My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன்-1

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுஉம்....
(சிலம்பு 25-65)

சிலப்பதிகார வரிகளில் சொன்னது போல் ஊழ் வினை கனவாக வந்து நம்மை எச்சரிக்கவும், எதிர் கால நடப்புகளை குறிப்பாய் உணர்த்தவும் உதவும்....

பாகம் -1

கைபேசியின் குறுஞ்செய்தி வந்த சத்தத்தில் இன்றைய நாளின் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தவன் தன் வலிமை பொருந்திய கரத்தினால் டேபிளின் மேல் இருந்த தனது கைபேசியை எடுத்து பார்த்தவன் வாட்சப்பில் வந்த ஆடியோ மெசேஜ் பார்த்து தனது இறுகிய தடித்த அதரங்களை சிறிது தளர்த்தி அதை முறுவல் என்றும் சொல்ல முடியாது, மென்னகையிலும் சேராது அது கூட அங்கே யாரும் இல்லை என்ற சூழலில் மட்டுமே என்பது அவன் மட்டுமே அறிவான்... சிரிப்பு என்பதையே மறைத்து, புதைத்து விட்டான் அவ்வப்போது அரிதாக வெளிப்படும் மென்னகை அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும்...

கைபேசியில் வந்த ஆடியோ மெசேஜ் என்னவென்று தெரிந்து கொள்ள ஹெட் போனை மாட்டி கேட்க "மாமா எப்போ வருவீங்க... சி சீக்கிரம் வரீங்களா... வரும் போது ஐஸ்கிரீம் வேணும் "... மனதை மயக்கும் மழலை குரலில் பேசி அனுப்பி இருந்தால் யாழினி... அந்த இனிய குரலை செவிகளில் நிரப்பி தனது கூர் விழிகளை வலது புறம் பார்வை விட்டவன்

தனது அழுத்தமான கம்பீர குரலில் "சக்கரை" என்று குரல் கொடுக்க வெளியே இருந்து ஓடி வந்தான் அவனிடம் ஐந்து வருடங்களாக வேலை செய்து வரும் "சக்கரவர்த்தி என்கிற சக்கரை"... என்ன தான் குல தெய்வ கோயிலில் கடா வெட்டி ஜாதகம் பார்த்து, நல்லா நாளில் ஊர் கூட்டி அம்சமாய் பெயர் வைத்தாலும் வாய்க்கு வருவதை தான் கூப்பிடுவோம் என்று கங்கணம் கட்டி கொண்டு கூப்பிடும் பெயர்களில் இதுவும் ஒன்று... பட்ட பெயருக்கு பயந்து பெயர் மாற்றியவர்கள் அநேகர்கள்...

வெளியில் இருந்து மூச்சு வாங்க ஓடி வந்தவன் "அண்ணா கூப்பிட்டிங்களா" என்று கேட்டவன் கொஞ்சம் பயந்த படி நிற்க... அவனை கூர்ந்து பார்த்தான்... லேசான கலைந்த கேசம், அப்பாவியான முகம் எனகொஞ்சம் வளர்ந்த குழந்தையாக தெரிந்தான்... பார்வையை வைத்தே பயந்து, தவறு செய்தாலும் சொல்லி விடுவான். எதை சொன்னாலும் ஏன் என்று கேளாமல் செய்து முடிப்பவன்... வாய் தான் கொஞ்சம் அதிகம் கிறுக்கு தனங்கள் செய்து மாட்டிக் கொண்டு முழிப்பான்... அந்த தருணத்தில் சிரிக்க தெரியாதவர்கள் கூட சிரித்து விடுவார்கள் அப்படி ஒரு பாவனை கொடுப்பான்...

முறைத்து நிற்கும் முதலாளியின் பார்வை உணர்ந்தவன்... "அய்யயோ அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டோமே இவரு நோட்ல கணக்கு தானே பார்த்துட்டு இருந்தாரு நம்மள கண்டுக்க மாட்டாருன்னு நினைச்சோமே... எது செஞ்சாலும் மாட்டிகிட்டு முழுக்கிறதே நம்ம வேலையா இருக்கே என்ன சொல்லி சமாளிக்கிறது தெரியலையே... சரி எதையாவது சொல்லி சமாளிப்போம் இல்லைனா கால்ல விழுந்துட வேண்டியதான்" மனதிற்குள்ளே முடிவெடுத்தவன்...

"வெளிய சத்தம் கேட்டுச்சுனா அதான் போனேன் நம்ம கடைக்கு பக்கத்தில இருக்குற டீ கடைல ஒரே சத்தமா இருந்தது என்னனு பார்க்கலாம்னு போனேன் அங்க ஒரு பஞ்சாயத்து அதான் பார்த்துட்டு இருந்தேன்னா"....

திரும்பவும் முறைக்க "அய்யோ அண்ணா உனக்கு என்ன அங்க வேலைன்னு நீங்க கேட்க வரது புரியுது... அதான் அண்ணா உடனே ஓடி வந்துட்டேன் "... அவன் முகத்தில் மீசையின் மேல் டீயின் நுரை தெரிய... வாய் மேல் சுட்டிக் காட்டி கேட்க

"அது ஓன்னுல்லைனா போனது போய்ட்டோம் அப்டியே டீ குடிச்சிட்டு வந்துடலாம் அப்புறம் டீ கடை பாலாஜி அண்ணன் கோச்சிக்குவாரு அதான் குடிச்சிட்டு வந்தேன் உங்களுக்கு வாங்கிட்டு வரவானா"....

அவன் சொல்லி கொண்டிருந்ததை கேட்டு சிறிது கோவமும், சிரிப்பும் வந்தாலும் அதை வெளிக் காட்டி கொள்ளாமல் "காமெடி பண்ணது போதும் பாப்பா ஐஸ் கிரீம் கேட்டா நான் வாங்கி கொடுத்துட்டு... அப்படியே பேட்டரிஸ் ஆர்டர் கொடுத்த இடத்தில என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்... கவனமா இருந்து பார்த்துக்கோ அரை மணி நேரத்தில வந்துடுவேன் புரியுதா" என கேட்க

"ஓ இன்னைக்கு சண்டேல பாப்பா ஐஸ் கிரீம் கேட்கற நாளாச்சே...ம்ம் சரி அண்ணா நீங்க போய்ட்டு வாங்க நான் பார்த்துக்கறேன்" என்று தலையை நன்றாக ஆட்ட....

தன் வண்டியின் சாவியை எடுத்து கொண்டவன் வேகமாக கடைக்கு வெளியே வந்தவன் தன் கடைக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ராயல் என்பீல்ட் வண்டியில் லைட் லாவண்டர் கலர் ஷர்ட், லைட் சாண்டல் கலர் பாண்ட் அணிந்து அலை அலையை பரவும் அடர்த்தியான கேசம் அதை ஒரு கையால் சரி செய்யும் போது அத்தனை ஸ்டைல் நம்மை கூர்ந்து அளவிடும் காந்த கண்கள், அடர்த்தியான மீசை, அழுத்தமான உதடுகள் தேவைக்கு மட்டுமே வார்த்தைகள் வெளி வரும் அதில் ஆளுமை நிறைந்திருக்கும், உயரமும் அதற்க்கேற்ற உறுதியான உடற் கட்டு என திரும்பி பார்த்திட வைக்கும் அழகன்... தினமும் அவன் கம்பீரம் கூடிக்கொண்டே செல்கிறது இவனும் ரசித்து கொண்டு தான் இருக்கிறான்..... பைக்கில் கம்பீரமாக அமர்ந்தவன் ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்... போகும் முதலாளியை பார்த்து பெரு மூச்சு விட்டவன்....

' மிகிரன்' என ஒரு முறை சொல்லி பார்த்தவன்... எப்படி இருந்தவரு இப்போ இப்படி இறுக்கமா சிரிப்பை மறந்தவரா மாறிட்டாரு சீக்கிரமே இவருக்கு சந்தோஷமான வாழ்க்கை அமையனும் என நினைத்தவன் டேபிள் மேல் இருந்த யாழினி எலக்ட்ரிகல்ஸ் அண்ட் பேட்டரி சேல்ஸ் சர்வீஸ் என்று எழுதப்பட்ட வரவு செலவு கணக்கு எழுதிய நோட்டுக்களை எடுத்து டேபிள் கீழே உள்ள அறையில் வைத்து விட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து ரிப்பேருக்கு வந்த பேட்டேரியை எடுத்து வைத்து பார்க்க தொடங்கினான்....

கடையிலிருந்து கிளம்பியவன் யாழினி கேட்ட ஐஸ் கிரீம் வாங்க கடைக்கு சென்றவன் அவளுக்கு பிடித்த சாக்லேட்ஸ், நட்ஸ்கள் கலந்த கோன் ஐஸ், ஸ்ட்ராபெர்ரி என வாங்கியவன் தனது வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்...

சர்வதீர்த்தம் தென்கரை தெரு பெயர் பலகை இருந்த தெருவினுல் ஐந்தாவது வீடு பழைய மாடி வீடு முற்றம், கிணறு, அகலமான கூடம், பின் பக்கம் தோட்டம் என பழமையாய் பறைசாற்றிக் கொண்டு இன்னும் கம்பீர தோற்றத்துடனும் அழகுடனும் இருக்கும் மாடியில் இருக்கும் அறை மிகிரன் இருப்பது அறைக்கு வெளியே சிறிய தோட்டம் கற்றாழை, ரோஜா, துளசி, பிச்சிப்பூ கொடி, என பராமரித்து வருகிறான்...

வண்டியின் ஹாரன் சத்தத்திலேயே கண்டுபிடித்துவிட்ட யாழினி குட்டி வெளியே மாமனை காண துள்ளி ஓடும் மான் குட்டியாக வரக் கண்டதும் தூக்கியவன் கன்னத்தில் தன் குட்டி முத்தத்தை பரிசாக கொடுக்க ஏற்றுக்கொண்டான் இதழ் விரியா சிரிப்புடன்... கையில் ஐஸ் கிரீமை கண்டதும் குதூக்களித்தவல் தேங்க்யூ மாமா என்றால்... உள்ளே தூக்கி சென்றவன் பார்வையில் தெரிந்தால் இருபத்தி நான்கு வயதிலேயே வாழ்க்கையை கேள்வி குறியாக்கிக் கொண்டு இந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் காணாமல் போக செய்தவள் மிகிரனின் செல்ல தங்கை நித்யா...

இவள் காரணமில்லை என்றாலும் பாதிப்பு இவளுக்கு தானே அவன் கண்ணில் தெரிந்த வலியை மறைத்தவன் லேசாக இரும... அண்ணனின் சத்தத்தில் திரும்பியவள் சோகம் மறைத்த சிரிப்பை பரவ விட்டு "ஏன் அண்ணா சாப்பிட இவ்ளோ லேட்டா வர" என கேட்க "வேலை மா" என்றவன் யாழினியை கீழே இறக்கி விட்டவன் பின் பக்கம் சென்று முகம், கை, கால் கழுவி வந்தவன் சாப்பிட அமர அவன் அன்னை விஜயலக்ஷ்மி பறிமாறினால் கடிந்து கொண்டே...

கணவனை இழந்த கைம்பாவை... பிள்ளைகளின் சந்தோஷமே பெரிதென வாழ்பவள்... அன்பு ஆர்ப்பரிக்கும் முகத்தில் இப்போது சோகம் இழைந்தோடுகிறது... கணவனின் திடீர் மரணத்தில் நிலை குலைந்தாலும் தனி ஆளாய் நின்று குடும்பத்தை காத்தவள்... காலம் சரி செய்து விடும் என்று கோவில் கோவிலாக சென்று தன் பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்பவள்... தன் அம்மாவின் கைப் பக்குவத்தில் செய்த கறிக்குழம்பையும், மீன் வறுவலையும் சாப்பிட்டவன் வேலை இருப்பதாக கூறி யாழினியை கொஞ்சி விட்டு கிளம்பி விட்டான் அடுத்த வேலைக்கு.....

ஐம்பது பக்க பள்ளி மாணவர்களுக்கான நல திட்டங்கள், பள்ளி வளர்ச்சிக்கான அறிவுரைகள் அடங்கிய கோப்பினை தன் வெண்டை பிஞ்சு விரல்களால் தட்டச்சு செய்து கொண்டிருந்தவளுக்கு ஏதோ சந்தேகம் வர

"ஹேய் தாரு தமிழ் ல மூ எப்படிடி போடறது அது மட்டும் வரவே மாட்டுது ஏன் தான் என்னை வெறுப்பேத்துதோ தெரியல"...

"எல்லாம் எனக்கு சொல்லி குடுக்குறவளே நீ தான் இது மட்டும் உனக்கு ஏண்டி மறக்குது ஷிப்ட் பிரஸ் பன்னிட்டு ம அடி அப்புறம் கோலன் அடி வரும் பாரு"...

"அப்பாடா போட்டுட்டேன் டி முடிஞ்சிது இன்னைக்கு ஏன் டி இவ்ளோ வேலை அதுவும் சண்டே வேற"...

"அதான் இன்னொரு நாள் லீவ் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாங்களே... மினிஸ்டர் வராராம் ரொம்ப எமர்ஜென்சி... கலெக்டர் கிட்ட நாளைக்கு காலைல கைழுத்து வாங்கணுமா நம்ம ப்ராஜெக்ட் ஹெட் சொன்னாரே மறந்துட்டியா கனல்"...

"ஆமா ஆமா நியாபகம் இருக்கு.... அதான் முடிச்சிட்டோமே போலாமா டி ஒரு முக்கியமான பொருள் வாங்கணும் சீக்கிரம் கிளம்பிடலாம் இல்லைனா அந்த கண்ணாடி வந்து வேற எதனா வேலை கொடுத்துட போகுது"... தட்டச்சு செய்த கோப்பை பிரிண்ட் எடுத்தவர்கள் ப்ராஜெக்ட் ஹெட் டேபிளில் வைத்து விட்டு தோழிகள் இருவரும் கிளம்பினார்கள்...

இள மஞ்சள் நிறத்திலான சுடிதாரில் தன் கோதுமை நிறத்திற்கு பொருத்தமாக இருக்க .... வில்லாய் வளைந்த அடர்த்தியான இரு புருவங்களுக்கு மத்தியில் குட்டி பொட்டு வைத்து... நீள் நயனங்கள் இரண்டும் காந்தமாய் ஈர்க்க நீண்ட கார் குழலில் முன் பக்கம் மட்டும் தூக்கி வாரி பின்னலிட்டு மஞ்சள் ரோஜா சுமந்த அசரடிக்கும் தேவதையாய் இருப்பவள் கனலி....

"அய்யோ திருடிட்டு ஓடுறாங்க அவங்கள பிடிங்க"... என்று ஒருவன் கத்த அவன் கத்தலில் மருண்டவள் பயத்துடன் தன் தோழி தாரிகாவின் கை பிடித்தவள் கடையின் பக்க வாட்டில் இருந்து நகர அதே சமயம் வெளியே ஏதோ சத்தம் கேட்டு வெளிய வந்த மிகிரனோ கடைக்கு வெளியே பார்த்து "இந்த பொண்ணுக்கு ஏன் இந்த கேவலமான வேலை" என்று சொன்னவன் கோபத்துடன் நின்று பார்க்க கனலியோ ஓடிக் கொண்டிருந்தாள்...

என்ன நடந்திருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...படித்து விட்டு கருத்துக்களை விமர்சனங்களாக தரவும்
 
Last edited by a moderator:
அற்புதம்
அழகான தொடக்கம்

" இறுகிய தடித்த அதரங்கள் - அதை முறுவல் என்றும் சொல்ல முடியாது மென்னகையிலும் சேராது"

" பட்டப் பெயருக்கு பயந்து பெயரை மாற்றியவர்கள் அனேகர்"

இன்னமும் நிரம்ப உண்டு.
அத்தனையும் முத்துக்கள்
வாழ்த்துகள்
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top