My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மனதில் மலர்ந்த மல்லிகை - 13

IVNP20

Member
Joined
Mar 22, 2025
Messages
32

அத்தியாயம் 13​



தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை தங்களுக்கு தேவையானபடி மாற்றி அமைக்க முயன்றான் கதிர்வேல்.

அதற்கான சின்ன சின்ன வேலைகளை தன்னிடம் இருந்த பொருட்களை வைத்தே செய்தான்.

அப்பொழுது அங்கு வந்த தயாளன் "உன்னை அண்ணன் கூப்பிடுறார், வா" என்றான்.


தந்தையிடம் சென்று "அப்பா, நான் போய் என்னவென்று கேட்டுவிட்டு வரேன். அதுவரைக்கும் வீட்டை விட்டு யாரும் வெளியே போகாதீங்க" என்று மெதுவாக தந்தையிடம் சொல்லிவிட்டு மனைவியிடம் கண்களால் விடை பெற்றுக் கொண்டு சென்றான்.


செல்லும் அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை. தந்தை சென்றதும் "அம்மா எனக்கு பசிக்கிறது" என்றாள் மல்லிகா.

நேற்றிலிருந்து நடந்த நிகழ்ச்சியில் அதிர்ந்து இருந்த பெரியவர்களுக்கு பசி மரத்துப் போய் இருந்தது. ஆனால் சிறுபிள்ளையான மல்லிகாவால் பசியை அடக்க முடியவில்லை. வாய் திறந்து கேட்டு விட்டாள் மகள் பசி என்று கேட்டு, தன்னால் எதுவும் கொடுக்க முடியவில்லை என்று அழுகை வந்துவிட்டது மணிமேகலைக்கு.


கலங்கிய தன் கண்களை மறைத்துக் கொண்டு, "கொஞ்சம் பொறுத்துக்குமா! அப்பா வந்ததும்.." என்று முடிப்பதற்குள்ளையே அவளுக்கும் அழுகை வந்துவிட வாயை பொத்தி அழ ஆரம்பித்தாள்.


தாய் அழுததும் தாங்காத மல்லிகா, "அம்மா அழாதீங்கம்மா, எனக்கு பசிக்கல" என்று அவளை வயிற்றுடன் கட்டி அணைத்துக் கொண்டாள்.


இருவரது அழுகையையும் கண்டு சாமிக்கண்ணு கண்களும் கலங்கியது.

இருவரையும் "அழாதீர்கள்!" என்று ஆறுதல் படுத்திய சாமிக்கண்ணு மருமகளிடம், "அம்மா, ஒரு பையை கொண்டு வந்து உணவு என்று வைத்தானே ஒருவன். அதில் என்ன இருக்கிறது என்று பாரம்மா? ஏதாவது சாப்பிடுவதற்கு இருந்தால் பிள்ளைக்கு எடுத்துக் கொடு!" என்றார்.


அவர் கூறிய பிறகு தான் அந்த பையை பற்றிய நினைப்பே மணிமேகலைக்கு வந்தது. வேகமாகச் சென்று அந்த பையை பிரித்துப் பார்த்தாள். சில மளிகை சாமான்களும் காய்கறிகளும் இருந்தது.


"மாமா சமையல் செய்வதற்கான காய்கறிகளும் மளிகை சாமானும் இருக்கிறது. ஆனால் பாத்திரம் அடுப்பும் இல்லையே?" என்று காய்கறியில் இருந்த கேரட்டை எடுத்து கழுவி மகளின் கையில் கொடுத்தாள்.


"இதை இப்பொழுது சாப்பிடு செல்லம், அம்மா சமைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியில் செல்ல பார்த்தாள்.


"எங்கே மா போகிறாய்?" என்று அவசரமாக அவளை தடுத்தார் சாமிக்கண்ணு.

"பக்கத்தில் இருப்பவர்களிடம் ஏதாவது பாத்திரம் அடுப்பு இருக்கிறதா? என்று கேட்டு வருகிறேன் மாமா"


"கதிர்வேலு வரும்வரை நாம் எங்கும் வெளியே செல்ல வேண்டாம்மா? அதுவும் நீயும் மல்லிகாவும் வீட்டை விட்டு எப்பொழுதுமே வெளியே வர வேண்டாம், புரிகிறதா?" என்றார்.


மகள் பசி என்றதும் அனைத்தையுமே மறந்து விட்டாள் மணிமேகலை. சாமிக்கண்ணு கூறிய பிறகு தான் தங்கள் நிலைமையை உணர்ந்து சிறிது பயம் தோன்றியது. ஆமாம் ஆமாம் என்று கூறி தலையாட்டி அப்படியே மகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.


பெண் பிள்ளைகளை பார்த்த சாமி கண்ணுக்கு மனது அழுத்தியது. பக்கத்து கதவை நன்றாக உள்புறமாக பூட்டிவிட்டு, "நான் சென்று சமைப்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா? என்று பார்த்துவிட்டு வருகிறேன். என்னையும் கதிர்வேலையும் தவிர யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு முன் பக்கக் கதவை திறக்கப் போனார்.


"ஐயோ மாமா, வேண்டாம். அவர் வரும் வரை யாருமே வெளியே போக வேண்டாம்" என்றாள் மணிமேகலை.

தாயின் பயத்தை கண்ட மல்லிகாவும் "ஆமா தாத்தா, அப்பா வரும் போது வரட்டும். எனக்கு பசிக்கல தாத்தா. நான்தான் கேரட் சாப்பிட்டேனே!" என்று தாத்தாவை தடுக்க பார்த்தாள்.


பேத்தியின் தலையை ஆதுரியமாக தடவி விட்டு "தாத்தாவுக்கு எதுவும் ஆகாது. நான் வெளியே போய் என்ன நடக்குது என்று பார்த்துவிட்டு வருகிறேன், சரியா? பயப்படாமல் அம்மா சொல்வதைக் கேட்டு, அம்மா கூடவே இருக்கணும், சரியா?" என்று மென்மையாகக்கூறி மருமகளிடம் :"கதவை உள்ளே பூட்டிக்கோம்மா" என்று முன்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே சென்றார்.


வெளியே வந்தவருக்கு யாரிடம் உதவி கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்றிருந்தார். அப்பொழுது காலையில் கல்லாடனுடன் சென்ற ஒரு பெண் வந்தாள்.


"என்ன பெரியவரே! சுத்தி சுத்தி என்னத்த பார்த்துகிட்டு இருக்கிறீங்க" என்றாள்.

காலையிலேயே அப்பெண்ணின் செயலினால் அவள் மேல் அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால் அவளிடம் பேசி உதவி கேட்க தயங்கியபடி நின்று இருந்தார்.


ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அந்தப் பெண், "நீங்க ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கணும்" என்றாள்.

அவரோ குழப்பமாக அவளைப் பார்க்க,

"பின்ன, வந்த முதல் நாளே உங்களுக்கு சாப்பாடு செய்வதற்கெல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொடுக்கச் சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார் நம்ம முதலாளி" என்றாள்.

அப்பவும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க,

"உங்களுக்கு தேவையான பாத்திர பண்டங்களை எல்லாம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார் ஐயா" என்றாள்.


இப்பொழுதுதான் அவருக்கு புரிந்தது. அப்பொழுதும் அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

"தேவையான பொருட்கள் எல்லாம் அந்த வீட்டில இருக்கு" என்று எதிரில் இருந்த ஓட்டு வீடு ஒன்றை காண்பித்தாள்.


"அங்கு வந்து உங்களுக்கு என்ன தேவையோ! எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும்படி சொல்லி இருக்கிறார், வாருங்கள்" என்றாள்.


இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் சரி வராது என்று உணர்ந்தார் சாமிக்கண்ணு. ஆனால் தான் அந்த வீட்டிற்குள் சென்று விட்டால், வெளியே பூட்டிவிட்டு தன் மருமகளையும் பேத்தியையும் அவர்கள் தூக்கிச் சென்று விடுவார்களோ? என்று பயந்தார். அந்த பயம் அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது. அதில் தயங்கியபடி "என் மகன் வரட்டும், அவன் வந்ததும் போய் எடுத்துக் கொள்வான்" என்றார்.


"என்ன பெரியவரே, பயமா இருக்கா?" என்று நக்கலாக அவள் சிரிக்க,

தன் மகள் வயதில் இருக்கும் பெண் தன்னை பார்த்து நக்கலாக சிரிப்பது வருத்தமாக இருக்க, "இல்லை அம்மா, வயசாயிடுச்சு இல்லையா? வெயிட் எல்லாம் தூக்க முடியாது. என் மகன் வந்தா என்னென்ன தேவையோ எல்லாத்தையும் எடுத்துப்பான்" என்று சொல்லிவிட்டு அப்படியே வாசல் படியில் அமர்ந்து விட்டார்.


உங்க மவன் இப்ப வருவான்னு எனக்கு தெரியல" என்று நக்கலாக சொல்லிவிட்டு, எதிரில் இருந்த மற்றொரு ஓட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டாள்.


அந்தப் பெண் சொன்ன தோணியில் சாமிக்கண்ணுக்கு கதி கலங்கி விட்டது. ஒருவேளை மகனை அடித்து துன்புறுத்துவார்களோ! என்று பயந்தபடியே அமர்ந்திருந்தார். ஏன் தங்களுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது? என்று கடவுளிடம் கேட்டார். எப்படியாவது என் பிள்ளைகளை இதிலிருந்து காப்பாற்று என்று மன்றாடினார். ஒரு நாளிலேயே நாங்கள் இப்படி அனாதையாக, அகதியாக, அடிமையாக ஆகி விட்டோமே என்று வருந்தினார்.


மகன் செய்த தவறால் தன் மருமகளும் பேத்தியும் பாதிக்கப்படுவார்களோ என்ற பயம் அவருக்குள் சூழ்ந்தது. மகனும் தெரிந்தே தவறு செய்யவில்லையே! அப்படி செய்பவனும் அல்ல சிறுவயதிலிருந்து பிறருக்கு உதவும்படி தானே அனைத்தையும் சொல்லிச் சொல்லி வளர்த்தார். அவர் சொல்லி வளர்த்ததனால் தானே அவனும் யாருக்கோ உதவப்போ இப்படி வந்து மாட்டிக் கொண்டான்.


கதிர்வேல் தெம்பாக இருக்கும் வரை தான் தன் குடும்பத்தை இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும். அவனையும் அடித்து விடுவார்களோ என்ற பயம் அவருக்கு சூழ்ந்தது. ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனையில் இருப்பவர். நேற்று இரவில் இருந்து இவ்வளவு பிரச்சினையையும் தாங்கி இதுவரை எப்படி தெம்பா இருந்தார் என்று தெரியவில்லை.


இப்பொழுது கண்டதையும் யோசிக்க யோசிக்க அவருக்கு மூச்சு வாங்கியது. தன்னால் இதற்கு மேல் வாழ முடியும் என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஆனால் தானும் இறந்து விட்டால் என் பிள்ளைகளை எப்படி இவர்களிடம் இருந்து காப்பாற்றுவான் என் மகன் என்ற எண்ணம் அவருக்கு ஓடியது.


ஒருவேளை அவன் வேலை செய்ய வெளியே சென்றால் வீட்டுக்குள் இருந்து மருமகளையும் பேத்தியையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே! அதற்காகவாவது நாம் தெம்பாக இருக்க வேண்டுமே என்ற எண்ணம் வர மூச்சை இழுத்து விட முடியாமல் கதவை மெதுவாக தட்டினார்.


அவர் வெளியே செல்லும் பொழுது தன்னையும் கதிர்வேலையும் தவிர யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று சொல்லிவிட்டு சென்றதால் கதவைத் தட்டியதும் பயந்து விட்டாள் மணிமேகலை. "யார்?" என்று அவளுக்கே கேட்காத குரலில் கேட்டாள். வெளியில் இருந்து பதில் வரவில்லை.

மீண்டும் கதவை படிக்கட்டில் உட்கார்ந்தபடியே மெதுவாக தட்டினார்.

அதற்கு மேல் அவருக்கும் பலமில்லை.

கதவின் அருகில் வந்த மணிமேகலை "யார்?" என்று சற்று சத்தமாக கேட்டாள்.

பதில் சொல்ல முடியாமல், மூச்சை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டு, கதவை மீண்டும் ஒரு முறை தட்டி, "நான் தான்ம்மா" என்று பலவீனமான குரலில் கூப்பிட்டார் சாமிக்கண்ணு.


- தொடரும்
 
Back
Top