My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

வானம்பாடி -22

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,585
வானம்பாடி -22

திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில், சித்தபண்டூர் என்ற சிந்து பட்டியில் அமைந்துள்ள, ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில், மானூத்திலிருந்து அரைமணி நேரம் பிரயாணத்தில் உள்ளது. செல்வ மணி தலைமையில், அப்பத்தா பேச்சியம்மாள் முதற் கொண்டு, முத்து சிவப்ரியா மகன் சிவனேஷ் பாண்டி வரை, மூன்று கார்களில் வர, பாண்டி குடும்ப இளசுகள் வரும் பொழுது, ஆதிசிவாவும், சக்தி பிரியனும் வராமலா, அவர்களும் இரண்டு சக்கர வாகனத்தில் பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

தெற்கிலிருந்து பாண்டி குடும்பத்தின் மூத்த அங்கத்தினர், தங்கள் குடும்ப நலன் வேண்டி, திருவேங்கடமுடையானை தரிசிக்க, வடக்கே திருப்திக்குச் செல்ல, அங்கே படி ஏறிச் செல்லும் தங்கள் குடும்பத்தினர், முக்கியமாக மூத்த பெண்மகளான செல்லம்மாள் நல்லபடியாக மலை ஏற வேண்டும் என அவரது அம்மா, மகன், மகள் , மருமகன்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் நெக்குருகிப் பிரார்த்தித்து நின்றனர்.

பெருமாளுக்குச் சேவகம் செய்யும் கோவில் பட்டர், துள்ளித்திரியும் வயதுள்ள மகி, மதி, பூபேஷ், சர்வேஷ் முதல், குழந்தைகளான அன்பேஷ், தர்சினி, விடலை பருவத்தில் உள்ள, ஹரீஷ், ஹிதேஷ், ஹரிணி, அழகி, ஆகியோர் வரை பொறுப்பாக கை கூப்பி நின்று, ”அப்பத்தா நல்லபடியா மலை ஏறணும். அம்மாச்சிக்கு மலை ஏற சக்தி கொடு. வீரா தாத்தாவும் நல்லபடியா மலை ஏறணும். கால் வலிக்காமல் இருக்கனும்.” என வேண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து விவரம் கேட்டார்.

வழக்கமாக, அந்த கோவிலுக்குச் செல்லும், பூங்குயிலும், பூமாவும் விவரம் சொல்ல, “பாட்டிக்காக வேண்டிக்கிறேளா, பேஷ், பேஷ். கவலை படாதேள், இந்த வெங்கடேச பெருமாள் பார்த்துப்பார்.“ என வாழ்த்தி விட்டு, உள்ளே சென்று, பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு ஆரத்தி காட்டி, தீபம் கொண்டு வந்தவர், துளசி தீர்த்தம், கொடுத்து எல்லோருக்கும் ஜடாரி வைத்து ஆசீர்வாதம் செய்தவர், “ஊருக்குள்ள இருக்க கோவில், யாரும் அதிகம் வரமாட்டா. ஆனால் பாருங்கோ, இன்னைக்கு இத்தனை பேர் வந்திருக்கேள். இப்போ தான் ஒருத்தர் பெருமாளண்டை வேண்டிண்டு பெட்டி, பெட்டியா லட்டு கொடுத்துட்டு போனார். பெருமாள் படியளப்பானுட்டு இதைத் தான் சொல்லுவா. உங்க பிரார்த்தனையும் பெருமாள் ஏத்துப்பார்.” என லட்டை விநியோகிக்க, சிறுவர்கள் உற்சாகமானார்கள். அவர்களிடம் தான், பட்டர் தலபுராணத்தைக் கதையாகச் சொன்னார்.


"திருப்பதியிலிருந்து வந்தவர் தான் இந்த சுவாமி, உங்காத்து பெரியவா, அங்க பெருமாளைச் சேவிக்கிற நேரம், இங்கே நீங்களும் வந்து சேவிக்கிறது பெரிய புண்ணியம் தான்." என்ற பட்டர், "அறுநூறு வருஷம் முன்னே சந்திரகிரிக்கோட்டை பகுதியில், காஞ்சி தேசத்தைச் சேர்ந்த, விஜயநகர வம்சாவளியினர் இருந்தா. விஜயநகர ஆட்சிக்குப் பிறகு சுல்தான்களால், அவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவிச்சா!" எனவும் "சுல்தானா?" என முதல் சந்தேகத்தை பூபேஷ் கேட்க ஆரம்பித்தான். "வேற நாட்டிலிருந்து வந்தவா. பொண்ணுகளை எல்லாம் ரொம்ப கொடுமை படுத்துவா."


"இப்பவும், அது தானே சாமி நடக்குது." என மீனா கவலைப்பட, "தேவர்கள் காலத்திலே அசுரர்கள் இருந்தா, காலம் மாற, மாற அதே குணம் தொடர்ந்து வர்றது , நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தானே லோகம். அப்படி அரக்கக் குணம் உள்ளவா கிட்டே இருந்து அவா இனத்துப் பெண்களை காப்பாத்த நினைச்சா. ஒரு அம்சமான, தாங்கள் கௌரவமாகக் கருதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தருமாறு சுல்தான் கட்டளையிட, அதற்குக் கால அவகாசம் கேட்ட அந்தக் குடும்பத்துக்காரா, இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கி வந்தா. அப்போ தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி விக்கிரகங்களையும் தங்களோட எடுத்துண்டு வந்துட்டா.


வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்கு போகணும்கிறது அவா விருப்பம். வழியில்,சிரம பரிகாரத்துக்காக ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்கினா. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வச்சா, பொழுது விடிந்தது. தொடர்ந்து பயணிக்க வேண்டுமேனுட்டு , பெருமாள் உற்சவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளைத் தூக்க முயற்சி செய்யிறா. ஆனால், ஆச்சரியம்... அந்தப் பெட்டிகளைக் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை! அப்படி ஒரு கனம்.


வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வச்சுட்டு அங்கேயே தங்கிட்டா. பெருமாள் அங்க தங்கணும்னுட்டு முடிவு செய்துட்டார். அதை மாத்த யாரால் முடியும்?" எனவும், பிள்ளைகள் ஆர்வமாகக் கதை கேட்டனர். ராமன் கதை கேட்கும் கூட்டத்தில் அனுமன் இருப்பார் என்பது போல், இந்த மழலைகளோடு, அந்த வேங்கடனே, புன்னகையோடு கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து, அவர்கள் வீட்டிலும் சுந்தர தெலுங்கு குடி புக உள்ளதே.


"அன்று ராத்திரி, கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருத்தர் கனவில் பெருமாள் காட்சி தந்தாராம், நீங்கள் யாரும் பயப்படாதேள், இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பா. அவாளால உங்களுக்கு எந்தத் தீங்கும் வராது. அப்படி ஏதுவும் நடக்காமல் நான் உங்களைக் காப்பேன்னுட்டு சொன்னாராம்." என பட்டர் சொல்லவும், "சாமி பேசுமா?" என ஜெயா மகன் சர்வேஷ் சந்தேகம் கேட்க, "உன்னாட்டமே கேக்குறான் பாருடா." என செல்வம் ஜெயாவை சொல்ல, "ஏதா இருந்தாலும், தீர விசாரிக்கனுமுள்ள!" என பெருமை பேச,
"கனவுல வந்து சாமி பேசும்." என மகனுக்கு பதில் தந்த பூமா, "சாமி, நீங்க மீதி கதையை சொல்லுங்க." என கேட்டாள் .


"அவா சந்தேகம் கேட்கட்டும், கதையை கவனிக்கிறதால தானே சந்தேகம் கேட்குறா!" என பட்டர் சந்தோசப் பட, "அய்யருக்கு இவைங்களை பத்தி சரியா தெரியலை." என முத்து மெல்ல கமெண்ட் அடிக்க, "அவய்ங்கே ஒரு இடத்தில உட்கார்ந்து கேக்குறதே பெரிசு, நீ கம்முனு இரு பாவா." என சிவப்பி கணவனை அடக்கினாள்.


"நாளை காலை, பெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தைக் கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும்.


அந்த இடத்தில் என் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்னு சொல்லி மறைந்தார்." என கதை சொல்ல, "கருடன்னா?" என மகி சந்தேகம் கேட்டான். இப்போது , ஜெய செல்வத்தை பார்க்க, "நீ தானே சேனை தொட்டு வச்ச, அது தான் உன்னையாட்டமே கேக்குறான்." என அதற்கும் மச்சினன் மேலே பழி போட, "கருடன்னா, கழுகு, ஈகில் டா, வானத்திலே பார்க்கும்ல, அதோ , அந்த சாமி மாதிரி இருக்கும்." என அழகி தம்பிக்கு விளக்கம் சொல்ல, "குழந்தை சமத்தா இருக்காளே!" எனவும், அழகி பெருமை பட்டுக் கொள்ள, ஹித்தேஷ், கொம்பு வைத்து காட்டினான். அவனுக்கு அழகு காட்டி விட்டு, அழகி பட்டரிடம் கதை கேட்டது.


"அதே தான், கருடாழ்வாருன்னுட்டு சொல்லுவோம், பெருமாளோட வாகனம்." என்ற பட்டர்


"மறுநாள் கார்த்தாலே, கனவில் பெருமாள் சொன்னது போலவே, வானத்தில் வட்டமிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிண்டு வந்து, தொலைவிலிருந்த புளியமரத்துக்கு பக்கத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சமேதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோயிலும் கட்டினா, அது தான் இந்த கோவில்." என சொல்லி முடிக்க, "அந்த பொண்ணு என்ன ஆச்சு?" என மதி சந்தேகம் கேட்க, "என் மகனுக்கு இருக்க கவலையை பார்த்தியா!" என செல்வம் சிரிக்க, "அப்பனை மாதிரி, ஆபத்பாந்தவன் தான்." என பூங்குயில் கடிந்துக் கொள்ள, "இந்த ஊரிலேயே நல்ல வரனா பார்த்து கல்யாணம் செஞ்சு கொடுத்தா. பெருமாள் அனுக்கிரகம் இருக்கிறச்சை, ஒரு குறையும் இல்லை. கன்னி பொண்ணுங்க, நல்ல வரன் கிடைக்கனும்னு வேண்டிக்கோங்கோ. "என சொல்ல, "எங்க அக்காவுக்கு வரனெல்லாம் கிடைச்சிருச்சு சாமி, கல்யாண வரம் தான் கிடைக்கலை. " என ஹரிணி , மீனாவுக்காக சொல்ல, " அது தான், அவள் அம்மாச்சி திருப்பதி போயிருக்கா இல்லை, அந்த வரமும் வாங்கிட்டு வருவா" என பேச்சியம்மா, நல்வாக்கு தந்தார்.


"புளியம்பழத்தைத் தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளியமரத்தின் அருகே கோயில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததால், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம்.


அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி ஆனது. ஆதிகாலத்தில் திருப்பதி மலையில் பெருமாள், புளியமரத்தடியில் உள்ள புற்றில், பால் ஊற்ற, ஊற்றப் புற்று கரைந்து, வராக மூர்த்தியாகத் தொண்டைமான் மன்னனுக்குக் காட்சி கொடுத்தார் என்ற புராணமும் உள்ளது. அதே போல் இங்கும் புளியமரத்தின் அருகில் தான், பெருமாள் கோவில் கொண்டார்." என சுவற்றில் எழுதி போட்டிருந்த தலபுராணத்தை வாசித்து "புளியமரத்துக்கும், பெருமாளுக்கும் கனெக்சன் இருக்கும் போல!” என ஹரிஸும், “சித்தப்பண்டுர் ,பேர் நல்லா இருக்குல்ல?” என ஹரிணியும் சிலாகித்தனர்.


“நம்ம ஊர்காரவைங்க, நல்லவயங்கண்டு பெருமாளே சொல்லிட்டார் பார். அம்புட்டு நம்பிக்கை.” என ஜெயா பெருமைப்பட்டுக் கொள்ள, “நம்ம, தாத்தன், பூட்டனைப் பார்த்தும் சொல்லி இருக்கார் பாரேன்.” என செல்வமணி உடைசல் விட, “மாமா, வந்த வேலையை பார். அங்குட்டு அத்தை கஷ்டப்பட்டு மலை ஏறிக்கிட்டு இருக்கு. நீ இங்கே சாமியை லந்தை கொடுத்துக்கிட்டு இருக்கவன்.” என முறைக்க, அதில் பயந்த செல்வமணி, “அடியேய், நான் எங்க சாமியை லந்தை குடுத்தேன். உன் பாட்டுக்கு என்னத்தையாவது சொல்லாதே. இந்த சாமி, எங்கம்மாளை நல்லபடியா மலை ஏத்தி விட்டுட்டுச்சுண்டா, கம்பத்துக்கு மஞ்சனம் பூசி, கோவிலையே உருண்டு வாரேன்.” என அறிவிக்க, “அதை அங்கச் சொல்லு.” எனச் சன்னதியில் நேந்துக் கொள்ளச் சொன்னாள் பூங்குயில். செல்வமணி தட்டாது அதே போல் வேண்டுதல் செய்தான்.

பேத்திமார் கையை பற்றி நடப்பது கூட கௌரவ குறைச்சல் என, மேடு பள்ளம் பார்த்து சூதானமாக வந்த பேச்சியம்மாள், பெருமாளையும், தாயார்களையும் சேவித்து விட்டு வந்து திண்ணையில் அமர்ந்தவர் “என் பேரனை நல்லா மிரட்டி வச்சிருக்கடி.” என்றார். “சித்தப்பா மிரண்டு போச்சு, ஏன் மதினி. சும்மாவே எப்படி பயந்துக்கே வந்துச்சு.” என சிவப்பியும் முதல் முறையாக ஓர் விஷயத்தில் ஒத்துப் போனார்கள்.

சிந்துபட்டி பெருமாள் கோவில் த்வஜ கம்பத்தில் கருப்பண்ணசாமி வீற்றிருப்பதாய் ஐதீகம், ஆகவே இந்த பெருமாள் கோவிலில் மட்டும் விசேஷமாகத் திருநீறு கொடுப்பார்கள். பூங்குயில் அதைப் பக்தியோடு வாங்கி எல்லா பிள்ளைகளுக்கும் வைத்து விட, “டாக்டரம்மா குடும்பமா இது. நல்ல இருக்கனும் தாயி. நீ கொடுத்த தைலம் தான் நல்லா கேக்குது.” எனக் கோவில் திருப்பணி செய்யும் பெண் மீனாவிடம் வந்து பேசி செல்ல, “ஏண்டி, இந்த பக்கமெல்லாம் தனியாவா வருவ?” என மருமகளைக் கண்டித்தாள் பூங்குயில்.

“அவள் ஏன் தனியா வரா, அது தான் அவளுக்குச் சேவை செய்யண்டே, என் கூட பொறந்தவனை நேந்து விட்டுருக்கோமுல்ல.” என சிவப்ரியா கோர்த்து விட, “அக்கா கிட்ட படிச்ச பாடம் தான், மாப்பிள்ளை பாலோ பண்றான். அவனாவது ஆம்பளை பய. நீ பொட்டப்புள்ளை என்ன பாலோ பண்ணுனேல்ல!” என முத்து மனைவியை மடக்க, "நான் அப்படி பாலோ பண்ண போயி தான், இன்னைக்கு மூணு புள்ளைகளுக்கு அப்பனா இருக்க, இல்லையிண்டா இன்னும் தேவதாஸா தானே திரிஞ்சிருப்ப. அதுக்குள்ள என்னா பாடு, அந்த கருப்பனுக்கு தான் வெளிச்சம்." என்றாள் சிவப்பி.

“நல்ல உதாரணம். உன்னை பார்த்து தான் மத்ததுகளும் பழகுது.” என பூமா, ஓரகத்தியை சொல்ல, "இல்லை யிண்டாலும், உங்க வீட்டு பிள்ளைகளுக்கு வாயில விரலை வச்சா கடிக்க தெரியாது." என அவள் முகத்தை திருப்பினாள். மீனாவைப் பார்த்தபடி சக்தி தலையைச் சொரிந்தான். “வழியாதே மாமா!” என மீனாள் கண்ணால் அடக்கிக் கொண்டிருந்தாள்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, செல்வமணி, வாசு தேவனுக்கு போன் போட்டு, “அம்மா, என்ன செய்யுது?” என விசாரிக்க, “அவுங்க பாட்டுக்கு நடக்குறாங்க. நீ கவலை படாதே அண்ணே. பெரியம்மா, அப்பா, மாமா ரெண்டு பெரும் சேர்ந்தா பேச்சுக்கு கேக்கவா வேணும், திடியன் மலை, அழகர் மலை, சதுரகிரி, பழனி மலையிண்டு ஒரு மலை விடாமல் ஏறின அனுபத்தை சொல்லி, அந்த சாமியையும் சேர்த்து கும்பிட்டுட்டு வராங்க இந்தா மாப்பிள்ளை ரெண்டு பேரும் வந்துட்டாங்க பார்.” எனத் தங்கப் பாண்டி, தினேஷையும் காட்டவும் செல்வத்துக்கு நிம்மதியும், மற்றவருக்கு உற்சாகமும் பீரிட்டது.

“மாமா, நீ கவலைப் படாதே இரு. இந்தா காளி கோபுரம் வந்துட்டோம், இன்னும் கொஞ்ச தூரம் தான். பத்திரமா போயிடுவோம்.” என தைரியம் சொல்ல, “உன்னைப் பார்க்கவும் தாண்டா மாப்பிள்ளை எனக்குத் தெம்பே வந்திருக்கு.“ என உணர்ச்சி வயப்பட்டுக் கண்கலங்க. “யாரு, தங்கமா, தினேஷும் வந்துட்டான்னா” என பேச்சியம்மாள் குரல் கேட்கவும், “இங்க பாரப்பா. அப்பத்தாவையும் கோவிலுக்கு கூட்டியாந்தாச்சா?“ என அவன் அதிசயப்பட.

“பிறகு, என் வம்சமே மலை ஏறும்போது, நான் பெருமாளை வேணடிக்க மாட்டேனா. சூதானமா, போயி சாமி கும்பிட்டு வாங்க.“ எனப் பேச்சி வாழ்த்தியவருக்கும், மக்கள், மகன்கள், பேரன்களைப் பார்க்கவும் நெகிழ்ச்சி தான்.

செல்லம்மாளிடம், “உனக்காக, உன் பேரன் பேத்தியெல்லாம் வேண்டிக்கிட்டாங்க பாரு.” எனக் காட்ட, செல்லம்மாள் “நல்லா இருங்க சாமி.” என இரு கையையும் தூக்கி ஆசீர்வாதம் செய்து, பெருமாளை கும்பிட்டார். "செல்வி, நல்லா நடக்குறாளா?" என பேச்சி வினவ, "கொஞ்ச நேரம் டல் அடிச்சது. மகனை பார்க்கவும், ஒரே உற்சாகம் தான்." என துரைபாண்டியன் சந்தோசமாக சொல்ல, "நீயே, உன் மகனை பார்க்கவும், அப்படி தான் இருக்க, அவளை சொல்லனுமா. தினேசுக்கு நல்ல பொண்ணா, பாண்டி குடும்பத்துக்கு ஏத்த மருமகளா, அடக்க ஒடுக்கமான மருமக வரனுமுண்டு சாமிய கும்புட்டுட்டு வாங்க." என பேச்சி சொல்லவும், "ஏன் அப்பத்தா, இப்ப வரைக்கும் வந்ததெல்லாம் பாண்டிக்கு குடும்பத்துக்கு ஏத்தது இல்லையா?" என தங்கம் வம்பிழுக்க, "அதை என் வாயால சொல்ல வைக்காதே." என்றார் பேச்சி "

தினேஷ் கிட்ட சொல்லி, தெலுங்கு பேசுற புள்ளையா புடிச்சுட்டு வரச் சொல்லுங்க மாமா. அப்பத்தான் உங்க அப்பத்தா கிழவி, பாஷை தெரியாம அமைதியா இருக்கும்." என சிவப்ரியா சொல்லவும், "தெலுங்கு பொண்ணு வந்தா, முத்துவை பாவான்னு கூப்பிடும் பரவாயில்லையா?" என தங்கம் விளையாட்டாக கேட்க, "அதெல்லாம் முடியாது, என் புருஷனை நான் மட்டும் தான் கூப்பிடுவேன்." என அழமாட்டாமல் சொல்ல, "இதுக்குண்டே தெலுங்கு தெரிஞ்ச புள்ளையை , தினேசுக்கு செய்யிறோம்." என்றார் பேச்சி.

காணொளிக்குள் எட்டி பார்த்த ஜெயா, “தங்கம், நீயும் தினேசும் ஒன்னாவா வந்திங்க?” என நூல் விட, 'அடங்கொய்யால, இப்பவும், துப்பு துலக்கிறதை விடுதா பாரு. என் பொண்டாட்டிக்கு மேல இருக்குது. இதெல்லாம் சிபிஐ ல இருந்துச்சு, எல்லா பயலும் செத்தாய்ங்கே’ என மனதில் நினைத்தபடி, “ஆமாம், இல்லை, தனித்தனியா ஒரே பிளைட்ல வந்தோம்.” என குழப்பமாகப் பதில் சொல்ல, “அடேய் மாப்பிள்ளை, இப்போ அதுவா முக்கியம். பெருசுங்க நடந்துகிட்டு இருக்குல்ல, அவுங்களை கவனிக்கட்டும் விடுடா!” எனச் செல்வம் போனை கட் செய்தான்.

மற்றொரு புறம், இளையவர் கூட்டம், தினேஷ் பாண்டியோடு கதைத்துக் கொண்டிருந்தனர். “மாம்ஸ், என்ன முகம் டல் அடிக்குது, குடும்பத்துக்குப் பயந்து உன் காதலியை விட்டுட்டு வந்திட்டியா?” என ஆதிசிவா, தினேஷ் பாண்டியைக் கிண்டலடிக்கவும், அவள் மின்னலாகக் கண்ணில் வந்து செல்ல, “சித்தப்பா நிஜமாவா, சித்தியோட தான் வரீயா?” என ஹரிஷ், ஹிதேஷ், மீனாவும் ஓட்டி குமிக்க, “என்னத்தையாவது பேசி, எங்கம்மாட்ட அடி வாங்கி குடுத்திடாதீங்கடா. செல்வி பக்கத்தில தான் நடந்து வருது.” என்றான்.

“நான் எதுக்கு உன்னை அடிக்கிறேன். என் கண்ணு, அம்மா சொல்லை தட்டாமல் திருப்பதிக்கு வந்திட்டேயில்ல, அதுவே ரொம்ப சந்தோசம்.“ எனச் செல்வி மகனை கொஞ்ச, "அப்பத்தா, அப்படியெல்லாம் நம்பிறாதே, ஒரு ஜெர்மன்காரி சித்தப்பாவை தொத்திக்கிட்டே, இந்தியா வந்திருக்காம்." என ஹித்தேஷ் கோர்த்து விட்டான்.

"அடேய் அடங்குங்கடா, ஊர்ல வந்து உங்களையெல்லாம் வச்சுக்குறேன்." என போனை கட் செய்து விட்டு, சரண் தேவாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே செல்ல, மாயன், "என்ன மாப்பிள்ளை, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடலாம்ல. இல்லை உங்க அக்காளை, அத்த மகா, மாமா மகனு யாரையாவது பழகி வச்சிருந்தாலும் சொல்லு" என ஐஸ்வர்யா, ஹரிஷ் திருமணத்தை பற்றி பேசியபடியே மலை எற, அவளும் வீடியோ காலில் வந்து பேசிக் சென்றாள்

தினேஷ் பாண்டி, குண்டூரிலிருந்து எப்போது, தப்பித்து வெளியேறுவோம் எனத் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு, வானவூர்தி ஏறவும் ஒரு நிம்மதி பிறந்தது. ஆனால் திருப்பதியில் தரை இறங்கும் பொழுது, அவன் முகத்தைக் காணக் கூட இல்லாமல், தலை குனிந்தபடி அவனைத் தவிர்த்த ராஜி தான் நினைவில் வந்தாள்.

அவள் எதுவுமே பேச வில்லை, ஆனால் சுலேகாவும், கார்த்திகாவும், “உங்க மேல, தப்பு இல்லைனு, ஐபிஎஸ் அண்ணனை வச்சு நிரூபிச்சிட்டீங்க. ஆனால் எங்க சன்னுவுக்கு நீங்க செஞ்சது நியாயமே இல்லை. அவளை விடவா உங்களுக்கு நல்ல பொண்ணு கிடைச்சுடும். இரண்டு நாள் கண் திறக்காமல் இருந்தப்ப, நீங்க அவள் வழியா தான் இந்த உலகத்தை பார்த்தீங்க. கண் திறந்த பிறகு, ஒரு வைரத்தை அலட்சியப்படுத்திட்டு போறீங்க. நீங்க குப்பையா ஒதுக்கினாலும், அவள் வைரம் தான். காலம் பதில் சொல்லும்.” என இருவரும் மாற்றி மாற்றிப் பேசியதும், அவள் முகமும் நினைவில் வந்து, அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அம்மா, அப்பா, பெரியப்பா, அத்தை, மாமா என தன் குடும்பத்தைப் பார்க்கவும், “இல்லை, நான் செய்தது கரெக்ட் தான் ” என மனம் தெளிந்தான். ஆனால் ஆதியின் விளையாட்டான கேள்வியில், அவள் தான் ஒரு கனம் வந்து சென்றாள்.

சிந்துப்பட்டி கோவிலிலிருந்து, தும்மலான்பட்டி வழியாகச் சென்றால், அம்மாசி கிழவன், அங்கம்மாளிடம் அந்த புகைப்படத்தைக் காட்டி விவரம் கேட்கலாம் என நினைத்த மீனா, சக்தி பிரியனோடு இருசக்கர வாகனத்தில் வரத் திட்டமிட, சிவபிரியா, “மீனா, இந்த பிள்ளைங்க இரண்டும் உன் பொறுப்பு. சூதானமா கூட்டியா.“ என அன்பேஷ், கவிதர்ஷினி பொறுப்பை அவளிடம் தள்ளினாள். வருங்கால நாத்தனார், சித்தப்பன் பொண்டாட்டி, மதினி தட்ட முடியுமா, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு முத்துவின் காரிலேயே ஏறிக் கொண்டாள்.

பூமா, “வீட்டுக்கு போயி, டிபன் செய்யிற வரைக்கும் பிள்ளைங்க பசி தாங்காது. ஹோட்டல்ல நிறுத்து மாமா.” என ஜெயாவிடம் சொல்ல, “அப்பத்தாளும் இருக்கே வருமாண்டு தெரியலை?” என அவன் யோசித்தான்.

அதற்கு முன்பே, பூவு செல்வத்திடம் சொல்லியிருக்க, திருமங்கலம் மதுரை சென்று நான்கு வழிச் சாலையைப் பிடித்து, அங்கிருக்கும் ஒரு உணவகத்தில், சைவம் தான் சாப்பிடணும் என்ற கண்டிஷனோடு சாப்பிட அமர்ந்தனர். அவர்களை ராஜதுரையின் ஜீப், கடந்து செல்ல, “இவன் எங்கடா இங்குட்டு திரியிறான்?” என ஆச்சரியப் பட, நான்கு வழிச் சாலையில் வண்டி புள்ளியாய் மறைந்தது.


ரங்கதுரை, இருந்த அறைக்கு வந்த ராஜதுரை, விபூதி, லட்டு பிரசாதம், மற்றும் துளசியையும் நீட்ட, “சிந்து பட்டி பெருமாள் கோவிலுக்கு போனியா, அந்த நல்ல பழக்கமெல்லாம் இருக்கா என்ன?” என அடுக்கி வைத்திருந்த தலையணையில் சாய்ந்து அமர்ந்தவாறே கேட்க, “சேச்சே, அந்த கெட்ட பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. கஸ்டமர் ஒருத்தர், பஞ்சாயத்தை முடுச்சு குடுத்தேண்டு, டப்பா, டப்பாவா லட்டு குடுத்தாரு. லட்டைப் பார்க்கவும், சின்ன வயசில, பெருமாள் கோவில்ல சாப்பிட்டது நினைப்பு. பெருமாள் நியாபகம் வந்துச்சு, நம்ம வீட்டில எந்த சின்ன புள்ள இருக்கு, அது தான் பெருமாளுக்கு குடுத்துட்டு வந்தேன்.“ எனச் சாவகாசமாகச் சொல்ல


“சின்னக்குட்டிக்கு ரொம்ப பிடிக்கும். நம்மளுதையும் வாங்கி திங்கும். ம்ம் எங்க இருக்குதோ?” என ரங்கம் சொல்லவும்,
“நானும், பெருமாளுகிட்ட உன் தங்கச்சியைக் கண்டு பிடிச்சு தரச் சொல்லி தான் சொல்லிட்டு வந்துருக்கேன். அவள் மட்டும் கிடைக்கட்டும் ஒரே வெட்டு தான்.” என ராஜதுரை சொல்ல, “தம்பி பகைமையை வளர்க்க வேண்டாம்டா, விடு. இன்னும் எத்தன காலம் இருக்க போறோம்.” என்ற ரங்கத்திடம், “கடா வெட்டுறோம்ண்டு வேண்டினேண்டு சொன்னேன் அண்ணே!” என நகையோடு சொல்ல, “ ஆமாம், பெருமாள் கோயிலுக்குக் கடா வெட்டுறாய்ங்கே. ஜெயில்ல இருந்தாலும், ஒரேதா ஒன்னும் தெரியாமல் போகலை.” எனக் கோபித்தான்,


“அண்ணே, கடா பெருமாளுக்கு இல்லை கருப்பனுக்கு. அவள் இருக்க இடம் மட்டும் தெரியட்டும், அப்புறம் இருக்கு பூரண கும்ப மரியாதை.” என இரு பொருள் படவே பேசிக்கொண்டிருந்தவன், தன்னிடம் அகப்பட்டவன், மற்றும் குடி வேந்தனின் போக்கு வரத்து, யாரைச் சந்திக்கிறார்கள் என ஆராய ஆளை ஏற்பாடு செய்திருந்தான். அண்ணன் உடல் நிலை சற்று தேறவும், அடுத்த மிஷன் அவன் அக்காவை அழைத்து வருவது தான்.


குண்டூர் வல்லபா புரம், பாண்டியன் சகோதரர்கள் கிளம்பிச் சென்ற பிறகு, தன் முகத்தை யாருக்கும் காட்டப் பிடிக்காதவளாக சன்னு அறைக்குள் அடைந்து கிடக்க, நிர்மலா வாக்கிங் ஸ்டிக் உதவியோடு மகளின் அறைக்குள் வந்தார்.


“ அம்மா, நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க, கூப்பிட்டு இருந்தா நான் வந்திருப்பேனே?” எனக் கட்டிலில், கால் நீட்டி அமரவைத்தவளின், முகத்தில் இன்னமும் தெரிந்த விரல் தடங்களை, தான் தொட்டாலும் மகளுக்கு காந்துமோ என, அவள் முகத்தைக் கையில் ஏந்தியவரை, “என் மகளை, இப்படி அடிக்க, உனக்கு எப்படி மனசு வந்துச்சு நிம்மிமா?“ என வானவன் கேட்பது போல் தோன்றியது.


அதே முகம், அவனின் சாயல், அவனின் அம்சம், இவளை எப்படி அடிச்சேன்?’ என தன் மேலே கோபம் வர, “என் மகளா பிறந்ததுக்கு நீ ரொம்ப கஷ்டப்படுறடி சன்னுமா!“ என கண்ணீர் விட்டு, தன் கையை சுவரில் குத்தி காயப்படுத்திக் கொள்ள முயன்ற நிர்மலாவின் கையை பற்றிக் கொண்ட மகள் , “இல்லைம்மா, நான் தான் உங்களுக்குக் கெட்ட பேர் எடுத்து கொடுத்துட்டேன்.” என அழ, “இல்லைடா, இல்லடா கண்ணு, அம்மாவுக்கு உன் மேல, அப்படி சந்தேகமே வரலை. நல்ல வாழ்க்கை அமையிற நேரம், எங்கயோ வந்து மாட்டிக்கிட்டியேன்னு தான் தோணுச்சு.” என நிர்மலாவும் மகளின் மேல் நம்பிக்கையோடு பேச, அதுவே சந்திரிகாவுக்கு போதுமானதாக இருந்தது.


“நீங்க என்னை நம்புறதே போதும்மா. எனக்கு வேற யார் சர்டிவிகேட்டும் வேண்டாம்.” என மகளும் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள். இருவரும் சற்று நேரம் கண்ணீர் விட்டு ஓய்ந்தனர். பின் அகம் தெளிந்தவராக பேசிய நிர்மலா, “என்கிட்ட கூட கள்ளத்தனம் இருக்குடி, உன்கிட்ட இருந்ததில்லை. உன் அப்பாவை மனசில நினைச்சவ, அவரோட வாழுறதுக்காக, என் குடும்பத்தை, மொத்தமா விட்டுட்டு தான் வந்தேன். மனசுக்கு பிடிச்சு வாழுற வாழ்க்கைக்கு, ஆயுசு கம்மியா இருந்தாலும், அது வாழ்க்கை முழுசும் மனசை நிறைக்கும். அதுனால தான் வலுக்கட்டாயமா அந்த பையனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு இஷ்டம் இல்லை.“ என தன் உண்மையான பயத்தை மறைத்து, தன் மனதில் பட்ட மற்றொரு காரணத்தைச் சொன்னார்.


சந்திரி, அம்மாவின் வார்த்தைகளில் நிமிர்ந்து அவரையே பார்த்திருக்க, “நம்ம இங்க இருக்கிறது நிறையப் பேர் கண்ணை உறுத்துது. நம்மளை வெளியேற்றத் தான் இந்த நாடகம், எனக்கு அது புரியாமல் இல்லை. உன்னைப் பாதுகாப்பா, ஒருத்தர் கையில் கொடுத்துட்டு, நானகாரு, சாந்தம்மா பொறுப்பில் ஒப்படைக்கனும்னு நினைச்சேன்.” எனவும்,


“எங்கேயா இருந்தாலும், நாம சேர்ந்தே போவோம்மா. எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு அனுப்பிடலாம்னு நினைக்காதீங்க. நானாகாருகிட்ட நல்ல விதமாவே சொல்லிட்டு, நாம இங்கிருந்து போயிடலாம்.” என மகள் சொல்லவும்,


“ஆமாம்டா, போய் தான் ஆகணும். வேற வழியில்லை. ஆனால் சமயத்துக்கு ஏத்த மாதிரி, உனக்கு ஒரு ஏற்பாடு செய்வேன். நீ அதை மீறக் கூடாது. நீ தான், என் வானவனோட வாழ்ந்த வாழ்க்கைக்கான ஒரே அடையாளம். உன்னைத் தகுந்த இடத்தில், எனக்குக் கிடைக்காத மரியாதை, அந்தஸ்தோட வாழ வைப்பேன்.” என உறுதி கொண்டவர், இத்தனை நாளும் செல்ல நினைக்காத கணவனின் பூர்விகத்தின் உதவியை நாட முடிவெடுத்தார்.


தங்கப் பாண்டியனின் பார்வை, அவன் ஜெகன் மோகனிடம் தனியாகப் பேசியதிலிருந்தே, தான் யார் எனக் கண்டு கொண்டானோ என சந்தேகம் தோன்றியது. ஜெகனுக்கு தெரிந்த அளவு கூட, தனது விவரம் தங்கத்துக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், தனது ஒரு வார்த்தைக்காக, ரெட்டிகாரு மகளின் மேல் வந்த களங்கத்துக்கு, ஒரு தீர்வு காணாமல் எளிதில் விடுவாரென்றும் தோன்றவில்லை.


இன்று நடந்த விஷயத்துக்குப் பின் ரெட்டிகாரு, தன்னோடு சகஜமாகப் பேசுவாரா என்ற சந்தேகமும் வந்தது. புஸ்கரலுவுக்காக வந்திருக்கும் உறவினர் கூட்டத்தின் முன், அவருக்கும் தேவையில்லாத ஒரு தலைகுனிவு. எல்லாம் சன்னு சொல்வது போல் சூனியக்கார கிழவியால் வந்தது. நிர்மலாவுக்கு வந்த கோபத்திற்கு நியாயமாக அந்த அம்மம்மாவின் மண்டையைத் தான் பொளந்து இருக்க வேண்டும்.


சாந்தம்மாவுக்காக பார்த்து, அமைதியாக இருந்தனர். போனில் ஒரு செய்தியை அனுப்பி விட்டு ஜெகன்மோகனோடான சந்திப்புக்குக் காத்திருந்தார் நிர்மலா.


ஜெகனுக்கும், தனது மாமியாரின் சூழ்ச்சி புரிந்தது. சாதாரண பொறாமை, இந்தளவு வளரவும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். ஆனால் அதற்கு முன் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. தங்கப் பாண்டியனின் திட்டப்படி, வெங்கடேஷ் உதவியோடு அதனை நிறைவேற்ற, தேவையான ஏற்பாடுகளில் இறங்கினார். அது நிர்மலாவின் கணக்குக்கு எல்லாம் அப்பாற் பட்டதாக, அவரை இழுத்துச் சென்றது.


பாண்டி குடும்பம், ஒரு வழியாய் திருப்தி மலை ஏறியிருந்தது. செல்லம்மாள் தம்பிகள், மருமகன்கள், மக்கள் போன்ற தம்பி மனைவி, தங்கை கணவர், மகன், பேரன் என உற்றாரோடு தன உடல் நோவையும் பொருட்படுத்தாது, வெங்கட் ரமணா, கோவிந்தா என படி ஏறி இருந்தார்.


ஏழுமலையையும் கடக்க வல்லமை தருவது, உடல் பலத்தை விட மனோபலம் தான். மனதில் உறுதி இருந்தால், மலையையும், மடுவைக் கடப்பது போல் கடக்கலாம், அதுவும், அவன் மலைக்கு வந்த பிறகு, வரும் பக்தரெல்லாம் பெருமாளின் விருந்தினர் தான். அவன் பத்திரமாகப் பாங்காகப் பார்த்துக் கொள்வான்.


அடுத்த நாள், திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீனிவாச நித்திய கல்யாணம், ஊஞ்சல் சேவை எனப் பெருமாளைச் சேவிக்க, பாண்டிக் குடும்பம் பெருமாளிடம் விண்ணப்பித்து வைத்திருந்தனர். மலையப்பன், மலை மீது நடத்தக் காத்திருக்கும் லீலைகள் என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.


 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top