My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

21.திருவின் தேவி

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,541
21. திருவின் தேவி

சந்திரகிரி மாளிகையில் நல்லமன், வல்லமன் பல் பிடுங்கப்பட்ட நாகமாக அதிகாரம் இன்றி இருந்தனர். மாளிகையின் மொத்தக் கட்டுப்பாடும் ராஜலக்ஷ்மியிடம் இருந்தது. திருமணத்துக்கு முன்பும் தனது தந்தையோடு சேர்ந்து, மாளிகை நிர்வாகத்தைக் கவனித்ததில், தர்பார் முறைகள் அத்தனையும் அத்துப்படி. தர்பாரில் மக்களைச் சந்திப்பதிலிருந்து எல்லாவற்றையும், ராணியின் தோரணையோடு செய்ய, ராஜா திரு இல்லாதது பெரியக் குறையாகத் தெரியவில்லை. இன்னும் ராஜலக்ஷ்மி ஆட்களையும், திருவை விட அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தார்.

வல்லமன், தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என அமைதியாக இருக்க, நல்லமன் சத்தமில்லாமல் மூத்தவள் வரலக்ஷ்மியிடம், இளையவள் அதிகாரத்தைப் பற்றிப் பற்ற வைக்க, “தம்புடு தகவல் தந்துட்டு தான் போனார். நீங்கச் செய்த விஷயம் தான், எங்களுக்குச் சங்கடத்தை கொடுத்திருக்கு. கௌரவத்தைக் காக்க வேண்டிய நீங்களே இப்படிச் செய்யலாமா” என மூத்தவள் கேட்க, வானவன் குடும்பத்தைப் பற்றி, கீழாகவே சொல்லி வைத்தார்.

“அவன் பொண்ணுக்கும், உங்க அந்தஸ்தைக் கொடுக்க ராஜய்யா தயாராகிட்டார். இப்படியேப் போனால், ரோட்டில் போறவன் கூட ராஜவம்சம்னு உரிமை கொண்டாடிகிட்டு வருவான், ஏதேதோ கதை பேசி , நம்ம அந்தஸ்துக்குக் கீழானவள் கூட ராணியாகும் வாய்ப்பு அமையும். நாம அவங்க முன்னாடி கை கட்டுற நிலைமை வரும். சுதாரிச்சுக்கோங்க அம்மாயி“ எனப் பெரிய தமக்கையின் சிந்தையைக் குழப்பி விட்டிருந்தார்.

அசுவமா நதிக்கரையில் ஐந்து வேலையும் பூஜைகள் முறையாய் நடக்க ஆரம்பித்தன. ஆற்றைத் தூர்வாருதல் பெரும் சவாலாக இருந்தது. புதர் மண்டி கிடக்க, ரங்கம் ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்தான். வேறு ஏற்பாடுகள், அதிகப்படியான இயந்திரங்கள் வந்தால், பஞ்சாயத்து ஆபீசில் உள்ள ஆட்கள், “மேடத்தைக் கேட்கணும் சார்” என்றனர்.

வாலாந்தூர் கோவிலுக்கு மண்டல பூஜைக்குச் செல்லும் பாண்டி குடும்பத்தினர், அதை முடித்து இங்கும் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். மாமன்கள் இங்கிருக்க, செல்வமணியும், அவனை ஒட்டியே திரியும் ஜெயபாண்டியும் அடிக்கொரு முறை வந்து சென்றனர். பத்மாசினி எல்லோரோடும் உறவு கொண்டாட ஆரம்பித்தாள்.

முதலில் ‘பூர்வ ஜென்மம் ஆளு’, ‘அருள் வந்த அம்மன் கணக்கா இருக்கு’ என ஒதுங்கி இருந்தவர்களும், யுகம் தாண்டி வந்த அதிசய தேவதையாக, ஆர்வமாகவேப் பார்த்தனர். நாள் செல்ல,செல்ல ராஜா திரு, பத்மாசினியை வைத்து கேலி கிண்டலிலும் இறங்கினர்.

“நம்பளை விட, ராசா ஒருபடி மேல, தாலி கட்டுமுன்னையேத் தலைக் குப்புற விழுந்துட்டாப்லயே” செல்வமணி வியக்க,
“ஜென்மஜென்மா இப்படி தான் இருந்திருப்பாரோ” ஜெயா சந்தேகம் கேட்க,
“இருக்கும், இல்லையிண்டா இம்புட்டுப் பணிவு வராதே. பத்மாசினி ஒரு பார்வைப் பார்த்துச்சுண்டா பாகா கரையிறாப்பலையே. இதிலிருந்து என்ன தெரியுது, எத்தனை ஜென்மம் எடுத்தாலும், பொண்டாட்டிகிட்ட அடிமையா இருந்தா தான், வாழக்கையை ஜெயிக்கலாமுண்டு தெரியுது. ராஜாவுக்கே இந்த நிலைமை தான்” செல்வமணி உணர்ந்து சொல்ல,

“அனுபவம், பரவாயில்லை தேறிட்ட மாமு” என சில்லாகித்தான் ஜெயா.
“என்னாடா பேசிக்கிறிங்க” ராஜதுரை கேட்க,
“உனக்கும், அதுக்கும் சம்பந்தம் இல்லை. கல்யாணம் ஆனா ஆம்பளைங்க பேசுகிறது” செல்வமணி சொல்ல
“இருடா பார்த்துக்கறேன்” என முறைத்தான்.

பூங்குயில் செய்து கொடுத்தாள் என செல்வமணி பலகாரங்களை பத்மாசினிக்கு தர, செம்பதுமமாக முத்தையனைப் பார்த்த மகிழ்வில்
“நன்றி மாமா” என்றாள்.

“இருக்கட்டும் ஆத்தா, கும்பாபிஷேகத்துல உன்னை பார்த்ததிலிருந்து, ஆத்தாளுக்கு உன் பேச்சு தான்.” எனவும்,
“எனக்கும், உங்கள் எல்லோரையும் பார்க்கவும் மகிழ்ச்சி” என்றாள்.
“உங்களுக்கு இப்பவும் வளரி வித்தை தெரியுமா” எனக் கேட்க,

“ஏன் தெரியாமல், வெட்டியாத் திரியிறப் பயலுவ அதைக் கத்துக்குவோம். அதை வச்சு, எங்க கைவரிசையைக் காட்டுனோமுண்டாப் பார்த்துக்கவேன்” என தங்கம் கலயாணத்தின் சமயம், தீவிரவாதிகளைப் பாண்டி குடும்பம் கூட்டாகச் சேர்ந்து வென்றது சொல்ல, பத்மாசினி ஆர்வமாகக் கேட்டாள்.
இவர்கள் சம்பாஷணையைக் கேட்டு ராஜா திருவுக்கே சற்றுப் பொறாமை வந்தது.

“மாம்ஸ், பெரிய இடத்தில ஒரண்டை இழுக்குற, அங்கப் பாரு ராசா காதில் புகை வருது” ஜெயபாண்டி, செல்வமணியிடம் சொல்ல,

“வந்துட்டுப் போகுது விடுறா மாப்பிள்ளை. பல ஜென்மம் தாண்டி, அயித்த மகன், அக்கா புருஷண்டு, மச்சினிச்சி பாசமாப் பேசுது. அது மனசு நோக கூடாதுல்ல” என்றான்.

“பயம் விட்டுப் போச்சு. நீ நடத்து மாம்ஸ்” என மாமனும் மச்சினனுமாகப் பேசிக்கொண்டு இருக்க, பின் வந்து நின்ற ராஜதுரை, “டேய் அது என் மவ” என்றான்.

“நாங்கன்னாப்ல பேத்திண்டா சொன்னோம். மாமன் மக மேல, மருமகனுக்கு இல்லாத உரிமையா” செல்வமணி உடைசல் விட,

“ஆத்தா கேட்டுக்கிட்டேயில்ல, உன் புருஷன் பக்தியா வரலை. பல்லைக் காட்ட வர்றான்” என ராஜதுரை பூங்குயிலிடம் போனில் பேச,

“குயிலு இல்லடி. நீயும் நானும் ஜென்ம ஜென்மமா, புருஷன் பொஞ்சாதிண்டு பத்மாசினி சொல்லுச்சு. அது விவரம் கேட்கத் தான் வந்தேன்” எனக் கதறிக் கொண்டு இருக்க, மாமன் மச்சினங்கள் சிரித்தனர்.

“பத்மை, அதென்ன உனக்கு மட்டும் ஸ்பெசல்” திரு கேட்க,

“வாசவரே, நீங்கள் சாப்பிடாத ராஜ விருந்தா” எனப் பரிகசித்தாள்.

“ஆனாலும் வேலையாட்கள் தான் செய்து தருவார். இப்படிப் பாசமான உறவினர் இல்லையே“ என வருந்தினார்.

“ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை” என்றவள், “சந்திர மாளிகையில் எல்லாம் சுகம் தானே, மாமி எப்படி இருக்காங்க” அவள் கேட்க,

“நலம் தான். அக்கையா பார்த்துக் கொள்வார்கள். தினமும் பேசிட்டு தான் இருக்கேன். பெத்த அக்கையா, பாவாக்கு எதுவும் தெரியாது. வெளிநாடு போயிருப்பதாகத் தான் நினைச்சுட்டு இருக்காங்க. முழு விவரம் தெரியும் போது, சற்றே கோவிப்பார்கள். பார்த்துக்கலாம்” என்றார், யோசனையாக.

காலை பூஜை முடிந்து செல்பவர், மாலை பத்மையோடு சேர்ந்து பூஜை செய்ய வந்து விடுவார். தம்பதி சமேதராகச் செய்யும் பூஜை ஆதலால் மனம் நிறைந்து இருக்கும்.

அடுத்த நாள், நைவேத்தியத்துக்கே சுதா மாமியிடம் பக்குவம் கேட்டு ஆச்சாரமாக அக்காரவடிசில் செய்து, தங்கத்திடம் கொடுத்து விட்டிருந்தார் அவன் அம்மா கௌசி. சில நாட்கள் மாலையில் ரகோத்தமன், சுதாவும் பூஜைக்கு வந்து சென்றனர்.

நைவேத்யம் முடித்து, பிரசாதம் கொடுக்கும் போது, “அண்ணா, அதெப்படி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு நாள் பிரசாதம் வருது. சொல்லி வச்சுக்குவாங்களா” என பத்மாசினி கேட்க,

“ஆமாம்மா, ஆதிசிவன் கோவில் பூஜைக்கு செய்யறதை, இங்க ஒரு பங்கு எடுத்து வச்சிடுவாங்க” என்று விளக்கிய தங்கம், சிலைகள் குறித்த விவரங்களையும், ரகோத்தமன் போட்டுள்ள பெட்டிஷனையும் சொன்னான்.

“உங்க பிஏ ஜீவன், எள்ளுன்னா எண்ணையா நிற்கிறார். பிராசஸ் சீக்கிரம் முடிஞ்சுடும்.” என்றவன், ஆற்றைத் தூர்வாரும் பணியையும் மேற்பார்வை இட்டான்.

“இது ராதா மேடம் கண்ட்ரோல்ல தான் வரும். இன்னும் சில ஆளுங்களை விட்டா, வேலை சீக்கிரம் நடக்கும். நம்ம கூலி கொடுத்துக்கலாம். பேசிப் பாருங்க” ராஜா திருவிடம் சொல்ல,

“அதுவும் நல்ல யோசனை தான்” என்றார்.

ராஜதுரை, “அதுக்கு எதுக்கு அந்தம்மாளைக் கேட்கணும். நம்மளே ஆளை விடுவோம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாதப் பொம்பளை. வேலை நடக்குதுண்டும் பார்க்க வரலை, தங்கச்சியையும் பார்க்க வரலை” எனச் சிடுசிடுக்க, பத்மாசினி முதல் மற்றவர்கள் ரகசியமாகச் சிரித்தனர். தினமும் பத்மாசினி போனிலேயே எல்லாம் ஒப்பித்து விடுவதால், ராதா ராணி இந்தப் பக்கமே வரவில்லை. விசாரித்ததில், உசிலம்பட்டி வருவாய் வட்டத்திலிருந்து, மற்றொரு வருவாய் வட்டமான வாடிப்பட்டிச் சரகத்துக்கு மாறி இருப்பது தெரிய வர, ராஜதுரைக்கு ஏமாற்றமாகப் போனது.

“போ ஆத்தா, நீ என்னனோமோ சொன்னேண்டு, நான் கற்பனையை வளர்த்துக்கிட்டேன், இப்போ பாரு எலிசபத்து ட்ரான்ஸபர் வாங்கிட்டுப் போயிடுச்சு” என வருந்திக் கொண்டிருக்க, பத்மாசினி தேறுதல் சொன்னாள்.

அந்த நேரம், சக்தி பிரியனோடு வந்த ரங்கத்துரையின் மகள் மீனா, விவரம் கேட்க, அவளிடமும் சோக கீதம் வாசித்தான்.

“நீ கவலைப்படாத அப்பா, சின்னம்மாளோடச் சேர்த்து வைக்க வேண்டியது, உன் மகளுங்க எங்கப் பொறுப்பு” என்றாள்.

“இதுல நீங்க இரண்டுபேரும் கூட்டா” என பத்மாசினியைக் கேட்க, அவள் சிரித்தாள். “இரண்டு பேர் மட்டுமில்லை, சித்ரா, சன்னு மதினி, சிவா மதினி எல்லாரும் தான்” மீனா சொல்ல, “சரி தான்” எனத் தலையை ஆட்டிக் கொண்டான்.

பூஜை ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கடந்து இருந்தது. புதுவருடம் பிறக்க இருக்க, ராஜா திரு மாளிகையில் இருக்க வேண்டிய கட்டாயம் வந்தது. பத்மாசினியைத் தனியாக விட்டுச் செல்லத் தயங்கினார்.

“வாசவரே, பூஜையும், வேலையும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. நீங்கள் சென்று வாருங்கள். இங்கு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

“உன்னைப் பிரியவே மனம் வரவில்லை பத்மை. பத்மாசினியாய் உனக்கு என்னைப் பிடிக்கும். ஸ்ரீதேவிக்கு என் மீதும் நோக்கமில்லை, ராஜ குடும்பத்தின் மீதும் அதிருப்தி இருக்கிறது. அங்குச் சதிக்கும் பஞ்சமில்லை. முறைப் பெண்களுக்கும் குறைவில்லை. பெத்த அக்கையாவிற்கு, பாவாவின் தங்கை பவதாரிணியை, எனக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம். மாளிகையிலேயே உட்கார்ந்திருக்கும் நல்லமன், வல்லமன் தாத்தாக்களுக்கு, அவர்கள் பெண் வழி வாரிசை என் தலையில் கட்டி, அதிகாரத்தை கை பற்ற நினைக்கின்றனர்.” பெண்கள் அட்டவணையை அவர் அடுக்க, பத்மாசினிக்குப் பொய்யாய் கோபம் வந்தது.

“ஆஹா, நீங்கப் பெரிய, ராஜா, மகாராஜா தான் ஒத்துக் கொள்கிறேன். மாயவனையம், அவர் மனைவிகளையும் சந்திர மாளிகையில் சேர்ப்பது வரை தான் என் கடமை. அதன் பிறகு மஹாராஜாராய் அவர்களில் ஒருவரைக் கட்டிக் கொள்ளுங்கள், இல்லை எல்லாரையுமே கட்டிக் கொள்ளுங்கள்” என அவள் பேசி முடிக்கும் முன், அவள் வாயைப் பொத்தியிருந்தார்.

“விளையாட்டாகக் கூட அந்த வார்த்தையைச் சொல்லாதே. நீ இல்லாத வாழ்வை என்னால் கற்பனையும் செய்ய முடியாது. சிந்தை தவறி பாறையில் ஓவியம் வரைந்த வேங்கடவனாகக் கூட நான் வாழ விரும்பவில்லை. நான் ஒரு ரைபிள் சூட்டெர்” என அவர் அடுத்துச் சொல்லும் முன், இப்போது அவர் வாயைப் பொத்துவது அவளின் முறையாய் போனது.

“இல்லை வாசவரே. எதுவும் சொல்லாதீர்கள்.” என்றாள் கண்ணீரோடு, ஏற்கனவே ராஜா திருவின் கண்களில் நீர் வடிந்து கொண்டு தான் இருந்தது.

“எனக்கு வாக்குக் கொடு, யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்கக் கூடாது. ஸ்ரீதேவி வடிவிலிருந்தாலும், சிலை பிரதிஷ்டைக்கு முன் என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்” என அவள் முன் கையை நீட்ட,

“கட்டாயம் வாசவரே. பத்மாசினியோ, ஸ்ரீதேவியோ, இருவரும் இந்த திருவுக்குத் தான் சொந்தம்.” எனச் சத்தியம் செய்தவள், அவரின் பிரிவை தாங்கதவளாக அவர் மார்பில் சாய்ந்து கொள்ள, அவரும் இறுக அணைத்து உச்சி முகர்ந்தார். வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர்.

நினைவு உலகுக்குத் திரும்பிய ராஜா திரு “மெய்காவல் படை உன்னைச் சுற்றித் தான் இருப்பார்கள். மாமையா இருவரின் துணை இன்றி எங்கும் போகாதே. உத்தமரும், அனுமந்துவும் உனக்கு நிழலாக இருப்பார்கள். தங்கபாண்டியனுக்குத் தகவல் சொல்லி விட்டேன்” என அவர் அடுக்கிக் கொண்டே போக, அவரின் அன்பு புரிந்தது.

“கை விலங்கையும் மாட்டி, சாவியை உங்களிடம் வைத்துக் கொள்வது தானே” எனப் பரிகசிக்க, அதுவும் தான் என்றவர், தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை எடுத்து அவள் கையில் கட்டி விட்டார்.

“இது என்ன” அவள் அதிசயிக்க, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை விவரித்தார். “நீ இருக்கும் இடத்தை எனக்குக் காட்டி விடும்” என்றார்.

இது அறுந்து விழுந்து விட்டால்“ எனச் சந்தேகம் கேட்க, தன் கழுத்திலிருந்து ஒரு சங்கிலியைக் கழட்டி, அதன் டாலரைக் காட்டினார். ஒரு பக்கம் திருப்பதி பெருமாளும், மறு பக்கம் திருவும் இருக்க, அதற்குள் மைக்ரோ ஜிபிஸ் கருவி இருந்தது.

“இது தண்ணி பட்டாலும் எதுவும் ஆகாது. குளிக்கும் போது கூட, இதை கழட்ட கூடாது“ என அவள் கழுத்தில் போட்டு விட்டு டாலரை மாராப்புக்குள் போட்டு விட, அவர் சீலையைத் தொட்டதில், கையில் அடித்து “ம்ம்” என் மிரட்டினாள்.

“பிறர் கண்ணில் படவேண்டாம் என்று தான்..” என இழுத்தவர், உடல் ரகசிய சிரிப்பில் குலுங்க, “என்னவாம்” என்றாள்.

“டாலரில் யார்” என்றார்.

“மாயவன், அவர் இல்லாத இடம் தான் ஏது” என்றாள்.

“மறுபுறம்” என அவர் புருவத்தை உயர்த்த, அவளுக்கு வெக்கம் வந்து விட்டது.

“வாசவரே” என முகத்தை மூடிக் கொள்ள, அவர் சிரிப்பு விரிந்தது.

“மாயவனுக்கு மட்டுமில்லை, என் பத்மையின் இதயத்தில், இந்த மாமனுக்கும் எல்லா உரிமையும் உண்டு” என ரகசிய குரலில் சொல்ல, செம்பவள வண்ணத்துக்கு மாறியவள், “அது என்ன புதிதாய் மாமன்” எனக் கேட்க,

“இவர்கள் அப்படித் தானே முறை சொல்கிறார்கள். நீ கூட செல்வ மணியைச் சொன்னாயே” எனவும்,

“ஆத்தாடி, பொறாமையைப் பாரு” எனக் கன்னத்தில் கை வைத்தவள், “நம் பந்தம், ஜென்ம, ஜென்மமாய் தொடர்கிறது வாசவரே. இந்தப் பத்மை மீது உங்களுக்கு மட்டும் தான் அதிகாரம்” என அவர் கன்னத்தில் இதழ் பதிக்க, மறு கன்னத்தையும் திருப்பி அவள் அன்புப் பரிசை வாங்கிக் கொண்டவர்,

“இப்படியெல்லாம் பேசினால் தானே கிடைக்கிறது” என் பெருமூச்சு விட்டு அவளுக்கும் பதில் பரிசைத் தந்து விட்டு பிரியாவிடைப் பெற்று சந்திரகிரி மாளிகைக்குக் கிளம்பினார். அங்கே அவருக்கு எதிர்பாராத ஒரு திருப்பம் காத்திருந்தது.

மார்கழி மாதம், ஊரே தெய்வீகமாக எங்குப் பார்த்தாலும் சிறு கோவில்களிலும் அதிகாலையில் மைக் செட் அலறிக் கொண்டு தான் இருந்தது. நாற்பத்து எட்டு நாள் மண்டல பூஜை இருக்க, பாண்டி குடும்பமே கவுச்சி புழங்காமல் தான் இருந்தனர்.

பேச்சியம்மாளுக்கோ அன்று பார்த்த பேத்தியாளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழ, மகன் வீரபாண்டி, மருமகள் அசோதையுடன் வந்தார்.

“அப்பத்தா” என அவர் கையைப் பிடித்து, பத்மாசினி தன் கூடத்தில் கூட்டிச் சென்று அமர்த்திக் கொள்ள, “வாங்க ஆத்தா” என ரங்கம் வரவேற்றான்.

“இதுதான் செல்லமுத்து பேர்ல இருக்க அறக்கட்டளையா” என விசாரித்தவர், பத்மாசினியிடம், “ஏன் ஆத்தா, இந்தக் காட்டுல கரடுல உட்காராமல் நம்ப வீட்டுக்குத் தான் வாவேன்” என்று அழைக்க,

“கட்டாயம் வர்றேன் அப்பத்தா, ஆனால் இப்போ இங்கே தான் இருக்கணும். அது தான் நான் செய்த பிழைக்கானப் பிராயச்சித்தம். நான் எடுத்த காரியம், நல்ல படியா முடியணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என பேச்சியம்மாள் காலில் விழ,

“மகராசியா இரு. நீ மனசில நினைச்சதை எல்லாம், கருப்பன் பக்கத் துணையா நிண்டு நிறைவேத்தி வைப்பான்.” எனத் திருநீறு இட்டவர், “வீரா, அதைக் கொண்டா” எனக் குரல் கொடுக்க,

வீரன், வளரியையும், அருவாளைக் கொண்டு வர, அதை வாங்கி “எங்க சாமி ஊட்டுல, பல தலைமுறையா வச்சுக் கும்புட்டுக்கிட்டு வாரோம். உன் சீயான் ராத்திரி கானாவில் வந்து, பேத்தியாகிட்டக் குடுண்டு சொன்னாரு. வாங்கிக்க ஆத்தா” என பேச்சியம்மாள் நீட்ட, அதைத் தொட்டு வாங்கியவளுக்கு மேனி சிலிர்த்தது. அவை கழுவன் குடும்பம் பயன்படுத்திய வாளும், வளரியும். மண்டியிட்டு பெரிய கிழவி பேச்சியம்மாளிடம் இருந்து பெற்றுக் கொண்டாள்

“ஆத்தா, இதைக் கொடுக்கச் சொல்லவும் தான் எனக்குக் கொலையே நடுங்கி போச்சு. இம்புட்டு பெரிய ஆபத்து உனக்கு இங்க இருக்குமுண்டா, இங்க தங்க வேண்டாம். பூசைக்கு மட்டும் இங்குட்டு வந்துட்டு போ” என மறுபடியும் சொல்ல,

“எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தாலும், நான் இங்க தான் இருக்க வேண்டும் அப்பத்தா. இந்த உடம்புக்கு உரியப் பெண் ஸ்ரீதேவி, எனக்காக ஒரு மண்டலம் தன் மேனியை விட்டுக் கொடுத்து இருக்கிறாள். நீங்கக் கவலைப் படாதீங்க, அதுதான் கருப்பன் வந்திட்டான். இரண்டு துரைகளும் துணைக்கு இருக்காங்க. எதுவும் ஆகாது. இந்த முறை எடுத்த சபதத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.“ எனச் சூளுரைத்தாள்.

அசோதை, தான் கொண்டு வந்திருந்த உணவை வாஞ்சையாய் பரிமாற, உணர்வு பெருக்கோடு ரசித்து உண்டாள்.

இருபது நாட்கள் கடந்து இருக்க, பெருமாள் சிலையை அடுத்து எப்படித் தேடுவது என பத்மாசினிக்கு சிந்தையில் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. நானூறு வருடம் என்பது அவ்வளவு குறைவானக் காலகட்டம் இல்லை. நதியே திசை மாறி இருந்தது. முன் ஜென்மத்தை நினைவில் கொண்டு வந்து, மேலும் யோசிக்க, புத்தூர் மலைக் கரடில், முன்பு இருந்த கொற்றவைக் கோவிலின் நினைவு வந்தது பத்மாசினிக்கு. சுண்டனைப் பலி கொடுத்தது அங்கு தான். அதைப் பற்றி, ரங்கம், ராஜதுரை மற்றும் பளிங்கர்களிடமும் விசாரித்தாள்.

“எங்க குலசாமி அங்க இருந்ததாச் சொல்லுவாக தாயி. அங்கிருந்து பிடி மண் எடுத்து கொண்டு வந்து, அவரவர் இருக்க இடத்திலையே வச்சுக்கிட்டோம். கொற்றவையும், குமரனும் இருப்பாக” என்றனர்.

பத்மாசினியின் இந்த தேடல், புதிய ஆபத்தைக் கொண்டு வருமா பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top