My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மனதில் மலர்ந்த மல்லிகை - 24

IVNP20

Member
Joined
Mar 22, 2025
Messages
32

அத்தியாயம் 24


மாறனை அங்கு கண்டதும் கதிர்வேலுக்கு என்ன மாதிரியான உணர்வு என்று தெரியாமல், அவனுள் இன்பமும் துன்பமும் கவலையும் அனைத்து உணர்வுகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

அவன் கண்களில் கண்ணீர் தோன்றி அவன் உருவத்தை மறைக்க, கண்களை வேகமாக சிமிட்டி, அவன் உருவம் மறையாமல் பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.

புன்னகையுடனே வேகமாக வந்த மாறன், அவரை இறுக்கமாக அணைத்து கொண்டு, "எப்படி இருக்கீங்க மாமா?" என்றான், மாமனின் முறுக்கேறிய உடலில் அவர் திடமாக தான் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டே.

மருமகன் அணைத்ததில் சுய உணர்விற்கு வந்த கதிர்வேலும், அவனை இறுக்கமாக அணைத்து "பார்த்தால் எப்படி தெரியுது மாப்பிள்ளை? பலவீனமா இருக்கேனா?" என்றான் தனது பிடியை இறுக்கிக் கொண்டே.

"மாமா, என் எலும்பை முறித்து விடாதீர்கள். நீங்கள் பலசாலி தான் நான் ஒத்துக் கொள்கிறேன்" என்று கூறி அவரை தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றான்.

மாறனின் செயலை கண்டு அதிர்ந்து நின்றான் மோகன். "என்னடா நடக்குது இங்க? இவரை உனக்கு தெரியுமா? உன் நடவடிக்கையை பார்த்தால் இவர் இங்கு இருப்பது உனக்கு முன்பே தெரியும் போல இருக்கே!" என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் கேட்டான் மோகன்.

அவன் கேட்டதும் அவனை இறுக்கமாக அணைத்து விடுத்த மாறன். "எனக்கு முன்பே தெரியும் மோகன். உண்மையில் நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். இவர் என் மாமா! இவர் எங்கிருக்கிறார்? என்று இத்தனை வருடங்களாக நாங்கள் தேடிக்கொண்டு இருந்தோம். ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை. ஆனால் இவர் இங்கு இருப்பதை நான் உன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்" என்றான்.

"என் மூலமா? நான் எப்பொழுது உனக்கு சொன்னேன்? நான் இவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லையே! சொல்லப்போனால் நான் இங்கு அதிகம் வருவதே கிடையாது" என்றான் குழப்பமாக.

"ஆமாம், உனக்கு இவரை தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதுபோல நீ அவரைப் பற்றி எனக்கு சொல்லவும் இல்லை" என்றான் புன்னகையுடன்.

அதில் மேலும் குழம்பியவன் "அப்படி என்றால் என் முலம் தான் இவரை கண்டுபிடித்தேன் என்று சொன்னாயே?" என்றான்.

ஆமாம் என்று தலையாட்டிய மாறன், மோகனின் சட்டைப் பையில் இருந்த போனை எடுத்தான். அதிலிருந்த புகைப்படத்தை எடுத்து காண்பித்து, "இதை வைத்து தான், என் மாமா இங்கு இருப்பதை கண்டுபிடித்தேன்" என்றான்.
குழப்பமாக அந்த புகைப்படத்தை பார்த்தான் மோகன். அதில் சென்ற முறை ஊருக்கு வந்த பொழுது அவனை வலுக்கட்டாயமாக குவாரிக்கு அழைத்து வந்தான் கல்லாடன்.

அவன் தயாளனுடன் வேலையை பற்றி பேசிக் கொண்டிருக்க நேரம் போகாத மோகன் தன் போனை எடுத்து குவாரியை புகைப்படம் எடுத்தான். அப்பொழுது அங்கு கதிர்வேலும் இரண்டு இளைஞர்களும் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அது அவனையும் அறியாமல் எடுக்கப்பட்ட புகைப்படம். கல்லாடன் இங்கு வேலை செய்பவர்களுடன் மோகனை என்றுமே பேச விட்டது கிடையாது, அங்குள்ளவர்கள் பற்றி வெளியே செய்தி போகாமல் பார்த்துக் கொள்வதற்காக.

இருந்தும் புகைப்படத்தில் கதிர்வேல் தெளிவாக இருப்பது கூர்ந்து பார்த்த மோகன், மாறனை பார்க்க, மீண்டும் அவனை இறுக்கமாக அணைத்து "உன்னால் தான் என் மாமாவை இன்று நான் கண்டுபிடிக்க முடிந்தது மோகன். ரொம்ப ரொம்ப நன்றி" என்று உணர்வுபூர்வமாக கூறினான்.

அதன் பிறகு தான் மோகன் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான். இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு மாறன் மோகனிடம் இன்னும் அதிகமாக நெருங்கி பழகினான். அவனுடைய கேள்வி எப்பொழுதும் இந்த குவாரியை சுற்றியே இருந்ததையும் இப்பொழுது யோசித்து பார்த்தான். எது எப்படியோ அவனது மாமா கிடைத்து விட்டார்கள் என்று மகிழ்ந்து "இதில் எனக்கு எதற்குடா தேங்க்ஸ். உண்மையில் நான்தான் உனக்கு நன்றி சொல்லணும். உன் மூலமாகவது இவர்கள் எல்லோருக்கும் ஒரு நல்ல காலம் வந்ததே' என்றான் புன்னகையாக.

அதன் பிறகு வந்திருந்த காவல்துறையினர், அங்கு உள்ளவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அவர்கள் ஊர் எது? எப்படி கல்லாடனிடம் வந்தார்கள்? எவ்வளவு கடன் வாங்கினார்கள்? யாரிடம் வாங்கினார்கள்? எத்தனை வருடமாக இங்கு இருக்கிறார்கள்? என்று தனித்தனியாக எல்லோரிடமும் கேள்வி கேட்டு குறித்துக் கொண்டார்கள்.

மாறன் கதிர்வேலிடம் "அத்தையை பார்க்க போகலாமா மாமா? என்றான்
அதற்குள் காவல்துறையினர் வந்து இருந்த செய்தி குடிசைப்பகுதியில் பரவ என்ன? என்று பயந்தபடி ஒவ்வொருவரும் காத்துக் கொண்டு இருந்தார்கள்.

காவல் துறையினருடன் குடிசை பகுதியை நோக்கி வந்த ஆண்களை குழப்பமாக பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள், அவரவர் கணவன் முகத்தில் தெரிந்த நிம்மதியில் அவர்கள் முகமும் நிம்மதி அடைந்தது, நல்ல வேலையாக இவர்களை காவல்துறையினர் அடிக்கவில்லை என்று.

வேகமாக வந்த மகனை என்ன என்பதாக பார்த்தார் சாமிக்கண்ணு. அவனது முகத்தில் இருந்த பிரகாசத்தை கண்டு, போலீஸ் வந்து இருக்கிறார்கள்? ஆனால் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கிற? என்ன விஷயம்? என்று மகனின் முகத்திலிருந்து பார்வையை அகற்றாமலேயே கேட்டார்.

இத்தனை வருடங்களில் கதிர்வேலின் முகம் இவ்வளவு மலர்ந்து அவர் பார்த்ததே இல்லை. கதிர்வேல் சற்று நகன்று தன் பின்னால் நின்றவனை திரும்பி பார்த்தான்.

அங்கு மணிவண்ணன் சாயலிலேயே நின்ற மாறனை கண்டு அவருக்கு பேச்சு வரவே இல்லை. "மாறா" என்ற வார்த்தையை தவிர அவருக்கு வேறு எந்த வார்த்தையும் வராமல் நடுங்கும் கைவிரலால் அவன் முகத்தை உடலையும் தொட்டுத்தொட்டு பார்த்தார் சாமிக்கண்ணு.

தாத்தாவின் நடுங்கும் உடலை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் மாறன். "நான் வந்து விட்டேன் தாத்தா, கவலைப்படாதீர்கள்" என்று அவரை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

வித்தியாசமான குரல் கேட்டு மெதுவாக வெளியே வந்த மணிமேகலை, அங்கு நின்று இருந்த தன் மருமகனைக் கண்டு அப்படியே சிலை போல நின்று விட்டாள். அவரைப் பார்த்ததும் "அத்தை" என்று சாமிக்கண்ணின் கைக்குள்ளேயே இருந்து குரல் கொடுக்க,
"அண்ணா" என்று கத்தியபடி அப்படியே மயங்கி சரிந்தாள் மணிமேகலை. அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிர்வேல், மனைவி தரையில் விழுவதற்குள் வேகமாக ஓடிச் சென்று அவளை தாங்க, மறுபுறம் தாங்கினான் மாறன்.

தாயின் குரல் கேட்டு மெதுவாக வீட்டிற்குள்ளே இருந்து மகிழன் வர, திரைச்சீலையை விலக்கி எட்டிப் பார்த்தாள் மல்லிகா.
தாயைத் தாங்கியபடி அந்நிய ஆடவன் ஒருவன் இருக்க, உடனே திரைச்சீலையை மூடிவிட்டு அப்படியே மறைந்துவிட்டாள்.

மகிழனோ "அம்மா அம்மா" என்று அவளின் மடியில் அமர்ந்து அவள் கன்னத்தை பிடித்து அழ ஆரம்பித்தான். கதிர்வேல் "அம்மாவிற்கு ஒன்றுமில்லை கண்ணா" என்று மகனை சமாதானம் செய்தான்.

மாறனுக்கு மகிழன் தன் அத்தையின் மகன் என்று புரிவதற்கு சற்று நேரம் ஆகியது. அதற்குள் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிவிக்க முயன்று கொண்டிருந்தார் சாமிக்கண்ணு. சில்லென்ற தண்ணீர் முகத்தில் பட்டதும், மெதுவாக கண்களைத் திறந்த மணிமேகலை, வேகமாக மாறனை அணைத்துக் கொண்டு அழுதார்.

சற்று நேரத்தில் சட்டென்று அவனிடமிருந்து விலகி, 'நீ எப்படி இங்கே வந்தாய்? நீயும் வந்து இங்கு மாட்டிக் கொண்டாயா?" என்று பதட்டமாக சுற்றும் முற்றும் பார்த்தார் மணிமேகலை.

அவரின் பதட்டத்தைக் கண்ட மாறன் "அத்தை, ஒன்றும் இல்லை. நான் இங்கு வந்து மாட்டிக் கொள்ளவில்லை. உங்களைப் கண்டுபிடித்து தான் வந்திருக்கிறேன்" என்றான்.

"உண்மையாவா மாறா? வந்து விட்டாயா? எங்களை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுவே தானே?" என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

அத்தையின் அழுகையை அவனால் நிறுத்த முடியவில்லை. அவர் அழுவதைக் கண்டு மகிழனும் அழ, இப்பொழுது அத்தையை விட்டுவிட்டு மகிழனை தூக்கிக் கொண்டான் மாறன்.

அவன் தூக்கியதும் இதுவரை பார்க்காத ஒரு நபர் என்றதும் சற்று மிரண்டு, தன் தந்தையிடம் போவதற்கு கை காலை உதைத்தான்.

"மகிழன், இது உன் அத்தான் மாறன்!" என்று மருமகனை அவனுக்கு அறிமுகப்படுத்தனார் கதிர்வேல்.

"மாறன்" என்ற பெயர் கேட்டதும் அவனை ஆழ்ந்து பார்த்தான் மகிழன். தினமும் தன் தாயின் வாயிலாக கேட்ட பெயர் அல்லவா? அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

"டேய் குட்டி மச்சான், நான் உன் அத்தான் டா. நாம் நம்ம ஊருக்கு போகலாமா?" என்று புன்னகையுடன் கேட்டான் மாறன்.

- தொடரும்..
 
Back
Top