My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சுவர்ணரேகா - ஒரு அழிவின் ஆரம்பம் அத்தியாயம் 13....

IVNP18

Member
Joined
Mar 21, 2025
Messages
58

பாடலிபுத்திரத்தில் இரவு வேளையில் விளக்குகள் வெளிச்சத்தில் அரண்மனை ஜொலித்தது. மகத நாட்டு மன்னனான தேவபூதி வழக்கம் போல கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். பகல் நேரங்களில் மிகவும் கண்ணியமாகவும் நல்ல முறையிலும் ஆட்சி செலுத்தும் அவர் இரவு வந்து விட்டால் மது மயக்கம் கட்டாயம் வேண்டும். நடனம் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பல தூர தேசங்களில் இருந்தும் பல அழகிய பெண்கள் வந்து இரவு நேரத்தில் நடனமாடுவார்கள். எத்தனையோ பெண்கள் மன்னரை மயக்கி மணம் செய்து கொள்ள முயற்சித்தார்கள் ஆனால் அவர் நடனம் பார்க்கும் போது தன் மனைவியான மங்கலநாயகியோடு பார்ப்பார். அதோடு தவறான எண்ணத்தோடு ஏதாவது பெண் அவரை நெருங்க முயன்றால் உடனடியாக தன் மனைவியை அழைத்து அந்தப் பெண்ணுக்கு புத்தி சொல்லும்படி கூறுவார். தன்னைத் தவிர தன் கணவன் தேவபூதி வேறு யாரையும் பார்க்கவே மாட்டார் என்ற உறுதி மங்கலநாயகிக்கு இருந்ததால் அவர் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தார். மதுப்பழக்கம் ஒன்று தான் தேவபூதியிடம் இருந்த மிகப்பெரிய கெட்ட பழக்கம்.

தேவபூதி மிகவும் நல்ல மனிதர். அரசியல் என்றாலும் சரி, குடி மக்கள் பிரச்சனைகள் என்றாலும் சரி தன் மனைவி மற்றும் தாயோடு கலந்து ஆலோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வருவார். இது ஒன்றும் புதியது இல்லை. காலம் காலமாக மன்னரின் பட்டத்தரசியும் ராஜமாதாவும் எல்லா விஷயங்களிலும் ஆலோசனை சொல்வது வழக்கமான ஒன்று தான். தேவபூதி பெண்களுக்கு மிகவும் சுதந்திரமும், மரியாதையும் அளித்தார் என்று அவரது அமைச்சரவையில் இருந்த சிலருக்கு பிடிக்காது. ஆனால் அரசன் என்பதால் வாய் திறக்காமல் இருந்தனர்.

பாடலிபுத்திர அரண்மனையிலிருந்து மிகவும் தள்ளி காட்டின் ஆரம்ப பகுதியில் இருளடைந்த குடிசை ஒன்று இருந்தது. அந்தக் குடிசையில் விளக்குகள் இல்லை என்றாலும் மனிதர்கள் அமர்ந்திருப்பது நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. 8 பேர் தரையில் அமர்ந்திருக்க இரு போர்வை போர்த்த உருவங்கள் சற்றே உயரமான பலகையில் அமர்ந்திருந்தன. அமர்ந்திருந்த 8 பேரில் பாவனனும் ஒருவன். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் தான் சுதாகரன். அவன் தான் பாவனனை இந்த அமைப்பில் சேர்த்தது.

"எதற்காக நாம் இப்படி விளக்கில்லாமல் இருட்டில் இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?" கனத்த குரலில் பலகை மேல் அமர்ந்திருந்த உருவம் கேட்டது. அவரது குரல், அதில் தெரிந்த அதிகாரம் எல்லாமே இவர் சர்வ வல்லமை படைத்த ஒரு மனிதர் என்று சொல்லாமல் சொல்லியது.

"நாம் யாரும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்" என்றான் ஒருவன்.

பாவனனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. "நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று இருட்டில் இருக்கிறோம். சரி! ஆனால் துரோகிகள் யார்? நம்மவர்கள் யார்? என்றும் கூட அடையாளம் காண முடியாதே?" என்று நினைத்தான்.

பலகையின் மேல் அமர்ந்திருந்த உயரமான இன்னொரு உருவம் சிரித்தது. கேலி, ஆணவம் எல்லாம் அந்தச் சிரிப்பில் வெளிப்பட்டது.

"இந்த இடத்துக்கு ஒருவன் வருகிறான் என்றால் அவன் துரோகியாக இருக்க முடியாது. பல சோதனைகளையும், மறைமுகப் பரீட்சைகளையும் தாண்டித்தான் வருகிறான். ஆகையால் துரோகிகள் யாரும் இல்லை. மேலும் என்னிடம் சிறு விளக்கு உள்ளது. என்னால் உங்களைப் பார்க்க முடியும். நான் பேசுவதை உங்களால் கேட்க முடியும். இது போதும். எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்த பிறகு நானே அடையாளம் கண்டு கொண்டு தக்க பரிசு அளிப்பேன்" என்றது அந்த உருவம்.

பாவனனுக்கு பிரமிப்பாக இருந்தது. ஒருவன் மனதில் நினைப்பதை அப்படியே சொல்கிறார்களே? இவர்கள் மந்திர வித்தை பயின்றவர்களா? இல்லை அத்தனை புத்திசாலிகளா?" என்று எண்ணிக் கொண்டான்.

"என் பெயர் சுதர்மன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னை அழைக்கும் போது தலைவா என்று அழைத்தால் போதும். இவர் பெயர் மித்ரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவரை தளபதி என்று அழைக்க வேண்டும். இப்போது இங்கு வந்திருக்கும் 8 பேருக்கு கீழும் எத்தனை ஊர்கள் உள்ளன? எத்தனை குடும்பங்கள் நம் பக்கம் வந்திருக்கின்றன? எங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது? போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும். உங்கள் 8 பேரைத் தவிர வேறு யாரும் என்னையோ தளபதி மித்திரனையோ சந்தித்துப் பேச முடியாது. மாதா மாதம் வளர் பிறை 8ஆம் நாள் இதே இடத்தில் நீங்கள் 8 பேரும் வர வேண்டும். நேரத்தில் மாற்றமே இல்லை. யாராவது வர இயலாத சூழ்நிலை என்றாலும் மன்னிப்பு கிடையாது. அவர்களுக்கு பதிலாக இன்னொருவன் நியமிக்கப்படுவான். இப்போது பாவனன் சேர்ந்திருக்கும் இடத்தில் முன்னால் பூபாலன் இருந்தான். போன மாதம் கூட்டத்துக்கு வர இயலாது என்று புறா மூலம் செய்தி அனுப்பினான்." என்றார் தலைவர்.

பாவனன் குழப்பமாகப் பார்த்தான். வர இயலாது என்று செய்தி அனுப்புவது கூடத் தவறா? அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே தளபதி மித்ரன் தொடர்ந்தார்.

"இப்படி புறா மூலமோ வேறு ஆட்கள் மூலமோ செய்தி அனுப்பக் கூடாது என்பது தான் நமது முதல் பாடம். நாம் செய்து கொண்டிருக்கும் செயல் இன்னமும் அரசர் வரை எட்டவில்லை. அரசருக்கோ அல்லது அவரது மனைவிக்கோ (அதைச் சொல்லும் போதே தளபதியின் குரலில் வெறுப்பு) தெரிந்து விட்டால் நம் திட்டம் எல்லாம் நாசமாகி விடும். அதனால் புறா வந்து சேர்வதற்கு முன்னாலேயே நடு வானில் கொல்லப்பட்டது. அதே போல அதை அனுப்பியவனும் கொல்லப்பட்டான். அவன் இடத்துக்கு தான் பாவனன் வந்திருக்கிறான். இவன் ஜேத்தா, குடீர், தட்சசீலம் போன்ற ஊர்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளான். அநேகமாக ஜேத்தாவிலும் பிற இடங்களிலும் குடும்பங்கள் முழுக்க நம் பக்கம் வந்து விட்டது." என்றார் தளபதி.

பயத்தில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான் பாவனன். எந்தத் தவறுமே செய்யாத தங்களுக்காக வேலை பார்த்த ஒருவனை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றிருக்கிறார்களே? இவர்கள் மனிதர்கள் தானா? தவறே செய்யாதவனுக்கே இப்படி என்றால் துரோகம் செய்ய நினைத்தால் உயிரோடு எரித்து விடுவார்கள் போல என்று எண்ணிக் கொண்டான். பயமாக இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் பணமும் தங்கமும் அவனைக் கட்டிப் போட்டன.

தளபதியும் தலைவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டனர். அவர்கள் பேசியது காதில் விழுந்தாலும் வேறு ஏதோ மொழியில் பேசுவது போலத் தெரிந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டார் சுதர்மர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தலைவர். ஆனால் பேசியது தளபதி.

"நம் பாரத நாட்டுக்கு பெரும் கேடு வந்து சூழ்ந்துள்ளது. காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களைக் கேலிக் கூத்து என்றும் அப்படிச் செய்வது தர்மம் எல்ல என்றும் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. அவர்கள் மிகவும் நன்றாகப் பேசுவதால் மக்கள் மதி மயங்கி அவர்கள் பின்னால் போகிறார்கள். யாகம் என்ற பெயரில் ஆடு மாடுகளை பலி கொடுக்கக் கூடாது, ஜீவ காருண்யம் என்றெல்லாம் பிதற்றி வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் விட அவர்கள் செய்யும் இன்னொரு கொடுமையான வேலையால் பாரத நாடே சூனியமாகி விடும் அபாயம் நேர்ந்துள்ளது. அதனால் தான் நாம் பெண்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் நாம் விரலைசைத்தால் தான் அவர்கள் எதுவும் செய்ய வேண்டும், நம்மை நம்பியே தான் அவர்கள் இருக்க வேண்டும், அப்படி இருப்பது தான் தெய்வீகமான பெண்மணிகளின் கடமை, நோக்கம் எல்லாமே என்று நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்." என்றார் தளபதி.

"யார் அந்தக் கூட்டத்தார்? யாகம் செய்வதும் அதில் மாடுகளையும் குதிரைகளையும் பலி கொடுத்து அவற்றின் மாமிசத்தை உண்பதும் நமது தர்மம். அதை இகழ்வதற்கு அவர்கள் யார்? அதோடு வேறு ஏதோ கொடூர செயலாமே? அதனால் நம் நாடே சூனியாமாகி விடுமாமே? அப்படிப்பட்ட கூட்டத்தை அழிக்காமல் இருக்கக் கூடாது. இந்தப் புனிதப் பணியில் நான் இணைந்தது எனக்குப் பெருமை தான். பணம் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல நம் தர்மத்தைக் காப்பதும் முக்கியம் அல்லவா?" என்று மனதில் உத்வேகத்தோடு நினைத்தான் பாவனன்.

அப்போது வெளியில் ஏதோ சிறிய சத்தம் கேட்க 8 பேரும் திடுக்கிட்டனர். ஆனால் தலைவரும் தளபதியும் சற்றும் அசரவில்லை.

"கவலை வேண்டாம், ஏதேனும் வன விலங்குகளாக இருக்கும். நன்றாகக் கவனியுங்கள். கணவனுக்கு பணிவிடை செய்வதும், அவனது தேவைகளைக் கவனிப்பதும் அவன் மனம் கோணாமல் நடப்பதும் தான் ஒரு பெண்ணின் இலக்கணம். அப்படிப்பட்ட பெண்கள் எப்படி பிற்காலத்தில் சொர்க்கத்துக்கு சென்றார்கள் என்று கதைகளை உருவாக்குங்கள். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மணமான பெண்ணும் இப்படிப்பட்ட பெண்களைப் போல பத்தினிகளாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். பெண்களுக்கு எப்போதுமே பாராட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கும் போது அவர்களை வாயாறப் பாராட்ட வேண்டும் என்று உங்கள் கூட்டத்துக்கு வரும் ஆண்கக்ளுக்கு சொல்லுங்கள்." என்றார் தலைவர்.

கூட்டத்தில் ஒருவன் கைகளை உயர்த்தினான்.

"என்ன சுதாகரா?" என்றார் தளபதி.

"ஐயா இன்னொரு யோசனையும் உள்ளது சொல்லலாமா?" என்றான் சுதாகரன்.

"சொல்"

"பெண்களுக்கு பொதுவாகவே பொறாமை உணர்வு அதிகம். அவர்கள் எதிரில் இன்னொரு பெண்ணைப் புகழ்ந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. ஆகையால் சற்றே அடங்க மறுக்கும் பெண் எதிரில் கணவனுக்கு அடங்கி நடக்கும் பெண்ணைப் புகழ்ந்தால் அந்தப் பெண்ணும் தானாகவே நம் வழிக்கு வந்து விடுவாள்." என்றான் சுதாகரன்.

தலைவருக்கு மிக்க மகிழ்ச்சி போலும் கைகளால் ஓசைப்படுத்தினார். ஜன்னல் வழியாக ஒரு கரம் சிறு சுருக்குப்பையை கொடுக்க அதை வாங்கி சுதாகரனின் அருகில் போட்டார் தலைவர். பயத்தில் நெஞ்சு உலர்ந்து விட்டது பாவனனுக்கு. தலைவரும் தளபதியும் யார்? அவர்களுக்கு இத்தனை அதிகாரமும், பணமும் எப்படி வந்தன? இந்த நட்ட நடுக்காட்டில் கையை லேசாகத் தட்டினால் மாயமாக ஒரு கரம் வந்து எதையோ கொடுக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியம்? ஒருவேளை இவர்கள் தெய்வங்களோ? என்று எண்ணினான் பாவனன்.

"இந்தா இது எங்கள் பரிசு. அருமையான யோசனையைச் சொன்னாய். இதையும் நீங்கள் உங்கள் கூட்டத்தில் சொல்லி செயல் படுத்தச் சொல்லுங்கள். சுமங்கலி பூஜை, கன்னிப் பெண்கள் பூஜை போன்றவற்றைப் பரப்புங்கள். நாம் பெண்களை தெய்வமாக மதிக்கிறோம் என்று அவர்கள் நினைக்க வேண்டும். சுமங்கலிப் பூஜையை ஒரு ஊரில் ஒரு வீட்டில் மிகவும் ஆடம்பரமாக நாமே செலவு செய்து நடத்தி விட்டால் போதும் ஒருவர் பின் ஒருவராக அவர்களே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்" என்றார் தலைவர்.

"உண்மை தான் தலைவா! ஜேத்தாவில் ஒரு வீட்டில் அப்படி ஒரு சுமங்கலி பூஜை மிகவும் விமரிசையாக நடந்தது. தெருவில் பலரும் கலந்து கொண்டார்கள். சில பெண்கள் வெளியூரிலிருந்து கூட வந்தார்கள் என்று சொன்னார்கள்." என்றான் பாவனன். பேசி விட்டானே தவிர பயத்தில் நாக்கு தடுமாறியது. அவனது பேச்சைக் கேட்ட தலைவருக்கு ஏனோ கோபம் வந்தது.

"முட்டாள்களே! தெரியாத ஊரிலிருந்து பெண்கள் எப்படி வந்திருக்க முடியும்? பெண்களைத்தான் நாம் வெளியில் அனுப்புவதே இல்லையே? அப்படி இருக்க அவர்கள் எந்த ஊருக்குப் போய் யாரை அழைக்க முடியும்? இதில் என்னவோ இருக்கிறது" என்றார் கோபமாக. அப்போது தான் ஆமாம்! எப்படி பெண்கள் வெளியூர் சென்று வேறு பெண்களை அழைக்க முடியும்? ஆனால் அரிஹந்த் தெரிந்த பெண்கள் என்று சொன்னானே? என்று யோசித்தான்.

"என்ன யோசிக்கிறாய் பாவனா? ஜேத்தாவில் யார் வீட்டில் வைத்து இந்த சுமங்கலி பூஜை நடந்தது?"

"வந்து....கணேசன் என்பவரின் வீட்டில் வைத்து நடந்தது." என்றான் பாவனன்.

சற்றே அமைதியானார் தலைவர்.

"ஜேத்தாவில் தானே அரிஹந்த் இருக்கிறான்? அவன் நாம் சொல்வதைக் கேட்கவே மாட்டானே? அவனுக்கும் இந்த வீட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?" என்றார் தளபதி.

மீண்டும் பயப்பந்து நெஞ்சை அடைத்தது.

அரிஹந்தின் சகோதரி சுவர்ணாவும் கணேசனின் மகள் மாலாவும் மிகவும் நெருங்கிய தோழிகள். அவர்களுக்கு தோழிகள் என்று சொல்லி மூன்று கன்னிப்பெண்கள் வந்திருந்தனர் பூஜைக்கு. அவர்களுக்கு வெளியூர் என்று அரிஹந்த் தான் சொன்னான்." என்றான் பாவனன் மெதுவாக.

உணர்ச்சிகளைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை தலைவரும் தளபதியும். தங்களுக்குள் மீண்டும் பேசிக் கொண்டார்கள்.

"பாவனா! உனது உதவியாளான ஆதிவனை கிராமங்களைக் கவனித்துக் கொள்ளச் சொல். அவன் கூட்டங்களில் பேசட்டும், நம் பக்கம் ஆண்களை இழுக்கட்டும். அதே நேரத்தில் நீ அரிஹந்தைக் கண்காணிக்க வேண்டும். அவன் எங்கு சென்றாலும் நிழல் போல செல்ல வேண்டும். அவன் ஏதோ திட்டம் போட்டிருக்கிறான். அதில் அவன் மட்டும் இருக்கிறானா? இல்லை நமக்கு எதிரான கூட்டம் இதில் ஈடுபட்டுள்ளதா? என்று கண்காணித்து வந்து சொல். சிறு சந்தேகம் தோன்றினாலும் இதோ இந்தப் பையில் உள்ள விஷத்தை அவர்கள் உணவில் கலந்துவிடு. நம எதிரிகள் மேல் நாம் கொஞ்சமும் கருணை காட்டக் கூடாது. புரிந்ததா?" என்று சொல்லி சிறு பெட்டி போன்ற ஒன்றை வைத்தார் தலைவர்.

"இது மிகவும் சக்தி வாய்ந்த விஷம். உள்ளே சென்ற பத்தாவது நிமிடம் மரணம் தான். ஆகையால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்." என்று எச்சரித்தார் தளபதி. கைகள் நடுங்க அதை எடுத்துக் கொண்டான் பாவனன் .

ஜேத்தாவில் வீட்டை விட்டு வெளியேறிய அரிஹந்த், சுவர்ணா மற்றும் கோமதி மூவரும் மயூரன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காற்றே இல்லாமல் விளக்கு அணைய கோமதியின் மனதில் பயம் வந்து அமர்ந்தது.
 
ஒரு கதை, முன்பே நடந்ததாக, ஆனால் தற்காலிக சூழலுக்கு பொருத்தம் உடையதாக இருக்கும். இந்த கதை அது போல் உள்ளது. தற்கால சூழலை உற்று நோக்கினால் சற்றே பயமும் வருகிறது
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top