My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

19. பத்மாசினி

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,451

19. பத்மாசினி

எழுமலைக் கழுவன் குடி, நள்ளிரவில் காவல்காரர்கள் கையில் சலங்கைக் கட்டப்பட்ட வேல் கம்புடன், நடமாடுவர். சிலர் உரக்கப் பாட்டுப் பாடியபடியே, உலா வந்து அவ்விடத்தில் எல்லாம் சுகமே எனச் சமிக்ஞை செய்ய, பக்கத்துக் காவல்காரனும் அவ்விடத்தில் எல்லாம் சரியே என்பதாகக் கம்பைத் தட்டி, சமிக்ஞை ஒலி எழுப்புவார்கள். களவு, கபடு சந்தேகத்துக்குரியது. உதவி தேவை எனில் கம்பைத் தட்டும் விதத்திலும், சலங்கை ஒலியில் தகவலைக் கடத்தி, எங்கு உதவித் தேவையோ அங்கே அதிகப்படியான ஆட்கள் விரைந்துச் செல்வர். சிங்கராசுத் தேவன் அடிபட்டு வந்ததிலிருந்தே, காவற்படை, மேலும் கவனத்தோடு எச்சரிக்கையாகவேக் காவல் காக்கின்றனர்.

அந்தி சாயும் முன், சோறாக்கி இரவின் முதல் சாமத்தில் உண்டு, அவரவர் கூட்டில் அடங்கி விடுவார்கள். காவல்காரர்கள் மட்டுமே ஊரைச் சுற்றி வருவார்கள்.

சிங்கராசுதேவன், காயம் பட்ட காலத்திலிருந்து, முதல் சாமத்தின் நடைமுறைச் சற்றே மாற்றம் கண்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் ரதி தேவியின் நாட்டியத்தோடுக் கடந்தால், மற்ற நாட்களில் கழுவன் குடும்பம், குடிகளின் சுவாரஸ்யமானப் பேச்சில் ஓடும்.

ஒரு மாதக் காலம் தங்கியிருந்த நீல வள்ளி கிளம்பியிருக்க, செம்பதுமம் கொஞ்சம் சுணங்கித் தெரிந்தாள். வயதில் மூத்தவள், அத்தை முறையானாலும் கூட, ஒரு மாதக் காலம் ஒன்றாக வாசி மலையில் சுற்றித் திரிந்ததில், அவளோடு ஓர் பிணைப்பு உண்டாகி இருக்க, அவள் பிரிந்ததில் சற்றே வருத்தம்.

முகம் கூம்பித் திரிந்த மகளை அழைத்தச் சிங்கம், அவள் பயிற்றுவிக்கச் சொல்லிக் கேட்ட வர்மக்கலையைப் பற்றிப் பேச, செம்பதுமமும் உற்சாகமானாள். சாமிக் கருப்பனையும் அழைத்து வரச் சொல்ல, தமையனைக் கையோடு அழைத்து வந்தாள். சமத்தாகத் தகப்பன் பாதம் தொட்டு வணங்கி, மக்கள் இருவரும் பவ்யமாக முன்னே நிற்க, கல் ஆசனத்தில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்குப் போதித்த சிவனார் போல், சிங்கமும் அடிபட்டக் காலைத் தொங்க விட்டு, மற்றதை மடக்கி, நிமிர்ந்து அமர்ந்து வர்மக் கலையைப் போதிக்கத் தயாரானான். கணவன், ரதி தேவியைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் பிள்ளைகளோடு உரையாடுவதில் தாடகைக்கும் மகிழ்ச்சி.

“சூதானமாக் கேட்டுக்குங்க மக்கா, இந்த வர்மத்தில வைத்தியம், தற்காப்பு, தாக்குறதுகுண்டு மூணும் இருக்கு. கொஞ்சம் பிசகினாலும், தப்பாகிடும், உசுரேப் போற ஆபத்தும் உண்டு. சூதானமாக் கத்துகிடணும். பிரயோகமும் அப்படித் தான்.” சிங்கம் சொல்ல, “சரிங்க அப்பாரு” என இருவரும் சிரத்தையாகவேச் செவி மடுத்தனர்.

தேர்ந்த வைத்தியன் போல், தனக்கே உரியப் பாமர மொழியில் மனிதனின் சரீர அமைப்பு, உடற்கூறியல், நரம்பு மண்டலங்களைப் பற்றிய வகுப்பு எடுக்க, மக்கள் இருவரும் தகப்பனை வியந்துப் பார்த்திருந்தனர்.

“அருமையானக் கலை, நல்ல முறையில் உபயோகிக்கிறது, நம்மக் கையில் தான் இருக்கு. எனக்குக் கத்துக் கொடுத்த ஆசான், யார் உசிரையும் எடுக்க கூடாதுண்டுச் சத்தியம் வாங்கிகிட்டுத் தான் கத்துக் குடுத்தாரு. இன்ன வரைக்கும் அதை கடைப்பிடிச்சிட்டு வாறேன். நீங்களும் வாக்குக் கொடுங்க“ சிங்கம் தன் கையை நீட்ட, அவனுக்கு முன்னே தரையில் அமர்ந்திருந்த இருவரும், முன்னே நகர்ந்து முழுங்காலிட்டுத் தகப்பன் கை மேல், தங்கள் கைகளை வைத்து,

“சொல்லனுமா அப்பாரு. நாங்க சிங்கம் பெத்தப் பிள்ளைங்க. நல்லதுக்கு மட்டும் தான் உபயோகிப்போம்” எனப் பதுமமும், “வர்ம கலையை விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்த மாட்டோம்“ எனச் சாமியும் வாக்குத் தர, இருவரையும் அணைத்துத் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ஆசானாய் உயர்ந்தான் அந்தத் தந்தை.

சிங்கம் அமர்ந்த நிலையிலிருந்தே, சாமிக் கருப்பனை நிறுத்தி, தற்காப்புக் கலையில் சில வர்ம முறைகளைக் கற்றுத் தர, பதுமம் கவனமாகக் கவனித்தாள். ஒரு அடியில் சாமிக் கருப்பன் சுருண்டு விழ, “அப்பனும் மகளும் பழகிறதுக்கு என் மகன் தான் கிடைச்சானோ, போதும் நிறுத்துங்க” என சாமிக்கு மாற்று வர்ம சிகிச்சைச் செய்து மகனைத் தாடகை விடுவிக்க, “அம்மா, உனக்கும் தெரியுமா” செம்பதுமத்துக்கு ஆச்சரியம்.

“இதெல்லாம் கத்துக்காமல் இருந்திருந்தா,உன் அப்பனைச் சமாளிச்சு, இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்க முடியுமா” என நொடிக்க, சிங்கத்துக்கு ஏகப் பெருமை.

சாமி தன்னிலையில் மீண்டவன், சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, தாடகை நீராகாரம் கொண்டு வந்துக் கொடுத்தாள். மகனுக்கும், மகளுக்குமாக வர்ம தாக்குதல், அதிலிருந்து லாவகமாகத் தப்பித்தல் எனச் சிலதை மட்டும் சொல்லிக் கொடுக்க, செம்பதுமத்துக்கு சில வர்மப் புள்ளிகள் தூண்டப் பெற்றன. அவளுக்கு மயக்கம் வரும் போலிருக்க, சமாளித்து நின்றாள்.

“இன்னைக்கு, இது போதும்” எனக் கண்டித்தத் தாடகை, “நாளை மறுநாள் பழகலாம்” அவரவர் ஜாகைக்கு அனுப்பி வைக்க, வழக்கம் போல் கணவன் மனைவிக்குள் சம்பாஷணை ஓடியது.

கேலி, கிண்டலுக்குப் பின், “இன்னைக்கு, இந்தப் பொழுதில் இதைக் கத்து கொடுக்க வேண்டிய அவசியமென்ன” தாடகைக் கேள்வி எழுப்ப,

“பதுவுக்கு அவசியம், கத்துக் கொடுண்டு உள் மனசு சொல்லுச்சு. நேத்து வைத்தியரோடச் சேர்ந்து என் மக எண்ணெய் தேய்ச்சு விடும் போது, அம்புட்டுக் கருத்தாக் கவனிச்சது. கொஞ்சம் சொல்லிக் குடுத்தமுண்டாப் போதும், கற்பூரப் புத்தி, பிடிச்சுக்கும்” என மகளைப் பற்றி பெருமையாகப் பேச, தாடகைக்கும் பூரிப்பு தான். அவ்வளவு எளிதில் சிங்கம் யாரையும் புகழ்ந்து விட மாட்டான். மகள் என்பதையும் தாண்டி செம்பதுமத்தின் திறமை அப்படிப் பேச வைக்கிறது எனபதைத் தாடகையும் உணர்ந்தே இருந்தாள்.

“நம்ம பதுவு, ராணியா அரசாள வேண்டியவ. உன்னையும், என்னையும் விட ஒரு நாள் உசந்து நிற்பா பாரு” காட்சியைக் காண்பவன் போல் சிங்கம் சொல்ல, தாய் மனம் கிலி பிடித்தது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நிம்மதியா, சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் போதும். செல்வி தம்பிக்கு, நம்மப் பதுமத்தைக் கட்டி வச்சிட்டா, பூவும், முத்தய்யணுமேப் பார்த்துக்குவாக. நம்மக் கண்ணு முன்னாடியே இருப்பா. நம்மளும் கவலை இல்லாமல் இருக்கலாம், அவுகளைக் கூப்பிட்டுப் பேசு” என்றாள் தாடகை.

“யாருக்கு எங்கண்டு இருக்கோ அங்க தானே முடியும், சிராப்பள்ளி கோட்டையில இருந்தவ, சிங்கத்துக்கு மூணாந்தாரமா வரனுமுண்டு இருந்த விதியை மாத்த முடிஞ்சுதா” அவன் கண் சிமிட்டி நக்கலாகச் சிரிக்க, “அது உன்னோட சூழ்ச்சி” தாடகை அன்றைய சிங்கப் புராணத்தை ஆரம்பிக்க, அவர்கள் பொழுது சுவாரஸ்யமாகவேக் கழிந்தது.

செம்பதுமம் தாமதமாக வந்ததால், மற்றப் பிள்ளைகள் கோதை அருகில் இடத்தைப் பிடித்திருந்தனர். அதுவும் சரியே எனத் தனது அறைக்கு வந்துப் படுத்துக் கண்ணை மூடினாள்.

கனவா, நினைவா எனப் பிரித்து அறிய முடியாத நிலையில், தன்னைத் தானேக் கண்டாள். தற்போது இருக்கும் வயதை விடச் சற்றே அதிகமாக, உயர்ந்த பட்டுக் கட்டி, ஆபரணம் பூண்டு வாளேந்தி நிற்க,

“இன்று, இந்தப் பந்தயம் அவசியம் தானா பத்மை” அவன் வினவினான்.

“அவசியம் தான். அன்றுத் தந்தையின் அழைப்புக்குப் பதில் தந்த நேரம் என்னைச் சாய்த்து விட்டீர்கள். இன்று இருவரில் ஒருவர் யாரெனப் பார்ப்போம்” அவள் சிலிர்த்து நிற்க,

“என்னையே உன்னிடம் ஒப்புக் கொண்டப் பின், நீயா, நானா பந்தயம் எதற்கு, வென்றது நீ என்றே வைத்துக் கொள்வோம்” அவன் சமாதானத்தை முன் வைத்தான்.

“அதெல்லாம் கிடையாது, போட்டி, போட்டி தான், பந்தயம், பந்தயம் தான். பிடியுங்கள் வாளை“ என அவனை நோக்கி மற்றொரு வாளை எறிந்தவள், கண நேரத்தில் தாக்குதலையும் தொடுக்க,

“அம்மோ” என அதிர்ந்தவனாய் அவனும் நகைப்போடே வாள் ஏந்தி விளையாடினான்.

பள்ளி அறையில், வாளேந்தி நிற்கிறாளே புதுமணப் பெண், விருப்பமில்லா விவாகமோ? “வாயிற் கதவை அடைத்துச் சென்ற அந்தப்புரத்துப் பணிப்பெண், அவள் தோழியைக் கேட்க,

“நன்றாகச் சொன்னாய் போ, மணாளனாகத் திருமலை வாசன் தான் வேண்டுமென, ஏழுமலையானிடம் வேண்டி விரும்பி, தவமிருந்துக் கட்டிக் கொண்டவள். அவர்களுக்குள்ளான ஊடலும், கூடலும் இப்படித் தான்” தோழி, பெண் கதை பேச, அந்தப்புரத்து மகளிர் கதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

திருமலை வாசன் எனச் சொல்லப்பட்டவன், வாளில் வித்தை காட்டி, அவளுக்குப் போக்குக் காட்டி, தாவிக் குதித்து தம் இலக்கான மஞ்சத்தில் விழ, அவன் சூழ்ச்சி அறியாதவளோ, அல்லது அறிந்தும் அறியாப் பேதைப் போல் இருந்தவளோ அவளும் தொடர்ந்துத் தாக்கினாள்.

சில பொழுதில், விளையாட்டு வினையாக, “பத்மை” எனச் செயலற்று விழ, வாளை விட்டெறிந்து விட்டு, “வாசவரே” என அலறிய படி அவனிடம் ஓடினாள்.

அன்றைய இரவின் இரண்டாம் சாமம், சிங்கமும், தாடகையும் கதைப் பேசி ஓய்ந்திருக்க, கழுவன் வீட்டைச் சுற்றி வந்த முக்காடுப் போட்ட உருவம், தூபம் போட்டுச் செல்ல, சுற்று வட்டத்திலிருந்த அனைவரும் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றனர்.

அதிகாலை, இரவின் நான்காம் சாமம் கழுவன் குடி காவலர்கள் சிலருக்குக் குதிரை குழம்படிச் சத்தம் கேட்டது. ஆனால் ஆட்கள் யாரையும் காணவில்லை. யாரோ கடந்ததுப் போல் இருந்தது, உருவம் தெரியவில்லை. தங்கள் பிரமை என்று தைரியத்தை அதிகப்படுத்தக் காவல் கம்பில் உள்ள சலங்கையை ஆட்டி ஒலி எழுப்பினர்.

அதிகாலை நான்கு மணிக்கு, எழுமலை பாளையம் எல்லையில் உள்ள மூத்தவர் கூழன் குடிலுக்கு வந்த சமையன் என்பான், “ஆசானே, ஆசானே” எனத் திண்ணையில் படுத்திருந்தவரை எழுப்பினான்.

“இந்த நேரத்தில எவண்டா” என்றப் படி அவர் எழுந்து வர, அதிகாலையிலும் வியர்வைப் பூத்தவனாக, நடந்ததைச் சொன்னான்.

“அடேய், உன்னைக் காவல் காக்கச் சொன்னா, கனாக் கண்டு வந்துக் கதையாச் சொல்ற, சிங்கத்துக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமில்ல” அவர் மிரட்ட,

“பெரிய மனுஷன், அனுபவம் இருக்குமேன்டு உன்கிட்ட வந்துச் சொன்னேன் பாரு, என்னையவே தூங்குனமுண்டு குத்தம் சொல்றவன், அட சத்தியமா தான்யா சொல்றேன்.” சமையன் வாதாடிக் கொண்டிருக்க,

“ஆசானே, கழுவன் குடியில என்னமோச் சுத்துதுயா” என மற்றொருவன் வந்தான்.

ஒவ்வொருவராய் பேர் கூடிவிட, “சலங்கைச் சத்தம் கேட்டது, அது ஒரு வாடை, மணந்துக்கிட்டுக் கரும் புகையாய் ஓர் உருவம் பறந்தது.” காவல்காரர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர, மோகினியோ, பேய், பிசாசோ, அணங்கோ, இடாகினியோ, குறளி வித்தையோ? யூகங்களும் வித, விதமாக வந்தது. சிலர் கண்களில் ஆர்வமும், பலர் கண்களில் கலவரமும் தோன்றியது.

இந்தப் பயத்தை அப்படியே விடுவது சரியில்லை என நினைத்தக் கூழன்,

“ஏலேய், காவக்காரவுனுக உங்க கண்ணைக் கட்டிப்புட்டு, எவனோ களவாணிப் பய ஊருக்குள்ள ஊடுருவி இருக்கான். அவனைப் பிடிக்கிறது விட்டுப் புட்டுக் கதை அளக்கிறவனுங்க. ரெவ்வெண்டுப் பேரா போயி, ஆடு, மாடு, கண்ணுக்குட்டி உறுப்படிக் கணக்குச் சரியா இருக்குத்தாண்டுப் பாருங்கடா. சிங்கத்துக்குத் தெரிஞ்சது, நல்ல வெகுமானம் கொடுப்பாப்ல” என முடுக்கி விட, பொழுது புலரும் நேரம் ஆனதால், சற்றுத் தைரியத்தோடு கூழன் பணித்த வேலையைச் செய்யப் போனார்கள்.

ஆடு, மாடு, குதிரை எண்ணிக்கை எல்லாம் சரியாக இருந்தது, "ஆனால் தங்கம் குதிரை இங்க இருக்கு, சிங்கத்தின் குதிரையைக் காணோம்" ஒருவன் சொல்ல, "இது பெரிய விஷயமா, சின்னது, பெருசுக் குதிரையை எடுத்துட்டுப் போயிருக்கும்." மற்றொருவர் சமாதானம் சொன்னார். அதுவும் சரி தான், என மற்ற இடங்களை சோதனை இட்டனர். கழுவன் வீட்டுக் கொள்ளைப் புறத்தில் முக்காடுப் போட்ட உருவம் மயங்கிக் கிடக்க, அதிகாலையில் கழுவன் குடியேப் பரபரப்பானது.

அதே நேரம் சின்ன கழுவன் குடியும், பரபரப்பாகத் தான் இருந்தது. ஏற்கனவே துரை ராசு, வானவன் மற்றும் சிலர் காரணமாகவும், வேங்கடவனைக் காணவில்லை என்றப் பதட்டம் இருந்ததால், நீலவள்ளிக்குத் துணைக்கு வந்தத் தங்க ராசுவும் அங்கே தான் இருந்தான்.

முதல் நாள் மாலையில், வானவன் தன் கூடாரத்துக்குச் சென்றப் போதே, தாமினி தேவி குழந்தை அலமேலுவை தூக்கிக் கொண்டு, அங்கே வந்திருந்தாள். சின்ன அண்ணனைக் காணவில்லை என்றச் செய்திக் கேட்டு வந்தவள், பெரிய அண்ணனின் நிலையைப் பார்க்கவும், கண்ணீர் விட்டுக் கதறியே விட்டாள். வானவன் தங்கையை அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்ற, அவருக்கானப் பணிவிடை செய்தாள்.

இரவிலேயே வேங்கடவனைத் தேட செல்வது அறிவீனம் என உணர்ந்தவள், அதிகாலையில் சிவப்பியை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு மலைப் பக்கம் வந்தாள். வெகுநாள், மண்ணையும், மலையையும் பிரிந்திருந்த நீல வள்ளி, அவற்றைக் காணும் ஆவலோடும், தங்கராசுவைத் தேடியும் கோவில் பக்கம் வர, சிவப்பியையும், தாமினியையும் கண்டாள். சாயலை வைத்தே வானவன் தங்கை என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

சிவப்பிக்கு, வள்ளியை ஏற்கனவே அறிமுகம் இருந்தது, “சின்னம்மா’ என முறைக் கொண்டாடி, தாமினியையும் அறிமுகப் படுத்தி வைக்க, சம்பிரதாயமாக வணக்கம் சொல்லிக் கொண்டனர்.

“அதிகாலையிலேயே, என்ன இந்தப் பக்கம்” வள்ளி விசாரிக்க, “சின்னவரைத் தேடி வந்தோம்” சிவப்பி பதில் சொல்ல, “ராசாதி ராசர இவங்களோட அண்ணன், வீராதி வீரக் காவல்காரன் என் அண்ணன், இரண்டு பேராலையும் முடியாததை நீங்க சாதிச்சுடுவீங்களா” வள்ளி வினையமாகக் கேட்க, தாமினிக்குக் கோபம் வந்தது. ஆனாலும் அதைக் காட்டும் நேரம் இதுவல்லவே.

“ராசாதி ராசர், வீராதி வீரர்களால் முடியாதது என் சின்னமாவால முடியும். அதுக்காகத் தான் உங்களைத் தேடி வந்தோம். இந்த மலையைப் பத்தி உனக்குத் தெரியாததா? உதவிப் பண்ணு சின்னம்மா” சிவப்பி அடுக்க,

“இந்த உதவியைச் செஞ்சீங்கன்னா, எங்களுக்குப் பெரிய உபகாரமா இருக்கும்” தாமினியும் கை கூப்ப, அவள் கையைப் பற்றிய வள்ளி,

“பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். முயற்சி செஞ்சு பார்ப்போம் வாங்க” என அழைத்துச் சென்றாள்.

திடியன் மலையைத் தாண்டியக் காட்டுப் பகுதிக்கு முன்பே, மாமரத்தடியில் ஒரு குதிரை நின்றுக் கொண்டிருந்தது. அதன் அருகிலேயே ஒரு ஆடவன் படுத்திருப்பது தெரிய வர, வேங்கடவனாக இருக்குமோ என வேகமாகத் தாமினி அவ்விடம் விரைந்தாள். வேற்று ஆடவன் என வள்ளியும், சிவப்பியுமே தயங்கிப் பின் தங்கினர்.

ஆனால் அங்குப் படுத்திருந்தது தங்கராசு தேவன், அருகில் நின்றது சின்னக் கருப்பன் குதிரை. தாமினி வேகமாகத் தொட்டுத் திருப்பியதில் விழித்தவன், கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்க்க, தாமினி தேவி, நீதானா என்பது போல் முறைத்த படி நின்றாள்.

சிவப்பி, “அட கிரகமே எங்கப் போனாலும், இந்த கழுவன் மாமனுங்க மூஞ்சியில் தான் முழிக்க வேண்டியது இருக்கு” சலித்துக் கொள்ள, வள்ளி சட்டெனத் திரும்பிப் பார்த்து, “தங்கம், ராத்திரி திண்ணையில் படுத்துகுறேண்டு சொல்லிட்டு வந்தவன், இங்க எப்படி வந்த” என வினவ,

“தெரியலைக்கா” என அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான். அவன் மேனியில் அதிகப்படியானக் கீறல், சில இடங்கள் கன்றிப் போய் இருந்ததைப் பார்த்து, ஏதோ யூகித்துக் கொண்டாள்.

“இரு வர்றேன்” என வள்ளி எங்கோ ஓட, தான் எப்படி இங்கு வந்தோம் என முன் தினத்தை நினைவில் கொண்டு வரப் பார்க்க, சின்னக் கருப்பன் கனைத்தது.

“அதே குருதை, அதே மனுஷன்” எனச் சிவப்பி கேலியில் இறங்க, அப்போது தான் குதிரையைக் கவனித்த தங்கம், ‘இது சின்னக்கருப்பன், சிங்கத்துடையக் குதிரை, நான் இதில் வரலையே, வேற யாரும் வந்திருப்பாங்களோ, முத்து வந்திருப்பானோ’ என, எதிரே ஒருத்தி முறைத்து நிற்பதையும் மறந்து யோசனையில் ஆழ்ந்தான்.

“இங்கே என்னச் செய்றே, இது உன் ஊர் இல்லையே” தங்களை வேவுப் பார்க்க வந்திருக்கிறான் என யூகித்த தாமினி அதிகாரமாகவே கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன், “அதை நான் கேட்கணும்” என்ற படி, குதிரையைத் தடவிக் கொடுத்தான்.

வள்ளி, இரண்டு நீர் கலையத்தோடு வந்தவள், ஒன்றைச் சிவப்பியிடம் தந்து விட்டு, அவன் மறுத்தும் கேட்காமல், தன் ஈரச் சேலை கொண்டு தம்பியின் முகத்தைத் துடைத்து விட்டு, “இதைக் குடி” எனக் குடுவையையும் அவன் கையில் திணித்தாள்.

“அக்கா, நான் நல்லா தான் இருக்கேன்” அவன் சமாதானம் சொல்ல, நல்லா தான் இருக்க, பரவாயில்லை குடி” என்ற கண்டிப்பில், மடமடவென பதனியை வாயில் சரித்துக் கொண்டப் பின் தான் தெம்பு வந்தது.

“அப்படி என்னப் பெரிய வேலை பார்த்துக் களைத்துப் போனானாம்” தாமினி, வள்ளி, தங்கத்துக்குச் செய்யும் சிருஷைகளைப் பார்த்து மனதில் குமைந்தாள்.

வள்ளி, ‘என்ன தம்பி, என்ன நடந்தது” விசாரிக்க, “ஒன்னும் நினைப்புக்கு வரலை அக்கா” என்றவன், யோசனையோடு விடுவிடுவெனக் காட்டுக்குள் செல்ல, மூன்று பெண்களும், ஓட்டமும், நடையுமாக அவனைத் தொடர்ந்தனர்.

தாமினியும், சிவப்பியும் மாற்றி, மாற்றிக் கேள்வி கேட்டுக் கொண்டே வர,
“பேசாமல் வர்றதா இருந்தா வாங்க. இல்லயிண்டா நடையைக் கட்டுங்க.” முதல் முறையாகத் தங்கராசு, தன் கடுமையைத் தாமினியிடம் காட்ட, அவள் பேச்சற்றுப் போனாள். வள்ளி, பேசாமல் வரச் சொல்லி சைகைக் காட்டி விட்டு அவன் பின்னே விரைந்தாள்.

தங்கராசுவுக்கு அதுவெல்லாம் கருத்தில் படவே இல்லை. ஏதோ ஒரு சக்தி அவனை இயக்க, பாதையில் சென்று அவன் நின்ற இடம், மரங்கள் அடர்ந்த சோலையாக, துளசிச் செடியின் மணம் கமழ இருந்தது. அவ்விடமே தெய்வீகத் தன்மையுடன் இருக்க, ஒரு கருங்கல் மேடையில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பிரதட்சயம் ஆகியிருக்க, பெருமாள் காலடியில் தலை சாய்த்து, ஒரு மனிதன் மயங்கிக் கிடந்தான்.
 
Back
Top