Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,641
112. தேன்சிட்டுகள்
இரண்டு நாள்களுக்கு முன் சிவபாண்டியும், சந்திராவுமாக, சந்திராவின் அண்ணன் பேத்தி வளைகாப்புக்கு ஆண்டிப்பட்டி வரை சென்றிருந்தனர்.உசிலம்பட்டியை அடுத்த பாப்பாபட்டியை பூர்வீகமாக கொண்ட சந்திரா குடும்பத்தினர், தற்போது ஆண்டிபட்டியில் வசிக்கின்றனர். சந்திரா வீட்டில் இளையவர், செல்லபாண்டி, ஜெயபாண்டி இருவரும் ஆண்பிள்ளைகளாக போக, பிறந்த வீட்டோடு சம்பந்தம் செய்ய தோது இல்லாமல் போனது.
பெரிய அண்ணனுக்கு வயது 90 ஐ நெருங்க, வளைகாப்பை சாக்கு வைத்தாவது பார்த்துவிட்டு வரலாம் என கணவரோடு சென்றிருந்தார்.
சிவபாண்டிக்கு அவர்கள் வீட்டில், முன்னாள் அமைச்சர் என்பதையும் தாண்டி வீட்டு மருமகன் என மதிப்பு வைத்திருப்பர். எத்தனையோ பேர், அவர் மந்திரியாக இருந்த போது சிபாரிசுக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் செல்வாக்கை வைத்து அவரவர் தொழிலையும் விருத்தி செய்திருக்கின்றனர். ஆனால் சந்திரா வீட்டினர் மட்டும் அப்படியெல்லாம் வரவே மாட்டார்கள். அதனால் மச்சின்னகள் மேல் சிவபாண்டிக்கும் நல்ல மதிப்பு இருந்தது. அப்படி பட்ட மச்சின்னகளே விழா முடிந்து உணவுக்கு பின், தாம்பூலம் தரித்து அமர்ந்திருக்கும் போது, ஒருவரை அறிமுகப் படுத்தி வைத்தனர்.
“ கருமாத்தூர் மூணு சாமி கோவில்ல, கோதை மகன் நடத்தின மாவளி திருவிழாவுல பார்த்தமோ” என சரியாக சிவபாண்டி நினைவு கூற,
“ ஆமாம் மாமா. சரியா கண்டுக்கிட்டீக. அன்னைக்கே உங்களோட பேசசனுமுண்டு தான் முயற்சி பண்ணேன்.ராசா மாமா ஊடால புகுநதுட்டாரு” என்றவர்,
“ அங்குட்டு வர்றீகளா, தணிச்சு பேசனும்” என அழைக்க,
“ நீ இங்கேயே பேசுப்பா. நாங்க அங்குட்டு போறோம். அவரு எம்புட்டு உசந்தவரு, அவரை அங்குட்டும், இங்குட்டும் அலைக்கழிப்பியா? “ என பெரிய மச்சினனை மட்டும் அவரோடு துணைக்கு அமர்த்தி விட்டு, மற்றவர் மாற்றிடம் சென்றனர்.
சந்திரா பெண்களோட பேச்சில் மும்மரமாக இருந்தார். மற்றவர் இவரிடம் ஹரிணியை பற்றி கேட்க, “ அடுத்து அவளுக்கும் வளைகாப்பு வைப்போம். சொல்றேன் வாங்க” என பேத்தி பெருமை பேசிக் கொண்டிருந்தார்.
“ சுத்தி வளைச்சு பேச விரும்பலைங்க மாமா. உங்க மகனாலையும், அவரு மச்சினனாலையும் எங்களுக்கு ரொம்ப பண இழப்பு” என அந்த மனிதர் ஆதியோடு அந்தமாகச் சொல்ல, சிவபாண்டி கவனமாக கேட்டுக் கொண்டார். அவ்வளவு எளிதில் எதற்கும் பிடி கொடுத்து விட மாட்டார். மறுபக்கத்தையும் விசாரிக்க வேண்டியது அவர் கடமையல்லவா.
“ இது மட்டும் இல்லை மாமா, முந்தி பினாமி பேர்ல காண்ட்ரேக்ட் எடுத்தவனுங்க, இப்ப பொய் கம்பேனி பேர்ல கொள்ளையடிக்கிறாய்ங்கே “ என ஒரு கோப்பைக் கொடுக்க, அதை வாங்கி ஆராய்ச்சி செய்தார்.
“ சோதனை பண்ண வர்ற அதிகாரிக்கு லஞ்சத்திலிருந்து எல்லாம் சப்ளை பண்றாய்ங்க” என ரகசியமாக சில விசயங்களையும் புட்டு புட்டு வைக்க,
“ அடச் சண்டாள பயலுகளா, இம்புட்டு செஞ்சிருக்காய்ங்களா? “ என ஆதங்கப்பட்டார்.
“ இதுல எம் எல் ஏக்கு தெரிஞ்சு எம்புட்டு நடக்குது, தெரியாமல் எம்புட்டு நடக்குதுண்டு தெரியலை. ஆனா அவரு மச்சான் சொத்தா வாங்கி குவிக்கிறான். அதுவும் அடாவடியா ஆளுங்களை வச்சு மிரட்டி சொப்பத்துக்கு முடிக்கிறது. பேசின காசினையும் இழுத்தடிச்சு குடுக்குறதுண்டு நிறைய பண்றாய்ங்கே. சிலதை ராஜதுரை பைசல் பண்ணாப்ள. கம்ப்ளையிண்டு கலெக்டர் ஆபிஸ் வரைக்கும் போயிடுச்சு. அப்புறம் சமாதானம் பேசி கொஞ்சத்தை கொடுக்கிறதுண்டு, நிறைய பகையை சம்பாதிச்சு வச்சிருக்காக” என விவரத்தைச் சொல்ல,
“ வம்பாடு பட்டு, மாமனும், நீங்களும் வளர்த்த செல்வாக்கை, மருமகனை வச்சு, இந்த கூட்டம் முடிச்சு விட்டுருவாய்ங்க போலருக்கே. “ என பெரிய மச்சினனும் அனுபவஸ்தராக கருத்துச் சொன்னார்.
“ அதை தான் பெரியப்பா நானும் சொல்ல வந்தேன். நீங்க தலையிடலையிண்டா இன்னும் சிக்கல் கூடிடும் மாமா” என அவர் எடுத்துக் கூற,
“மகனுங்களுக்கு வழி விட்டு நம்ம ஒதுங்குறது தப்பு போல.” என புலம்பியவர்,” என் போன் நம்பரை வாங்கிக்க மாப்பிளை.எதுனாலும் நேரா என்னையவே கூப்பிடு. உன் பஞ்சாயத்தை நான் முடிச்சு விடுறேன்” என்றார் சிவபாண்டி.
ஆண்டிப் பட்டியிலிருந்து வரும் வழியிலேயே கனவாய் கருப்பை கும்பிட்டு விட்டு, அருகில் உள்ள நீல குறிசஞ்சி ரிசார்டுக்கு வண்டியை விடச் சொல்ல, “ இப்ப என்னத்துக்கு ரிசார்ட்டு” என்ற சந்திராவிடம்,
“ சாலியா இருந்துட்டு போவோம் வா” என தன்னை மறைத்து சிரிக்க,
“ உன் ஐயாவுக்கு லந்தை பார்த்தியா கருப்பு. நானே கார்ல ஏற இறங்க முடியாம, சத்தியத்துக்கு கட்டுபட்டு நடமாடி திரியிறேன். இதில சாலியா இருக்குறதாம்” என ஜாடை பேச,
“ அப்ப கிழவிண்டு ஒத்துக்குற? “ என வம்பிழுக்க,
“ உங்க ஆத்தா அளவுக்கு இல்லை” என்றார்.
“ எங்க ஆத்தா கிழவி தான். யார் இல்லையிண்டா தாய்கிழவி. எம்புட்டு ரோசனையா குடும்பத்தை நடத்துச்சு” என பெருமூச்சா விட்டார்.
“ இப்ப என்னத்துக்கு இம்பட்டு சலிப்பு” என சந்திரா கேட்க,
அதற்குள் ரிசார்ட் வந்திருந்தது.
ஆட்கள் ஓடி வந்து, ஒரு அறையை திறந்து விட, “ உன் ஐயா, என்ன செட்டப்பா வந்திருக்காரு? “ என்றவர், மெல்ல நடந்து அறைக்குச் சென்று ஷோபாவில் சாய்ந்து விட்டார்.
“ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் பேசிட்டு வாறேன். அம்மாளை பார்த்துக்கடா” என பால்கனி பக்கம் சென்று போன் பேச ஆரம்பித்தார். முன்பு மந்திரியாக இருந்த போது, வேறு ஊர்களுக்கு பயணிக்கும் போது அவர்கள் இப்படி பயணியர் மாளிகையில் தங்குவது பழக்கம்.
‘ ஏதாவது முக்கியமான வேலை இருக்கும். தன்னிடம் சொல்லக் கூடியதாக இருந்தால் சொல்லுவார்’ என கணவரை அறிந்தவராக ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.
சிவபாண்டி, தன் தம்பி ராஜபாண்டிக்கு போனடித்து பேசினார். முதலில் மழுப்பியவர், அண்ணன் போட்ட கிடிக்கு பிடியில், கருமாத்தூரில் சிலரை சந்தித்து முதல் செல்லபாண்டியை கூப்பிட்டு அறிவுரை சொன்னது வரைச் சொன்னார்.
“ அப்பவே என்கிட்ட சொல்லி இருக்கலாம்லப்பா” என்றார் ஆதங்கமாக.
“ நீங்க சங்கடப்படுவீங்கண்டு சொல்லலை. செல்லத்தை கேட்க்கே, ஃபாலோ பண்ணிட்டு தான் அண்ணேன் இருக்கேன். சில ஆளுகளுக்கு பைசல் பண்ணியாச்சுண்டு சொன்னான” என்றார்.
“ என்னா பைசலு? காசு ஆசை, மச்சினன் விரிச்ச வலையில செல்லம் விழுந்துட்டான். “ என அவர் புலம்ப,
“ நம்மட்ட இல்லாத காசு, பணமா அண்ணேன். முறையா இன்வெஸ்ட் பண்ணி பெருக்கி கிட்டு தானே இருக்கோம்” என ராஜன் சமாதானம் சொல்ல,
“ நம்மளை மாதிரி சம்பாதிச்சது போதுமுண்டு, ஒரு பயலும் உட்காரமாட்டாயங்க ராசா. காசு, காசுண்டு ஓடத் தான் செய்வாய்ங்கே. நம்ம பயலை விட செக்காணத்து காரனுக்கு ஆசை அதிகம். காணாததை கண்டா பின்னாடி ஓடுவானுங்கல்ல. அவனுங்க சம்பாதிக்க, நம்ம பயலை வழியா பிடிச்சுட்டாய்ங்கே. செல்லத்தை வரச் சொல்லி இருக்கேன். அவன் கிட்ட பேசும் முன்ன உன்கிட்ட பேசலாமுண்டு தான் கூப்பிட்டேன். துரையும் வந்துருவான்” என்றார்.
“ செல்லத்துக்கிட்டையும் கோபப்படாம, நிதானமா பேசுங்க அண்ணேன்” என்று ராஜபாண்டி சொல்ல,
“ பெத்த மகனை கண்டிக்கிற உரிமை கூட கிடையாது. அந்த நிலமைக்கு வந்துட்டோம். “ என சலித்தவர்,
“ ஆனா, நம்ம அப்பாரு இருக்கந்தண்டியும் அவர் பேச்சை தலைமேல வச்சு கேட்டமேப்பா” எனறார்.
“ அப்ப எளிமையா இருந்த வாழ்க்கை, இப்ப சிக்கலா போயிடுச்சு அண்ணேன். இனி அடுத்த தலைமுறை, அப்பனுக்கே புத்தி சொல்லுவானுங்க” என அணணனை சமாதானப்படுத்தி போனை வைத்தவர், துரை பாண்டியனுக்கும் போனடித்து விட்டார்.
“ திடுதிப்புண்டு அண்ணன் வரச் சொன்னாக, அங்க தான் அண்ணேன் போயிட்டு இருக்கேன். ஆனா என்ன விசயமுண்டு தெரியலை. நேர்ல பார்த்திட்டு உங்களுக்கு கூப்பிடுறேன்” என துரைச் சொல்ல,
“ அண்ணனுக்கு விசயம் தெரிஞ்சு போச்சுப்பா. செல்லத்தையும் வரச் சொல்லி இருக்காரு. நீ நடுவுல நிண்டு, அண்ணன் கோபபடாமல் பார்த்துக்க. இந்த விசயம் குடும்பத்தில கூட யாருக்கும் தெரியக் கூடாது. அது ரொம்ப முக்கியம்” என்றார்.
செல்லபாண்டி வரும் முன்பே, துரைப் பாண்டி வந்துவிட, சந்திராவுக்கு அப்போது தான் ஏதோ பஞ்சாயத்து என்று தோன்றியது.
கொழுந்தனை பார்க்கவும், “ என்னா துரை” என எழுந்தார்.
“நீங்க படுங்க மதினி. அண்ணன் வரச் சொன்னார்” என இழுக்க, அதற்குள் சிவபாண்டியே அறைக்குள் வந்து விட்டார்.
“ வா துரை” என்றவர், கவலை தோய்ந்த முகத்தோடு வந்து அமர, “ என்னா அண்ணே? “ என துரை பதறிவிட்டார்.
“ ஒன்னும் இல்லை, உட்காரப்பா” என்றவர், சந்திராவையும் வைத்துக் கொண்டு, ஆண்டிப் பட்டியில் கேள்விப் பட்ட விசயத்தைச் சொன்னார்.
“ ஆத்தி, அண்ணனே சொன்னாகளா. அப்ப அது நிசமாத் தான் இருக்கும்” என்றவர்,
“ அவன் தனி வீடு கட்டப் போறேண்டு சொல்லும் போதே, நான் வேண்டாமுண்டு சொன்னேன் நீங்க கேட்டிங்களா. இந்தா ஊமையா இருந்து அவ குடும்பத்தை வளமையாக்க அம்புட்டு வேலையும் பார்த்துபுட்டால்ல” என சந்திரா மருமகளைத் திட்ட,
“ ஏய், உன் மகன் மண்டையாட்டுனதுக்கு, அந்த புள்ளை என்னச் செய்யும்? “ என சிவபாண்டி மகனைச் சாட,
“ என்னச் செய்யலை. ஆத்தாகாரி, சின்னாத்தாகாரி, அண்ணன்,மதினி, மாமன், மச்சினேண்டு அம்புட்டு பேருக்கும் விருந்து நடந்த மணியமா தான செல்லபாண்டி இல்லம் இருந்துச்சு. எம் எல் ஏ ஆகவும், புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்குமுல்ல கொம்பு மொளைச்சிடுச்சு” என்றார்.
“ ஏய், சாதிசனம் வர்றதோ, இவுக விருந்தாக்கி போடுறதோ பெரிய பிரச்சனை இல்லை. நல்லது தான். கை நீட்டுறது தானே வில்லங்கம்” என்றாரர்.
“ நீங்க எத்தனை வருஷம் மந்திரியா இருந்தீங்க. என் சாதிசனம் யாருக்காவது இதைச் செய்யிங்க, அதைச் செய்யிங்கண்டு கேட்டு வந்திருக்கேனா.” என சந்திரா கேள்வி எழுப்ப,
“ ஆமாம். ஏன் மதினி, நீங்க எதுவுமே கேட்கலை” என துரை வியந்தார்.
“ அவைய்ங்க பூரா அகராதி புடிச்சவைங்க. ரொம்ப கவுரதை பார்ப்பாய்ங்கே” என சிவபாண்டிச் சொல்ல,
“ உங்க மருமக வீட்டு ஆளுங்க மாதிரி வந்து டேரா போடலையில்ல? கெட்டதை செய்யச் சொல்லலையில்ல” என கோபப் பட, நெற்றியை தேய்த்தார் சிவ பாண்டி.
“ கல்யாணம் கட்டி இவரு கையில பிடிச்சு கொடுத்த அன்னைக்கே எங்க பெரியண்ணேன், அது தான் உன் குடும்பம். மூத்த மருமகளா போற, அம்புட்டு பேரையும் அரவனைச்சு போகனுமுண்டு சொல்லி அனுப்புனாரு. இன்னைக்கும் எனக்கு அந்த வார்த்தை தான்.” என உணர்ச்சி வசப்பட்டார் சந்திரா,
“ இன்னைக்கு வரைக்கும், பாண்டி குடும்பம் ஒத்துமையா இருக்கிறதுக்கு ஆத்தாளுக்கு அடுத்து உங்களுக்கு தான் பெரிய பங்கு மதினி. அசோதை மதினி கூட வார்த்தையை விட்டுடுவாங்க. நீங்க கட்டுகோப்பா கொண்டு போவீங்க” என துரை சொல்ல,
“ அசோதையுமே, தான் பெத்த பிள்ளைகளுக்காக தான் சண்டை கட்டும். நானோ, கௌசியோ, அசோதையோ ஏன் செல்வியும் கூட புகுந்த வீட்டை விட, பிறந்த வீடு உசத்திண்டு இருந்ததே இல்லையே. நம்ம கையை விட்டு போகவும், இந்தா மூத்த மருமக ஆரம்பிச்சிட்டா, இனி ஒன்னொன்னா கிளம்பும் ” என சந்திரா அங்கலாய்துக் கொண்டிருக்கும் போதே, செல்லபாண்டியும் வந்து சேர்ந்தான்.
மற்றவர்களை கிளம்பச் சொல்லி விட்டு, சிவபாண்டி, மனைவி, தம்பியை மட்டும் வைத்துக் கொண்டு, மூத்த மகனை ரவுண்டு கட்ட ஆரம்பித்தார்.
செல்லம் முதலில் எதிர் கருத்தை வைத்தவன், அவன் கண் முன் தூக்கிப் போட்ட ஆவணங்களைப் பார்த்து விக்கித்து நின்றான்..
அப்படியும் சுதாரித்து, “ வேணுமுண்டே உங்க கிட்ட யாரோ கதை கட்டி விட்டிருக்காங்கப்பா. இன்னைக்கு அரசியல்ல இதெல்லாம் சகஜம். ஹரிணி மாப்பிளை கிட்ட விவரம் கேட்டு தான், மனோகரு சிலதெல்லாம் செஞ்சான். அவரு தப்பா சொல்லிக் கொடுக்க மாட்டாரில்ல? “ என்றான்.
“ நேர்மையில்லாத விசயத்தை, யார் செஞ்சாலும் தப்பு தான் “ என கண்டித்துச் சொல்ல,
“ நான் பார்த்துக்குறேன்பா. இதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்லை.” என்று வாதாடினான்.
“ தப்பு பண்றது தப்பே இல்லையிண்டு வாதாடுறான் பாருடா. இவனுக்கு எங்கிருந்து புரிய வைக்க” என சிவபாண்டி மனம் நோக,
“ நிஜமா தான்பா சொல்றேன். இப்ப அரசியல்ல இதெல்லாம் சகஜம். வெளியே இருந்து நமக்கு பிரச்சனையே இல்லை. சின்ன, சின்னதா இப்படி வர்றது எல்லாம், தட்டி தூக்கிடலாம். வீட்டுக்குள்ள, நம்ம குடும்பத்து ஆளுங்களால தான் பிரச்சனை “ என்றவன், ஜெயா, வளையபட்டி சென்று வந்து சம்பந்தி, மாப்பிள்ளையை சந்தேகப் பட்டதைச் சொல்லி, முத்து, சிவப்பிரியா, மீனா போய் வந்தது என அத்தனையும் வரிசை படுத்தினான்.
“அப்ப , சொந்தக்காரவுக யாருமே உன் மகளை பார்க்க கூடாதுங்குறியா?’ என சிவபாண்டி கேட்க,
“அடிக்கடி போயி பார்க்க, காரையம்பட்டியிலையும், கருமாதூர்லையுமாப்பா பொண்ணை கொடுத்துருக்கோம். அவுங்க ஜமீன் குடும்பம், ராஜ பரம்பரைப்பா, பிரீயா இருக்காங்கலாண்டு கேட்டுட்டு தான் போகணும் ” என செல்லப்பாண்டி பவ்யமாக சொல்ல,
“சரி தான். பெத்த புள்ளையை பார்க்கிறதுக்கு கூடவா அப்பாயின்மென்ட் வாங்குவாங்க. நல்லா தான் சம்பந்தம் பண்ணியிருக்க” என சந்திரா நொடிக்க,
“அவைங்க தான் பொறாமை பிடிச்சு பேசுறாய்ங்க. நீ விவரம் தெரிஞ்சவ அப்படி பேசாதம்மா. உன் பேத்தி எப்படி உசந்த மாளிகையில் ராணி மாதிரி வாழுறா. அது பெருமை இல்லையா?” என அவன்கேட்க,
‘அந்த பெருமையே பேத்தியாளுக்கு பிரச்சனையா வந்திட கூடாது. சம்பந்தின்கண்டா சக மனுஷங்களா, பரஸ்பரம் மரியாதையோடு நடந்துக்கணும். இல்லையிண்டா அவுக செய்யிறதுக்கெல்லாம் முட்டு கொடுத்துக்கிட்டு மண்டை ஆட்டிகிட்டு தான் உட்கார்ந்து இருக்கனும். அது நம்ம பொண்ணுக்கு நல்லது இல்லை, அம்புட்டு தான் சொல்லுவேன்” என்றார் சிவபாண்டி.
“செல்லம், இதை விடு. அண்ணன் சொன்ன பஞ்சாயத்துக்கு வா. அவைங்க அப்படியெல்லாம் சுளுவா பஞ்சாயத்தை முடிகிற மாதிரி தெரியலை. முதல்ல ஆடி பதினெட்டில செல்வத்துக்கிட்ட சொன்னானுங்க, அப்பறம் ராஜதுரை கிட்ட போயிருக்கு, அதுக்கடுத்து அவன் சம்சாரம் வேலை செய்யிற ஆபீஸ் , போன மாசம் கருமாத்தூர், இப்ப ஆண்டிபட்டி அண்ணன் வரைக்கும் வந்துடுச்சு. பணத்தை வாங்கி இருந்தேண்டா திருப்பி குடுத்துடு” என்றார் துரை.
“சித்தப்பா, அந்தாள் கெஞ்சி கேட்டாண்டு மனோகர், இன்னொருத்தர் மூலம் பேசி ஏற்பாடு பண்ணான். இந்தாலு ஏதோ சர்டிவிகேட் கொடுக்கவும் அடுத்த ஆளுக்கு போயிடுச்சு. அவன் காசை வாங்கிட்டு தர மாட்டேன்கிறான். அதுக்கு அவன் என்ன பண்ணுவான், இல்லை நான் தான் என்ன பண்ணுவேன்” என சால்ஜாப்பு சொல்ல,
“உன் பேரை சொல்லி தானே வாங்கி இருக்கானுங்க” என்று கேட்டார் சிவபாண்டி.
“எல்லாம் துரை குடும்பமும், இந்தா கோதை மகன் , அந்த ஆதிபயலும் சேர்ந்து கிளப்பி விடுறது. ஹரிணியை குடுகுலையிண்டு வன்மம் வச்சு செய்யிறாங்க. இவனுங்களை தூண்டி விடுறதும் அவன் தான்” என பழியை தூக்கி ஆதி மேல் போட,
“வாய் புளிச்சத்தோ, மங்கா புளிச்சத்தோண்டு பழியை போடாதே. அப்படியேண்டாலும், நீ காசு வாங்காமல் அவனுங்க எப்படி கேட்பானுங்க.” என சிவபாண்டி பாயிண்டை பிடிக்க,
“சின்ன விஷத்தை ஊதி பெரிசாகுறானுங்க “ என்றான்.
“ உன் மச்சினன் விஷயம் ஒன்னும் சரியில்லை. நம்ம காசை கொடுத்தாவது பஞ்சாயத்தை முடிச்சு விடு” என சிவபாண்டி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, செல்லத்துக்கு இடை விடாமல் போன் வர,
“எடுத்து பேசு” என்றார்.
“ஹலோ” என்றவன், மறு பக்கம் சொன்ன செய்தியில், “ புத்தியை காட்டி புட்டானுங்கள்ல, நீ போனை வை. நான் வர்றேன்” என்றவன்,
“அப்பா, ஆதி பய தான் எல்லாம் செய்யிறாண்டு நான் சொன்னதுக்கு ருசு, கட்சி ஆபீசுல, ராஜதுரை சார்பா , நம்ம தொகுதியில போட்டி போட, நூறு பேருகும் மேல விருப்ப மனு குடுக்க வச்சிருக்கான். இப்ப தான் நம்ம ஆள் சொன்னான்” என, மற்ற விஷயங்களை புறம் தள்ளி, செல்லப்பாடி கிளம்பி விட,
“என்ன அண்ணேன் ?” என்றார் துரைபாண்டி.
“பங்காளி சண்டை, அரசியலையும் வரப் போகுது” என அவர் பெரு மூச்சு விட்டார். இந்த ரகசிய பேச்சை அவர்கள் பாண்டிக்குடும்பத்தில் பகிர வில்லை. சரக்கு மலிந்து சந்தைக்கு வரும் நாளுக்காக காத்திருந்தனர்.