Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,585
102.தேன் சிட்டுகள்
உதயனை, காயத்தோடும் கண்ணீரோடும் பார்க்கவும், ஹரிணிக்கு மனம் ஆறவில்லை.“முதல்ல எந்திரிங்க. இவ்வளவு காயமுண்டு யாருமே என்கிட்டச் சொல்லலை” என வருந்தியவள்,
“ உங்ககிட்ட ஒருவாரத்துக்கு பேசவே கூடாதுண்டு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்படி என்ன கோபம் உங்களுக்கு? “ என விளாசினாள்.
அமைதியாக நின்றவன், “ உன்கிட்ட நிறைய பேசனும்” என்றான்.
“ என்ன பேசப் போறீங்க. நான் பொறுப்பு இல்லாமல் நடந்துக்கிட்டேன். இந்த வீட்டில இதெல்லாம் பழக்கமே இல்லை, அது, இதுண்டு குத்தம் சொல்லுவீங்க, அது தானே? “ எரிச்சலாக கேட்க,
“ இல்லை வேற” என்றான்.
“ எதா இருந்தாலும் அப்புறம் பேசுங்க. எனக்கு மட்டுமில்ல உள்ள இருக்க பேபிக்கும் பசிக்குது” என அவள் குளியலறை பக்கம் ஓட, வெளியே சென்று சுவாதியை அழத்து, காலை உணவை கொடுத்து அனுப்பச் சொன்னான்.
“ இதோ வர்றேண்ணா” என அவளே ஓடினாள்.
சுவாதி, ரேவதி மற்றும் ராஜேஸ்வரியுமாக, காலை உணவை உதயன் அறைக்கு எடுத்து வர, அதற்குள் குளித்து வந்திருந்தவள், “ உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்றாள் உபசரணையாக.
“ இருக்கட்டும். இரண்டு பேரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. பேக்டரிக்கு அப்பா போறேன்னு சொன்னார். நீ உடம்பை அலட்டிக்காதே உதயா” என டிபனை எடுத்து தானே உதயனுக்கு ஊட்டி விட, உணர்ச்சி வசப்பட்டவனாக கண் கலங்கியபடியே சாப்பிட்டான். தங்கைகளும், “ தண்ணி தரவாண்ணா, ஜுஸ் தரவா” என கவனித்தனர்.
“ பாருங்க, எவ்வளவு பேருக்கு உங்களால கஷ்டம்” கிடைத்தது வாய்ப்பு என ஹரிணி, உதயனை வறுத்தெடுக்க தங்கைகள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
சுவாதி, “ அண்ணி, வாங்க நான் தலை சீவி விடுறேன்” என சீப்பை வாங்க,
“ நானே சொல்லனும்னு இருந்தேன். மீ டூ, கையெல்லாம் எரிச்சலா இருக்குப்பா. அத்தை பாரு, அவுங்க மகனுக்கு மட்டும் ஊட்டி விடுறாங்க” என்றும் குறைச் சொல்ல,
“ அச்சோ, அப்படி எல்லாம் இல்லைடா. எனக்கே இன்னைக்கு தான், என் மகனுக்கு ஊட்டுற பாக்கியம் கிடைச்சதுன்னு சந்தோஷத்தில இருந்தேனா, உன்னை கவனிக்கலை. வா ஊட்டிவிடுறேன்” என அவளுக்கும் ஊட்ட,
“ அது” என்றவள், “இன்னும் கொஞ்சம் சட்னியை நல்லா தொட்டு கொடுங்க. சாம்பாரா? அக்கா குருமா வைக்கிறேன்னு சொன்னாங்க. வைக்கலையா? “ வக்கனையாக பேச, மூவரும் அவளை அதிசயமாக பார்த்தனர்.
“ இப்படி தான் பேசிட்டே இருப்பியா? “ ராஜேஸ்வரி கேட்க, “ இது கம்மி” என்றான் உதயன்.
“ அப்புறம், இவரை மாதிரி உர்ருண்டா இருப்பாங்க? எவ்வளவு கோபமா இருந்தாலும், என்னால சாப்பிடாமலும் இருக்க முடியாது. பேசாமலும் இருக்க முடியாது” என ஹரிணி அறிவிக்க
“ நல்ல பொண்ணு” என மருமகளுக்கு சர்டிபிகேட் கொடுத்து, இருவருக்குமாக மாத்திரையும் கொடுத்து, சிறிது நேரம் பேசி இருந்து விட்டு, ராஜி கீழே சென்றார்.
உதயனின் தங்கைகளும் கிளம்ப போக, “ சுவாதி, என் போன் உடைஞ்சு போச்சு. நேத்து நான் போட்ட போஸ்ட்டுக்கு எவ்வளவு வ்யூஸ்னு பார்த்தியா? “ என்று கேட்க, உதயன் முறைத்தான்.
“ இல்லை அண்ணி. பார்த்துச் சொல்றேன்” என தங்கைகள் இருவரும் நழுவினர்.
“ என்னமோ, சொல்லனும்னு சொன்னீங்களே? “ ஹரிணி கேட்க,
“ அது” என உதயன் தயங்கினான். அதற்குள் ரேவதி திரும்பி வந்தவள், “ அண்ணியோட சித்தப்பாவும், சித்தியும் வந்திருக்காங்க” என்று கூற, உதயனுக்கு மனதில் கிலி பிடித்தது.
ஜெயாப்பாவா, இரு நான் வர்றேன். உதி நீங்க ரெஸ்ட் எடுங்க, இதோ வந்துடுறேன்” என அறைக்கு வெளியே செல்ல எத்தனிக்க, “ அவுங்களே வர்றாங்க” அறிவித்து விட்டு ரேவதி வெளியே சென்றாள்.
ஹரிணியோடு பேசிய பின் வந்தாலும் பரவாயில்லை. கோபித்து சென்று விடுவாளோ? என பயந்த உதயன்,
“ ஹனி, நான் கோவப்பட்டேன்னு என்னை விட்டுட்டு போயிடமாட்டியே” என அவளை வலுக்கட்டாயமாக அணைத்தான்.
“ போலாண்டு தான் இருந்தேன். நீங்க மன்னிப்பு கேட்டதால, மன்னிச்சு விடுறேன். பிழைச்சு போங்க” என கேலியாக சொல்ல, அதெல்லாம் அவன் மனதில் பதியவில்லை.
“ தாங்க்ஸ்டா, தாங்க்யூ வெரிமச். நீ இல்லாம என்னால சர்வே ஆகவே முடியாது. யாரு என்ன சொன்னாலும், என்னை விட்டுட்டு போயிடாத” கண்ணில் நீரோடு அவளை இறுக்கி அணைக்க,
“ அப்பா, மூச்சு முட்டுது. ரொம்ப உணர்ச்சி வசப் படாதீங்க உதி. பேசாம வாங்க”என அவனை கடிந்தபடி அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வர,
ராஜவேலுவே, ஜெயாவையும், பூமாவையும் மாடிக்கு அழைத்து வந்தார். பின்னோடு ராஜியும் அவசரமாக படி ஏறி இருந்தார்.
ஜெயா மந்திரியோடு வர, பூமா ஆண்கள் இருவரையும் முந்திக் கொண்டு ஹரிணியிடம் வந்தவள், “என்னடி உங்க ஜெயப்பா என்னென்னமோ சொல்லுது.” என அவள் கையை பிடித்து, உடலை வருடி மேலும், கீழும் பார்க்க,
“எனக்கு ஒன்னும் இல்லை சித்தி, உங்க மாப்பிள்ளைக்கு தான் லேசா காயம். என் மேல உள்ள கோபத்தில அப்படி பண்ணிட்டார்” அவள் உண்மை என நினைத்ததை சொல்ல, ஜெயாவின் முகம் இருண்டது. வாயை திறந்தால், எதுவும் வில்லங்கமாக கேட்டு விடுவோமோ என்றே கட்டுப் பாடாக இருந்தான்.
பூமாவுக்கு எதுவும் புரியவில்லை. அழகி அனுப்பிய வீடியோவில், ஹரிணி நெருப்பை சுற்றி வந்து கொண்டிருந்து ஓரிடத்தில் நிற்க, போன் கீழே இறக்கப்பட்டு, ” ஐயோ, ஐய்யயோ, ஹரிணி “ என்ற சத்தங்களோடு வானம் தெரிய இருண்டு காணொளியும் முடிந்து இருந்தது.
கருமாத்தூர் மாவளி திருவிழாவுக்கு சென்று வந்திருந்தவர்கள், அலுப்பில் படுத்து விட, பதினொன்றரை மணிக்கு மேல், அழகி தான் எடுத்த புகைபடங்களை ஹித்துவுக்கு அனுப்ப வந்த போது தான், ஹரிணி வீடியோவையும் பார்த்தது. அந்த நேரம், யாரையும் எழுப்ப வேண்டாம் என இளவட்டங்களுக்கான புலன குழுவில் அனுப்ப, பூபேஸ் காலையில் ஜெயாவிடம் காட்டினான். அழகியும் ஜெயாவுக்கு போனடிக்க அவன் கிளம்பி வந்திருந்தான்.
ஹரிணிக்கு ஏதோ என வந்தவர்கள், உதயன் காயப்பட்டு நிற்கவும் குழப்பமடைந்தனர்.
“ மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு, அண்ணி, என்ன இதல்லாம்” பூமா ராஜேஸ்வரியிடம் கேட்க,
“ ஒன்னுமில்லை, பதட்டப்படாதீங்க” என்றார் அவர்.
“ஜெயப்பா.” என ஹரிணியும், “ வாங்க மாமா” என உதயனும் வயவேற்க,
“ இதென்ன கை, கால்ல கட்டு. நீங்க உட்காருங்க” என ஜெயா பதற, “ நீ உள்ள உட்காருப்பா” என ராஜவேலு மகனை கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார்.
அவர்கள் முன் செல்ல, “ என்ன ஆத்தா” என ஜெயா பதட்டமாக ஹரிணியை கேட்க,
“ ஐயோ அப்பா அது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட், நீ பதறாதே” என்றாள்.
“ நேத்து ஏதோ வீடியோ போட்ட, பாதியில ஏதோ கருங்கோமுண்டு ஆகி, அப்படியே கட் ஆகிடுச்சுண்டு , அழகி கூப்புட்டு சொல்லுச்சு. அது தான் பதறிக்கிட்டு வந்தேன், இங்க அவரு காயமா இருக்காரு, என்ன ஆச்சு? “ என்றான் கவலையாக.
“ நான் சொல்றேன்” என முழுப்பியவள், தன் மேல் தான் தவறு என்ற நினைவில் அதை மறைக்க,
“ எதுக்கு மூஞ்சியை உம்முண்டு தூக்கி வச்சுக்கிட்டு இருக்க, எனக்கு ஒன்னும் இல்லை பா ” என சமாதானம் செய்தாள்.
“ அது தான் ஆத்தா, எனக்கும் வேணும். விளையாட்டுத்தனமா இருக்காதே. இப்போ நீ ஒத்த ஆளு இல்லை, இரட்டை உசுரு” என மகளை வாஞ்சையாக அணைக்க,
“சித்தி, ஜெயப்பா சிவாஜி டயலாக் எல்லாம் அடிக்குது. எம்புட்டு உருகுனாலும், அப்பா பாசத்தில, செல்வம் மாமாவை ஜெயிச்சுக்க முடியாதுபா ” என்றும் சேர்த்து சொல்ல,
“அட, போ கிறுக்கு கழுதை. உன் மாமனோட யார் போட்டி போட்டா? “ என்றான்.
“வீட்டுல சொல்லிட்டியா? அப்பத்தா, தாத்தாவெல்லாம் கவலை படுவாங்களே” ஹரிணி கவலைப்பட,
“ உறுதியா தெரியாம எதுவும் சொல்லக் கூடாதுண்டு சொல்ல. நீ போனை எடுக்கலையிண்டு கவலைப் பட்டேன், உனக்கு வேற வேலையில்லையிண்டு, அப்பத்தா என்னை வஞ்சுது “ என முறையிட,
“ விடுப்பா, உன் பாசம் அவுகளுக்கு புரியாது” என்றாள்.
“என்கிட்டையே, இங்க வந்து தான் சொல்லுச்சு. என்னடி ஆச்சு, உனக்கு என்னமோண்டு வந்தா, அவர் கட்டுப் போட்டு நிக்கிறாரு. உன் வேலையா?’ பூமா ரகசியமாக வினவ,
“ நீயே, என் மகளை கோர்த்து விடுவடி” என ஜெயா, மனைவியைத் திட்ட,
“ உன் மகளைப் பத்தி முழுசா தெரிஞ்சதால தான் கேட்குறேன்” இருவருமாக சண்டியிட, ஹரிணி திருட்டு முழி முழித்தாள்.
“வரண்டாலையே நிக்காட்டி என்ன, உள்ள வாங்க” என ராஜி உதயனின் அறைக்குள் அழைத்தார். அப்படியே பேச்சும் மாறியது.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, ராஜவேலு, மகனை உள்ளே அழைத்துச் சென்று முன்னறையில் உள்ள ஷோபாவில் அமர வைத்திருந்தார்.
“ அப்பா பயமா இருக்கு, ஹரிணியை என்கிட்ட இருந்து பிரிச்சிட மாட்டாங்கல்ல” ராஜவேலுவின் கையை பிடித்துக் கொண்டு உதயன் கேட்க,
“ உதயா, பீ ப்ரேவ். தைரியமா இரு. நீ பத்து வயசு பையன் இல்லை. சக்ஸஸ்புல் பிஸ்னஸ்மேன். உன்னை மீறி யாரும் உன் மனைவியை உன்கிட்ட இருந்து பிரிக்க முடியாது” சத்தம் குறைத்து ஆனால் அமர்த்தலாகவே சொல்ல, உதயனுக்கு பெரிய நம்பிக்கை வந்தது.
“இந்தா உளுந்தங் களியும் , அயிரமீனு குழம்பும் இருக்கு” என பூமா ஹரிணியிடம் நீட்ட,
“ஐ, அசோதை அப்பத்தா வச்சதா? நான் இப்ப தானே சாப்பிட்டேன். அத்தை ஊட்டி விட்டாங்க. உதியோட போட்டி போட்டு, நிறைய சாப்பிட்டேனே “ என வருந்த.
“ஹாட் பாக்ஸ்ல தானே இருக்கு. ஒரு மணி நேரம் கழிச்சு சாப்பிட்டுக்க” என அவளோடு அறைக்குள் வர, முன்னிருந்த சோபாவில் உதயன் அமர்ந்திருக்க, ராஜவேலு ஜெயாவை வரவேற்று அமர வைத்தார்.
ஹரிணியோடு, பூமா உள் அறைக்குச் செல்ல, ராஜேஸ்வரி, பேச்சை சமாளிக்க மகனருகிலேயே அமர்ந்தார்.
ஜெயாவை முந்திக் கொண்டு, மந்திரி சம்பந்தி, “ நேத்து, கருமாத்தூர்ல மாவளி திருவிழா நல்லா நடந்ததா? விட்டுப் போன பழக்கத்தை மறுபடி விருமனும், ஆதியும் நடத்தி காட்டியிருக்காங்க. பாராட்டுக்குரிய விசயம்” என விசாரிக்க,
“ ஆமாம், நீங்க வருவீங்கண்டு ரொம்ப எதிர்பார்த்தாங்க. பக்கத்தில வந்துட்டிங்கண்டும் சொன்னாங்க” என்றவன், உதயனை பார்த்து,
“ கை, காலில் என்ன காயம். எபபடி ஆச்சு. சொல்லவே இல்லை. இல்லையிண்டா அண்ணனும் பார்க்க வந்திருப்பாரு” என அனுசரனையாகவே கேட்டான்.
“ நேத்து நைட் தான், திடீர்னு விபத்து. அந்த நேரம் சொல்ல வேண்டாமேனு விட்டுட்டோம்” என ராஜி சப்பை கட்டு கட்ட,
“ தீக்காயமாட்டம் இருக்கே” குடைந்தான் ஜெயா. ,
“ நேத்து, அங்க சொக்கபனை கொளுத்துனீங்கன்னு, இங்கையும் கொளுத்தனும், கொண்டாடனுமுன்னு, எங்களுக்கும் தெரியாமல் உங்க மகள் ஹரிணி ஏற்பாடு பண்ணிட்டா. அதில வந்த வினை. நாங்க வந்த நேரம், ஹரிணி முந்தில நெருப்பு பட்டுடுச்சு, அதை அணைக்க போறோம்னு, எங்க பையன், கையையும் காலையும் சுட்டுக்கிட்டான்” என ராஜி பாதி பொய்யும், மெய்யுமாக இயல்பாகச் சொல்ல,
“ சேலையில பட்டுச்சா” என அதிர்ந்தவன், “ஹரிணி “ என சத்தமாக அழைக்க அவள் முன்னறைக்கு வந்தாள்.
உதயன், ஹரிணியை காப்பாற்றினான் என்ற பிம்பத்தை ராஜி கட்டமைக்க, ஜெயாவின் கவனம், அதையும் தாண்டி, ஹரிணியின் சேலையில் நெருப்பு பற்றியது என்பதில் நிலைத்தது.
“ என்ன பாப்பா, சேலையில நெருப்பு பட்டுச்சா? உடம்புல எதுவும் காயமா? பூமா உள்ள கூட்டி போயி பாரு. பயந்துகிட்டு சொல்லாம கூட இருக்கும். சூதானமா இருக்க வேண்டாமா ஆத்தா? “ என அவளை இரு புறமும் திருப்பி பார்க்க,
“என்னாது நெருப்பா?” என நெஞ்சில் கை வைத்திருந்த பூமாவும், “ஏண்டி சூதானமா இருக்க வேணாமா. எல்லாத்திலையும் போட்டி” என திட்டினாள்.
“ சித்தி” என சலுகை கொஞ்சியவள், “ அப்பத்தாட்ட போட்டு விட்டுறாத சித்தி. செமையா டோஸ் விழும். அட்வைசா பண்ணி காதை அறுப்பாங்க” எனவும்,
“ இதையும் சேர்த்து சொல்றேன்” பூமா மிரட்டினாள்.
“ இதெல்லாம் ஒன்னும் சரியா வராது பாப்பா. உனக்கு அப்பத்தா தான் சரி. கிளம்பு மானூத்து போகலாம். நான் ஹரிணியை கூட்டிட்டு போறேன் சார்” ஜெயா வேகமாகச் சொல்ல, பூமாவுக்கு பயம் வந்தது.
“ இந்தா, நல்லாத் தான், முறையா கூப்பிடுற. நாள் நட்சத்திரம் பார்த்து, வளைகாப்பு பண்ணி தான் கூட்டிட்டு போகனும். உன் நோக்கத்துக்கு கூட்டிட்டு போக அவ உன் மக மட்டுமில்ல அவுக மருமா” என்று சொல்ல, ஜெயா, மனைவியை முறைத்தான்.
“ ஆமாண்ணா, பிறக்கப் போற குழந்தை நல்லா ஆரோக்கியமா, எந்த குறையும் இல்லாமல் பிறக்கனும். எல்லாம் முறையோட செய்வோம். என் மருமகளை, கண்ணுக்குள்ள வச்சு நான் பார்த்துக்கிறேன்.” என ராஜேஸ்வரி சொல்ல, ஜெயாவுக்கு மனமே இல்லை.
“ சின்னதிலிருந்தே ஹரிணிண்டா என் புருஷனுக்கு கொள்ளை பிரியம். வகைக்கு ஒன்னா, கருவேப்பிலை கொத்தாட்டம், ஒத்தை பொம்பளை புள்ளையை வச்சிருக்கமா? அது தான் அப்படிச் சொல்றாரு. நீங்க ஒன்னும் தப்பா எடுத்தஉக்காதீங்க” என பூமா சப்பை கட்டு கட்ட,
“ அதே தான். ஜெயாப்பா நோண்ட் ஒர்ரி. நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள் ஹரிணி.
வேலையாள், காபி பலகாரம் என்று கொண்டு வந்து வைக்க, ஜெயா வேண்டாம் என மறுத்தான்.
“ எடுத்துக்குங்க சம்பந்தி” என மந்திரி உபசரிக்க,
“ எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாதுங்க. உங்க மகனுக்கு எங்க பொண்ணை விரும்பி கேட்கிறீங்க, ஏற்கனவே இரண்டு, மூணு சம்பந்தம் தட்டிப் போச்சு, அப்பாரு கொடுத்த வாக்கை நிறைவேத்தனமுண்டு தான், எங்க பாப்பாவை உங்க வீட்டில கட்டிக் கொடுத்தோம். மத்தபடி, நீங்க மந்திரி, உங்களுது ஜமீன் குடும்பமுண்டு வரலை. கல்யாணத்துக்கு அப்புறம் தான், இவரு உங்க மூத்த சம்சாரம் மகண்டே தெரியும். “ என ஜெயா குறைப் பட,
“ அதனால என்ன பிரச்சனை? மூத்தகுடிக்கு பிறந்தாலும், அவன் என் மகன் தான். ஜமீன் வாரிசு“ என அழுத்திச் சொன்னார் ராஜேஸ்வரி.
“ சந்தோஷம்மா, நாங்க சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மாண்டே வித்தியாசம் பார்க்க மாட்டோம். நீங்க சொல்றது எனக்கு புரியிது” என ஜெயா சொல்லவும்
“ அவர் சொல்ல வர்றதை சொல்லட்டும், நீ குறுக்க பேசாத ராஜி” என்றார் மந்திரி. ராஜிக்கு உதயாவின் முகத்தை பார்க்க தவிப்பாக இருந்தது. ஏனெனில் ஜெயபாண்டி வந்திலிருந்து, சம்பந்தி என்றோ, மருமகன் என்றோ முறை சொல்லி கூப்பிடவில்லை.
“ மூத்த தாரம், இளைய தாரமுண்டு பிரச்சனை இல்லைங்க, மூத்ததாரம் யாருங்கிறது தான் பிரச்சினை. நேத்தும் சரி, ஆடி வெள்ளி உச்சி கால பூசை அன்னைக்கும், புத்தி தடுமாறின ஒருத்தர் உங்களையும், உங்க மகனையும் தேடி மூணுசாமி கோயிலுக்கு, பாண்டிகுடும்பத்தில சம்மந்தம் பண்ணாவுகலாண்டு குறிப்பா விசாரிச்சிட்டு வந்தாரு” எனவும், அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ அவரு யாருண்டு நேத்து தான் தெரிஞ்சது. சொன்னது என் மாமனாரு. வந்தது உங்க மாமனாராம். பூசலம்பட்டி மாயக் குரும்பன். சித்த சுவாதீனம் இல்லாமல் உத்தப்பனூர் ஆசிரமத்தில தங்க வச்சிருக்கீங்கண்டு சொன்னாக” என நிறுத்த,
“ ஆமாம் உண்மை தான். அதை நான் ஒருநாளும் மறைச்சது இல்லையே. ஏன் உங்க மச்சான் விருமனுக்கு எல்லாம் தெரியுமே. பொண்ணை கட்டிக் கொடுக்கிறதுன்னா, நாலு இடத்தில விசாரிக்காமலா இருந்திருப்பீங்க” அமர்த்தலாகவே பதில் கேள்வி கேட்டார் ராஜவேலு.
‘மந்திரி மகண்டு செல்லவும், எங்கண்ணேன் தலைகீழா ஆடுச்சே’ என மனதில் நினைத்தவன், “ உங்க மேல உள்ள நம்பிக்கையில விசாரிக்கலைங்க” என்றான் ஜெயா.
“ ஜெயாப்பா, இப்ப எதுக்கு இந்த பேச்சு ” என ஹரிணியே கேட்க,
“ நல்லா கேளு, உங்கப்பாவுக்கு மண்டைக்குள்ள சந்தேகம் உதிச்சிடுச்சுண்டா, விசயம் முழுசா தெரியாற வரைக்கும் ஓயாது.” என பூமா நொடிக்க,
“ ஏத்தா, பொட்டப்புள்ளையை கட்டிக் கொடுத்துட்டா, அப்புறம் எதுவும் கேட்க கூடாதுங்கிறியா? ஒரு சம்பந்தம் செய்யனுமுண்டா நாலு தலைமுறையை ஆராய்ஞ்சு தான் கொடுப்போம். உன் மாப்பிள்ளைக்கு அப்பா வழி ஜமீன் குடும்பம், முத்துவுக்கு சம்பந்தம் வரும்போதே விசாரிச்சிட்டோம். அம்மா இவுகண்டு நினைச்சோம், அவுக குடும்பத்தையும் தெரியும். இப்ப பூசலம்பட்டிகரவுகண்டா, அவுக வரலாறு ஒன்னும் சரியில்லையே. நேத்து என் காதுபட அப்படி பேசுனாய்ங்க, நெருப்பில்லாமல் புகையாதும்பாங்க. அங்க தீயே பிடிச்சிருக்கு. இங்கையும் அதே மாதிரி சொல்றீங்க. பயந்து வருதே” என ஜெயா பேசப் பேச, உதயன் சுயகட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தான்.
ராஜவேலு மகன் கையை சாதாரணம் போல் அழுத்திக் கொள்ள, ராஜேஸ்வரி அவன் தோளைத் தொட்டபடி அமர்ந்திருந்தார்.
விசயத்தை எல்லை மீற விடக் கூடாது என ராஜவேலு அமைதியாகவே பேசினாரஅ. “ உதயனோட அம்மா, அமுதா சாத்வீகமான குணம் உள்ளவ. அவளோட தெய்வீகமான அழகில ஈர்ககப்பட்டு தான், நானே அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பத்து வருஷம் நல்லா தான் குடும்பம் நடத்தினோம். விதி அவளை எங்ககிட்ட இருந்து பிரிச்சிடுச்சு. கடைசி ஆடி, உச்சி பூசை நேரம் புளஅளைத்தாச்சியா இருந்த என் மனைவியை காவு வாங்கிடுச்சு” எனும் போது, அவரையும் மீறி குரல் பிசிறடிக்க உதயனின் கண்கள் கண்ணீர்.
“ கேட்கவே வருத்தமா இருக்குங்க. இப்பிடி நிலமை யாருக்கும் வரக் கூடாதுண்டு கழுவனை வேண்டிக்குவோம்” ஜெயா உணர்ந்துச் சொல்ல,
பூமாவோடு மறறொரு ஹோபாவில் அமர்ந்திருந்த ஹரிணிக்கும் அழுகை வந்தது.
ராஜி, கணவரின் தோளையும் தொட, குறிப்பால் உணர்ந்தவர்,
சட்டென சமாளித்து, “ அமுதா போன துக்கத்தில, அப்பாவுக்கு புத்தி பேதலிச்சிடுச்சு. இன்னைக்கு வரைக்கும் அவர் பேரைச் சொல்லி, அவருக்காக ஒரு அஸ்ரமத்துக்கே பொருளுதவி செஞ்சிட்டு தான் இருக்கோம்” என பேச்சை முடிக்கப் பார்த்தார்.
“ ஆமாப்பா, உதி அம்மா இறந்தததெல்லாம் முழுசா கேட்டா, நீயே கண்ணீர் விட்டுடுவ. வேண்டாம்பா, அந்த பேச்சு மறுபடி வேண்டாம், அவர் மனசு கஷ்டப்படும்” என ஹரிணிச் சொல்ல, மாமனார், மாமியார் முதல் கணவன் வரை மூவருமே உருகிப் போனார்கள்.
உதயன் கண்கள் அவனறியாமல் கண்ணீர் சிந்த, ராஜி தன் முந்தியில் மகன் கண்ணீரை துடைத்தார். ராஜவேலுவுக்கு தொண்டை அடைத்தது.
“ உனக்கு எல்லாம் ஏற்கனவே தெரியுமா ஆத்தா? “ ஜெயாபாண்டி சந்தேகமாக கேட்க,
“ ஆமாம்பா, மானூத்தில இருக்கும் போதே சொல்லிட்டார்” எனறாள்.
“ நீ ஏத்துக்கிட்டேண்டா சரிதான் ஆத்தா.” என்றவன், “ ஆனாலும் மாடு முட்டினதுக்கு, பெரிசு மாட்டு கொட்டத்தையெல்லாம் எரிச்சது அதிகப்படி. அவரால அவரு சம்சாரமுமில்ல இறந்து போயிருக்காங்க” என ஜெயா சொல்ல,
“ அம்மாச்சி” என உதயன் முகத்தில் அடித்துக் கொண்டு அழ, ஜெயாவே ஸ்தம்பித்து போனான்.
“ நான் தான், நான் தான் அம்மாச்சியை கொன்னுட்டேன். ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த பாவம் போகாது. அந்த நினைப்பே என்னை அரிச்சிடும்” என உதயன் கதற, வீட்டினர் அனைவருக்குமே அதிர்ச்சி எனில், ஹரிணிக்கும் அழுகை பொங்கியது.
ஜெயாவின் எதிர்வினை எப்படி இருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.