Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,585
வானம்பாடி-20.
மானூத்துப்பட்டி பாண்டியன் இல்லம், அழகி, ஹரிணி தலைமையில் இளையவர்கள் மாடியில் கொட்டம் அடித்துக் கொண்டு இருக்க, ஹரிஷும், ஹிதேசும் நேற்று செல்லமுத்துவின் பெட்டியிலிருந்து எடுத்த புகைப்படங்களை திருத்தி அச்சு போட்டுக் கொண்டு வந்தனர்.அத்தை மகளை வம்பிழுக்க ஹிதேஷ் பறந்து விட, ஹரீஷ் பாண்டி குடும்பத்தின் மூத்த வாரிசாக, மீனாவுக்குப் பொறுப்பான தம்பியாக அங்கேயே இருந்தான். மூன்று குரூப் போட்டோ தொல்லியல் துறையினரோடு எடுத்ததும், மேலும் சில படங்கள் ரங்க துரை வீட்டில் எடுத்ததாகவும் இருந்தது. மீனா எல்லா படத்தையும் ஆவலாக வாங்கி பார்க்க, பூவும், பூமாவும் அவளோடு சேர்ந்து படங்களை எட்டிப் பார்த்தனர்.
அவர்களிடம் தான் பார்த்த புகைப்படத்தைக் கொடுத்துவிட்டு, குழு புகைப்படத்தைச் செல்வத்திடம் காட்டி, “மாமா, இது நீ சொன்ன ஆர்க்கியாலஜி குரூப் கூட எடுத்தது போல, இதில என் அம்மாவை மட்டும் தான் தெரியுது. இதுல என் அப்பா இருக்காறா?“ என அவள் கேட்கவும், செல்வம் அவளை இயலாமையோடு பார்க்க,
“ஒகே, ஒகே. உணர்ச்சி வசப்படாதா மாமா, உன் அக்கா சொல்லலயிண்டாலும், உண்மை அது தானே, கபிலன் இருக்காப்லையாண்டு பார்த்து சொல்லு. எனக்கு உயிர் கொடுத்தவர் யாருண்டாவது தெரிஞ்சிக்கிறேனே, எனக்கு அந்த உரிமை கூட இல்லையா, ப்ளீஸ் மாமா!“ எனக் கெஞ்சலாகக் கேட்கவும், செல்வம் புகைப்படத்தைக் கூர்ந்து நோக்கினான் .
“இவர் தான் அந்த ப்ரொபஸர், இவங்க எல்லாம் அவருக்கு கீழ ஆராய்ச்சி செஞ்ச மாணவய்ங்க. இதில ஒருத்தரை அந்த தேவி மதினி கல்யாணம் கட்டிக்கிச்சு, அது கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ண சர்ட்டிபிகேட், பின்னாடி ப்ரொபஸர் காட்டினார். அதுனால தெரியும்.
இந்த ஆள் தான், அந்த டிரைவர். தேவி மதினி கல்யாணம் கட்டின ஆளுக்கு கை ஆளு. இவன் பேரு தான் கபிலன், தேவி மதினி ஓடிப்போன பிறகு, இந்தாளு உன் அம்மாவை ரகசியமா சந்திச்சு பேசுவாருண்டு ஊருக்குள்ள சொன்னாய்ங்க.“ எனக் கபிலனை, மீனாவின் அப்பா என்று கூட அறிமுகப்படுத்த மனசு வரவில்லை. ஏனெனில் செல்வ மணியே, அக்காள் கணவனாகக் கபிலனை மனதளவிலும் ஒத்துக் கொண்டது இல்லை.
அதனால் டிரைவர் கபிலன் என்று மட்டும் சொல்ல, அவன் முகம், சந்தானத்தையும், அம்மாசி கிழவனையும் நினைவுக்குக் கொண்டு வந்தது. ஒரு முறை அவர்களிடமே கபிலரின் புகைப்படத்தைக் கேட்ட பொழுது, செய்தித்தாளில் வந்தது தான் உள்ளது எனக் காட்டிய படம், கருபடித்து போய், மங்கலாகத் தான் தெரிந்தது. சமயம் கிடைக்கும் பொழுது, அவர்களுக்கும் மகனின் புகைப்படத்தைக் கொண்டு போய் காட்டி விட்டு வரவேண்டும் என நினைத்துக் கொண்டாள் மீனா.
கூடத்துக்கு வந்த பேச்சியம்மாளை ஹரீஷ் கை பிடித்து அவரது ஆஸ்தான சேரில் அமர வைத்தான். “என்னத்தை பார்த்துகிட்டு இருக்காளுங்க?“ என கொள்ளு பேரனிடம் கேட்க, அவன் பழைய புகைப்படங்களை சீரமைத்து அச்சு போட்ட கதையைச் சொல்ல, “உங்க பாட்டன் படம் இருக்கு, அதைக் கூட போட்டு குடு ராசா.“ எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மற்றொரு புகைப்படத்தை, பூவும், பூமாவுமாக பார்த்துக் கொண்டிருந்தனர், “உன் மாமனை விட, உங்கம்மா நிறமா தாண்டி இருந்திருக்கு. நல்லா லட்சணமா இருக்கு. மூக்கும் முழியும் உனக்கு உன் அம்மாவாட்டம் தான்.” எனப் பூங்குயில் செல்லமுத்துவை, தன் மாமனோடும், மருமகளோடும் ஒப்பிட்டு ஆறு ஒற்றுமைகள், வேற்றுமைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, செல்வ மணிக் கையிலிருக்கும் படத்தில் பாசமலரைக் கண் எடுக்காமல் உணர்ச்சி வயப்பட்டுப் பார்த்திருந்தான்.
பூவு, சைகையாலேயே மீனாவுக்கு அதைக் காட்ட, “எனக்கும் என் அம்மாவைப் பார்க்கவும் கண்ணு வேர்க்க தான் செய்யுது, நீ சண்டைக்கு வருவியேண்டு பேசாம இருக்கேன்.” என மீனா சொல்ல, “நான் என்னத்துக்கு சண்டைக்கு வரேன், என்ன இருந்தாலும் பெத்தவளை பார்த்தா, கண் கலங்கத்தானே செய்யும்.” என பூவு சொல்லவும், மீனாவுக்குக் கண்ணில் நீர் வந்தது.
அதைப் பார்க்கவும், விட்டா மாமனும், மருமகளும் இன்னிக்கு பொழுதையும் சோகமாகவே கழிப்பார்கள் என்று எண்ணி, அந்த ஏக்கத்தை போக்க வென
“என்னத்த செஞ்சாலும், நான் உனக்கு அத்தைக்காரி தானே, நான் உன் அம்மாளுக்கு ஈடாகுமா? மாமனோட ஜோடி போட்டு பீல் பண்ணு போ.” எனத் திரும்பிக் கொள்ளவும், “இதுக்குத் தான் பயந்தேன். என் மேல உனக்குத் தான் அத்தை முதல் உரிமை, என் மாமனுக்கு, அம்மாச்சிக்கும் கூட அடுத்த உரிமை தான். டீல் ஓகேயா. நீ கோவிக்காதே அத்தை.” என மீனா, அம்மாவின் படத்தைப் பார்ப்பதை விட்டு, அத்தையை கொஞ்சி சமாதானம் செய்தாள்.
பூமாவும், சிவாவும் இந்த அத்தை மருமகள் பிணைப்பைப் பார்த்து, இது தானே இந்த குடும்பத்தின் சிறப்பு என நினைத்தனர்.
“ஏண்டி, புள்ளைய, அது அம்மா படத்தைப் பார்த்துக் கூட பீல் பண்ண விட மாட்டியா. எல்லாரும் உனக்குத் தான் முதல் அடிமையா இருக்கணும்.” என செல்வமும் சூழலை சகஜமாக்க நாடகமாடி மனைவியைக் கோபிக்க, “ஆத்தாடி, யாரு, நீயி, நீ எனக்கு அடிமையா இருக்க? ஆமாமாம் ஊருக்குள்ள நிறைய பேரு அப்படித் தான் பேசிக்கிறாய்ங்கே.” என பூவு வம்பு வழக்க,
“அட நெஜமாத்தாண்டி, பொண்டாட்டிகிட்ட எப்படி அடிமையா கிடைக்கனுமுண்டு செல்வ மணியைப் பார்த்து படிச்சிக்கண்டு சொல்றாய்ங்க. நீ என்னை அப்படி அடிமையா வச்சிருக்க. என்ன மாப்பிள்ளை நான் சொல்றது சரி தானே? உங்கத்தை, மாமனை அடிமையா தானே வச்சிருக்கா?” எனச் செல்வம் ஹரிஸையும் கேட்க, “ஆத்தி நான் இந்த ஆட்டைக்கே வரலை . என்னை விட்டுருங்க மாமா.” என மாடிக்குப் பறந்தான்.
மீனா கண்ணாலும், பூமா வாயைப் பொத்தியும் , சிவப்ரியா வாயைவிட்டே சிரிக்க, ”அது யார், கூறு கெட்ட பய, இந்த கேள்வியை உன் மச்சினன், முத்து பய கிட்ட கேக்காமல், உன்னைப் பார்த்துக் கேட்டவன்?” என கேட்டு பேச்சியம்மாள் பொக்கை வாயால் சிரிக்க, இப்போது முறைப்பது சிவப்பி முறையானது.
“உனக்கு எங்களை ஒரண்டை இழுக்கலையிண்டா பொழுது விடியாது அப்பத்தா.” என பூவு அப்பத்தாவைக் கேட்க, “ஆமாம்டி, உன் தாத்தன் எப்ப என்னை கூப்பிட்டுக்குவாருண்டு பார்த்துக்கே, என் பொழுது விடியாமத் தான் உட்கார்ந்திருக்கேன்.“ என பேச்சியம்மாள் அங்கலாயத்தார்.
“அப்பத்தா, இப்ப என்ன சொல்லிப்புட்டேண்டு தாத்தாவை இழுக்குற, நீ மட்டும் லந்தை குடுப்ப, நாங்க ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாக்கும்.” என குறைபட, சிவப்ரியா “ஏன், பாட்டன் அங்கிட்டு போயி நிம்மதியா இருக்கிறது உனக்கு பொறுக்கலையாக்கும். அங்கையும் தொரத்திக்கே போகணும்ங்குற, கொஞ்ச வருஷம் நிம்மதியா இருந்துட்டு போறாரு விடு!“ என வம்பிழுத்தாள்.
“அம்மாச்சிக்கு இது தான் சரியான ஆளு, நீ இரண்டு வார்த்தைக்கு மேல தாங்க மாட்டடி குட்டச்சி.“ எனச் செல்வம், மனைவியிடம் சிவப்ரியாவை பெருமையாகச் சொல்ல, “உங்க அப்பன், மக்களுக்குத் தான் பேச்சு வக்கணையா வரும். போதுமா?” என பூவு கணவனோடு தனி வம்பு இழுத்துக் கொண்டிருக்க, பேச்சியம்மாள், பேரன் பொண்டாட்டியை ஒரு கை பார்த்தார்.
“அடியேய், என்னையும், உன்னையாட்டம் புருஷனை விரட்டி விடுறவண்டு நினைச்சியா? அடிச்சாலும், புடிச்சாலும் ரூம்புக்குள்ள தான். விஷயம் வெளியே வராது.” எனப் பேச்சி தற்பெருமை பேசிக் கொள்ள,
“தங்கம் மாமா கல்யாண நேரத்துல, பாட்டன் ஒரு வார்த்தை பேசாமல் இருண்டு சொல்லிட்டாருண்டு எப்படி அவரை சுத்தல்ல விட்டேண்டும் தெரியும். முத்தம்மா கிழவிக்குப் பயந்துகிட்டு, அவரு கூட சமாதானம் ஆனதும் தெரியும். அது தான் நீ செவந்தண்டு, உன் பேரன்மாரு மண்டபத்துக்கே போட்டோ புடிச்சு காட்டுச்சுங்களே!” எனச் சிவா நீட்டி முழக்க, அந்த நாள் நினைவில் பூவு, பூமா செல்வம் மூவருமே சிரித்தனர். மீனா சிறுமியாக இருந்ததால் விவரம் தெரியவில்லை.
மீனா, “அதென்ன விஷயம் எனக்கு விளக்கமா சொல்லேன்.” எனக் கதை கேட்க, “அது வந்து…” எனச் சிவா ஆரம்பிக்க, “அடியேய், குமரிகளா சேர்ந்துக்கிட்டு என் மகன், மருமகளுங்க இல்லாத நேரம் லந்தையா குடுக்குறீங்க. வரட்டும்டி, பாண்டி மக்கள், பஞ்சாயத்தை கூட்டுறேன்.” என பேச்சியம்மாள் மிரட்ட,
“இருக்கிறதுலையே பெரிய புளுகு, இது தான். பேச்சி கிழவிக்கு பேசறதுக்கு சப்போர்டுக்கு ஆள் வேணுமாம்.” எனச் சிவா சொல்லும் போதே, உள்ளே நுழைந்தான் முத்து. அவள் கை நீட்டியும், அவளைப் புறக்கணித்து காய்கறி பையை பூமாவிடம் கொடுக்க, பேச்சி நமுட்டு சிரிப்பு சிரிக்க, சிவா வக்கணை காட்டிவிட்டு பிள்ளைகளைப் பார்க்கவென மாடிக்குச் சென்றாள் . “முத்து, கொக்குளத்துக்காரி கோவிச்சுக்கிட்டு போறா. போயி என்னெண்டு கேளு.” எனப் பேச்சி பேரனுக்குச் சொல்லிக் கொடுக்க, “ஆத்தி, இப்போ போன ஒரண்டை இழுப்பா, நான் மாட்டேன்.” என முத்து அங்கேயே அமர்ந்தான்.
“அம்மாச்சி, புள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுற வித்தையை உன்கிட்ட தான் கத்துக்கணும்.” எனச் செல்வம் சிரிக்க, “மோட்டு வளையத்தையே எத்தனை நேரம் பார்த்துக்கே உட்கார்ந்து கிடக்குறது . இப்படி ரெண்டு ஓரண்டை இழுத்து விட்டமுண்டா நல்லா இருக்கும். இப்ப பாரு, உன் மகள் தனி படம் காட்டுவா. நமக்கு ஜாலியா பொழுது போக்குமுல்ல.“ எனச் சிரிக்க, பூங்குயில் அம்மாச்சியையும், பேரனையும் சேர்த்து முறைத்தாள்.
ஆனால் பேச்சியின் பேச்சு எல்லாமே, சூழலை சகஜமாக்க, தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கச் செய்யும் நல்ல சூழ்ச்சியாகவே இருக்கும்.
“ஏன் மதினி, புள்ளைகுட்டியெல்லாம் இருக்குதுங்க, மாமா ரொம்ப நாள் கழிச்சு இங்க தங்கியிருக்காரு, கறி மீனுண்டு எடுக்காமல், காய்கறியை வாங்க சொல்றீங்க?” என முத்து குறைபட,
“நான் தாண்டா வேண்டாமுண்டு சொன்னேன்.” எனப் பூங்குயிலும், “திருப்பதியில் நாளைக்குக் காலையில் சாமி கும்பிட்டுருவாங்க, மதியத்துக்கு எடுத்துக்குவோம் முத்து.” என பூமாவும், சொன்னார்கள்.
மீனா காட்டிய புகைப் படங்களை, முத்துவும் பார்த்தவன், “என்னா செல்லமுத்து மதினி இவிங்களோட ஒன்னும் மன்னா போஸ் கொடுத்திருக்கு.” ஒரு போட்டோவை காட்டி கேட்க, செல்வம் ஓர் பெரு மூச்சு விட்டான். துரை குடும்பம் மொத்தமும் அந்த புகைப்படத்தில் இருக்க, தேவி செல்லமுத்துவையும் இழுத்துப் பிடித்து நிற்க, அதற்கு அடுத்து, ரங்கதுரை கெத்தாக நின்று போஸ் கொடுத்திருந்தான். அதைப் பார்த்த மீனாவிற்கு, தன் அம்மா, ரங்கம், ராஜ துரையை மட்டும் அடையாளம் தெரிந்தது. மீதி இருப்பவர்கள் யாரென வினவ, பேச்சியம்மாள், “எங்க கொண்டா?” என வாங்கி பார்த்தவர்,
“இது உன் தாத்தனுக்குத் தம்பி துரை குடும்பம், அவருக்கு மூணு மகனுங்க, இவள் ஒத்த மகள். பேர் நிர்மலா தேவி, தேவிண்டு கூப்பிடுவோம். இவ அம்மா, அவளோடையே தான் ஒட்டிக்கே திரியிவா. முத்துவுக்கு, தேவி முறைக்குச் சித்தியா இருந்தாலும், இரண்டுக்கும் கிட்டத் தட்ட ஒரே வயசு. ஓடிப்போய் கல்யாணம் கட்டுறதை இந்த கழுதை ஆரம்பிச்சு வச்சது தான்.“ என அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்ததையும், திருமணத்தன்று அவள் சொல்லாமல் ஓடியதையும் விவரித்தார். “இந்த போட்டோ, அப்பத்தான் புடிச்சிருக்கணும்.” என விவரம் சொன்னார்.
ஜெயா, வெளியே சென்றுவிட்டு வந்தவன், செல்வத்தை, “மாம்ஸ் வெளிய வா!” என போன் போட்டு ரகசியமாக அழைக்க, மீனாவிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றான்.
“ரங்கத்தை, போட்டவனை ராஜதுரை தூக்கிட்டான். நேத்தே சொன்னேன்ல, கீரிப்பட்டி காரன் சொன்ன மாதிரி, குடிவேந்தன் ஆளு தான்.” என ரகசியம் சொல்ல, “பசங்க போட்டோ பிரிண்ட் போட்டு வந்திருக்கானுங்க, அதில அந்த குடி வேந்தன் கஞ்சிக்குச் செத்த பயலாட்டம் வத்தலா இருக்கான், இப்போ ஆளை பார்த்தியா. பெரிய தலைகிட்ட இருக்க வரைக்கும் அவனைத் தொட முடியாது. ராஜதுரை அவன் ஆள தூக்கி இருக்காண்டா. அப்போ சம்பவம் உறுதி.” என செல்வமணி தன் யூகத்தைச் சொல்ல,
“ஆமாம் மாம்ஸ், குடும்பம் பிள்ளை குட்டிண்டு இல்லாதவனுங்க எதுனாலும் செய்வாய்ங்க. நாம சூதானமா இருக்க வேண்டியது தான். நீ உணர்ச்சி வசப்படாமல் இரு. அதுக்கு தான் சொல்லி வைக்கிறேன். எதுக்கும் தங்கத்து காதில் போட்டு வைப்போம், அவன் தான் பவர்ல இருக்கான்.” என்றான் ஜெயா.
“ஏண்டா, மாப்பிள்ளை உன் சித்தப்பன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா. அவருக்குத் தாண்டா மேட்டர் தெரியும். அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே. ஆனால் எல்லாரும் திருப்பதி மலை எறிக்கிட்டு இருப்பாங்கள்ல.“ எனச் செல்வம் சொல்லவும், ஜெயா போனில் தங்கத்தின் போன் நம்பரை அழுத்தியபடி,
“ஆமாம் மாம்ஸ், எல்லாரும் வேன்ல போயிக்கிட்டு இருக்காங்க. இப்ப தான் அண்ணன் கிட்டப் பேசினேன், சித்தப்பாகிட்டையும் சொல்லிட்டேன். அவர் தான் உன்னைச் சூதானமா இருக்கச் சொன்னார். ஆள் சிக்கின முண்டா எவனாவது சம்பவம் பண்ணிட்டு, பழியை நம்ப மேல போட்டுருவானுங்க. நம்ம வேற இப்போ எதிர்க்கட்சி, இன்னும் சூதானமா இருக்கனும். தங்கம் வேற வேலையா போயிட்டாண்டு அண்ணன் சொல்லுச்சு. அப்படி எங்க போனான்.“ என ஆராய்ந்தபடி போன் அடிக்க, போனை கட் செய்தான். “கட் பண்றான்.” என ஜெயா யோசிக்க,
“டேய், ஏதோ முக்கியமான வேலை, விசாரணையில் இருக்கப் போறான். உன் நம்பரை பார்த்துட்டு கூப்புடுவான் பொறு.” எனச் செல்வம் சொல்லவும், “அதுவும் சரி தான், ஆனால் அந்த குடி வேந்தன் இருந்த போட்டோவை காட்டு, அதை போட்டோ புடிச்சு அனுப்பி விடுவோம்.” என வீட்டுக்குள் செல்ல முயல, “இருடா, அது தான் உன் மகள், அம்மாளைப் பார்த்த குஷியில், அம்புட்டு பேருக்கும் போட்டோவை அனுப்பி விட்டுட்டு இருக்கு, பார்.” என சொல்லும் பொழுதே, மெசேஜ் சத்தம் வந்தது. அதை ஜெயா தனக்கு அனுப்பிக் கொண்டு, தங்கத்துக்கும் அனுப்பி விட்டான்.
இதே புகைப்படங்களை, மீனா உணர்ச்சி வசப்பட்டு ராஜதுரைக்கும் அனுப்பி வைக்க, “இது ரொம்ப முக்கியம்.” என இகழ்ச்சியாக டெலிட் செய்யப் போனவன், ஒரு நொடி தாமதித்து கவனமாகப் பார்க்க, “அச்சடா ராஜா!“ எனக் குதூகலம் ஆனவன், தன் அண்ணனுக்கும் குடும்ப போட்டோக்களை அனுப்பி விட்டு, அவன் பிடியில் இருந்தவனை பார்க்கப் போனான்.
“ஏண்டா இந்த மொகரக்கட்டை உன்னது தானே. குடிவேந்தன் யாருண்டு தெரியாதுன்னு சொன்ன. இப்ப சொல்றா?” என ராஜதுரை போட்ட அடியில், அவன் கைப்பற்றியிருந்த குடி வேந்தனின் ஆள், ரங்கத்தைக் கொல்லச் சொன்னது, அவர்கள் உடன் பிறந்த நிர்மலா தேவி தான் எனப் போட்டுக் கொடுத்தான். ராஜதுரை வெகுண்டான்.
படுக்கையிலிருந்து கண் விழித்த ரங்கத்தை தனம் கவனித்துக் கொண்டிருந்தார். “எத்தனை வருஷம் ஆனாலும், மனுஷனுங்க பகை ஓயாது போல. மிச்ச காலத்தைக் கோயில், குளமுண்டு சேவை செஞ்சு கழிக்கலாமுண்டு நீ நினைச்சாலும், உன் வினை உன்னை விடாது போல.” எனப் புலம்பியபடியே ரங்கத்தை எழுந்து உட்கார உதவி செய்ய,
“எதுக்கு இப்படி புலம்புறவ, அது தான் பொழைச்சுகிட்டேனே. அம்புட்டு சுளுவா என் உசுரு போகாது.” என ரங்கமும் புலம்பி விட்டு, “செல்லக்குட்டி தான் போயிட்டா, சின்ன குட்டியாவது, நான் கண்ணு மூடுமுன்ன பார்க்கணும்னு நினைக்கிறேன், அவ எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன். ஒருக்கா பார்த்தா போதும், சின்னவன் எங்க? அவன்கிட்ட பேசணும்.” என ரங்கம் கேட்கவும், இன்னும் செல்லத்தை மறக்கலை என மனதில் குமைந்தாள் தனம்.
“அதுக்கு ஆயிரம் வேலை எங்கிட்டு போகுது, வருதுண்டும் தெரியலை. நம்ம எந்த ஊரில் இருக்கமுண்டும் தெரியலை. கோட்டை மதில் மாதிரி சுத்தி எதுவும் தெரியலை.” என தனம் புலம்பவும், ராஜதுரை தன்னையும் தாண்டி வளர்ந்திருந்தது ரங்கத்துக்குப் புரிந்தது.
ரங்கத்தின் அலைபேசியில், ராஜதுரை அனுப்பிய படங்கள் குறுஞ்செய்தியாக வர, தனம் அதைத் திறந்து பார்த்து விட்டு, “இந்த போட்டோவெல்லாம், நீ எரிச்சுப்புட்டேண்டு சொன்ன , இங்க பார் சின்னத்துரை அனுப்பி விட்டிருக்கு.” என துரை குடும்ப புகைப்படத்துக்களை காட்ட இனிய அதிர்ச்சியாக ரங்கத்தின் நினைவுகள் மலர்ந்தது.
பேச்சியம்மாள் சொன்னது போல், அந்த புகைப்படம், நிர்மலாவின் திருமணத்துக்கு ஐந்து நாட்கள் முன்பு எடுக்கப்பட்டது தான். வீட்டின் அருகிலேயே பெரிய காலியிடம் இருக்க, அங்கேயே கொட்டகை, மேடை போட்டு திருமணம் முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர்.
அதற்குத் தேவையான ஒவ்வொரு ஆளையும் அழைத்து ஏற்பாடுகள் செய்ய, போட்டோ கிராபர் வந்தவரை, “எங்க எல்லாரையும் சேர்த்து வச்சு போட்டோ புடிச்சு காட்டு. நீ நல்லா எடுத்தயிண்டா தான் உனக்கு கான்ட்ரேக்ட்டு, இல்லையிண்டா மருதையிலிருந்து ஆளை கூட்டியாந்துருவேன்.” என ரங்கம் மிரட்டினான். “அண்ணே, அதெல்லாம் நல்ல தான் எடுப்பியான்.” என ராமதுரை வக்காலத்து வாங்கியும் ஒத்துக்கொள்ளாமல், எக்ஸ்ட்ரா பிலிம் ரோல் செலவு ஆனாலும் பரவாயில்லை எனப் போட்டோ எடுத்தனர்.
தன தங்கையை வித, விதமாகப் போட்டோ பிடிக்கச் சொன்னவன், “செல்லக்குட்டி, நீயும் சேர்ந்து நில்லு புள்ளை.“ என்றவன், “அடேய், என் தங்கச்சியைப் போட்டோ புடிக்கிற மாதிரியே, அந்த புள்ளையையும் போட்டோ புடிச்சு எனக்கு குடுக்குற.” என கண்டிஷன் போட, செல்லமுத்து வாயைக் கோனை வழித்தாள்.
“அவங்க உங்க சின்ன தங்கச்சியா அண்ணே. அவங்க கல்யாணத்துக்கும் நானே வந்து போட்டோ புடிச்சு கொடுக்குறேன்.” எனப் போட்டோ கிராபர் சொல்லவும், செல்லமுத்து பட்டெனச் சிரித்து விட, “டேய், கொன்றுவேன். அது என் அக்கா மகள் டா. நான் கட்டிக்க போற முறை பொண்ணு.” எனக் கெத்தாக ஒரு லுக்கு விட்டவன், இப்படி எடு, அப்படி எடு என போட்டோ கிராப்பரை படுத்தி எடுத்து விட்டு, கடைசியாக ஒரு குரூப் போட்டோ பிடிக்க, நிர்மலா, செல்லமுத்துவையும் இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொள்ள, ரங்கம் அவளுக்கு அடுத்து வந்து நின்று, அவள் தோள் மேல் கை போட, அதைத் தட்டி விட்டாள்.
போட்டோ எடுத்து முடியவும், வீட்டுக்குள் சாமான் வைக்கும் அறையில் தனியாக அவளை மடக்கியவன், “கையை ஏன் புள்ளைத் தட்டிவிட்ட, உன்னை நான் தொடாமல், எவன் தொடுவான்?” என நெருங்க, கையை நீட்டி அவன் மார்பில் பதித்து, “பரிசம் போட்ட பிறகு இந்த வேலையெல்லாம் வச்சுக்க. அதுக்கு முன்ன தொட்ட கொன்றுவேன்.” என அவள் முறைக்க,
“அடியே, கொன்றுவாளாம்ல, கொல்லுடி பார்ப்போம்.” என அவன் முன்னேற, “என்னா மாமா, நீயே எனக்கு மதிப்பு குடுக்கலையிண்டா எப்படி?“ எனக் குழைய, அதில் வீழ்ந்தவன்,
“நான் தான் எப்போவே பரிசம் போடுறேண்டு சொன்னேன், நீதான் பிடி கொடுக்க மாட்டேன்னவ, இப்ப என்ன புள்ளச் சின்ன குட்டி கல்யாணம் முடியட்டும், அடுத்த முகூர்த்தத்திலயே, பரிசம் என்ன தாலியே கட்டி, உன்னைய தூக்கியாந்துருவேன், இப்ப போ.” எனத் தள்ளி நின்று வழி விட, குறுகிய இடத்தில், அவன் மேல் படாமல் கவனமாக அவனைத் தாண்டி வெளியே வந்தவள், “ரங்கதுரை இம்புட்டு தான் உன் வீரமா, உன்னை கண்டுக்கிட்டேன். நீ வசமா என் கிட்ட மாட்டின.” என அவன் காதில் உரைத்து விட்டு, அவன் கன்னத்தில் ஓர் இதழொற்றலில் ஆரம்பித்து, சட்டென நறுக்கென கடித்து விட்டு அவள் வெளியே ஓட, “அடியேய்!” என எகிறிவிட்டு கன்னத்தைத் தடவிக் கொண்டே அங்கேயே நின்று விட்டான்.
இன்றும், அதே கன்னத்தை தொட்டுக் கொண்டவன், “உன்கிட்ட மாட்டிக்க ஆசையா காத்திருந்தேன், எல்லாமே போச்சே புள்ளை. உன் சினேகிதி தானே ஓடுனா. நான் என்ன தப்பு செஞ்செண்டு நீயும் என்னை விட்டு ஓடின. நான் பாசம் வச்ச இரண்டு பேருமே என்னை ஏமாத்திட்டீங்கடி. அப்படியும் மானம் கேட்டு போயி, உங்களைத் தான் நினைச்சுக்கே இருக்கேன்.” என அலைபேசியில் அவர்களைப் பார்த்தபடி கண்ணீர் மல்கினான்.
வல்லபாபுரம் ராடகொண்ட பண்ணை. தங்கப் பாண்டியன் தனது போன் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்த போதும், அதனைத் துண்டித்து சைலன்ட்ல போட்டு விட்டு, ஜெகன் மோகன் குடும்பத்தினரோடு தன் தம்பி குற்றமற்றவன் என நிரூபித்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். என் தம்பியை எப்படி கூட்டிட்டு போகணும்னு எனக்குத் தெரியும் எனக் குரலில் கடுமையை ஏற்ற, மற்றவர்களுக்கும் சுர்ரென கோபம் வந்தது. வெங்கடேஷ் ரெட்டி, இரண்டு பக்கமும் அமைதியாகப் பேசும்படி சொல்லிச் சூழலைச் சமாளித்தான்.
ஆனால் யாருமே எதிர்பாராமல், சாந்தம்மா, தங்கத்தின் முன் வந்து நின்று கை கூப்பியவர், “என் பொண்ணு சுத்தம் தான். உங்க பையன் புடம் போட்ட சுவர்ணம். ஆனால் அவள் பேரு உங்க வீட்டு பையனோட சேர்ந்துருச்சே தம்பி. இனி என் மகளை எங்க கொண்டு போயி கல்யாணம் கட்டிக் கொடுப்பேன். அப்படியே யாராவது, கல்யாணம் கட்டிக்கிட்டாலும், இந்த படத்தை காட்டியே அவள் மனசை நோகடிக்க மாட்டங்கன்னு என்ன நிச்சயம். நான் மடிப்பிச்சை கேட்கிறேன், என் பொண்ணுக்கு வாழ்க்கை குடுங்க.” எனத் தன் முந்தியை ஏந்த வர, நிர்மலா வேகமாக வந்து தட்டி விட்டார்.
“வேண்டாம் அக்கையா, நீங்க யார் முன்னாடியும் கை ஏந்தி நிற்கக் கூடாது.“ எனப் பிடித்து இழுக்க, “அப்போ அவளுக்கு என்ன வழி!” எனவும், “அவள் தலையெழுத்து படி நடக்கட்டும். எனக்கு மகளா பிறந்ததுக்கு அவளும் அனுபவிக்கட்டும்.” எனப் பேச்சை முடிக்கப் பார்க்க, “இவளுக்கு, மகள் வாழ்வை விட, அவன் புருஷனைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறது தான் முக்கியம்." என மனதில் நினைத்த ஜெகன் நிர்மலாவை முறைத்தார்.
“நீருமா, அதெப்படி, அப்படி விட முடியும். எங்களை நம்பி வந்திருக்க, நீயும் உன் மகளும் எங்கள் பொறுப்பு. அப்படியெல்லாம் விட முடியாது.“ என்ற தாமோதரன், “தம்பி நாங்க இப்போ குற்றம் சுமத்தி, எங்க பொண்ணை உங்க தலையில் கட்டலை. உங்க அந்தஸ்துக்குச் சீர் செய்யிறோம். என் மகன் பேசின மாதிரி நல்லபடியாவே சம்மந்தம் பேசலாம்.” என அழைப்பு விடுக்க,
“நாங்கள் பாண்டிக் குடும்பத்து வாரிசு, உங்களை மாதிரியே எங்களுக்கும் சில பிடிவாதங்கள் உண்டு. இன்னுமே எங்க பக்கத்து மக்கள் கலப்பு திருமணங்களை ஏத்துக்க மாட்டீங்கிறாங்க. இருபது வருசத்துக்கு முன்னாடி அதுக்காக கொலைகளே நடந்தது.“ எனும் போது ஜெகன் நடுவே பேச வர, “நான் முடிச்சுடுறேன்.” என்ற தங்கம்,
“அதுக்கப்புறம், பத்து வருஷம் முன்னாடி நான், என்னோடது கலப்பு மணம்.“ என தங்களது சாதி, பதவிகளும் சொல்லிக் கொண்டவன், “பதவி அந்தஸ்து இருந்தும், என் குடும்பத்தைச் சம்மதிக்க வைக்க மூணு வருஷம் போராடினேன். இங்க என் தம்பி மேல நீங்க பழியைச் சுமத்தி உங்க பொண்ணை கொடுத்தீங்கன்னா, அவன் சப்போர்ட்டும் இல்லாமல், என் குடும்பத்து சப்போர்ட்டும் இல்லாமல் உங்க பொண்ணு எப்படி எங்க வீட்டில வந்து வாழும்?“ எனவும், நிர்மலாவுக்கு பயம் வந்ததோ இல்லையோ சாந்தம்மா, “என்னங்க, சன்னு நம்ம மகளா, நம்ம கூடவே இருக்கட்டும். அவள் கஷ்டப் படுறதை என்னால பார்க்க முடியாது.” எனக் கலங்கினார்.
“நீ, கொஞ்ச நேரம் சும்மா இரும்மா. அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழனும்.” என ஜெகன் மனைவியை அடக்கினார்.
ஜெகன்மோகன் கூட்டி வைத்திருந்த பெரியவர்கள் கூடிப் பேசி, “ மணவாடு, நல்லா தான் பேசுறீங்க. நீங்கச் சொன்னதெல்லாம் சரியாவே இருக்கட்டும். அந்த பொண்ணு உங்க தமிழ் பொண்ணு தான். இருந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டிகாருவுக்காக, எங்க பக்கம் ஆளுங்க சம்மந்தத்துக்கு ஒத்துக்கிட்டோம் . ஆனால் இன்னைக்கு நடந்ததும் நீங்க எத்தனை விளக்கம் கொடுத்தாலும், அது எதுவுமே மாறாது. நேத்து விவாகத்துக்கு சம்மதிச்ச குடும்பம், இப்போ முடியாதுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இப்போ அந்த பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க.“ என ஆளாளுக்கு வெவ்வேறு வார்த்தைகளில் வற்புறுத்தினர்.
தங்கம் தினேஷை பார்க்க, “என் அம்மா, அப்பா, பெரியவங்க சம்மதமில்லாமல் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என உறுதியாக நிற்க, அவன் மேல் பெரியவர்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.
தங்கம், தினேஷ் இருவருக்குமே பாண்டிக் குடும்பத்திலிருந்து போன் மாற்றி, மாற்றி வந்துக் கொண்டே இருந்தது. “பெரியவங்களோட பேசிட்டு வாங்க.” என் கூட்டத்தினர் காத்திருக்க, தங்கத்துக்கு ஜெயா தான் அழைத்தான், “இந்த ஜெயாவோட தொல்லை தான். பேச நினைக்கிற விஷயத்தைப் பேசாமல் விடாது. நான் பேசிட்டு வரேன். நீ இங்க சமாளி.” எனப் பக்கவாட்டுக்குச் செல்ல, வெங்கடேசும் உடன் சென்றான்.
ஆனால் தினேஷ், தன் அப்பாவிடம் பேசத் தயங்கி, பிறகு அழைப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினான்.
ஜெகன், “துரைபாண்டியன், ரிட்டையர்டு போலீஸ் உங்க நானகாரு, பெத்த நைனா!” என வரிசையாகப் பேரைச் சொல்லி, போன் நம்பரையும் சொல்லி, “எனக்குப் பேச, ஒக்க நிமிஷம் ஆகாது. உங்க மூலமே சுமூகமா நல்ல படியா சம்மந்தம் முடியணும்னு நினைக்கிறேன்.” எனத் தனியாக நின்ற தினேஷிடம் ஒரு குண்டை தூக்கிப் போட, அவனை விட நிர்மலா அதிக கலவரமானார்.
தினேஷ், ஜெகதீசனிடம், “நீ கூப்பிட்டியேன்னு, உன் வீட்டுக்கு வந்தேன் பார் அது தாண்டா நான் வாழ்க்கையில் செஞ்ச பெரிய தப்பு.” என முகம் திருப்ப, “நானுமே இதை எதிர்பார்க்கலை, நீ சன்னு ஹைதராபாத்ல இருந்ததை ஏன் சொல்லலை.” எனக் கேள்வி எழுப்ப, “உன்னாலதான்டா!” என இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
தங்கம், “ஜெயா அண்ணே, நான் தான் போனை கேட் பண்றேன்ல, அப்புறம் எதுக்கு மறுபடி, மறுபடி போன் போடுற?” எனக் கடிந்து கொள்ள, “முக்கியமான விஷயம் இல்லாமல் போன் போடுவேனா, ரங்கதுரை சித்தப்பனை குத்திட்டாய்ங்கே.” என அவன் ஆரம்பிக்க, "அது தான் நீங்க குடும்பத்தோட போயி காப்பாத்திட்டீங்களே, இன்னும் என்ன?” என எரிச்சலாக வினவ, “சொல்ல வர்றதுக்குள்ள, எதுக்குடா அவசர படுற. ரங்கம் சித்தப்பனை குத்தினவனை, ராஜதுரை தூக்கிட்டாப்ல, இதில் என்ன பாயிண்டுனா, ராஜதுரை தூக்கினவன், இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி எடுத்த போட்டோல இருக்கவேன், குடி வேந்தன் ஆளு. உனக்கு போட்டோல, மார்க் பணி அனுப்பி விட்டுருக்கேன் பார். நீ ஒரு நடை மானூத்து வந்துட்டு போ. இந்த மீனா குட்டி வேற, அவைங்க பின்னாடியே திரியுது.“ எனத் தொடர்ந்து பேச,
“அந்த பஞ்சாயத்தை வந்து பேசிக்கலாம், நான் வேற ஒரு பஞ்சாயத்தில இருக்கேன், நீ போனை வை.” என எரிச்சலான தங்கம், லோடான புகைப்படத்தைப் பார்க்க, ஜெயா மீது இருந்த கோபம் போய், “வாழ்க ஜெயா “ என புன்னகைக்க வெங்கடேஷ் புரியாமல் பார்க்க, “சொல்றேன்.” என்றான்.
அதே நேரம், “சார்!” என அழைத்த கார்த்திகா, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, “சன்னு உங்ககிட்ட பேசணும்னு சொல்றா!“ என விண்ணப்பம் வைக்க, தங்கப் பாண்டியன் சிறு யோசனைக்குப் பின் பிரச்சனைக்குத் தீர்வு காண அவளோடு பேச வேண்டியது அவசியம் என முடிவெடுத்து அவளைச் சந்திக்கச் சென்றான்.