Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,585
101.தேன் சிட்டுகள்
ராஜவேலு குமாரராஜா, முதல் நாள் இரவில் மகனை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார்.
“ அந்த நாளை நினைச்சா, எனக்கே ஒருவாரத்துக்கு அன்ன ஆகாரம் உள்ளே இறங்காது. கண் முன்னாடி பார்த்தவன், அவன் பாதிப்பை கேட்கவா வேணும். நானுமே அம்மு இறந்த அதிர்ச்சியில அவனை கவனிக்காமல் விட்டுட்டேன்” என வருடங்களாக புலம்பும், அதே புலம்பலை புலம்ப,
“ நீங்க வேணும்னா செஞ்சிங்க. தாயில்லா பிள்ளைக்கு அவுங்க அம்மாச்சி பாசமாவது கிடைக்கட்டுமுன்னு விட்டு வச்சிங்க.” என சமாதானம் செய்தார் ராஜி.
“ அது தான் நான் செஞ்ச தப்பு. ஹாஸ்டலுக்கு போனா, தனிச்சு போயிடுவான், இங்கையும் பார்த்துக்க ஆளு இல்லை னு அங்கேயே விட்டேன். ஒரு வருசத்தில் பிரச்சனை பெரிசாகவும், அங்க வச்சிருக்க முடியாத சூழல்ல கூட்டிட்டு வந்தேன்.” என நினைவு கூற,
“ அந்த அப்பா ஆரம்பத்திலேயே, உதயாவை பத்தின விசயத்தை உங்க கவனத்துக்கு கொண்டு வந்திருக்கனும்.” ராஜி சொல்ல,
“ பேரனையும் பிரிஞ்சிடுவோமுன்னு பயந்துட்டாங்க. அதுக்கு அவுங்க கொடுத்த விலை ஜாஸ்தி. “ எனறார்.
“ விடுங்கங்க, அதையே நினைச்சு, உங்க மனசை அலட்டிக்காதீங்க.” என தேற்ற,
“ எப்படி மா, எல்லாம் சரியாயிடுச்சுங்கிற நம்பிக்கையில தான், அவன் ஆசைப்பட்ட பொண்ணை, வயசு வித்தியாசம் இருந்தாலும் பரவாயில்லைனு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கோம். நீ சொல்ற மாதிரி, அதுக்கு தெரிஞ்சா சங்கடம் தானே” என்றார்.
“ வயசெல்லாம் ஒரு பிரச்சனை இல்லைங்க. நமக்குள்ள இல்லையா என்ன? “ எனவும்,
“ சரியான சமயத்தில குத்திக் காட்டுற. நான் மாட்டேன்னு தான் சொன்னேன். என்னை மாதிரி சிங்கிளா இருக்க பொண்ணு, குழந்தையோட இருந்தா கூட பரவாயில்லைனு தான் சொன்னேன். முதல் கல்யாணம் தான் உன் இஷ்டத்துக்கு செஞ்சிகிட்ட இப்ப சொல்றதை கேளுனு கட்டாயப் படுத்திட்டாங்க“ இருபத்தி சொச்சம் வருடங்களுக்கு முன் நடந்ததுக்கு அவர் விளக்கம் கூற, கணவனை முறைத்தவர்,
“ நான் அப்படிச் சொன்னேனா? நான் சம்மதிச்சு, மனசார விரும்பி தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த புரிதல், ஹரிணிக்கு, உதயா மேல வந்திடுச்சுனா போதும், எல்லாம் சரியாகிடும்னு சொல்ல வந்தேன்” என்றார் ராஜி.
“ எதில கொடுத்து வச்சிருக்கேனோ இல்லையோ, பொண்டாட்டி விசயத்தில லக்கி தான். இரண்டு பேருமே அருமையான பொண்ணுங்களா அமைச்சீங்க” என பாராட்ட,
“ போகுது போங்க, இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே” வழக்கமான மனைவியாக ராஜி குறைச் சொல்ல
“ ஏன், நான் எல்லாருகிட்டையும் பெருமையா தான் சொல்லுவேன்” என்றவர், “ வயசு குறைச்சு இருந்தாலும் இந்த வீட்டை, குடும்பத்தை, தொழில் அரசியல் வட்டம்னு எல்லாரையும் சமாளிக்கிற திறமை உன்கிட்ட இருக்கு. அதே மாதிரி மருமகளும் வந்திடிச்சின்னா பரவாயில்ல. “ என்றார்.
“ ஹரிணி பெரிய குடும்பத்திலிருந்து வந்த பொண்ணு. மூணு தலைமுறை பெண்களை பார்த்து வளர்ந்தவ, அதுனால குடும்பத்தையும் மற்ற மனுசங்களையும் அரவணைச்சு போற திறமை இருக்கு. வயசும், அனுபவமும் கூடக் கூட பக்குவம் வந்துடும். உதயனை பத்தின கடந்தகால விசயம் தெரியும் போது, அதை கடந்து வரனும். மஞ்சமலையான் அருளால, மாசாமா இருக்கும் போது, எதுவுமே தெரிய வேணாம். புள்ளையை நல்லபடியா பெத்து எடுக்கட்டும், அப்புறம் அதுவே இவங்களுக்குள்ள பாண்டிங்க் கொண்டு வந்துடும். உதயனும் நல்லா இருப்பான்” என நம்பிக்கை தெரிவிக்க,
“ உன் வாக்கு பலிக்கட்டும் மா. காலையில வெள்ளன போயி, மஞ்சமலையானை கும்பிட்டு வந்துடுவோம். அவன் கை காட்டின பொண்ணு தானே. அவனே அவுங்க வாழ்க்கையை பார்த்துக்குவான்” என்றே அதிகாலையில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வந்திருந்தனர்.
இன்னாருக்கு இன்னாரென எழுதி வைக்கும் தெய்வம், அவரவர், நல்வினை, தீவினைப் பயனை கணக்கில் எடுத்துக் கொண்டே ஜோடியையும் சேர்க்கும். உதயன், ஹரிணி ஜோடியை சேர்த்து வைத்த இறைவன், அவர்கள் வாழ்க்கையில் என்னனென்ன உரைக்கல் வைத்திருக்கிறானோ?
ஓட்டப்பம் வீட்டைச் சுடும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல், அவரவர் விதி பாடம் புகட்டியே செல்லும். உதயனின் கடந்த கால செயல்கள் மட்டுமின்றி, ஹரிணியை அடைய அவன் மேற்கொண்ட வழிமுறைகள் பிழையாக இருந்தால், அதற்கான பலனை, ஆதி, ஹரிணி பிரிந்த ஜோடிகள் அனுபவித்த துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும். அது அவரவர் நேர்மையில் இருக்கிறது. உதயன், தன்னைப் பற்றிய உண்மையை தானாகவே சொல்வானா?
இதோ தங்கள் அறைக்குள் சென்ற போது, ஹரிணி நல்ல உறக்கத்தில் இருந்தாள். எப்போதும் அவன் தான் எழுப்பி விடுவான். அதுவும் பத்து முறை அழைத்த பின்பே, " ம்" என்றாவது கேட்பாள். சொல்லப் போனால், பிறந்த வீட்டில் இருந்ததைவிட, கணவனுக்கு செல்லமான பொண்டாட்டியாகத் தான் இருந்தாள்.
இன்று வழக்கத்தை விட, சற்று தாமதமாகி இருந்தது. "ஹனிமா" என அவன் வெளியே எழும்பாத குரலில் அழைக்க, பழக்க தோஷத்தில், " ம், இன்னும் கொஞ்ச நேரம் உதி, எழுப்பாதீங்க" என சுருண்டுக் கொள்ள, அவளை எழுப்பாமல், அருகிலிருந்த ஷோபாவில் அமர்ந்து அவளையே பார்த்த வண்ணமிருந்தான். மனதில் அவளை முதல் முதலில் பார்த்த தருணம் நினைவில் வந்தது.
கனமாய் கரையில், அமுதா நினைவாக சுமை தாங்கி கல்லும், நடுக் கல்லும் நட்டு வைத்திருக்க, அம்மாவின் நினைவு வரும் பொழுதெல்லாம், அங்கு வந்து அமர்ந்துக் கொள்வான்.
ஒரு முறை அவன் வரும் போது, அருகிருந்த பவள மல்லி மரத்தடியில் கொட்டிக் கிடந்த பூக்களை, ஒரு சிறுமி விளையாட்டாக பொருக்கி எடுத்து வந்து, நடுக்கல்லை சுற்றி வைத்தது.
“ ஏய், அது சாமி இல்லை புள்ளை, நடுக்கல்லு, அதுக்கு போய் பூ வைக்கிறவ” என அவன் அண்ணன் திட்ட,
“ பதவாயில்ல, இதுவும் சாமி தான் “ என மழலையில் மொழிந்து, பூக்களை, சின்ன கவுனில் சேகரித்து கொண்டு வந்து கொட்டியது.
“ ஹரிணி, சூதானமா பார்த்து இறங்கனும். இல்லையிண்டா சறுக்கிடும்” என ஒரு பெண்மணி எச்சரிக்க,
“ சரி அத்தை” என கத்தியபடி பூக்களை சேகரித்தது.
புதிதாக மணமாகியிருந்த மாமன், அத்தையோடு பிள்ளைகள் இருவரும் துவைத்து, குளித்து வர என கன்மாய் கரைக்கு வந்திருந்தனர். புதுமணமக்களுக்கே உள்ள அசட்டுதனத்தோடு, பார்வையால் மனைவியை தொடர்ந்தவன், அவள் முறைக்க, சிணுங்க என்று இருந்ததில், தங்கை பிள்ளைகளையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டான்.
அண்ணனும், தங்கையும் அத்தி பூத்தார் போல், மாமன் திருமணத்துக்காக அதிசயமாக அம்மாச்சி வீட்டுக்கு வந்திருந்தனர். இல்லையேல் பாண்டிகளின் கோட்டையான மானூத்தை தாண்ட மாட்டார்கள்.
அண்ணனும், தங்கையும் அவ்வப்போது சண்டை கட்டிய போது, “ ஏலேய், மானூத்து மைனரு” “ பாண்டி குடும்ப மான் குட்டி” என கேலியாக மாமன் பேசியதில், அவர்கள் ஊர் அதுவாக இருக்கும் என புரிந்துக் கொண்டான்.
மான்குட்டி என அழைக்கப்பட்ட பெண் குழந்தை, நேர்த்தியாக பூவை அடுக்க, அண்ணன் காரன் அதை கலைக்க, இரண்டும் சண்டை சச்ரவோடு விளையாடின.
“ போதா அண்ணா” என சிறுமி முகம் சிணுங்க, அப்போதே உதயனுக்கு அந்த அண்ணன்காரனை நாலு அடி போட வேண்டும் எனத் தோன்றியது.
“ மாமா, எனக்கு நீச்சல் பழக்கி விடு மாமா” என அந்த சிறுவன் கேட்க,
“ஏலேய், உங்க ஊரு கணக்கா கன்மாய் காஞ்சு போயி கிடக்கக்குமுண்டு நினைச்சியா, தண்ணி இரண்டு ஆள் மட்டம் இருக்குமடா” எனவும்,
“ ஏன் உனக்கே பயமாக்கும்? “ புது மனைவி வம்பிழுக்க,
“ யாருகிட்ட, நூறு வரைக்கும் மூச்சை பிடிச்சு தம் கட்டி தண்ணிக்குள்ள இருப்பேன். உள் நீச்சல், எதிர்நீச்சல் எல்லாம் போடேவேனாக்கும்” என மனைவியிடம் சவால் விட்டு, தங்கை மகனுக்கு நீச்சல் பழக்க
“ அங்குட்டு வா. ஆழம் கம்மி” என மற்றொரு இடத்துக்கு அழைத்து சென்றான்.
“ ஏ, புள்ளை ஹரிணியை பார்த்துக்க” எனவும்,
“ எங்களுக்கு தெரியும் நீ போ” என வக்கனை பேசினாள், புதிய மணப்பெண். ஒரு மூட்டை துணியை, கணவனும், மனைவியுமாக ஏற்கனவே துவைத்து முடித்திருந்தனர். இது அடுத்த செட்டு. வீடு முழுதும் ஆட்கள் இருக்க, சமைக்க சங்கடப்பட்டுக் கொண்டு, கணவனோடு இந்த பக்கம் கம்பி நீட்டியிருந்தாள் அந்த பெண்.
“ இந்தாடி உன் பொம்மை” என அண்ணன்காரன் ஒரு பொம்மையை விட்டு எறிந்து விட்டு ஓட, அது படித்துறை இல்லாத தண்ணீரில் விழுந்தது.
“ அத்தை, அத்தை” என ஹரிணி குரல் கொடுக்க, துணியை அடித்து துவைத்துக் கொண்டிருந்த பெண்ணின் காதில் விழவில்லை.
தானே எடுப்பதற்காக மெல்ல படியில் இறங்க, “ ஏய் பாப்பா, எங்க போற” என வந்த உதயன் அவளை தடுத்தான்.
“ என் பொம்மை, அங்க விழுந்திடிச்சு” என காட்ட,
“ இரு. நான் எடுத்து தர்றேன்” என பெரிய ஹரோ கணக்காக, செங்குத்தான பாதையில் இறங்கி, எடுத்துக் கொடுக்க, “ தாங்யூ” மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டது. அம்மாவின் நடுக்கல்லுக்கு பூ வைத்த சிறுமிக்கு பலூன் பொம்மையை எடுத்துக் கொடுத்ததில் அவனுக்கும் மகிழ்ச்சி.
ஹரிணியை பார்த்துக் கொண்டே, உதயன் மேலே ஏற முயல, மண் சறுக்கி கன்மாயில் விழுந்தான்.
“ டேய், டேய் அண்ணா, மாமா, அத்தை” என கத்திக் கொண்டே சிறுமி கரையில் ஓட, அதன் கொலுசு சத்தம் கேட்ட, மாமன் மனைவி எட்டிப் பார்த்தாள்.
“ அத்தை, அண்ணா, அண்ணா” என உதயனை கைக்காட்ட, அவர்களை தாண்டி மாமனும், மருமகனுமாக நீச்சல் பழகிக் கொண்டிருந்த இடத்துக்கு உதயன் அடித்துச் செல்லப்பட்டான். சட்டென சுதாரித்தவன், மருமகனை கரையில் நிற்க வைத்து விட்டு, நீச்சலடித்து சென்று தலைமுடியை பிடித்து தூக்கி, அவன் மனைவி துணி துவைத்த கரைக்கு அழைத்து வந்தான்.
“ யாரு பெத்த புள்ளையோ, தண்ணீ குடிச்சிடுச்சா? “ எனப் பதற, மாமன் உதயனுக்கு, வயிற்றை அமுக்கி, மூச்சு காற்றுக் கொடுத்து முதலுதவி செய்ய, அன்று உதயன் பிழைத்தான்.
ஹரிண,” மாமா, இந்தா” என துண்டை கொடுத்து, உதயனுக்கு துவட்டி விடச் சொல்ல, அவன் கண் விழித்த போது அது தான் முதலில் பட்டது. அன்று முதல் அவள் அவனுக்கு குட்டி தேவதையாகிப் போனாள்.
கூட்டம் கூடி விட,
“ அட நம்ம குரும்பன் பேரனப்பா. தாயில்லா புள்ளை. அவுக அம்மாளை மாடு முட்டுச்சா என்ன? சுமைக் கல்லும், நடுக்கல்லும் அதுக்கு தானே நட்டு வச்சாக. தெய்வமா நிண்டு மகனை காப்பாத்திடுச்சசு” என ஒருவர் சொல்ல,
“ அந்த புள்ளை ஓடுன சலங்கை சத்தம் கேட்டு தான், நான் எனன்ண்டு பார்த்தேன்” என வளர்மதியும் கதைச் சொல்ல
விசயம் கேள்விப் பட்ட குரும்பன், ஓடி வந்து மனோகருக்கு நன்றி சொல்ல, உதயனுக்கு அழியாத சித்திரமாக மனதில் பதிந்தது.
குரும்பன், மனோகர், வளர், பிள்ளைகளோடு விருந்துக்கு வரச் சொல்ல, ஹரிணி மட்டுமே அவர்களோடு வந்தாள்.
“ ஆத்தி, இந்த புள்ளை தான், என் பேரனை காப்பாத்துச்சா” என குருவம்மாள் திருஷ்டி கழித்து கொஞ்சி, “ எப்படியோ, இவன் ஆத்தா தான், உங்க புள்ளை வடிவுல வந்து மகனை காப்பாத்தி இருக்கா” என மீண்டும், மீண்டும் சொல்ல, பத்து வயது பாலகனான உதயனுக்கு பசுமரத்து ஆணி போல் பதிந்தது.
“ இது உம்ம மகளா” குரும்பன் கேட்க, “ ஆத்தி எங்களுக்கு இப்ப தான் கல்யாணம் ஆனது. இது தங்கச்சி பிள்ளைங்க, மானூத்து பாண்டி குடும்பம் கேள்வி பட்டிருக்கீகளா? பழைய எம் எல் ஏ, கருத்தபாண்டி குடும்பம்” என மனோகர் விளக்க,
“அறிமுகம் இல்லை, கேள்வி பட்டு இருக்கேன் ” என்றார்.
முன்னதாக அமுதா இறந்த பின், உதயனுக்கும், அவன் அம்மாச்சி, தாத்தாவுக்குமே ஆறுதல் தேவைப்பட, கொடைக்கானலில் கான்வெண்ட் பள்ளியில் படித்தவனை பாதியில் கூட்டி வந்து, டொனேஷன் கொட்டிக் கொடுத்து, செக்கானத்தில் புதிதாக திறந்து இருந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தனர்.
பள்ளி பேருந்தில் சென்று வர ஏற்பாடு செய்திருக்க, பாதி நாள் தலைவலி வயிற்று வலி என லீவு போடுவான். பள்ளி செல்லும் நேரம் தாண்டியவுடன், அம்மாவை முட்டிய மாடை தேடி அலைவான்.
அவன் கோபமெல்லாம், அம்மாவை முட்டிய காளை மாடு மட்டுமின்றி அது வர்க்கத்து மீதே விழ, கண்ணில் கண்ட மாடுகளை எல்லாம், பிறர் அறியா வண்ணம், வாலை பிடித்து முறுக்குவது, கல்லை எடுத்து எரிவது. பிரம்பால் ஓங்கி அடிப்பது என துன்புறுத்தினான்.
பல நேரங்களில் மாடு மிரண்டு, தற்காப்புக்காக அவனை முட்டவும் வரும், லாவகமாக ஜல்லிக் கட்டு வீரன் போல் உருண்டு, பிறண்டு தற்காத்துக் கொள்வான்.
மாடை துன்புருத்துவதை யார் பார்தாலுமே திட்டுவார்கள், கண்டிப்பார்கள்.
ஒரு முறை அவன் அம்மாச்சி குருவம்மாள் பார்த்து விட, “அய்யோ ராசா, அதுக்கிட்ட வம்புக்கு போகாத. உன் ஆத்தாளை மாதிரி உன்னையும் முடட்டுச்சிண்டா, நான் என்ன பண்ணுவேன், யாருக்குண்டு பதில் சொல்லுவேன்” என ஒப்பாரி வைக்க,
“ என்னை முட்டிடுமோ, கொன்றுவேன். என்னைக்கா இருந்தாலும், அதுக்கு என் கையால தான் சாவு” என அவன் நரம்பு புடைக்க கத்தினான்.
“ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது சாமி. அது வாயில்லா ஜீவன், அஞ்சறிவு படைச்சது. அதுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசமே அது தான் “ என குருவம்மாள் பண்பாக எடுத்துக் கூற,
“ அதெல்லாம் எனக்குத் தெரியாது. என அம்மாவை என்கிட்ட இருந்து பிரிச்ச மாடு. அது உசுரோடவே இருக்க கூடாது” என்றான்.
“ அது இந்த மாடு இல்ல சாமி. அதை கிடைக்கு அனுப்பியாச்சு, தஞ்சாவூர் ஜில்லாவுக்கு போயிடுச்சு. ” என்றார்.
“ அதெல்லாம் இல்லை, எல்லா மாடும் ஒன்னு தான். என் அம்மாவை கொன்ன மாடை, நான் கொல்லாமல் விடமாட்டேன்” உதயன் ஆக்ரோசமாக கத்த, அவனை அமைதி படுத்துவதற்காக குருவம்மாள் ஓங்கி அறைந்து விட்டார். அதில் அதிர்ந்தவன்,
“ என்னை அடிச்சிட்டேயில்ல, போ, நான் என் அம்மாகிட்ட போறேன்” என ஓடினான்.
“ ஆத்தி, உச்சி பொழுது, காத்து கருப்பு சுத்துற நேரம், அடங்காமல் போறானே” என உதயன் வேக்த்துக்க ஓடவும் முடியாமல், புலம்பிய படி கணவர் வரவுக்காக காத்திருந்தார்.
குரும்பன் வெயிலில் அலைந்து ஓய்ந்து தான் வந்து சேர, “ இந்த பயலை கொண்டு போயி, உடமைபட்டவுகளுக்கிட்ட ஒப்படைச்சிடு. கான்வெண்ட் பள்ளிக் கூடத்தில படிச்சவன், இங்கிருந்தா காவாளி பயலா போயிடுவான்” என்று முறையிட,
“ அட சும்மா கிட, பேரு தான் பெத்த பேரு ஜமீன் வீடுண்டு. அந்த அரண்மனையில யாரு நம்ம பேரனை தேடி சோறு போடுவா. மருமகனும் தன்னிலை மறந்து திரியிறாரு. நம்ம இருக்கந்தண்டி இங்கிட்டு தான் இருப்பான். நம்ம மக நினைப்புக்கு அவன் ஒருத்தனை வளர்த்துக்குவோம் ” என பெரியவர் கண்ணீர் சிந்த, மறைந்திருந்து பார்த்த உதயனுக்கு சுய பச்சாதாபத்தில் அழுகை ஆறாய் பெருக்கெடுத்தது. பிறரிடம் காட்டக் கூடாது என கன்மாய் கரைக்கு ஓடி விட்டான்.
இது தொடர்கதையாய் நடக்க, ஆற்றுவாரும், தேற்றுவாருமின்றி உதயன் சுற்றித் திரிந்தான். அந்த சமயத்தில் தான் குழந்தையாயிருந்த ஹரிணியை சந்தித்தது.
அதன் பின் அவன் மனம் சற்றே சாந்தி அடைந்தது. ஆனால் அமுதாவை குத்திய மாடு, கிடைக்கு அனுப்பியது திரும்பி வர, அவன் கோபம் எல்லையைக் கடந்தது.
கார்த்திகை நாளில் ஊர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி மாவளி சுற்றி கொண்டாட, அது தான் சமயம் என மாவளியை மறைத்துக் கொண்டு வந்து, மாட்டு கொட்டத்திலிருந்த வைக்கோல் போரில் போட்டு விட்டான்.
மெல்ல கொட்டகை பற்றி எரிய, “ அய்யோ மாடு” என குருவம்மாள் மாடுகளின் கட்டை அவிழ்து விட கொட்டத்துக்குள் ஓடினார்.
“ அம்மாச்சி, நீ போகாத” என உதயனும் கத்திக் கொண்டே பின் சென்றான்.
“ மா.. மா” என அலறிக் கொண்டிருந்த மாடுகளின் கயிற்றை குருவம்மாள் அறுத்து விட, அவை தப்பித்து ஓடின. தட்டி எரிந்து குருவம்மாள் மீதும், அவரை காப்பாற்ற வந்த உதயன் மீதும் பட, பேரனை தூக்கி வெளியே வீசினார். குரும்பன் ஓடி வந்து, பேரனையும், மனைவியையும் காப்பாற்ற முயன்றார். பேரனை காப்பாற்றியவருக்க, மனைவியை காக்க முடியாமல் போக சித்தம் தவறி பிதற்ற ஆரம்பித்தார்.
விசயமறிந்து ராஜவேலுவும் ஓடி வர, போலீஸ் விசாரணை நடந்தது. பேரன் பெயர் வெளியே வரக் கூடாது என குரும்பன் பழியை தன் மீது போட்டுக் கொள்ள, உதயனுக்குமே பெரிய அதிர்ச்சி.
அம்மாவை இழந்து, அம்மாச்சியையும் இழந்த உதயன், மனதளவில் மிகவும் தாக்கப்பட, சென்னை, பம்பாய் என கூட்டிச் சென்று மகனுக்கு வைத்தியம் பார்த்தார் ராஜவேலு.
அப்போது காலில் ஏற்பட்ட தழும்பின் மேலேயே இப்போதும் காயம் பட்டிருக்க, உதயன் பார்வை அதையே நிலைக் குத்தி நின்றது.
ஹரிணி கண் விழித்து பார்த்த முதல் தோற்றமே, உதயன் காயம் பட்டு, கண்ணீர் மல்க இருக்க, குழப்பபமுற்றவள், “ உதி என்னெனது இது” என்று வினவ, கண்ணீரோடு, மன்னிப்பையும் வேண்டி, மனைவி முன் மண்டியிட்டான்.
“ அச்சோ எந்திரிங்க, கால், கையில எல்லாம் தீப்புண். அப்படி என்ன உங்களுக்கு கோபம்” என தன் கோபம் மறந்து அவனை கடிந்துக் கொண்டாள்.
கண்ணீர் மல்கியவன், “ ஸாரி ஹனி.” என்றே உருப்போட,
“ முதல்ல எந்திரிங்க. இவ்வளவு காயமுண்டு யாருமே என்கிட்டச் சொல்லலை” என வருந்தினாள்.
அவள் கரகசனைக்கும் அவனுக்கு கரித்துக் கொண்டு வர, மனைவியிடம் உண்மையாய் இருக்க வேண்டும்,, உண்மையை சொல்லி விட்டாளே, மனதில் உள்ள பாரம் குறையும் என நினைத்தான்.
ஜமீன் வீட்டு சொக்கபனை பற்றிய துப்பு ஒன்றும், பாண்டிக் குடும்ப இளைய தலைமுறைக்கு கிடைத்திருக்க, தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஹரிணியின் போனும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அழகிக்கு மனம் கேட்கவில்லை, வலையப்பட்டி செல்லும் ஜெயபாண்டிக்கு அதை அனுப்பி,
“ என்னண்டு பார்த்திட்டு வா மாமா” என அக்கறையாய் சொல்லி அனுப்ப, ஜெயா நான்கு வழிச் சாலையில் பறந்து கொண்டிருந்தான்.
உண்மை வெளி வருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.