்டையடிச்சாரோ?” என அசோதை தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார்.
சத்தம் இல்லாமல் இருந்த ஆட்கள் எல்லாம் நித்திரையில் இருக்க, தான்வியும், தங்கமும் இரண்டு அறை தாண்டி இருந்த வெங்கடேஷின் அறைக்குச் செல்ல, அங்கே வெங்கி மட்டும் தூங்கிக் கொண்டிருக்க, சன்னு, கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருக்க, வெங்கியின் மனைவி, “உன் அண்ணையாவுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பார், நல்லா தூங்குறார்.” எனத் திட்டிக் கொண்டிருந்தாள்.
“தூங்கட்டும், விடுங்க ஒதினா. அவுங்களுக்கு ரெஸ்ட் கிடைக்கிறதே அபூர்வம், பண்ணை வீட்டில் ரிலாக்ஸ் பண்ணிட்டு இருந்திருப்பிங்க. என்னால தான் அலைச்சல்.” என வருத்தப்பட,
“உன்னால அலைச்சல் இல்லை, பெருமாளைத் தரிசிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. உன் அண்ணையா, பசங்க இரண்டுக்கும் முடி எடுக்க கூட்டிட்டு வந்தது தான். உன் புண்ணியத்தில் பார்த்துட்டேன். அது சரி, அவுங்க வீட்டு ஆளுங்களை பார்த்தியா?” என விசாரிக்க, “நிறையப் பேர் இருக்காங்க. எனக்குப் பயமா இருக்கு ஒதினா. அண்ணாகிட்ட சொல்லி, சென்னையில் ஒரு கம்பெனியில் சேர்த்து விடுங்க.” என அவள் கேட்டுக் கொண்டிருக்க, ஆபீசர் ஜோடிகள் உள்ளே நுழைந்தனர்.

 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top