அத்தியாயம் 20
எந்தவித மாற்றமும் இல்லாமல் கதிர்வேலின் வாழ்க்கை நகர்ந்தாலும் கல்லாடனின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினான் கதிர்வேல்.
கதிர்வேல் மணிமேகலைக்கு குழந்தை பிறந்த பிறகு அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தான் கல்லாடன்.
அவன் எவ்வளவு முயன்றும் வீட்டுக்குள் அவனால் நுழைய முடியவில்லை. காவல் தெய்வம் அய்யனார் போல் கையில் இரும்பு தடியுடன் வாசலிலேயே காவல் இருந்தார் சாமிக்கண்ணு.
ஒரு முறை அவர் அசந்த நேரமாக பார்த்து தயாளன் கதிர்வேலின் வீட்டிற்கு வந்துவிட்டான். மணிமேகலை அவள் கையில் இருந்த இரும்புத்தடியால் கண்மண் தெரியாமல் அவனை அடித்து துரத்தி விட்டாள். சத்தம் கேட்டு அவனுக்கு ஆதரவாக வந்த எதிர் வீட்டு பெண்களுக்கும் அடி பலமாக விழுந்தது.
மணிமேகலையின் செயலில் அங்குள்ள பெண்களுக்கெல்லாம் தைரியம் தோன்றியது.
மணிமேகலை கையில் ஆயுதம் எடுத்ததை கண்டு மற்ற ஆண்களும் தங்கள் வீட்டுப்பெண்களின் கைகளில் ஆயுதத்தை கொடுத்தனர். பெண்களும் துணிந்து விட்டார்கள். அவர்களை இழுத்துச் செல்ல வந்த அந்த இரு பெண்களையும் கம்பியால் அடித்தே கை காலை உடைத்தனர். அது மட்டும் அல்லாது வீட்டிற்கு வரும் கல்லாடனின் ஆட்களுக்கும் அதே கதி தான். அடியாட்கள் குடிசைக்குள் வருவதற்கே பயந்தார்கள்.
அப்பெண்கள் இருவரும் இனி இங்கு இருக்க பயந்து கொண்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டார்கள்.
கல்லாடனின் மிரட்டலுக்கும் பெண்கள் பயப்படவில்லை. அவனது நோக்கம் முழுவதும் மல்லிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்று இருப்பதால் பெண்கள் விஷயத்தில் அவன் அதன் பிறகு அத்துமீறவே இல்லை. ஆனால் அவர்களுக்கு குவாரியில் அதிக வேலை கொடுத்து துன்புறுத்த ஆரம்பித்தான். எதற்கும் மக்கள் கலங்கவில்லை.
நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். நாங்கள் இனிமேல் எதற்கும் கலங்கவும் பயப்பட மாட்டோம் என்று உறுதியாக அனைவரும் செயல்பட்டனர்
ஒரு வருடம் கழித்து, தன்னை அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்திருந்த சீனுவின் எண்ணத்தில் மண் விழுந்தது. சீனு இங்கு வந்து ஒரு வருடம் ஆகியும் அவனை அனுப்பவில்லை. கதிர்வேல் மணிமேகலை அவர்களின் மகன் பிறந்து ஒரு வருடம் முடிந்த பிறகு தயாளனிடம் சீனு தங்களை வெளியே அனுப்பும்படி கேட்டான்.
அதற்கு எள்ளலாக சிரித்த தயாளன் "உன்னை மட்டுமல்ல, யாரையுமே நாங்கள் வெளியே அனுப்ப மாட்டோம். இது ஒரு வழி பாதை. இங்கு வர முடியுமே தவிர இங்கிருந்து வெளியே உங்கள் யாராலும் போக முடியாது. நீங்கள் வெளியே போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுடைய உயிர் மட்டும் தான் வெளியே போகும். உயிரற்ற உங்கள் உடலையும் இந்த குவாரியிலேயே போட்டு புதைத்து விடுவோம்" என்று கூறி நக்கலாக சிரித்தான்.
அவன் கூறிய அனைத்தையும் கதிர்வேலிடம் வந்து கூறி அழுதான் சீனு. கதிர்வேலுக்கும் அவன் சொல்வதின் உண்மை புரிந்தது. அவனும் எவ்வளவோ முயற்சித்தும் இங்கிருந்து வெளியே செல்ல ஒரு வழிக்கூட கிடைக்கவில்லை. சோர்ந்து போய் இருந்த கதிர்வேலுக்கு சீனு வந்து கூறியது மேலும் வருத்தத்தை தந்தது.
இனி தன் வாழ்க்கை முழுக்க இங்குதான் இருப்போமோ என்ற பயம் லேசாக அவனுக்கு தோன்றியது. தன் இரு பிள்ளைகளையும் சேர்த்து இருபது வயதிற்கு உள்ளே உள்ள பிள்ளைகள் முப்பது பேர் இருந்தார்கள். இவர்களது வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசித்தான். ஒருவேளை ஏதாவது அதிசயம் நடந்து அவர்கள் அனைவரும் இங்கிருந்து வெளியே செல்லும் பொழுது இந்த பிள்ளைகள் வெளியுலகத்தில் சகஜமாக வாழ முடியுமா? என்று ஐயம் அவனுக்குள் வந்தது.
இந்த ஒரு வருடம் போனது அவனது வாழ்க்கை ஏதோ மிகவும் பின்னோக்கி சென்றது போல் தோன்றியது. தான் படித்த படிப்பை வைத்து இவர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டான் .
ஆனால் எப்படி என்ன செய்ய வேண்டும் என்று தான் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
முதலில் வாசிப்பு பழக்கத்தை யாவது மறக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் வீட்டிற்கு மசாலா ஜாமான்கள் வரும் பொட்டணங்களை மடித்திருக்கும் நியூஸ் பேப்பரை எல்லாம் எடுத்து பத்திரப்படுத்தி தன்னிடம் கொடுக்க கூறினான்.
அதன்படியே பெண்கள் வீட்டிற்கு வந்த பொட்டணம் மடித்த பேப்பரை எல்லாம் கொண்டு வந்து மணிமேகலையிடம் கொடுக்க, அதை சீர்படுத்தி அவனிடம் கொடுத்தாள் மணிமேகலை.
பெண்கள் இருவரும் ஓடிப்போனதால் எதிரில் இருந்த ஓட்டு வீடு காலியாக இருக்க, அதை வேலை முடிந்து வந்த பிறகு ஏழிலிருந்து எட்டு மணி வரைக்கும் கண்டிப்பாக பிள்ளைகள் படிக்க வர வேண்டும் என்று சொல்லி, அங்கு அனைத்து பிள்ளைகளையும் உட்கார வைத்து ஒவ்வொருவரிடமும் அந்த காகிதத்தை கொடுத்து வாசிக்க வைத்தான்.
அடியாளர்கள் யாரும் குடிசை பகுதிக்குள் வராததால், இங்கு நடப்பது கல்லாடனுக்கு தெரியவில்லை. பகல் பொழுதில் தான் கல்லாடனும் அடிக்கடி வருவான். சாமிக்கண்ணு வீட்டுக்குள் விடாததால் வெளியே வெயிலிலேயே எவ்வளவு நேரம் நிற்பது என்று, அவர்களது வீட்டு வாசலிலேயே பெரிய பந்தல் போட்டு இரண்டு மூன்று பெஞ்சுகளையும் போட்டு வைத்தான்.
அதன் பிறகு அவன் வந்தால், குறைந்தது ஒரு மணி நேரமாவது அதில் உட்கார்ந்து சாமிக்கண்ணுடன் ஏதாவது பேசிக் கொண்டு எப்படியாவது வீட்டுப் பெண்களை பார்த்து விடலாம் என்று காத்திருப்பான். அவனது காத்திருப்பு இன்று வரை நடக்கவே இல்லை.
அவனது கார் அவர்களது குடிசை பகுதிக்குள் வந்ததும் வீட்டை விட்டு எந்த பெண்களும் வெளியே வருவதே இல்லை.
அப்படி இருக்க ஒரு நாள் செய்தித்தாள்கள் வைத்து பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது கல்லாடன் காதுகளுக்கு வந்து சேர்ந்தது. அடுத்த மாதம் மளிகை சாமான் ஆங்கில நாளிதழில் மடித்து அனுப்பப்பட்டது. அதைக் கண்டு அதிருந்த கதிர்வேல் கல்லாடனுக்கு தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டான்.
இருந்தாலும் தன் முயற்சியை விடாமல் ஆங்கிலம் படிக்க சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ஏற்கனவே இங்கு இருந்த பிள்ளைகள் எல்லாம் தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள். அது மட்டும் அல்லாது பள்ளிப் படிப்பிற்கு விருப்பம் இல்லாமல் சென்று வந்தவர்கள். அவர்களுக்கு இங்கு பள்ளி இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சியாக இருக்க, கதிர்வேல் படிக்க வைப்பது வருத்தமாகத் தான் இருந்தது.
இருந்தாலும் அவன் சொல்வது போல வெளியே சென்ற பிறகு அங்குள்ள மக்களுக்கு இணையாக தாங்கள் வாழ வேண்டும் என்றால், பள்ளி படிப்பு இல்லாவிட்டாலும் தமிழ் எழுத படிக்கவாது தெரிய வேண்டும் என்று இவ்வளவு நாள் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது அதுவும் தடைப்பட்டு ஆங்கில நாளிதழ் வந்ததில் வருத்தம் அடைந்த பிள்ளைகள், எங்களுக்கு ஆங்கிலம் வராது என்று கூறினார்கள்.
அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மூலம் அவர்களை ஊக்குவித்து ஆங்கிலத்தை ஆரம்பத்தில் இருந்து, ஏபிசிடி முதலில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். அங்கு இருந்த பெரியவர்களில் கதிர்வேல் மட்டுமே கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக வேலை பார்ப்பவன். மற்றவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் தான். ஏதோ சின்ன சின்ன வேலை பார்த்து வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள். அத்தியாவசிய தேவைக்காக ஒரு கடன் வாங்கி இங்கு வந்து மாட்டிக் கொண்டவர்கள். படிக்காத குடும்பமாக பார்த்துதான் ஆட்களை தேர்ந்தெடுப்பான் கல்லாடன்.
அவன் செய்த ஒரே தவறு கதிர்வேலை இங்கு அழைத்து வந்தது தான். அவன் அங்கு இருந்தவர்களின் தலையெழுத்தையே மாற்ற முயன்றான்.
எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று ஆங்கிலத்தை கண்டு பயந்த பிள்ளைகளிடம் "இதுவரை படிக்கவில்லை என்றால் என்ன? இனிமேல் உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன்" என்று அரிச்சுவடியில் இருந்து ஒவ்வொருவருக்கும் எளிமையாக சொல்லிக் கொடுத்தான் கதிர்வேல்.
மணல் தரையே அவனது கரும்பலகை ஆனது. சிறிய கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்று சின்ன சின்ன கணக்குகளையும் சொல்லிக் கொடுத்தான்.
பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளையும் கல் உடைக்க அழைத்துச் சென்று விடுவான் தயாளன்.
பகல் பொழுது குவாரியில் கழிந்து விடும். வேலை முடித்து வந்ததிலிருந்து இரண்டு மணி நேரம் கண்டிப்பாக படிப்பு சொல்லிக் கொடுக்கும் வேலையையும் படிக்க வைக்கும் வேலையையும் பார்த்துக் கொண்டான் கதிர்வேல்.
இங்கிருந்து சென்ற பிறகு எந்த பிள்ளைகளும் வாழ்வதற்கு சிரமப்படக்கூடாது என்று ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து பார்த்து செய்தான். ஆனால் தன் சொந்த மகள் மீது கவனத்தை செலுத்த தவறிவிட்டான் கதிர்வேல்.
- தொடரும்..