
வாழா வாழ்வை வாழவே
அழகான மலைக் கிராமம் தான் உமிரி. எங்கிலும் பச்சைப் பசேலெனும் வயல் வெளிகளும், கொக்கும், நாரைகளும் அவ்வயல் வெளிகளில் பார்ப்பதே கொள்ளை அழகு, கார்க் கண்ணாடியை இறக்கி வெளிக்காற்றில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டபடி அமர்ந்திருந்தான் தயாபரன். அவ்வூரிற்கு புதிதாக வந்திருக்கும் பிரதேச செயலாளர்.
காரில் இருந்து இறங்கியவன் சாரதியிடம் “அண்ணண் நீங்க அலுவலகத்திற்கு போங்க நான் நடந்து வாரன் என்றான். அதற்கு அச்சாரதியோ “சார்” என இழுக்க போங்கண்ணண் வாரன்” என்றான் தயாபரன். மேலதிகாரியின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசாது காரை எடுத்துக் கிளம்பினார் சாரதி.
சற்று தூரம் வந்ததும் இரு மருங்கிலும் உயர்ந்த மா மரங்களும், நிழல்தரும் மரங்களும் வரிசையாக இருக்க மழை பெய்து விட்டதற்கு அறிகுறியாக பாதையில் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி நின்றது.மரங்களில் இருந்து மழைத்துளி தன்மேல் விழ பார்வையை சுழல விட்டவாறு வர. சற்று தள்ளி ஓடும் வாய்க்காலும் மனதிற்கு இதத்தைத் தந்தாலும் பல நினைவுகளையும் சேர்ந்தல்லவா தருகின்றது. ஒரு பெரு மூச்சுடன் முன்னோக்கி நடக்க அவன் முன் தொப்பென்று விழுந்தது கல்லொன்று. விழுந்த வேகத்தில் அதிலிருந்து சேறு தன்மேல் தெறிக்க “சிற்…..” என்றபடி விழுந்த சேறைத் தட்ட அதுவோ பரவலாக அவ் வெளிர் நிற சேர்ட்டில் தெரிந்தது. கார்லே போயிருக்கலாமென தன்னையே நொந்தவன் வாய்க்காலில் இறங்கினான்.
சிறுவர்கள் இருவர் மாங்காய்க்குக் குறி வைக்க அதுவோ குறி தவறி மற்றொருபுறம் விழ சேற்றுநீர் ஒருவன் மேல் விழுந்ததைக் கண்ட சிறுவர்கள் அடிப்பாரென்று பயத்தில் ஓடினர்.
பத்து நிமிடத்தில் அலுவலகத்தை அடைந்தவன். தனக்கான இருக்கையில் அமர்ந்தது கையொப்பத்தையிடும் போது. “ உள்ள வரலாமா சார்? எனும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க வெள்ளைவேட்டி சட்டையில் ஒருவர் நின்றிருந்தார். “ வணக்கம் சார்……” “வணக்கம் நீங்க??? நான் சிவா….. ஐயா தான் அனுப்பினார் ஏதும் உதவினா கூடமாட செய்யச் சொல்லி” என்றான் அவன்.
“ஒரு பத்து மணி போல ஊருக்குள்ள போவோம்” என்றான்.சிவாவும் “சரி சார்” என வெளியே சென்றான்.சிறிது நேரம் அலுவலக கோப்புக்களை பார்வையிட்டவன் நேரத்தை பார்த்து விட்டு அருகில் இருந்த நீர் குவளையில் நீரை அருந்தி விட்டு வெளியே வர சிவாவும், சாரதியும் பேசிக்கொண்டிருந்தனர்.
“அண்ணன்”என அழைத்தான் தயாபரன்.அவரும் “இதோ சார் என வர அவருடன் சிவாவும் வந்தான்.சிவாவைப் பார்த்து “ஊருக்குள்ள போவோம்” என காரில் ஏறியவன் சிவாவையும் ஏறச்சொல்ல அவனும் சாரதியின் அருகில் ஏறியமர காரும் புறப்பட்டது.
ஊருக்குள் கார் நுழைய “எத்தனை எத்தனை மாற்றங்கள் ஊருக்குள்” அனைத்தையும் உள்வாங்கியவாறு செல்ல சற்று தொலைவில் மலைக்கோயில் தெரிந்தது. வயதான ஒரு பெண்மணி கையில் கட்டப்பையுடன் செல்ல தயாபரனுக்கோ தாயின் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.சிறிது தூரம் சென்றிருக்கும் கார் “சார் இந்த பாதைய தான் சரி பண்ண கடிதம் கொடுத்திருக்காங்க…” அந்தப் பாதையோ மேடு,பள்ளமாகவும் குன்றும் குழியுமாக இருந்த பாதையை சிவா காட்டினான்.அதை ஒட்டியதான திடலில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“ஸ்கூலுக்கு போகலாம் என்றான் தயாபரன்” அங்கு செல்ல அதுவோ தான் இவ்வூரை விட்டு செல்லும் போது இருந்த அதே கட்டடம் தான் என்ன மாற்றமெனில் சற்று பொலிவுடன் இருந்தது.ஆம் தயாபரனும் இதே ஊர்தான்.ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த பன்னிரண்டு வயதேயான தயாபரன் படிப்பில் கெட்டி. சண்முகம் ஈஸ்வரி தம்பதிக்கு மூன்றும் ஆண் பிள்ளைகள் மூத்த இருபிள்ளைகளும் படிப்பில் ஆர்வமில்லாது ஊரைச் சுற்ற சண்முகம் மூத்த இரு பிள்ளைகளையும் விவசாயத்தில் ஈடுபடுத்த விவசாயமும் கொஞ்சம் முன்னேற்றம். கடைசி மகனான தயாபரன் மட்டும் விதிவிலக்காய் அக்குடும்பத்தில்.அவன் பாடசாலைக்குச் செல்வது மற்றைய இருவருக்கும் பிடிக்காது போக தந்தையிடம் ஏதேதோ சொல்லி பாடசாலை செல்லும் அவனை தடுப்பர். இதுவே தொடர் கதையானது. “தயா மாட்டக் கொண்டு கட்டு,மாட்டுக்கு புல்லு வை, மாட்டுக்கு தண்ணீ காட்டு என வேலைகள் அவனுக்கு வந்த வண்ணமே இருக்கும் .மூத்தவனுகளுக்கே படிப்பேறல இவனெங்க படிக்கிற எனும் எண்ணம் சண்முகத்திற்கு .
பாடசாலை சென்று வந்ததும் உண்டு விட்டு கையில் புத்தகத்துடன் மாட்டை சாய்த்துக் கொண்டு சென்ற தயா ஆற்றோரமாய் மாட்டை மேய விட்டவன் மரத்தின் கீழ் புத்தகத்துடன் அமர்ந்தான்.மாலையாகியும் தயா வரல என ஈஸ்வரி புலம்ப முகிலனும் சண்முகமும் தேடிப் புறப்பட்டனர்.
மாடுகளில் இரண்டு ஆற்றினுள் இறங்கி விட்டது. ஆற்றுவாழை எனும் ஒரு வகை நீர்த்தாரம் ஆற்றில் படர்ந்திருக்க அதன் மேல் மாடுகள் மேய்ந்தன. இதனைக் கண்ட சண்முகத்திற்கோ சுறு சுறு என போபம் ஏற மாட்டைச் சாய்க்கும் கம்பை எடுத்தவர் தயாவின் கையில் இருந்த புத்தகத்தை பறித்து எறிந்தது விட்டு. அடிக்கத் தொடங்கி விட்டார் “ அப்பா வலிக்கிது என தயா அழத் தொடங்கி விட்டான்.அவனை சண்முகம் இழுத்து வர முகிலன் மாடுகளை சாய்த்து வந்தான்.ஈஸ்வரியோ “என்னாச்சுப்பா” என அழும் மகனிடம் கேட்க இனி இவன புத்தகமும் கையுமா நான் பார்க்கக் கூடா மாடுகள் ஆத்துல இறங்கிடு, இந்த நாய் அதுகள கவனிக்காம புத்தகத்தோட கிடக்கான்.” “மாடு ஆத்துல அடிச்சிப் போயிருந்தா என்ன செய்ற……படிக்காரம் படிப்பு பெரிய வெள்ளக்காரத் துற” என திட்டி விட்டுச் சென்றார் சண்முகம்.
அன்று இரவு மகனின் முதுகிற்கு சுடுநீர் ஓத்தடம் கொடுக்கத் தொடங்கினார். ஈஸ்வரி. “ பாவி மனிசன் புள்ளையைப் போட்டு மாட்டுக்கு அடிக்கிற போல அடிச்சிருக்கான்”. என கணவனுக்கு திட்டியபடி மகனுக்கு சோறூட்டினார். தயாவும் அழுது அழுது தூங்கியவன் மறு நாள் காய்ச்சலில் விழுந்தான்.
மறுநாள் மகனிற்கு காய்ச்சலினால் ஈஸ்வரியோ கசாயம் செய்து கொடுக்க சண்முகமோ கண்டும் காணாது இருந்தார். இரண்டு நாட்கள் பாடசாலை வராத தயாவைத் தேடி அவன் வகுப்பாசிரியரே வர சண்முகமோ “ வாங்க சார் வாங்க” என்றார். “தயாபரன் பாடசாலைக்கு வராம இருக்கமாட்டான் ரெண்டு நாளா வரல என்னாச்சி”எனக் கேட்க சண்முகமோ ஊருக்குள் பெரிய மனிதனான ஆசிரியரை எதிர்த்துப் பேச முடியாது. “அவனுக்கு காய்ச்சல்” என்றார். ஆசிரியரோ தயாவைப் பார்க்க தயாவோ “நாளைக்கு வந்துருவன் சார்” என்றான்.
“இல்ல வரமாட்டான் சார் வீட்டுல வேலை நிறைய இருக்கு” என்றார் சண்முகம் “நல்லா படிக்கிற பையன் எனத் தொடங்க மாடு மேய்க்கனும்” என்றார் சண்முகம் ‘என்ன மனிதன் இவன் பிள்ளை படிக்க ஆசைப்படுது இவர் போக வேண்டாம் என்றார்’.தயாக்கோ கண்கள் கலங்கிப் போனது. சொல்லிப் பரிய வைக்க முயல நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என இருந்தார் சண்முகம்.ஆசிரியரும் பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றார்.
அடுத்த நாள் காலை மாடுகளை மேய்க்கக் கொண்டு சென்ற தயா மாட்டை கட்டி விட்டு பாடசாலையினுள் நுழைந்தான்.பாடசாலை முடிந்ததும் வீட்டுக்கு வருபவன் புத்தகப் பையை வைத்து விட்டு மீண்டும் மாட்டை வேறொரு மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு செல்வான்.தயாவிற்கோ தந்தையின் மேல் வெறுப்பு மட்டுமே கொட்டிக் கிடந்தது. இதுவே தயாவின் அன்றாட வழக்கமானது. வேலை, வயல் எனத் திரியும் சண்முகத்திற்கும் இதை அலட்டிக் கொள்ளவில்லை மாடுகளை மேய்க்கும் பொறுப்பு தயாவினுடையது அதை சரியாகச் செய்யாவிடின் தான் சண்முகம் கோபப்படுவது, அடிப்பது, திட்டுவது அனைத்தும் சரியாக இருப்பின் அவரும் அதனைக் கடந்து விடுவார்.சில நாட்கள் சென்றிருக்கும் அன்று வீட்டிற்கு சண்முகம் நேரத்திற்கே வந்து விட்டார். மாடுகளை கொண்டுவர சென்ற தயாவோ நேரம் சென்று தான் வந்தான். இதனைக் கண்ட தேவாவோ “இப்பதானாடா வாரா? எங்க போய்த் திரிஞ்ச எனக் கேட்டவன் அப்பா அங்க போகத் தொடங்கிடான் வீட்ல இருக்கானே இல்ல “சண்முகமோ “ என்ன நினச்சிடு இருக்க உங்க அண்ணனுங்க சொல்றத கேட்டுது இருக்கலயா? வீட்ல இருக்கிறதுனா ஒழுங்கு மரியாதையா இரு எனத் திட்டி விட்டுச் சென்றார்.
பாடசாலையில் நிலையறி பரீட்சை நடந்தது. இவ்வளவு ஏச்சிற்க்கும் பேச்சுக்கும் மத்தியில் படித்த தயா பாடசாலையில் கூடிய புள்ளிகள் பெற்று வகுப்பில் முதல் மாணவனாக வந்தான். அனைவரும் பாடசாலையில் தயாவைப் பாராட்டினர்.வீட்டிற்கு வந்தவன் யாரிடமும் சொல்லவில்லை வழக்கம் போல் பேனா பிடிக்கும் கை மாட்டை மேய்க்கும் பிரம்பைப் பிடிக்க மாடுகளை மேய்ச்சலுக்கக் கொண்டு சென்றான்.
அன்று சனிக்கிழமை தயா வீட்டில் தான் இருந்தான்.ஈஸ்வரி சமைத்துக் கொண்டிருந்தார். “அண்ண என அழைத்தபடி வந்தவதான் சரவணன்” சண்முகத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் “மீன்பிடிக்க தோணி ஒண்டு பட்டிருக்க யாரயும் அனுப்பு பங்கெடுப்பம்” என்றான். தேவா, முகிலன் வெளியே சென்றிருக்க புத்தகமும் கையுமாக இருந்த தயாவைக் பார்த்தவர். “சொல் பேச்சுக் கேட்டா ஏந்தான் பின்ன “என திட்டியவர் சரவணனோட போ” என்றார்.
அவனும் புத்தகத்தை வைத்த விட்டு அவருடன் மீன்பிடிக்கச் சென்றான். உச்சி வெயில் வேறு தோணியில் ஏறினர் இருவரும். “ தயா தோணிக்கு துடுப்புப் போட சரவணன் வீசத் தொடங்கினான். இரண்டு மூன்று மணி நேரம் சென்றிருக்கும் துடுப்புப் போட்டு கைகள் வலிக்க தோணி அடிக்கடி தழும்பியது. “ துடுப்புக் கூடத் ஒழுங்கா போடக் தெரியாதாடா? ஏன திட்டு வேறு எப்படியோ மீனைப் பிடித்துக் கொண்டு கரையேரும் போது.துடுப்புத் தவறி விழுந்தது. “ மாடு மாடு மாட்ட மேச்சி மேச்சி மாட்டுப் புத்தி வந்தது தான் மிச்சம்” என துடுப்பால் அவன் முதுகில் அடிக்க தாயாக்கோ வலியில் கண்ககள் கலங்க அவரையே வெறித்துப் பார்த்தான். “எதிலயும் கவனம் இல்ல அண்ணன் ஏசுரதில தப்பே இல்ல” என்று திட்டிக் கொண்டு சிதறிய மீன்களை பையில் பொருக்கிப் போட்டுக் கட்டினான் சரவணன்.
உச்சி வெயிலில் சென்ற இருவரும் மாலை போல்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். தயாவிற்கோ மனதில் வெறுமை மட்டுமே. படிக்கத்தானே ஆசைப்பட்டேன் என எண்ணியவனுக்கோ தந்தை, தமையன்,தந்தையின் சகோதரன் என அனைவர் மீதும் வெறுப்பு. தாய் மட்டுமே ஒரு பிடிப்பு. தாய்க்கும் அடிக்கடி திட்டு விழும் அதுவும் தன்னால். முதுகில் துடுப்பால் வாங்கிய அடி வேறு வலியைத் தந்தது.
வீட்டிற்கு வர மீனை இரு பங்காக பிரித்து ஈஸ்வரியிடம் அவர்களுடையதைக் கொடுத்து விட்டுச் செல்ல தயாவும் எழுந்து குளித்தவன் உலராடையை அணியும் போது வீட்டினுள் நுழைந்த தேவா தயாவைக் கண்டதும் “ ஏண்டா துடுப்புக் கூடவா உனக்குப் போடத் தெரியல“ என தலையில் கொட்டியவன் “படிப்புப் புலி படிச்சு இவர் பெரிய கலெக்டர் ஆகப் போரார்” என்றான். தயா முறைக்க “ பார்ரா முறைக்கிறத” என தேவா மீண்டும் தலையில் கொட்ட தலையைத் தடவியபடி திண்ணையில் அமர்ந்தான்.
இரவு எட்டு மணி போல் ஈஸ்வரி உணவு பரிமாற சண்முகம், முகிலன், தேவா, தயா அனைவரும் ஒன்றாகவே உணவை உண்டனர். ஈஸ்வரிக்கோ கணவன் பிள்ளைகள் ஒன்றாக இருந்து உண்பதைக் கண்டவருக்கோ சந்தோசத்தின் உச்சம். என் ராசா என அனைவருக்கும் சுற்றி நெட்டி முறிக்க வலிநிறைந்த சிரிப்பை சிந்தினான் தயா.
அடுத்த நாள் காலைப் பொழுது அழகாய் மலர்ந்தது. வீட்டில் தயாவை எங்கு தேடியும் காணவில்லை. “தயா தயா என அழைக்கும் அன்னையின் சத்தத்தில் எழுந்த தேவா “என்ன” என தாயிடம் கேட்க “நேரத்துக்கே எழுந்து கோழியைத் திறப்பான்டா வீடெல்லாம் தேடித்தன் தயாவைக் காணல்ல” என்றார் பதட்டத்துடன்.கொல்லைப் புறமிருந்து வந்த சண்முகத்திற்கு விசயம் தெரிவிக்க உமிரி முழுக்கத் தேடியும் தயா இல்லை. ஏதும் செய்திருப்பானோ என கிணறு ,குளம், குட்டை, ஆறு என அன்று முழுக்கத் தேடியும் தயா அவ்வூரிலேயே எங்கும் இல்லை.
ஆம் அவன் தான் அடுத்த நகரத்தில் இருக்கும் பேருந்துத் தரிப்பிடத்தில் தூக்கத்தில் இருந்தானே. இரவில் அனைவரும் தூங்கிய பின் தனது புத்தகப்பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பியவன் ஆங்காங்கு ஒரு சில தலைகள் தென்பட்டாலும் அனைவரின் கண்ணிலும் சிக்காமல் வெளியேறிவன் மனதில் இருளோ நேரமோ எதுவும் தோன்றவில்லை. உமிரியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான்.
வெளியேறியவன் அவ் ஊரை இருளிலும் திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றான். அந்த நேரத்தில் பேருந்து வருமா என்ன? அந்நேரம் பார்த்து அவ்வழியே வந்த லாரிக்கு கைபோட்டு அதில் ஏறியவன் அருகிலுள்ள நகரமான பூம்புகாரிற்குப் புறப்பட்டான்.
ஒரு மணி நேர பயணத்தின் பின் வண்டியும் இரவுணவிற்கு பூம்புகார் பேருந்து நிலையத்தில் நிற்க லாரியிலிருந்து இறங்கியவன் பேருந்து நிலையத்தை சுற்றி பார்வையை சுழல விட இருள் இன்னும் விலகவில்லை.நேரமும் தெரியவில்லை…பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தவன் அப்படியே தூங்கிப் போனான்.
ஊமிரியிலோ தயாவை அணைத்து இடமும் தேடியும் கிடைக்கவில்லை. ஈஸ்வரியோ ஒப்பாரி வைக்கவே தொடங்கி விட்டார். “படிக்கனும்னு சொன்ன பிள்ளைய அடிச்சே துரத்திட்டானுக” என அவர் அழுத அழுகையால் ஊரே புதினம் பார்த்தது.
சரவணனோ “தானும் அல்லவா நேற்று துடுப்பால் அடித்தான்” மனதிலோ குற்ற உணர்வு. “ஈஸ்வரியோ போறவன் வாறவன் எல்லாம் அடிக்கவா நான் புள்ள பெத்து வச்சன்” என அழுகையில் கரைந்தார். தயா குளிக்கும் போது துடுப்பால் அடித்த தடத்தைக் அவன் முதுகில் கண்டு விட்டு ஈஸ்வரி கேட்க முதலில் தயங்கிய தயா பின் தான் தயா அது பற்றி ஈஸ்வரியிடம் சொன்னான்.
சண்முகத்திற்கு தயாவை நினைத்து பயம் தொற்றிக் கொண்டது.சிறு பையன் படிப்பதற்காக அடித்தாரே “சில தினங்கள் முன் அவன் ஆசிரியருடன் வந்த கெட் மாஸ்டர் தயாவின் மதிப்பெண்ணை காட்டி புகழ்ந்தது நினைவில் வந்தது.நேரமும் செல்ல செல்ல அவனைத்தேடி வேறு கிராமங்களுக்கு சென்ற முகிலனும், தேவாவும் கையை விரித்தனர்.
பேரூந்து தரிப்பிடத்தில் இருந்த தயா “கண்விழிக்க சூரிய வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது.ஆட்கள் நடமாட்டமும் அதிகரித்தது.பேரூந்தையே பார்த்திருக்க அப்போது வந்து தரித்த பேரூந்தில் இருந்து இறங்கிய குடும்பம் பேரூந்து தரிப்பிட்தில் இருந்த கழிவறையை நோக்கி சென்றனர்.தானும் அவர்கள் பின் சென்றவன் காலைக்கடனை முடித்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தான்.
கூட்டம் கூட்டமாக சிலர் செல்ல அவர்களை பின் தொடர்ந்து சென்றவன் நுழைந்த இடமோ அந்தோணியர் தேவாலயம் . அனைவரும் உள்ளே செல்ல தயாவும் சென்று இறுதி இருக்கையில் அமர்ந்து கொண்டான்.ஆராதனை தொடங்கியது. சிறிது நேரத்தில் யாரோ “தம்பி” எனும் சத்தத்தில் கண்விழித்தவன் தன் முன்னிருந்த வெள்ளை உடையணிந்த நபரைக் கண்டவன் “யாருப்பா” என கேட்க அவன் சொன்ன முதல் வார்த்தை “நான் படிக்கணும் என்பதே”. அவன் முகத்திலோ சோர்வு, பசி,தூக்கமின்மை” ஆனால் அவன் கேட்டதோ கல்வியை. அத்தேவாலய பாதிரியார் அவனை அணைத்துக்கொண்டார்.
அவனுக்கு உணவை முதலில் வழங்கியவர் அவனைப்பற்றி விசாரிக்க “ ஐயா என் பெயர் தயாபரன். நான் உமிரி என அனைத்ததையும் சொன்னான்.அங்குள்ள காஸ்டலில் கொண்டு வார்டனிடம் சொல்லி அவனை விட்ட பாதிரியார். பின் உமிரி தபால் நிலையத்திற்கு அழைத்து சண்முகம் ஈஸ்வரியை அந்தோணியர் தேவாலயத்திற்கு வரச்சொன்னார்.அன்று மாலை அவர்கள் அடித்து பிடித்து வந்தவர்கள் தயாவை வீட்டிற்குச் செல்ல அழைக்க “வர முடியாது நான் படிக்கணும்” என்றான்.”ஊர்ல வந்து படி” என்றார் சண்முகம் ஈஸ்வர்யோ அழுது எவ்வளவோ கெஞ்சியும் வரவில்லை அவன். அவர்களும் அவனை அங்கே விட்டுச் சென்றனர்.நாட்கள் மதங்களாக கடக்க, ஒவ்வொரு மாதமும் அவனைப் பார்க்க வருபவர்களை இனி வரவேணடாம் என மறுத்து விட்டான். அத்தோடு அவர்களின் வருகையும் நின்றுவிட்டது.
கல்லூரிப்படிப்பையும் முடித்தவன் நிருவாகப் பிரிவில் அரசாங்கப் பரீட்சை எழுதி இன்று பிரதேச செயலாலராக தனது ஊருக்கே வந்துள்ளான்.ஊருக்குள் வாகனம் செல்ல எத்தனையோ மாற்றங்கள் அனைத்தையும் பார்த்தபடி மீண்டும் அலுவலகத்திற்கு வந்தனர்.
அன்று வேலையை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நுழைய இருமல் சத்தம்தான் வரவேற்றது. “யாருப்பா??” என வந்தார் முகிலனின் மனைவி. மனைவியின் சத்தத்தில் வெளியே வந்தான் முகிலன். “தயா என அவனை அனைக்க தயாவோ முகிலனை அனைக்கவும் இல்லை விலக்கவும் இல்லை.
முதுமையின் பிடியில் சண்முகமும், ஈஸ்வரியும். சண்முகம் சாய்வு நாற்காலியயில் அமர்ந்திருக்க ஈஸ்வரியோ கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். “ “அப்பா தயா வந்திருக்கான” என சத்தமாகச் சொல்ல சண்முகமோ கண்ணாடியை கழற்றி மீண்டும் அணிந்தவர் ஏறிட்டு அவனைப் பார்க்க ஈஸ்வரியும் சத்தம் கேட்டு படுக்கையில் இருந்தவர் எழத் தடுமாறியவரை பிடித்து கட்டிலில் அமர வைத்தவன் அவரின் நடுங்கும் கைகளை பிடித்துக் கொண்டான்“ ராசா வந்துடியா” என அழ அவரின் கண்ணீரைத் துடைத்தவன். அப்போது “.ஐயா” என்றடி வீட்டினுள் நுழைந்தான் சிவா. அங்கே அமர்ந்திருந்த தயாபரனைக் கண்டவன் “சார் நீங்க…..? உங்களுக்கு தான் சாப்பாடு கொண்டு வந்தன் ரைவர் தான் இங்க இருக்கீங்கனு சொன்னார்” என்றான் அவன்.
தயா எதுவும் பேசவில்லை “என்ட புள்ளைக்கு நான் சாப்பாடு கொடுப்பன் யார்டா நீ” என்றார் ஈஸ்வரி அத் தள்ளாத வயதிலும். அப்போது அங்கு வந்த தேவா “ என்னடா சார்…மோர் என்ற கொஞ்சம் நல்லா வெளிக்கிட்டு புதுத் துணி போட்டா சாரா” என கிண்டலாகப் பேச சிவாவோ செய்வதறியாது தயாவைப் பார்த்தவன். “சார் தான் நம்ம ஊருக்கு வந்திருக்கிற பிரதேச செயலாளர்” என்றான். அனைவரிடத்திலும் மௌனம். ஈஸ்வரியோ உணவைப் பிசைந்து தயாவிற்கு ஊட்ட தயாவின் கண்களோ கலங்கிப் போனது. உணவினை உண்டு முடித்தவன் “ வாரன்மா” என்றவன் சிவாவை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேற அவனைத் தொடர்ந்து இரு காவலாலிகள் அவன் முன் வந்து சலூட் அடித்து நிற்க. அவன் பின்னே வந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.
“பார்தயாடா அவர்ட கெத்த நாமளும் படிச்சு இப்படி இருக்கனும்” என்றனர் தேவாவினுடைய பிள்ளைகள் தேவாவிற்கோ முகத்தில் ஈயாடவில்லை. படிப்பறிவும் இல்லாது, பகுத்தறிவுமில்லாத அக் கூட்த்திற்கு இப்போது தான் ஞாயோதயம் உதித்தது.
தயா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டிலிருந்து தான் அலுவலகம் செல்வான். தினம் தாயை பார்த்துச் செல்வான். தினமொறு பொருள் தாய்க்கு வாங்கிக் கொடுப்பான். மறந்தும் அவன் தந்தையின் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. அவர் மீது இப்போது கோபம் இல்லை ஆதங்கம் மட்டுமே……
தயா ஊரில் முதலில் கைவைத்தது. பாடசாலையில் தான் கல்வியின் முக்கியத்துவத்தை ஊட்டி அக்கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்கிறான். அவ்வூர் மக்களால் “எக்கட தயா சார், தயா ஐயா, என கொண்டாடப்படுகிறான்.சண்முகத்திற்கோ தன் பிள்ளை எனும் பெருமிதம் மட்டுமே அதை வெளியே சொல்லக் கூட முடியாத நிலை.
தயாவை ஒருமுறை ஹாஸ்டலிற்கு பார்க்க வந்த சண்முகம் எவ்வளவு கெஞ்சியும் தயா வரவில்லை என்று விட்டான். கம்பீரமாக பார்த்த தந்தை தன்னிடம் இப்படி பேசுவது கூட பிடிக்காமலே இனி பார்க்க வரவேண்டாம் என்றான்.தந்தை உணர்ந்து திருந்தி தான் அழைப்பது புரிந்தாலும் சிறுவயதில் கல்வி தனக்கு மறுக்கப்பட்டது மனதில் வடுவாகிப் போனது.
தாயின் முனைப்பில் திருமணம் செய்து கொண்டவன். பிளஸ் டூவுடன் படிப்பை நிறுத்திய மனைவியை மீண்டும் படிக்க வைக்க… படிப்பா ? என முகம் சுழித்தவள் தயாவைப் பற்றி அறிந்ததிலிருந்து இப்போது படித்து வருகிறாள். எல்லா வித அபிவிருத்தியாலும் உமிரி உச்சத்தை அடைந்தது. கல்வியால் அங்கு புது சமுதாயம் உருவாகியது.
இப்போது தயா மனநிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறான். “வாழா வாழ்வை வாழவே………………………………………………”
சரஸ்