My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

20.திருவின் தேவி

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,451

வாலாந்தூர் ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகத்தைப் பட்டர்களோடு சேர்ந்து வர்ணனை செய்து முடித்த தான்வியின் தகப்பனார் ரகோத்தமனுக்கு, அசுவமா நதிக்கரையில் சங்கு சக்கர சாளேஸ்வரக் கல் கிடைத்தது தெரியவர, ‘இதுவல்லவோ தெய்வச் செயல்’ என அங்கு விரைந்தார்.

தன் பூஜையறையில் நேபாளத்திற்கு ஷேத்ராடனம் செய்து, அங்கிருந்து ஹிரண்ய கர்பக் கல்லை எடுத்து வந்து பெருமாளாகப் பாவித்து, நித்திய பூஜை செய்து வருபவர், ஆட்டுப் பணிக்குப் பிறகு ஆன்மீக பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவருக்கு, அதன் மகத்துவம் தெரியும். அதுவும் முக்திநாத்தில், கண்டகியாற்றில் இமயமலையடிவாரத்தில் கிடைக்கும் கல், இங்குக் கோம்பை மலையடிவாரத்தில் அசுவமா நதியில் கிடைப்பது என்பது, பெருமாளின் பெருங்கருணையன்றி வேறேது. உண்மையில் பத்மாசினி, திருவேங்கட ராஜாவின் முன் ஜென்ம நற்வினைப் பயனே சங்குசக்கிர சாளக்கிராமக் கல் கிடைக்கக் காரணம் என்பதை உணர்ந்தார்.

ஒவ்வொரு மிகப் பெரிய காரியத்திலும் சிறு பங்கு வகிக்கச் சிலருக்கு வாய்க்கும். ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல், தனக்கு வாய்த்த வாய்ப்பாகவே, பூர்வஜென்ம ஜோடி முன்னெடுத்து இருக்கும் தெய்வத்திருப் பணியில் தமது பங்கு இது என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்தார்.

ராஜா திருவின் கரங்களில் தெய்வீகக் கல்லைப் பார்க்கவுமே, ஸ்லோகம் சொல்லி வணங்கினார். பத்மாசினியும், ராஜா திருவும், இதன் வழிபாட்டு முறையை தங்களுக்கு உபதேசிக்குமாறு கேட்டுக்கொள்ள, “நான், அவ்வளவுப் பெரிய பண்டிதன் இல்லை, என் சிற்றறிவுக்கு எட்டின வரைச் சொல்றேன்” என அதன் வழிபாட்டு முறைகளைச் சொல்ல, பூர்வ ஜென்ம ஜோடிகள் கவனமாகக் கேட்டுக் கொண்டனர்.

ரகோத்தமனுக்கு, ஏற்கனவே சிலைகள் பற்றி தெரியும். எழுமலை பெருமாள் கோவிலிலும் அவர்கள் பூஜை செய்ததைப் பார்த்திருக்கிறாரே. பத்மாஷினித் தனக்கு வந்தக் கட்டளையைச் சொல்ல, “அப்படியே செய்து விடுவோம் தேவி” என அவர்களை வைத்தே, வைதீக முறைப்படி, அவ்விடத்துக்கு வாஸ்து நிவர்த்தி, சாளேசுவர கல்லுக்கு புன்னியாஜனம், அபிஷேகம் செய்வித்து, நதிக்கரையில் பளிங்கர்கள் உதவியோடு ஒரு குடில் அமைத்து பிரதிஷ்டை செய்து, பத்மாசினிக்கான வழிபாட்டுத் தளமாக மாற்றி வைத்தார். பத்மாசினியும், ராஜா திரு இருவரும் ஆச்சாரமாகப் பூஜை செய்தனர்.

உத்தம ராமன், அனுமந்து, பளிங்கர்கள், ராஜா திருவின் பாதுகாவலர்கள் எனப் பலரும், ஜென்மாந்திர நிகழ்வுக்குச் சாட்சியாக நின்று வழிபட்டனர்.

விஷயமறிந்த துரை சகோதரர்கள், ராதாராணி, தங்கம், தான்வியும் அவ்விடத்துக்கு வந்து சேர, முழுதாகப் பத்மாசினியாக மாறியிருந்த தன் தங்கையைப் பார்த்து இன்னெதென வகைப் பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தாள் ராதாராணி.

முன் ஜென்மத்தில் யாருக்காக, பெருமாள் சிலையோடு, செம்பதுமம் நதியில் விழுந்தாளோ, அவர்கள் இந்த ஜென்மத்தில் இதோ, சிங்கராசு தேவன், தாடகை நாச்சி, ராஜதுரை மற்றும் ராதாராணியாக அவள் முன்னே ஸ்தூலமாக நின்றனர்.

“உன் தாய், தந்தையரைத் தந்துவிட்டேன். மண்ணுக்குள் மறைந்திருக்கும் என்னை முடிந்தால் கண்டுபிடித்து, உன் தவற்றைத் திருத்திக் கொள்” என மாயவன், பத்மாசினியிடம் சவால் விட,

“மாயவா, அறியா பெண், தெரியாமல் செய்த தவற்றை மன்னியும். பெற்றவரையும், உற்றவரையும் எனக்குத் திருப்பித் தந்து கருணைக்கடல் நீ என்பதை உணர்த்தி விட்டாய். நீரில் மறைந்திருக்கும் மாதவனே, அவ்விடம் விட்டு வெளி வந்து மண்ணில் காட்சி கொடுக்கத் தான் வேண்டும். நீ வரும் வரை, நான் இவ்விடம் விட்டு அகல மாட்டேன். எவ்வளவு சோதனை வேண்டுமானாலும் செய்து கொள். அதையும் உன் நாமம் சொல்லியேக் கடந்து விடுவேன்” என பத்மாஷினி மனதார வேண்ட,

“கோவிந்தா, உன்னைச் சரணடைந்தேன். இங்கிருந்து வெளிப்பட்டு, உன் தேசமான சந்திரகிரி மாளிகையில், தம்பதி சமேதராய் தாயார்களோடு வந்தமர்ந்து, என் குலம் விளங்க அருள் புரிய வேண்டும். பத்மையின் வேண்டுதலுக்குச் செவி சாய்க்க வேண்டும். எழுந்தருள்வீர் ஏழுமலையானே” என வேண்டியபடி உருகி நின்றார்.

ரங்கதுரை, “சாமி, முன்ஜென்மத்துல நானும், என் பொஞ்சாதியும் அறிஞ்சும், அறியாமலும் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுடு. அடுத்தப் பிறப்புலையாவது, நான் என் செல்லமுத்துவோட நல்ல வாழ்க்கை வாழணும். செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தமா, இந்த ஆத்தா, பத்மாசினி எடுக்கிற காரியத்தில எல்லாம் பக்கத் துணையா இருப்பேன். என் தம்பி, தங்கச்சி, மகள், மகனுண்டு என் வம்சத்தைக் காப்பாத்தி குடு. எங்களைப் பிடிச்ச கிரகமெல்லாம், இத்தோடப் போகட்டும். நான் உன் சேவைக்கு என்னை ஒப்புக்கொடுக்குறேன் சாமி” கைகூப்பியபடி வேண்டிக் கொண்டான்.


ராதாராணி கவலை தோய்ந்த முகத்தோடு, பத்மாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்க, “எதுக்கு இம்புட்டு விசனப்படுறவ” எனக் கேட்டான் ராஜதுரை.

எப்போதும், முரண்டு பிடித்து, ஏட்டிக்கு போட்டியாகப் பதில் சொல்லும் ராதாராணி, “பூர்வஜென்மம், ராஜா, ராணி கதையெல்லாம் சொன்னாலும், சின்னப் பொண்ணு. சுய நினைவு வந்தா, அந்த ராஜாவை யாருன்னு கேட்குறா. அவரே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சாலும், அவ சம்மதிக்கணும், அவ சம்மதிச்சாலும், ராஜ குடும்பம் அவளை ஏத்துக்கணும். பெரிய இடம்னா, பிரச்சினையும் பெரிசா தான் இருக்கும். நாப்பத்தெட்டு நாள் பூஜைன்னு சொல்றாங்க. நான் வேலையைப் பார்ப்பானா, இவளைப் பார்ப்பேனா, கன்னி பொண்ணு, காட்டுலையும், மேட்டுலையும் திரிஞ்சா, அவ பாதுகாப்பு யார் பொறுப்பு” எனத் தன்னை அறியாமல், மகளின் மீது பாசம் கொண்ட தாயாகப் புலம்பினாள்.

“எப்ப, அந்தப் பொண்ணு என்னை அப்பாருனுச் சொல்லிடுச்சோ, மீனா மாதிரி அதுவும் எனக்கு ஒரு மகள். அது பாதுகாப்புக்கு நான் பொறுப்பெடுத்துக்குறேன். நீ கவலைப்படாத, உன் வேலையைப் பாரு. பொண்ணு உன்கிட்டப் பத்திரமா வந்து சேரும். அப்புறம், அந்த ராசா மேலையும் நம்பிக்கை வையி, கட்டாயம் அந்தப் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்குவாரு. இல்லையிண்டா, என்னைய்யாண்டு அவரு சட்டையைப் பிடிச்சிருவோம். எவ்வளவு பெரியக் கொம்பனா இருந்தாலும் சரி, என்கிட்ட இருந்து தப்ப முடியாது.” அவன் தீர்க்கமாகச் சொல்ல, “நம்பித் தானே ஆகணும். நம்புறேன்” எனப் பெருமூச்சு விட்ட ராதாராணி தன் மாமா உத்தமரிடம் சென்றாள்.

தங்க பாண்டியன், தான்வி இருவருமே பொறுப்புள்ள பதவியில் இருப்பதால், மற்றவர் போல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே அணுகாமல், நடைமுறைச் சிக்கல்களையும் யோசித்து அதற்குத் தகுந்த காரியங்களைச் செய்தனர். வெங்கடேஷ், தங்க பாண்டியன் இருவருக்குமே மீட்ட சிலைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் பணி, கபூர், ரோனிட் சம்பந்தப்பட்ட தொடர்ச் சங்கிலி ஆட்களைத் தேடுதல், சிலைகளை மீட்டல் என நிறைய வேலை இருக்க, அதனைப் பிரித்துக் கொண்டனர்.

பத்மாசினி வேண்டுகோள் படி, தங்கப்பாண்டியன், மதுரை சுற்று வட்டாரப் பகுதியிலேயேத் தனது வேலைகளை அமைத்துக் கொள்ள, வெங்கடேஷ் டீமோடு வெளியூர்களில் சுற்றித் திரிந்தான். முன் ஜென்மத்தில் பெருமாள் சிலைகளைத் தேடி எடுப்பதில், கழுவன் தங்கராசுதேவனே முன் நின்று உதவினான். இப்போதும், தங்கபாண்டியன் சேவை, தேவை என உணர்ந்தே பத்மாசினி வேண்டுகோள் விடுத்தாள்.

பிரபஸர் வீட்டில் கைப்பற்றியச் சிலைகளை தங்க பாண்டியன் மற்றும் வெங்கடேஷ் டீம், அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தனர். அதைக் கைப்பற்றும் நேரம், வருவாய் வட்ட ஆணையரான, ராதா ராணியும் உடனிருந்ததால், அவற்றை மீட்கவும், பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ராஜா திரு, கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தான்வியின் தந்தை ரகோத்தமன், சந்திரகிரி மாளிகை சார்பாக, தாயார் சிலைகளை மீட்டுத் தருவதற்கான அரசாங்க நடைமுறைகளைக் கவனிக்க ஒப்புக் கொண்டார்.

தங்கபாண்டியன், அவன் மாமனார் ரகோத்தமன், மாமியார் சுதா மாமி ஆகியோர் துவரிமான் பாண்டியன் இல்லத்தில் தங்கியேத் தங்களுக்கானப் பணிகளைச் செய்தனர்.

பாண்டிக் குடும்பத்தின் சிவபாண்டியன் செல்வாக்கில், அசுவமா நதியின் வழித்தடம் அறியப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றைத் தூர்வாரும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பளிங்கர்களே அந்த வேலையிலும் ஈடுபட்டு இருந்தனர்.

நாற்பத்தி எட்டு நாட்கள், பத்மாசினி இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும். அவளுக்கென ராஜதுரை, ரங்கதுரை தங்கள் அறக்கட்டளை இடத்தில் தற்காலிகமாக மருத்துவமனைக் கட்டும் பணியை ஒத்திப் போட்டு, பத்மாசினிக்கான சகல வசதிகளோடானப் பிரத்தியேகமானக் குடில் அமைத்துத் தந்தனர். உத்தமராமன், அனுமந்து, துரை சகோதரர்கள், அவர்களது ஆட்கள் தங்க, மற்றவர் வந்தால் பேட்டி காண என பெரிய தர்பாரையே ஒரே நாளில் உருவாக்கி விட்டனர்.

ராதாராணியிடம், பத்மாசினியாகவே அவள் அனுமதி வாங்க, “தினமும் ஒரு முறையாவது சித்தி, சித்தப்பாகிட்டையும், என்கிட்டையும் போன்ல பேசணும். நான் முடியும் போது வந்து பார்க்கிறேன்” என கண்டிசன் போட “கட்டாயம்” என வாக்கு தந்தாள். ராதாராணி அதோடு நில்லாமல் அந்தப் பொறுப்பை உத்தம ராமனுக்கும் கொடுக்க, “கட்டாயம் பேச வச்சிடுறேன் ராதாம்மா” என அவரும் வாக்கு தந்தார்.

எப்போதும் துரை மற்றும் பாண்டி குடும்பத்து ஆட்கள் வர, போக இருக்க, பத்மாசினிக்கு முன் ஜென்ம பெரிய கழுவன் குடியிலிருந்தது போன்ற உணர்வு. மீனா, சக்தி, ஆதி, தினேஷ், முத்து, சிவப்பி என இளைய தலை முறையினர் பத்மாசினிக்கு உதவத் தயாராக இருந்தனர். மீனா ஸ்ரீதேவி, பத்மாசினி எனும் மாறாட்டத்தைக் கவனமாகக் கண்காணித்து, சீனியர் டாக்டர் ஆலோசனைப் படி உணர்வு சமன்பட மாத்திரைகளையும் கொடுத்து வந்தாள். அதனால் இரவில் நன்றாக உறங்கி விடுவாள்.

சதா, சர்வகாலமும் பத்மாசினி, சாளேசுவரக் கல் இரண்டையும் ராஜதுரை ஆட்கள் காவல் காத்தனர். யார் இப்பிறப்பில் யாராக இருந்தார்கள் என்பதை பத்மாசினியின் உள்ளம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டது.

வாலாந்தூர் கும்பாபிஷேகம் முடியவும், ஜெகன்மோகன் ரெட்டி திருமணத்துக்கு முன் தன் வளர்ப்பு மகள் ராஜசந்திரிகாவையும், நிர்மலாவையும் குண்டூர் வல்லபாபுரம் அழைத்துச் செல்வதை ராஜா திருவிடம் தெரிவிக்க, துரைபாண்டியன் குடும்பத்தோடு வந்தார்.

“திருமணத்துக்கு முன் சந்திரகிரி மாளிகையிலும் தங்கவேண்டும்.“ என அழைக்க,

“நீங்க வந்தப் பிறகு வர்றேன் அண்ணைய்யா” என்ற சன்னு, பத்மாசினியை வணங்க, “உன் அப்பா, அம்மா வாழாத வாழ்க்கையும் சேர்த்து நீ, நல்லா வாழுவ. உன் இஷ்டதெய்வம் ஏழுமலையானை எப்பவும் மனுசில நினைச்சுக்கோ” எனக் குங்குமம் வைத்து விட, அதையே அருள் வாக்காக எடுத்துக் கொண்டாள் சன்னு என்ற ராஜசந்திரிகா.

பத்மாசினி குளித்து முழுகி, மஞ்சள் பூசி தேவி ஸ்வரூபமாகப் பட்டுடுத்தி, ஆபரணங்கள் பூண்டு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் தயாராகி விட்டாள். ராஜா திரு, அருகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்து அந்த நேரம், பத்மாசினியை அழைத்துச் செல்ல வந்தார். அதிகாலை நான்கு மணிக்கே சாளேஸ்வர ஹிரண்ய கற்களுக்கான முதல் பூஜை ஆரம்பித்தனர். ரங்கதுரையோ, ராஜதுரையோ இருவரில் ஒருவர் உடன் வர முடிவெடுத்து, அன்று ராஜதுரை சென்றான்.

அதிகாலை பூஜை, ரகோத்தமன் கற்றுத்தந்த முறையில், ஒவ்வொரு மந்திரமாகச் சொல்லி பூஜித்தனர். அதற்குத் தேவையான பூக்கள், பொருட்களை ராஜதுரை ஏற்பாடு செய்திருந்தான். முதல் பூஜை நடக்கும் முன் மாயவன் தன் லீலைகளைக் காட்டினார். சாளேசுவரக் கல்லை சுற்றி நாகம் படுத்துக் கிடந்தது. சாதாரணமாகத் தொடப் போன, ராஜா திருவுக்கே மேனி சிலிர்த்து, வியர்த்து விறுவிறுத்து விட்டது.

“ராசா, நீங்க நகருங்க” என ராஜதுரை, அதை அடிக்கக் கம்போடு வர, “அப்பாரு” எனத் தடுத்தவள், “வேண்டாம். இதுவும் மாயவன் லீலை” என்றாள்.

“அதுக்குண்டு, அடிக்க வேண்டாம் லேசா தட்டி விட்டாப் போயிடும் ஆத்தா” என்றான்.

“கொஞ்சம் பொறுங்கள்” எனும் முன், பின்னாடியே உத்தமர் வந்து விட்டார். ஒரு மந்திரம் சொல்லி தூபம் போட, பத்மாசினியும் பிரார்த்தனை செய்தாள். சற்று நேரம் ஆட்டம் காட்டி விட்டு, நாகம் அவ்விடம் விட்டு அகன்றது.

“பத்மை, பெரும் சோதனையாக அமையும் போலவே” ராஜா கவலைப் பட, பத்மாசினி சிரித்தாள்.

“இல்லை வாசவரே. மாயவன் இங்குக் குடி கொண்டு விட்டான். ஆதிசேஷன் அவன் படுக்கை அன்றோ. நமக்கு அருள் பாலித்து உள்ளான்” என அகம் மகிழ்ந்தாள்.

“யோவ் பெரியவரே, மகள் அப்படித்தான் சொல்லும். அதுக்காக தினத்திக்கும் ஆதிசேஷன் வருவாரா. ஒரு மந்திரத்தைப் போடும். எம்புட்டு சாம்பிராணி வேணுமுண்டாலும், நான் கொண்டாந்து இறக்குறேன்” என்றான்.

“நதிக்கரையில், எல்லா ஜீவராசியும் இருக்கத்தான் செய்யும். அவர்கள் இடத்தில், அவர்களுக்கு இடையூறாகத் தான், நாம் வந்திருக்கிறோம்” பத்மாசினி சொல்ல,

“இருக்கட்டும் மா, அவர் சொல்றதில்லையும் தப்பு இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் எச்சரிக்கையாச் செய்துக்கிறது நல்லது தான்” என உத்தமர் தீய சக்திகளும், விச ஜந்துக்களும் அவ்விடத்தை அணுகாத வண்ணம் மந்திரக் கட்டும், அகிர் தூபமும் போட, அவ்விடம் தேவலோகமாக மாறியது.

பத்மாசினியும், ராஜாவுமாக நித்திய பூஜையைச் செய்தனர். அதன் பின் நிஷ்டையில் அமர்ந்தனர். காலை பூஜை முடித்து ராஜா ரிசார்ட்டுக்கு தன் அலுவல்களைப் பார்க்கச் சென்று விட, பத்மாசினி, அசுவமாநதியைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களோடு தானும் களம் இறங்கினாள்.

“ஏத்தா, இதையும் நீ தான் செய்யணுமா. பயலுக செய்வானுங்க. நீ கரையில நிண்டு கார்வார் பண்ணு போதும்” என்றான் ராஜதுரை.

“தொலைச்சவ தானே தேடணும், நானும் தேடுறேன் அப்பாரு” என அவள் சொல்ல, ராஜதுரைக்கு நெஞ்சைப் பிசையும். அவள் செய்யும் வேலையைத் தான் பிடுங்கிச் செய்ய முயல்வான்.

“இது என் பிராயச்சித்தம்” என அவள் கடிய,

“அதுதான் அப்பாண்டு சொல்லிட்டேயில்ல. எனக்கும் பங்கு உண்டு. உட்காருத்தா” என அவளை அமர்த்தி விட்டு, அருவாளை வாங்கி, சீமை கருவையை வெட்டிக் கொண்டே பூர்வ ஜென்மக் கதை கேட்பான்.

“ஏத்தா, நெஜமாலுமே நான் பெரிய காவல் தலைவனா இருந்தேனா. எலிசபத் என் சம்சாரம் அப்படித்தானே. அப்புறம் ஏன் என்னைப் பார்த்து முறைச்சுட்டே இருக்கு.“ கேள்வி எழுப்ப, அவள் கலகலவென நகைத்து,

“அதுவும் பூர்வ ஜென்ம வாசம் தான். ராணியம்மா உங்களுக்கு மூன்றாம் தாரம். அது மட்டுமின்றி தாரம் போன்றவர்கள் ஏராளம்” எனவும்,

“ஆத்தே, அவளுக விட்ட சாபம் தான், இந்த ஜென்மத்தில மொட்டப்பயலா அலையிறேனா” அவன் கேட்க,

“யார் சொன்னது உங்களுக்குப் பிள்ளை இல்லை என, நான் உங்கள் மகள். மற்ற ஐவரும் ஆங்காங்கே பிறந்து தான் இருக்கிறார்கள். தக்க தருணத்தில் ஒன்று சேர்வார்கள்”

“என்னமோ சொல்றவ. நடந்தா சரி தான். பிள்ளைங்க சரி. பொண்டாட்டி எலிசபத்து மட்டும் போதும் ஆத்தா. மத்ததுகளும் சேர்ந்து வந்துடப் போகுது” என்றான். அன்று கழுவன் கரட்டில் ராக்காயி கோவிலில் நடந்தது நினைவில் வர, “மூத்தவர் தெய்வமாகி விட்டார்.” என ராக்காயி கதையைச் சொன்னாள்.

“ஆத்தி, அத்தனைப் பத்தினி பொம்பளை இருந்திருக்கு” என்றவனுக்கு காலில் அடித்து, அரவம் தீண்டாமல் காப்பாற்றியதும் அவள் தானோ என யோசித்தான்.

“உன் கதையைக் கேட்டா, எல்லாரும் திரும்பிப் பிறந்து வர்ற மாதிரி தெரியுதே. இரண்டு பொண்டாட்டி கட்டுனா, என்னை ஜெயில்லப் புடிச்சு போட்டுறுவாய்ங்கே” எனப் பதற,

“நீங்கள் தான் பெரிய வீரர் ஆச்சே. சிறைக்குப் பயப்படலாமா” அவள் சிரித்தாள்.

“நான் பார்க்காத ஜெயிலா. அதுக்கெல்லாம் பயந்தவனில்ல. இந்த எலிசபத்தே என்னைப் புடிச்சு உள்ளப் போட்டுச்சு. அண்ணண் கூட இருக்கலாமுண்டு ஜாலியா தான் போயிட்டு வந்தேன். அது முரட்டு சிங்கிளா இருக்கும் போது என்ன வேணுமுண்டாலும் செய்யலாம். குடும்பஸ்தன் ஆகுறோமுண்டா பொறுப்பா இருக்கனுமுல்ல” எனவும்,

“கட்டாயம் அப்பாரு. சீரும் சிறப்பான வாழ்க்கை வாழுவீங்க. உங்களை, அம்மாளோடச் சேர்த்து வச்சிட்டு தான், பெருமாளுக்கே கோவில்” என்றாள்.

“ஆத்தா, சாமி காரியத்தில கண்டிசன் போடக் கூடாது. வருஷ, வருஷம் நம்ம மதுரையில் மீனாட்சி ஆத்தாளுக்குக் கல்யாணம் பண்றோம் பாரு. ஆத்தாளுக்குக் கல்யாணம் கட்டி வச்சா, நாட்டுல இருக்க பொண்டுகளுக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்கிற நம்பிக்கைண்டு, பெரிய ஆத்தா சொல்லி இருக்கு. நம்பப் பெருமாளை ஜோடி சேர்த்து வைப்போம், அப்புறம் அவர் நம்மளுக்கு ஜோடி சேர்த்து வைப்பாரு” ராஜதுரை சொல்ல, “இதுவும் சரி தானோ” என யோசிக்க ஆரம்பித்தாள்.
 
Back
Top