My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 23....

IVNP18

Member
Joined
Mar 21, 2025
Messages
58
பாடலிபுத்திரத்தின் தன் தந்தையான துணை தளபதி வீரசிம்மரின் வீட்டில் அமர்ந்திருந்தான் மயூரன். அவன் தந்தையிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டான். "போர் என்றால் உயிர்கள் போகத்தான் செய்யும்" என்று ஹரன் இறந்ததை அல்ல அல்ல கொலை செய்யப்பட்டதை இலகுவாக எழுத்துக் கொண்டார் வீரசிம்மர். அன்று மிக மிக முக்கியமான ரகசியக் கூட்டம் என்பதால் மாளிகை இருளில் மூழ்கி இருந்தது. மநு, கண்வா மற்றும் பாவனன் இவர்களோடு மயூரன் மட்டுமே இருந்தான். மநு மற்றும் வசுதேவ கண்வா என்ன செய்ய நினைத்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது என்றாலும் அவர்களே சொல்லட்டும் என்று காத்திருந்தான் பாவனன். மயூரனை பெரிய மனிதனாக ஆக்கி தங்களுக்கு சமமாக அமர வைத்ததை பாவனனின் உள்ளம் சற்றே எரிச்சல் பட்டது. ஆனால் பெரிய இடத்துப் பிள்ளை. அதோடு கூடப் பிறந்த தம்பியையை கொள்கைக்காக தியாகம் செய்திருக்கிறான் என்று எண்ணி சமாதானப்படுத்திக் கொண்டான்.

அதே பாடலிபுத்திரத்தில் துணைத் தளபதி வீரசிம்மரின் வீட்டில் ஒரு வேலைக்காரியைப் போல முக்காடு அணிந்து இருளில் பதுங்கி நின்றிருந்தாள் கோமதி. அவளுக்கு மயூரன் தன் தந்தையை சந்தித்த விவரமும், ஹரனைக் காணவில்லை என்ற விவரமும் மாரிச்சாமியின் மூலமாகக் கோமதிக்கும் மாலாவுக்கும் தெரிய வந்தது. ஹரனின் தாய்க்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து கோமதி உளவு பார்ப்பதற்காகக் கிளம்பி விட்டாள். ஒல்லியான உடல், அதோடு நிறைய திறமை என்பதால் அவளால் எளிதாக மறைந்து கொண்டு உளவு பார்க்க முடிந்தது.

அன்றும் அவர்கள் பேசும் அறைக்கு வெளியே சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்த தாழ்வாரத்தில் பெரிய ஓவியத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தாள் கோமதி. அவர்கள் மெல்லிய குரலில் பேசினாலும் அவளால் கேட்க முடிந்தது. மயூரன் இந்த அமைப்பினரின் ரகசியங்களைத் தெரிந்து கொள்வதற்காக நடிக்கிறானா? இல்லை உண்மையிலேயே அவன் மனம் மாறி விட்டானா? என்பதை கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவளது நோக்கம்.

"என் மகன் மயூரன் நமது கொள்கைகளைப் புரிந்து கொண்டு நம் பக்கம் சேர்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார் வீரசிம்மர்.

"உன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள நாம் இங்கு கூடவில்லை வீரா! காலம் வேகமாக கடக்கிறது. புத்தருக்கும் அவரது போதனைகளுக்கும் மன்னர் அளவு கடந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். மன்னர் எவ்வழி அவ்வழி மக்கள் என்று சொல்வதற்கு ஏற்றவாறு மக்களும் அப்படியே நடக்கின்றனர்." என்றார் கண்வா.

"ஆம் அமைச்சரே! முந்தைய நாள் யாரோ ஒருவன் வீட்டில் யாகம் செய்வதற்காக ஆட்டுக்குட்டியையும், மாட்டையும் எடுத்துச் சென்றிருக்கிறான். அதைப் பார்த்த ஒருவன், ஏன் உங்களுக்கு இன்னமும் ஆட்டையும் மாட்டையும் கொன்று தின்றது போதவில்லையா? பாலுக்காகவாவது கொஞ்சம் பசுவை விட்டு வையுங்கள்! என்று கிண்டல் செய்திருக்கிறான்." என்றான் பாவனன்.

யோசனையில் ஆழ்ந்திருந்தார் மநு. அவரை நோக்கினார் கண்வா.

"நாம் பல மாற்றங்களை இந்த சமூகத்தில் கொண்டு வர வேண்டியிருக்கும் கண்வா! முதலில் புத்த சங்கத்தை சேர்ந்தவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் யாகம் செய்யாதே, அதில் விலங்குகளை பலி கொடுக்காதே என்று தானே சொல்கிறார்கள்? புலால் உண்ணக் கூடாது என்று சொல்லவில்லையே? அதை நாம் பயன் படுத்திக் கொள்வோம். இனி நமது அமைப்பினர் செய்யும் யாகங்களில் எந்த விலங்கும் பலியிடப்படக் கூடாது. முக்கியமாக பசு. அது இனி நமது தெய்வீக மிருகம். பசு வதை செய்தல் பஞ்சமா பாதங்களில் ஒன்று என்று சட்டம் போட்டு விடுவோம். அதோடு முடிந்தவர்கள் புலால் உணவை அறவே மறுத்து வெறும் காய்கறி, பழம் இவற்றை உண்ண வேண்டும். மது வர்க்கங்களை சுத்தமாகக் கை விட வேண்டும். அப்படிச் செய்தால் தான் புத்த சங்கத்தவரை விட நாம் உயர்ந்தவர்கள் என்று மக்கள் நம்புவார்கள்" என்றார் மநு.

அந்த இடமே அமைதியானது என்பதை விட அதிர்ச்சியானது என்பது தான் உண்மை. கேட்டுக் கொண்டிருந்த கோமதிக்கு மூச்சு முட்டுவது போல ஆகி விட்டது. ஆக....இவை எல்லாமே புத்த சங்கத்தை நம் நாட்டில் பரவ விடக் கூடாது என்று செய்யப்படுபவையா? ஏன்? புத்த பகவான் இவர்களுக்கு அப்படி என்ன செய்தார்? மக்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும் நல்ல சிந்தனைகளையும் தானே போதிக்கிறார்? என்று எண்ணிக் கொண்டு மேலும் கவனித்தாள்.

"குருதேவா! என்ன சொல்கிறீர்கள்? இறைச்சி உண்ணாமல் இருப்பதா? உங்களாலேயே அது முடியாதே?" என்றார் கண்வா அதிர்ச்சியாக.

மநு மௌனமாக அமர்ந்திருந்தார். வறுத்த மாட்டிறைச்சியோடு தேன், மிளகு எலுமிச்சம் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை உணவைச் சேர்த்து சுவைக்கும் சத்தம் கேட்டது.

"இத்தனை சுவையையும் நாம் தியாகம் செய்ய வேண்டுமா? என்ன இது குருதேவா?" என்றார் வீரசிம்மர்.

"சில வெற்றிகளை அடைய வேண்டுமானால் நாம் சில விஷயங்களை தியாகம் செய்தே ஆக வேண்டும் வீரசிம்மா. முழுவதுமாக இறைச்சியை விடச் சொல்லவில்லையே? மாட்டிறைச்சியை மட்டும் விட்டு விடுவோம். முடிந்தவர்கள் மட்டும் முழுவதுமாக தாவர உணவு உண்ணட்டும். இவையெல்லாம் பிறகு. முதலில் நமது அதிகாரம் நிலை நிறுத்தப்பட வேண்டும். அதன் பிறகு நான் மக்களை எப்படி ஆள வேண்டும் என்று சட்டம் வகுத்துக் கொடுக்கிறேன்." என்றார் மநு.

மீண்டும் மௌனம் சூழ்ந்தது கோமதிக்கு. ஓவியத்தில் இருந்த சிலந்தி ஒன்று கோமதியின் கழுத்தில் ஏற கத்துவதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். கைகளால் அதனை எடுத்து தூர அறிந்தாள் என்றாலும் குமட்டியது அவளுக்கு. ஆனால் எடுத்த வேலையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு நின்றிருந்தாள்.

"நாம் மாட்டிறைச்சி உண்பதை விட்டு விட்டால் மக்கள் நம் பக்கம் வந்து விடுவார்களா?" என்றான் மயூரன்.

"அதனால் மட்டும் வர மாட்டார்கள் இளைஞனே! நாம் ஆணையிட்டால் மக்கள் கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு அவர்களை ஆளாக்க வேண்டும். அதோடு நாம் அவர்களை அடக்கி ஆள்கிறோம் என்பதும் மக்களுக்கு தெரியக் கூடாது. அதற்காகத்தான் புத்தர் தன் போதனைகளை ஆரம்பித்த உடனே குருதேவரும் தன் வேலையைத் தொடங்கி விட்டார்." என்றார் கண்வா.

இது என்ன புதுக்கதை என்று உன்னிப்பாகக் கேட்டாள் கோமதி. வசுதேவ கண்வா கூறியதன் சாராம்சம் இது தான், பல ஆண்டுகளுக்கு முன்பாக புத்தர் முதல் முதலில் போதனையை ஆரம்பித்த போது மநு அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ முனிவர்கள், அறிஞர்கள் வருவார்கள் போவார்கள், அவர்களைப் போல இவரும் ஒருவர் என்று தான் எண்ணினார். ஆனால் அவரது போதனைகளைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். மன்னரது அரசவையில் இருந்த ஆடல் மகளிரான வைஷாலி நகரத்தைச் சேர்ந்த ஆம்ரபாலி, விமலா போன்றவர்களும் புத்தரது பிரசங்கத்தைக் கேட்கச் செல்கிறார்கள் என்ற விவரம் தெரிய வந்தது. ஆடல் மகளிர் இப்படிப்பட்ட ஞானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபடுதல் நல்லதல்ல என்று நினைத்தார் மநு. அதற்கு சிகரம் வைத்தாற் போல புத்தரையும் அவரது சீடர்களையும் தன் வீட்டுக்கு விருந்திற்கு அழைத்திருக்கிறாள் ஆம்ரபாலி. மநு தூண்டி விட்டு அதே நாளில் புத்தரையும் அவரது சீடர்களையும் இன்னொரு அரசன் விருந்துக்கு அழைத்திருக்கிறான். ஆனால் அந்த அழைப்பை மறுத்து விட்டு வைஷாலியைச் சேர்ந்த ஆம்ரபாலி மற்றும் விமலாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் புத்த பகவானும் அவரது சீடர்களும். இந்த ஒரு நிகழ்ச்சி மநுவின் மனதில் வெறுப்பையும் வஞ்சத்தையும் உண்டாக்கியது. ஆடல் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களையும் ஞானத்தைத் தேடும் படி செய்வது சமூகத்திற்கு நல்லதல்ல என்ற அவரது கருத்து உறுதிப்பட்டது.

அது போதாதென்று பாரத்ததின் பல நகரங்களில் இருந்து கௌதமி, உப்பாலவர்ணா, கேமா போன்ற குடும்பப் பெண்களும் தங்களது கல்வியறிவால் வாதத்தில் ஜெயித்து வந்தனர். அவர்களை புத்த பகவான் அங்கீகரித்து அவர்களும் சன்னியாசி ஆகலாம், அல்லது தனிப் பெண்ணாக இருந்து கொண்டே எழுத்து மூலமாகவும், செயல் மூலமாகவும் ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்யலாம் என்று அவர்களை ஏற்றுக் கொண்டார். இப்படியே போனால் அறிவும் திறமையும் உள்ள பெண்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்களும், விதவைகளும் கூட புத்த சங்கத்தில் சேர்ந்து விடுவார்கள்.ஆண்களின் அதிகாரம் எடுபடாத நிலை ஏற்படும். தாய்வழி சமூகம் என்று இப்போதே பலரும் தாயை மட்டுமே சொல்லி வருகின்றனர். அது நல்லதல்ல. பெண் என்பவள் வம்சத்தை வளர்க்க கடவுளால் படைக்கப்பட்டவள். அவளுக்கு என்று பாரம்பரியமோ, வம்சமோ குலமோ எப்படி இருக்க முடியும்? ஆண் விதைத்ததை சுமக்கும் அவள் வெறும் நிலம் தான். அதில் விளையும் குழந்தைகள் ஆணுக்கு தான் சொந்தம். பெண் குழந்தைகள் வீட்டுக்கு உரியவர்கள் அல்ல. பெற்றோர் வீடு அவளது வீடு கிடையாது. திருமணமாகி கணவன் வீடே அவள் வீடு. ஒரு சமூகம் இந்த சட்டத்திட்டத்தைக் கடைப்பிடித்தால் தான் நல்ல சந்ததிகள் உருவாவார்கள். பெண்களுக்கு உரிமையும் சுதந்திரமும் கொடுத்தால் நாளடைவில் ஆண்கள் செல்லாக்காசாக, பெண்களுக்கு குழந்தை பெற உதவி செய்யும் கேவலமான மனிதர்களாக மாறி விடுவார்கள். கண்டிப்பாக இது நடக்கக் கூடாது. என்று தீர்மானித்து தனது சீடனான வசுதேவ கண்வாவை அணுகினார். மநுவின் கொள்கைகள் நாட்டுக்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்தார் கண்வா. இருவரும் சேர்ந்து ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். முதலில் மெல்ல மெல்ல பெண்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்த அந்த அமைப்பு புத்தரது போதனைகள் எட்டாத இடங்களைக் குறி வைத்து தங்களது கொள்கைகளையும் பத்தினிப்பெண்களைப் பற்றிய கதைகள் மூலமாகவும், வேறு சில உதாரணங்கள் மூலமாகவும், ஆண்களின் ஆணவத்தை தூண்டி விடும் படியாகவும் பேசி பல பகுதிகளை தங்கள் வசம் ஆக்கிக்கொண்டன. இவை எல்லாவற்றுக்கும் பணமும் பொருளும் மன்னர் தேவபூதியின் கருவூலத்திலிருந்தே எடுக்கப்பட்டன.

ஆனால் மன்னர் தேவபூதி உண்மை தெரிந்து அமைச்சர் கண்வாவை வேலையை விட்டு நீக்கியதோடு, எடுத்த பணத்தையும், நகைகளையும் வரும் சித்திரா பவுர்ணமிக்குள் கொடுக்கவில்லை என்றால் ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்படுவார் என்றும் கூறி விட்டார்.

கேட்கக் கேட்க புத்த பகவானை நினைத்து உடல் சிலிர்த்தது கோமதிக்கு. எப்பேர்ப்பட்ட மகான். ஆடல் மகளிருக்கும் வாழும் உரிமையும், ஞானத்தைத் தேடும் உரிமையும் உண்டு என்று சொல்கிறாரே? அவர்களுக்காக நாடாளும் மன்னரைக் கூட பகைத்துக் கொள்ளவும் தயங்கவில்லையே? கொடுமையான திருமணத்திலிருந்து எத்தனை பெண்களுக்கு மன நிம்மதி அளித்தாரோ? தெரியவில்லை. ஆனால் இந்த கொடூரர்கள் வணங்க வேண்டிய அவரை கேவலமாக அல்லவா பேசுகிறார்கள்? என்று எண்ணி மேலும் கவனித்தாள்.

"வீரசிம்மா, பாவனா உங்கள் இருவருக்கும் முக்கியமான வேலை கொடுக்கப் போகிறேன். நீங்களும் உங்கள் ஆட்களும் நாடு முழுவதும் சென்று பல குடும்பங்களுக்கும் நமது கொள்கைகள் எவ்வளவு உயர்ந்தவை என்று திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சொல்லுங்கள். சொல்வதோடு நிற்க வேண்டாம். எதிர்ப்பவர்களின் வீட்டுப் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ விஷ மூலிகைகளைக் கலந்த நீரைக் கொடுத்து விடுங்கள். அவர்களுக்கு கை கால்கள் இழுத்துக் கொள்ளும். பெண்களை அடக்கி ஆளாத பாவத்தால் தான் இப்படி ஆனது என்று ஆண்களிடமும், வீட்டுக்குக் கட்டுப்படாததால் தான் இப்படி என்றும் பெண்களிடமும் சொல். அவர்கள் மனம் மாறிய உடன் இறைவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்வது போல செய்து, மாற்று மருந்து கலந்திருக்கும் தண்ணீரைக் கொடு. உடனே சரியாகி விடுவார்கள். பிறகு நாம் சொல்லுவதை தான் அவர்கள் கேட்பார்கள்." என்றார் கண்வா.

ஆமோதிப்பாக தலையசைத்தார் மநு.

அவர்கள் பேசியதைக் கேட்க கேட்க இவர்கள் எல்லாரும் மனிதர்கள் தானா? இப்படியுமா ஒரு சதி வேலை செய்வார்கள்? தாயே மகாசக்தி! இது என்னம்மா? என்று நினைத்தாள். கண்களில் கண்ணீரே வந்து விட்டது. கண்வானின் குரல் ஒலிக்க சமாளித்துக் கொண்டாள்.

"குருதேவா! அனைவருக்கும் வேலை கொடுத்து விட்டீர்கள். எனக்கு என்ன வேலை?" என்றார் கண்வா.

"வரும் சித்திரா பவுர்ணமி அன்று நீ மன்னன் தேவபூதியைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்ய வேண்டும். அவரை மட்டுமல்ல, சங்கமா தேவி, தளபதி பாகுநேத்திரன் போன்ற மன்னருக்கு உண்மையான அனைவரையும் மயூரா நீ கொல்ல வேண்டும். சித்திரா பவுர்ணமி இரவு விடியும் போது புஷ்யமித்திரரால் நிலை நிறுத்தப்பட்ட சங்க வம்சம் அடியோடு வீழ்ந்து வசுதேவ கண்வா மன்னனாக ஆக வேண்டும். அதை எதிர்க்கும் துணிவு கூட யாருக்கும் இருக்கக் கூடாது. இன்னும் ஒரு மாதம் சமயம் இருக்கிறது. அதற்குள் மன்னருக்கு மிகவும் உண்மையானவர்கள் யார் யார்? என்று கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். விஷம் கொடுத்துக் கொல்லக் கூடாது. மன்னரது உடலையும், மற்றவர்களது உடலையும் பார்க்கும் யாருக்கும் கண்வாவை எதிர்க்கும் நோக்கமே நடுக்கத்தைக் கொடுக்க வேண்டும். புரிகிறதா?" என்றார் மநு.

மூச்சு விடவும் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் கோமதி.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top