அத்தியாயம் 15
கதிர்வேலின் கோபத்தைக் கண்டு வீட்டை விட்டு வெளியேறினான் தயாளன்.
அவன் கூடவே வெளியே வந்த கதிர்வேல் "என்னிடம் எது பேச வேண்டுமென்றாலும் இங்கிருந்து தான் பேச வேண்டும். வீட்டிற்குள் காலடியை எடுத்து வைத்தாய் என்றால் காலை உடைத்து விடுவேன்" என்றான் கோபம் சற்றும் குறையாமல்.
"ஏய் என்னையே மிரட்டுறியா நீ? நாளைக்கு வேலைக்கு வருவ இல்ல, அப்போ உன்னை கவனித்து கொள்கிறேன்" என்று கதிர்வேலிடம் சொல்லிவிட்டு "டேய் முனியா!" என்றான்.
உடனே "என்னண்ணே" என்று கேட்டபடியே ஒருவன் வந்து நிற்க,
"நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நீ இவனை கூப்பிட்டு குவாரிக்கு வந்துரு" என்று அவனிடம் அதிகாரமாக சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றான்.
வீட்டிற்கு வந்த கதிர்வேலிடம் "ஏன் பா இப்படி கோவமா நடந்துக்கிற, அவன் வேற ஏதோ சொல்லிட்டு போறான். நாளைக்கு வேலைக்கு போற இடத்துல உனக்கு ஏதாவது கெடுதல் பண்ணினா என்ன ஆவது?" என்றார் சாமிக்கண்ணு சற்று கலங்கியபடி.
"அவனால் மட்டும் இல்ல, எவனாலும் எதுவும் பண்ண முடியாதுப்பா. இனிமேலும் நான் பொறுமையாக பயந்து கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. நான் பயந்தால் அது உங்கள் எல்லோருக்கும் தான் ஆபத்து" என்று கூறும்பொழுது கூட அவனுக்கு கோபம் குறைந்த பாடு இல்லை.
மணிமேகலைக்கு தான் பயமாக இருந்தது. மல்லிகாவும் அருகிலேயே இருப்பதால் தன் பயத்தை கணவனிடம் தெரிவிக்கவும் முடியாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
கதிர்வேலின் கோபத்தைக் கண்டு தயாளன் பயந்து விட்டான். இதுவரை எந்த வீட்டிற்குள்ளும் அவர்கள் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து தான் அவனுக்கு பழக்கம். அப்படி இருக்கும்பொழுது அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டான் என்ற கோபமும் சேர்ந்து, கதிர்வேலை உண்டு இல்லை என்று ஆக்கிவிட வேண்டும் என்று தோன்றியது. அதே கோவத்திலேயே சென்று கண்மண் தெரியாத அளவுக்கு சாராயத்தை குடித்தான்.
தன் ஆளிடம் தயாளனை அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினான் கல்லாடன். போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனிடம் வந்து "ஐயா உன்னை கூப்பிட்டார் அண்ணே" என்றான் ஒருவன்.
கல்லாடன் கூப்பிட்டார் என்றதும் போதை டக்கென்று தெளிந்துவிட "என்னையா? இந்த நேரத்துலயா?" என்று தள்ளாடியபடியே எழுந்தான். அவனை கைத்தாங்கலாக வண்டியில் உட்கார வைத்து கல்லாடனிடம் அழைத்துச் சென்றார்கள்.
போதையில் தள்ளாடி வருபவனை கண்டு முறைத்த கல்லாடன் "டேய் நாளைக்கு அந்த கதிர்வேலுக்கு" என்று கல்லாடன் ஆரம்பித்ததும்,
"அவனை நாளைக்கு குவாரில போட்டு மூழ்கடிச்சிடணும்" என்றான் கோபமாக உளறிக் கொண்டே.
அவன் பேசி முடித்ததும் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தான் கல்லாடன். அவன் அடித்த அடியில் ஐந்தடி தள்ளி கீழே தொப்பு என்று விழுந்தான் தயாளன்.
கல்லாடன் அடித்த அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, "என்னை ஏன் அண்ணே அடித்த?" என்று அவனிடமே அதிர்ச்சியாக கேட்டான்.
"நான் என்ன சொல்றேன்னு கேட்டு, நான் சொல்றத செய்வதற்கு தான் நீ இருக்க. உன் இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணினாய் என்றால் பிச்சுபுடுவேன் பிச்சு" என்றான் கோபமாக.
"நீ சொன்னது தானே நான் இதுவரைக்கும் செஞ்சுகிட்டு இருக்கேன். உன்னை மீறி ஏதாவது இதுவரைக்கும் நான் செஞ்சேன்னா சொல்லு?" என்று அவனிடமே நியாயம் கேட்டான் தயாளன்.
"நாம செய்யுற வேலைக்கு எவ்வளவு தான் குடித்தாலும் தன்னிலை இழக்காமல் இருக்க வேண்டும். இப்படியா கண்மண் தெரியாத அளவுக்கு குடிப்பாய்? குடித்துவிட்டு என்னிடமே கேள்வி கேட்கிறாயா? எவ்வளவு நெஞ்சழுத்தம், கொழுப்பு கூடி விட்டதோ?" என்றான் கோபம் சற்றும் குறையாமல்.
உண்மையில் தயாளனுக்கு கல்லாடன் தன்னை எதற்காக திட்டுகிறான் என்று புரியவில்லை. "அண்ணே நீ எதுக்கு என்னை திட்றனே தெரியல?" என்றான் குளறலாக.
"டேய் இவன் தெளியுற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும். தெளிஞ்ச பிறகு இவன் கிட்ட நான் பேசுறேன்" என்று அங்கிருந்த தன் ஆட்களிடம் சொல்லிவிட்டு, "இங்க இருந்து ஒரு அடி கூட நீ நகரக் கூடாது" என்று அவனிடமும் மிரட்டி விட்டு சென்றான்.
தயாளன் சென்ற பிறகு இனி என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்த படி அமைதியாக உட்கார்ந்து இருந்தான் கதிர்வேல். அனிச்சையாக அவன் மடியில் தலை வைத்து படுத்திருந்த மகளின் தலையை அவனது கை கோதி விட்டுக் கொண்டு இருந்தது.
மதியம் சமைத்த உணவை சூடு பண்ணி மாமனாருக்கு கொடுத்துவிட்டு கணவனுக்கும் மகளுக்கும் கொடுத்தாள் மணிமேகலை.
தினமும் மீனோ கறியோ இல்லாமல் சாப்பிட மாட்டாள் மல்லிகா. அவளுக்கு பிடிக்கும் என்று மரகதம் ஏதாவது செய்து கொண்டு வருவார். இல்லையென்றால் மணிவண்ணன் இன்று பக்கத்து டவுனுக்கு சென்றேன் என்று ஏதாவது மாமிச உணவு வாங்கி வந்து கொடுப்பார்.
அப்பொழுதே மணிமேகலை "இப்படி எல்லோரும் ஆளுக்கு ஆளு செல்லம் கொடுத்து அவளை கெடுத்து வச்சிருக்கீங்க. கவுச்சி இல்லாம ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட மாட்டேங்கிறா!" என்று இரவு உணவை பெரும்பாலும் திட்டிக் கொண்டே ஊட்டி விடுவார் மணிமேகலை.
இன்றும் மகள் தட்டில் போட்ட சோற்றை பிசைந்து கொண்டு இருப்பதை கண்டு பழைய நினைவுகள் மணிமேகலை எண்ணங்களுக்கு வர, அவளது கண்களும் கலங்கியது. கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு தன் மகளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டார் மணிமேகலை.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஆளுக்கு ஒரு பக்கம் பாயை விரித்து படுக்க ஏற்பாடு செய்தாள். படுத்ததும் வீடு நிசப்தமாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் "அப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்குதுப்பா!" என்றாள் மல்லிகா.
அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டு, "நாங்கெல்லாம் இருக்கும் வரை உனக்கு பயமே வரக்கூடாது, சரியா? கண்ணை மூடி நிம்மதியாக தூங்கு" என்றார்.
"அப்பா, இங்க ஏதேதோ சத்தம் கேட்குதுப்பா. ஏதோ காட்டுக்குள்ள இருக்கிறது போல இருக்கு. நம்ம வீட்டுக்கு போயிடலாம் பா, எனக்கு அத்தை மாமாவை பார்க்கணும் போல இருக்கு" என்றாள் கண்களில் கண்ணீரோடு.
அவள் கண்களை துடைத்து விட்ட கதிர்வேல் "போகலாம்.." என்று சொல்லி, சிறிது இடைவெளி விட்டு "கொஞ்சம் காலம் கழித்து" என்றான்.
"ஏம்பா? இப்பவே போயிடலாமே!" என்ற மல்லிகாவிற்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று கதிர்வேலுக்கு தெரியவில்லை.
மேலும் அவள் "அப்பா!" என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, மணிமேகலை மகளை தன்னுடன் அணைத்துக் கொண்டு, "நாளைக்கு காலையில அப்பா வேலைக்கு போகணும். நல்லா தூங்கணும் இல்லையா? அதனால நீ அம்மா கூட பேசு. அப்பா தூங்கட்டும் சரியா?" என்று சொல்லிவிட்டு "நீங்க எதைப் பற்றியும் யோசிக்காமல் தூங்குங்க" என்று கணவனிடம் சொல்லிவிட்டு, மகளிடம் "அம்மா உனக்கு எல்லாம் விவரமா நாளைக்கு காலைல சொல்றேன். இப்போ கண்ண மூடி தூங்குடா" என்று அவளுக்கு முதுகை மென்மையாக தட்டிக் கொடுத்தாள்.
உண்மையில் மணிமேகலைக்கும் அந்த சத்தங்களை கேட்டு எல்லாம் பயமாகத்தான் இருந்தது. இங்கு இருக்கும் 25, 30 குடிசையைத் தவிர வேற எதுவும் வீடுகள் அருகில் இருப்பது போல் தெரியவில்லை. ஏதோ காட்டின் நடுவே இருப்பது போல் தான் இருந்தது. காடு என்றால் மரங்கள் கூட்டமாவது இருக்கும் இது பொட்டல் காடு. உயர்ந்த மரம் மருந்துக்கும் இல்லை. எங்கு பார்த்தாலும் கற்குவிலாகத்தான் இருக்கிறது. சுற்றுப்புறம் பயமுறுத்துவதை விட அவளுக்கு கல்லாடன் நினைத்து தான் அதிக பயம். இப்படியே பலவற்றை நினைத்தபடியே படுத்திருந்த மணிமேகலை தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாள்.
மனைவியின் சீரான மூச்சியில் அவள் உறங்கி விட்டாள் என்பதை உணர்ந்து மெதுவாக எழுந்து அமர்ந்தான் கதிர்வேல்.
அவன் அமர்ந்ததும் "என்னப்பா, தூக்கம் வரலையா?" என்று மெதுவாக கேட்டார் சாமிக்கண்ணு.
தந்தையின் குரல் கேட்டு "நீங்களும் இன்னும் தூங்கலையாப்பா?" என்ற படியே தந்தையின் அருகில் அமர்ந்தான்.
"என்னப்பா என்ன யோசிச்சு வச்சிருக்க? இங்க இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே போக முடியாதுன்னு சொன்னியே! அப்படின்னா என்ன செய்வதாக உத்தேசம்?" என்றார்.
"பெருமூச்சு விட்ட கதிர்வேல் என்ன செய்வது என்று தெரியவில்லை அப்பா. நாளைக்கு வேலைக்கு போனால் தான் எப்படி இங்கிருந்து வெளியே செல்ல முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்"
"சரி, இன்னைக்கு கல்லாடனை நீ பார்த்தாயா? அவன் என்ன சொல்கிறான்?" தந்தை கேட்டதும்,
அவனிடம் மீண்டும் பெருமூச்சு தான் வந்தது. மெதுவாக திரும்பி மனைவியும் மகளும் உறங்குகிறார்களா என்று பார்த்தான்.
"அவன் சீக்கிரம் நம்மை இங்கிருந்து அனுப்ப மாட்டான் அப்பா. பத்து வருடம் ஆகும். அதுவரை நான் இங்கு வேலை பார்க்கத்தான் வேண்டும்" எ
ன்று சோகமாக கூறி, சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான் கதிர்வேல்.
- தொடரும்..