My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அல்லியங்கோதை-19

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
265
அல்லியங்கோதை
(தீபாஸ்)
அல்லியங்கோதை (image).jpeg

அத்தியாயம் 19

விடாரபுரத்தின் சந்தைகளில் எப்பொழுதும் கூட்டம் அலைமோதும். பொதுவாகவே அங்கு மிளகு, ஏலம், எஃகு, மாணிக்கம் போன்றவைகளுக்கான கிராக்கி அதிகம் இருக்கும். கிரேக்க, ரோமானிய வாணிப வியாபாரிகளும், அவர்களுடன் அழைத்து வரும் அடிமைகளும், உள்ளூர் சந்தை வியாபாரிகளிடம் பேரம் பேசுவதும்... வெள்ளி, தங்க நாணயங்களை எண்ணும் ஓசையும் கலகலவென கேட்டுக்கொண்டிருக்கும்.


அந்த நிலை சற்றே மந்தப்பட்டிருந்தது. களப்பாளர் கோ கண்டனுக்குப் பிறகு இன்னும் நிலையான அரசு பிரகடனப்படாத நிலை... சுங்கச் சாவடிகளில் மெத்தனத்தை உருவாக்கி இருந்தது.

உள்ளூர் வியாபாரிகளுக்கு இந்நிலை எப்பொழுது மாறி அந்நியச் செலாவணி பெருகி சரக்குகள் கப்பலேற்றப்படுமோ என்ற கவலையோடு இருந்தனர். தற்போது உள்ளூர் தேவைகளுக்காக மட்டும் வியாபாரம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு ரம்பை ஆண் வேடமிட்டு, அவனது இரு மனைவிகளாக ஊர்வசி மற்றும் மேனகை ஆகியோருடன் சந்தைக்குள் நுழைந்தனர்.

சதானந்தரின் பலகாரக் கடைக்கு முன்பு வந்ததும்,
“மாமோவ்… கருப்பட்டி பணியாரம் சுடச்சுட இருக்கு பாரு… எனக்கு கிறக்கமா இருக்கு… ரெண்டு வாங்கித் தா மாமா” என்றாள் ஊர்வசி...

“இங்க பாரு மாமா… அவளுக்கு ரெண்டு வாங்கித் தந்தா எனக்கு நாலு வாங்கித் தரணும். ஏன்னா நானு மூணு மாசம் புள்ளதாச்சியா இருக்கேன்” என்றாள் மேனகை.

“இது என்ன புதுக் கதையா இருக்கு? புள்ளதாச்சியா இருக்கிற மொகரக் கட்டைய பாரு...”

“ஏன்… என் மொகரைக்கு என்ன நல்லாத்தான் இருக்கு… உன்னாட்டம் என் மூஞ்சி என்ன குதிரை மூஞ்சியாவா இருக்கு?”

“யாரைப் பார்த்து குதிரை மூஞ்சுன்னு சொன்ன? உன் மூஞ்சுதான் கொரங்கு மூஞ்சியாட்டம் இருக்கு!”

என்று பலகாரக் கடை முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு இருக்க, அவள்களின் கணவனாக ராக்கப்பன் வேடத்தில் இருந்த ரம்பை… இருவருக்கும் இடையில் புகுந்து விலக்கிவிடப் பார்த்து முடியாமல் முழி பிதுங்கி நின்றான்.

கல்லாவில் அமர்ந்திருந்த சதானந்தர்,
“எப்பா… ரெண்டு பொண்டாட்டிக்காரன் எப்பா…” என்று ராக்கப்பனை அழைக்க...

அவர்களை சமாதானம் செய்வதை விட்டுவிட்டு அவரிடம் வந்தவன், தனது வேட்டியில் முடிந்து வைத்திருந்த அனாக்களை பிரித்து எடுத்து நீட்டி,
“ஒரு டஜன் கருப்பட்டி பணியாரம் தாங்க, கடைக்காரரே” என்றான்.

தனது கடைமுன்பு நின்று அவர்கள் சண்டை போட்டதால் வியாபாரம் பாதிக்கும் என்ற கோபத்தில் ராக்கப்பனை அழைத்தார் சதானந்தர். அதனை உணர்ந்து, சட்டென காசை நீட்டி பணியாரம் கேட்டான். காசைப் பார்த்ததும் கோபத்தை மறைத்து, சிரித்த முகமாக காசை வாங்கி கல்லாவில் போட்டபடி...

“எதுக்குய்யா ரெண்டு சம்சாரத்தையும் ஒரே நேரம் வெளியில கூட்டிக்கிட்டு வர்ற… தனித்தனியா கூட்டிட்டு வந்தா இந்த கச்சடா எல்லாம் இருக்காது இல்ல” என்று சண்டையிட்டு கொண்டிருந்தவர்களை காட்டி கேட்டார்.

“நான் எங்கேங்க இவள்களை கூப்பிட்டேன். இங்க சந்தையில ஏலமும் கிராம்பும் வாங்கிட்டு வரச் சொல்லி ஊருல அம்மா சொல்லிவிட்டாங்க. அதுக்காக கிளம்பிய என்கூடவே தொத்திக்கிட்டு வந்து இப்படி என்னை பாடாப் படுத்துறாளுக” என்றான்.

“உங்களைப் பார்த்தா வெளி ஆளுக போலத் தெரியுது. எங்க இருந்து இங்க வந்து சரக்கு வாங்க வந்திருக்கீங்க?”

“சோழ தேசத்தில இருந்து வந்தோம். இங்கன அரண்மனையில அரசாங்க முக்கியத்தார்களுக்கு சமையலுக்கு அழைப்பு வந்தது. எப்பவும் ஒத்தாசைக்கு ரெண்டு பொஞ்சாதியையும் அழைச்சிட்டு வந்துருவேன். வந்த இடத்தில ஊருக்குக் கடைசாமான் இங்க மலிவா கிடைக்கும்னு வாங்கிட்டு போகலாம்னு சந்தைக்கு வந்திருக்கேன்” என்று அவருடன் பேச்சுக் கொடுத்தான் ராக்கப்பன்.

“இதென்ன அதிசயம்… அங்கன பாரு பணியாரம் சுடுற இடத்தில… உன் பெண்சாதி ரெண்டுபேரும் ஒத்துமையா நிக்கிறத. இம்புட்டு நேரமும் கீரியும் பாம்புமா சண்டை போட்டவங்க மாதிரியா இருக்காங்க!?”

“ஒரு டஜன் பணியாரம் கட்டச் சொல்லிட்டேன்ல. பிறகு கைக்கும் வாயும் சண்டை போடுறப்போ… வாய பேச விட்டா அம்புட்டையும் நான் மொக்கிடுவேன்ல… அதுக்குத்தான் கமுக்கமா திக்க ஆரம்பிச்சுடாளுக”

“ஐயோ… பாவம் தான் நீ…” என்றவரிடம், ராக்கப்பனோ தனது சொந்தக் கதையை சோகக் கதையென அளந்து விட்டுக்கொண்டிருக்க…

மேனகையும் ஊர்வசியும், பணியாரம் செய்து கொண்டிருந்த பூங்கொடியிடம் பேச்சை ஆரம்பித்தார்கள்.

பொன் நிறத்தில் மெத்தென்ற பணியாரத்தை குழியிலிருந்து எடுத்து குண்டாவில் போட்டுக் கொண்டிருந்த பூங்கொடியிடம்,
“இப்படி பக்குவமா பணியாரம் சுட தனி கைப்பக்குவம் வேணும். இந்த கைமணம் எங்க புருஷனுக்கு இல்லையே...” என்றாள் மேனகை.

அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக பார்த்தபடி,
“இதென்ன… உங்க வீட்டுல சமையல் நீங்க செய்ய மாட்டிங்களா? உங்க புருஷனுக்கு கைப்பக்குவம் கம்மின்னு சொல்றீங்க?” என்றதும்,

“எனக்கும் சமைக்க வராது, எங்க அக்காவுக்கும் சமையல் வராது. அதுக்குத்தான் அரண்மனையில் சமையல்காரராய் இருக்கும் எங்க மாமனையே, அக்கா தங்கச்சி நாங்க ரெண்டு பேரும் கட்டிக்கிட்டோம். அரண்மனை சாப்பாட்டை வாய்க்கு ருசியா சாப்பிடலாம்னு நம்பி கட்டிக்கிட்டோம்” என்றாள்.

“அரண்மனை சமையல்காரரா?” என்று பூங்கொடி ஆச்சரியமாக கண்ணை விரித்துக் கேட்க,

“ஆமாம்… சோழர் அரண்மனையில் தலைமை சமையல்காரர்னு சொன்னதை நம்பி ஏமாந்துட்டோம். இவரே அங்கு எடுபிடிதான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. இப்போ இங்க சோழ இளவலுக்கு சமையல் செய்ய பெரிய சமையல்காரருக்கு பதிலா இவரையும், இவர் கூட எடுபிடிக்கு நாங்களும் வந்திருக்கோம்.”

“ஓஹோ… அப்போ இப்போ உங்க புருஷரும் தலைமை சமையல்காரர் ஆகிட்டாருல்ல” என்றவளிடம்,

“அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க… இவர் சமைச்ச சாப்பாட்டை புகழாம, அரண்மனைக்கு உண்டி வியாபாரத்துக்கு வந்தவங்க வித்த பலகாரத்தைத்தான் ‘ஆஹா… ஓஹோ…’ அப்படின்னு புகழ்றாங்க. அது மட்டுமா… அந்த வியாபாரிகளோட வந்திருந்த பொண்ணு ஒன்னைப் பத்திதான் ஓயாம அங்க பேச்சு. உங்களுக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா எங்க புருஷன் கண்ணுக்குப் படாம அவளை நடமாடச் சொல்லலாம்னு சொல்ல வந்தோம்” என்றாள்.

“உண்டி வியாபாரத்துக்கு நாங்கதான் வந்தோம். எங்க கூட வந்த பொண்ணுன்னு மந்தாகினியைத்தான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா அவள் அதுக்குப் பின்னாடி என் கண்ணுலேயே படலை. பிறகு எப்படி உங்க புருஷன் கண்ணுல விழுக? அப்படியே விழுந்தாலும் எங்க அமைச்சர் அறையனாருக்கு பயந்து, உங்க புருஷனை கண்ணை மூடிக்கிடச் சொல்லுங்க. இல்லன்னா கண்ணு முழி ரெண்டையும் அவர் தோண்டிப் புடுவாருல்ல...” என்றாள்.

“அமைச்சர் மகள்னு சொல்ற… ஆனா உண்டி வியாபாரம் பார்க்கிற அளவா அவுக வீட்டுல காசுக்கு மலிவு வந்திருச்சா? களப்பாளர் அரண்மனை வேலையாட்களே நல்லா செழிப்பா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டோம். ஆனா மந்திரிப் பொண்ணு உண்டி வியாபாரத்துக்கு என்னத்துக்கு வந்தது...?”

ஊர்வசி அவ்வாறு கேட்டதும் பூங்கொடி சட்டென எதுவோ சரியில்லை என உணர்ந்துகொண்டாள்.

“அடியாத்தி… நீங்க யாரு? என்கிட்ட போட்டு விஷயத்தை கறக்க வந்துருக்கீங்களா? நான் சொன்னதை எல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு உங்க புருஷர்கிட்ட போய் பேசிக்கிட்டு இருக்காதீங்க. நான் தான் அந்த பொண்ணு. உங்க புருஷன் பார்வை என்மேல விழுந்தா, இந்த பணியாரம் திருப்பிப் போடுற பணங்குச்சியாலயே அவர் கண்ணை நோண்டிடுவேன். இந்தாங்க… நீங்க வாங்குன பணியாரம் எடுத்துக்கிட்டு இங்க இருந்து கிளம்புங்க” என்று விரட்டினாள் பூங்கொடி.

இவர்கள் நைச்சியமாக அவர்களிடம் இருந்து விஷயத்தைக் கறக்க பேச்சுக் கொடுக்க, அவர்களுக்கு அருகில் சும்மா நிற்பது போன்ற பாவனையில் இன்னும் மூன்று பேர் அவர்கள் பேசிய பேச்சை ஒட்டுக் கேட்டு விஷயத்தை கிரகித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் பல்லவன் அல்லியங்கோதையைத் தேட அனுப்பிய ஆட்கள்.

*****


தலைமை வனாசிரியர் விசுவநாத ஆச்சாரியார், அல்லி வந்ததும் தன்னிடம் அவளை அழைத்து வாருங்கள் என்று சொன்னதை அடுத்து, இவர்கள் தங்குவதற்கென ஒதுக்கி இருந்த கோவில் வளாகத்தின் அருகில் இருந்த நந்தவனத்தை அடுத்து இருந்த விசுவநாத ஆச்சாரியாரின் குடிலுக்கு மகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார் களப்பாளர் மாதேவியார்.

குடிலுக்கு வெளியில் வந்த மாணவர் ஒருவர்,
“தங்களை பயிற்சிக் கூடம் தாண்டி இருக்கும் ஆசிரியர் குடிலுக்கு வந்து சந்திக்கச் சொன்னார்”
என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஆசிரியரை பார்க்க வரும் முன் நீராடிவிட்டு, தனது கார்கூந்தல் முகத்தில் விழுந்து இம்சை கொடுப்பதைத் தடுக்க பிசிறு முடிகளை மட்டும் வகுடெடுத்து பின்னால் சிறு முடிச்சிட்டு இருந்தாள். அக்கட்டுக்குள் அடங்கிய கூந்தல் நீர் வீழ்ச்சியாய் வீழ்ந்து பிட்டம் வரை அடர்ந்து படர்ந்திருந்தது. இரவிக்கோதை, கிளம்பியவளின் தலையில் தான் தொடுத்த காட்டுமல்லி சரத்தை சூடிவிட்டிருந்தாள். கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்மன் சிலையைப் போன்ற வடிவான மேனியுடையவள். உற்சவ சிற்பமென பொன்னென மின்னும் தங்க நிறத்துடையவள் அணிந்திருந்த காவிப் புடவையிலும் கம்பீரமான அழகுடன் காட்சி தந்தாள் அல்லி.

இங்கு வந்ததில் இருந்து கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைத் தாண்டி வந்ததில்லை. வீரர்கள் பல கலைகளை அங்கே கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான வாள் மோதும் ஓசை, தரையில் தட்டும் காலடி ஓசை மற்றும் கர்ஜனைகள் ஆகியவற்றைக் கேட்கும் அல்லியின் கண்களுக்கு இன்று அக்காட்சிகள் கிடைத்தது.

வாள் வீச்சு, வில்வித்தை, சிலம்பம், மற்போர், குதிரையேற்றம், யானையேற்றம், போர்வியூகம் அமைத்தல் ஆகிய பயிற்சிகளை நேர்த்தியாக கடைபிடிக்க வைத்துக் கொண்டிருந்த வகுப்புகள் ஒவ்வொன்றையும் கடக்கும் போது கண்சிமிட்டாமல் கண்டுகொண்டே வந்தவளுக்கு, ஈட்டி எறிதலை அடுத்து ‘கதை’ கொண்டு மாணவர் ஒருவர் ஓங்கி மரத்தில் அடிக்க, அது இடண்டாக பிளப்பதை பார்த்ததும் கண்கள் விரிந்தது. இவ்வித்தையைத் தானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டானது.

ஆசிரியர் குடிலுக்கு முன் உள்ளே வர அனுமதி வருவதற்காக காத்திருந்தவளின் பார்வை, மறுபடியும் மறுபடியும் ‘கதை’ ஆயுதத்தைக் கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்த அந்த மாணவர்களையே உற்றுநோக்கியது. தான் அடிக்கடி சொல்லும் காயசண்டிகை இரண்டாகப் பிளத்தல் ஆகிய செயலுக்கு இந்தக் கதை கொண்டு தாக்கினால் தான் சரிபட்டு வரும்... ஆனால் இதற்கு முறையான பயிற்சியும் தேக பலமும் வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. தேகத்தில் தனக்கு பலம் உண்டு என்ற நம்பிக்கை அவளுக்கு அசையாமல் இருந்தது... ஆனால் பயிற்சி வேண்டுமே... அதற்கு...’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் முன்பு வந்த மாணவன்,
“ஆசான் உங்களை வரச் சொன்னார்”
எனச் சொல்லிவிட்டு சென்றான்.

எளிமையான அக்குடிலின் உள்ளே நுழைந்தனர் இருவரும். கல் மேடையில் அமர்ந்திருந்த விசுவநாத ஆச்சாரியார் கையில் வைத்திருந்த ஓலைச்சுவடியை அருகில் வைத்துவிட்டு,
“வாருங்கள்... வாருங்கள்”
என்று சொன்னதும் அல்லியை முன்னால் விட்டு, அவளின் பின்னால் களப்பாளர் மாதேவி நின்றுகொண்டார். இருவரும் அவருக்கு தலை வணங்கி,
“ஆசானுக்கு வணக்கம்”
என்றார்கள்.

“களப்பாளர் மாதேவியார் அவர்களே... நான் சொன்னது போல அல்லி பத்திரமாக வந்துவிட்டாள்தானே... இப்போது தங்களின் பதட்டம் தணிந்ததா?”

“அவள் எங்கு சென்று வந்துள்ளாள் என தெரியுமா உங்களுக்கு?”

“விடாரபுர அரண்மனைக்குத் தான் சென்று வந்துள்ளாள் என்பதை நான் அறிவேன்.”

“ஆம் ஆசானே... எதிரிகள் இருக்கும் கூடாரத்திற்கு போய் தப்பி வந்துள்ளாள்.”

“அங்கே சோழ இளவல் பார்வையில் பட்டு, கஜராஜனின் உதவியால் அவரின் கைகளில் அகப்படாமல் வந்துவிட்டாள் என்பதுவரை தெரியும். அதோடு இன்னொன்றும் தெரியும்—இவள் கருப்பு போர்வை கொண்டு முக்காடிட்டு அடையாளம் மறைத்து வந்துவிட்டாள் தான். ஆனால் கோடாதிபதி யாழை அல்லவா மீட்டிவிட்டு, அவள் யார் என்பதை அறிவித்துவிட்டு வந்திருக்கிறாள்” என்றார்.

“நான் முக்காடிட்டுப் போனது என்னை அடையாளம் காட்டாது இருக்க அல்ல... இருளோடு இருளாக போய் சிறைப்பட்டிருக்கும் சிறிய தந்தையை மீட்டுக்கொண்டு வரவே அவ்வாறு போனேன்” என்றவள் மனமோ, ‘சோழனின் மீது தனது இடையில் செருகி வைத்திருந்த குறுவாளை விட்டெறிய மனமில்லாமல் போன தனது பலவீனத்தை’ நினைத்து, அவளுக்கே அவளின் மீது கோபம் உண்டானது.

அவளின் அமைதியைக் கொண்டே அல்லியின் மனநிலையை ஓரளவு கணித்துக் கொண்டார் வனாசிரியர். எனவே உருவான புன்னகை வதனத்தோடு—

“மகளே அல்லி, நீ உன் சிறிய தந்தையை மீட்க எண்ணுவதில் தப்பில்லை. ஆனால் நீ அங்கு இருக்க வேண்டாம், பல்லவனின் கண்ணில் படவேண்டாம் என எண்ணியே உன் தந்தை இங்கு என் பொறுப்பில் உங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.”

“தங்களின் வார்த்தையை நான் குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும் ஆசானே... ஆனால் பெண்ணென்ற காரணத்தால் இவ்வாறு பயந்து ஒளிந்து வாழும் வாழ்க்கையை என்னால் சகித்துக்கொள்ள முடியாது... ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கான அடையாளமாக வாழவே ஆசைப்படுகிறேன்.”

“மகளே... துணிவு அவசியம் தான். ஆனால் அசட்டுத் துணிவு ஆபத்தல்லவா? எதிரியின் பலத்தை எளிதாக எடைபோடுவது ஆபத்து.”

“இங்கு குடிலுக்கு வரும் வழியில் மாணாக்கர்கள் மேற்கொள்ளும் போர் பயிற்சி அத்தனையையும் கண்டேன். இங்குள்ள மாணவர்களுக்கு குறையாத தீரமும், வீரமும், போர் வித்தையும் அறிந்தவள் நான். ஆனாலும்... நீங்கள் சொல்வதுபோல் என் பலத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்களை பகடையாக்கும் அந்த பல்லவனைப் போன்றவனை இரண்டாக வகுக்க என்னால் முடியும். உங்கள் மாணவர் ஒருவர் கதா ஆயுதத்தைக் கொண்டு ஒரே அடியில் மரத்தை பிளந்ததைக் கண்டேன். அந்த ஒரு கலையை மட்டும் நான் இன்னும் படிக்கவில்லை. என் உடலின் பலம் கூட எதிரியை ஒரே அடியில் வீழ்த்த எனக்கு அக்கலையை கற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்றாள்.

“மகளே... கதா வெறும் ஆயுதம் அல்ல; உடலை வஜ்ரமாக்கும் கலையின் வெளிப்பாடு அது. அரசகுல சத்திரிய புருஷர்களுக்கு மட்டுமே அக்கலை சாத்தியம். அது பெண்களுக்கான கலை கிடையாது” என்றதும், கோபத்துடன் அல்லியின் வார்த்தைகள் வெளிவந்தது—

“குருவே... வஜ்ரம் என்றால் ஆயுதம் மட்டும் அல்ல; அது மனமும் உடலும் ஒருங்கி நிற்கும் நிலை. அந்த நிலைக்கு ஆணும் பெண்ணும் வேறுபாடு இல்லை. நாட்டைக் காக்கும் பொறுப்பு மட்டும் வேறுபடாது. என்னால் முடியும். எனக்கு அக்கலை சாத்தியமாகும். வேண்டுமென்றால் பரீட்சித்துப் பாருங்கள். ஆணுக்கு நிகராக பெண்ணும் வலிமை உடையவள் என்பதற்கு நானே பதமாகிறேன்.”


இங்கு இவ்வாறாக இருக்க, அல்லி காட்டுவழியாக குதிரையில் சென்றதைத் துப்பறிந்து சோழனின் கைகாட்டிகள் காட்டிற்குள் அவளைத் தேடி நுழைந்திருந்தனர். அவர்களை பின் தொடர்ந்தே பல்லவனின் ஆட்களும் காட்டினுள் நுழைந்திருந்தார்கள்.

---தொடரும்---
 
Last edited:
Serazhnin kaikatigala or Solazhnin kaikatigala sis ? 👍🏻
அட ஆமா... எப்படியோ கவனிக்காம விட்டுட்டேன். சோழனின் என்று எடிட் பண்ணிட்டேன். நன்றி சிஸ்
 
அட ஆமா... எப்படியோ கவனிக்காம விட்டுட்டேன். சோழனின் என்று எடிட் பண்ணிட்டேன். நன்றி சிஸ்
Y sister episode update pannala
 
Y sister episode update pannala
sorry sis, papr.spaceல அடுத்தடுத்த update மற்றும் பிரமோஷன் வேலை என்னை மொத்தமா ஆக்கிரமிச்சிருச்சு. என்னை என் எழுத்துப்பக்கம் வர முடியாம பண்ணிருச்சு. ஓரளவு papr.space வேலையெல்லாம் முடிஞ்சது. இன்னும் ஓரிரு நாளில் இருந்து மறுபடியும்ம் எழுதவும் பதிவு போடவும் வந்துடுவேன்.
 
sorry sis, papr.spaceல அடுத்தடுத்த update மற்றும் பிரமோஷன் வேலை என்னை மொத்தமா ஆக்கிரமிச்சிருச்சு. என்னை என் எழுத்துப்பக்கம் வர முடியாம பண்ணிருச்சு. ஓரளவு papr.space வேலையெல்லாம் முடிஞ்சது. இன்னும் ஓரிரு நாளில் இருந்து மறுபடியும்ம் எழுதவும் பதிவு போடவும் வந்துடுவேன்.
Sorry sis.do ur work
.if you free u will write ur novel.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top