கபிஸ்தலத்தை ஒட்டிய ஒரு வனப்பகுதி. சுவர்ணாவும் மற்றவர்களும் தங்கி இருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தான். ஆனால் அங்கே தான் பாவனன், ஆதிவன் மற்றும் மயூரன் தங்கி இருக்கிறார்கள் என்றோ, அவர்கள் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய சதி என்றோ யாருக்குமே தெரியாது. பாவனனுக்கு முதலில் மயூரன் மேல் நம்பிக்கையே ஏற்படவில்லை. ஆனால் அவனது உறுதியான கொள்கை, பெண்களை அடிமைப்படுத்துவதன் அவசியம் போன்றவற்றைப் பற்றி அவன் பிரசங்கம் செய்ததும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஜேத்தாவிலிருந்து சற்றே தொலைவில் ஒரு ஊரில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தார்கள். மயூரனின் தந்தையான துணை தளபதியைப் போய் அவன் பார்த்து வந்த பிறகு அவனது நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. தன் தம்பியுடன் அவன் பேசுவதை மறைந்திருந்து கேட்க ஆதிவன் ஒரு சித்திர குள்ளனை ஏற்பாடு செய்திருந்தான். அண்டாவுக்குள் குள்ளன் நுழைந்து கொண்டான் என்றால் அவன் அங்கே இருப்பதை யாராலும் கண்டே பிடிக்க முடியாது.
அப்போது ஹரன் மிகவும் நிம்மதியின்றி இருந்தான் என்பதை அவனது நடவடிக்கைகள் உணர்த்தின. அப்போது தான் தந்தையைப் பார்த்து விட்டுத் திரும்பி இருந்தான் மயூரன். ஹரன் செல்லவில்லை. மயூரன் வரும் போதே அவன் நடையும் உடையும் மாறி விட்டன என்பதோடு கையில் காசு நடமாட்டமும் இருந்தது.
தம்பியை தனியாக அழைத்துச் சென்று பேசியது முழுக்க குள்ளன் ஒட்டுக் கேட்டான்.
"நாம் எத்தனை சவுகரியங்களை, எத்தனை வளமான வாழ்க்கையை அம்மாவின் திமிரால் இழந்திருக்கிறோம் தெரியுமா ஹரா? அப்பா சாதாரணமானவர் இல்லை தம்பி! பாடலிபுத்திரத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர். தளபது பாகுநேத்திரனுக்கு வலது கை போன்றவர். அவரது வீடே நம் வயலை விடப் பெரியது. ஏவிய வேலையைச் செய்ய வேலையாட்கள், துணி துவைக்க ஆட்கள் என்று ஒரு அரசரைப் போல வாழ்கிறார். ஆனால் நாம்? கசங்கிய துணியை கட்டிக் கொண்டு வயற்காட்டில் சேற்றிலும், அழுக்கிலும் உழன்றோம். இது தேவையா? சொல்?" என்றான்.
ஹரனுக்குக் கோபம் வந்து விட்டது போலும்.
"உளறாதே மயூரா! உண்மையிலேயே தான் சொல்கிறாயா? இல்லை யாரேனும் ஒட்டுக் கேட்கிறார்களா?" என்று கேட்டு சுற்று முற்றும் பார்த்தான். யாருமே இல்லை.
"யாரும் இல்லை ஹரா! இது போன்ற ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று உனக்கு ஆசையாக இல்லையா? நம் அம்மா மாத்திரம் தந்தையைப் பிரியாமல் இருந்திருந்தால் நமக்கு இந்த கதி வந்திருக்குமா? நாம் பாடலிபுத்திரத்தில் கல்வி கற்று இந்நேரம் அரண்மனையில் வேலைக்கு சேர்ந்திருப்போம். ஹூம்! எல்லாம் பாழாகப் போயிற்று. " என்றான் மயூரன்.
"அம்மா ஏன் அப்பாவைப் பிரிந்தார்கள்? நாளுக்கு நாள் அம்மாவை அப்பா அடிமைப்படுத்துவதும் அவமானப்படுத்துவதும் அதிகரித்தது. அதோடு பிற பெண்களை வீட்டுக்கே அழைத்து வரத் தொடங்கிய போது தான் அம்மாவால் பொறுக்க முடியாமல் வெளியேறினார்கள். இதில் திமிர் எங்கே இருக்கிறது மயூரா? இதன் பெயர் சுயகவுரவம். திமிர் அல்ல. இதையே நம் அம்மா செய்திருந்தால் அப்பா என்ன செய்திருப்பார்?" என்றான் ஹரன்.
பளாரென்ற சத்தம் கேட்டது. மீண்டும் அந்த சத்தம் கேட்டது.
"அண்ணனையே அடிக்கத் துணிந்தாயா?" என்று கத்தினான் மயூரன்.
"நீ மட்டும் என்னை அடிக்கலாமா? தவறே செய்யதவன் மீது கை நீட்ட உனக்கு என்ன உரிமை?" என்று பதிலுக்குக் கத்தினான் ஹரன்.
"முதலில் மரியாதையைக் கற்றுக்கொள் ஹரா! மூத்த சகோதரன் அப்பாவுக்கு சமமானவன். என்னைக் கேள்வி கேட்கவோ அல்லது விமரிசனம் செய்யவோ உனக்கு உரிமையோ அதிகாரமோ கிடையாது. இதெல்லாம் உனக்குத் தெரியாது என்பதால் இம்முறை மன்னித்து விடுகிறேன். இனி அப்படிச் செய்யாதே! இல்லையென்றால் நான் உன்னைப் பற்றி உயர் மட்டத்துக்கு புகார் அளிக்க வேண்டி இருக்கும்." என்றான்.
சிறிது நேரம் பேச்சே இல்லை.
"மயூரா! நீயும் அவர்களது கொள்கைக்கு அடிமையாகி விட்டாய் என்று புரிந்து கொண்டேன். கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அதுவும் நீ இப்போது பேசினாய் பார்! அதில் அடியோடு போய் விட்டது. சுவர்ணா, கலா, நம் அம்மா இவர்களைப் பற்றி நீ கொஞ்சமாவது கவலைப்பட்டாயா? அவர்கள் இப்போது நம்மிடமிருந்து தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்களே? என்ன தகவல் சொல்லப் போகிறாய்? நான் பாவனனை விட பழைமைவாதி ஆகி விட்டேன். பெண்களுக்கு உரிமை இல்லை என்பது தான் என் கருத்து என்று சொல்லப் போகிறாயா?" என்றான் ஹரன் கோபமாக.
மீண்டும் சிறிது மௌனம். யாரோ ஒருவரின் கைகள் பக்கத்தில் இருந்த அண்டாவில் தாளம் போட்டன. அவர்கள் மனது தீர்மானம் செய்ய முடியாமல் தவிக்கிறது என்று புரிந்து கொண்டான் அண்டாவுக்குள் இருந்த குள்ளன். அவனுக்கு ஹரனை நினைத்துப் பாவமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட இளைஞன் இவன்? நல்ல குணம், நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடக் கூடாது என்ற தன்மை. ஆனால் மயூரன்? ஹூம்! என்று எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு உள்ளே இருந்தான்.
"சுவர்ணாவுக்கு என்ன? என் மனைவியாக ஆகி விடுவாள். கூடிய சீக்கிரமே எனக்கு அரசவையில் பெரிய பதவி கிடைத்து விடும். பிறகென்ன? எனது வீட்டில் ஒரு ராணியைப் போல அவள் வாழ்வாள். காலாவும் நீயும் கூட வசிக்கலாம். உனக்கும் நல்ல பதவி தரச் சொல்கிறேன். நீ என்னை விட புத்திசாலி. உனக்கும் பெரிய வாழ்க்கைக் கிடைக்கும். நல்ல இடமாகப் பார்த்து கலாவைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் போயிற்று. இதில் எங்கே உள்ளது பிரச்சனை?" என்றான் மயூரன்.
திரும்பிப் போக எத்தனித்தான் ஹரன்.
"என்ன பதிலே சொல்லாமல் போகிறாய்? என்று இழுத்தான் மயூரன்.
பேசிய அண்ணனை ஏற இறங்கப் பார்த்தான் ஹரன்.
"ஜேத்தாவிலிருந்து கிளம்பிய போது உன் மனநிலையே வேறு. இப்போது நீ என் அண்ணன் மயூரனே அல்ல என்று தோன்றுகிறது. அன்று அம்மாவை அவமானமாகப் பேசிய போது பொறுத்துக் கொண்டாய். அப்போதே எனக்கு உன் மேல் சிறு சந்தேகம் வந்தது மயூரா. ஆனால் விஷயத்தைத் தெரிந்து கொள்ள, அது என்று என்று என்னிடம் பொய் சொல்லி விட்டாய். நீ இப்போது யாருக்கு உண்மையாக இருக்கிறாய் மயூரா? எங்களுக்கு இல்லை. ஆனால் அதே நேரம் இந்த அமைப்பினருக்கும் இல்லை. உனக்கு வசதியாக வாழ வேண்டும் என்று இந்த அமைப்பினரோடு சேர்ந்து இருக்கிறாய். சூழலுக்கு ஏற்றவாறு உன் கொள்கைகள் மாறுகின்றன. இது நல்லதல்ல மயூரா. இதனால் இரு கட்சியினருக்குமே நீ நம்பிக்கை இல்லாதவனாக ஆகி விடுவாய்." என்றான் ஹரன்.
"என்னடா பெரிய ஞானி போலப் பேசுகிறாய்? இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள். இந்த அமைப்பினர் சாதாரணமானவர்கள் அல்லடா! பாடலிபுத்திரம் அரச சபை வரையில் இவர்களது ஆட்கள் இருக்கிறார்கள். வெல்லப் போவது இவர்கள் தான். இவர்கள் முன்னால் உன் கொள்கைகளும், அரிஹந்தின் சித்தாந்தங்களும் ஒன்றுமே இல்லாமல் ஆகப் போகின்றன. இந்த அமைப்போடு சேர்ந்தவர்களுக்கு மிக மிக வளமான வாழ்வு காத்திருக்கிறது ஹரா! சிறு வயதிலிருந்து நாம் என்ன சுகத்தைக் கண்டோம்? வெயிலில் வயலில் பாடு பட்டும் என்ன பயன்? நல்ல உடை உண்டா? வீட்டில் வேலைக்காரர்கள் உண்டா? அவ்வளவு ஏன்? நமது செருப்பைப் பாரேன்! எப்படிக் கிழிந்து போய் இருக்கிறது. இதனை மாற்றக் கூட நம்மிடம் காசில்லையே? இவையெல்லாம் நமக்குத் தேவையே இல்லை ஹரா! நம் தந்தையின் சொத்தே நிறைய இருக்கிறது, அது தவிர நமக்கும் நல்ல பதவி கிடைக்கும். யோசித்துப் பாரேன், ஆடம்பர வாழ்வு, குரலை உயர்த்தினால் வேலையாட்கள், சுவர்ணாவோ, மாலாவோ வேலையே செய்ய வேண்டாம். எல்லாவற்றுக்கும் ஆட்கள் இருப்பார்கள். உன் மாலாவுக்கு இதை விட நல்ல வாழ்க்கை கொடுக்க முடியுமா உன்னால்? யோசி!" என்றான் மயூரன்.
பதிலே சொல்லாமல் நின்றிருந்தான் ஹரன். மீண்டும் ஹரனின் குரல் ஒலித்தது.
"என் மாலாவுக்கும் எனக்கும் தங்கக் கூண்டு வாழ்க்கை வேண்டாம் மயூரா! நிச்சயம் சுவர்ணாவும் இதனை விரும்ப மாட்டாள். உனது வசதிகள், ஆடம்பரங்கள் எல்லாமே அடிமைப்படுத்தப்பட்ட பெண்களின் கண்ணீர் என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட்டவை. இனி வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர்களால் விடுதலை அடைய முடியுமா என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் போராட்டம் தொடரும். எங்களால் முடிந்த வரை பாடு படுவோம். நான் வருகிறேன்" என்றான் ஹரன்.
"போவது என்று முடிவு செய்து விட்டாய்! நான் சொன்னால் கேட்கவா போகிறாய்? சரி! இன்றைய இரவு உணவு உண்டபிறகு செல். நானும் வருகிறேன்." என்றான் மயூரன்.
"உண்மையாகவா? இத்தனை பேசினாயே? இப்போது வருகிறேன் என்று சொல்கிறாய்? உன்னை நம்புவதே கடினமாக இருக்கிறது"
"எதற்கு வீண் பேச்சு? நாளை விடிந்தால் எல்லாம் தெரியப் போகிறது உனக்கு. சரி சரி! நீ போய் ஓய்வெடுத்துக்கொள். இன்று இரவு பாவனன் பாடலிபுத்திரத்திலிருந்து வருகிறானாம். புதிய விஷயங்கள் எதுவும் தெரிய வரலாம். நான் போகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனான் மயூரன்.
அவன் நேரே போனது ஆதிவனும் பாவனனும் இருந்த அறைக்கு தான். இவனை நம்பலாம் என்பதன் அடையாளமாக ஆதிவன் தலையை அசைக்க மயூரன் உள்ளே சென்றான். தன் தம்பியைப் பற்றியும் அவனது உறுதியான முடிவைப் பற்றியும் சொன்னான் மயூரன். அப்போது ஆதிவன் சைகை காட்ட ஒரு ஆள் போய் குள்ளனை அழைத்து வந்தான். அவன் தானும் தன் தம்பியும் பேசிக் கொண்டிருந்ததை முழுக்க ஒட்டுக் கேட்டான் என்ற உண்மை மயூரனின் முகத்தில் அறைந்தது. ஒரு கணம் இது என்ன கேவலமான பிழைப்பு என்று தோன்றினாலும் பாரத நாடு முழுக்க பரப்ப வேண்டிய கொள்கைகளைக் கொண்ட ஒரு அமைப்பினர் என்னைப் போன்ற புதியவர்களை எப்படி நம்புவார்கள்? இவர்கள் செய்தது சரி தானே? என்ற எண்ணம் தோன்றியது.
மயூரன் கூறியதற்கும் குள்ளன் கூறியதற்கும் ஒத்துப் போகவே பாவனன் மயூரனின் தோளை தட்டிக் கொடுத்தான்.
"இனி உனக்கு எந்த உளவாளியும் தேவையில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும் மயூரா! நமது ரகசியங்கள், குறிப்பாக பொருளுதவி வரும் வழி தெரிந்தவர்களை நாம் வெளியில் விடும் பழக்கம் இல்லை." என்றான் பாவனன்.
மயூரன் திடுக்கிட்டது வெளிப்படையாகத் தெரிந்தது.
"அவன்...ஹரன் என்னுடனே இருக்கட்டும். அவன் யாருக்கும் எந்த செய்தியும் அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறேன்." என்றான் மயூரன் தடுமாற்றமாக.
"அப்படி நடக்காது என்று உனக்கே தெரியும். இருந்தும் பாசத்தில் பேசுகிறாய்."
மௌனமாகக் கடந்தது சில நொடிகள்.
"என் ஒருவனுக்காக என்று வழக்கங்களை மாற்ற முடியாது அண்ணா! ஹரனை எப்படி அகற்ற வேண்டுமோ அகற்றி விடுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள். அதிக வலி, துன்பம் இல்லாமல் செய்து விடுங்கள். என்ன இருந்தாலும் அவன் என் சொந்த ரத்தம்" என்றான் மயூரன் சற்றே கலங்கிய குரலில்.
அவனை அணைத்துக் கொண்டான் ஆதிவன்.
"உனக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது மயூரா! இவை உயிர்த்தியாகங்கள். பலிகள் அல்ல. ஹரனுக்கு நாம் தக்க மரியாதை செலுத்தத்தான் போகிறோம். உன் கொள்கைப் பிடிப்பு அரிதானது மயூரா. நமக்குப் பல வேலைகள் உள்ளன. இன்றைய இரவு ஹரனின் உணவில் கொடிய விஷத்தைக் கலக்கச் சொல்லி விடுகிறேன். 10 நிமிடத்தில் அவன் கதை முடிந்து விடும். மூத்த சகோதரனான நீயே கொள்ளி வைத்து விடலாம். எல்லா ஈமச் சடங்குகளும் முறைப்படி நடக்கும். மனம் வருந்தாதே" என்றான் ஆதிவன்.
அன்றைய இரவு உணவை வேண்டா வெறுப்பாகக் கொறித்தான் ஹரன். சிறிது நேரத்தில் அவனது உடலின் பாகங்கள் மரத்துப் போகத் தொடங்கின. என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்த அவன் ஒரு இலையில் மூக்கிலிருந்து வந்து கொண் டிருந்த ரத்ததால் எதையோ எழுதி எறிந்தான். அந்த இலை எப்படியாவது கலா அல்லது சுவர்ணாவின் கைகளில் கிடைக்க வேண்டுமே? என்று பிரார்த்தனை செய்தான். அவன் அம்மாவோடும் சகோதர சகோதரிகளோடும் வயலில் விளையாடியது, அம்மா கைகளில் சோறு பிசைந்து வைத்தது என்று காட்சிகள் கண் முன்னால் தெரிய மெல்லிய சிரிப்போடு கண்களை மூடினான் ஹரன். பிறகு அந்தக் கண்கள் திறக்கவே இல்லை.