அத்தியாயம் 17
கதிர்வேலை மிரட்டி விட்டு திரும்பிய அடுத்த நொடி அவனை எட்டி உதைத்தான் கதிர்வேல்.
"நீ என் காலை உடைக்கும் வரைக்கும் என் கை என்ன பூப்பறித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்தாயா? இந்த மிரட்டும் வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே!" என்று உறுமி விட்டு கீழே விழுந்தவரை "நீங்க கொஞ்ச நேரம் அப்படி உட்காருங்கள் அண்ணா" என்று கூறி அவரை அமர வைத்தான்.
"ஏய், என்னையே நீ அடிச்சிட்டியா?" என்று கீழே விழுந்தவன் எழுந்து கதிர்வேலை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வர,
அவன் கையைப் பிடித்து அவன் முதுகுக்குப் பின் முறுக்கித் திருப்பி, "இப்பதான் நான் உன்னிடம் சொன்னேன், நீ என்னை அடிக்கும் வரை என் கை பூப்பறித்துக் கொண்டு இருக்காது என்று. அமைதியா சொன்னா உனக்கு புரியாதா?" என்று கையை முறுக்கிய படியே பேச,
அவனோ வலியில் துடித்துக் கொண்டு "விடுடா.. விடுடா.." என்று கத்தினான்.
"என்னது? டாவா? ஒழுங்கா மரியாதையா சார் என்று சொல்லு" என்று சொல்லி அவன் கையை இன்னும் முறுக்க, அவனோ உயிர் போகும் வலியில்"தெரியாமல் சொல்லிட்டேன், என்ன மன்னிச்சிடுங்க. தயவு செய்து விடுங்கள்" என்றான் அலறியபடி.
"அந்த பயம் இருக்கணும்" என்று சொல்லி அவன் கையை விட்டுவிட்டு அவனை தள்ளி விட்டான்.
நான்கு அடி தள்ளி நின்றவன் "என்னையே அடிச்சிட்டல்ல, இரு நான் போய் தயா அண்ணன கூட்டிட்டு வரேன்" என்று தன் தோள்பட்டையை பிடித்துக் கொண்டே அங்கிருந்து ஓடினான்.
"போ போ, தாயா இல்லை அவன் அப்பனையும் கூட்டிட்டு வா, அவனுக்கும் இதே கதி தான்" என்று சத்தமாக கூறி, அவன் ஓடுவதைக் கண்டு சிரித்தான்.
கதிர்வேலின் செயலில் அங்கு சுற்றி இருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான். கீழே அமர்ந்திருந்த பெரியவர் "தம்பி இப்படி நீங்க அவன அடிச்சிட்டீங்களே! அவன் போய் தயாளனை கூட்டிட்டு வந்தால் என்ன செய்வீங்க?" என்று பயந்தபடி கேட்டார்.
"அதான் சொன்னேனே! தயாளன் மட்டுமல்ல, யார் வந்தாலும் அவர்களுக்கு இதே கதி தான். நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று கூறி சீனுவை பார்த்து "அவருக்கு குடிக்க தண்ணீர் கொடு" என்றான். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருக்கும் பொழுது அங்கு வேகமாக வந்தான் தயாளன்.
"டேய்" என்று கதிர்வேலின் கழுத்தை பிடித்து "எங்களையே நீ அடிப்பியா? அடிமையா வந்து இருக்க, அதை ஞாபகம் வச்சுக்கோ! நாங்க என்ன சொல்றோமோ அதை செய்ய வேண்டியது தான் உன்னோட வேலை. அது மட்டும் இல்லாம நாங்க எப்படி சொல்றோமோ அப்படித்தான் நீங்க வாழணும், அதை ஞாபகம் வச்சுக்கோ!" என்று அவன் கழுத்தை இறுக்கினான்.
சுற்றி நின்றவர்கள் அனைவரும் பயந்தனர், கதிர்வேலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று. ஆனால் கதிர்வேலின் கண்களில் சிறிது கூட பயமில்லை. விரைத்துக் கொண்டு நிற்க, தயாளனால் அவன் கழுத்தை அழுத்தவே முடியவில்லை. அவனது விரல்கள் வழுக்கி கொண்டு வெளியே வர, அவன் கை வெளியே வந்த அடுத்த நொடி தயாளனின் கழுத்தை பிடித்து விட்டான் கதிர்வேல்.
இறுக்கமாக பிடித்து அப்படியே கையை உயர்த்த தரையை விட்டு ஒரு அடி தூரம் காலை உதறிக் கொண்டு, அவன் கையை தன் கழுத்தில் இருந்து விடுவிக்க போராடியபடி துடித்தான் தயாளன்.
அப்பொழுது தூரத்தில் புழுதிப் பறக்க ஏதோ வாகனம் வருவது போல் இருக்க, "தம்பி, விட்டுடுங்க தம்பி. கல்லாடன் வருவது போல் இருக்கிறது" என்றார் அங்கிருந்த பெரியவர்.
அவன் கையை விடுவிக்க பொத்து என்று கீழே விழுந்த தயாளன், தொண்டையை செருமியபடி தடவிக் கொண்டு இருந்தான். வேகமாக அவர்களில் அருகில் வந்து நின்ற காரில் இருந்து அசால்ட்டாக இறங்கினான் கல்லாடன்.
அங்கு நின்றவர்களின் பயந்த முகமும், கீழே உட்காரந்து இரும்பிக் கொண்டிருந்த தயாளனும், ஒரு தோள்பட்டையை பிடித்துக் கொண்டே நின்ற அவனது அடியாளையும் கண்டு இங்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டான் கல்லாடன்.
"யாரு..? யாருக்கு என் ஆள அடிக்கிறதுக்கு தைரியம் வந்துச்சு?" என்று தன் கையை முறுக்கியபடி சுற்றும் முற்றும் நின்ற அனைவரையும் ஆழ்ந்து பார்த்தான் கல்லாடன்.
அவன் கேட்டதிலேயே அங்கிருந்தவர்கள் நடுங்க தொடங்க, நெஞ்சை நிமிர்த்து நின்றிருந்த கதிர்வேலை அழுத்தமாக பார்த்த கல்லாடன், உடனே தன் பார்வையின் வீரியத்தை குறைத்துக் கொண்டு அவனின் அருகில் வந்து "நீங்க தான் இவன அடிச்சீங்களா மாமா?" என்றான்.
கல்லாடன் கதிர்வேலை மாமா என்று சொன்னதும் அதிர்ந்து விட்டான் தயாளன். தான் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தும், தன்னை பார்க்காமல் கதிர்வேல் அருகில் சென்று குழைந்து பேசும் தன் முதலாளியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தயாளன்.
கல்லாடானை கண்டும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி நின்று இருந்த கதிர்வேலை கண்டு அங்கு சுற்றி நின்றவர்கள் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
"என்ன தயா? இப்படி அதிர்ச்சியா என்னை பார்த்து கிட்டு இருக்க?" என்று தயாளனை பார்த்த கல்லாடன், "உன் கைக்கு என்ன ஆயிற்றுடா?" என்றான் அங்கு தோள்பட்டையை பிடித்தபடி நின்றவனிடம்.
அவன் தயக்கமாக கதிர்வேலை பார்த்து, "இவன் என் கையை முறிச்சிட்டான் அண்ணே!" என்றான்.
அவன் கன்னத்தில் ஓங்கி அடித்த கல்லாடன் "அவரு எவ்ளோ பெரிய வாத்தியாரு, அவரை மரியாதை இல்லாம அவன் இவன் என்கிற. ஒழுங்கா சார் என்று சொல்லு" என்று சொல்லிவிட்டு "எல்லோரும் போய் அவரவர் வேலையை பாருங்க" என்றான் கர்ஜனையாக.
அதன் பிறகு அங்கு யாராவது நிற்பார்களா எல்லோரும் அவர்கள் வேலை செய்ய வேண்டிய பொருட்களை தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகன்றனர். தயாளனை பார்த்த கல்லாடன் "தயா, நான் நேற்றே உன்னிடம் சொன்னேன். இவரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று. ஆனாலும் நீ இப்படி நடந்து கொண்டால் என்ன அர்த்தம்?" என்று அவனைப் பார்த்தான்.
தயாளன் அமைதியாகவும் அதிர்ச்சியாகவும் கல்லாடனை பார்த்துக் கொண்டு இருந்தான்.
"அவரிடம் இனிமேல் மரியாதை குறைவாக நடக்கக் கூடாது, எளிமையான வேலைகளை மட்டும் தான் கொடுக்க வேண்டும், புரிகிறதா?" என்று மிரட்டினான். அவனின் மிரட்டலில் சரி என்று தயாளனின் தலை தானாக ஆடியது.
"உன்னுடைய சலுகை எதுவும் எனக்கு தேவையில்லை. கடனுக்குத் தகுந்தபடி எந்த வேலை கொடுப்பியோ அதையே கொடு. நான் செய்வேன்" என்றான் கதிர்வேல் திமிராக.
கல்லாடனை எதிர்த்து பேசும் கதிர்வேலை அதிர்ச்சியாக பார்த்த தயாளன், "அண்ணன் சொல்வதை கேட்டு நடந்துக்கோ! அவரையே எதிர்த்து பேசுவாயா?" என்றான் வழக்கம் போல்.
"டேய்" என்று முறைத்தான் கல்லாடன். அவனோ புரியாமல் கல்லாடனை பார்க்க, "மரியாதையாக பேசு என்று சொன்னேன்" என்றான் அழுத்தமாக.
அவனும் சரி என்று தலையாட்டி, "அண்ணன் சொல்வதை கேளுங்கள் சார்" என்றான் இழுவையாக.
ஆனால் அதை எதையும் சட்டை செய்யாத கதிர்வேல், அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய தொடங்கினான். சிறிது நேரம் அங்கு நின்ற கல்லாடனும் அனைவரது வேலையையும் ஒரு சுற்று பார்த்துவிட்டு கிளம்பி விட்டான். அன்று பகல் பொழுது முழுவதும் வேலை செய்து வீட்டிற்கு வருவதற்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது.
அலுப்பு தீர குளித்துவிட்டு வந்து அமர்ந்தவனுக்கு, சூடாக உணவு பரிமாறினாள் மணிமேகலை. மல்லிகாவும் தந்தையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு ஏதேதோ பேச, அவனும் மகளுக்கு உணவு ஊட்டி கொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தான். அவர்கள் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் சீனு அவன் மனைவி கல்யாணியுடன் வந்தான்.
சீனு வாசலிலேயே அமர்ந்து விட, அவனது மனைவி மட்டும் வீட்டிற்குள் வந்தாள். அவன் வெளியேவே அமர்ந்ததால் கதிர்வேலும் எழுந்து வெளியே வந்து அமர்ந்தான். பெண்கள் வீட்டிற்குள் இருக்க, ஆண்கள் மூவரும் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
சீனு இன்று கல்குவாரியில் நடந்த அனைத்தையும் பெருமையாக சாமி கண்ணுவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். "உங்க பையன வீரனா வளர்த்திருக்கிறீங்க ஐயா" என்றான்.
மகனின் வீரச் செயலை கேட்டு? சாமிக்கண்ணுக்கு பெருமையாக இருந்தது. இருந்தாலும் அவன் கூறிய ஒவ்வொன்றையுமே அலசி ஆராய்ந்து யோசித்துக் கொண்டு இருந்தார். அதில் அவருக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது கல்லாடனின் மாமா என்ற அழைப்பு. கல்லாடன் ஏன்? தன் மகனை மாமா என்று அழைக்கிறான் என்று யோசித்துக் கொண்டே மகனை ஆழ்ந்து பார்த்தார் சாமிக்கண்ணு.
- தொடரும்..