My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அல்லியங்கோதை-15

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
256
அல்லியங்கோதை
(தீபாஸ்)
அல்லியங்கோதை (image).jpeg
அத்தியாயம் 15

சில மணி நேரங்களுக்கு முன் தளபதி இட்ட கட்டளையை நிறைவேற்ற ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் அந்தப்புரத்திற்குள் செல்ல வாசலில் இருந்த காவலர்களை வழிவிடச் சொன்னார்கள். அப்பொழுது அதில் ஒருவன்,


“இங்க பாருங்க... உங்களை மட்டும் இல்ல.. யாரையுமே உள்ள போக அனுமதிக்கக் கூடாதுன்றதுதான் எங்களுக்கு வந்திருக்கிற கட்டளையே.. ஏன் வந்திருக்கிற பல்லவ அரசனைக்கூட அந்தப்புரத்துக்குள் நுழையவிடக் கூடாது என்றே கட்டளை போட்டிருக்காங்க. நீங்க பாட்டுக்கு நம்ம அரண்மனையில அலைந்து அதிகாரம் பண்றது போல இங்க எல்லாம் பண்ணாதீங்க, அம்புட்டுத்தான் சொல்லிட்டேன்” என்றான்.

“இங்க பாரு சுடலை... இப்போ நாங்க உள்ள போயே ஆகணும், அதுக்கு நீ வழிவிட்டே ஆகணும். என்னங்கடி... அவன் பாட்டுக்குப் பேசுறான்... நீங்க கம்முனு நிக்கிறீங்க?” என்றாள் காரியதாரி மேனகை.

“நீதான் பேசிக்கிட்டு இருக்கேல்ல, அதுனாலத்தான் நாங்க பேசாம நின்னோம். இப்போ நான் விடச் சொன்னா நம்ம சுடலை வழிவிடாம எங்க போயிடப் போறான்... அப்படித்தானே சுடலை?” என்றதும்,

“இங்க பாரு ரம்பை... நமக்குள்ள உள்ளதை நம்ம வேலைக்கு இடையில் இழுக்கக் கூடாது. அது வேற இது வேற புள்ள... மாமனைத் தொந்தரவு பண்ணாம இங்கன உக்காரு... நாம பேசலாம்” எனச் சொல்லி அவளிடம் வம்பு பேசிப் பொழுதை சுவாரஸ்யமாக்க வார்த்தை வளர்த்தான்.

இவர்களின் பேச்சைக் கவனித்த ஊர்வசி, “ம்... கூம், அப்படியே உன்கூட அவள் கொஞ்சி குலாவி... அதை நாங்கப் பார்த்து எங்க கண்ணு வெந்து போகுறதுக்கா...? இப்போ நாங்க உள்ளப் போகணும், அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லு?” என்றாள்.

“அதோ பாரு... அங்கனதான் உபதளபதி வேங்கையன் இருக்காரு.. அவர்கிட்ட அனுமதி தர முத்திரை மோதிரம் வாங்கிவந்து காட்டு, நாங்க உங்களை உள்ள விடுறோம்” என்றான்.

அதனைத் தொடர்ந்து மூவரும் உபதளபதியைத் தேடிப் போனார்கள். அவனோ, “மூவரும் சேர்ந்து ஒரு நடனமாடுங்கள்; அப்போதுதான் உள்ளே செல்ல அனுமதிக்கும் முத்திரை மோதிரத்தைத் தருவேன்” எனச் சொன்னான். அதைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற சோழ வீரர்களும் நிலவரத்தின் தீவிரம் புரியாமல் வேங்கையன் சொன்னதை வழிமொழிந்துவிட்டு வேடிக்கை பார்க்க அமர்ந்தார்கள்.

“இங்க பாருங்க நீங்க எல்லோரும் செய்றது எதுவும் சரியில்லை... இருந்தாலும் உங்களைச் சந்தோஷமா வச்சிக்கிறதும் எங்கள் வேலையில ஒன்னு... அதனால ஐந்தே நிமிடம் மட்டும் நாங்கள் உங்களுக்காக ஆடுவோம்” எனச் சொல்லி நடனத்தைத் துவங்க... சொன்ன நேரத்தைக் கடந்த பின்பே உபதளபதி முத்திரை மோதிரத்தை அவர்களிடம் கொடுத்தான். அப்பொழுது நேரம் முன் இரவுக்குள் பயணித்துக்கொண்டிருந்தது.

அந்தப்புரத்திற்குள் அரசகுமாரிகளுக்கு விசுவாசமாக எப்பொழுதும் இருக்கும் சேடிப் பெண்களுள் சிலர் மட்டும் உள்ளே இருந்தனர். களப்பாலர் குல ராஜமாதா, இளவரசிகளுடன் அங்கிருந்து மாறுவேடத்தில் கிளம்புவதற்கு முன்பு அவர்களிடம், “நாங்கள் இல்லாதது உடனே சோழர்களுக்குத் தெரியக் கூடாது. அதனால் எப்பொழுதும் போல அந்தப்புரத்தில் நாங்கள் இருந்தால் எவ்வாறு ஆட்கள் நடமாட்டம் இருக்குமோ, அதுபோலப் பார்த்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லி வைத்துவிட்டே வெளியேறி இருந்தாள்.

அவ்வாறு நடந்த, உள்ளிருந்த சேடிப் பெண்கள் அந்தப்புரக் கதவில் காதை வைத்துக்கொண்டு உள்ளே வர அனுமதி கேட்டு, கட்டைக்குரலுடைய சில பெண்கள் காவலுக்கு நிற்பவர்களிடம் உரையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டனர்.

அக்கட்டைக்குரல் காரிகைகள் எப்படியும் கொஞ்ச நேரத்தில் உள்ளே வந்துவிடுவார்கள். இங்கே ராஜமாதாவும் இளவரசிகளும் இல்லாததைக் கண்டு தங்களைக் கேள்வி கேட்டுச் சித்திரவதைக்குத் தாங்கள் உள்ளாக நேரிடும் சந்தர்ப்பம் இருந்ததால், பயத்தில் வெலவெலத்துப் போயிருந்தனர். அதில் ஒருத்தி, "வருபவர்கள் எவ்வளவுதான் சித்திரவதை செய்து கேட்டாலும் அவர்களிடம் அமைச்சர் அறையனார் மற்றும் மந்தாகினி உதவியில் அரசகுல மாந்தர்கள் வெளியேறினார்கள் என்பதைச் சொல்லக் கூடாது" என்று அறிவுறுத்திக்கொண்டு இருந்தாள்.

அந்நேரம் சட்டெனக் கதவுகள் திறக்கக் காரியதாரிகள் மூவரும் அந்தப்புரத்துக்குள் நுழைந்தனர். அங்கு மருண்ட விழிகளுடன் நின்ற சேடிப் பெண்களைப் பார்த்துத் தங்களுக்குள், “இங்க பாருங்கடி... இதுல யாருமே அரச குடும்பத்துப் பெண்கள் போல எனக்குத் தெரியவில்லையே” என்று பேசிக்கொண்டனர். அப்பொழுது மேனகை அப்பெண்களைப் பார்த்து...

“பெண்களா? எதுக்கு எங்களைப் பார்த்து ஏதோ பேயைப் பார்த்தது போலப் பயந்து போய்ப் பார்க்கிறீங்க? நாங்க ஒன்னும் ஆண்கள் கிடையாது... அந்தப்புரத்திற்குள் நாங்கள் வந்ததில் குற்றம் ஏதுமில்லை” என்றாள்.

அப்பொழுது ஊர்வசி, “ஆமாம், உங்க இளவரசிகள் இருவரும் எங்கே இருக்கிறார்கள்? ராஜமாதாவுடன் அவர்களின் அறையில் இருக்கிறார்களா? நாங்கள் வந்து இவ்வளவு சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம், யார் என்னவென அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே... ஆச்சரியம்தான்” என்றாள்.

அவளைத் தொடர்ந்து, “இதென்ன நாங்க இத்தனை பேசுகிறோம், நீங்கள் அனைவரும் பிடிச்சு வச்ச பிள்ளையாராக அப்படியே கம்முனு இருக்கீங்க...! எங்க... உங்கள் இளவரசிகள் மற்றும் ராஜமாதா? அவர்கள் இருக்கும் அறைக்கு எங்களை நீங்கள் அழைத்துப் போகிறீர்களா அல்லது நாங்களே போய்ப் பார்க்கட்டுமா?” என்றாள் ரம்பை.

“ஏய்... இவர்கள் பயந்து முழித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் ஏதோ தவறாக உள்ளது? நேரம் தாழ்த்தாமல் போய்ப் அனைத்து அறைகளிலும் தேடுவோம்...” என்று மேனகைச் சொல்ல, மற்ற இருவரும் பரபரப்பு அடைந்தார்கள். அவர்கள் மூவரும் நந்தவனத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சல்லடை போட்டுத் தேடியதைப் போலத் தேடினார்கள். அவர்கள் இருந்தால்தானே பார்க்க முடியும்? கடைசியில் அரசகுமாரிகள் மற்றும் ராஜமாதா ஆகியோர் தங்களின் காவலை மீறி, காவலர்களின் கண்களை மறைத்து இங்கிருந்து தப்பிவிட்டார்கள் என்பது புரிந்தது. உடனே அதனைத் தளபதியிடமும் சோழ இளவரசரிடமும் தெரிவிக்க விருந்தினர் மாளிகைக்கு விரைந்து வந்தனர்.

ஆனால், காவலர்களோ அவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தினர். “இளவரசர் ஓய்வில் உள்ளார்; உங்களைத் தொந்தரவு பண்ண விடாமல் தடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுள்ளார். ஆதலால் அவர்களின் அறைப்பக்கம் உங்களைச் செல்ல விடமாட்டோம்” எனச் சொல்லி வழிமறித்து நின்று அவர்களுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர்.

யானைக்கொட்டகையில் இருந்த பாகன் சொன்ன சேதியை அடுத்து, சோழ இளவலும் தளபதியும் மறுபடியும் அறையின் உப்பரிகையின் வழி ஓய்வறைக்குள் புகுந்தார்கள். உடனே தளபதி அங்கிருந்து அந்தப்புரத்துக்குள் கிளம்ப ஆயத்தமானதும்,

“தளபதியாரே... நாளை அரசவை கூட்டும் நேரம்தானே அந்தப்புரத்தில் இருக்கும் மாந்தர்கள் எல்லோரையும் பல்லவனுக்குத் தெரியாமல் வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்தில் காரியதாரிகள் உதவியுடன் அழைத்துக்கொண்டு போய்த் தங்க வைக்கச் சொன்னேன்... ஆனால், அதற்கு அவசியம் இருக்காதென இப்போது தெரிகிறது” என்றான்.

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் இளவரசே?”

“மாலையில் அரண்மனைக்கு இங்கிருந்து புறப்பட்டு நாம் போய்க்கொண்டிருந்தபோது, இடையில் சற்றுத் தாமதித்தேன் நினைவில் உள்ளதா? எதற்காகத் தாமதித்தேனென யூகித்தீர்களா?”

“ஆமாம் நினைவில் உள்ளது. என்னிடம்கூடத் தலையில் பாத்திரங்களோடு ஒரு கூட்டம் வெளியேறுகிறதே.. யார் அவர்கள் என்று கேட்டீர்கள். நான்கூட அதற்கு அப்பொழுதே பலகார வியாபாரிகள் என்று விளக்கம் சொன்னேனே..!”

“அக்கூட்டம் பலகாரத்தை மட்டும் விற்க அரண்மனைக்குள் வரவில்லை என்று தோன்றுகிறது.”

“என்ன சொல்ல வருகிறீர்கள்? பலகார வியாபாரிக் கூட்டம் அந்தப்புரவாசிகளை நம் காவலில் இருந்து தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் உள்ளே வந்து சென்றதாகச் சொல்கிறீர்களா?”

“என் யூகம் அதுதான். ஆனால், யூகங்கள் அனைத்தும் சரியானதாகவும் இருக்கலாம்; சில நேரங்களில் சறுக்கவும் செய்யலாம் அல்லவா? அத்தோடு இன்னும் ஒன்றை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்” என்றான்.

இதுவரை பேச்சிலோ செயலிலோ எந்தத் தயக்கமும் காட்டாத தனது மதிப்பிற்குரிய சோழ இளவலின் இத்தகைய தடுமாற்றம் அவருக்குப் புதிது; எனவே, புரியாத முகப்பாவத்துடன் சோழனைப் பார்த்தார். அதனால் தனது தயக்கத்தை உதறிய ஆதித்தன்,

“நான் முன்பு ஒரு நாள் வேட்டுவன் மலையில் பயணித்தபோது என் உயிரைக் காத்து என் மனதில் இடம்பிடித்த அல்லியும்... கலியரசரின் குலமகள் அல்லியங்கோதையும் ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் நேற்றிலிருந்து எனக்கு உண்டாகியிருக்கிறது” என்றான்.

“அப்படியானால் தாங்கள் விடாரபுரத்திற்குள் புகுந்ததற்கு...?”

“அவளும் ஒரு காரணம்தான்.”

“அப்படியானால்...”

“இதுபற்றிய எந்த முடிவுக்கும் இப்பொழுது என்னால் ஆட்பட முடியவில்லை. ஆதலால் வேறு எதுவும் அவளைப் பற்றி இப்போதைக்குப்பேச வேண்டாம். வாருங்கள், அந்தப்புரத்திற்குச் சென்று பார்ப்போம்” என்றதும் இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். அங்கே மூன்று காரியதாரிகளும் காவலர்களுடன் எதையோ பேசிக் கூச்சல் குழப்பம் செய்துகொண்டிருந்தனர். அதைக் கண்ட இளவரசனின் முகத்தில் யோசனை ஓடியது. சூழலைச் சரிசெய்யும் பொருட்டுத் தளபதி வேகமாக அவர்களிடம் வந்து, “இங்கே என்ன பிரச்சினை? ஏனிந்தக் கூச்சல் குழப்பம்?” என்று சத்தமிட்டார்.

ஊர்வசியோ, “தளபதியாரே... முக்கியமான சேதியைக் கொண்டு வந்திருக்கும் எங்களை உங்கள் இருவரிடம் சொல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள். சற்று நீங்கள் வரத் தாமதித்திருந்தால், இவர்கள் அனைவரின் கைகால்களை முறித்துப் போட்டுவிட்டு வந்திருப்போம்” என்றாள்.

உடனே காவலர்கள், “முறிப்பீங்க... முறிப்பீங்க... அதுவரை எங்க கை என்ன பூவா பறிச்சுக்கிட்டு இருக்கும்? இளவரசர்தான் உங்களைத் தொந்தரவு செய்ய விடக்கூடாது என்று எங்களுக்குக் கட்டளை போட்டிருக்கிறாரே. எங்களை மீறிப் போய்த் தொந்தரவு கொடுத்தால் உங்களுக்குத்தான் தக்க தண்டனை கிடைத்திருக்கும்” என்று பதிலுக்கு அவர்களிடம் எகிறிப் பேசினார்கள்.

“நிறுத்துங்கள் உங்கள் சண்டையை” என்றபடி இளவரசனும் அவர்களின் அருகில் வரவும், “வணங்குகிறோம் இளவரசே...” என்று மூவரும் அவனைப் பார்த்து அமைதியாக நின்றபடி கூறினர்.

“வந்த விஷயம் என்ன?” என்றான் ஆதித்தன்.

“இளவரசே... தளபதி எங்களை அந்தப்புரத்தில் இருக்கும் களப்பிரர் அரசகுல மாந்தர்களைப் போய்ச் சந்தித்துப் பேசச் சொன்னதன் பொருட்டு, காவலர்களிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றோம். ஆனால், அங்குச் சேடிப்பெண்கள் மட்டும்தான் இருந்தனர்; அரசிளங்குமாரிகளும் ராஜமாதாவும் இல்லை. நாங்கள் மூலை முடுக்கெல்லாம் தேடிவிட்டோம்... அங்கிருந்து தப்பிவிட்டார்கள்” என்றார்கள்.

---தொடரும்---

 
Back
Top