My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மனதில் மலர்ந்த மல்லிகை - 18

IVNP20

Member
Joined
Mar 22, 2025
Messages
32

அத்தியாயம் 18​


சீனுவும் அவன் மனைவி கல்யாணியும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் குடிசைக்கு சென்று விட்டார்கள்.

மணிமேகலையும் அனைவரும் படுப்பதற்கு படுக்கை விரிப்புகளை விரித்துவிட்டு "மாமா நேரம் ஆகிவிட்டது, நீங்கள் வந்து உறங்குங்கள்" என்று சாமிக்கண்ணுவை அழைத்தாள்.

அவருக்கு சில கேள்விகள் கதிர்வேலிடம் கேட்கவேண்டி இருந்தது.ஆனால் மணிமேகலையின் முன் கேட்க முடியாது என்று யோசித்து கொண்டே வந்து அமைதியாக படுத்து விட்டார்.

வழக்கம் போல் மல்லிகாவும் தந்தையின் அருகில் படுத்துக்கொண்டு, மீண்டும் தன் மாமாவை பார்க்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தாள். அப்படியே அவர்கள் பேச்சு மணிவண்ணன், மரகதம், மகதி என்று மாறி மாறி போய் கடைசியில் மாறனிடம் வந்து நின்றது. "மாறன் அத்தான் என்னை ரொம்ப தேடுவாங்க இல்லப்பா?" என்று தந்தையிடம் கேட்டாள். அவனும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.

மணிமேகலை தான் அவளுடன் ஏதோ பேசி அவளின் பேச்சை மாற்றி உறங்க வைத்தாள். மறுநாள் வழக்கம் போல் அவர்களது நாள் தொடங்கியது. கதிர்வேலும் சீனுவும் வேலைக்குச் சென்றதும், சீனுவின் மனைவி கல்யாணி இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டாள்.

இரு பெண்களும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது கார் வரும் சத்தம் கேட்டது. சாமிக்கண்ணு கல்லாடன் வருகிறான் என்பதை தெரிந்து கொண்டு, பெண்களிடம் "திரையைத் தாண்டி இந்த பக்கம் வராதீர்கள்" என்று கூறிவிட்டு கதவை லேசாக சாத்தினார்போல் வைத்துவிட்டு வெளியிலேயே அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்திற்குள் அங்கு வந்த கல்லாடன் "என்ன பெரியவரே, நலமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டபடி வீட்டின் உள்ளே பார்வையை செலுத்தினான்.

பார்த்ததிலிருந்து பெருசு பெருசு என்று கூப்பிட்டவன், இப்பொழுது பெரியவரே என்று அழைப்பதை மனதில் குறித்துக் கொண்டு "நான் நலமாக தான் இருக்கிறேன் பா" என்று திறந்திருந்த கதவையும் மூடிவிட,

மென்மையாக சிரித்துக்கொண்ட கல்லாடன் "பயப்படாதீங்க பெரியவரே, சும்மா பார்த்துட்டு போகத்தான் வந்தேன். மாமா எல்லாவற்றையும் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்" என்றான் தலையை சொரிந்து சிரித்துக்கொண்டே. பின்னர், "எது வேண்டுமென்றாலும் உடனே சொல்லுங்கள்" என்றான் அசடு வழிந்தபடி.

அவன் வந்ததும் பல்லை இளித்துக் கொண்டு வந்த எதிர்வீட்டு பெண்களிடம், "இவர்கள் என்ன கேட்டாலும் உடனே செய்து கொடுக்கணும், சரியா?" என்றான் சாமிக்கண்ணுவை காண்பித்து.

இருவரின் முகமும் வாடி விட "சரி" என்று தலையாட்டினர்.
அவர்கள் வாடிய முகத்தை கண்டு கொண்ட கல்லாடன் "வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கு. அம்மா உங்களை வீட்டிற்கு வரச் சொன்னாங்க. இருவரும் கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு வாங்க" என்றான்.
இருவரது முகமும் பளிச்சென்று மாறியது. "சரிங்க ஐயா" என்று மகிழ்ச்சியாகினர்.

"நான் போயிட்டு வரேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் இவர்களிடம் கேளுங்கள்" என்று சாமி கண்ணுவிடம் மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டு, மூடி இருந்த கதவை ஏமாற்றமாக பார்த்துவிட்டு சென்றான் கல்லாடன்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் எதிர் வீட்டு பெண்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். பெருமூச்சு விட்ட சாமிக்கண்ணு, மெதுவாக கதவைத் திறந்து "மணிமேகலை" என்று அழைத்தார்.

மெதுவாக திரைச்சீலையை விளக்கி தலையை மட்டும் நீட்டிய மணிமேகலை வாசலை பார்த்தபடியே "அவன் போயிட்டானா மாமா?" என்றாள்.
அவர் ஆமாம் என்று தலையாட்டியதும், "அப்பா" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

மல்லிகாவிற்கு நடப்பது எதுவும் தெரியா விட்டாலும், தாயும் கல்யாணியும் பயந்ததை வைத்து அவளுக்கும் பயம் உள்ளுக்குள் தோன்றியது. அதன் பிறகு நேரம் சாதாரணமாக சென்றாலும், பெண்கள் முகத்தில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருந்தது. சாயங்காலம் இருட்டிய பிறகுதான் இரு ஆண்களும் வீட்டிற்கு வந்தனர்.

நேற்று போலவே இரவு உணவு முடித்து அனைவரும் பேசிக் கொண்டு இருக்க, மல்லிகா இன்று காலை கல்லாடன் வீட்டிற்கு வந்ததை பயந்தபடியே தந்தையிடம் கூறினாள்.

அவன் கேள்வியாக தந்தையை பார்க்க "ஆமாம்ப்பா" என்று நடந்த அனைத்தையும் கூறினார். அவன் வீட்டிற்கு வந்ததை கேட்டதும் கோபம் வந்தாலும், கோபப்பட்டு என்ன ஆவபோகுது. அவன் வருவதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இன்று போலவே எல்லா நாளும் அவன் பொறுமையாக இருப்பான் என்பது சந்தேகமே. அதற்கு தான் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
மகளிடம் சொல்லுவது போல பெண்கள் இருவருக்குமே கூறினான். "நீங்கள் தைரியமாக இருந்தால்தான் நாங்கள் அங்கு ஒழுங்காக வேலை செய்ய முடியும், புரிகிறதா?" என்று இரு பெண்களையும் கேட்டான்.

"இதற்கு ஏதாவது ஒரு வழி செய்கிறேன், நிம்மதியாக இருங்கள்" என்று சொல்லிவிட்டு அனைவரையும் உறங்கச் செல்லுமாறு கூறி அவனும் உறங்கி காலையிலேயே எழுந்து விட்டான்.

விடியல் நேரத்திலேயே அந்த இடம் முழுவதும் சுற்றும் முற்றும் அலசி ஆராய்ந்து இரண்டு மூன்று கம்பிகளுடன் வீட்டிற்கு வந்தான். இரண்டு இரண்டடி என்று நீளமான இரும்பு கம்பிகள், அதன் ஒரு முனையில் கை பிடிக்கும் படி துணி வைத்து அழகாக சுற்றி கட்டினான். காலை சமையலை செய்து கொண்டே கணவன் என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை.

அனைத்தும் முடிந்து உணவு முடித்து கிளம்பும் வேளையில், அந்த கம்பியை மூவரிடமும் கொடுத்தான். "உங்களை மீறி வீட்டிற்குள் யாரும் வந்தாலோ அல்லது உங்களை யாராவது நெருங்கினாலோ, எதைப் பற்றியும் யோசிக்காமல் இந்த கம்பியால் விலாசி தள்ளி விடுங்கள், புரிகிறதா?" என்று அழுத்தமாக கேட்டான்.
பெண்களுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும், தங்களை காத்துக் கொள்வதற்கு ஒரு ஆயுதம் கிடைத்துவிட்டது என்று கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

பெண்கள் முகத்தில் இருந்த தெளிவை கண்ட பிறகு நிம்மதி அடைந்த கதிர்வேல் "நீங்கள் தைரியமாக இருந்தால் தான், என்னாலும் இங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்பதை பற்றி எல்லாம் கொஞ்சம் யோசிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு நேரமாவதை உணர்ந்து சீனுவை அழைத்துக் கொண்டு வேகமாக வேலைக்குச் சென்றான். அன்று கல்லாடன் குவாரிக்கும் வரவில்லை, இவர்கள் வீட்டிற்கும் வரவில்லை அப்படியே ஒரு வாரம் கழிந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை வேலை கிடையாது. என்றாலும் அந்த குடியிருப்பே மிகவும் பரபரப்பாக இருப்பது போல் தோன்றியது. என்ன என்று விசாரிக்கும் பொழுது மாதத்தில் ஒரு நாள் மருத்துவ பரிசோதனை நடக்கும். அதற்கு தான் மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூறினார் அவருடன் வேலை செய்யும் பெரியவர்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை நடக்கும் என்று கூறி, எல்லோரையும் அழைத்து வரும்படி சொல்லிய தயாளன் அங்கு வருபவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து விட்டான்.

முதலில் தந்தையை அழைத்து வந்த கதிர்வேல். அவரை பரிசோதித்து விட்டு அவர் சாப்பிட ஆஸ்துமாவிற்குரிய மாத்திரைகளை கொடுத்தார்கள். தன்னை வேலை செய்ய கொடுமை படுத்தினாலும், தந்தைக்கு மாத்திரை குறைவில்லாமல் வழங்கியதில் சற்று நிம்மதி அடைந்தான் கதிர்வேல்.

அவனையும் பரிசோதித்து விட்டு வீட்டில் உள்ளவர்களை அழைத்து வரும்படி கூறினார் மருத்துவர். "அப்பாவிற்கு மட்டும்தான் உடம்பு முடியல டாக்டர். எங்களுக்கெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை" என்றான்.

இருந்தாலும் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவனிடம் கண்டிப்புடன் கூறினார் மருத்துவர். அவனோ அதை மறுத்து எதிர்த்து பேச,
"படித்தவர் தானே? புரிஞ்சுக்கோங்க! இத்தனை பேர் ஒன்றாக இருக்கும் போது, சரியான ஊட்டச்சத்தும் இல்லா உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொழுது நோய் பரவும் இல்லையா? அதற்காகத்தான் வற்புறுத்தி சொல்கிறேன்" என்றான் மருத்துவர்.

"நீங்க சொல்வது புரியுது டாக்டர். ஆனால் இங்கு" என்று தயங்கினான்.

அவனது நிலையை உணர்ந்த மருத்துவர், நீங்க கவலைப் படாமல் உங்க மனைவியை அழைத்து வாருங்கள். கல்லாடன் இப்போது இங்கு வரமாட்டான்" என்றார்.

அவரை குழப்பமாக பார்க்க,
"எனக்கும் அவனை பிடிக்காது கதிர்வேல். ஒரு முறை இங்கு அடிபட்ட ஒருவனை என் க்ளீனிக் க்கு அழைத்து வந்தார்கள். அன்றிலிருந்து என்னை இங்கு மாதாமாதம் அனைவருக்கும் ட்ரீட்மெண்ட் பண்ண அழைத்து வந்துவிட்டான். இங்கு நடப்பது எதையும் வெளியே சொல்ல கூடாது, சொல்ல முடியவும் முடியாது.‌ நாங்கள் எப்போதும் கண்காணிப்பு வட்டத்திற்குள்ளேயே தான் வாழ்கிறோம்" என்றார் சோகமாக.

"என் மனைவி தான் பெண்களை பரிசோதிப்பாள். ஆகையால் போய் தைரியமாக உங்க மனைவியை அழைத்து வாருங்கள்" என்றார்.

அவனும் வேறு வழியின்றி மணிமேகலையை அழைத்து வந்தான். அவள் பரிசோதனைக்கு சென்றதும், கதிர்வேல் பற்றி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார் மருத்துவர்.

பெண் மருத்துவர் மணிமேகலையை பரிசோதித்து விட்டு கூறியதை கேட்டு சிலையென சமைந்து நின்றான் கதிர்வேல்.

- தொடரும்..
 
Back
Top