My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

வானம்பாடி - 1- part-1

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,505

வானம்பாடி - 1

"மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ."

ஹெட் போனை மாட்டியபடி, கண்ணை மூடி, மூடிய விழிகளுக்குள், கயல்விழியாளை ரசித்து, காதல் பொங்க அந்த பாடலில் லயித்து, ஏக்கத்தோடு மனதுக்குள் பாடுவதாக நினைத்து சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தான் அவன்.

நல்ல வேளை அந்த சூப்பர் மார்க்கெட்டின், ஒரு புறத்தில் தனக்கென அமைத்துக் கொண்ட கண்ணாடி தடுப்புக்குள், பாடியதால் வெளியே இருப்பவர் தப்பித்தனர். ஆனால் அவன் பாவனையிலேயே, அவன் கடையில் வேலை செய்யும் சிப்பந்திகள், ரகசியமாய் தகவல் பரப்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை, தங்கள் முதலாளியின் காதல் சேஷ்டைகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

பிரியம் சூப்பர் மார்க்கெட் முன், தன் காரை நிறுத்தி விட்டு, அந்த பெரிய குடும்பத்திற்குத் தேவையான பொருட்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அன்புக் கட்டளையாக இட்ட பொருட்கள் என்னென்ன, தன் ஆசை மனையாள் என்ன வாங்கி வரச் சொன்னாள் என மனதில் உரு போட்டுக் கொண்டு, கடையின் பெயர்ப் பலகையையும் ஆசையாகப் பார்த்தபடி முப்பதின் பின் வரிசையிலிருந்தவன் கடையில் யாரையும் காணோமே என நோட்டம் விட்டபடியே வர, சிப்பந்திகள் கூட்டமாக நின்றதையும், அவர்கள் பார்வை சென்ற திசையையும் பார்த்தான்.

ஒரு செருமலோடு அவ்விடத்தை அடைய, "ஐயா, அண்ணேன், சார், தம்பி." என அசடு வழிந்தபடியே அவரவர் பிரிவுக்குச் செல்ல, அதில் மூத்தவராகத் தெரிந்த சூப்பர்வைசரிடம், "அண்ணேன், நீங்களுமா?" என்றபடி ஒரு லிஸ்டை நீட்டி விட்டு… மாலை வேதனையில் லயித்திருந்த மச்சினனை முழு ஐந்து நிமிடமும் படம் பிடித்து, அனுப்ப வேண்டியவளுக்கு அனுப்பி விட்டு, கண்ணாடி தடுப்புக்குள் புகுந்தான்.

"அப்படி என்ன பாட்டை கேக்குறவன்?" என மொபைல் ஸ்கிரீனில் நீலபல்லை நீக்கி, ஸ்பீக்கரில் அலற விட…
"மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே..
என் மனம் அவள் மடி சாய்கிறதே…"
என ஸ்பீக்கர் ஒலிக்குப் போட்டியாக, அதைக் கேட்டு இருந்தவனும் பாட…
தானும் ஒரு காலத்தில் மோகமுள் பாய்ந்திருந்தவன் தான், ஆனால் இவன் மென்மையானவன். தான் எவ்வளவு வன்மையாக இருந்தோம் என்றும், தன்னை மாற்ற, அவளும் தான் எத்தனை பாடுபட்டால், என சனப் பொழுதில், அத்தனையையும் நினைத்தவன், அதிலிருந்து மீண்டு, முகத்தில் அரும்பிய மென்னகையையும் மறைத்து,

"மாப்பிள்ளை முத்தி தாண்டி போச்சு. என்னைய விடப் பெரிய கிறுக்கனா இருக்க." எனப் பெரிய சத்தமாகக் கேட்க, பாடலில் லயித்திருந்தவன், பட்டெனக் கண் விழித்து, பதட்டமாக, "வாங்க மாமா, இப்ப தான் வந்தீங்களா?" எனத் தலையைச் சொறிந்தபடி அசடு வழிந்தான்.

"இப்ப தாண்டா வந்தேன். ஒரு பாட்டுக்கே முடியல. என்னா நடக்குது இங்கே?" என முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, "இது தான், நீ கடையை பார்த்துக்கிற லட்சணமா? கடையில வேலை பார்க்கிறவைங்க, வேலையை விட்டுட்டு உன்னைப் பராக்கு பார்குறாய்ங்கே. உன் அக்காளுக்கு தெரிஞ்சா, என்ன ஆகும் தெரியுமில்லை?" என மிரட்ட,

"என்னா மாமா. நான் என்னா செஞ்சேன்? அக்காகிட்ட என்னத்தை சொல்லப் போறீங்க???" என வெள்ளந்தியாக கேட்டான் இளையவன்.

"என்னா செஞ்சேண்டு கூடத் தெரியலை. இப்ப போன் வரும் தெரிஞ்சுக்க." என வந்தவன் சொல்லி முடிக்கும் முன், அவன் போன் சிணுங்க, இளையவனை முறைத்தபடி, "ஏம்புள்ளை சிவப்பி, உன் தம்பி என்னா செய்யிறான்டு பார்த்து கிட்டேயில்லை!" என நக்கல் விட,

"ஆத்தி, அக்காட்ட கோர்த்து விட்டாரே.. இவரை நல்லவன்டு நினைச்சேன். இனி அது வேற விசாரணை கமிஷன் வைக்கும்." என மெல்ல முணங்கினான் பாட்டுக் கேட்டிருந்தவன், அடுத்த பாட்டு அவன் அக்காள் பாடுவாள்.

எதிரே நின்றவன், போனிலேயே ஹாஹாவெனச் சிரித்து, "உன்கிட்ட உன் பாவா ஒரண்டை இழுக்காமல் வேற எவன் இழுப்பான். உன் தம்பி அம்புட்டு டெரர் பீஸெல்லாம் கிடையாது. ஆமாம் என் ரேஞ்சே வேற தான். சங்கை நெரிச்சாலும் நீ அடங்குனியாக்கும்." என்றவன்,

"ஏ புள்ளை நம்ம பஞ்சாயத்தை இரவைக்கு வச்சுக்குவோம். இப்ப அவனைக் கவனி." எனப் பாண்டிக் குடும்பத்தின் இளைய வாரிசான முத்துப்பாண்டி, தன் மச்சினான சக்திப்ரியனை, தன் மனைவி சிவப்பிரியாவிடம் கோர்த்து விட்டு போனைக் கொடுக்க,

"என்ன மாமா?" எனச் சத்தம் வராமல் உதட்டை முக பாவனையிலேயே கேட்டவன், முத்துப் பாண்டி சிரிக்கவும், வேறு வழியின்றி வாங்கி, "அக்கா!" எனச் செவி கொடுத்தான்.
அடுத்த அரை மணி நேரம் அவள் தம்பியின் காதை நிறைக்க, முத்துப் பாண்டி, பட்டியலில் இல்லாத பொருட்களையும் தேடித் தேடி எடுத்து கூடையில் போட்டு, கூடையை நிறைந்தவன், சக்தி பிரியன், தன் சக்தி எல்லாம் இழந்து வந்து அவனிடம் போனை நீட்ட

"சிவப்பி, நீ சொன்னதெல்லாம் வாங்கிட்டேன் புள்ளை, போன்ல சார்ஜ் இல்ல, வைக்கிறேன்." என போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, "தாங்க்ஸ் டா மாப்பிள்ளை, இன்னைக்கு, உங்க அக்கா கிட்ட இருந்து, என்னை காப்பாத்திட்ட. இன்னும் இரண்டு மணி நேரம், உசிலம்பட்டியவே அலையவிடுவா!" எனச் சிரித்தான்.

மாமனை முறைத்த சக்தி பிரியன், "ரொம்ப சந்தோஷப்படாதீங்க. எங்க அக்கா என் போனுக்கு அடிச்சிருச்சு." எனவும், "எடுத்தேனா கொன்டுருவேன். நான் போன பிறகு எடு." என்ற முத்து, "எத்தனை நாளைக்குடா, இப்படி பாட்டு கேட்டுக்கே பொழுதைக் கடத்துவ, ஊம் ன்டு சொல்லு, எங்க கோயில்ல வச்சு கல்யாணத்தை முடிச்சு விடுறேன்." என வழக்கமான கேள்வியையே கேட்க,

"அட, நீங்க வேற ஏன் மாமா. அதுக்கு உங்க மகள், சரின்டு வரனுமுல்ல, டாக்டருக்கு படிச்சவலாட்டமா பேசுறா, இன்னப் பேச்சுன்னு இல்லை. என்னை கண்ல காங்கவிடாம, என் அப்பத்தாவுக்குப் போட்டியா, அந்தப் பேச்சு பேசுறா." எனப் புலம்பினான்.

"உங்கப்பத்தாளும், கூட்டத்தில் வச்சு வார்த்தை விடக் கூடாதில்ல, ஆனா அப்படி பேசாலையிண்டா அது எப்படி பாண்டியம்மாளா ஆகும், அது பேசின பேச்சுக்குச் செல்வம் மாமனே முறுக்கிட்டு திரியுது. வேற யாரை என்ன சொல்ல?" என முத்துப்பாண்டி, தன் அக்காள் கணவனும், அத்தை மகனுமான செல்வ மணியைப் பற்றிக் கவலைப்பட,

"செல்வம் சித்தப்பாவும் என்ன செய்வார், அவர் அக்கா மகளை சொன்னா கோபம் வருமுல்ல. எங்க அப்பத்தாளை அந்த இடத்துலையே அக்கா, வாயை அடகுச்சு, இருந்தாலும் வார்த்தையை விட்டது, விட்டது தானே!" எனச் சக்தியும் வருந்தினான்.

“நான் சொன்னது தான் ஒரே வழி, டாக்டர் பாப்பாவை மயக்கமருந்து குடுத்து கடத்திடுவோம், மயக்கத்திலேயே தாலியைக் கட்டு, அப்புறம் மத்ததை சமாளிக்கலாம்.” என யோசனை சொல்ல,

“மாமா, உன் மகள் விஷ ஊசி போட்டே கொன்றுவா, எத்தனை வருஷமானாலும், முறையா கல்யாணம் கட்டிகிறேன், அக்கா போன் அடிசுக்கே இருக்கு, பேசுறிங்களா, கிளம்புறீங்களா?“ எனவும்,

“கிளம்பிடேன்ன்டா, என்னைத் துரத்தி விட, அக்காளை விடப் பெரிய பிளான் போடுறான்.” என நொடித்துக் கொண்டே முத்து கிளம்ப, “மாமா, ஒரு நிமிஷம்!“ என, மேஜையிலிருந்து ஒரு பாட்டில் ஆயுர்வேத லேகியத்தைக் கொடுத்தவன், "அக்கா இடுப்பு எலும்பு வலுப்படுமுண்டு வாங்கியாற சொல்லுச்சு." என நமட்டு சிரிப்போடு நீட்ட,
“உங்க அக்கா, இடுப்பு செத்தவளா இருந்தா நான் என்ன செய்யறது, இரண்டு பிரசவத்துக்கே தாங்களை, இந்த லட்சணத்தில் எங்க அப்பத்தாளோட பந்தயம் வேற கட்டுறா!” என எகத்தாளம் பேசினான்.

“எத்தனை புள்ளைண்டாலும், நீங்களா வளர்க்க போறீங்க, எங்க அக்கா பெத்துக்க போகுது. வீடு நிறைய, ஆளுங்க இருக்காங்க, அவைங்க வளர்கப்போறாங்க. என் அக்கா சபத்துக்கு ஹெல்ப் பண்ணி என்ஜாய் பண்ணுங்க மாமா.” எனக் கேலி பேச,

“லந்தை குடுக்குறவன், வாடி மாப்பிள்ளை, நாங்களும் எங்க மாமனுக்கு லந்தை கொடுத்துக்கிட்டு திரிஞ்சவங்கே தான். பின்னுக்கு இருக்கு புரட்டாசி.” என்ற படியே கார் டிக்கியில் ஏற்கனவே சாமான்கள் ஏற்றி இருக்க, தன் கார்டை கொடுத்து பணம் செலுத்தி விட்டு, பாண்டியன் இல்லத்தை நோக்கி கிளம்ப, சக்தி பிரியன், மீனாட்சி தரிசனத்துக்காகத் தனியார் மருத்துவமனையை நோக்கிச் சென்றான்.
488601411_28863764983269419_5192463386361118563_n.jpg
 
Back
Top