My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அல்லியங்கோதை -13

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
265
அல்லியங்கோதை
(தீபாஸ்)
அல்லியங்கோதை (image).jpeg

அத்தியாயம் 13

கலி அரசனைச் சோழ இளவல் காஞ்சியின் அருகில் வீழ்த்திய தருணத்தில், "அடுத்து என்ன?" என்ற தளபதியின் பார்வையைக் கண்ட ஆதித்தன், குறும்பொறை நாட்டின் தலைநகரான விடாரபுரம் நோக்கி நகர்வோமென அறிவித்தான். அப்பொழுது, "தளபதியாகத் தங்களின் இந்த வெற்றியை ஈட்டிக்கொடுத்த படை வீரர்களின் அளப்பரிய பணிக்கும்... அதன் பின்புமான குதூகலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும்" என எண்ணினார் சாத்தன்.

அத்தோடு தாங்கள் செல்லும் இடத்தில் படைவீரர்கள் இளைப்பாறத் தோதான சூழல் இருக்காது எனத் தெரியும். அவ்வேளையில் அவர்களை உற்சாகப்படுத்தவும்... விடாரபுரத்தின் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருக்கும் மாந்தர்களைக் கவனிக்கவும் தோதான ஆட்களைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டார்.

ஆதலால் அதற்காகத் தங்களது அரண்மனையில் தங்கிப் பணியாற்றும் முக்கிய மூன்று அரவாணிப் பெண்களான ரம்பை, மேனகை, ஊர்வசி என்ற தேவகன்னிகைகளின் நாமங்களை அவர்களாகவே தங்களுக்குப் புனைந்துகொண்ட அக்காரிகையர்களை வரவழைக்க விரைவுத் தூதுவரிடம் சேதி அனுப்பியிருந்தார்.

அம்மூவரும் அரசவையில் முக்கியமானவர்களாகப் பார்க்கப்பட்டனர். முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களிடம் செல்வாக்கும், வீரமும், விவேகமும், விசுவாசமும், சமயோகிதப் புத்தியும் உள்ளவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களைக் கொண்டு அரசாங்கத்தின் மதியூகச் செயல்களைச் செய்து முடிப்பதென்பது சோழ அரண்மனைவாசிகளின் வழக்கமாக இருந்தது.

தளபதியிடமிருந்து வந்த சேதி கிடைத்ததும் மூவரும் விரைந்து பயணப்பட்டு உச்சிவேளையின்போது விடாரபுரத்தின் அரண்மனைக்கு வந்தடைந்திருந்தார்கள். எப்பொழுதும் அவர்கள் இருக்கும் இடத்தில் பாட்டு, நடனம், கேளிக்கைப் பேச்சுகள் என்று குதூகலமாய் இருக்கும். அவர்கள் அரண்மனைக்குள் புகுந்ததும் சோழப்படை வீரர்கள் ஆவலுடன் அவர்களைச் சூழ்ந்துகொண்டு கேலி கிண்டலில் ஈடுபட, அதற்கு அவர்களும் ஈடுகொடுத்துக்கொண்டிருக்க அந்த இடம் கலகலப்பாக இருந்தது.

அரண்மனையிலிருந்து கிளம்பி விருந்தினர் மாளிகைக்கு இளவரசருடன் சென்றுகொண்டிருந்த தளபதி சாத்தன், தூரத்தில் இருந்த தனது வீரர்களின் கும்பல்களுக்கு இடையில் அரட்டையடித்துக்கொண்டு நின்ற மூவரையும் கண்டு,

“நம்ம அரண்மனைத் தேவகன்னிகள் வந்துவிட்டார்கள் இளவரசரே... அங்கேப் பாருங்கள், இனி இந்த அரண்மனையும் களைகட்டிவிடும். அத்தோடு அந்தப்புரத்து மாந்தர்களையும் இவர்களைக் கொண்டே நாம் எண்ணியது போலக் கவனித்துக்கொள்ளலாம். நான் அதற்கான உத்தரவுகளை இப்பொழுதே அவர்களை அழைத்து இட்டுவிடுகிறேன்” என்று சுட்டிக்காண்பித்தார்.

“சரிதான், அவர்களிடம் சொல்ல வேண்டியதை நீங்களே பேசிவிடுங்கள். என்னால் இப்பொழுது அவர்களின் அன்புத் தொல்லைகளைச் சமாளிக்க மனம் ஏற்புடையதாக இல்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஆதித்தன் சிறுவயதில் பெரும்பாலும் அவர்களுடன் வம்பிழுத்து ஓடி ஆடி விளையாடி வளர்ந்தவன். அம்மூவரும் அவனின் பின்னேயே அவனைப் பாதுகாக்கும் பொருட்டு அலைவார்கள். ஆதலால் மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு அவன் தனி இடத்தைக் கொடுத்து இருந்தான். இளவரசர் என்ற அதீதப் பிரியத்தின் காரணமாக அவனின் தேவைகளைக் கவனிக்கிறேனென மிகவும் அன்புத் தொல்லையும் கொடுப்பார்கள்.

அவர்களை மற்ற அரண்மனை வாசிகள் போலக் கடிந்து பேசாமல் இப்பொழுதுவரை அரவணைத்தே போகிறவன் சோழ இளவல். குதிரையேற்றம் வாள்பயிற்சி போன்ற அவனின் கலைகள் செம்மைப்பட்டதற்கு அவர்களுடன் விளையாட்டாய் அவற்றைக் கற்றும் பயிற்சி செய்தும் பழகியதால்தான். ஆகவே அவனுக்கு அவர்களின் மீது மரியாதையும் நம்பிக்கையும் தனிப்பட்ட அன்பும் உண்டு.

ஆனால் இன்றோ அவனால் அவர்களின் அன்புத் தொந்தரவுகளைச் சகித்துக்கொள்ள முடியுமெனத் தோன்றவில்லை. அவனுக்குச் சிறிது ஓய்வும் தனிமையும் தேவைப்பட்டது. ஆதலால் ஓய்வறைக்குள் போகும் முன் காவலர்களிடம்,

“நம் அரண்மனையின் முப்பெரும் தேவியர்களான ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் வந்திருக்கிறார்கள். அவர்களை எக்காரணம் கொண்டும் என்னைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று உத்தரவைச் சொல்லிவிட்டு ஓய்வறைக்குள் சென்றிருந்தான்.

தளபதி சாத்தனுடன் நாளை செய்யவிருக்கும் ஏற்பாடுகளுக்கான ஆலோசனையை முடித்துக்கொண்டு தனிமையில் ஓய்வறைக்குள் புகுந்தான் சோழ இளவல் ஆதித்தன். அத்தனை ராஜாங்க வேலைகளையும் சரியாகச் செய்திருந்தும் ஏனோ அவனின் மனம் அமைதியிழந்து இருந்தது. மாலையில் விருந்தினர் மாளிகையின் வாசலிலிருந்து வெளியேறிய பலகார வியாபாரிகள் கூட்டம் பற்றிய நெருடல் அவனுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

அவ்வுறுத்தலையும் மீறி அலையா விருந்தாளியாக அல்லியின் நினைவே அவனை அரவணைத்தது. ‘அல்லி... நீ வசிக்கும் இவ் விடாரபுரத்தில்தான் நானும் இருக்கிறேன்; இருந்தும் நீ யார், இங்கே எத்திசையில் இருக்கிறாய் என்ற கேள்விக்கான தீர்வைத் தேடிப்போக முடியவில்லை... அரசாங்க காரியங்களின் அழுத்தத்தினால் ‘நீ கலி அரசனின் மகள் அல்லியங்கோதையா?’ என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச்செல்ல சூழல் வாய்க்கவில்லை.

கலி அரசனின் இளவரசியாக நீ இருக்கும் பட்சத்தில், உன் தந்தையை வீழ்த்தி இந்த நாட்டையும் அரண்மனையையும் கையகப்படுத்தியதிலும்... அரசியல் பகடையாக இதில் இருக்கும் அனைவரையும் சிறைபிடித்து வைத்திருப்பதற்காகவும் இளவரசியான உன்னை மனத்துயரத்திற்கு ஆளாக்கி இருப்பேன். ஆதலால் என் மீதான உன் அன்பைக் கூட நீ புறந்தள்ள முனைவாய்... அந்த எண்ணமே எதற்கும் கலங்காத இந்தச் சோழனை அமைதியிழக்க வைக்கிறதே!’

களப்பிரர் குல இளவரசியாக நீ இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒருவேளை அந்தப் பலகார வியாபாரிகள் கூட்டத்தில் இருந்த பெண்களில் ஒருத்தியாக இருந்து... என்னைத் தேடி வந்திருக்கலாமோ...? இங்கு வந்தும் என்னைச் சந்திக்க முடியாமல் ஏமாந்து வெளியேறினாயோ..? அதனால்தான் எனதுள்ளம் அக்கூட்டம் தொலைவில் இருந்தும்... அதிலிருந்த பெண்களுள் ஒருத்தியாய் என்னை நோக்கியே கொத்தித் தின்பதாய் உள்ளுணர்வு உந்தியதோ...! அவ்வுணர்வு அன்று வேட்டைக்காரன் மலையில் மோதித் தகித்த நம் கண்களின் காந்தத்தினை ஒத்திருந்தது.

அந்நேரம் உடன் தளபதியார் இருந்ததால் மரியாதையின் நிமித்தம் என் அந்தரங்க உணர்வுகளை வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருந்தேன். அவர் சென்றதும் என்னைச் சுட்ட அப்பார்வையைத் தொடர்ந்து வர எண்ணியிருந்தேன். இரவு விருந்தில் பல்லவனைச் சந்திக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளையும், பல்லவனுடன் எடுக்க வேண்டிய அரசாங்க நிலைப்பாட்டைப் பற்றிய விவாதத்தில் நேரம் சென்றுவிட்டதால் அவளைத் தவறவிட்டுவிட்டேனோ...?’

இவ்வாறான யோசனையின் போது அன்று தளபதியார் பல்லவனைப் பற்றிச் சொன்னவைகள் அசரீரி போலக் கேட்டது: “கள்ளமாய் இங்கு புகுந்து... அரசிலங்குமாரியை அவர்கள் நீராடும் வாவிக்கரையில் சென்று கவர்ந்து செல்ல முயன்றிருக்கிறான். ஆனால் அதைச் செய்ய முடியாமல் தப்பி ஓடியிருக்கிறான்” என்று சொன்ன வாக்கியம் அவன் காதிற்குள் ஒலித்தது. அதைத்தொடர்ந்து ஆதித்தனின் உதடுகள் “அல்லியங்கோதை, நீராடும் வாவிக்கரை” என்று முனங்கியது.

முதல் முதலில் ஆசையாய் அவளிடம் நெருங்கிய அந்நொடி அவனின் மனதில் மேலெழுந்தது...

முதல் முறை அவள் தன்னைப் பார்த்தபோதே விஷக்கடிக்கு வைத்தியம் செய்தவள், மலங்காட்டில் இருந்த சோலையுள் சென்று மறைந்ததும், தான் தேடி அலைந்ததும்... நினைவில் ஆடியது.

அவளின் வைத்தியத்தில் தனது உடலில் விஷம் முறிந்ததும், என்னை விட்டு அங்கிருந்து கிளம்பியவளை ‘விட்டுச் செல்கிறாயே..!” என்று சாடினேன். அதற்கு, ‘இனி தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை; உங்களோடு நான் இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று சொல்லிவிட்டு, கிளம்பிச் சென்று மறைந்த சோலையிலிருந்து அவள் திரும்பி வரக் காத்திருந்தேன். அவள் உதடுகள் 'போகிறேன்' எனச் சொன்னாலும், கண்கள் பிரிவின் ஆற்றாமையை வெளிப்படுத்தியதால் எப்படியும் திரும்பித் தன்னிடம் வருவாள் எனக் காத்திருந்தேன். ஆனால், நேரம் செல்லச் செல்ல அவள் உண்மையாகவே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள் என்று புரிந்தது.

அதே நேரம் உடலில் நஞ்சும் முற்றிலும் வடிந்து இதயத்துடிப்பு சீராக ஆரம்பித்திருந்தது. அவள் விட்டுச் சென்றாலும் என்னால் அவளை இனி விட்டு விலக முடியாது என்பது புரிந்தது. இனியும் அங்கேயே தாமதிக்காமல், அவள் சென்ற திக்கில் போய்த் தேட நினைத்து எழுந்தேன். அவ்வளவு நேரமும் என் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டே புல்வெளிகளில் மேய்ந்துகொண்டிருந்த எனது புரவி, நான் எழுந்ததும் கனைத்துக்கொண்டு அருகில் வந்து நின்றது.

ஆசையோடு உரசுவது போல நின்ற குதிரையின் பிடரி மயிரை எட்டி நீவி விட்டவன், “அவளது கூந்தல் உன் பிடரி மயிரைப் போல இருக்காது... அவளின் கைகள் என்னைத் தீண்டியபோது அனுபவித்த அதே பட்டின் மென்மையாகத்தான் இருக்கும்..?” என்று சொல்லவும், அதற்கு ஏதோ புரிந்தது போலக் கழுத்தை ‘ஆமாம்’ என்று சொல்வது போல அசைத்தது. அதைக் கண்டவன் சத்தமாகச் சிரித்துவிட்டு அதன் மேலேறி, அல்லி சென்று மறைந்த அந்தப் பூஞ்சோலைக்குள் புகுந்தான்.

அதன் உள்ளே நுழைந்தவன் செல்லச் செல்ல அதன் அடர்த்தியும் உயரமும் கூடிக்கொண்டே போவதை உணர்ந்து, இனி இவ்வழியே குதிரையைச் செலுத்த முடியாது, அப்பாதையில் நடந்து போவதற்கும் வகை இல்லை என்று உணர்ந்தான். 'பிறகு எப்படி அவள் இதனுள் சென்று மறைந்தாள்?' என்று ஆராய்ச்சிப் பார்வையாய் அச்சோலையை அலசினான்.

அதில் ஆளுயரத்துக்கு வளர்ந்த சோலைவனத்துப் புல்வெளியை யானை மிதித்து வழி ஏற்படுத்திச் சென்ற தடம் தெரிந்ததும் புரிந்துகொண்டான். அவள் யானையில் ஏறிச் சென்ற அத்தடத்தின் வழியே குதிரையில் பயணிப்பது ஆபத்தானது என்பதையும் உணர்ந்தான். ஆனாலும் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுப்பட்டது.

அம்மலை அடிவாரத்தில் உள்ள விடாரபுரத்திற்கு அவள் சென்றிருப்பாள் என யூகித்து வேறு பாதையில் மலையைவிட்டு இறங்கினான். அப்பிராந்தியத்தில் மலையையே அரணாகக் கொண்ட அந்நகரின் குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல தயக்கம் உண்டானது. மலைவிட்டு இறங்கியதும் இருந்த காடுகளைக் கடந்து ஊருக்குள் செல்ல வேண்டும் என்றால், எல்லைப் பாதுகாப்புக்கு நின்ற களப்பிரர் வீரர்களைத் தாண்டியே நகருக்குள் புக முடியும். ஆகையால் யோசனையுடன் அக்காட்டில் உலாவியவனுக்குத் தூரத்தில் யானை ஒன்று தென்பட்டது.

மரங்கள் அதிகம் இல்லாத அக்காட்டின் புதர்களையும் கோரைப்புற்களையும் குதிரையில் கடந்து யானையைப் பின்தொடரச் சென்றவன், அங்கிருந்த ஓரிடத்தில் மட்டும் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கையாய் அரண் அமைத்திருந்த இடத்திற்குள் அந்த யானை சென்று மறைவதைக் கண்டவன், அவள் ஏறிவந்த யானையாக இருந்தால் அல்லியும் அங்குதான் இருப்பாள் என எண்ணினான்.

நேற்று இரவு மலைவிட்டு இறங்க ஆரம்பித்தான் ஆதித்தியன். பாதி வழியில் இருட்ட ஆரம்பித்திருந்ததால் ஒரு மரத்தின் அடியில் தங்கிவிட்டு விடிகாலையில் இறங்கி வந்திருந்தான். அங்கே ஆங்காங்கு காவலுக்குக் கையில் வேல் கம்பிகளுடன் அலைந்துகொண்டிருந்தனர் களப்பிரர் வீரர்கள். அவர்களின் கண்ணில் மாட்டாமல் இருக்கக் குதிரையைப் பாதுகாப்பாய் ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டுப் பதுங்கி வந்தவன், யானை புகுந்த அந்த இடத்தைச் சுற்றியிருந்த மரங்களில் ஒன்றில் ஏறினான். அதன் அடர்க்கிளைகளுக்குள் தன்னை மறைத்துக்கொண்டான். மரத்தின் மீது அமர்ந்து உள்ளே பார்வையைச் செலுத்தினான். அங்கு அழகான நந்தவனம் ஒன்று இருப்பதைக்கண்டு அதன் அழகை ரசித்தான். அப்பொழுது அவனின் காதில் கலகலவென்ற பெண்ணின் சிரிப்பொலி விழுந்ததும் அத்திசை நோக்கினான்.

அங்கே பூங்காவின் மத்தியில் இருந்த தடாகத்தில் பூத்திருந்த அல்லி மலர்களுக்கு இடையில் அவளின் மனத்தைக் கொள்ளைகொண்ட கன்னிகை அல்லியும் பூத்திருந்தாள். வாவியில் வாளைமீனாகக் கைகள் துலாவி நீந்திக்கொண்டிருந்தவளைக் கண்டவன் கண்களுக்கு அவளின் யௌவனங்கள் அனைத்தும் விருந்தானது. அச்சந்தனச் சிலை வார்ப்பு மேனியைக் கண்டு ஒரு நிமிடம் சித்தம் பிரம்மை கொள்ள... மெய்மறந்து பார்த்தபடி இருந்தான். தோழிகள் இருவரும் பேசிச் சிரிப்பதால் உண்டான கிங்கிணிச் சிரிப்பொலியில் நிலை தெளிந்தான். பெண்கள் குளிக்கும் இடம் அதுவென புரிந்தது. இவ்வாறு அவ்விடத்திற்கு வந்து மறைந்து பார்ப்பது கண்ணியமில்லாத செயலென அவனின் மூளை அறிவுறுத்தியது.

கண்ணியத்தின் பொருட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தான். நேரில் பார்ப்பதைவிட அகக்கண்ணில் தோன்றும் அவளின் பிம்பம் உண்டாக்கிய கற்பனை அலாதியல்லவா... காதல் பெண் மீது பித்தானான். இவள் ஏன் இத்தனை அழகாக இருக்கிறாள்? நான் தடுமாறிப் போவதற்கு அவள் அழகே காரணமென அவள் மீது குற்றம் சுமத்தித் தனது தடுமாற்ற நிலையில் இருந்து மீள முயன்றான்.

நந்தவனத்தில் ஒருவன் மறைந்திருந்து பார்ப்பதை அறியாமல் வாவியில் நீராடிக்கொண்டிருந்த அல்லியிடம், “நேற்றே வேட்டுவமலையிலிருந்து நாம் வர நேரமானதில் வீட்டில் கலங்கிப்போய்விட்டார்கள் அல்லி. ராஜமாதா என்னைத்தான் கோவித்துக்கொண்டார்கள். இன்று நீராட இங்கு வரும்முன் நேரத்தோடு உன்னை அழைத்து வந்துவிடுவேனெனச் சொல்லிவிட்டே வந்தேன். ஆதலால் நீந்தியது போதும், வா போகலாம்; நான் உடைமாற்றப் போகிறேன்” என்று சத்தமாக மந்தாகினி பேசியது காதில் விழ, பட்டென ஆதித்தியன் கண்களைத் திறந்துகொண்டான்.

‘அடடா... உடைமாற்றிவிட்டால் இங்கிருந்து கிளம்பி நகருக்குள் போய்விடுவார்கள். அங்கே இவர்களின் பின்னால் போய்ச் சந்திப்பது விபரீதமாகிவிடும். இப்பொழுதே என் மனதை அல்லியிடம் சொல்லிவிட்டு அவளைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்’ என்ற பரபரப்புத் தொற்றிக்கொண்டது.

அல்லியை அவசரப்படுத்திவிட்டு மந்தாகினி கரையேறி உடைமாற்ற நடந்துவிட்டதால், அவளின் பின்பே அவசரமில்லாமல் மெதுவாகக் கரையேறிய அல்லியை நெருங்க நினைத்தான். தோழி உடன் இல்லாமல் தனிமையில் அவள் இருக்கும் இவ்வேளையில், தனது உள்ளத்தை உணர்த்த நினைத்து மரத்திலிருந்து மெதுவாக இறங்கி நந்தவனத்துக்குள் நுழைந்தான்.

---தொடரும்---
 
Last edited:
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top