இல்லம் களைகட்டி இருந்தது. மணிமாறனின் உறவினர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் வாசிகளே. அதனால் அவ்வப்போது வந்து சென்ற வண்ணமே இருந்தனர்.
மின்சார அடுப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்குக் குறைவில்லாமல் இயங்கியது, டீ மற்றும் காஃபிக்காக.
சுற்றத்தில் மிக முக்கிய மற்றும் நெருங்கிய உறவுகள், மணப் பெண்ணிற்கு நாள் செய்வதாய்க் கூறி, தினம் ஒருவராய் சீர் வரிசைத் தட்டுகளுடன் வந்து நலங்கு வைத்துச் சென்றனர்.
அன்றைய தினம், மிருதுளாவின் இரண்டாவது தாய்மாமன் முறை. மூத்தவர், முதல்நாளே செய்து விட்டார். தங்கை மகளிற்குச் சீராக, இரண்டு சவரனில் சங்கிலி வாங்கி அணிவித்து இருந்தார்.
இதில் சகோதரர்களிற்கு இடையில் வாக்கு வாதம்.
"தங்கம் விக்கிற விலையில, உன்னோட பெருமைக்குனு ரெண்டு பவுனுல நகை போட்டுட்ட. அன்றாடம் காய்ச்சி நான், எப்படி அந்தளவுக்குச் செய்ய முடியும்?" என இளையவர் கேட்டிட,
"உன்னை யாரு என்னோட அளவுக்குச் செய்யச் சொன்னா? உன்னால முடியிறதைச் செய்! கூடப் பிறந்தவன்கூட ஏன் போட்டிப் போட நினைக்கிற?" என்றார் மூத்தவர்.
கல்யாணம் என்றால் அங்குக் கலவரம் இல்லாமலா? இதோ தொடங்கி விட்டதே!
"நீங்க செய்யிறதை வச்சா, உங்க பாசத்தை அளந்து பார்க்க போறோம்? செய்யணும்னு நினைக்கிற மனசு போதாதா? என்னப்பா நீங்க? சந்தோசத்தோட வந்து என்னோட மக கல்யாணத்தை நடத்திக் கொடுங்க ரெண்டு பேரும்!" என மணிமாறன் தான் இரு மச்சினர்களுக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார்.
அந்த வகையில் மிருதுளாவின் அன்னை கமலாவிற்குக் கணவனை எண்ணி பெருமை உண்டு. தற்போது இறை வழிபாட்டிற்குக் கூட, பெண்ணின் இரு தாய்மாமன்களையும் அவரவரின் துணைவியருடன் அழைத்து தான் சென்றிருந்தார்.
அதேபோல் தன் பக்க உறவினனான இளங்கோவிற்கு முதல்நாளே அழைத்து, "ராத்திரியே வர முடியுமா?" எனக் கேட்டார்.
இவன், "இல்ல மாமா. இன்னைக்கு ஆஃபிஸ் முடிஞ்சு நைட்தான் கிளம்புறேன். முன்னாடியே வர்றதுக்கு வாய்ப்பு இல்ல!" என்று பதில் தந்திட, "சரி, பார்த்து வா!" என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
ஊரிற்கு வந்த பின்புதான் புரிந்தது, மாறன் ஏன் அழைத்தார் என.
காலை உணவை முடித்துவிட்டு எழ, "இளா, எதுவும் ஒர்க் இருக்கா?" என்றபடி வந்தாள் மிருதுளா.
"இல்ல. என்ன விஷயம்.?"
"பார்லர் வரைக்கும் போகணும். கூட்டிட்டுப் போக முடியுமா? காரை அப்பா எடுத்துட்டுப் போயிருக்காரு. டூவீலர்ல போகலாம்னா, மேரேஜ் முடியிற வரைக்கும் அம்மா வண்டி எதுவும் டிரைவ் பண்ணக்கூடாதுனு சொல்லிட்டாங்க."
"சரி வா!" என்றவன் முன்னே செல்ல, அவர்களுடன் யோகேஷும் இணைந்து கொண்டான்.
வாகனத்தை இயக்கிய இளங்கோவன், "ஏண்டா, எதுவும் வேலை இல்லையா? இப்படி என் கூட சுத்திக்கிட்டு இருக்க?"
பின்னால் அமர்ந்து இருந்தவள் அதைக் கேட்டுச் சிரிக்க, "ஏன் கேட்க மாட்ட? மூன்றரை வருசம் கழிச்சு நண்பன் வர்றானேனு, எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்தேன்ல? என்னைச் சொல்லணும்!"
மிருதுளா, "அப்படி என்ன விட்டுட்டு வந்தீங்க யோகா அண்ணா?"
"ஏன்மா நீயும்?" என்றிட, "இங்க யாரும் இல்லாததால, கூட இருந்து பார்த்துக்கச் சொல்லி அப்பாதான் சொல்லிட்டுப் போனாரு இளா!" என விளக்கம் தந்தாள்.
"அடப்பாவி! எனக்காக லீவ் போட்டு வந்த மாதிரி என்ன பேச்சு.?" என்று இளங்கோவன் வினவிட, "லீவ்வா.? அண்ணாவோட வேலையே இதுதான்!" என உரைத்தாள் அவள்.
"வேலையா?" என்று புரியாமல் கேட்க, "அட போங்கடா!" எனக் கண்மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான் யோகேஷ்.
ஆடவன் குழப்பத்துடன் பின்னால் இருந்தவளைத் திரும்பிப் பார்த்திட, "அப்பாக்கிட்ட மேனேஜரா ஒர்க் பண்ணுறாரு. தோட்டம், வீடு, குடவுன், ஜவுளிக்கடைனு எல்லாத்துக்கும் இன்சார்ஜ் யோகா அண்ணா தான்."
சற்றே திகைத்தவன், "டேய்! உன்னோட கம்பெனி என்னாச்சு? இங்க இருந்து ஆரம்பிச்சு, வேல்ட் ஃபுல்லா டிஸ்டிரிபியூட் பண்ணப் போறேன்னு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருந்த? நல்லாதான ரன் ஆச்சு. திடீர்னு என்ன.?"
"டிஸ்டிரிபியூசனுக்காக டீ எஸ்டேட்டோட ஓனரை எல்லாம் நேரடியா பார்க்கலாம்னு போயிருந்தேன். கூட வந்த நாயி, எனக்குத் தெரியாம நம்ம பொருளோட கஞ்சாவையும் மலையில இருந்து இறக்குறதுக்கு டீல் பேசி இருக்கான்."
"அச்சோ! அப்புறம் என்னாச்சு.?"
"குமுளி பார்டர்ல வண்டியைச் செக் பண்ணிப் பொருளை எடுத்துட்டாங்க. மொத்தமும் போச்சு. ஒன்றரை வருசமா போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலைஞ்சு அதுல இருந்து மீண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. உன்னோட மாமாவால தான், ஏதோ தப்பிச்சேன். இல்லேனா என்னைக் குற்றவாளி ஆக்கி இருப்பாங்க. அப்புறம் என்ன, கம்பெனி கோவிந்தா தான். வெளிய எங்கேயும் வேலைக்குப் போக முடியல. அப்பா, எனக்காக மாமாக்கிட்டப் பேசுனாரு. அவர் வாடானு கூப்பிட்டாரு, நானும் அப்படியே வந்துட்டேன்."
"என்கிட்ட எதுவும் சொல்லல?"
"சொல்லி என்னாகப் போகுது? மரியாதை போனது தான் மிச்சம்!"
"சரி விடு! நீ தப்பு செய்யலங்கிறப்ப, ஏன் வருத்தப்படுற?"
"வருத்தமா? அனுபவிச்ச மன உளைச்சலுக்கும் தொலைச்ச கனவுக்கும் பதில் இல்லையே.?"
இளங்கோ நண்பனின் தோளில் தட்டிக் கொடுக்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் அழகுக் கலை நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
மிருதுளா உள்ளே செல்ல, ஒருவித இறுக்கமான சூழல் நிலவியது.
வெளியே நின்றிருந்த யோகேஷ் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து இதழ்களுக்கு இடையே நுழைத்திட, "உடம்பாவது மிஞ்சட்டுமே? அதையும் ஏண்டா கெடுத்துக்கிற?" என அதனைப் பிடுங்கினான் இளங்கோ.
"நீ இன்னும் மாறவே இல்லடா!"
"மாறாம இருக்கிறது தான நல்ல மனுசனுக்கு அழகு. நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாறுனா, அவன் எப்படி மனுசனாக முடியும்.?"
மற்றவன் புன்னகைக்க, "ஸ்மோக் பண்ணுற பழக்கம் மட்டும் இல்லேனா, அப்பாவை கொரானால இருந்து எப்படியாவது காப்பாத்தி இருக்கலாம். அதுக்குத்தான் வாய்ப்பு இல்லாம போச்சே? அவரோட உயிரைப் பறிச்சது காய்ச்சலா? இல்ல இந்த சிகரெட்டானு தெரியல."
"ரெண்டும்! விதினு நினைச்சு விட்டுட வேண்டியது தான்!"
"அப்படி நினைச்சு தான், நீயும் மனசைத் தேத்திக்கிட்டியாக்கும்?"
"வேற என்ன செய்யிறது?"
"யோகா, என்கூட சென்னைக்கு வர்றியா? நான் வேலைக்கு அரேஞ்ச் பண்ணுறேன்."
"வர்றதா இருந்தா, படிச்சு முடிச்ச கையோட உன்கூடவே கிளம்பி இருக்க மாட்டேனா? அம்மா எல்லாம் என்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்க. கிட்னி வேற சரியா ஃபங்ஷன் ஆக மாட்டிது. அடிக்கடி ஹாஸ்பிடல் போக வேண்டியதா இருக்கு. அப்பாவால தனியா மேனேஜ் பண்ண முடியாது!"
"அதுவும் சரிதான்!" என இளங்கோ பெருமூச்சு ஒன்றை வெளிவிட, "அப்பப்ப தோணும். பேசாம இவங்க எனக்குத் துணையா இன்னொரு பொம்பளைப் பிள்ளையைப் பெத்து இருக்கலாம்னு!"
"ஏண்டா?"
"நாம பெத்த அம்மாக்குச் செய்ய சங்கடப் படுறது இல்ல. பையன் இதெல்லாம் செய்றானேனு அவங்க சங்கடப்படுறாங்க. அதுவே பொம்பளைப் பிள்ளனா, வேற மாதிரி இருந்திருக்கும்ல?"
இளங்கோ சிரித்திட, இருவரது பேச்சும் அவர்களின் சிறுவயது நிகழ்வுகளை நோக்கித் திரும்பியது.
உள்ளே சென்ற மிருதுளா இரண்டரை மணி நேரம் கழித்து வெளியே வரும் பொழுது, நிழலாய் இன்னொருவளும் இணைந்து வந்தாள்.
யோகேஷ் குழப்பத்துடனும் மற்றவன் புரியாமலும் பார்த்திட, இருவரை நோக்கியும் கை அசைத்தாள் அவள்.
"ஹாய் யோகா!" என முன்னால் வந்து நின்றிட, "நீ எப்ப வந்த?" என்றான் அவன்.
"இப்பத்தான். வந்ததும் மிருது அக்காக்குக் கால் பண்ணேன். பார்லர் போகப் போறேன்னு சொன்னாங்க. அதான் நேரா ஆட்டோவை திருப்பச் சொல்லிட்டேன்!" என உரைத்தவள் ஓரக் கண்ணால் இளங்கோவைப் பார்த்திட, "யாரு இவங்க?" என்று நண்பனிடம் வினவினான் அவன்.
மிருது சிரித்து, "யாருனு தெரியலயா.?"
அவன் ஒருவிதமாய் தலை அசைத்திட, "டேய், நிஜமாவே ஞாபகம் இல்லையா?" என்றான் யோகேஷ்.
"ஞாபகமா? தெரிஞ்சிருந்தா எதுக்குக் கேட்கப் போறேன் உங்களை?"
புதியதாய் வந்தவள், "அஞ்சு வருஷம் ஆச்சு. உலகம் எவ்வளவோ மாறிடுச்சு. நானும் மாறிட்டேன். மறந்ததுல ஒன்னும் தப்பில்ல. ஓகே! லெட் மீ இண்ட்ரடியூஸ் மைசெல்ஃப். ஹலோ! ஐம் நிலாவினி, யோகேஷோட சித்தப்பா பொண்ணு. ஒரு காலத்துல நீங்க எல்லாரும் படிச்ச அதே ஸ்கூல்ல தான், உங்களுக்கு ஜூனியரா படிச்சேன்! நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் இளங்கோவன்!" என வலக்கரத்தை நீட்டிட, ஆடவனின் கண்கள் வியப்பில் விரிந்தது.
"வினியா நீ.?" என்று கைப்பற்றிக் குலுக்கிட, "எஸ் எஸ்!" என மேலும் கீழுமாய்த் தலை அசைத்தாள்.
"என்ன இப்படி மாறிட்ட.?"
"இது என்ன கொடுமையா இருக்கு? அஞ்சு வருஷம் ஆச்சு. அப்படியேவா இருப்பாங்க? மாற்றம் ஒன்றே மாறாதது. ஏன், நீங்க மாறல?"
"இல்ல, ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் கட்டி இருப்பியே?" என்றவனிற்கு பத்தாம் வகுப்பு படித்த நிலாதான் நினைவிற்கு வந்தாள்.
முழங்காலைத் தொடும் நீளக் குழல் அவளிற்கு. மடித்துப் போட்டாலும் இடையை உரசும். நிலாவின் குழலிற்கு என்றே சுற்று வட்டாரத்திலும், பள்ளியிலும் பல விசிறிகள் உண்டு. அந்த ரசனைக்காகவே, அவன் அறிந்தே பத்திற்கும் மேற்பட்ட காதல் கடிதங்கள் வந்துள்ளன. அறியாமல் எத்தனையோ, அவளிற்கு மட்டும் தான் தெரியும்.
இளங்கோவிற்கு என்னவோ, அக்குழலைப் பார்க்கும் போதெல்லாம் பாவமாகத்தான் தெரியும். அவனின் அன்னைக்கும் நீண்ட குழல். அதைப் பாதுகாப்பதற்காக அவர் செய்யும் மேல்பணிகள் ஏராளம்.
'இவளும் அதுபோல குழலின் பாதுகாப்பிற்கு ஏதேனும் செய்வாள் அல்லவா? எவ்வளவு கால விரயம்? தலைக்குக் குளித்தால் எப்படிக் காய வைப்பாள்? இரட்டை ஜடை பின்னல் போட, ஒவ்வொரு நாளும் எத்தனை நேரம் ஆகும்? அதற்காக அவள் விரைவாகவே எழ வேண்டும் அல்லவா? தாய் இல்லாமல் என்னென்ன வேலை செய்து எப்படி தயார் ஆகிறாள்?' எனத் தோன்றும்.
எனினும் இதுவரை இதைப்பற்றி வாய்விட்டுப் பேசியது இல்லை.
இன்று அவளைப் பார்க்கும் போது ஏனோ, மனதிற்குச் சற்று இதமாய் இருந்தது. நீள குழலை, இடை அளவிற்குக் கத்தரித்து இருந்தாள். பாதிக்கும் மேல் வெட்டி இருப்பாள் என மனம் கணித்துக் கொண்டது.
"ஹலோ! ஹலோ மிஸ்டர்! என்ன அப்படிப் பார்க்கிறீங்க.?" என்று முகத்திற்கு நேராய் கை அசைத்திட, நிகழ்விற்கு மீண்டான் இளங்கோ.
"என்ன மாப்ள, பகல்லயே கனவா?" என யோகேஷ் வினவிட, "இல்ல, வினி இந்த உயரம் தான இருப்பா?" என்று தனது மார்பிற்கு அருகே கை வைத்துக் காட்டினான்.
மிருதுளாவும் மற்றவனும் சிரிக்க, "இப்பவும் அதே அளவுதான் இருக்கேன்!" என அருகே வந்து நின்றாள்.
அவனின் உள்ளங்கையை பாவையின் இடது செவி உரசிட, இளங்கோவின் கால்கள் அனிச்சையாய் ஓர் அடி பின்னால் நகர்ந்தன.
"சரியா இருக்குப் பாருங்க, நீங்களும் வளர்ந்துட்டீங்க மிஸ்டர் கோ!"
மிருதுளா கேள்விப் பார்வையுடன், "அதென்ன கோ?"
"இளங்கோவன் பேரு ரொம்ப நீளமா இருக்கு அக்கா. அதான் அதுல இருந்து கோ'வை மட்டும் உருவிட்டேன். கோ மீன்ஸ் அரசன், மன்னன், தலைவன், இறைவன்.." என வரிசையாய் உரைத்துச் சென்றவளை, "போதும் போதும்." என்று நிறுத்தினான் யோகேஷ்.
"ஏன் யோகா.?"
"மிருதுளா வேற எங்கேயும் போகணுமா? இல்ல, வீட்டுக்குக் கிளம்புவோமா? எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு!" என அவர்களின் தொடர்ந்த உரையாடலிற்குத் தற்காலிகத் தடுப்பு அமைத்தான் இளங்கோ.
"இல்ல, வீட்டுக்குப் போகலாம். வழியில அப்படியே வினியையும் டிராப் பண்ணணும்!" என்றவள் நிலாவைப் பார்த்திட, "யோகா பாய், போய் என்னோட பெட்டிப் படுக்கையைத் தூக்கிட்டு வாங்க!" என உரைத்துவிட்டு முன்னே நடந்தாள்.
பயணம் முடியும் வரையிலும் யோகேஷின் சிந்தனை முழுவதும் தங்கையின் மீது மட்டுமே இருந்தது.
இரண்டு தினங்களிற்கு முன்னர் பேசும் பொழுது கூட, "கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே? முதல் நாள் வந்தா போதும்ல?" எனக் கேட்டிருந்தாள்.
வருவதாக, எவ்விதச் செய்தியும் உரைக்கவில்லை. கோவையில் இருந்து இன்று அதிகாலை தான் கிளம்பி இருக்கிறாள் என்று கணித்துக் கொண்டான்.
ஆனால் ஏன் இந்த அவசரம்? யாருக்காக இவ்வருகை? மணப்பெண்ணான தோழி மிருதுளாவிற்காகவா? இல்லை, வேறு ஏதும் காரணமா? என வரிசையாய் மனதில் வினாக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
விடைக்காக அவளின் முகத்தை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருக்க, நிலாவோ வாகனத்தின் கண்ணாடி வழியே வெளிப்பக்கம் கண்களைப் பதித்தபடி வந்தாள்.