My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மனதில் மலர்ந்த மல்லிகை - 23

IVNP20

Member
Joined
Mar 22, 2025
Messages
32

அத்தியாயம் 23


மோகன் தனது இடத்தில் என்னென்ன பயிர் விளைவிக்கலாம், எப்படி செய்யலாம் என்று தன் கனவுகளையும் ஆசைகளையும் பூரிப்புடனும் பெருமிதத்துடனும் தன் நண்பர்களுக்கு கூறினான்.

உண்மையில் அவனது எண்ணத்தைக் கண்டு அவனது நண்பர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனை அணைத்து விடுத்த மாறன் "உண்மையில் எனக்கு உன்னை கண்டு மிகவும் பெருமையாக இருக்கிறது மோகன். நம் போல் இடம் இருக்கும் வீட்டில் உள்ள எல்லா இளைஞர்களும் நம்மை போல விவசாயத்தில் கவனம் செலுத்தினால் நிச்சயம் ஒரு நாள் நம் நாடு முன்னேறி, நம் நாட்டில் பசி என்ற சொல்லே இல்லாமல் போய்விடும்" என்றான்.

இப்படியாக வயலைப் பற்றிய ஆராய்ச்சிலேயே அன்றைய நாள் சிறப்பாக முடிந்தது. மறுநாள் காலை விடிந்ததும் அவர்களை வயலுக்கு அழைத்து வந்து விட்டான் மோகன். சிறிது நேரம் வயலில் உள்ள வேலைகளை பார்த்துவிட்டு, பம்பு செட்டில் நண்பர்கள் குளித்து காலை உணவை முடித்ததும்,
"இன்று சாயங்காலம் நான் ஊருக்கு செல்ல வேண்டும் மோகன். அதனால் இன்று குவாரியை சென்று பார்த்துவிட்டு வந்து விடலாமா?" என்றான் மாறன்.
மற்ற இரு நண்பர்களும் அவர்கள் ஊர் அருகில் இருப்பதால் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பி விட்டார்கள். உண்மையில் அவர்களுக்கும் இங்கு இருக்க வேண்டும் என்று தான் ஆசை கல்லாடனை பார்த்து கதி கலங்கி அன்று கிளம்பி விட்டார்கள்.

குவாரிக்குச் செல்ல மோகனுக்கு விருப்பம் இல்லை. அதனால் "கண்டிப்பாக போக வேண்டுமாடா?" என்று ஆர்வம் இன்றி கேட்டான்.

"ஆமாம் மோகன். நான் குவாரியை இதுவரை பார்த்ததில்லை. எங்கள் ஊரைச் சுற்றி எல்லாம் வயல்தான், அதனால் தான் கேட்கிறேன். உனக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம்" என்று சோகமானான்.

நண்பனின் முகத்தில் வருத்தத்தை கண்டு, "சரி சரி, மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்ளாதே! போய் வரலாம்" என்றான்.

இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கல்லாடன், "நான் வேண்டுமென்றால் தயாளனை வந்து உன் நண்பனை அழைத்துச் செல்ல சொல்லட்டுமா? உனக்குத்தான் குவாரிக்குச் செல்வதற்கு விருப்பம் இருக்காதே!" என்றான் பெருத்த குரலில்.

"இல்லை மாமா, பரவாயில்லை. தயாளனுடன் போனால் மாறனுக்கும் சகஜமாக இருக்க முடியாது இல்லையா? அதனால் நானே அழைத்துச் சென்று வருகிறேன்" என்று மாறனை அழைத்துக் கொண்டு பைக்கில் ஏறினான் மோகன்.

"தம்பி நல்லா சுத்தி பாத்துட்டு வாங்க" என்று மாறனிடம் சொல்லிவிட்டு "குவாரிக்கு மட்டும்தான் போகணும், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வீட்டின் பக்கம் போகக்கூடாது சரியா?" என்று மோகனிடம் முடித்தான் கல்லாடன்.

பின்னர் "தயாக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லு அவன் ஏற்பாடு செய்து தருவான்" என்று சொல்லிவிட்டு "நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பின்னர் வருகிறேன்" என்று தனது அறைக்கு சென்றான்.

பைக்கை எடுத்த மோகன் சிறிது நேரத்திலேயே குவாரிக்கு வந்து விட்டான். இவனை கண்டதும் புன்னகையாக வரவேற்ற தயாளன், "எப்படி தம்பி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து?" என்றான்.
"ஆமாம் அண்ணே, நல்லா இருக்கேன். நண்பன் குவாரியை பார்க்கணும் என்றான். அதான் அழைத்து வந்தேன்" என்றான்.

"அதுதானே பார்த்தேன், நீங்களாவது குவாரி பக்கம் வருவதாவது?" என்று சத்தமாக சிரித்துக்கிட்டு "ஒரு அரை மணி நேரம் இங்க இருக்கலாம் தம்பி. சின்னதா ஒரு வேட்டு வச்சிருக்காங்க. அது வெடித்த பிறகு போகலாம்" என்றான்.

"வேட்டா..? அப்படின்னா?" என்றான் மாறன்.

"பெரிய பாறைய உடைக்கிறதுக்கு வெடி வைப்போம் தம்பி. இப்போ அந்த பக்கம் வைத்திருக்கிறோம்" என்று தூரத்தில் இருந்த ஒரு பெரிய பாறையை காண்பித்தான்.

அங்கு வெடி வைத்துவிட்டு நான்கு ஐந்து ஆட்கள் வேறு புறம் நகர்வது தெரிந்தது. "இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கும்" என்று கூறி அந்த திசையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் சத்தமாக வெடித்தது. வெடித்து அடங்கியதும் புழுதி மண்டலமாக, அந்த இடம் காட்சி அளித்தது. "இந்த புழுதி அடங்க இன்னும் பத்து நிமிடம் ஆகும். அதன் பிறகு பக்கமாக போய் பார்க்கலாம்" என்று இவர்கள் நின்ற பக்கம் திரும்ப,
மாறன், மோகனுக்கு பின்னால் ஒரு இருவது முப்பது காவலர்கள் நின்று இருப்பதை கண்டு அதிர்ந்தான் தயாளன்.

அவனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த காவலர்களின் தலைவன் ஒருவன் "இங்கே வெடி வைக்கிறதுக்கு பர்மிஷன் வாங்கி இருக்கீங்களா? குவாரிக்கு பர்மிஷன் இருக்கா? லைசென்ஸ் எங்கே?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, உடனே அவன் கல்லாடனுக்கு அழைக்க போனை எடுத்தான்.

அவன் கையில் இருந்த போனை பிடுங்கி மற்றொரு காவலரிடம் கொடுத்த அதிகாரி, மற்றொரு காவலரை அழைத்து "இவனுக்கு கைவிலங்கிட்டு, வண்டியில் ஏத்துங்கள்" என்றார்.

போலீசை கண்டதும் கல்லாடனின் ஆட்கள் எல்லாம் விரைவாக தயாளனின் அருகில் வர, "அனைவரையும் பிடித்து வண்டியில் ஏற்றுங்கள்" என்று சொல்லிவிட்டு அங்கு வேலை செய்யும் ஆட்களை பார்க்க குவாரிக்குள் போலீஸ் படை நுழைந்தது.

என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத மோகன், அங்கிருந்த தலைமை போலீஸ் அதிகாரியிடம், "என்ன சார்? எதற்காக தயாளனையும் ஆட்களையும் கைது செய்றீங்க? இது என் மாமாவின் குவாரி தான். அவர் லைசன்ஸ் வாங்கி தான் நடத்துகிறார். அதுபோல கல் உடைக்க வெடி வைப்பதும் சகஜம் தான். அனைத்திற்கும் நிச்சயம் அவர் பர்மிஷன் வாங்கி இருப்பார்" என்றான் படபடப்பாக.

அவனைப் பார்த்த சிரித்த போலீஸ் அதிகாரி "ஆமாம் மோகன், உன் மாமா குவாரி நடத்த பர்மிஷன் வாங்கி இருக்கிறார்தான். யார் இல்லை என்றது. ஆனால் அவன் நேர்மையாகத் தான் எல்லாம் செய்கிறானா? அவன் மீது எந்த தவறுகளும் இல்லையா?" என்று அவனை ஆழ்ந்து பார்த்தார்.

மோகனுக்கு அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் மாமாவின் குவாரியில் வேலை பார்ப்பவர்கள் கைது செய்யபடுவதில் சிறிது பதட்டமாக இருந்தான்.

அவனது பதட்டத்தை பார்த்துக் கொண்டே, அங்கு வேலை செய்துவிட்டு வந்த ஒருவனை அழைத்து "எல்லோரையும் இங்கு வர சொல்லு" என்றார்.
அவனும் ஓடிச் சென்று வேலை செய்தவர்களை அழைத்துக் கொண்டு வர, போலீஸ் அதிகாரி "நீங்கள் எல்லாம் எத்தனை ஆண்டுகள் இங்கு வேலை செய்கிறீர்கள்?" என்றார்.

ஒவ்வொருவரும் குறைந்தது 5, 6 என்று வருடங்களை கூற, உங்கள் ஊர் எது? அடிக்கடி போயிட்டு வருவீங்களா? என்றெல்லாம் விசாரித்தார்.

அவர்களும் தங்களைப் பற்றி அனைத்தையுமே கூறினார்கள். காவல் துறை ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட கதிர்வேலிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியாவது அவர்களிடம் தங்கள் நிலைமையை சொல்லிவிட வேண்டும் என்று வேகமாக ஓடி வந்தான்.

அதே சமயம் அவனுக்கு உள்ளுக்குள் ஒரு பயமும் இருந்தது. அவர்கள் ஊர் காவலாளர்கள் நாம் சொல்லுவதை ஏற்றுக்கொள்வார்களா? என்று. எதற்கும் அருகில் சென்று தான் பார்ப்போமே! என்று பலவாறு நினைத்து கொண்டே வந்தவன், காவல் அதிகாரி அருகில் நிற்பவனை கண்டு அதிர்ந்து நின்றான்.

கதிர்வேலின் அதிர்ச்சியை கண்ட காவலர், "என்ன சார்? நீங்க யாரு? உங்க பேர் என்ன? நீங்க எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க?" என்று அவனிடமும் விசாரிக்க,

"பெயர் கதிர்வேல். மங்களாபுரத்திலிருந்து வந்திருக்கிறார். ஆசிரியராக வேலை செய்தவர்" என்று தன் மாமனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவரைப் பற்றி கூறினான் மாறன்.

நண்பனின் உருவை அப்படியே குறித்து வைத்து நின்ற மாறனை கண்டு அதிர்ந்து நின்ற கதிர்வேலை வேகமாக வந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் மாறன்.

- தொடரும்..
 
Back
Top