My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

வானம்பாடி - 1-part-2

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,505

490821005_29007631098882806_7201864818689394659_n.jpg

மானூத்துப்பட்டி பாண்டியன் இல்லம். முன்பு பார்த்ததையும் விடக் கிராமத்து வீட்டுக்கே உரியப் பழமையும், செல்வ வளத்தால் ஏற்பட்ட புதுமையும் கலந்து இன்னும் கம்பீரமாகவே இருந்தது.


பாண்டிக் குடும்பத்தைப் போலவே, ஊரும் செழிப்பாக முக்கிய வீதியில் தார் ரோடு, குறுக்குச் சந்துகளில் சிமெண்ட் ரோடு, மேல்நிலைத் தொட்டி வசதி செய்யப்பட்டு, தெருவுக்குத் தெரு தண்ணீர் குழாய்கள் போடப்பட்டு, அரசின் நலத்திட்டங்களை முதலில் பெறும் ஊராக இருந்தது.

மானூத்து கிளைச் சாலையிலிருந்து இவர்கள் வீடு வரை, கார்கள் கிடைத்த இடத்திலெல்லாம் சொருகி நின்றன. பாண்டியன் இல்லத்தின் இரண்டு வீடுகளுக்கும் முன்பு உள்ள பெரிய மண்டபம் போன்ற போர்டிக்கோவில் கார்களுக்கு பதில், அதில் வந்த மனிதர்களே நிறைந்திருந்தனர்.

முத்துப்பாண்டிக்கு வீட்டுக்கு அருகில் சென்றவுடன் தான், இன்று வீட்டில் பங்காளிகள் கூடுகின்றனர் என்ற செய்தியே நினைப்பில் வந்தது. இதைத் தான் மனைவி சொல்ல வந்தால் போலும் என நினைத்தவன், காரிலிருந்து தின்பண்டங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களுக்கு முகமன் கூறியபடி, வீட்டுக்குள் செல்ல,

“வீரண்ணன் மகன், தேவதாசா திரிஞ்சவன், இப்போ தொழில் மட்டுமில்லை, பொண்டாட்டி புள்ளைங்கண்டு குடும்பத்தையும் பொறுப்பா பார்த்துகிறாப்ள, நாலு புள்ளையா, அஞ்சு புள்ளையா அண்ணேன்?“ என விசாரிக்க, வீரன் முறைக்க மட்டுமே செய்ய,

“ஏலேய், அவன் ஆம்பளை, அஞ்சு புள்ளை என்ன, எங்க அப்பாராட்டம் ஆறு புள்ளைக் கூட பெத்துக்குவான், உனக்கு எங்க நோகுது?” என சிவபாண்டி இடைக்காகக் கேட்க, ஹி, ஹி என அசடு வழிந்த அந்த ஆள், “எனகென்னணேன், உங்க சொத்துக்கு எத்தனை புள்ளைகளை பெத்தாலும் தாங்கும். இந்த காலத்திலையும், இத்தனை புள்ளை பெத்துக்குறாங்களேன்டு சந்தோசமா தான் கேட்டேன்!” என அவர் மழுப்ப, இதைக் கேட்ட அசோதை, “இந்த ஆளு கண்ணுல கோழி பீயை வைக்க.“ எனத் திட்டியபடியே நேராக அடுப்படிக்குச் சென்றார்.

அதை கேட்டு சிரித்துக் கொண்ட முத்து, “அம்மா, அந்தாளு, ஸ்ரீயோட புள்ளைகளையும் சேர்த்து சொல்றாரு போல!“ என்ற படி கூடத்தில் அமர்ந்தவன் சாக்லேட், பிஸ்கட், சிப்ஸ் என ப்ரெண்ட் வாரியாக, ஜெயாவின் மகன்கள் பூபேஷ், முகேஷ், தனது மூன்று வயது இரட்டையர் அன்பேஷ், தர்சினி, ஆகிய பிள்ளைகளுக்குப் பங்கு வைத்தான்.

“எது எப்படியோ, புள்ளைங்க இருக்க வீட்டில், அது எப்படிச் சொல்லப் போச்சு?” அசோதை அங்கிருந்தே குரல் கொடுக்க, பத்து மாத மகன் சிவனேஷ் பாண்டியை இடுப்பில் தூக்கி வந்த சிவப்பி ஒன்றும் பேசாமல் முறைத்து நின்றாள்.

அசோதை, மருமகளை மகனோடு சேர்த்து நிற்கக் கட்டளை இட்டவர், “அப்பத்தா, நானு, நானு…“ என்ற மற்ற பிள்ளைகளையும் சேர்த்து “எல்லாருக்கும் தான், ஊரு கண்ணு, உறவு கண்ணு, நல்ல கண்ணு, கொல்லி கண்ணு… “ என வரிசையாக ராகம் பாடி, திருஷ்டி சுத்தி, தான் தூ,தூ துப்ப, அசூசை இன்றி மிளகாயைக் கொண்டு போய் , அடுப்பில் போட, ஒரு நெடி இல்லை.

“என்னாத்தை, இன்னைக்கும் நெடி இல்லையா? பொக்கை மொளகாயா இருக்குமோ???” என பாண்டிக் குடும்பத்தின் இரண்டாவது மருமகள் பூமா, நக்கலாகவே சந்தேகம் கேட்க, “அரைச்சு உன் வாயில அப்புறேன், ருசி பார்த்து சொல்லு.” என நொடித்த , அசோதை, “ஊர்ல இருக்கவனுக்கெல்லாம், என் மகன் மேல தான் கண்ணு.“ என அர்ச்சனையைத் தொடர்ந்தார்.

மனைவி அருகில் அமைதியாக அமர்ந்ததிலேயே, ஏதோ இருக்கு என யூகித்த முத்து, “என்ன புள்ள?” என வினவ, அதற்குள் தன் சேலை முந்தியை இழுத்து தகராறு செய்த மகனை, “இருடா.” எனச் சமாளித்தபடி பசியமர்த்த, முகத்தைச் சுளித்தபடியே மாமியார் அறைக்குள் தூக்கிச் சென்ற சிவப்பியை யோசனையோடு பார்க்க, சுற்றுக் கட்டில், கட்டில் போட்டுப் படுத்திருந்த பேச்சியம்மாள்,

“அடேய் பேராண்டி, கொக்குளத்துக்காரி போற தினுசே சரியில்லை, என்னெண்டு கேளு!“ எனக் கண்ணைச் சுருக்கிக்கொண்டு, பொக்கை வாயில் சொற்களை உதிர்க்க, “என்னா அப்பத்தா?” என முத்து திருப்பி கேட்க, மாமியார் அறைக்குள் நுழையப் போன சிவப்பி, “கட்டில்ல படுத்துக்கே, வீட்டையே ஆராஞ்சுடுவ, பொல்லாத கிழவி, உன் கண்ணிலிருந்து ஒன்னு தப்பிச்சிடும்.” என நொடித்து விட்டுப் போக, பேச்சியம்மாள் புன்னகை விரிந்தது. பேரனை அருகே அழைத்து ரகசியமாக ஏதோ சொல்ல, “போ அப்பத்தா, அதெல்லாம் சான்ஸே இல்லை.” என்றவன், பின்னர்
குழப்பமாக இருக்குமோ என யோசிக்க, “மொசபிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாது, போயி கேளு.” என ஏவி விட்டார்.

“டேய், எல்லாரும் வந்துட்டாங்க நீ வரலையா?” என வினவியபடி மூத்தவர் மகன் ஜெயபாண்டி முத்துவை கடக்க, “நீ போ அண்ணேன், நான் வந்து என்ன செய்யப் போறேன்?” என்றுவிட்டு மனைவி சென்ற அறைக்குள் சென்றான்.

பேச்சியம்மாள், ஜெயபாண்டியை, “ராசா வந்துடுச்சா?” என இரண்டாம் மகனைப் பற்றி விசாரிக்க, “சித்தப்பா ஊருக்குள்ள வந்துட்டார் அப்பத்தா, கோவில் விஷயம் பேச, ஆளுங்க வந்திருக்காங்க பேசிட்டு வர்றோம்.“ என தகவல் சொல்ல, பேரனை அருகில் அழைத்தவர், “நம்ம குடும்பம் தான், பொறுப்பை எடுத்து நடத்தணும், யாருக்கும் விட்டு கொடுத்துடாதீங்க.” என கட்டளையிட, “ பேரரசி பேச்சியம்மாள் கட்டளைப்படியே நடக்கும்.” என்று விட்டு வெளியே போனான்.

சிவப்ரியா, சுவற்றில் சாய்ந்தமர்ந்து, மகனுக்கு பசியமர்த்திக் கொண்டிருக்க, “என்னா புள்ளை, எதுக்கு முறைச்சுக்கே திரியிறவ என்ன விஷயம்?” எனவும், அவன் சத்தம் கேட்டதில், கொலுசு காலை உதைத்து, திமிறி மகன், அப்பனை பார்க்க முயல, “அடேய், உன் நைனா இங்க தான் இருப்பாரு, பேசாத பாலை குடி.“ என மகனை அதட்டியவள், கணவனையும் பேசாமல் இருக்கச் சொல்லி கண்ணால் எரித்தாள்.

“எதுக்கு புள்ளை கோவிக்கிறவ , என்ன விஷயமுண்டு சொல்லு?” என சத்தம் குறைத்து, மனதில் ஓர் ஆசையோடு அவளை நோக்க, மொபைலில் ஒரு படத்தை போட்டவள், “இதை வாங்கிட்டு வா.” என கட்டளையிட, கண்கள் பளபளக்க, “நிஜமாவா புள்ளை?” என வாயெல்லாம் பல்லாக, சிவப்பியின் கன்னத்தில் சத்தமின்றி முத்தமிட, புறங்கையால் இடித்தவள்,

“சத்தம் போட்டு, ஊரை கூட்டாதே, ரகசியமா வாங்கிய, இவன் பால் குடிக்கிறதாலே, தலைக்கே குளிக்களை, இருக்கா, இல்லையாண்டு எனக்கு சந்தேகம் தான். அதுக்குதான், இதை வாங்கியார சொல்லலாம்னு போன் அடிச்சா நீ எடுக்கிறியா, உன் பேச்சை பேசிட்டு கட் பண்ணி புடுற.“ என அவள் சிடுசிடுக்க,

“ஏய் போ புள்ளை, இதுக்கெல்லாம் அவசியமே இல்லை. பேச்சியம்மாளா கொக்கா, அப்பத்தா சொல்லிடுச்சு, அது தான் கன்போர்மட், இது எப்ப புள்ளை நடந்தது, பார்த்தாலே பத்திக்கிதோ?” அவன் கேலி பேச,

“கொன்றுவேன் பேசாத போ.” என்றவள் மனதுக்குள் ‘இந்த தடவை எனக்கு என்னமோ பயந்து வருது’ என அவள் கவலை பட,

முத்து, “அந்த ஆள் வாயில சக்கரையைத்தான் போடணும்.“ என சிரித்தவன், யார் கவனமும் கவராமல் ரகசியமாக தனது புல்லட்டை எடுக்க போக, “இளைய தலைமுறையும் வந்து கலந்துக்குங்க, அப்பதானே, அடுத்த கும்பாபிஷேகத்தை நீங்களே செய்யலாம்.“ என ஓரு பங்காளி, அவனையும் இழுத்துச் சென்றார்.

பாண்டியன் இல்லத்தின் போர்டிகோவே, ஒரு கல்யாண மண்டபம் போல் பெரியதாக இருந்தது. நடுநாயகமாக, முன்னாள் மந்திரி சிவபாண்டியன், அவரது தம்பி ராஜபாண்டியன் அமர்ந்திருக்க அவர்களை சுத்தி முக்கியமான பாண்டிக் குடும்ப பங்காளிகள் அமர்ந்திருந்தனர்.

இளைய பாண்டிகளான செல்லப்பாண்டி, ஜெய பாண்டி, மருதுபாண்டி, நாற்பதுகளை எட்டிப் பிடிக்கும் இளைஞர்களாக அப்பாக்களுக்கு பக்க பலமாக அருகிலிருந்தனர். “துரை , எங்கப்பா?“ என சிவபாண்டி, தம்பியை வினவ, “செல்வத்தை பார்த்திட்டு வர்றோம்னு வழியில இறங்கினான். வந்துருவான்.” என பதில் தந்தார் ராஜன்.

வீரபாண்டியன் வழக்கம் போல், அண்ணன்களை சபையில் முன்னே விட்டு, திண்ணையில் அமர்ந்து வீட்டுக்குள்ளிருக்கும் பேரன் பேத்திகள் மீது ஒரு கண்ணை வைத்திருந்தார். வீட்டுக்குள்ளிருந்து, காபி, டீ பலகாரங்கள் சப்ளை ஆகிக் கொண்டிருந்தது.

செல்வமணியின் பெட்ரோல் பங்க், மாமன், மருமகன் ஜோடி, பாண்டி குடும்பத்தின் மூத்த பேரன், செல்வமணியும், அவனது இளைய மாமன், துரைபாண்டியனும் தேநீர் அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்தனர்.

“நாளை மறுநாள் ரங்கதுரை ரிலீசாறான் மாப்பிள்ளை.“ எனத் தகவல் சொல்லவும், செல்வம் முகமே மாறியது, அவன் தோளைத் தட்டி, ஆறுதல் சொன்னவர், “உன்ட்டயும், அக்காகிட்டயும் பேசணும்னு சொல்றான்.“ எனத் தயங்கியபடியே துரை சொல்ல, செல்வத்தின் முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம், கண்கள் சிவந்திருந்தது.

“இந்த பேச்சே பேசாத மாமா, அவனெல்லாம் ஒரு மனுஷன். அப்படி என்ன சாதி வெறி, அப்படி வெறி வந்தா, யாரைனாலும் கொன்டுக்கு இருப்பானோ, சொந்தக்காரேண்டு, உள்ள விட்டது, எங்களுக்கு வினையா போச்சு. வீட்டை மராமத்து பார்குறாய்ங்களாம், என் கண்ல படாத இருக்கச் சொல்லு.” என செல்வமணி கோபம் கொப்பளிக்கப் பேசவும்,

“சரி, விடு மாப்பிள்ளை,இம்புட்டு டென்ஷன் ஆகாதே, அக்கா, பூவு, பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க?“ எனப் பேச்சை மாற்றியவர்,

“கோவில் விஷயம் பேச வராங்க, நான் கிளம்புறேன்.” என எழவும், “இரு மாமா, ராஜா மாமா கூடத் தானே வந்த, நானே கொண்டாந்து விடுறேன்.” என எழுந்தவன், “ஐஸ்வர்யா, சகலையோட தான் அங்கையே செட்டிலாகிடுச்சு, மாப்பிள்ளை எப்ப வர்றாப்பளை, இப்போ எந்த நாட்டில இருக்காப்ள?“ எனத் துரை மகன் தினேஷ் பாண்டியைப் பற்றிக் கேட்கவும்,

“கடைசியா, ஐரோப்பா, பிரான்ஸில் இருந்தான், இந்த மாசம் வந்துடுவேண்டு சொல்லியிருக்கான் பார்ப்போம்.” எனவும், தினேஷுக்கு கல்யாணம், பொண்ணு என அதைப் பற்றியே பேசிக் கொண்டு பாண்டியன் இல்லம் நோக்கிச் சென்றனர்.

வாலாந்தூர் ஆதிசிவன், காமாட்சியம்மன் திருக்கோவிலில், ராஜகோபுரம், முன் மண்டபம், அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகள், குறித்தும், யார் பொறுப்பெடுத்து நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை ஓடிக் கொண்டிருந்தது.

சிவபாண்டி, “பன்னெண்டு வருசத்துக்கு முன்னாடி, எங்க அப்பாரு இருக்கும் போது, அவர் தலைமையில் கும்பாபிஷேகம் செஞ்சோம். அப்ப கூட, கொஞ்சம் சுருக்கமா தான் செஞ்சோம், இந்த தடவை, கோபுரமெல்லாம் கட்டி சீரும், சிறப்புமா செஞ்சிடணுமாப்பா, நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்க, உங்க கருத்தை சொல்லுங்க.“ எனவும்,
“ஆமாண்ணேன், நீங்க இருக்கையிலே, பணம், ஆளுங்க, சாமனுக்களுக்கு பஞ்சமில்லை, ஆரம்பிச்சு விட்டமுண்டா, விடுவிடுண்டு வெரசா வேலையை முடிச்சு புடலாம்." என மற்றொருவர் சொல்ல,

“நம்ம கையில எல்லாம் இருந்தாலும், தெய்வ அருள் இருக்கனும் தம்பி, அப்போ தான் நல்லபடியா முடியும், அதுக்கும் முன்னாடி நடந்த கும்பாபிஷேகத்தில், எத்தனை தடங்கல்.” என ராஜன் நினைவு கூற, பாண்டிக்கு குடும்பமே பெருமூச்சு விட்டது.

“அதைய, ஏன் அண்ணேன் நினைச்சுகிட்டு, நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கட்டும், இந்த தரம், நம்ம சாமிய குலசாமியா கும்புடுற, மத்த ஆளுகளும் செய்யறமுண்டு வர்றாயங்கே.“ என ஒருவர் இழுக்க,

“அதெப்படி, நாம தானே ஆதிகாலத்திலிருந்து இங்க இருக்கவுக.” என மற்றொருவர் ஆட்சேபிக்க, “ஏப்பா, அவைகளும், ராணி மங்கம்மா காலத்திலிருந்து இருக்காய்ங்க, விடு சேர்ந்து செஞ்சுட்டு போறாய்ங்கே.“ என சிவபாண்டி பெருந்தன்மையைக் காட்ட,

“நீங்க வேணா, எல்லா சாதியையும் ஒண்ணா ஏத்துக்குவிங்க, எங்க குடும்பம் சாதி கௌரதையே காப்பாத்தவே ஜெயிலுக்கு போனவய்ங்கே. நாங்க நம்ம சாதி, கவுரதையையும் சரி, குடும்ப உரிமையையும் விட்டுக் கொடுக்க மாட்டோம், இந்த தடவை நாங்க தான் முன்ன நிண்டு செய்வோம்.” எனச் சவால் விட்டபடி வெள்ளை வேட்டி, இரண்டு பட்டன் திறந்து காலர் தூக்கி விடப்பட்ட கதர் சட்டை, அரைகிலோ நகையைக் கழுத்து, கைகளில் அணிந்து, குங்குமத்தை கீற்றாக வைத்துக் கொண்டு கூலிங்கிளாஸ் சகிதமாய், தெனாவெட்டான பார்வையோடு நாற்பத்தைந்து மதிக்கத் தக்க பாண்டிக் குடும்பத்தின் பங்காளியான பெருமாள் பட்டி துரை குடும்பத்து வாரிசு, செல்வமணி வயதை ஒத்த ராஜதுரை என்பவன் வந்தான்.

“இவன் எங்கடா இங்கே வர்றான்?“ என சிவபாண்டியே வியக்க, “வார்த்தையை அளந்து பேசு.“ என செல்லப் பாண்டி எகிற, “எங்க வந்து என்னா பேசுற?” என ராஜபாண்டி மகன் மருது பாண்டி முறைக்க, ஜெயபாண்டி கையில் போட்டிருந்த காப்பை இறக்கி விட்டு சண்டைக்குத் தயாரானான், சிவபாண்டி, ராஜபாண்டி இருவருமாக மகன்களை அடக்கி, “வரட்டும் விடு.“ என அமைதி படுத்த மொத்த கூட்டத்தின் பார்வையும் ராஜதுரை மேலிருக்க, முத்துப் பாண்டி, அண்ணன்களிடம் யாரிவன் என விவரம் கேட்டான். அவர்கள் சுருக்கமாக விவரம் சொன்னார்கள்.
வீர பாண்டி, நல்ல வேளை மருமகன் செல்வ மணி இங்கே இல்லை என, ஆசுவாசமானார்.

நடுவிலிருந்த பங்காளிகள், “நாங்க தான் அண்ணேன் வரச் சொன்னோம்.“ என்றவர்கள், "தம்பி பொசுக்குண்டு வார்த்தையை விட்டுறாதே, கோவில் விஷயம், நமக்குக் காரியம் முக்கியம்." என ராஜதுரையை நயந்து, பாண்டிகளிடமும், பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ராஜதுரை, அதற்கெல்லாம் அடங்காத தான் தனிரகம் எனக் காட்டினான். “எல்லாருக்கும் வணக்கம் அண்ணேன். என்னடா இத்தனை வருசமா இந்த பக்கட்டே வாரதவன், இப்போ வந்திருக்கேனுண்டு பார்க்கிறிங்களா. வரவேண்டிய சூழ்நிலை வந்திருச்சு.” என நிறுத்தியவன், ஒரு பெரு மூச்சோடு, “நாளை மறுநாள், ரங்கதுரை அண்ணேன் வெளியே வருது. எங்க வீட்டையும் மராமத்து பார்த்து வச்சிட்டேன், இங்க தான் மறுபடி குடியேறப் போறோம். எல்லா பங்காளிகளும் ஒரே இடத்தில கூடியிருக்கிறதாலே, இங்கேயே சொல்லிடலாமுண்டு தான் வந்தேன். அதோட, கோவில் கும்பாபிஷேகத்தைப் பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம், முந்தின தடவை நடந்த மாதிரி எதுவும் ஓராண்டை இல்லாமல், நாங்களே எங்க அண்ணன் தலைமையில் நிண்டு சீரும் சிறப்புமா செய்வோம்.” என அவன் அறிவித்தான்.

பெரிய பாண்டிகள், இவன் எவ்வளவு தூரம் போவான் பார்ப்போம் என அமைதியாக இருக்க, இளைய பாண்டிகள் துள்ளினார், “எங்க வந்து, என்னா நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கவன், உன் கட்ட பஞ்சாயத்தை உன் இடத்தோட நிறுத்திக்க, எதை எப்படி செய்யனுமுண்டு எங்களுக்கும் தெரியும்.” என ஜெயபாண்டி எகிற, ஓர் சிரிப்பு சிரித்துக் கொண்ட ராஜ துரை,

“அடேய், அண்ணேன் மவனே, நீ சின்னப்ப பய, உனக்கு விவரம் தெரியாது. பேசாத இரு. பெரிசுகளே பேசாத இருக்கும் போது, விஷயம் என்னெண்டு யோசிகனும்முல்ல!” என்றவன், நிமிர்ந்து நின்று, “இருபது வருஷம் முன்னாடியே, சாதி கௌரதையே காப்பாத்த, விஷ செடியை வெட்டிட்டு ஜெயிலுக்கு போனவர் என் அண்ணேன். சட்டம் தப்புண்டு சொல்லலாம், ஆனால் அவருக்கு உள்ள மருவாதியை, இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொரு சாதிக்காரனும் கொடுத்துத் தான் ஆகணும்.” எனக் கனல் தெறிக்கப் பேசியவன், “அடுத்த கூட்டத்துக்கு என் அண்ணேன் வருவார். மத்ததை அப்போ பேசிக்குவோம்.” என முடிவையும் அவனே அறிவிக்க,

“ஏலேய், நீ பாட்டுக்கு வந்த, உம் பாட்டுக்குப் பேசிக்கே போற, என்ன நினைச்சுகிட்டு இருக்கவன். உங்கண்ணன் கையாலே போன உயிருள்ள ஒன்னு என் தங்கச்சி மகள். அதையும் நினைப்புல வச்சுக்கிட்டு பேசு.” என அவன் பேசியதில் எரிச்சலான சிவபாண்டியே எச்சரிக்க,

“அந்த புள்ளை லட்சணம், என்னாண்டு, உங்களை விட எங்களுக்கு நல்லாவே தெரியும். உங்களால அடக்க முடியாமத் தானே, சகதிண்டு தெரிஞ்சு, ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்த்தீங்க.“ எனவும்,

“உன் பக்கம் மட்டும் சந்தனம் மணத்துச்சாக்கும், போயா, தெரியாதவன் கிட்டக் கதையை சொல்லு.“ எனச் செல்லப் பாண்டி வார்த்தையை விட, அதில் உடல் விரைத்து நின்ற ராஜதுரை, “ரெண்டு பக்கட்டு ******* தான் சொல்றேன், சிநேகிதிகளா இருந்து தானே குடியை கெடுத்தாளுங்க, அதுக்குத் தான் என்கண்ணேன், தேடிப் போய் போட்டுச்சு. வேண்டாம் அண்ணேன், என் வாயிலிருந்து வார்த்தையை பிடுங்காதீங்க, அம்புட்டு தான் சொல்லுவேன்.” என ராஜதுரை எச்சரிக்க,

அப்போது தான், துரைபாண்டியனோடு உள்ளே வந்த செல்வமணி, கண்ணில் கோபம் தெறிக்க, “டேய், எங்க வந்து நிண்டு, யாரைப் பத்தி பேசுற. உன் சண்டியர் வேலையெல்லாம் அங்குட்டு வச்சுக்க. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின கொன்டுருவேன்.” என ராஜதுரையின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க, அவனும் அதே தெனாவெட்டான பார்வையோடு செல்வத்தின் சட்டையை பற்றியவன், "ரொம்ப வருஷம் ஆச்சு, ஒரு கை பார்க்கலாமா?" என எமகாதகன் சவால் விட, "அதே காட்டுப்பய உள்ளதான் இருக்கியான் வா." என செல்வமணியும் பதில் தந்தான். “ஹேய்!“ என்ற சத்தத்தோடு, இரண்டு பக்கமும் ஆட்கள் அவரவர் ஆதரவுக்கும், சிலர் விளக்கி விடவும் வர, உடன் நின்ற துரைப் பாண்டியன், “மாப்பிள்ளை, இவன் கிட்டக் கோபத்தைக் காட்டாத. நாளைக்கு வருவான் அவன் அண்ணன் சட்டையைப் பிடி, ஒரு நியாயம் கிடைக்கும்.” எனவும்,

“துரை, நீ வேற அவனை ஏத்திவிடாதே, மாப்பிள்ளை அடங்கு, அவன் சட்டையை விடு, ராஜதுரை நீயும் செல்வத்தை விடுறா. சண்டையோ, சமாதானமோ நம்ம கோவில்ல வச்சு பேசிக்கலாம்.” என பதறினார் ராஜபாண்டி. "மாப்பிள்ளை பொறுடா." என சிவபாண்டியும் குரல் கொடுக்க,

“அண்ணேன் சொல்றதும், சரியான யோசனைப்பா, ரங்க துரை வரட்டும், இரண்டு குடும்பத்தையும், நம்ம கோவில்ல வச்சு பேசிக்குவோம். மாப்பிள்ளை, நீ செல்லமாக்காளை கூட்டிகிட்டு அங்க வா, அவனுக்குச் சாபம் குடுகுதா, மன்னிச்சு விடுதான்னு பெத்தவளே முடிவு பண்ணட்டும்.” என நடுவில் உள்ள ஒரு பங்காளி பஞ்சாயத்து பேச, ஒருவர் சட்டையை, மற்றவர் பற்றியபடி நின்றவர்களையும், பாண்டிகளே பிரித்தும் விட்டனர்.

“இவனுங்க கிட்ட என்னா மாமா சமாதானம் பேசுறது, அவன் வரட்டும், நானும் இருபத்திரண்டு வருசமா அதுக்குத் தான் காத்துகிட்டு இருக்கேன். அதுக்கு பயந்து தானே இவன் அண்ணேன், அவன் அப்பன் செத்ததுக்கு பரோல்ல கூட வரலை.” என செல்வமணி கோபம் கொப்பளிக்கப் பேச,

“மாப்பிள்ளை, வேண்டாம்யா, அவனுங்களை மாதிரி நீ தனி ஆள் இல்லை, உன்னை நம்பி பொண்டாட்டி புள்ளைங்க இருக்கு.“ என வீரபாண்டி மருமகன் கையை பிடிக்க, அவரின் இறைஞ்சுதலில், அம்மா, மனைவி, பிள்ளைகள் முகம் நினைவில் வர, செல்வமணி தன்னை அடக்கிக் கொள்ள பெரும் பாடு பட்டான். பாண்டிக் குடும்பமே அத்தை மகனை, வீட்டு மாப்பிள்ளையை சமாதானப் படுத்த, ராஜதுரை ஓர் வெற்று சிரிப்போடு,

“ரெடியா இருங்கடி, என் அண்ணனோட வரேன், டேய் மாப்பிள்ளை, ஒத்தைக்கு, ஒத்தையிண்டாலும் நாங்க ரெடி தான். என் மகளைக் கட்டியிருக்கிறதாலே, உசிருக்கு மட்டும் உத்தரவாதம் தரேன்.” என அறைகூவல் விட, மற்ற பங்காளிகள் அவனை, இழுக்காதே குறையாக அழைத்துச் செல்ல, அவனது ஸ்கேர்ப்பியோ துரை இல்லத்தை நோக்கிப் பாய்ந்து சென்றது.
 
Back
Top