My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

18. திருவின் தேவி

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,505
18. திருவின் தேவி
புத்தூர் மலையடிவாரத்தில், கடத்தல் கும்பல், குடி வேந்தன் ஆட்கள், வானவன், கபிலன், செல்லமுத்து மூவரையும் அதே இடத்தில் கொலை செய்தவர்கள், இன்று மீண்டும் கூடியிருக்க, அன்று தனியாளாக மாட்டி பித்தனாய் தண்டனை அனுபவித்தவனையும் விதி அங்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தது. ஆம், திரு வேங்கட ராஜனும், பத்மாசினியைக் கையில் தாங்கிய நேரம், ரங்கதுரை உதவிக்கு ஓடி வந்தான்.


அதே நேரத்தில், நிர்மலா, செல்ல முத்துவின் பழைய தோழி தனம் ரங்க துரையை அழைத்து, நிர்மலாவைக் குடிவேந்தன் ஆட்கள் கடத்திய விஷயத்தையும் சொல்ல, முதலில் ரங்கம், “நீயும் இதில் கையாளா?“ என அவள் கழுத்தைத் தான் பிடித்தான்.


“செல்லமுத்துக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு, பிராயச்சித்தம்.” என அவள் சிரமப்பட்டு சொல்லை உதிர்க்க, ஸ்ரீதேவி பத்மாசினியாக எழுந்திருந்தாள். “அவள் சொல்வது உண்மை.” என்றவள், “மலைக்குச் செல்ல, வழித் தடத்தைக் காட்டு.” எனச் சொல்லவும், தனம் குறுக்குப் பாதை வழியாகக் கூட்டி மலையின் மற்றொரு புறமாகக் கூட்டி வந்தாள். ராஜா திருவின் மெய்காவல் படையும் பின் தொடர்ந்தது.
“மலையாம் மலையழகாம்
மாமரங்கள் உண்டு பண்ணி
சிலையாக நிக்கிறாரே
தெய்வமான கருப்பசாமி.”
மலையடிவாரத்தில் நிற்க, மேலே கருத்த பாண்டி அய்யாவின் வம்சம்
“கருத்த முத்து எண்ணெ போல
வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி
தேடி வேட்டை யாடி வாரார்.
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது.”
என, பாண்டி குடும்பத்தின் கடைக்குட்டி சிங்கம் மென்பொறியாளன் தினேஷ் பாண்டி கூட வீறுகொண்டு நின்றான்.


குடி வேந்தனைப் பார்க்கவும், செல்வமணிக்கும், ரங்கதுரைக்கும் செல்லமுத்து பற்றிய நினைவுகளும், கோபமும் புதுப்பிக்கப்பட்ட, கபூர் ஆள் சுட்டதில், தப்பியிருந்தவன், இவர்களிடம் சிக்கியிருந்தான்.


சன்னு ஓடி வந்து, தன் அம்மாவைக் கட்டிக் கொள்ள, “நீ ஏண்டி இங்க வந்தே. இது தாண்டி உங்க அப்பாவைக் காவு வாங்கின பூமி.“ என நிர்மலா சொல்லி அழ, அம்மா, மகள் இருவருமாகக் கதறினர்.


நிர்மலா அழுவதைப் பார்க்கவும், இரண்டு துரைக்குமே வெறி வந்தது, “அன்னைக்கு என்ன நடந்தது சொல்லுங்கடா.” எனக் குடி வேந்தன் ஆட்களை அடி வெளுக்க, அவர்கள் பேராசிரியரின் திட்டத்தைச் சொன்னார்கள்.


அதைக் கேட்கவும், நிர்மலாவுக்கு அவர் மேல் பொல்லாத கோபம் வந்தது. “இதில் சந்திரகிரி வம்சம் எங்க வந்தது, நீ எப்படி எங்க அரண்மனைக்கு வந்த?” என வேங்கடவன், குடி வேந்தனைப் பார்த்து கேள்வி எழுப்ப,


“சிலையை வெளியே கொண்டு வர, உங்க வம்சத்து ஆளுங்க வரணும்னு ஒரு ஐதீகம் இருக்கு, அதுக்காக உங்க சித்தப்பா கூட கூட்டு வச்சிருக்காங்க. சிலை கிடைச்சா, அவருக்கு ஒரு ஷேர்.” என்றான் குடிவேந்தன். “அப்போ சீனு சொன்னது இதத் தானா?” என ரங்கம் கேள்வி எழுப்ப, “உனக்குத் தண்டனை வாங்கி கொடுக்கணும்னு நாங்க தான் அவனையும் தூக்கினோம்.” எனப் பயந்து பயந்து பதில் சொல்ல, அவனுக்கு மிதி விழுந்தது.


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, கபூர் ஆட்கள், பிறர் கவனம் ஈர்க்காமல் தப்ப பார்த்தனர். தினேஷ் பாண்டி அதைக் கவனித்து, ஓர் அடி விட, அவன் பதட்டத்தில் மறித்து வைத்திருந்த மற்றொரு துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.


செல்வம், ராஜா, தினேஷ் ஆகியோர் சுதாரித்துச் சட்டென மற்றவரைப் பிடித்து இழுத்து குண்டு படாமல் மறைத்தனர். அப்படியும் நிர்மலாவைப் பதம் பார்க்க வந்த குண்டு ஒன்றை ராஜதுரை தன் தோளில் வாங்கிக் கொண்டான்.


“தம்பி!” என நிர்மலா அலற, அவளை மறைவிடத்துக்கு அனுப்பி விட்டு நேராகத் துப்பாக்கிப் பிடித்திருந்தவனிடம் சென்று அவன் மூக்கில் ஓர் குத்து விட்டான்.


குருதி வழிய, ராஜதுரையைப் பார்த்த செல்வம், தன் வர்மக்கலையை அங்கிருந்தவர் மேல் பிரயோகித்துச் சாய்த்தான்.
“18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி
முனியம்மா
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்”
என எட்டுத் திக்கும் பாடல் ஒலிக்க, கோவிலில் பூசணிக்காய் வைத்து தேவர்களைத் திருப்தி செய்து, துர்தேவதை வராமலிருக்கப் பிரவேச பலி கொடுக்க, கோவிலின் இரண்டு திசையிலும், துஷ்டர்களை அடித்து வீழ்த்தி, பாண்டி குடும்பத்தினர் புத்தூர் மலையிலும், நாகமலை அடிவாரத்திலும் பிரவேச பலி கொடுத்தனர்.


ஆதிசிவன் கோவிலில், பிரவேச பலி முடித்து, எட்டுத் திசையிலும் மண் எடுத்து, முளைப் பாலிகை இடுதல், சிவாச்சாரியார்கள் இரட்சை கட்டுதல் ஆகியவை முறைப்படி நடந்தன. அடுத்து, குடங்களில் பல்வேறு இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை நிறைத்து மாவிலை, தேங்காய், பட்டுத் துணி உடுத்தி அலங்கரித்தனர்.


பின்னர், பாலாலயம் செய்யப்பட்டக் குடிலுக்குச் சென்று ஆச்சாரியார்கள் முறைப்படி அத்திப் பலகையில் உள்ள சக்திகளைக் குடங்களுக்கு ஆவாகனம் செய்து, பெரிய பட்டர், அதைச் சுமக்கும் சிவாச்சாரியாருக்குத் தூக்கி தலையில் வைக்கும் முன், அவர்களுக்கு அருள் வந்து இறங்க, அவர்களைக் காப்புக் கட்டிய பங்காளி குடும்பத்தினர் பிடித்தனர். தொட்டவுடன் ஷாக் அடிக்கும் மின்சாரம் போல், அருள்நிறை சக்திகளைச் சுமந்தவர்களைப் பிடித்தவர்களும் அந்த உணர்வைத் தாங்க மாட்டாமல் சாமி ஆடினர்.


சக்திகளைக் குடத்திற்கு மாற்றி, கோவிலை வலம் வரும் நேரம், தங்கபாண்டியன், தான்வி, தினேஷ், சன்னு, ராஜா, பத்மாசினி, செல்வமணி ஆகியோர் வந்து சேர, அவர்களும் கோவிலைச் சுற்றி வந்து, யாக சாலைக்குக் கும்பம் பிரவேசிக்கும் போது பிரார்த்தனை செய்தனர். முதலாம் கால யாகம் வெகு சீரும், சிறப்புமாக நடந்தேறியது. அன்றைய இரவில் சுக்கிர ஓரையில், கர்ப்ப கிரகத்தில் அந்தந்த தெய்வங்களுக்குரிய பீஜ மந்திரங்களைச் செப்பு தகட்டில் பதித்து யந்திரஸ்தாபனம் செய்து அஷ்டபந்தனம் மருந்து சாத்தி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர்.


துரையில்லம், இடது கையில் கட்டோடு, சாய்வு நாற்காலியில் ராஜதுரை அமர்ந்திருக்க, அவனது அல்லக்கைகள், “என்ன அண்ணன், எம்புட்டு சம்பவத்தை செஞ்சிருக்கோம். இப்படிக் குண்டு கையில் பாஞ்சது இல்லையே அண்ணன்!” என வருந்திக் கொண்டிருக்க,


அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து ராதா ராணி இவர்களைக் கோபமாகப் பார்த்திருந்தாள். செய்தி கேள்விப்படவுமே, “முதல் நாள், தன் காலுக்கு வைத்தியம் பார்த்தானே.” என அவளுக்கும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான், ஆனாலும் வீடு தேடிச் சென்று; பார்க்க ஒரு தயக்கம். இவள் வரும் முன், மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அக்காவும், அண்ணனுமாக வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்.


பத்மாசினியாக இருந்த ஸ்ரீ தேவி தான், யாகம் முடியவுமே, “தந்தையைப் பார்க்கப் போக வேண்டும்.” என அழைக்க, “அது ஒன்னு தான் குறைச்சல்.” என வேங்கட ராஜாவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.


“அடேய் போதும் அடங்குங்கடா, போயி சாப்பிட்டு வாங்க.” என ரங்கம், ஆட்களை அனுப்பி விட, இரவு உணவோடு செல்வமணி, மீனா, சக்தியும், அவர்களுக்கு அடுத்து ரெட்டி குடும்பமும் வந்து சேர்ந்தது.


“உன் அண்ணனுக்கும், அக்காவுக்கும் வைத்தியம் பார்த்தாச்சு. இப்போ உன் முறையா?” என மீனா கோபிக்கவும் “இல்லையிண்டா வரலாறுல நம்ம பேர் வராதில்ல.“ எனச் சிரித்தான் ராஜதுரை.


“பெரிய வீர பரம்பரை தான்.” என மீனா திட்டிக்கொண்டே அவன் காயத்தை ஆராய்ந்தவள், “இனிமே எங்கையாவது, வம்பு வழக்குண்டு போனியிண்டா பார்.” எனத் திட்ட, ராஜதுரை கண்ணில் பளபளப்போடு,


“என் மகள், ஆத்தாவாட்டம் பார்த்துக்க நீயிருக்கேல்ல.” என அவன் நெகிழ்ந்தான், “ஆத்தா பார்த்தாலும், மக பார்த்தாலும், அடிபட்டா வலிக்கத்தான் செய்யும். குண்டு உரசிட்டு போயிருக்கு பரவாயில்லை, கொஞ்சம் ஆழமாப் போயிருந்தா!” என அவள் மிரட்ட,


“கையை எடுத்திருப்பாய்ங்க.” என்றான் சுலபமாக. மீனா அவனை முறைத்தாள்.எதிரே அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்த ராதா ராணி, “நல்லா, வாயிலையே நாலு அடி போடு உன் சித்தப்பாவுக்கு. பெரிய எமதர்மன்னு நினைப்பு.” என்றாள்.


“இந்தா எலிசபெத்து, முடிச்சா உதவி செய்யி, இல்லையிண்டா பேசாமல் வேடிக்கை பார். என்னத்துக்கு என் மகள் கிட்டக் கோர்த்து விடுற?” எனக் கோபப் பட, "விடு சித்தப்பா, அவுங்களும் உன் மேல உள்ள அக்கறையில் தானே சொல்றாங்க. நாலு என்ன பத்து அடி கூடப் போடுறன்." என ராதாவைச் சமாதானம் செய்ய, “எப்படியோ போங்க, எனக்கென்ன வந்தது. அடியே ஸ்ரீ கிளம்பலாமா?” என ராஜதுரையை முறைத்து விட்டு அவள் உள்ளே குரல் கொடுக்க, வேங்கடவன், “பத்மாசினியா தான் இருக்கா.” தயங்கிய படியே தான் சொன்னார்.


“ஜீப் டிரைவரும் வெயிட் பண்ண மாட்டேங்கிறான், இவளோட எனக்கு இதே பாடு.” என ராதா சலித்துக் கொள்ள,


“மேடம், எந்த நேரமா இருந்தாலும், உங்களுக்கு வண்டி வசதி செஞ்சு தர வேண்டியது என் பொறுப்பு.” என ரங்கம் சொல்லவும் அமைதியாக இருந்தாள்.


“என் மேலப் பாய வேண்டிய குண்டை தான் மீனு, அவன் வாங்கிகிட்டான், அவனை வையாதே.” என நிர்மலா மருமகளிடம் சொல்வது போல், ராதாவுக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தினாள்.


“என்ன நடந்தது?” என ரெட்டியும், மீனாவும் விளக்கம் கேட்க, நடந்தது சொன்னார்கள். “அப்பவே சன்னு மதினி, மனசு சரியில்லேனுச் சொல்லுச்சு, இத தான் காட்டி கொடுத்திருக்கும் போல.” என்ற மீனா, செல்வத்திடம், “நீயும் ஒரு வார்த்தை சொல்லாமல் போயிட்டியே மாமா.“ எனக் கோபித்தாள்.


“நல்லாத் தான் பொழைப்பைக் கெடுத்த, இதெல்லாம் சொல்லிட்டுப் போற விஷயமா. உன் அத்தைக்கிட்ட போட்டு விட்டுறாதே.” எனச் செல்வம் சொல்லவும்,


“பொம்பளைங்களுக்கு தெரியக் கூடாதுன்னு ஏன் மறைக்கிறீங்க?” என ராதா கேள்வி எழுப்ப, “தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்னு தான்.” எனச் செல்வம் விளக்கம் தந்தான். ஜெகன்மோகன் ரெட்டி, “இப்போவாவது, உன் அண்ணன் தம்பியைப் புரிஞ்சுக்கிட்டா சரி தான்.” என, நீருமாவ அவர்கள் எப்படி மூளைச் சலவை செய்து வைத்திருந்தார்கள். அவளின் பழிவாங்கும் எண்ணத்தைத் தள்ளிப் போட, தான் எடுத்த முயற்சியையும் சொன்னார்.


சாந்தம்மா, “இப்போ எதுக்கு அதைச் சொல்றீங்க?” என ஆட்சேபிக்க, “அவங்க சொல்லட்டும் அக்கையா.” என்றார். அன்று முதல் இன்று வரை நடந்ததை, திருவேங்கட ராஜாவிடம் எல்லோருமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.


சன்னு, தினேஷ், தங்கம், துரை பாண்டியும் அங்கே வர, “பூஜையெல்லாம் நல்லபடியா ஆரம்பிச்சுடுச்சா அண்ணேன்?” என ரங்கம் விசாரிக்க, துரை விவரம் சொன்னார்.


சன்னு, சாந்தம்மாவைக் கட்டிக் கொண்டவள், “இன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன்.” என நடந்ததை விவரிக்க, “என் பங்காரம், இதோட எல்லாம் முடிஞ்சது. இனி உனக்கும், உன் அம்மாவுக்கும் நல்ல காலம் தான்.” என இருவருமாக வளர்ப்பு மகளைத் தேற்றினர்.


தங்க பாண்டியன், வானவன், கபிலன், செல்லமுத்து கொலைகள் நடந்த நாளில் என்ன நடந்தது எனத் தொகுத்துச் சொன்னான்.


“வானவன், நம்ம வேங்கடராஜாவோட அப்பாவைத் தொடர்பு கொண்டு சிலைகள் பற்றிச் சொல்லவும், அவர் சந்திரகிரியில் வச்சு கோவில் கட்டலாம்னு வாக்கு கொடுத்திருக்கார். செல்லமுத்து மதினியும் ஊருக்கு வரணும்னு வற்புறுத்தவும் கூட்டிட்டு வந்திருக்கார். ப்ரபசர் மூலமா, கருத்த பாண்டி தாத்தாகிட்டப் பேசி, மதினியைக் குடும்பத்தோடச் சேர்த்து வைக்கத் தான் வந்திருக்காங்க.


அதற்கு நடுவில், பேராசிரியர் வேலையைக் காட்டிட்டார். தான் முன்னே வராமல் கபூர் ஆட்களை வரவழைச்சு மிரட்டியிருக்கார். குடிவேந்தன் ஆட்களும் இதில் சப்போர்ட், அவன் டார்கெட் செல்லமுத்து மதினி. மீனா தன் மகளோன்னு, குடிவேந்தனுக்கு ஒரு சந்தேகம், அதை வச்சு அரசியல் பண்ணலாம்னு ஒரு எண்ணம். எதுக்குமே இடம் கொடுக்காமல் மதினி தன்னைத் தானே அழிச்சுகிச்சு.” என அவன் வருந்த, ரங்கதுரை கண்ணீர் வடித்தான்.


உள்ளிருந்த செல்லமுத்து சிலையைப் பார்த்து, “சின்னம்மா, நீ இழைத்த தவறுக்காகப் பிராயச்சித்தம் செஞ்சிட்ட, இதோ உன் வீட்டைத் தேடி அம்மாவும் வந்துடுச்சு. அப்பாரும், அம்மாவும் சேர்ந்து, இந்தக் கூட வீடா மாத்தணும்னு ஆசீர்வாதம் பண்ணு. உன் மகள் மீனாவுக்கும் பிறந்த வீடு கிடைக்கும்” என்றாள். செல்லமுத்து சிலையிலிருந்து சம்மதமாக பூ விழுந்தது.


“அப்போ, சந்திரகிரி வம்சம் இந்தக் கொலைகளைச் செய்யலையா?” எனச் செல்வம் கேட்கவும், “இல்லை, நான் வல்லவன், நல்லமன் இரண்டு பேரையும் விசாரிச்சுட்டேன். வானவன் கொலைக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவங்களுக்கு முன் ஜெனரேஷன்ல அந்த தப்பு நடந்திருக்கு, ஆனால் இப்போ நடக்கலை.” என்றார் ராஜா.


“சந்திரகிரி வம்சத்துக்கு, இந்தக் கொலைகளில் சம்பந்தம் இருக்குன்னு சீனு சொன்னானே?” என ரங்கம் கேட்கவும்.


“அங்க தான், பேராசிரியரோட மூளை வேலை செஞ்சிருக்கு. சிலைக்காகக் கொலையைச் செஞ்சு ஆணவக் கொலையினு உங்களை மாட்டி விட்டார். ஒரு வேலை, எதிர்த்து கேஸ் நடந்திருந்தா, விசாரணை வானவன் சித்தப்பாக்களை நோக்கிப் போயிருக்கும். அப்பவும் சிலை கடத்தல் வந்திருக்காது." என்ற தங்கம்


"தாயார் சிலைகளைப் பத்து வருஷம் கழிச்சு தான் கண்டு பிடிச்சிருக்கார், அந்த சமயம் இந்த நல்லமன், வல்லவன் இங்க வந்திட்டுப் போயிருக்காங்க. அதனால் தான் சன்னு இங்க இருக்கும் போது, அவளோட பாதுகாப்பைப் பலப்படுத்தச் சொன்னோம். சொத்துக்கு போட்டின்னு இல்லைனாலும், பெருமாள் சிலையைத் தேட சன்னுவை, அவுங்க கஸ்டடியில் எடுப்பங்களோன்னுப் பயந்தோம். ஆனால் சன்னு விஷயமே வெளியேத் தெரியாமல், அவங்க அம்மா, ரெட்டிகாரு, துரை சித்தப்பா எல்லோருமே திறமையாச் சமாளிச்சாங்க." எனப் பாராட்டினான்.


"பெருமாள் சிலை வெளிவருவது, அத்தனை சுலபமில்லை." என வேங்கடவன் சொல்லவும்,


“அது இப்போ புரியுது. உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். உங்கள் காத்திருப்புக்குப் பலன் கிடைச்சா, எனக்கு ரொம்ப சந்தோசம். நானும் அரசாங்க தரப்பிலிருந்து, என்னால் ஆன உதவிகளைச் செய்யிறேன்." எனத் தங்கம் வாக்கு கொடுத்தான்.


“என் வானவனைக் கொன்ற பாவிகளை, நான் என் கையாலக் கொல்லணும், தங்கம், என்னை அவனுங்க கிட்ட கூட்டிட்டு போ.” என நிர்மலா ஆவேசம் வந்தவளைப் போல் கேட்க,


“ஏற்கனவே செத்தவனை எப்படிக் கொல்லுவ. கபூர் கையாலே ரோனிட் செத்துட்டான். அவனைப் பத்தி தெரிஞ்சு, பிரபஸர் வீட்டுக்குள்ள அவன் ஆளுங்களையேக் காக்கி சட்டையில் உட்கார வச்சிருந்தோம். செல்வம் மாமா உபயம், அவனுங்களால் எதிர்த்துப் பேச முடியலை. பேராசிரியர் இப்போ ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிகிட்டு இருக்கு, அவர் குடும்பம் வந்துகிட்டு இருக்காங்க. குடி வேந்தனுக்கும் அதே நிலைமை தான்.” என்றான். “தேவி, உன் பகை முடிஞ்சது. வானவனைக் கொன்னவனுக்கு சரியான தண்டனை கிடைச்சுடுச்சு. இனிமேலும் இந்த எண்ணத்தை வளர்க்காத. குடும்பத்தோடு சந்தோசமா இருக்க வழியைப் பார்.” எனத் துரை பாண்டி தங்கைக்கு அறிவுறுத்த, ரெட்டிகாருவும் அதனை வலியுறுத்தினார்.


நிர்மலாவுக்கு மனசு ஆறவே இல்லை, கண்ணீர் சொரிந்தபடி நிற்க, வேங்கட ராஜா, அவள் கையைப் பற்றிக் கொண்டு, “எந்த குலதெய்வத்தை, நம்ம ராஜ்யத்தில் வைக்கணும்னு உங்க கணவர் ஆசைப்பட்டாரோ, அதேப் போல வைப்போம். பெருமாள் திருவடியிலிருந்து, உங்க கணவரும் நம்மளை ஆசீர்வதிப்பார். அவர் ஸ்தானத்திலிருந்து சந்திரிகாவுக்குச் செய்ய வேண்டியது என் பொறுப்பு.” என வாக்கு தரவும், வானவன் சொல்வது போல் இருந்தது. நிர்மலா அமைதி அடைந்தார்.


“என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, குடி வேந்தன் ஆட்களைக் கொல்லாமல் விட்டதுக்கு நன்றி. நம்மக் கோவில் கும்பாபிஷேகம் நடத்திக்கிட்டு இருக்கோம், நம்மக் கையால் எந்த பாவச் செயலும் நடக்கக் கூடாது. ஆனால் கெட்டவன் அழியணும்னு நினைச்சேன், அதே மாதிரி தான் நடந்திருக்கு.“ என தங்கம் சித்தப்பாக்கள், மாமா, தம்பிக்கு நன்றி சொன்னான்.


“மாப்பிள்ளை, உன் சம்பளத்தில் பாதியை எங்களுக்கு அனுப்பு. நீ ஒரு மிஷன் கையில் எடுத்திண்டா, அந்தப் பயலுவ பூரா நம்மக் குடும்பத்தை டார்கெட் வச்சிடுறாய்ங்கே. கடைசியில், நம்ம களத்தில் இறங்க வேண்டியது இருக்கு. இந்த தடவை ஒரு படி மேல போயி, காக்கி உடுப்பே போட்டாச்சு.” என செல்வமணி சொல்லவும், "ஆமாம் மாமா, சித்தப்பாக்கு தான் சூப்பரா இருந்துச்சு." என தினேஷ் ராஜதுரையைச் சொல்ல,


"என்னை விட, உன்னைப் பார்த்துத்தான், தங்கமுண்டு ஏமாந்து போயிட்டாய்ங்கே." என ராஜதுரை சொல்ல, சன்னுவும், "ஒரிஜினலா தெரியணும்னு பாவா மாதிரி ஒட்டு மீசையெல்லாம் வச்சோம்." என்றாள்.


"அப்போ முழு சம்பளத்தையும் எங்களுக்கு கொடுத்திடு." என செல்வம் சொல்லவும்,


“மாமு, எனக்கே பாதி சம்பளம் தான் வரும். உனக்கு வேணும்னா உன் தங்கச்சிகிட்டக் கேட்டு வாங்கிக்க.” எனத் தங்கம் பதில் தரவும், “நிஜமாவாடா?” என ராஜதுரை கேட்டான்.


“ஆமாம் சித்தப்பு, ஆபீசர் பொண்டாட்டியைக் கட்டினா அப்படி தான்.“ எனத் தங்கம் குண்டைத் தூக்கிப் போட, ராதா ராணியை ஒரு பார்வை பார்த்தவன், “ஆத்தி, ஆனால் எனக்குச் சம்பளமே வராதே.” என ராஜதுரை மனம் தேற “காசு வரும்ல, உன் பாக்கெட்டுல ஒன்னும் தங்காது, உன் மகளே தினத்துக்கும் எம்புட்டு கணக்கு கேட்பா தெரியுமில்ல!” என செல்வமணி குண்டைத் தூக்கிப் போட,


“அப்ப, கல்யாணமே பண்ணக் கூடாதுண்டு சொல்றியா?” என கேட்டான் ராஜதுரை.


‘ஆமாம், மாம்ஸ். உன்னை மாதிரி ஜாலியா இருந்துட்டு போகலாம்.” என்று சொல்ல, “மாமா, அத்தை போன்ல, எல்லாத்தையும் கேட்டுடுச்சு.” என மீனா நமுட்டு சிரிப்பு சிரிக்க, அவசரமாக வாங்கியவன், “குயிலு, இந்தா வந்துட்டேன்.” என ஓரமாக நின்றுப் பேசியவன், சமாதானம் செய்ய முயன்றது கூட தோல்வியில் முடிய, “இந்தா வந்துட்டேன், வைடி. மீதியை நேரா வந்து வாங்கிகிறேன்.” என போனை அணைத்து மருமகளிடம் நீட்டியவன்,


“உன்னால என்ன முடியுமோ செஞ்சுட்ட, உன்னையும் தான் கூப்புடுறா வா.” என அழைக்க, “நான் என்னா செஞ்சேன்” என மீனாவும் துணுக்குற, அடுத்து துரைபாண்டி, தங்கத்துக்கும் போன் வந்தது.


“அம்புட்டு தான், அழைப்பு மணி வந்திருச்சு. சம்பந்தி நீங்க வாங்க, நம்ம வீட்டில் தங்கிக்கலாம். ராஜா சார்!” என வேங்கடவனையும் துரை பாண்டி அழைக்க, அவன் பத்மாசினியைப் பார்த்தான். இடைப்பட்ட நேரத்தில் அவள் ஸ்ரீ யாக மாறியிருக்க, “அக்கா, இது யார் வீடு, நாம போகலாம். வரவர எங்கங்கேயோ என்னைக் கூட்டிட்டுப் போற.” என அவள் குற்றம் சாட்ட, “தேவை தாண்டி.” என்ற ராதா, ரங்கத்தைப் பார்க்க, ராஜதுரை, ராஜா இருவருமே, தாங்கள் சென்று வருவதாகப் பரபரக்க, “இந்தக் கையை வச்சுக்கிட்டு, நீ ஓட்டுவியா, பேசாமல் இரு” என்ற ரங்கம் தான் கிளம்ப முயல,


“நாங்க ட்ராப் பண்றோம்.” என தினேஷ், வேங்கடவனைக் கூட்டிச் சென்றனர். சக்தி, மீனா செல்வ மணியோடு செல்ல, ரெட்டி குடும்பத்தை துரைபாண்டியன் அழைத்துச் சென்றார்.
 
Back
Top