My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மாறன்-2

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,451

மாறன்-2

மணிமாறன் சிவகங்கையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து, கலைக் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போதே, மிலிட்ரிக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பு வர, அந்த ஊர் பழக்கமாக, நூற்றோடு ஒன்றாக மணிமாறனும் அதற்கு விண்ணப்பித்து, பல கட்ட பரிட்சையில் தேறி, சிப்பாய் வேலைக்குச் சேர்ந்து விட்டான். பதினெட்டு வயதில் இராணுவத்துக்குச் சென்றவன், ஒவ்வொரு ரெஜிமென்ட்டாக மாறி, பதினைந்து வருட பணியைப் பூர்த்தி செய்தால் தான், பென்ஷன் பெனிபிட் கிடைக்கும் என முப்பத்தி இரண்டு வயதில் பணி ஓய்வுக்கு எழுதிக் கொடுத்திருந்தான்.

அவனது இருபத்தி ஐந்தாம் வயதிலிருந்தே, அப்பத்தா கல்யாணத்துக்கு அனத்த ஆரம்பித்து விட்டார். “சர்வீஸ் முடிச்சுட்டு வந்துடுறேன் அப்பத்தா, அப்புறம் பொண்ணு பாருங்க” எனத் தடை போட்டவன், முப்பதைத் தாண்டவும் தான் பிடி கொடுத்தான். அறிந்தவர், தெரிந்தவர், சொந்த, பந்தம் வீட்டுப் பெண்களைப் பேரனுக்காகப் பார்த்து, கேட்டு வைத்திருப்பார், இவன் பதில் சொல்வதற்குள் அந்த பெண்களுக்கு வரிசையாக, வேறு மாப்பிள்ளைகளோடு திருமணம் ஆகி கொண்டிருந்தது.

பேரன் போன் செய்யும் போதெல்லாம், "உனக்காக பார்த்து வச்ச பொண்ணு, மருதை காரவுக கட்டிக்கிட்டு போயிட்டாங்க, போலீஸ்காரன் கட்டிக்கிட்டு போயிட்டான்." என கணக்கு சொல்வார். கடைசியில் மாறன் சரி சொன்ன போது , கிடைத்தது திருபுவனம் கந்தையா, கற்பகத்தின் பெண்கள் தான்.

பேரன் சம்மதம் சொன்ன மூன்று மாதத்தில், அப்பத்தா பெண் பார்த்து விட, நிறைமதிக்கும் அவனுக்கும் ஏழு வருட வித்தியாசம் இருந்தது. இளமதி அக்காவையும் விட மூன்று வயது இளையவள். ஆகவே மணிமாறன், இளமதிக்கான வித்தியாசம் பத்து வருடங்களாக இருக்க, அதற்கே அவன் யோசித்தான். இளமதி தன் சம்மதத்தைச் சொன்ன விதம் அவனைக் கவர,

“நல்லா யோசிச்சிக்கோ, நான் உன்னை விட பத்து வருஷம் மூத்தவன்” என்றான்.

அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவள், “நல்லது தானே, நான் சண்டை போட்டாலும், எனக்காக நீங்க விட்டு கொடுப்பீங்கள்ல” எனவும்,

“மிலிட்ரிக்காரன், சண்டையில் எப்படி விட்டுக் கொடுப்பேன்” புருவத்தை ஏற்றிக் கேட்க,

“ எதிரிகிட்ட தான் விட்டுக் கொடுக்கக் கூடாது. நான் தான் உங்க ஆளு ஆகிடுவேன்ல” கேட்ட பாங்கில், மொத்தமாய் மதியில், சொந்த மதியோடே விழுந்திருந்தான் மாறன்.

இப்போது இருப்பது, அப்பத்தாவின் அந்தக்காலத்துப் பழைய வீட்டில். ஒற்றை படுக்கை அறை கொண்ட சின்ன வீடு, பாத்ரூம் வீட்டுக்கு வெளியே பொது புழக்கத்தில் உள்ளது. கல்யாணத்துக்கு முன் புது வீடு கட்டி விட வேண்டும் என நினைத்து வேலையில் இறங்கி இருந்தான். அதற்குள் அப்பத்தா பெண்ணை பார்த்து விட, பாதியில் நின்றது.

மணிமாறன் மற்றும் அவன் நண்பன் திரு, இருவருக்குமாக அருகில் இடம் வாங்கி இரட்டை வீடாகவும் கட்ட ஆரம்பித்திருந்தனர். மணியும், திருவும் எட்டு மாத வித்தியாசத்தில் பணியை முடிக்க இருந்தனர். திருவுக்குச் சொந்தம் எனச் சொல்லிக்கொள்ள வேறு ஆட்கள் இல்லாததால், பணி நிறைவுக்குப் பிறகு, ஒரே இடத்தில் வீடு, கூட்டுத் தொழில் செய்யும் எண்ணத்திலும் இருந்தனர்.

பத்து நாள் தங்கியதிலேயே உரிய ஆட்களையும் பிடித்து, அவன் திரும்பி வரும் நாளில் வீடு கிரக பிரவேசத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என வேலைகளை முடுக்கி விட்டுச் சென்றிருந்தான். உள் அலங்காரம், இளமதியின் விருப்பத்துக்கே விட்டிருக்க, அவளும் ஆர்வமாகவே செய்தாள்.

கட்டடப் பணியை அப்பத்தா மேற்பார்வை பார்க்க, அதன் கணக்கை இளமதி பார்த்துக் கொண்டாள். தினமும் இரவில் அவனுக்குச் செலவு கணக்கை ஒப்பித்து விடுவாள்.

“ இளா, இதைக் கேட்கவா, போன் போட்டேன். வேற எதாவது பேசு” என்றான் .

“இன்னைக்கு காலேஜ்ல என்ன நடந்துச்சுன்னா” அவள் ஆரம்பிக்க
“ சுத்தம்” எனச் சலித்தான்.
“அப்புறம் என்ன பேசுறதாம்.” அவள் சிணுங்க,
“ எத்தனை ரொமாண்டிக் படம் பார்த்திருப்ப, உன் கிளாஸ்லையே கல்யாணம் ஆன, நாலைஞ்சு பிள்ளைங்க படிக்குதாம்...” அவன் இழுக்க,
“ அதுக்கு” என அவள் அதட்டினாள்.
“ இல்லைடி, லவ், கிவ்வுனு ஏதாவது பேசி இருப்பிங்க. அதுங்களும் புருஷனை வேலைக்கு, வெளிநாட்டுக்கு அனுப்பி விட்ட பிள்ளைங்க தானே. மிஸ் யு, கிஸ் யு.. எதாவது சொல்லுவியான்னு பார்த்தேன்”

"ஹலோ, நாங்க எல்லாம் பொறுப்பான பிள்ளைகளாக்கும். கல்யாணம் ஆகாத பிள்ளைகளும் எங்களோட படிக்குதுங்க. குடும்ப விஷயம் எல்லாம் , காலேஜ்ல பேச மாட்டோம்" சொல்லும் போதே ,அவள் சுருதி இறங்கி இருக்க, "நம்பிட்டேன்" எனச் சிரித்தான்.

அவளுக்கு "ஐயோ" என்றிருந்தது. அவன் சொன்ன ஐவர் குழு இவளையும் , அவர்களைப் போல் நினைத்து, மில்டரிகாரர் எப்படிடி? பச்சையாகக் கேட்டதில், விழுந்தடித்து ஓடிவந்தவள், அவர்கள் பக்கமே திரும்புவதில்லை. தாலி கழுத்தில் ஏறிய பின்னும் கன்னியாகத் தானே இருக்கிறாள், அதையெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டா திரிய முடியும். அதன் பின் திருமணம் ஆகாத பெண்களோடு சுற்றித் திரிந்தாள்.

அவன் கேட்டதில் , அவள் முகம் சிவத்தை அவளுக்கே தெரிய, பேச்சை மாற்றும் முயற்சியாக,

“ யாரோ ஒருத்தர் , படிக்கிற பிள்ளையை டிஸ்டப் பண்ண மாட்டேன், நீ படிச்சு முடி. அது தான் மில்ட்ரிகாரனுக்கு பெருமையின்னுல்லாம் சொன்னார். இந்த பேச்செல்லாம் பச்சை புள்ளை மனசைக் கெடுக்கிறதில்ல சேராதா?”

ஹாஹாவெனச் சிரித்தவன், “குளுர்ல உட்கார்ந்து இருக்கேன்டி. பொண்டாட்டி கிட்ட ஆசையா பேசினாலாவது, சூடு ஏறாதான்னு நப்பாசை தான்” அவன் விளையாட்டாய் சொல்ல,

“ரொம்ப கஷ்டமா இருக்கா மாமா, முடியலைன்னா வந்துடுங்க. என் மதியில், நீங்க தான் நிறைஞ்சு இருக்கீங்க” என அவள் அழ ஆரம்பிக்க, அவன் பதறிப் போனான்.

“மில்டரிகாரன் பொண்டாட்டி, இப்படி எல்லாம் உணர்ச்சிவசப் படலாமா? கெத்தா இருக்கணும்டி. அழுகையை நிறுத்து, கண்ணைத் துடை” எனக் கட்டளைகள் இட்டு மெல்ல, மெல்ல அவளைச் சகஜமாகிச் சிரிக்க வைத்தான்.

திருமணத்துக்கு வந்த போதே, ஆறு மாதம் முன் பணி நிறைவடைந்து விட்டது. காஷ்மீரில் பதட்ட சூழல் எனத் திருப்பி அழைத்திருந்தனர். போவதும், போகாததும் அவன் விருப்பம் தான், இளமதிக்கு அவகாசம் கொடுக்கவே திரும்பிச் சென்றிருந்தான். இதோ ஆறுமாதம் கடந்து விட்டது. நாளை வருவதாக இருக்க, இன்று பரீட்சை முடித்து, அவன் வாங்கி தந்த வண்டியில் உற்சாகமாகவே கிளம்பி வந்தாள்.

அவள் வீட்டின் முன் பெரிய கூட்டம், மாமா வந்திட்டாரா, எதுக்கு கூட்டம் என நெஞ்சு குழி அடிக்க, பதட்டமாக வண்டியை நிறுத்த, ஒரு உறவினர் வந்து வண்டியை வாங்கிக் கொண்டார். வாயில் துண்டை புதைத்துக் கொண்டு, அவள் தந்தை கந்தையா கண்ணீரோடு நிற்க, "அப்பா, என்னப்பா" என அவள் பதறினாள்.

" அடி என் மகளே, நீ என் மகளாவே இருந்திருக்கலாமே, உன்னை இந்த நிலமையில பார்க்கத்தானா, அவசர கோலம், அள்ளித் தெளிச்ச கோலமா, உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன்" என அவள் அம்மா கற்பகம் கதற.

" படுபாவிப் பய, போன தடவையே வேலையை முடிச்சிக்கிட்டு வந்திட்டேன்னு சொன்னவன் என்ன தேவைக்கு இன்னும் ஆறுமாசம் வேலையை ஒப்புக்கிட்டான். இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன்" என அவனது அப்பத்தா முத்தம்மாளும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ,

அப்படியே கீழே விழுந்தவள், " மாமா, என் மாமாக்கு என்ன ஆச்சு" என நம்பமாட்டாமல் கேட்டாள்.

" மாப்பிள்ளை இருந்த இடத்தில் நேத்து துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமா. எத்தனை பேர் உசிரோட இருக்காங்க, இல்லைனே தெரியலையாம். தகவல் வந்திருக்கு" எனவும்

" இல்லை, என் மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் ஆகலை, அவர் வருவார். இந்த மதியில் மாறன் நிறைஞ்சு இருக்கும் போது, நான் உன் முன்னாடி நிற்பேன்னு சொல்லியிருக்காரு. அவர் வருவாரு. அவர் வருவாரு" என உருப் போட்டவள், கரிசனையாய் அவளுக்கென அவன் செய்தவற்றைப் பட்டியலிட்டு. " வந்திரு மாமா. என் மனசில் நீதான் இருக்க" எனக் கத்தி கதறி உள்ளறையில் ஓய்ந்து கிடந்தாள்.

எதற்கும் இருக்கட்டும் என உற்றார், உறவினர், அவன் தந்திருந்த போன் நம்பருக்கும், அவன் நண்பன் திருவுக்கும் தொடர்பு கொள்ள முனைய, போன் அணைத்து வைத்திருப்பதாகப் பதிவு குரல் சொன்னது.

" ஆறுமாசம் தான மாமா, அவகாசம் கேட்டேன். என்னை ஆயுசுக்கும் காக்க வச்சிட்டு போயிறாத மாமா" என அவன் படத்தை தன் மடியில் வைத்துக் கொண்டும், நெஞ்சோடு அணைத்துக் கொண்டும் வெறும் தரையில் மயங்கிக் கிடந்தாள்.

அடுத்த நாள் காலையில் ஒரு ராணுவ வண்டி வந்தது. அதிலிருந்து காவலர்கள், ஒரு பெட்டியை இறக்கி, அவர்கள் வீட்டின் முன் வைத்து, தேசியக் கொடியைப் போர்த்தி, குண்டுகள் முழங்க அந்த ராணுவ வீரனுக்கு மரியாதை செலுத்தினர். ஊர் மக்கள், உற்றார், உறவினர் ,ஊடகங்கள் என எல்லாம் அவனது வீரத்தைப் போற்றி தியாகத்தைப் புகழ்ந்து தலை வணங்கினர்.

இளமதி, " இல்லை, இல்லை, என் மாமா வந்திருவாரு" எனக் கத்தியபடியே பூவந்தி வீதிகளில் அந்தி சாயும் வேளையில் ஓடினாள்.



“இவள் எதுக்கு இப்போ , இப்படி ஓடுறா “ என மற்றவர் குழம்பியபடி, " இளா, இளமதி, அம்மா" என அவளது அப்பா முதல் உறவினர் ஆண்கள் அவளை பின் தொடர்ந்து ஓடினர்.ஒரு வண்டி முன் சென்று விழுந்தாள். சடன் ப்ரேக்கிட்டு நின்றது அந்த ராணுவ வண்டி. " மதி, " எனப் பெருங்குரலெடுத்து, குதித்து ஓடி வந்தான் மணிமாறன்.

அவளிடம் பாய்ந்து வந்தவன்,, அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தவளை, தன் மடியில் போட்டுக் கொண்டு, " மதி, மதி, உன் மாறன் வந்திட்டேன்டி. கண்ணைத் திறந்து பாரு" என அவளை தன்னோடு இருக்க அணைத்து, கன்னத்தில் தட்டி எழுப்ப, கண் திறந்தவள் " சொர்க்கத்தில் இருக்கமா மாமா" என வினவினாள்.

"அடியே, ஒரு அடி விட்டேன்னு வையி, வாய் கோணிக்கும், சொர்க்கத்தில் இருக்கமான்னா கேக்கிற. நீ என்னைக்குடி, எனக்குச் சொர்க்கத்தைக் காட்டின" என அவன் கோபப்பட, அவள் பின்னோடு வந்தவர்கள் அதிர்ந்து நின்றனர்.

" மாப்பிள்ளை, நீங்க இருந்த இடத்தில துப்பாக்கி சூடூ" என அவர் இழுக்க, " அது வேற ரெஜிமெண்ட் மாமா. அங்கயும் எல்லாரும் சேஃப். இது மாத்தி சொல்லிட்டானுங்க" என நடந்தவற்றை விளக்கினான்.

" மிலிட்ரிகாரன் பொண்டாட்டி, நடந்து வருவாளா, இல்லை தூக்கிட்டு போகனுமா" என தன் மடியில் கிடந்தவளைக் கேள்வியாக நோக்க, சுயம் தெளிந்தவள், சற்று முன் கண்டது கனவென உணர்ந்து உடல் சிலிர்த்து, "ம்கூம், மில்டிரிகாரர் தூக்கிட்டுத் தான் போகனும்" என அவன் கழுத்தைக் இறுகக் கட்டிக் கொண்டாள்.

மாண்டு விட்டதாக நினைத்தவன், மீண்டு வர அவளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆனந்தக் கண்ணீரோடு, அவனை ஒட்டியே திறந்தாள். அவனது அப்பத்தா, பெரியப்பா, சித்தப்பா என எல்லோரும், “வயித்தில் பாலை வார்த்தடா சாமி.” என தங்கள் குலதெய்வம், பிலாவடி கருப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

ஊரும், உறவும் விசாரித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் களைந்து சென்றனர் . இரவு தடபுடலாக விருந்து தயாரானது. இளமதி, கணவனைக் கண்ணில் வைத்துத் தாங்கினாள். கிடைத்த சொற்ப தனிமையில், கட்டியணைத்து, முத்த மழை பொழிந்து கொண்டனர். மதி காட்டிய தீவிரத்தில், மாறன் அதிசயித்து , “என்னடா” என்க, “பயந்துட்டேன் மாமா” என வார்த்தைகளின்றி கண்ணீரோடு தவித்தவளை ,

“உன்னைய விட்டுட்டு எங்கடி போவேன். எமனை எதிர்த்துக்கிட்டு என் ஆளுகிட்ட வந்திட மாட்டேன்” இறுக்கி அணைக்க, “ஆமாம், போங்க” என ஒட்டிக் கொண்டாள்.

இத்தனை நேசமும், பாசமும் , அவன் அழையா விருந்தாடியாக அழைத்து வந்திருக்கும், மற்றொரு திருமதி மாறனைப் பார்த்தால், அப்படியே இருக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Back
Top